பிரிட்டனில் ஜூலியன் அசாஞ்சுக்கான கலைக் கண்காட்சி: "தைரியம் தொற்றக் கூடியதாக இருந்திருக்காவிட்டால், இன்று நான் இங்கு இருந்திருக்க மாட்டேன்"


மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

யூலியன் அசாஞ் [Photo by David G. Silvers, Cancillería del Ecuador / undefined]

ஊடக இருட்டடிப்பு மற்றும் அரசால் திட்டமிடப்பட்டு பழிவாங்கப்படும் நடவடிக்கைகளுக்கு மத்தியில், ஜூலியன் அசாஞ்சுக்கான ஆதரவு கலைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. சிறையில் அடைக்கப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் மற்றும் விருது பெற்ற பத்திரிகையாளரை மௌனமாக்குவதற்கான முயற்சிகளுக்கு மக்கள் மத்தியில் இருந்துவரும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஆழமான நுட்புல காட்சிகளை ஐக்கிய இராச்சியத்தின் விட் தீவில் உள்ள மூன்று உள்ளூர் கலைஞர்கள் நடத்திய கருத்துச் சுதந்திரக் கண்காட்சி வழங்கியது.

கண்காட்சியின் தலைப்பு, “ஜூலியன் அசாஞ்ஜினை பாதுகாக்க மற்றும் சுதந்திரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கண்காட்சி” என்று எழுதப்பட்டிருந்தது, மேலும் அதில் அன்னா ஃபௌஸி-அக்ராய்ட், நிக்கோலா கிப்ஸ் மற்றும் ஹென்றிட் பேர்ன்ஸ் ஆகியோரின் படைப்புகள் இருந்தன. இது நவம்பர் 1ம் தேதி வரை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பௌஸி-அக்ராய்ட் (Fauzy-Ackroyd) இந்த கண்காட்சி நிகழ்ச்சிக்கான திட்டம் எப்படி வளர்ந்தது என்பதை விளக்கி, “தைரியம் தொற்றக்கூடியது” என்ற தலைப்பில் அரை மணி நேர அறிமுக விளக்கக்காட்சியை வழங்கினார். 

கிப்ஸ் நடாத்தும் வாராந்திர ஓவியக் கலை வகுப்பில் தனது வழக்கமான வருகையின் போது ஃபவுஸி-அக்ராய்ட், அசான்ஜின் வழக்கைப் பற்றி விவாதித்தார். அந்த விவாதத்தில் இருந்து பவுஸி-அக்ராய்ட்டும் கிப்ஸும் அசாஞ்சை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஒப்புக்கொண்டனர். அதைத் தொடர்ந்து, பேர்ன்ஸ் அசாஞ்சுக்கு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்திருப்பதை பௌஸி-அக்ராய்ட் கண்டுகொள்வதுடன், அவர்கள் மூவரும் இணைந்து அசாஞ்சினை பாதுகாப்பதற்காக ஒரு கண்காட்சியை நடத்த ஒப்புக்கொண்டனர்.

மூன்று ஓவியர்களில் ஒவ்வொருவரும் உயிர்த்துடிப்பான வண்ணமயமான காட்சிவாத ஓவியங்களை உருவாக்குகிறார்கள். இது அசாஞ்சேயின் தற்போதையை நிலைமைகளின் கலைச் சித்தரிப்புகள் அல்லது பதில்களின் கண்காட்சி அல்ல. மாறாக, அசான்ஜின் அவல நிலையைப் பற்றிக் கவனத்தை ஈர்ப்பதற்காக, கலைஞர்களின் ஒரு குழு, அவர்களின் தற்போதைய படைப்புகள் மற்றும் அவர்களின் தற்போதைய கலை நடைமுறையைப் பயன்படுத்தியிருக்கிறது.

கண்காட்சிக்கான விளம்பரத்தில், “போரை பொய்யால் தொடங்க முடியும் என்றால், உண்மையால் அமைதியை தொடங்க முடியும்” என்ற அசாஞ்சின் கருத்து இடம்பெற்றிருந்தது. உண்மையை தைரியமாக வெளியிட்டதற்காக, அசாஞ் அமெரிக்க உளவு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு 175 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள் அசாஞ்சையும் விக்கிலீக்ஸையும் அழிக்க முயற்சிக்கின்றன. உண்மையைப் பாதுகாப்பதும் பொதுமக்களின் அறியும் உரிமையும் புரட்சிகரமான கேள்விகளாக மாறியுள்ளன.

கலை அசாஞ்சின் இதயத்திற்கு “மிக நெருக்கமாக” இருந்தது என WSWS இடம் பவுஸி-அக்ராய்ட் கூறினார். நிகழ்ச்சியின் துவக்கத்தில் அவர் அளித்த விளக்கத்தில், “வார்த்தைகள் மௌனமாக்கப்பட்டாலும், படைப்பாற்றல் தணிக்கையை மீற முடியும்” என்று அசாஞ்சினை மேற்கோள் காட்டினார்.

பவுஸி-அக்ராய்ட் அசாஞ்சின் தெளிவான மற்றும் தகவலறிந்த பாதுகாப்பாளர் ஆவார். கண்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட பொருட்களில், WSWS உட்பட, சுயாதீனமான மற்றும் மாற்று ஊடக ஆதாரங்களின் பட்டியலையும், அசாஞ் மற்றும் அவரது பாதுகாப்பு பற்றிய பயனுள்ள தகவல்களையும் அவர் வழங்கினார். WSWS நிருபர் ஒருவர் அங்கிருந்தார் என்பதை அறிந்து அவர் மகிழ்ச்சியடைந்தார், உலக சோசலிச வலைத்தளத்தின் இணைய வெளியீட்டினை தவறாமல் வாசிப்பதாகவும், அதன் மீதான அவரது மரியாதை மேலும் மேலும் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

“தைரியம் தொற்றக்கூடியது” என்பது அசாஞ் மீதான வழக்கு மற்றும் 100 சதவீத துல்லிய விகிதத்துடன் பொது நலன் சார்ந்த விஷயங்களை வெளியிடுவதில் விக்கிலீக்ஸின் பங்கு பற்றிய பயனுள்ள கண்ணோட்டத்தை அளித்தது. பவுஸி-அக்ராய்ட், அசான்ஜின் சுதந்திரத்திற்கான பிரச்சாரத்தில் தனது சொந்த ஈடுபாட்டையும் விவரித்தார். ஒரு நண்பர் இப்பெண்மணிக்கு “கூட்டுப் படுகொலை” பற்றிய வீடியோவைக் காட்டிய பிறகு, அவர் 2010 இல் விக்கிலீக்ஸ் பற்றி முதலில் அறிந்து கொண்டார். அவர் கூறியது போல், இந்த வீடியோ காட்சி “நடந்துகொண்டிருக்கும் போர்க்குற்றங்களின் இரத்தினச் சுருக்கமாகும்.”

அசாஞ் மீதான வழக்கு விசாரணையை மிக நெருக்கமாகப் கவனித்துக்கொண்டிருந்த அவர், அசாஞ் எக்குவடோர் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தபோது, இனி அவர் பாதுகாப்பாக இருக்கப்போகிறார் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால், ஏப்ரல் மாதத்தில், தூதரகத்திலிருந்து அசாஞ்ச் கொடூரமாக இழுத்துச் செல்லப்பட்ட காட்சிகளைப் பார்த்தபோது, அந்த பார்வை வியத்தகு முறையில் மாறியது.

அசாஞ்சின் புகலிட கோரிக்கையை ரத்து செய்ததன் சட்டவிரோத தன்மை மற்றும் அவர் அனுபவித்த அதிர்ச்சியூட்டும் தனிமனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை பவுஸி-அக்ராய்ட் கோடிட்டுக் காட்டினார். பவுஸி-அக்ராய்ட்டின் அறிமுக விளக்கவுரையானது, அசாஞ்சின் உடல் ஆரோக்கியம் மீதான தாக்கங்கள் மற்றும் அவரையும் செல்சியா மேனிங்கையும் தாக்குவதற்கான அரசியல் நோக்கங்கள் குறித்து தெளிவாக எடுத்துரைத்திருந்தது.

அசாஞ் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, அவரைக் கண்டித்த முதல் அரசாங்க அமைச்சர்களில் ஒருவரான வித் தீவின் கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வெளிவிவகாரத் தேர்வுக் குழுவின் உறுப்பினரான பாப் சீலி டெலிகிராப்பில் ஒரு பதிவை எழுதினார். சீலியின் அறிக்கையில் உள்ள “அப்பட்டமான தவறுகளை” விவரிக்கும் ஒரு புகார் கடிதத்துடன் பௌஸி-அக்ராய்ட் டெலிகிராப் செய்தித்தாளுக்கு பதிலளித்தார். ஆனால், அவருக்கு டெலிகிராப்பிலிருந்து எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை.

அப்போதிருந்து, பௌஸி-அக்ராய்ட் கடிதம் எழுதுவதிலும், ஜூலியன் அசாஞ்சின் பாதுகாப்புக் குழுவின் பணியை ஊக்குவிப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஜூன் மாதம் உள்ளூர் இணையத் தளமான On the Wight க்கு அவர் எழுதிய கடிதம், அசாஞ்சின் உயிர் வாழ்க்கை குறித்த கவலைகளை எழுப்பியதுடன், ஒரு அனுதாப அலையை ஏற்படுத்தியது. ஒரு பரந்த பழமைவாத உள்ளூர் சூழலில் அவரது வெளியீட்டு நிகழ்வில் இரண்டு டசின் பேர் கலந்துகொண்டது ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் குறிக்கிறது.

பௌஸி-அக்ராய்டின் இறுதிக் கருத்து, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விக்கிலீக்ஸ் பத்திரிகையாளர் மற்றும் வெளியீட்டாளரான அசாஞ்சின் பெருகிய பொது ஆதரவின் தாக்கங்களைச் சுட்டிக்காட்டியது: “தைரியம் தொற்றக் கூடிய ஒன்றாக இருந்திருக்காவிட்டால், நான் இன்று இங்கு இருந்திருக்க மாட்டேன்.”

இந்த கருத்துச் சுதந்திரக் கண்காட்சி: ஜூலியன் அசாஞ்சின் பாதுகாப்பு மற்றும் விடுதலைக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தது.

Loading