முன்னோக்கு

உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஆகஸ்ட் 20, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற “உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கி” என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் ஆற்றிய உரை பின்வருமாறு. இந்நிகழ்வு துருக்கியின் இஸ்தான்புல் கடற்கரையில் உள்ள மர்மாரா கடலில் உள்ள ஒரு தீவான பிரிங்கிபோவில் நடைபெற்றது.

1929 முதல் 1933 வரை நான்கு ஆண்டு காலமாக ட்ரொட்ஸ்கி இந்த தீவில் நாடு கடத்தப்பட்டிருந்த நிலையை இந்த நினைவஞ்சலி கெளரவப்படுத்துகிறது. இந் நிகழ்வில் துருக்கி முழுவதிலும் இருந்து 160க்கும் மேற்பட்டோர் நேரில் கலந்து கொண்டனர், மேலும் இது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. முழுப் பதிவையும் Trotsky.com இல் பார்க்கலாம்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சார்பாகவும், உலகம் முழுவதிலும் உள்ள அதன் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சார்பாகவும், லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைக்கு இந்த முக்கியமான அஞ்சலி செலுத்துவதற்கு ஆதரவு வழங்கியதற்காக மேயர் எர்டெம் குல் மற்றும் அடலார் நகர சபைத் தலைவர் இஸ்கெண்டர் ஓஸ்டுரன்லி ஆகியோருக்கு எங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்க என்னை அனுமதியுங்கள். இன்றைய நிகழ்வுக்கு நடுவராக ஒப்புக்கொண்ட பேராசிரியர் டாக்டர் மெஹ்மத் அல்கானுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நவம்பர் 2022 இல் மேயர் குல் மற்றும் தலைவர் Özturanli ஆகியோரை பிரின்கிபோவில் ட்ரொட்ஸ்கி செலவழித்த ஆண்டுகளை நினைவு கூருவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதித்து ஒன்பது மாதங்கள் கடந்துவிட்டன. அவர்கள் இந்த முன்மொழிவை வரவேற்றனர், மேலும் முன்மொழிவை ஒரு செயல்திட்டமாக மொழிபெயர்க்க மிகவும் மனசாட்சியுடன் பணியாற்றினர், அதன் விளைவுதான் இன்றைய கூட்டமாகும்.

பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கியினுடைய நினைவேந்தலில் டேவிட் நோர்த்தின் கருத்துக்கள்

இந்த சந்திப்பு ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையின் சோகமான முடிவையும் நினைவுபடுத்துகிறது. சரியாக 83 ஆண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்ட் 20, 1940 அன்று, ட்ரொட்ஸ்கி ஒரு ஸ்ராலினிச கொலைகாரனால் மெக்சிகோ நகரத்தின் புறநகர் பகுதியான கொயோகானில் தாக்கப்பட்டு, மறுநாள் இறந்துவிட்டார். ட்ரொட்ஸ்கிக்கு எதிராக அடிக்கப்பட்ட அடி ஒரு மனிதனை மட்டும் குறிவைக்கவில்லை. இது சர்வதேச தொழிலாள வர்க்கம், சோசலிசத்திற்கான போராட்டம் மற்றும் முதலாளித்துவ ஒடுக்குமுறையிலிருந்து மனிதகுலத்தின் விடுதலைக்கு எதிராக இயக்கப்பட்ட எதிர்ப்புரட்சிகர வன்முறையின் ஒரு குற்றச் செயலாகும்.

புரட்சித் தலைவர் கொல்லப்பட்டார். ஆனால் அவர் நிறுவிய கட்சி, நான்காம் அகிலம், உயிருடன் நீடித்தது. மேலும் அவர் போராடிய இலட்சியமான உலக சோசலிசப் புரட்சியின் வெற்றி, தொடர்கிறது மற்றும் அதற்கு பலம் கூடுகிறது.

இந்த நினைவேந்தல், “உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கி” என்ற தலைப்பில் நடத்தப்படுகிறது. இந்த தலைப்பு சிறிதும் மிகைப்படுத்தல் அல்ல. பிப்ரவரி 1929 இல், இந்த தீவுக்கு ட்ரொட்ஸ்கியின் வருகையிலிருந்து ஜூலை 1933 இல் அவர் வெளியேறும் வரை, இந்தத் தீவு அவரது காலத்தின் மிகப் பெரிய மார்க்சியக் கோட்பாட்டாளர் மற்றும் புரட்சிகரத் தலைவருக்கு அடைக்கலம் அளித்தது. மேலும், இந்த நான்கு ஆண்டுகள் மகத்தான வரலாற்று விளைவுகளை கொண்டதாக இருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் எதிர்காலப் போக்கைத் தீர்மானிக்கும் இரண்டு நிகழ்வுகள் ட்ரொட்ஸ்கி பிரிங்கிபோவுக்கு நாடுகடத்தப்பட்டபோது நிகழ்ந்தன: அக்டோபர் 1929 வோல் ஸ்ட்ரீட் சரிவு, இது உலகப் பொருளாதார மந்தநிலையின் தொடக்கத்தைக் குறித்தது மற்றும் ஜேர்மனியில் நாஜிக் கட்சியின் சீற்றம் கொண்ட வளர்ச்சி, உச்சக்கட்டத்தை எட்டியது மற்றும் ஜனவரி 1933 இல் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தார். இந்த நிகழ்வுகள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வுக்கு சமமாக வேறு எதுவும் இருக்கவில்லை. ஒரு சிறிய தீவில் வசிப்பவர், நேரடி தொலைபேசி வசதியின்றி மற்றும் அவரைச் சென்றடைய பல வாரங்கள் எடுத்த செய்தித்தாள்கள் மற்றும் கடிதங்கள் மூலம் உலகச் செய்திகள் பற்றி தெரிந்து கொண்ட நிலையில், ட்ரொட்ஸ்கியின் கிரகிப்பு திறனுக்கு சமமாக அவரது சமகாலத்தவர்கள் யாரும் இருக்கவில்லை. அவரது கண்காணிப்பு சக்திகள் மற்றும் மூலோபாய பார்வை ஆகியவை புவியியல் தடைகளால் கட்டுப்படுத்தப்படவில்லை.

Ulaş Ateşçi, David North, Dr. Mehmet Alkan [Photo: WSWS]

ட்ரொட்ஸ்கி தானாக முன்வந்து துருக்கிக்கு வரவில்லை. ஜனவரி 1928 முதல், அவர் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டதன் விளைவாக, அவர் சோவியத் கஜகஸ்தானில் உள்ள அல்மா அட்டாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மாஸ்கோவில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்குப் அப்பால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ட்ரொட்ஸ்கியால் 1923 அக்டோபரில் ஸ்தாபிக்கப்பட்ட இடது எதிர்ப்பு என்ற அமைப்புக்கு தலைமை வழங்க முடியாத அளவுக்கு அவர் இருப்பார் என்று ஸ்டாலின் நம்பினார்.

ஆனால், இடது எதிர்ப்பாளர்கள் மீதான கொடூரமான துன்புறுத்தலால் அதன் செல்வாக்கை அழிக்க முடியவில்லை. ட்ரொட்ஸ்கியின் விமர்சனம் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோவியத் அரசின் அதிகாரத்துவமயமாக்கல், தொழிலாளர் ஜனநாயகத்தின் அனைத்து மிச்சமீதங்களையும் அழித்தல் மற்றும் ஸ்டாலினின் “ஒரு நாட்டில் சோசலிசம்” என்ற தேசிய தன்னிறைவு வேலைத்திட்டத்தின் பேரழிவுகரமான அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகள் - அதாவது, அக்டோபர் புரட்சி அடிப்படையாகக் கொண்டிருந்த நிரந்தரப் புரட்சியின் சர்வதேச வேலைத்திட்டத்தை நிராகரித்தது – பற்றிய ட்ரொட்ஸ்கியின் விமர்சனம் மீண்டும் மீண்டும் நிகழ்வுகளால் சரிபார்க்கப்பட்டது.

டிசம்பர் 16, 1928 அன்று, ட்ரொட்ஸ்கி தனது அரசியல் நடவடிக்கைகளை கைவிடாவிட்டால், அவரை உடல்ரீதியாக தனிமைப்படுத்த மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சோவியத் இரகசியப் பொலிஸான GPU வின், அதாவது உண்மையில் ஸ்டாலினின், சிறப்புத் தூதுவர் ஒருவரிடமிருந்து எச்சரிக்கையைப் பெற்றார். ட்ரொட்ஸ்கி உடனடியாக இந்த அச்சுறுத்தலுக்கு பதிலளித்தார், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிற்கும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைமைக் குழுவுக்கும் பதில் எழுதினார்:

அரசியல் நடவடிக்கைகளில் இருந்து நான் விலகியிருக்க வேண்டும் என்ற கோரிக்கையானது, சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கான போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையாகும், இதை முப்பத்திரண்டு ஆண்டுகளாக நான் எனது நனவான வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நடத்தி வருகிறேன். இந்தச் செயல்பாட்டை “எதிர்ப்புரட்சி” என்று பிரதிநிதித்துவப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களை நான் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் முன் குற்றம் சாட்டுகிறேன், அவர்கள் மார்க்ஸ் மற்றும் லெனினின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் போதனைகளை மீறுகின்றனர், உலகப் புரட்சியின் வரலாற்று நலன்களை மீறுகின்றனர், அக்டோபரின் மரபுகள் மற்றும் போதனைகளை கைவிடுகின்றனர், மற்றும் அறியாமலே, ஆனால் இன்னும் மேலும் அச்சுறுத்தும் வகையில், தெர்மிடோரை [தொழிலாளர்களின் அரசின் அழிவை] தயார்படுத்துகின்றனர்.

அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருப்பது, கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய திசையின் குருட்டுத்தன்மைக்கு எதிரான போராட்டத்தை நிறுத்துவதற்கு சமமாக இருக்கும், இதனுடன் கூடுதலாக ஆக்கபூர்வமான சோசலிச வேலையின் புறநிலை சிக்கல்களை அதிகரிக்கிறது, பாட்டாளி வர்க்கக் கொள்கையை பெரிய, வரலாற்று அளவில் நடத்துவது குறித்த அதன் சந்தர்ப்பவாத இயலாமையால் ஏற்படும் அரசியல் சிக்கல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இவ்வாறான சவாலை எதிர்கொண்ட ஸ்டாலினால்-அந்த நேரத்தில் தனது விட்டுக்கொடுக்காத மார்க்சிச எதிரியை கொலை செய்ய முடியவில்லை- சோவியத் யூனியனின் மண்ணில் இருந்து ட்ரொட்ஸ்கியை முழுமையாக அகற்றுவது என்பது அதிகாரத்துவ ஆட்சியின் உண்மையான எதிர்ப்பாளரை அகற்றும் என்ற கருத்து அவரை ஆட்கொண்டது.

ஜனவரி 18, 1929 அன்று, ஸ்டாலினின் கட்டளைகளை அமல்படுத்தும் GPU, ட்ரொட்ஸ்கி சோவியத் யூனியனில் இருந்து நாடு கடத்தப்படுவார் என்று அறிவித்தது. இந்த முடிவு குறித்து அறிவிக்கப்பட்டவுடன், ட்ரொட்ஸ்கி அதை “சாரத்தில் குற்றவியல் மற்றும் வடிவத்தில் சட்டவிரோதமானது” என்று கண்டனம் செய்தார்.

பிப்ரவரி 12 அன்று, கடினமான 22 நாள் பயணத்திற்குப் பிறகு, ட்ரொட்ஸ்கி, அவரது மனைவி நட்டாலியா செடோவா மற்றும் மகன் லெவ் செடோவ் ஆகியோர் கிட்டத்தட்ட 6,000 கிலோமீட்டர் பயணம் செய்து ​​பெரும் புரட்சியாளர் கான்ஸ்டான்டினோபிள் (இஸ்தான்புல்) என்று இன்றும் அழைக்கப்படும் நகரத்திற்கு வந்தார். துருக்கியின் ஜனாதிபதி கெமால் அட்டதுர்க் அவருக்கு விசா வழங்கினார். படகில் இருந்து இறங்குவதற்கு முன், ட்ரொட்ஸ்கி ஒரு அரசாங்க அதிகாரியிடம் ஒரு அறிக்கையை ஜனாதிபதிக்கு அனுப்பினார். அதில் கூறியிருப்பதாவது:

அன்புள்ள ஐயா: கான்ஸ்டான்டிநோபிள் வாசலில், நான் துருக்கிய எல்லைக்கு வந்தேன் என்பது எனது சொந்த விருப்பப்படி அல்ல என்றும், பலவந்தத்திற்கு அடிபணிந்து மட்டுமே இந்த எல்லையைக் கடப்பேன் என்றும் உங்களுக்குத் தெரிவிக்கும் மரியாதை எனக்கு இருக்கிறது. ஜனாதிபதி அவர்களே, எனது பொருத்தமான உணர்வுகளை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எல். ட்ரொட்ஸ்கி. பிப்ரவரி 12, 1929

ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்ட முதல் வாரங்களை இஸ்தான்புல்லில் கழித்தார். மார்ச் மாதம், அவர் பிரிங்கிபோவிற்கு இடம் பெயர்ந்தார், அங்கே அவர் ஜூலை 1933 வரை சுருக்கமான குறுக்கீடுகளுடன் வசித்து வந்தார்.

GPU இன் நேரடி அதிகார வரம்பிற்கு வெளியே ட்ரொட்ஸ்கியை வைப்பது ஒரு பெரிய தவறான மதிப்பீடு என்பதை ஸ்டாலின் விரைவில் உணர்ந்தார். ஆனால், சோவியத் யூனியனில் இருந்து ட்ரொட்ஸ்கியை நாடு கடத்துவதன் மூலம் அரசியல்ரீதியாக ஆதரவற்றவராக ஆக்க முடியும் என்று 1928 இன் பிற்பகுதியில் ஸ்டாலின் ஏன் நம்பினார்? இதற்கான பதில் அந்த ஆட்சியின் குணாம்சத்தில் தங்கி இருந்தது, ஸ்டாலின் அதன் கொடூரமான ஆளுமையாக இருந்தார். ஸ்டாலினால் பயன்படுத்தப்பட்ட அதிகாரம் ஒரு பிரமாண்டமான அதிகாரத்துவ எந்திரத்தின் சக்தியாகும். ஸ்டாலின் அதிகாரத்துவத்தின் மூலம் ஆட்சி செய்தார். அவர் ரகசிய போலீஸ் மூலம் தனது செல்வாக்கை செலுத்தினார். அவர் தனது எதிர்ப்பாளர்களுக்கு கருத்துக்கள் மற்றும் வாதங்களால் பதிலளிக்கவில்லை. மாறாக கைது வாரண்ட்கள் மற்றும் மரண தண்டனைகள் மூலம் பதிலளித்தார்.

ட்ரொட்ஸ்கி, அதிகாரத்தின் அனைத்து வழக்கமான கருவிகளையும் இழந்திருந்தாலும், தொழிலாள வர்க்கத்தின் மிகவும் முன்னேறிய பிரிவுகள் மற்றும் சோசலிச புத்திஜீவிகளின் கவனத்தை இன்னும் ஈர்த்தார். ட்ரொட்ஸ்கி ஒரு நாடுகடத்தப்பட்ட தனிநபர் மட்டுமல்ல, அவர் நாட்டுக்கு வெளியே புரட்சிகர தொழிலாளர் அரசாங்கத்தை தனிப்பட்ட முறையில் உருவகப்படுத்தினார். அவர் அதிகாரத்தை கைப்பற்றுவது சோவியத் யூனியனில், ஏகாதிபத்திய மையங்களில் மற்றும் அமைதியற்ற காலனிகளில் புதுப்பிக்கப்பட்ட புரட்சிகர எழுச்சியின் மூலம் சாத்தியம் என்பதை மறுக்க முடியாது.

தொழிலாள வர்க்கத்தின் நாடுகடத்தப்பட்ட புரட்சிகர தொழிலாளர் அரசாங்கத்தை அவர் வெளிப்படுத்தினார். இந்தக் காரணத்தினால்தான் ஒவ்வொரு ஏகாதிபத்திய நாட்டிலும், ட்ரொட்ஸ்கி ஒரு வரவேற்க தகுதியற்றவர் ஆனார். 1933 இல் தான் ட்ரொட்ஸ்கி பிரான்சிற்குள் நுழைவதற்கு இறுதியாக விசா வழங்கப்பட்டது, அதுவும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நிபந்தனைகளின் கீழ் மட்டுமே ஆகும்.

ட்ரொட்ஸ்கி பிரிங்கிபோவை “அமைதி மற்றும் மறதியின் தீவு” என்றும், “பேனாவுடன் வேலை செய்வதற்கு ஒரு சிறந்த இடம், குறிப்பாக இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் தீவு முற்றிலும் வெறுச்சோடிப்போகும் போது பூங்காவில் மரங்கொத்திகள் தோன்றும்” என்றும் விவரித்தார். மற்றும், உண்மையில், பிரின்கிபோவில் இருந்த ஆண்டுகளில் அவரது பேனாவிலிருந்து அசாதாரண மேதாவித்தன்மையுடன் படைப்புகள் ஊற்றெடுத்தன.

ட்ரொட்ஸ்கி உலக இலக்கியத்தின் ஒரு உண்மையான தலைசிறந்த படைப்பை உருவாக்கினார்: ரஷ்ய புரட்சியின் வரலாறு என்ற அவரது மூன்று தொகுதிகள், மேலும் எனது வாழ்க்கை என்ற நூல் மிக அழகாக எழுதப்பட்ட, கவர்ச்சிகரமான, வரலாற்று ரீதியாக புறநிலையான மற்றும் அனைத்து அரசியல் சுயசரிதைகளிலும் நேர்மையான ஒன்றாகும். அந்த நூலை “அகநிலைவாதம்” என கண்டனம் செய்த ஸ்ராலினிச சக பயணிகளின் சூழலில் இருந்து வரும் விமர்சனங்களுக்கு பதிலளித்த ட்ரொட்ஸ்கி, எந்த எழுத்தாளரும் தன்னைப்பற்றி குறிப்பிடாமல் ஒரு சுயசரிதையை எப்போதுமே எழுத முடியவில்லை என்று ட்ரொட்ஸ்கி மணிச்சுருக்கமாக குறிப்பிட்டார்.

ஆனால், இந்த இரண்டு படைப்புகளின் அனைத்து மேதாவித்தனமான மற்றும் நீடித்த தன்மை இருந்த போதிலும், அவை ஜேர்மனியில் வெளிப்படும் நிகழ்வுகள் பற்றிய ட்ரொட்ஸ்கியின் வர்ணனையால், அவை அவற்றின் முக்கியத்துவத்தை சற்று குறைத்துக் காண்பித்தன. ஜேர்மனியில் இருந்து 2,000 கிலோமீட்டர்கள் பிரிந்திருந்த நிலையில், பாசிச அபாயத்தின் எதிரில் நாஜி இயக்கத்தின் விரைவான வளர்ச்சி பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு, ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் இரு வெகுஜன அமைப்புகளான சமூக ஜனநாயக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் கோழைத்தனம் பற்றிய அவரது கடுமையான குற்றச்சாட்டு ஆகியவற்றுக்கு சமமாக எதுவும் இருக்கவில்லை. ட்ரொட்ஸ்கி நாஜி வெற்றியின் விளைவுகளைப் பற்றி எச்சரித்ததோடு, ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்க தொழிலாள வர்க்கக் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஐக்கிய முன்னணிக்கு அழைப்பு விடுத்தார்.

ட்ரொட்ஸ்கி 1931 இல் எழுதினார், “தொழிலாளர்-கம்யூனிஸ்டுகளே, நீங்கள் நூறாயிரக்கணக்கான, மில்லியன் கணக்கானவர்கள்; நீங்கள் எங்கும் செல்ல முடியாது; உங்களிடம் போதுமான பாஸ்போர்ட் இல்லை. பாசிசம் ஆட்சிக்கு வருமாயின், அது ஒரு பயங்கரமான கவச வண்டியைப்போல உங்கள் மண்டை மற்றும் முதுகெலும்புகளின் மீது சவாரி செய்யும். உங்கள் விடுதலை இரக்கமற்ற போராட்டத்தில் உள்ளது. சமூக ஜனநாயகத் தொழிலாளர்களுடன் போராட்ட ஐக்கியம் மட்டுமே வெற்றியைக் கொண்டுவர முடியும். தொழிலாளர் கம்யூனிஸ்டுகளே, விரைந்து செயல்படுங்கள், உங்களுக்கு மிகக் குறைந்த காலமே உள்ளது! “

ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சியானது, சமூக ஜனநாயகக் கட்சியை “சமூக பாசிஸ்ட்” என்று கண்டனம் செய்தது. இதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன சீர்திருத்தவாத அமைப்புக்கும் சோசலிச மற்றும் கம்யூனிஸ்ட் அமைப்புகளை மொத்தமாக ஒழித்துக்கட்ட சபதம் எடுத்த மற்றும் நாஜி கட்சிக்கு ஆதரவளிக்கும் மில்லியன் கணக்கான அரசியல் ரீதியாக சீர்குலைந்த மற்றும் பிற்போக்குத்தனமான குட்டி முதலாளித்துவத்திற்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்று அர்த்தப்படும். நாஜிகளுக்கு எதிரான ஒருங்கிணைந்த தற்காப்பு நடவடிக்கையை ஸ்டாலினிச அமைப்பு நிராகரித்ததன் அர்த்தம், நடைமுறையில் என்னவென்றால், சமூக ஜனநாயகத் தொழிலாளர்களின் ஆதரவைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் கைவிடுவதாகும். இது தொழிலாள வர்க்கத்தை முடக்கியது மற்றும் ஜனவரி 30, 1933 இல் ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கான பாதையை உருவாக்கியது.

ஒரு காட்டுமிராண்டித்தனமான சர்வாதிகாரத்தை ஸ்தாபித்து, பிரமாண்டமான ஜேர்மன் தொழிலாளர் இயக்கத்தை முற்றிலுமாக அழித்த இந்த அரசியல் பேரழிவிற்குப் பின்னரும் கூட, மாஸ்கோவில் உள்ள ஸ்டாலினிச ஆட்சியும் கம்யூனிஸ்ட் அகிலமும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றிய கொள்கைகள் சரியானவை மற்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

அக்டோபர் 1923 இல் இடது எதிர்ப்பை உருவாக்கியதில் இருந்து, ட்ரொட்ஸ்கியின் வேலைத்திட்டம் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மூன்றாம் அகிலத்தின் சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. ஆனால் ஸ்டாலினிசக் கட்சிகள் ஜேர்மன் பேரழிவு பற்றிய எந்த விவாதத்தையும் மேற்கொள்வதற்கு அனுமதிக்க மறுத்ததால், மூன்றாம் அகிலத்தின் சீர்திருத்தத்தை நோக்கிய கொள்கை நீர்த்து விட்டது என்ற முடிவுக்கு ட்ரொட்ஸ்கி வந்தார். ஜூலை 15, 1933 அன்று, அவர் பிரிங்கிபோவிலிருந்து புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ட்ரொட்ஸ்கி ஒரு புதிய அகிலத்தைக் கட்டுவதற்கான அழைப்பை விடுத்து அவர் எழுதினார்:

மாஸ்கோ தலைமையானது ஹிட்லருக்கு வெற்றியை உறுதி செய்த கொள்கையை தவறற்றது என்று அறிவித்தது மட்டுமல்லாமல், என்ன நடந்தது என்பது பற்றிய அனைத்து விவாதங்களையும் தடை செய்துள்ளது. இந்த மானம் கெட்ட தடை மீறப்படவில்லை அல்லது தூக்கி எறியப்படவில்லை. தேசிய மாநாடுகள் கிடையாது, சர்வதேச காங்கிரஸ் கிடையாது; கட்சி கூட்டங்களில் விவாதம் கிடையாது; பத்திரிகைகளில் விவாதம் கிடையாது! பாசிசத்தின் இடியால் கிளர்ந்தெழாத ஒரு அமைப்பு மற்றும் அதிகாரத்தவத்தின் இத்தகைய மூர்க்கத்தனமான செயல்களுக்கு பணிவுடன் கீழ்ப்படியும் ஒரு அமைப்பு, இறந்துவிட்டதாகவும், அதை எதனாலும் உயிர்ப்பிக்க முடியாது என்பதையும் இதன் மூலம் நிரூபிக்கிறது. இதை வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் சொல்வது பாட்டாளி வர்க்கம் மற்றும் அதன் எதிர்காலம் குறித்த நமது நேரடி கடமையாகும். நமது அடுத்தடுத்த வேலைகள் அனைத்திலும், உத்தியோகபூர்வ கம்யூனிஸ்ட் அகிலத்தின் வரலாற்றுச் சரிவை நாம் புறப்படும் புள்ளியாகக் கொள்வது அவசியம்.

இவ்வாறு, இந்தத் தீவில், 90 ஆண்டுகளுக்கு முன்பு, நான்காம் அகிலத்திற்கான போராட்டம் தொடங்கியது. ட்ரொட்ஸ்கி விடுத்த அழைப்பு, வேலைத்திட்டம் பற்றிய தெளிவு மற்றும் அமைப்புரீதியான தயாரிப்பு ஆகியவற்றுக்கான இயக்கத்தை முடுக்கி விட்டது. அது செப்டெம்பர் 1938 இல் நான்காம் அகிலத்தை சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக அதிகாரப்பூர்வமாக நிறுவியதில் அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது.

அந்த நேரத்தில் ஸ்டாலின் ஏற்கனவே மாஸ்கோவில் மூன்று இழிபுகழ் பெற்ற விசாரணைகளை நடத்தி, அக்டோபர் புரட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களையும் கொன்றொழித்தார். சோவியத் யூனியன் முழுவதும் பரவிய ஸ்டாலினிச பயங்கரவாதம் ஒரு இனப்படுகொலை வெறித்தனத்தின் பரிமாணங்களை எடுத்தது, அது முறையாக மார்க்ஸிச அரசியல் மற்றும் கலாச்சாரத்தின் ஒவ்வொரு முக்கியமான பிரதிநிதியையும் குறிவைத்தது.

பிரின்கிபோ நிகழ்வில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் [Photo: WSWS]

ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூறாயிரமாக அதிகரித்தாலும், ட்ரொட்ஸ்கியின் செல்வாக்கு குறித்த ஸ்டாலினின் பயம் குறையவில்லை. நாஜி ஜேர்மனியுடன் போர் வெடித்தது, அது செம்படையின் ஸ்தாபகரும் தலைவருமான ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்து திரும்புவதற்கான மக்கள் கோரிக்கைகளின் பேரலையை உருவாக்கும் என்று ஸ்டாலின் பயந்தார் – போரின் வெடிப்பு அவரது சொந்த பேரழிவுக் கொள்கைகள் அனைத்தினாலும் தவிர்க்க முடியாமல் உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும்.

ட்ரொட்ஸ்கி மீதான ஸ்டாலினின் உள்ளுறுப்பு பயம் குறித்து சோவியத்துக்கு பிந்தைய வரலாற்றாசிரியரும் சுயசரிதையாளருமான ஜெனரல் டிமிட்ரி வோல்கோகோனோவ் மூலம் ஆவணப்படுத்தப்பட்டது, அவர் சர்வாதிகாரியின் தனிப்பட்ட ஆவணங்களை பெற்றுக் கொண்டார். அவர் எழுதினார்:

ட்ரொட்ஸ்கியின் உருவம் அடிக்கடி அதிகாரத்தை அபகரித்தவரை முற்றுகையிட திரும்பியது. … [ஸ்டாலின்] அவரை நினைத்து பயந்தார். … அவர் மொலோடோவ், ககனோவிச், குருஷ்சேவ் மற்றும் ஜ்தானோவ் ஆகியோரின் பேச்சை உட்கார்ந்து கேட்க வேண்டியிருந்தபோது ட்ரொட்ஸ்கியை நினைத்துப் பார்த்தார். ட்ரொட்ஸ்கி அறிவுரீதியாக மற்றும் அமைப்பு பற்றிய அவரது கிரகிப்புடன், பேச்சாளராக மற்றும் எழுத்தாளராக வேறுபட்ட திறமை உடையவராக இருந்தார். எல்லா வகையிலும் அவர் இந்த அதிகாரத்துவக் கூட்டத்தை விட மிக உயர்ந்தவராக இருந்தார், ஆனால் அவர் ஸ்டாலினை விடவும் உயர்ந்தவர் என்பது ஸ்டாலினுக்குத் தெரியும். … ஸ்டாலினின் பொய்மைப்படுத்தப்பட்ட பள்ளி, போல்ஷிவிக் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஒரு திறந்த கடிதம் அல்லது ஸ்டாலினிச தெர்மிடோர் போன்ற ட்ரொட்ஸ்கியின் படைப்புகளைப் படித்தபோது, தலைவர் கிட்டத்தட்ட தன் சுயக்கட்டுப்பாட்டை இழந்தார்.

ட்ராட்ஸ்கி உயிருடன் இருப்பது ஸ்டாலினால் அனுமதிக்க முடியவில்லை. அக்டோபர் புரட்சியின் கடைசி மற்றும் மிகப் பெரிய தலைவரைக் கொலை செய்வதற்கு சோவியத் ஆட்சியின் மகத்தான வளங்கள் செலவிடப்பட்டன. இந்தக் குற்றம் இன்று 83 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்டது.

20 ஆம் நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களின் வரலாற்றில் ஒரு மாபெரும் நபராக ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையை கெளரவித்தால் மட்டுமே இன்றைய நினைவேந்தல் முழுமையாக நியாயப்படுத்தப்படும்: அவர், அக்டோபர் புரட்சியில் லெனினுடன் இணைத் தலைவராக, செம்படையின் தளபதியாக இருந்தார். நிரந்தரப் புரட்சியின் கோட்பாட்டாளர், அவரது காலத்தின் சிறந்த பேச்சாளர், இலக்கிய மற்றும் அரசியலில் தலைசிறந்த படைப்புகளின் ஆசிரியர், ஸ்டாலினிசத்துடன் சமரசமற்ற எதிர்ப்பாளர் மற்றும் கடந்த காலத்தில் மிகப்பெரிய மேதைகளால் மட்டுமே எட்டக்கூடிய மட்டத்துக்கு அனைத்து மனிதர்களும் அறிவார்ந்த, கலாச்சார மற்றும் தார்மீக நிலைக்கு உயருவது சாத்தியம் என்று முன்னறிவித்த ஒரு சோசலிச தொலைநோக்குவாதி.

ஆனால் ட்ரொட்ஸ்கி ஒரு வரலாற்று உருவம் என்பதை விட மேலானவர், அவருடைய வாழ்க்கை மற்றும் படைப்புகள் கடந்த காலத்தை புரிந்து கொள்ள படிக்கப்படுகின்றன. அவர் படுகொலை செய்யப்பட்டு 80 ஆண்டுகளுக்கும் மேலாகியும் ட்ரொட்ஸ்கி ஒரு அசாதாரணமான சமகால இருப்பாக இருக்கிறார். கடந்த நூற்றாண்டின் மற்ற எந்த அரசியல் தலைவரையும் விட, அவரது கருத்துக்கள் சற்றும் குறையாத பொருத்தத்தைத் தக்கவைத்துக்கொள்கின்றன. லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் 20 ஆம் நூற்றாண்டின் கொந்தளிப்பான நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதற்கு மட்டும் இன்றியமையாத வாசிப்பாக இல்லை, அவை இன்றைய யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத கட்டமைப்பை வழங்குகின்றன.

அவரது வாழ்நாளில், ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிச ஆட்சி மற்றும் உலகம் முழுவதும் அதன் துணைக் கட்சிகளால் இயக்கப்பட்ட பொய்கள் மற்றும் அவதூறுகளின் இடைவிடாத பிரச்சாரத்தின் இலக்காக இருந்தார். இந்த பொய்கள் சோவியத் ஒன்றியத்தின் இறுதி வரை தொடர்ந்தன. ஸ்டாலினால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட அக்டோபர் புரட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களில், ட்ரொட்ஸ்கி மட்டும் ஸ்டாலினுக்குப் பிந்தைய சோவியத் அரசாங்கங்களால் “புனர்வாழ்வு” பெறவில்லை. 1987 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், கிளாஸ்னோஸ்டின் (திறந்த மனப்பான்மையின்) உச்ச கட்டத்தில், மிக்கேல் கோர்பச்சேவ் ட்ரொட்ஸ்கியை சோவியத் ஒன்றியம் மற்றும் சோசலிசத்தின் எதிரி என்று பகிரங்கமாகக் கண்டனம் செய்தார். முதலாளித்துவத்தின் மீட்சிக்கு ஒப்புதல் அளித்து சோவியத் யூனியனின் கலைப்புக்குத் தயாராகும் போது கோர்பச்சேவ் இதை அறிவித்தார்.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை அடுத்து, ட்ரொட்ஸ்கிக்கு எதிராக ஸ்டாலினிஸ்டுகள் மேற்கொண்ட அனைத்து பொய்களும் மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள கல்வியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சோவியத்துக்குப் பிந்தைய வரலாற்றுப் பொய்மைப்படுத்தல் பள்ளியால் உருவாக்கப்பட்ட ட்ரொட்ஸ்கி எதிர்ப்பு அவதூறுகளின் புதிய அலையை அம்பலப்படுத்துவதற்கும் மறுப்பதற்கும் கணிசமான நேரத்தை ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரொபர்ட் சேர்வீஸ், ட்ரொட்ஸ்கி பற்றிய அவதூறான வாழ்க்கை வரலாற்றை வெளியிட்ட பிறகு, அவர், ட்ரொட்ஸ்கி மீது இரண்டாவது படுகொலையைச் செய்ய முடிந்தது என்று பெருமையாகக் கூறினார். உண்மையில், பேராசிரியர் சேர்வீஸ் ஒரு வரலாற்றாசிரியர் என்ற தனது சொந்த தொழில்முறை நற்பெயரை அழிப்பதில் மட்டுமே வெற்றி பெற்றார்.

அவரது பெயரைக் குறிப்பிடுவதன் மூலம் மட்டுமே தூண்டப்பட்ட ஆதரவான மற்றும் விரோத உணர்வைக் கணக்கிடும் முயற்சியில், ட்ரொட்ஸ்கியைப் பற்றிய விவாதங்கள் கடந்த காலத்தைப் பற்றியது மட்டும் அல்ல என்பதை நான் குறிப்பிட்டேன். அவை அதேபோன்று நிகழ்கால நிகழ்வுகளைப் போலவே இருக்கின்றன, எதிர்காலத்தில் என்ன நடக்கக்கூடும் என்பதைப் பற்றியதும் அடிக்கடி இல்லாமல் இல்லை.

லியோன் ட்ரொட்ஸ்கியின் தொடர்ச்சியான செல்வாக்கு, “முதலாளித்துவத்தின் மரண வேதனை” என்று அவர் வரையறுத்த ஒரு சகாப்தத்தை, நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வரலாற்று சகாப்தத்தின் பிரச்சனைகள், முரண்பாடுகள் மற்றும் நெருக்கடிகளை அவர் அடையாளம் கண்டு கொண்டதில் இருந்து எழுகிறது. தொழில்நுட்பத்தின் அனைத்து பரந்த முன்னேற்றங்கள் இருந்த போதிலும் இன்றைய உலகம் ட்ரொட்ஸ்கியை நன்கு புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றாகும்.

முதலாவதாக, 1940ல் அவர் இறந்ததிலிருந்து உலக அரசியலில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றம் - சோவியத் யூனியன் கலைப்பு மற்றும் முதலாளித்துவத்தின் மீட்சி - கிரெம்ளினின் அரசியல் துரோகங்களுடன் இணைந்த ஸ்டாலினிச தேசிய பொருளாதார தன்னிறைவின் தவிர்க்க முடியாத விளைவு என்று அவர் முன்கூட்டியே பார்த்தார்.

இன்னும் ஆழமான மட்டத்தில், மனிதகுலத்தின் முற்போக்கான வளர்ச்சிக்கு இடையூறு விளைவிக்கும் மையப் பிரச்சனை- ஒரு உலகப் பொருளாதாரத்தில் உற்பத்தி சக்திகள் பூகோளரீதியாக ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதற்கும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்பு நீட்டித்திருப்பதற்கும் இடையிலான முரண்பாடு—என்பது குறித்து 20 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்திலேயே ட்ரொட்ஸ்கியால் தெளிவாக அடையாளம் காணப்பட்டது. இந்த முரண்பாட்டைப் பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு, முதலாம் உலகப் போருக்குப் பின்னர் விதிவிலக்கான கூர்மையையும் துல்லியத்தையும் பெற்றது, இது ஏகாதிபத்திய வன்முறையின் தொடர்ச்சியான வெடிப்புகளின் தொடக்கமாக மட்டுமே உள்ளது என்று அவர் கண்டார்.

ஏகாதிபத்திய வன்முறையின் முக்கிய தூண்டும் சக்தியாக பூகோளரீதியான மேலாதிக்கத்திற்காக, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் முயற்சி இருக்கும் என்று ட்ரொட்ஸ்கி எச்சரித்தார். அமெரிக்க முதலாளித்துவத்தின் இயக்க சக்தியை அமெரிக்காவின் தேசிய எல்லைக்குள் கட்டுப்படுத்த முடியாது. ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியின் வருகையை எதிர்பார்த்து, 1928ல் ட்ரொட்ஸ்கி, அத்தகைய வளர்ச்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்ரோசமான தன்மையை மிதவாதத்திற்கு மாறாக தீவிரப்படுத்தும் என்று எச்சரித்தார். அவர் பின்வருமாறு எழுதினார்:

நெருக்கடியான காலகட்டத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கம் செழுமையான காலத்தை விட முழுமையாகவும், வெளிப்படையாகவும், இரக்கமற்றதாகவும் செயல்படும். இது ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவில் நடந்தாலும் சரி, அமைதியான முறையில் நடந்தாலும் சரி அல்லது போரினால் நடந்தாலும் சரி, முதன்மையாக ஐரோப்பாவின் இழப்பில் அமெரிக்கா தனது கஷ்டங்கள் மற்றும் நோய்களில் இருந்து விடுபட முயற்சி செய்யும்.

1931 இல், பிரின்கிபோவிலிருந்து உலக விவகாரங்களைக் கவனித்த ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எச்சரித்தார்:

அமெரிக்க முதலாளித்துவம் பயங்கரமான ஏகாதிபத்திய சகாப்தத்தில் நுழைகிறது, அதாவது ஆயுதங்களில் தடையற்ற வளர்ச்சி, முழு உலகத்தின் விவகாரங்களில் தலையீடு, இராணுவ மோதல்கள் மற்றும் கொந்தளிப்புக்கள்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு இடையே இந்த மறக்கமுடியாத மற்றும் தீர்க்கதரிசன ஒப்பீட்டை ட்ரொட்ஸ்கி வழங்கினார்:

1914ல் ஜேர்மனியை போர்ப் பாதையில் தள்ளிய அதே பிரச்சனைகளை அமெரிக்க முதலாளித்துவம் எதிர் கொண்டுள்ளது. உலகம் பிளவுண்டுள்ளது? அதை மீண்டும் பிரிக்க வேண்டும். ஜேர்மனியைப் பொறுத்தவரை இது “ஐரோப்பாவை ஒழுங்கமைப்பது” பற்றிய ஒரு பிரச்சனை. அமெரிக்கா உலகை “ஒழுங்கமைக்க” வேண்டிய பிரச்சனை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலை வெடிப்பை வரலாறு மனிதகுலத்துக்கு நேருக்கு நேர் கொண்டு வருகிறது.

ட்ரொட்ஸ்கியின் தீர்க்கதரிசனம் இன்றைய யதார்த்தம். ட்ரொட்ஸ்கியால் முன்னறிவிக்கப்பட்ட “எரிமலை வெடிப்பு” நீண்ட காலமாக நடந்து வருகிறது மற்றும் அதன் வெள்ளை-சூடான எரிமலை முழு பூகோளத்தையும் சூழ்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைவர்கள் எதிர்கொள்ளும் மூலோபாய பிரச்சனை, அது ஒரே நேரத்தில் நடத்தக்கூடிய போர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதுதான். இது சாத்தியமா என பைடென் தனது சிஐஏ மற்றும் பென்டகன் ஆலோசகர்களிடம் கேட்டார். அதாவது ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிராக ஒரே நேரத்தில் போரை நடத்துவது சாத்தியமா அல்லது முதலில் ரஷ்யாவை அழித்து விட்டு, அதன் பரந்த இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து விட்டு, சீனாவுக்கு எதிராக அனைத்து ஜனநாயக பதாகைகளையும் பறக்க விட்டு வோல் ஸ்ட்ரீட் விடுதலைப் போரில் இறங்குவது உகந்ததா?

உக்ரேனிய துயரம் மூன்றாம் உலகப் போராக விரிவடையும் அச்சுறுத்தலைக் கொடுக்கும் மோதலில் ஆரம்ப சூதாட்டம் மட்டுமே ஆகும். நெருக்கடி பகுத்தறிவு தணிந்து போகும் என்ற ஒருவரின் மீது நம்பிக்கை வைப்பது, இந்த கட்டத்தில், சுய-மாயையின் ஒரு பயிற்சியாகும்.

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், எண்ணற்ற முதலாளித்துவ அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் சோவியத் யூனியனின் கலைப்பானது அமைதி, செழிப்பு மற்றும் ஜனநாயகத்தின் புதிய சகாப்தத்தின் விடியலைக் குறிக்கும் என்று அறிவித்தனர். பிரான்சிஸ் புக்குயாமா என்ற ஒரு குறிப்பாக தைரியமான சூத்திரதாரி, அவரது படிகப் பந்தில் ஆழமாகப் பார்த்து, “வரலாற்றின் முடிவு” என்று அறிவித்தார். முதலாளித்துவம், சமூகப் பரிணாம வளர்ச்சியின் இறுதிப் புள்ளிக்கு மனிதகுலத்தைக் கொண்டு வந்துள்ளது, அதில் இருந்து மேற்கொண்டு எந்த முன்னேற்றமும் அடைய முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.

ஆனால், வரலாறு முற்றிலும் ட்ரொட்ஸ்கி முன்னறிவித்த வழிகளில் தொடர்ந்தது. கடந்த 30 ஆண்டுகள் வரலாற்றில் பல தசாப்தங்கள், முடிவில்லாத போர், பாசிசத்தின் மீள் எழுச்சி, பொருளாதார பேரழிவுகள், சமூக சமத்துவமின்மையின் அதிர்ச்சியூட்டும் நிலைகள், கலாச்சார சிதைவு, மில்லியன் கணக்கானவர்களைக் கொன்ற பூகோளரீதியான பெரும்தொற்றுநோய் மற்றும் வேகமாக வெளிவரும் சுற்றுச்சூழல் பேரழிவு என்பனவற்றுக்கூடாக வரலாறு தொடர்கிறது.

நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தில் ட்ரொட்ஸ்கி விவரித்த நிலைமையை நாம் இன்று துல்லியமாக எதிர்கொள்கிறோம், இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு 1938ல் அவர் எழுதினார்: “ஒரு சோசலிசப் புரட்சி இல்லாமல், அடுத்த வரலாற்றுக் காலத்தில், ஒரு பேரழிவு மனிதகுலத்தின் முழுக் கலாச்சாரத்தையும் அச்சுறுத்துகிறது.

ட்ரொட்ஸ்கி கணித்த பேரழிவு உண்மையில் நடந்தது. இரண்டாம் உலகப் போரின் போது மனித வாழ்வில் ஏற்பட்ட பயங்கரமான எண்ணிக்கை, அந்த நேரத்தில் இருந்த தொழில்நுட்பத்தின் மட்டத்தால் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டது.

அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் உக்ரேனில் தங்கள் செயல்பாடுகள் அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலால் கட்டுப்படுத்தப்படாது என்று அறிவிக்கும் போது, அவர்கள் தங்கள் இலக்குகளை அடைய பூகோளத்தை அழிக்கும் அபாயத்திற்கு தயாராக இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

ஆனால், ட்ரொட்ஸ்கி தவிர்க்க முடியாத அழிவின் தீர்க்கதரிசி அல்ல. அவர் உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயவாதி. முதலாளித்துவத்தை பேரழிவை நோக்கித் தள்ளும் முரண்பாடுகளே உலக சோசலிசப் புரட்சிக்கான நிலைமைகளையும் உருவாக்குகின்றன. நான்காம் அகிலத்தை கட்டியெழுப்புவதற்கான அவரது எழுத்துகளும் அயராத முயற்சிகளும், அவரது நம்பிக்கையை வெளிப்படுத்தின. அதாவது, சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சக்தியாகும், அது முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து உலகை சோசலிச அஸ்திவாரங்களில் சமூகத்தை மறுகட்டமைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

சோசலிசத்தின் தலைவிதி, எனவே மனித குலத்தின் தலைவிதி, விஞ்ஞானரீதியாக அஸ்திவாரமிடப்பட்ட வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தில் ஆழமாக வேரூன்றி, தேவையான உறுதிப்பாடு, தைரியம் மற்றும் முன்முயற்சி ஆகியவற்றைக் கொண்ட உலகப் புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதில் தங்கியுள்ளதோடு, அது வரலாற்று ரீதியாக காலாவதியான முதலாளித்துவ அமைப்புடன் கணக்குகளை தீர்த்துக்கொள்ளும் என்று ட்ரொட்ஸ்கி உறுதியாக நம்பினார்.

லெனினுடன் இணைந்து தான் தலைமை தாங்கிய அக்டோபர் புரட்சி, அதன் அனைத்து துன்பங்கள் மற்றும் இடர்பாடுகள் இருந்தபோதிலும், வெற்றிபெறும் ஒரு உலக நிகழ்ச்சிப்போக்கின் ஆரம்பம் மட்டுமே என்ற அவரது நம்பிக்கையில் ட்ரொட்ஸ்கி ஒருபோதும் ஊசலாடவில்லை. அவர் தனது சுயசரிதையில் எழுதியது போல் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தைப் பேணுவது அவசியம்:

புரட்சி என்பது ஒரு புதிய சமூக ஆட்சிமுறைக்கான ஒரு பரிசோதனையாகும், இது பல மாற்றங்களுக்கு உட்படும் மற்றும் அதன் அடித்தளத்தில் இருந்தே மீண்டும் மீண்டும் புதிதாக்கப்படும். புதிய தொழில்நுட்ப சாதனைகளின் அடிப்படையில் இது முற்றிலும் மாறுபட்ட தன்மையை எடுத்துக்கொள்ளும். ஆனால் சில தசாப்தங்கள் மற்றும் நூற்றாண்டுகளுக்குப் பிறகு, முதலாளித்துவ அமைப்பின் ஜேர்மன் சீர்திருத்தம் அல்லது பிரெஞ்சுப் புரட்சியை திரும்பிப் பார்ப்பது போல, புதிய சமூக அமைப்பு அக்டோபர் புரட்சியை பார்க்கும். இது மிகவும் தெளிவானது, மறுக்க முடியாத வகையில் தெளிவானது, இதனை பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் வரலாற்றுப் பேராசிரியர்கள் கூட புரிந்துகொள்வார்கள்.

இன்று, அவர் பிரிங்கிபோவை விட்டு வெளியேறி 90 ஆண்டுகளுக்குப் பிறகும், அவர் இறந்து 83 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த அழகான தீவில் நாங்கள் சந்திக்கிறோம். ஒரு சிறந்த மனிதருக்கு அஞ்சலி செலுத்துவது மட்டுமல்லாமல், அவரது பணியின் மூலம் பூகோளரீதியான முதலாளித்துவ நெருக்கடி மற்றும் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச எழுச்சி ஆகியவற்றினால் முன்வைக்கப்பட்ட சவால்களை எதிர்கொள்ளும் வலிமையையும் உத்வேகத்தையும் எமக்கு புதுப்பித்துள்ளது.

ட்ரொட்ஸ்கி வாழ்ந்த இல்லம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு ட்ரொட்ஸ்கியின் பரந்த அரசியல் மற்றும் அறிவுசார் மரபுகளை படிப்பதற்கான சர்வதேச மையமாக மாற்றப்படும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி உரையை முடிக்க என்னை அனுமதியுங்கள்.

அத்தகைய திட்டத்தை மேற்கொள்வதன் மூலம், தேவையான சர்வதேச ஆதரவுடன், பிரின்கிபோ உலக வரலாற்றில் அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்கும்.

Loading