இலங்கை: மலையகம் 200 மாநாட்டில் தோட்டத் தொழிற்சங்கங்கள் பிற்போக்கு அடையாள அரசியலை ஊக்குவிக்கின்றன

இந்த மொழிப்பெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் நிறுவப்பட்ட தேயிலைத் தோட்டங்களுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாக தென்னிந்தியாவில் இருந்து தமிழ்த் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், மலையகம் 200 மாநாடு கடந்த மாதம் மத்திய இலங்கையின் நுவரெலியாவில் நடைபெற்றது. இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இந்தியத் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்படும் இலட்சக் கணக்கான தோட்டத் தொழிலாளர்கள், தொழிலாள வர்க்கத்தின் மிகவும் வறிய மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் ஒன்றாகவே உள்ளனர்.

மலையகம் 200 மாநாடு [Photo by Facebook]

எவ்வாறாயினும், குறைந்த சம்பளத்திற்கு நீண்ட மணிநேரம் உழைக்கின்ற, அடிப்படை வசதிகள் இல்லாத சிறிய லைன் அறைகளில் வாழ்கின்ற மற்றும் முறையான சுகாதார மற்றும் கல்வி சேவைகள் கிடைக்காத தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் முகம் கொடுக்கும் பயங்கரமான நிலைமைகள் குறித்து மாநாடு கவனம் செலுத்தவில்லை. மாறாக, தோட்டத் தொழிலாளர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான போராட்டங்களை நசுக்குவதற்குப் பொறுப்பான தொழிற்சங்கங்கள்/அரசியல் கட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்தும் சலுகை பெற்ற தட்டினரின் கோரிக்கைகளை ஊக்குவிப்பதாக இருந்தது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் (ஜ.ம.மு.) தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், “இப்போது நாங்கள் தோட்டத் தொழிலாளர்கள் என்ற எல்லையை கடந்து ஒரு தேசிய இனமாக மாற்றப்பட்டுள்ளோம்” என கூறி மாநாட்டின் கருப்பொருளை சுருக்கமாக அறிவித்தார். மலையகத் தமிழர்களின் “தலைவர்கள்” என்ற வகையில், அதிக உத்தியோகபூர்வ அங்கீகாரமும் தங்களுக்கு அதிக அதிகாரத்தினையும் சலுகைகளையும் விரும்பும் ஜ.ம.மு. மற்றும் பிற தொழிற்சங்க எந்திரங்களுக்காக அவர் பேசுகிறார்.

மாநாட்டுப் பிரகடனமானது, “மலையகத் தமிழர்களை தனித்துவமான அடையாளம் கொண்ட சமூகமாக மற்றும் சம பிரஜைகளாக அங்கீகரிக்க வேண்டும்” என்று அரசாங்கத்தை கோருகிறது. அரசியல் அதிகாரப் பகிர்வு மற்றும் காணி உரிமைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் பெருந்தோட்டங்களில் உள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகளையும் முழுமை அபிவிருத்தி செய்யப்பட்ட கிராமங்களாக அங்கீகரித்தல் உட்பட மலையக தமிழ் சமூகத்துக்காக 13 கோரிக்கைகள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன.

அனைத்து அடையாள அரசியலையும் போலவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு “தனித்துவ அடையாளத்தை,” தேசியத்தைக் ஊக்கிவிப்பதானது முதலாளித்துவ சமூகத்தின் முதன்மைப் பிரிவான வர்க்கப் பிளவுக்கு மேலாக இனம், மதம் மற்றும் மொழியை தூக்கிப் பிடிப்பதற்கு மட்டுமே உதவுகிறது. அந்த வகையில், இலட்சக் கணக்கான தோட்டத் தொழிலாளர்களை சிங்களம், முஸ்லிம் மற்றும் தீவில் பல நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களுமாக ஏனைய “சமூகங்களில்” உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளிடம் இருந்து பிளவுபடுத்துவதற்கு மட்டுமே சேவை செய்யுமளவுக்கு இது முற்றிலும் பிற்போக்கானது ஆகும்.

“அதிகாரப் பகிர்வுக்கான” அழைப்பு, பெருந்தோட்டத் தொழிலாள வெகுஜனங்களின் இழப்பில் அரசியல்வாதிகள், தொழிற்சங்க அதிகாரிகள், சிறு வணிகர்கள், தொழிலறிஞர்கள் மற்றும் கல்விமான்களுமாக மலையக தமிழ் உயரடுக்கின் நிலையை உயர்த்துவதற்கானதாகும். குறிப்பாக, அதிகரித்து வரும் பணவீக்கம், வேலை இழப்புகள் மற்றும் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதிய சிக்கன திட்ட நிரலுக்கு எதிரான போராட்டத்தில் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் நுழையும் தருணத்தில், “அவர்களின்” தொழிலாளர்கள் மீது ஜ.ம.மு. மற்றும் ஏனைய தோட்டத் தொழிற்சங்கங்களின் அரசியல் பிடியை வலுப்படுத்துவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு (USAID) உட்பட வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து நிதிகளைப் பெறும் அரசு சாரா நிறுவனமான சமூக அபிவிருத்தி நிறுவனம் (ISD) இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கையில், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் நடவடிக்கைகளுக்கான பிரதி பணிப்பாளர் டெப்ரா மொசெல் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, மலையக தமிழர்கள் “இந்த நாட்டின் மலையகத்தில் வேரூன்றிய தனித்துவ அடையாளத்துடன் கூடிய சமூகத்தை கட்டியெழுப்புவதில் உறுதிப்பாடு கொண்டுள்ளனர்” என்று பிரகடனப்படுத்துவதில் இணைந்துகொண்டார். முகவரமைப்பின் முகநூல் பக்கம், “சமூகத்தின் சம உரிமைகளுக்கான உந்துதலை அமெரிக்கா ஆதரிக்கிறது,” என்று கூறுகிறது.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு மாநாட்டில் பங்குபற்றியமை, அதன் வர்க்கத் தன்மையை மட்டுமே அம்பலப்படுத்துகிறது. அது தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அங்கிருக்கவில்லை, மாறாக அவர்களின் போராட்டங்களை நசுக்குவதற்கான கருவியாக இருந்து வரும் தொழிற்சங்கங்களின் “உரிமைகளுக்கு” ஆதரவாகவே இருந்தது.

பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதித்துவ அமைப்பான இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தினர் மாநாட்டிற்கு ஒரு முன்னணி விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தமை தொழிற்சங்கங்களின் பாத்திரத்தை அம்பலப்படுத்தியது. மாறாக, பார்வையாளர்களில் தோட்டத் தொழிலாளர்கள் சிறிய எண்ணிக்கையிலேயே இருந்தனர்.

மனோ கனேசன் [Photo by Mano Ganesan]

கணேசன், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மட்டுமன்றி, தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகிய ஏனைய இரண்டு தோட்ட தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து 2015 இல் ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (த.மு.கூ.) தலைவருமாவார். பாராளுமன்ற உறுப்பினர்களான தொழிலாளர் தேசிய சங்க தலைவர் ப. திகாம்பரம் மற்றும் மலையக மக்கள் முன்னணி தலைவர் வே. ராதாகிருஷ்ணனும் அதன் பிரதித் தலைவர்கள் ஆவர். அவர்களும் மாநாட்டில் உரையாற்றினர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் 1.5 மில்லியன் இந்திய தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி கூறுகிறது. இது ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது பெருந்தோட்டப் பகுதிகளில் ஆறு உள்ளூராட்சி சபைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது.

கடந்த ஆண்டு தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு “அபிலாஷை ஆவணத்தை” வெளியிட்டு, பிராந்தியம் சாரா சமூக சபை (Non-Territorial Community Council-NTCC) ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அது சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தது. இந்த உயரடுக்கின் அமைப்பு தேர்வு செய்யப்படமாட்டாது, மாறாக இலங்கையின் இந்திய தமிழ் சமூகத்திற்காக பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட / நியமிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

கடந்த மாதம் டெய்லி மிரர் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கும் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க “மலையகத் தமிழர்கள் தனித்துவமான இன சமூகம்” என்று மீண்டும் மீண்டும் கூறியதாகத் தெரிவித்த கணேசன், “பழைய ’தோட்டத் தொழிலாளர்’ அடையாளத்தைத் தாண்டி இப்போது வளர்ந்துள்ளோம். சிங்களவர்கள், [வடக்கு மற்றும் கிழக்கு] தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுடன் சேர்ந்து இலங்கையில் உள்ள நான்கு தேசிய இன சமூகங்களில் நாங்களும் ஒன்றாகும்,” என மேலும் கூறினார்.

கணேசனின் படி, தோட்டத் தொழிலாளர்களைக் காட்டிக் கொடுக்கும் வரலாற்றைக் கொண்ட மிகப் பெரிய மற்றும் நீண்ட கால தோட்டத் தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் (இ.தொ.கா.), இந்தியத் தமிழர்களை ஒரு தனித்துவமான தேசிய இன சமூகமாக உயர்த்துவதையும் ஆதரிக்கிறது. இ.தொ.கா., சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை திணிக்கும் விக்கிரமசிங்க ஆட்சியில் தற்போது பங்காளியாக உள்ளது.

இந்த பிளவுபடுத்தும் அடையாள அரசியலின் நோக்கம், உயரடுக்கிற்கான சலுகைகளைப் பெறுவது மட்டுமல்ல. மாறாக, இது, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பெரும் படை உட்பட, தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட முதலாளித்துவ-எதிர்ப்பு இயக்கம் சம்பந்தமாக ஆளும் வர்க்கம் முழுவதிலும் காணப்படும் ஆழ்ந்த பீதியில் இருந்து தோன்றுகிறது.

தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளுடன் இணைந்து போராடிய வளமான வரலாற்றைக் கொண்டுள்ளனர். இரண்டாம் உலகப் போரின் போது, தோட்டத் தொழிலாளர்கள், தீவு முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினருடன் சேர்ந்து, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு சவால் விடுத்த ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைமையின் கீழ் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

1948ல் பிரித்தானியாவில் இருந்து உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்றதில் இருந்து, அடுத்தடுத்து அதிகாரத்துக்கு வந்த அரசாங்கங்கள், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் வழிமுறையாக, சிங்கள பௌத்த மேலாதிக்க தமிழர்-விரோத, முஸ்லிம்-விரோத பேரினவாதத்தை ஊக்குவித்து வந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கத்தின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று, ஒரு மில்லியன் இந்திய தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை உரிமைகளைப் பறிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியதாகும்.

அப்போது நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் தலைவர் கொல்வின் ஆர். டி சில்வா, ஆகஸ்ட் 1948 இல் பிற்போக்கு குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து பாராளுமன்றத்தில் தெரிவித்ததாவது:

“இந்த அரசாங்கம் இந்த பிரச்சினையை முதலாளித்துவ வர்க்கத்தின் கோணத்தில் இருந்து அணுகினால், எங்கள் கட்சி -நான்காம் அகிலத்தினராகிய நாங்கள்- இந்த கேள்வியை உழைப்பாளிகளின், அதாவது தொழிலாள வர்க்கத்தின் கோணத்தில் இருந்து அணுகுவோம். அதாவது, இனப் பிரச்சினையில் இருந்து சுயாதீனமாக, இனப் பிரச்சினைக்கு மேலான வர்க்கக் கோணத்தில் இருந்து நாம் அணுகுகின்றோம். இந்நாட்டின் உழைக்கும் மக்கள் மத்தியில் இன வம்சாவழியின் அடிப்படையில் மனிதனுக்கு மனிதன் வேறுபடுத்திப் பார்க்க நாம் தயாராக இல்லை. ஒரு தொழிலாளியை, முதலும் முக்கியமுமாக ஒரு தொழிலாளி என்று நாங்கள் கூறுகிறோம்.”

அடுத்தடுத்த தசாப்தங்களில், தோட்டத் தொழிலாளர்கள் ஏனைய துறைகளில் உள்ள அவர்களது சகாக்களுடன் சேர்ந்து வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டமை, ஒவ்வொரு முறையும் சிங்களப் பேரினவாதத்தைத் தூண்டுவதன் மூலம் எதிர்வினையாற்றிய ஆளும் வர்க்கத்தினருக்கு அதிர்ச்சி அலைகளை அனுப்பியது.

1953 இல், பேரழிவு தரும் பணவீக்கத்திற்கு தலைமை தாங்கிய ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கத்துடன் தொழிலாள வர்க்கத்தையும் கிராமப்புற ஏழைகளையும் கடுமையான மோதலுக்கு கொண்டுவந்த அரை-கிளர்ச்சி ஹர்த்தாலில் தோட்டத் தொழிலாளர்களும் இணைந்துகொண்டனர். தமிழ் பேசும் அனைவரையும் இரண்டாம் தர குடிமக்கள் என்ற நிலைக்குத் தள்ளிய, புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) மற்றும் அதன் சிங்களம் மட்டுமே மொழிக் கொள்கையின் பின்னால் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியினர் அணிதிரண்டனர்.

1963ல் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தை உலுக்கிய சக்திவாய்ந்த “21 அம்சக் கோரிக்கைகள்” இயக்கத்தில் தோட்டத் தொழிலாளர்களும் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர். தம்மை இன்னமும் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று கூறிக்கொண்ட சீரழிந்த லங்கா சம சமாஜக் கட்சி (ல.ச.ச.க.) 1964 இல் அரசாங்கத்தில் நுழைந்துகொண்டதால் மட்டுமே அந்த அரசாங்கம் தப்பிப் பிழைத்தது. சோசலிச அனைத்துலகவாதத்தை வெளிப்படையாக கைவிட்ட லங்கா சம சமாஜக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிங்கள இனவாத கொள்கைகளை அரவனைத்துக்கொண்டது.

லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பு தொழிலாள வர்க்கத்திற்குள் பெரும் குழப்பத்தை உருவாக்கியதோடு குட்டி முதலாளித்துவ இனவாதக் கட்சிகளின் தோற்றத்திற்கான கதவைத் திறந்துவிட்டு, இறுதியில் 1983ல் தீவை நாசமாக்கிய மூன்று தசாப்த கால இனவாதப் போருக்கு இட்டுச் சென்றது. லங்கா சம சமாஜக் கட்சி தமிழர்-விரோதக் கொள்கைகளைத் தழுவியமை, பெருந்தோட்டங்களில் இ.தொ.கா வும் அதிலிருந்து பிரிந்து சென்ற பிரிவுகளும் தோட்டத் தொழிலாளர்கள் மீது தங்கள் அரசியல் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த உதவியது.

இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் பிரதமர் பண்டாரநாயக்காவுக்கும் இடையே 1964 சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் அரை மில்லியன் தோட்டத் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக தென்னிந்தியாவிற்கு திருப்பி அனுப்பியமை தொடர்பாக கடந்த மாதம் மாலையகம் 200ல் பல பேச்சாளர்கள் பேசினர்.

லங்கா சம சமாஜக் கட்சி இந்த பிற்போக்கு இனவாத நடவடிக்கையை ஆதரித்தது மட்டுமல்லாமல், 1970 -77 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான இரண்டாவது அரசாங்கத்தின் ஒரு பங்காளியாக அதை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது. 1948 இல் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்த கொல்வின் ஆர். டி சில்வாவே, இலட்சக்கணக்கான தமிழர்களை தென்னிந்தியாவிற்குத் திருப்பியனுப்பிய பெருந்தோட்டப் பகுதிகளில் பரவிய பட்டினிக்கும் பஞ்சத்திற்கும் தலைமை தாங்கிய பெருந்தோட்ட அமைச்சராக இருந்தமை, லங்கா சமசமாஜக் கட்சியின் அரசியல் சீரழிவின் அளவுகோலாகும்.

கணேசனும் ஏனைய பேச்சாளர்களும் நுவரெலியா மாநாட்டில், சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையை தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் சம்பந்தமான நிலைப்பாட்டில் இருந்து விமர்சிக்கவில்லை, மாறாக அது தோட்டத் தொழிற்சங்கங்களுக்கான பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தியதற்காக அதை விமர்சித்தமை குறிப்பிடத்தக்கது. உடன்படிக்கை இல்லாவிட்டால், தோட்டத் தொழிலாளர்களைத் திருப்பி அனுப்பியிருக்காவிட்டால் அவரது ஜனநாயக மக்கள் முன்னணியும் ஏனைய தொழிற்சங்கங்களும் 20 ஆசனங்களைப் பெற்றிருக்கும், மேலும் அதிக சலுகைகளுக்கும் அமைச்சுப் பதவிகளுக்கும் கொழும்பு அரசாங்கத்துடன் பேரம் பேசுவதற்கு வலுவான நிலையில் இருக்கும் என்று கணேசன் முறைப்பட்டுக்கொண்டார்.

கணேசன் தற்போது, 2020 இல் ரணில் விக்கிரமசிங்கவை அதன் ஒரே பாராளுமன்ற உறுப்பினராக விட்டுவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அதிகப் பெரும்பான்மை உடைந்து சென்று உருவாக்கப்பட்ட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐ.ம.ச.) பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்களும், விக்கிரமசிங்கவைப் போலவே, பிரஜா உரிமைச் சட்டம் மற்றும் தீவை மூழ்கடித்த நீடித்த உள்நாட்டுப் போரைத் தூண்டி விட்டமை உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் குற்றவியல் வரலாற்றில் மூழ்கிப் போனவர்கள் ஆவர். கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியானது 2015-2019 ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்ததுடன் அதில் கணேசன் அமைச்சராக இருந்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வந்த எதிர்ப்பைத் தணிப்பதற்காக 1980களின் நடுப்பகுதியில் குடியுரிமை வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் இன்னும் இரண்டாம் தர பிரஜைகளாக பாகுபாடு காட்டப்படுகிறார்கள். குறிப்பாக தற்போதைய சமூக நெருக்கடியால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையின்மை அதிகமாக இருப்பதால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி நகரங்களுக்கும் சுதந்திர வர்த்தக வலயங்களுக்கும் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பல குடும்பங்கள் போதுமான உணவை வாங்க முடியாததால் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பரவலாகி வருகிறது.

சமூக நெருக்கடியால் தூண்டப்பட்ட, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கத்தை அகற்றிய மக்கள் எழுச்சியில் கடந்த ஆண்டு தோட்டத் தொழிலாளர்களும் இணைந்துகொண்டனர். ஏப்ரல் 28 அன்று நடந்த பொது வேலைநிறுத்தத்தில் அவர்கள் பெருமளவில் இணைந்துகொண்டதோடு தொழிற்சங்கங்கள் அவர்கள் பங்கேற்பதை எதிர்த்த பின்னரும் கூட மே 6 அன்று நடந்த பொது வேலைநிறுத்தத்தில் பகுதியளவு இணைந்து கொண்டனர். எந்தவொரு நடவடிக்கையையும் மட்டுப்படுத்தியதன் மூலம், தோட்டத் தொழிற்சங்கங்களும் ஏனைய தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து, விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக ஜனநாயக விரோதமாக நியமிப்பதற்கு வழிவகுத்தன.

விக்கிரமசிங்க அரசாங்கம் இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தின் புதிய சுமைகளை சுமத்துகின்ற நிலையில், அனைத்து தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை கடுமையாக்குகின்றது. தந்திரோபாய வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், எதிர்க் கட்சிகளும் அனைத்து தொழிற்சங்கங்களும் வேறு மாற்றீடு இல்லை என்ற பொய்யை கூறிக்கொண்டு சர்வதேச நாணய நிதிய திட்ட நிரலை ஆதரிக்கின்றன. தொழிற்சங்கங்கள் பெருந் தோட்டங்களில் தோட்டக் கம்பனிகளுடனும் அரசாங்கத்துடனும் கைகோர்த்துக்கொண்டு, சம்பளத்துக்கும் ஒழுக்கமான வாழ்க்கை நிலைமைகளுக்கும் தொழிலாளர்கள் நடத்தும் எந்தவொரு போராட்டத்தையும் நசுக்குகின்றன.

தொழிலாளர்களின் பரவலான எதிர்ப்பை முகங்கொடுத்துள்ள நிலையில், தொழிற்சங்கங்களும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனமும் மீண்டும் இனவாத அரசியல் விஷத்தை நாடியுள்ளன. அதுவே மலையகம் 200 மாநாட்டின் திட்ட நிரலாகும். தோட்டத் தொழிலாளர்கள் “தனித்துவ அடையாளத்தை” கொண்டுள்ள ஒரு வேறான இந்திய தமிழ் “இனத்தவர்களின்” ஒரு பகுதி என்ற பிற்போக்கு கருத்தை நிராகரித்துவிட்டு, ஈவிரக்கமற்ற சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுவதற்கு தீவு முழுவதிலும் உலகெங்கிலும் உள்ள ஏனைய தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்பட வேண்டும்.

துரோகத் தொழிற்சங்கங்களில் இருந்தும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளில் இருந்தும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபித்தால் மட்டுமே தொழிலாளர்களால் அரசியல் மற்றும் தொழில்துறை போராட்டத்தை நடத்த முடியும். சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கொள்கைகளுக்கு மாற்றீடு இல்லை என்பது பொய்யானது. தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு மூலகாரணமாக இருக்கும் முதலாளித்துவ அமைப்பை ஒழிப்பதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், கிராமப்புற மக்களையும் தன் பக்கம் ஈர்த்துக்கொண்டு தொழிலாள வர்க்கம் ஐக்கியப்படுவது அவசியமாகும்.

அடக்குமுறை முதலாளித்துவ அரசாங்கத்தை தூக்கி வீசி, சோசலிசத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு, இந்த நடவடிக்கைக் குழுக்களில் இருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஒரு மாநாட்டுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. இலங்கையிலும் அதற்கு அப்பாலும் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து, இந்த சுயாதீன அரசியல் இயக்கத்தில் தோட்டத் தொழிலாளர்களும் ஒரு அங்கமாக இருக்கின்றனர்.

ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான இலங்கை தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்காக!

வேலை நீக்கம் செய்யப்பட்ட சக ஊழியர்களை மீண்டும் வேலையில் அமர்த்தக் கோரி இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான சோடிக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறு! வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்து!

Loading