முன்னோக்கு

ட்ரொட்ஸ்கியின் நாடுகடத்தல் குறித்த பிரின்கிபோ நினைவேந்தலும் தொழிலாள வர்க்கத்தின் பூகோள மீள் எழுச்சியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

“உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: பிரிங்கிபோவில் லியோன் ட்ரொட்ஸ்கி” என்ற தலைப்பில் ஒரு நிகழ்வு ஆகஸ்ட் 20, ஞாயிற்றுக்கிழமை மர்மாரா கடலில் உள்ள துருக்கிய தீவான பிரிங்கிபோவில் நடைபெற்றது.

ட்ரொட்ஸ்கி பிரிங்கிபோவிலிருந்து (துருக்கியில் பியுகடா என அழைக்கப்படுகிறது) வெளியேறியதன் 90வது ஆண்டு நிறைவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, 1929 மற்றும் 1933க்கு இடையில் ஸ்டாலினிச ஆட்சியால் அவர் சோவியத் யூனியனிலிருந்து வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்ட பின்னர், அங்கு அவர் கழித்த நான்கு ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்டது. 1940 இல் சோவியத் இரகசியப் பொலிஸின் முகவரால் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதன் 83 வது ஆண்டு நிறைவுடனும் இந்த சந்திப்பு ஒத்துப்போகிறது.

இந்த நிகழ்வில், அடலார் மாநகராட்சி மேயர் எர்டெம் குல் வரவேற்றுப் பேசினார். வரலாற்றுப் பேராசிரியர் மெஹ்மெட் அல்கான் நடுவராக இருந்து ஒரு சிறிய அறிமுக உரையை ஆற்றினார்.

கூட்டத்தில் முக்கிய பேச்சாளர்களாக, உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், WSWS ஆசிரியர் குழுவின் உறுப்பினரான எரிக் லண்டன் மற்றும் துருக்கியில் மேரிங் பதிப்பகத்தின் ஆசிரியரும் மற்றும் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினரான உலாஸ் அட்டர்சி ஆகியோர் இருந்தனர்.

உலாஸ் அட்டர்சி, டேவிட் நோர்த், கலாநிதி மெஹ்மெட் அல்கான் மற்றும் எரிக் லண்டன் [Photo: WSWS]

இந்த நிகழ்வில் 160க்கும் மேற்பட்டோர் நேரில் கலந்து கொண்டதுடன், மேலும் நேரலையின் ஊடாக உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 2,000 பார்வையாளர்கள் பார்வையிட்டனர்.

இது வரலாற்றில், மற்றும் சமகால அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்ற ஒரு தெளிவான உணர்வு, நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைவருக்கும் இருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் வரலாற்றில் பிரின்கிபோ தீவு ஒரு பிரம்மாண்டமான மனிதருக்கு அடைக்கலம் அளித்தது என்ற புதுப்பிக்கப்பட்ட விழிப்புணர்வும், ட்ரொட்ஸ்கியின் நாடுகடத்தலின் நினைவேந்தல் உலகின் தற்போதைய நிலையுடன் தீவிரமாக தொடர்புடையது என்பதையும் உணர்த்தியது.

ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பூகோள அளவில் வர்க்கப் போராட்டத்தின் சூழ்நிலைகளில் அவரது தனிப்பட்ட தலைவிதி எந்த அளவிற்குப் பின்னிப்பிணைந்திருந்தது என்பதுதான்.

நாடுகடத்தப்பட்டு பிரிங்கிபோவில் அவர் இருந்த முதல் ஆண்டில் எழுதப்பட்ட அவரது சுயசரிதையில், ட்ரொட்ஸ்கி இவ்வாறு குறிப்பிட்டார்: “எனக்கு தனிப்பட்ட சோகம் எதுவும் தெரியாது. புரட்சியின் இரண்டு அத்தியாயங்களின் மாற்றம் எனக்குத் தெரியும்.”

ட்ரொட்ஸ்கி குறிப்பிடும் அத்தியாயங்களில் முதல் அத்தியாயம் - அதாவது புரட்சிகர எழுச்சியின் அத்தியாயம் - வெகுஜனங்களின் இயக்கம் ட்ரொட்ஸ்கியை ஒரு வருட இடைவெளியில், புரொன்ஸ் (Bronx) என்ற இடத்திலுள்ள ஒரு குடியிருப்பில் இருந்து அதிகாரத்தின் உச்சமான மாஸ்கோவில் உள்ள கிரெம்ளினுக்கு உயர்த்தியது.

புரட்சியின் வீழ்ச்சியால் குறிக்கப்பட்ட இரண்டாவது அத்தியாயம், ஒரு புரட்சிகரத் தலைவராக இருந்த ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையின் பாதையை, அதிகாரத்திலிருந்து அவரை நாடுகடத்தப்பட்டவராக மாற்றியது.

சோசலிச இயக்கத்தின் வரலாற்றில், பிரிங்கிபோ தீவுக்கு புதுப்பிக்கப்பட்ட புரட்சிகர முக்கியத்துவத்தை வழங்கும் தற்போதைய அத்தியாயத்தின் உள்ளடக்கம் என்ன?

இந்த நிகழ்வு ட்ரொட்ஸ்கிசத்திற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உறவில் உள்ள புறநிலை மாற்றத்தை பிரதிபலிக்கிறது மற்றும் மிகவும் நனவான அரசியல் வெளிப்பாட்டை வழங்கியது. இது ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) தலைமையிலான உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பல தசாப்த கால அரசியல் போராட்டத்தை கட்டமைக்கிறது.

பிரிங்கிபோவில் உள்ள அவரது மேசையில் லியோன் ட்ரொட்ஸ்கி

பிப்ரவரி 1929 இல் ட்ரொட்ஸ்கி துருக்கியில் தரையிறங்கிய போது, சோவியத் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் அரசியல் பின்வாங்கலில் இருந்தது, அதில் ட்ரொட்ஸ்கியின் நாடுகடத்தலானது மிகவும் கடுமையான வெளிப்பாடாக இருந்தது. ஸ்ராலினிச அதிகாரத்துவம், 1917 அக்டோபர் புரட்சியின் சோசலிச சர்வதேசியத்திற்கு எதிராக ஒரு தேசியவாத எதிர்வினையைத் தூண்டிவிட்டு, சோவியத் ஒன்றியத்தில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்தை அபகரித்தது.

லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் அக்டோபர் புரட்சியை வழிநடத்திய உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” என்ற வேலைத்திட்டத்தால் மாற்றப்பட்டது.

1923 இல் உருவாக்கப்பட்ட இடது எதிர்ப்பினதும் மற்றும் ட்ரொட்ஸ்கியினதும் தோல்வியானது, சாராம்சத்தில் 1917 அக்டோபர் புரட்சியுடன் தொடங்கிய தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச புரட்சிகர எழுச்சியின் தற்காலிக பின்வாங்கலின் ஒரு அரசியல் வெளிப்பாடாகும். ஸ்ராலினிசத்தின் எழுச்சி மற்றும் சோவியத் ஒன்றியம் மற்றும் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் மீது ஏகாதிபத்தியத்தின் அழுத்தத்தை செலுத்திய சமூக ஜனநாயகத்தின் தொடர்ச்சியான செல்வாக்கு, அதே புறநிலை அடிப்படையைக் கொண்டிருந்தது.

1923 ஜேர்மன் புரட்சி தோற்கடிக்கப்பட்டது, அதே நேரத்தில் 1926 இன் பிரிட்டிஷ் பொது வேலைநிறுத்தம் மற்றும் 1925-27 சீனப் புரட்சி ஆகியவை பேரழிவில் முடிந்தன, இவை அனைத்தும் ஸ்ராலினின் கீழ் கொமின்டேர்னின் (3ம் கம்யூனிஸ்ட் அகிலத்தின்) அழிவுகரமான கொள்கைகளின் விளைவாகும்.

1929 வோல் ஸ்ட்ரீட் வீழ்ச்சியுடன் தொடங்கிய உலகப் பொருளாதார மந்தநிலை, சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயமாக்கலுக்கு வழிவகுத்தது. ஆனால், மேலாதிக்க ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக தொழிலாளர் தலைமைகளின் காட்டிக்கொடுப்புகள் மேலும் பெரிய தோல்விகள் மற்றும் பேரழிவுகளுக்கு இட்டுச் சென்றன.

டேவிட் நோர்த் பிரிங்கிபோவில் அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டது போல், 1933 இல் நாஜிக்கள் அதிகாரத்திற்கு வருவதை, ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) ஆகியவற்றின் பேரழிவுகரமான கொள்கைகளே சாத்தியமாக்கின. இது ஜேர்மன் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் கண்ட மிகப் பெரிய தோல்வியாகும். இதைத் தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் துரோகங்கள் மற்றும் தோல்விகள் ஏற்பட்டது மற்றும் 1939 இல் இரண்டாம் உலகப் போர் வெடித்தது.

ஜேர்மனியில் ஸ்ராலினிச மூன்றாம் அகிலத்தினால் இழைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகம் தான், ட்ரொட்ஸ்கி பிரிங்கிபோவில் இருந்தபோது, 1933ல் நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்ப அவர் அழைப்பு விடுவதற்கு வழிவகுத்தது. 1920கள் மற்றும் 1930களில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பேரழிவுகரமான தோல்விகள் இருந்தபோதிலும் 1938 இல் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் நான்காம் அகிலம் நிறுவப்பட்டது என்பது மார்க்சிச இயக்கத்தின் அரசியல் தொடர்ச்சியை பாதுகாத்தது.

எரிக் லண்டன் ஆற்றிய உரையில் சுருக்கமாக கூறியது போல், சோவியத் யூனியனில் 1930களின் இரண்டாம் பாதி பெரும் பயங்கரவாதத்துக்கு சாட்சியமாக இருந்தது. தொழிலாள வர்க்கத்தில் ஆழமாக வேரூன்றியிருந்த சோசலிஸ்டுகள், அரசியல், அறிவுசார் மற்றும் கலாச்சார ரீதியாக துடைத்துக்கட்டப்பட்டனர். இந்த அரசியல் படுகொலையானது ஆகஸ்ட் 20, 1940 அன்று ஸ்ராலினின் முகவரால் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் மற்றும் மறுநாள் அவரது மரணத்தில் அதன் உச்சத்தை எட்டியது.

இரண்டாம் உலகப் போரின் இறுதி ஆண்டுகளில் ஐரோப்பாவில் வெடித்த தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் நசுக்கப்பட்டது. மாஸ்கோவின் உதவியுடன் முதலாளித்துவம் மீண்டும் ஸ்திரப்படுத்தப்பட்டு, கிழக்கு ஐரோப்பாவிலும் சீனாவிலும் புதிய ஸ்ராலினிச ஆட்சிகள் நிறுவப்பட்ட நிலைமைகளின் கீழ், ஸ்ராலினிசத்தின் சக்தி அசைக்க முடியாததாகத் தோன்றியது.

மைக்கேல் பாப்லோ மற்றும் ஏர்னஸ்ட் மண்டேல் தலைமையிலான நான்காம் அகிலத்திற்குள் தோன்றிய ஒரு திரிபுவாதப் போக்கு, ஸ்ராலினிசத்திற்கு ஒரு புரட்சிகர பாத்திரம் இருப்பதாக கூறி, இப்படியான நிலைமைகளுக்கு இசைந்நு சென்றது. மேலும் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஸ்ராலினிச, சமூக ஜனநாயக அல்லது முதலாளித்துவ தேசியவாதக் கட்சிகளில் சேருவதன் மூலம் தங்களை தாங்களே கலைத்துக் கொள்ள வேண்டும் என்று அது வாதிட்டது. அமெரிக்காவில் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் (SWP) தலைவரான ஜேம்ஸ் பி. கெனன் தான் 1953ல் பப்லோவாத திருத்தல்வாதத்தை எதிர்த்தார் மற்றும் அனைத்துலகக் குழுவை உருவாக்க அழைப்பு விடுத்தார், இது நான்காம் அகிலத்தை கலைப்பதில் இருந்து காப்பாற்றியது.

அதைத் தொடர்ந்து வந்த தசாப்தங்களில், ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் பல்வேறு குட்டி முதலாளித்துவ தீவிர இயக்கங்கள், ட்ரொட்ஸ்கிசத்தின் மீது தொடுத்த தாக்குதல்களால், பப்லோவாத திருத்தல்வாதத்தால் உதவியும் ஊக்கமும் பெற்றன. இந்த சக்திகள் அனைத்தும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை தனிமைப்படுத்தவும் அழிக்கவும் கைகோர்த்து உழைத்த போது, அனைத்துலகக் குழு பல தசாப்தங்களாக நான்காம் அகிலத்தின் வரலாற்று அஸ்திவாரங்களை அயராது பாதுகாத்து வந்தது.

ட்ரொட்ஸ்கியின் படுகொலையைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து, அனைத்துலகக் குழு 1975 ஆம் ஆண்டு, “பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம்” என்று ஆரம்பித்த விசாரணை என்பது, ட்ரொட்ஸ்கி மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாக்கும் வரலாற்றுரீதியான போராட்டத்தில் ஒரு மைல்கல் ஆகும்.

இந்த நிகழ்வில் எரிக் லண்டன் சுருக்கமாக கோடிட்டுக் காட்டியது போல, இந்த விசாரணை என்பது, அடிப்படையில் முதலாளித்துவ அரசுகள் மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முகவர்களுக்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் எதிர்த்தாக்குதல் ஆகும், இது ட்ரொட்ஸ்கியின் படுகொலையைச் சுற்றி பல தசாப்தங்களாக நீடித்த மெளனமான சதிக்கு முடிவு கட்டியது:

முதன்முறையாக, GPU மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசாங்கத்தின் முகவர்கள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் ஊடுருவல் செய்தது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டது. பல தசாப்தங்களுக்கு முன்னர் அவர்களிடம் கேட்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருந்தால், இயக்கத்திற்கும் அதன் உறுப்பினர்களுக்கும் கணிசமான சேதத்தைத் தடுத்திருக்க முடியும் மற்றும் ட்ரொட்ஸ்கி உள்ளிட்ட தலைமையின் ஆயுளைக் காப்பாற்றியிருக்கலாம் அல்லது நீட்டித்திருக்கலாம் என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

நடந்து வரும் பாதுகாப்பு விசாரணையின் வெளிப்படுத்தல்கள், மற்றும் ஞாயிற்றுக்கிழமை பிரின்கிபோவில் நடந்த வரலாற்று நிகழ்வில் அவர்களின் விளக்கக்காட்சி என்பன 1975 இல் தொடங்கிய இந்த எதிர்த்தாக்குதல் எவ்வளவு தூரம் சென்றுள்ளது என்பதைக் காட்டுகிறது.

1985-86 இல், பிரிட்டனில் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடன் (WRP) ஏற்பட்ட பிளவின் விளைவாக, அனைத்துலகக் குழுவிற்குள் இருந்த பப்லோவாதப் போக்கு இறுதியாக தோற்கடிக்கப்பட்டது. இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள் ட்ரொட்ஸ்கிசத்தின் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது.

அனைத்துலகக் குழு ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர தன்மை பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வை ஆதரித்தது, சோவியத் யூனியனின் தலைவிதி சோவியத் தொழிலாள வர்க்கம் ஒரு அரசியல் புரட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றி 1917 உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்திற்குத் திரும்புவதைப் பொறுத்தது என்று அந்த ஆய்வு வலியுறுத்தியது. இல்லையெனில், அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை கலைத்து, முதலாளித்துவத்தை மீட்டெடுக்கும் என்று அது வலியுறுத்தியது. 1989-1991ல் கிழக்கு ஐரோப்பா, சோவியத் யூனியன் மற்றும் சீனாவில் நடந்தவை ட்ரொட்ஸ்கி மற்றும் அனைத்துலகக் குழுவின் மார்க்சிச பகுப்பாய்வு மற்றும் முன்னோக்கின் சரியான தன்மையை நிரூபித்தது.

கடந்த 35 ஆண்டுகள், ட்ரொட்ஸ்கிச முன்னோக்கு, அது உலகம் முழுவதிலும் உள்ள புறநிலை நிலைமைகளில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது, மார்க்சிசம் மற்றும் அக்டோபர் புரட்சியின் சர்வதேச அடிப்படை மற்றும் முன்னோக்கை ட்ரொட்ஸ்கிசம் பிரதிநிதித்துவப்படுத்தியது, அதே நேரத்தில் ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் பப்லோவாதம் ஆகியவை வரலாற்று ரீதியாக காலாவதியான மற்றும் அரசியல் ரீதியாக பிற்போக்குத்தனமான தேசியவாத முன்னோக்கைப் பகிர்ந்து கொண்டன.

முதலாளித்துவ உற்பத்தியின் பூகோளமயமாக்கல் மற்றும் உலகம் முழுவதும் ஒரு மாபெரும், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் தோற்றம் அனைத்துலகக் குழுவின் அரசியல் போராட்டத்தை மிகவும் சாதகமான புறநிலை அடிப்படையில் அபிவிருத்தியடைய அனுமதித்தது.

ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்ட ஆண்டுகளில், துருக்கிய தொழிலாள வர்க்கம் குழந்தையைச் சுற்றுப் போர்த்தும் துணிகளைப் போன்றிருந்தது. இன்று, அது உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தொழில்துறை நகரங்களில் மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா வரை பெருகிவரும் பெருநகரங்களில் குவிந்துள்ள ஒரு பிரமாண்டமான சமூக சக்தியாக உள்ளது,

அதே நேரத்தில், ஏகாதிபத்தியத்தின் வரலாற்று மையங்களில் உள்ள முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடி, முதலாளித்துவ ஜனநாயகத்தின் பொருளாதார மற்றும் அரசியல் அஸ்திவாரங்களையும், சமூக சீர்திருத்தவாதத்தின் குறைந்தபட்ச மிச்சமீதங்களையும் கூட சிதைத்து வருகிறது. தொழிலாள வர்க்கம் ஒரு அபாரமான அளவில் போராட்டத்திற்குள் தள்ளப்பட்டு வருகிறது.

இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகள் வரை தொழிலாளர் இயக்கத்தில் மேலாதிக்கம் செலுத்திய ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகம், அதே போல் பப்லோவாத திருத்தல்வாதம் மற்றும் குட்டி முதலாளித்துவ தேசியவாதம் ஆகியவை இன்று ஒரு வேளை இருப்பார்கள், ஆயினும் முதலாளித்துவத்தின் வெளிப்படையான பாதுகாவலர்களாக ஆகிவிட்டன.

ஸ்ராலினிஸ்டுகள் சோவியத் யூனியனையும் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கலைத்த அதே வேளையில், சமூக ஜனநாயகக் கட்சிகள் முதலாளித்துவ வலதுசாரிக் கட்சிகளிலிருந்து பிரித்தறிய முடியாதவையாக உள்ளன. மாவோயிஸ்டுகள் சீனாவில் முதலாளித்துவத்தை மீட்டெடுத்தனர் மற்றும் நாடுகடந்த பெருநிறுவனங்களுக்கும் சீன முதலாளித்துவத்திற்கும் மலிவு உழைப்பின் பிரமாண்டமான ஆதாரத்தை உருவாக்கினர். அவர்கள் இருக்கும் இடங்களிலெல்லாம், பப்லோவாதிகள் வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகள் மீது “இடது” முகமூடியை போர்த்த முயற்சிக்கின்றனர். மற்றும் உக்ரேன் போரில் தெளிவாக தெரிவது போல், ஒரு கேவலமான ஏகாதிபத்திய சார்பு மற்றும் நேட்டோ சார்பு பாத்திரத்தை வகிக்கின்றனர்.

இந்த அமைப்புக்கள் அனைத்தும், ட்ரொட்ஸ்கி கூறியதை சுருக்கமாகச் சொல்வதானால், “ஒட்டு மொத்தமாக அழுகி விட்டன.” அவர்கள் தனிமைப்படுத்தவும் அழிக்கவும் முயன்ற அனைத்துலகக் குழு, ட்ரொட்ஸ்கிசத்தின், அதாவது தலைசிறந்த மார்க்சிசத்தின் ஒரே அரசியல் பிரதிநிதியாக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் சர்வதேச அளவில் வலுப்பெற்று வருகிறது.

ட்ரொட்ஸ்கிச இயக்கம் அதன் வரலாற்றில் ஒரு புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது, இது புறநிலை நெருக்கடி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டம் மற்றும் நடைமுறைக்கு இடையே ஒரு ஊடறுப்பால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்றாம் உலகப் போரை அச்சுறுத்தும் ஏகாதிபத்திய வன்முறையின் புதுப்பிக்கப்பட்ட எழுச்சி, 24 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்று கொண்டிருக்கும் ஒரு பெரும்தொற்றுநோய், ஜனநாயக ஆட்சி வடிவங்களின் முறிவு ஆகியவற்றில் வெளிப்படுத்தப்பட்ட முதலாளித்துவ நெருக்கடியின் பின்னணியில் பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கி நினைவேந்தல் நடைபெற்றது. உலகம் முழுவதும், அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பேரழிவு, மற்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி. பெருகிவரும் கோபம் மற்றும் சமூக எதிர்ப்பின் தாக்கத்தின் கீழ், வர்க்கப் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஊழல்மிக்க, தேசியவாத தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் திறன் உடைந்து வருகிறது.

டேவிட் நோர்த் தனது அறிமுக உரையின் முடிவில், “ட்ரொட்ஸ்கி வாழ்ந்த இல்லம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு, ட்ரொட்ஸ்கியின் அபாரமான அரசியல் மற்றும் அறிவு சார்ந்த மரபு பற்றி படிப்பதற்கான சர்வதேச மையமாக மாற்றப்படும்” என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ”தேவையான சர்வதேச ஆதரவுடன்” இந்த திட்டப்பணி மேற்கொள்ளப்படும் போது உலக வரலாற்றில் பிரிங்கிப்போ அதன் மறுபடி உறுதி செய்வது மட்டுமல்லாமல் மனித இனத்தின் எதிர்காலத்திற்கு ஒரு முக்கியமான பங்களிப்பையும் செய்யும்.” என்று கூடுதலாக குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 20 அன்று நடந்த நினைவேந்தல் நிகழ்வு, பூகோளரீதியான வர்க்கப் போராட்டத்தின் மறுமலர்ச்சி மற்றும் ஊடறுப்பு மற்றும் மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் மார்க்சிசமான ட்ரொட்ஸ்கிசத்தின் உலகப் புரட்சிகர முன்னோக்கு ஆகியவற்றை வெளிப்படுத்தியது.

பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கியின் நினைவேந்தலில் டேவிட் நோர்த்தின் கருத்துக்கள்
Loading