IMF சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்குப் போராடும் சோ.ச.க. மீதான ஜே.வி.பி. தொழிற்சங்கத்தின் குண்டர் அச்சுறுத்தல்களை எதிர்த்திடுங்கள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தால் சுமத்தப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) போராடி வருகின்றது. இதன் போது சோ.ச.க., தனது ஜனநாயக உரிமையை பயன்படுத்துவதை தடுப்பதற்கு, மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி.) இணைந்த தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவத்தினர் சமீப மாதங்களாக முயற்சித்து வருகின்றனர்.

10 ஜூலை 2023 அன்று ஊழியர் சேமலாப நிதியைப் பாதுகாப்பதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். [Photo: WSWS] [Photo: WSWS]

இந்த தொழிற்சங்க அதிகார வர்க்கத்தின் நடவடிக்கைகள், இலங்கை முதலாளித்துவ பொருளாதாரத்தை காப்பாற்றக்கூடிய ஒரே கட்சி என்று கூறிக்கொண்டு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக முயற்சித்து வரும் இனவாத ஜே.வி.பி.யின் அரசியல் வேலைத்திட்டத்துடன் ஒத்துப்போகிறது. சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள நடவடிக்கைகள் மீதான தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் எதிர்ப்பை, ஜே.வி.பி.யின் முன்னணி அமைப்பான தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசாங்கத்திற்கு ஆதரவான வகையில் திசை திருப்பிவிட ஜே.வி.பி. தொழிற்சங்கங்கள் முயற்சிக்கின்றன.

தொழிலாளர்களுடனான சோ.ச.க.யின் கலந்துரையாடல்களைத் தடுக்க முடியாத அவநம்பிக்கையிலேயே, அதன் பிரச்சாரகர்களை ஜே.வி.பி. தொழிற்சங்க குண்டர்கள் சரீர வன்முறைகளைப் பயன்படுத்தியும், பல சந்தர்ப்பங்களில் கட்சி பிரச்சாரகர்களிடமிருந்து கட்டுரைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை பறித்தும் அச்சுறுத்தியுள்ளனர்.

திங்களன்று, “இலங்கை அரசாங்கம் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்திடு! தொழில் மற்றும் ஊதியத்துக்காகப் போராட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு!” என்ற தலைப்பிலான ஒரு துண்டுப் பிரசுரத்தை கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலில் கான் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் சோ.ச.க. உறுப்பினர்கள் விநியோகித்தனர். அதன் பின்னர், “ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியை [ஓய்வூதிய நிதிகள்] கொள்ளையடிப்பதற்கு எதிரான இயக்கம்” என்று அழைக்கப்படும் துறைமுக தொழிற்சங்க கூட்டணியின் கூட்டமொன்று அங்கு நடந்தது.

திடீரென்று தொழிற்சங்க குண்டர்கள் ஒரு சோ.ச.க. பிரச்சாரகரிடமிருந்து நூற்றுக்கணக்கான துண்டுப் பிரசுரங்களைப் பறித்துக்கொண்டு, மற்றொருவரைக் கொடூரமான வார்த்தைகளால் அச்சுறுத்திக்கொண்டு அவரை மல்லுக்கட்டி தள்ளிவிட்டனர். சோ.ச.க., கொழும்பு துறைமுகத்தில் உள்ள அதன் தொடர்புகளின் ஆதரவுடன், குண்டர்களில் ஒருவரை ஜே.வி.பி மற்றும் அதன் தொழிற்சங்கத்தின் உறுப்பினராக அடையாளம் கண்டுள்ளது.

ஜே.வி.பி-யுடன் இணைந்த தொழிற்சங்க குண்டர்கள் கொழும்பு துறைமுக நுழைவாயிலில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரகர்களைத் தாக்குகின்றனர் [Video: WSWS]

துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பில் உள்ள மத்திய அமைப்பானது ஜே.வி.பி. தலைவர் நிரோஷன் கொரகனா தலைமையிலான அகில இலங்கை துறைமுக தொழிலாளர் சங்கம் ஆகும். இதில் சுதந்திர துறைமுக ஊழியர் சங்கமும் துறைமுக மற்றும் கப்பல்துறை தொழிலாளர் சங்கமும் அடங்கும். இந்த தொழிற்சங்கங்களின் தலைவர்கள் சோ.ச.க. உறுப்பினர்கள் மீதான தாக்குதலைத் தொடர அனுமதித்து அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

பின்னர் அவர்களது சமூக ஊடக வக்காலத்து வாங்கிகள், சோ.ச.க.க்கு களங்கம் ஏற்படுத்தும் இழிந்த முயற்சியில், “ரணிலின் [ஜனாதிபதி விக்கிரமசிங்க] குழு எதிர்ப்புப் பிரச்சாரத்தை நாசப்படுத்த அனுப்பியவர்கள்” என்ற தலைப்புடன் இந்த சம்பவத்தின் வீடியோவை யூ டியூப்பில் வெளியிட்டனர்.

எவ்வாறாயினும், இலங்கையின் பிரதான தொலைக்காட்சி வலையமைப்புகளில் ஒன்றான சிரச தொலைக்காட்சியின் மாலைச் செய்தி, கான் மணிக்கூட்டு கோபுர சம்பவத்தைப் பற்றி செய்தி வெளியிட்டதுடன், சோ.ச.க. உறுப்பினர் எஸ்.கே. கீர்த்தி, தொழிற்சங்க குண்டர்களின் ஜனநாயக விரோத செயல்களை அதில் விளக்குகிறார்.

சோ.ச.க. உறுப்பினர் எஸ்.கே. கீர்த்தி, 10 ஜூலை 2023 அன்று கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே சோ.ச.க.க்கு எதிரான தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஆத்திரமூட்டல் பற்றி ஊடகங்களிடம் கூறுகிறார். [Photo: WSWS] [Photo: WSWS]

ஜூன் 20 அன்று, சோ.ச.க. குழு ஒன்று கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் வாயிலில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தது. அரசாங்கத்தால் அவசரமாக தனியார்மயமாக்க இலக்கு வைக்கப்பட்ட அரச நிறுவனங்களில் டெலிகொம் நிறுவனமும் ஒன்றாகும். பல ஜே.வி.பி. தொழிற்சங்க அதிகாரிகள் சோ.ச.க. உறுப்பினர்களை அச்சுறுத்தி, “தொழிற்சங்கத் தலைவர்களை விமர்சிக்கும் உங்கள் துண்டுப் பிரசுரங்களை இங்கு விநியோகிக்க வேண்டாம்” என்று அறிவித்தனர்.

சோ.ச.க. உறுப்பினர்கள் தொழிற்சங்க அதிகாரிகளுக்கு சவால் விடுத்து, தொலைத்தொடர்பு ஊழியர்களிடையே பிரச்சாரம் செய்ய அவர்களுக்கு ஜனநாயக உரிமை உள்ளது என்பதை தெளிவுபடுத்தினர். டெலிகாம் ஊழியர்களின் ஆதரவைப் பெற முடியாமல், அதிகாரிகள் பின்வாங்கினர்.

பெப்ரவரி 8 அன்று, நிரோஷன் கொரகனா, சோ.ச.க.யின் துண்டுப் பிரசுரங்களைப் பறித்தெடுத்ததுடன், கொழும்பில் உள்ள கோட்டை ரயில் நிலையத்திற்கு வெளியே எமது குழு உறுப்பினர் ஒருவரை அடித்தார். சோ.ச.க. உறுப்பினர்கள், அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கும் ஆர்ப்பாட்டத்தை அடுத்து கொழும்பு துறைமுகம் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தொழிலாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

அகில இலங்கை துறைமுக தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் ஜே.வி.பியின் தலைவருமான நிரோஷன் கொரகான [Photo: WSWS] [Photo: WSWS]

சோ.ச.க.யின் துண்டுப் பிரசுரங்களில் தொழிற்சங்கங்கள் பற்றிய விமர்சனங்கள் இருப்பதால் அவற்றை விநியோகிக்க முடியாது என்று கொரகான பிரச்சாரகர்களை அச்சுறுத்தினார். எவ்வாறாயினும், தங்கள் பிரச்சாரத்தைத் தொடர்ந்த சோ.ச.க. உறுப்பினர்களுக்கு எதிராக எந்தவொரு தொழிலாளியையும் திரட்ட முடியாமல் போனதால் கொரகான பின்வாங்க வேண்டியிருந்தது. சில தொழிலாளர்கள் முன் வந்து, ஜே.வி.பி. தொழிற்சங்கத் தலைவரின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என்று கண்டித்தனர்.

திங்களன்று தொழிற்சங்க குண்டர்களால் பறிக்கப்பட்ட சோ.ச.க. துண்டுப் பிரசுரமானது, சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான விக்கிரமசிங்க ஆட்சியின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான வேலைத்திட்டம் பற்றி கலந்துரையாட ஜூலை 6 நடந்த பகிரங்க கூட்டத்திற்கு பிரச்சாரம் செய்வதற்காக, முதலில் உலக சோசலிச வலைத் தளத்தில் (WSWS) வெளியிடப்பட்டது. “அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுவதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், கிராமப்புற ஏழைகளின் ஆதரவுடன், தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான சோ.ச.க.யின் பிரச்சாரத்தை சங்கங்களும் போலி இடதுகளும் கசப்புடன் எதிர்க்கின்றன,” என அது விளக்கியது.

“தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பின் விளைவாக, ஆளும் வர்க்கத்தால், (2022 ஏப்ரல்-ஜூலையில் நடந்த வெகுஜன எழுச்சி மூலம்) இராஜபக்ஷ வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தில் ஜனநாயக விரோத வாக்கெடுப்பின் மூலம், எந்தவொரு குறிப்பிடத்தக்க மக்கள் ஆதரவும் இல்லாத வலதுசாரி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க முடிந்தது.”

ஜே.வி.பி. தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் குண்டர் நடவடிக்கைகளைக் கண்டிக்குமாறும், எமது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்குமாறும் தொழிலாள வர்க்கத்துக்கும் இளைஞர்களுக்கும் சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.

வேலைத் தளங்களிலும் ஒவ்வொரு பெரிய பொருளாதார மையங்களிலும் தொழிற்சங்க அதிகாரத்துவம், முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிலும் இருந்து சுயாதீனமாக, நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதற்கான சோ.ச.க.யின் அழைப்பைப் பற்றி குறிப்பாக அவை பீதியடைந்துள்ளன. தங்களின் அடுத்தடுத்த காட்டிக்கொடுப்புகளுக்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கங்களுக்கு எதிரான விரோதம் அதிகரித்து வருகின்ற நிலையில், இது தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவை வெல்லும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். ஏற்கனவே கொழும்பு துறைமுகம் உட்பட பல வேலைத்தளங்களில், சில தொழிலாளர்கள் சோ.ச.க. பிரச்சாரத்துக்கு பிரதிபலித்து நடவடிக்கை குழுக்களை அமைத்துள்ளனர்.

கொழும்பின் தாக்குதல்களுக்கு, அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பிற்கு விடையிறுக்கும் வகையில் ஜே.வி.பி.யுடன் இணைந்தவை உட்பட தொழிற்சங்கங்கள், போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அதேவேளை, அந்த போராட்டங்கள் எப்போதும் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, அரசாங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் வீண் வேண்டுகோள்களை விடுப்பத்தோடு மட்டுப்படுத்தப்படுகின்றன.

உதாரணமாக, ஜே.வி.பி.யுடன் இணைந்த தொழிற்சங்கங்கள், ஓய்வூதிய நிதி வெட்டுக்கள் பற்றி ஒரு பேச்சுவார்த்தைக்கு வேண்டுகோள் விடுத்து சமீபத்தில் மத்திய வங்கி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளன. அரசாங்கம் மற்றும் சர்வதேச மூலதனத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் ஆளுனரே மையமாக செயற்படுகிறார்.

தனது பிற்போக்கு அரசியலை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவதால், ஜே.வி.பி. ஆனது சோ.ச.க. மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கும் (பு.க.க.) முற்றிலும் விரோதமாகும்.

சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது “தவிர்க்க முடியாதது” என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்திய ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, விக்கிரமசிங்கவால் சிக்கன நடவடிக்கைகளை சுமத்த முடியாமல் போகும் என்பதையிட்டு கவலை கொண்டுள்ளார். முதலாளித்துவ ஆட்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெகுஜன எதிர்ப்பை மதிப்பிழந்த விக்கிரமசிங்க ஆட்சியால் கட்டுப்படுத்த முடியாமல் போகுமோ என்று பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியைப் போலவே ஜே.வி.பி.யும் அஞ்சுகிறது.

1960களின் பிற்பகுதியில் மாவோவாதம், காஸ்ட்ரோவாதம், சிங்கள தேசபக்தி ஆகியவற்றின் நச்சு கலவையை அடிப்படையாகக் கொண்டே ஜே.வி.பி. தலைதூக்கியது. உலகளாவிய முதலாளித்துவத்தின் வளர்ச்சி மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை கலைத்ததன் மூலம் அதன் தீவிரவாத பாசாங்குகளுக்கு குழிபறிக்கப்பட்ட போது, உலகளவில் மற்ற தேசியவாத அமைப்புகளைப் போலவே ஜே.வி.பி.யும், முதலாளித்துவ ஸ்தாபனத்தின் ஒரு கட்சியாக தன்னை மாற்றிக்கொண்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஜே.வி.பி., பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 1983 இல் தொடங்கிய கொழும்பின் 26 ஆண்டுகால இரத்தக்களரி தமிழ்-விரோத இனவாதப் போரின் தீவிர ஆதரவாளராக இருந்தது. எங்கள் கட்சி சர்வதேச சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் இன எல்லைகளுக்கு அப்பால் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காகப் போராடியதன் காரணமாக, 1987 மற்றும் 1990க்கு இடையில் இந்திய-விரோத பேரினவாத எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த, ஜே.வி.பி.யின் துப்பாக்கி ஏந்திய கொலைகாரர்கள் மூன்று சோ.ச.க./பு.க.க. உறுப்பினர்களைக் கொன்றனர்.

கடந்த மூன்று தசாப்தங்களாக ஜே.வி.பி. ஏதாவதொரு முதலாளித்துவக் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டது. 2004 இல், அது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் இணைந்து நான்கு அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டது. 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது, ஜே.வி.பி. -விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து- வெளியுறவுக் கொள்கையை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பக்கம் கடுமையாக மாற்றியமைத்த, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக நியமிப்பதை ஆதரித்தது.

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவதற்கு தொழிலாளர்கள் தங்கள் வேலைத் தளங்கள், தொழிற்சாலைகள், பெருந்தோட்டங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் சுயாதீன நடவடிக்கை குழுக்களை ஒழுங்கமைக்குமாறு சோ.ச.க. வலியுறுத்துகிறது. இந்த நடவடிக்கைக் குழுக்களில் தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு இடமில்லை.

இந்த நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டைக் கட்டியெழுப்ப சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. இந்த மாநாடு, அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான அரசியல் போராட்டத்தை எளிதாக்கும்.

ஜே.வி.பி.யும் அதன் தொழிற்சங்கங்களும், இலங்கை முதலாளித்துவத்துடன் தொழிலாளர்களை சங்கிலியால் கட்டி வைப்பதன் மூலம், விக்கிரமசிங்கவும் அவரது அரசாங்கமும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் மீது ஈவிரக்கமற்ற சமூகத் தாக்குதல்களை முன்னெடுப்பதற்கான அரசியல் நிலைமைகளை உருவாக்கியுள்ளன. சோ.ச.க. மட்டுமே இந்தப் பெருவணிக வேலைத்திட்டத்திற்கு ஒரு புரட்சிகர மாற்றீட்டை முன்னெடுக்கிறது. தொழிலாளர்களையும் இளைஞர்களையும் இந்தக் கட்சியில் இணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாளர்களின் வளர்ந்து வரும் போராட்டங்களை நசுக்குவதில் இலங்கை தொழிற்சங்கங்களின் துரோக பாத்திரம்

இலங்கையில் முதலாளித்துவக் கட்சி-தொழிற்சங்க கூட்டணிகள் வேண்டாம்! அரசாங்க-.நா.நி. சிக்கன நடவடிக்கைகளை தோற்கடி! ஜனநாயகம் மற்றும் சோசலிசத்துக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மாநாட்டை கட்டியெழுப்பு!

இலங்கையின் ஜே.வி.பி-தே... முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுடன் கூட்டணி சேர்கின்றது

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் பகிரங்க கூட்டம்- விக்கிரமசிங்கவின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக எவ்வாறு போராடுவது என்பதை பற்றி கலந்துரையாடியது

Loading