பைடென் நிர்வாகத்தின் தொழிலாளர் துறை, தேர்தல் வாக்குரிமையை UAW மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வில் லெஹ்மனின் புகாரை ஏற்க மறுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

Will Lehman [Photo: WSWS]

ஒரு சிடுமூஞ்சித்தனமான மற்றும் அரசியல் ரீதியாக ஊக்குவிக்கப்பட்ட தீர்மானத்தில் வியாழனன்று அமெரிக்க தொழிலாளர் துறையின், தொழிலாளர் மேலாண்மை தரநிலை அலுவலகமானது, (OLMS) மேக் ட்ரக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் மற்றும் 2022 இல் ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் (UAW) தலைவருக்கான வேட்பாளராக போட்டியிட்ட வில் லெஹ்மன் தாக்கல் செய்த தேர்தல் புகாரை நிராகரித்தது. லெஹ்மன் அளித்த புகாரில், UAW அதிகாரத்துவம் கடந்த ஆண்டு தொழிற்சங்கத்தின் தேசிய தேர்தல்களில் பரவலான மற்றும் திட்டமிட்ட முறையில் வாக்காளர் அடக்குமுறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது.

இது ஆச்சரியப்படுவதற்கில்லை என்றாலும், பைடென் நிர்வாகத்தின் தொழிலாளர் துறையின் (DOL) நடவடிக்கை, லெஹ்மன் மற்றும் பிற சாமானிய தொழிலாளர்களால் தொகுக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் புறக்கணிப்பதாக இருந்த்து. இது UAW தேர்தல்களின் முழுமையான சட்டவிரோத மற்றும் ஜனநாயக விரோதத் தன்மையை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

லெஹ்மனுக்கு ஜூன் 29, 2023 தேதியிட்ட அனுப்பப்பட்ட கடிதத்தில் (அவர் அதை WSWS உடன் பகிர்ந்து கொண்டார்) தொழிலாளர் துறையின் அமலாக்கப் பிரிவின் தலைவரான ட்ரேசி எல். ஷங்கர், லெஹ்மனின் புகாரை எந்த விளக்கமும் இல்லாமல் அல்லது அவர் முன்வைத்த எந்த ஆதாரம் குறித்தும் குறிப்பிடாமல் அதனை ஏற்க மறுத்துள்ளார். மேலும் ”இந்த முடிவிற்கான அடிப்படையை விளக்கும் ஒரு அறிக்கை உங்களுக்கு எதிர்கால தேதியில் அனுப்பப்படும்’ என்று அவர் கூறியுள்ளார்.

அந்தக் கடிதத்தை முழுவதுமாக படிக்கலாம்:

அன்புள்ள திரு. லெஹ்மன் :

டிசம்பர் 2, 2022 அன்று டெட்ராய்டில் உள்ள ஐக்கிய
வாகன, விண்வெளி மற்றும் விவசாய அமலாக்கத் தொழிலாளர்கள் (UAW) அதிகாரிகளின் தேர்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிலாளர் துறைக்கு நீங்கள் அளித்த புகார், தொழிலாளர் மேலாண்மை அறிக்கை சட்டம் 1959 மற்றும் வெளிப்படுத்தல் பிரிவுகள் 402 மற்றும் 601 இன் படி விசாரிக்கப்பட்டது.

இந்த அலுவலகம் மற்றும் வழக்குரைஞர் அலுவலகம், சிவில் உரிமைகள் மற்றும் தொழிலாளர்-மேலாண்மைப் பிரிவு ஆகியவற்றின் புலனாய்வுக் கண்டுபிடிப்புகளை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து, எதிர்ப்புத் தேர்தலை ஒதுக்கி வைப்பதற்கான துறையின் நடவடிக்கைக்கு அந்த கண்டுபிடிப்புகள் அடிப்படையை வழங்காது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவிற்கான அடிப்படையை அமைக்கும் காரணங்களின் அறிக்கை எதிர்கால தேதியில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

உண்மையுள்ள,

டிரேசி எல். ஷங்கர்

தலைமை, அமலாக்கப் பிரிவு

லெஹ்மனின் டிசம்பர் 2, 2022, UAW தேர்தல்கள் மீதான எதிர்ப்பு, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட UAW கண்காணிப்பாளரிடம் தாக்கல் செய்யப்பட்டது, தேர்தல்கள் குறித்து UAW உறுப்பினர்களை இருட்டில் வைத்திருக்கவும், வாக்குப்பதிவை நசுக்கவும் தொழிற்சங்க அதிகாரத்துவம் எவ்வாறு செயல்பட்டது என்பதை அது விரிவாக ஆவணப்படுத்தியது. UAW இன் வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்பட்ட நேரடி தேசியத் தேர்தல்கள் குறித்து எண்ணற்ற தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்படவில்லை, இதன் விளைவாக முதல் சுற்றில் வெறும் 9 சதவீத வாக்குப்பதிவு மிகக் குறைவாக இருந்தது. சில பெரிய உள்ளூர் மக்களில், குறிப்பாக மேற்கு கடற்கரையில் உள்ள கல்வித் தொழிலாளர்களில், வாக்குப்பதிவு 1 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது.

UAW தொழிற்சங்க எந்திரம் அதன் உள்ளூர் யூனியன் தகவல் அமைப்பு தரவுத்தளத்தை (LUIS) தொழிலாளர்களின் தற்போதைய முகவரிகளுடன் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க மறுத்தது. லெஹ்மனின் எதிர்ப்பு பல தொழிலாளர்கள் வாக்குச் சீட்டுகளைப் பெறவே இல்லை என்பதைக் காட்டியது. உண்மையில், தேர்தல்களின் முதல் சுற்றில் போடப்பட்ட வாக்குகளை விட மோசமான முகவரிகளால் அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் திரும்பப் பெற்றன.

நவம்பர் மாதம் லெஹ்மன் தாக்கல் செய்த ஒரு வழக்கு குறித்து அந்த நேரத்தில் கருத்து தெரிவித்த மிச்சிகனின் கிழக்கு மாவட்டத்தின் பெடரல் நீதிபதி டேவிட் லாசன், இந்த வாக்குப்பதிவு 'இரத்த சோகை' ஆக இருந்தது மற்றும் 'குறிப்பிடத்தக்க வகையில் குறைவு' என்றும், LUIS தரவுத்தளம் 'உறுப்பினர் எண்ணிக்கையை வெட்டியதாக இருந்தது' என்றும் ஒப்புக்கொண்டார். ஆயினும்கூட, UAW எந்திரம், கண்காணிப்பாளர் மற்றும் தொழிலாளர் துறைக்கு ஆதரவாக லாசன் நின்றார். இவர்கள் அனைவரும் தேர்தல் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற லெஹ்மனின் கோரிக்கைக்கு எதிராக அனைத்து UAW உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் குறித்து தெரிவிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராக நின்றனர்.

மார்ச் 19 அன்று, UAW கண்காணிப்பாளர் (UAW எந்திரம் LUIS அமைப்பைப் புதுப்பிப்பதை உறுதிசெய்ய ஒன்றும் செய்யவில்லை என்று ஒப்புக்கொண்டது) லெஹ்மனின் எதிர்ப்பை ஏற்க மறுத்தது, UAW இன் தலைமை சமர்ப்பித்த கையொப்பமிடாத ஆவணத்தின் மீது அதன் முடிவை முழுமையாக நம்பியிருந்தது. எவ்வாறாயினும், UAW எந்திரத்தின் வாக்காளர் அடக்குமுறைக்கான லெஹ்மனின் ஆதாரங்களை ஒதுக்கித் தள்ளும் முயற்சி, தற்போதைய UAW தலைவர் ரே கரியின் ஒப்புதலால் விரைவாக பலவீனப்படுத்தப்பட்டது. அவர் 'தேர்தலில் UAW வாக்காளர்களின் வாக்குரிமைப் பறிப்பு அதிகமாக உள்ளது' என்று ஒப்புக்கொண்டார் (தனது சொந்த தேர்தல் காரணங்களுக்காக)'

மார்ச் 29 அன்று, கண்காணிப்பாளரின் முடிவை எதிர்த்து லெஹ்மன் மேல்முறையீடு செய்தார்.

தொழிலாளர் துறைக்கு அவர் அளித்த புகாரில், UAWயின் முதல் சுற்றுத் தேர்தல்களில் இருந்து அனைத்து வேட்பாளர்களின் பெயர்களையும் வாக்குச்சீட்டில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று லெஹ்மன் கோரினார். கூடுதலாக, UAW கண்காணிப்பாளர்-ஜென்னர் & பிளாக் மற்றும் க்ரோவெல் & மோரிங் ஆகியவற்றை உள்ளடக்கிய கார்ப்பரேட் சட்ட நிறுவனங்களை அகற்ற லெஹ்மன் அழைப்பு விடுத்தார். ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் UAW உடன் ஒப்பந்தம் செய்துள்ள பிற நிறுவனங்கள் உட்பட, வாகனத் தொழிலில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கான சட்டப் பிரதிநிதிகளாக இரு நிறுவனங்களும் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்றன.

இரண்டு வாரங்களுக்கு முன், நீதிபதி லாசன், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அதன் நிலை அறிக்கையில் தேர்தல் எதிர்ப்புகளின் விவரங்களைத் தடுத்து நிறுத்தியதற்காக UAW கண்காணிப்பாளரை பகிரங்கமாக கண்டித்து ஒரு தீர்ப்பை வெளியிட்டார். பெற்ற எதிர்ப்புகளின் விவரங்கள் மற்றும் நிலையை வெளியிடுமாறு கண்காணிப்பாளருக்கு லாசன் உத்தரவிட்டார், இதனை இன்னும் கண்காணிப்பாளர் செய்து முடிக்க வேண்டியுள்ளது.

தொழிலாளர் துறையின் முடிவு, UAW தொழின்சங்க எந்திரத்திற்கும் அதன் தலைவர் ஷான் ஃபைனின் நிர்வாகத்திற்கும் முட்டுக் கொடுப்பதற்கான பைடென் நிர்வாகத்தின் வெளிப்படையான முயற்சியாக இருக்கிறது. பணியிலுள்ள மற்றும் ஓய்வு பெற்ற ஒரு மில்லியனுக்கும் அதிகமான UAW உறுப்பினர்களில் 3 சதவிகிதமானவர்களின் வாக்குகளைத்தான் UAW தலைவர் பெற்றார். மோசடியான UAW தேர்தல்களுக்கு சில சட்டபூர்வமான தோற்றத்தை வழங்கலாம் என்று வெள்ளை மாளிகை நம்புகிறது. 150,000 Ford, GM மற்றும் Stellantis வாகனத் தொழிலாளர்களுக்கான செப்டம்பர் 14 ஒப்பந்தம் காலாவதியாகப் போகும் நிலையில் UAW எந்திரத்தின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த ஜனநாயகக் கட்சி குறிப்பாக ஆர்வமாக உள்ளது.

UAW இன் நேரடித் தேர்தல்கள் என்று அழைக்கப்படுவது (இதனை தொழிற்சங்கத்தின் வேரூன்றிய அதிகாரத்துவம் எதிர்க்கிறது) பரவலான ஊழல் வெளிப்பட்டதைத் தொடர்ந்து வந்தது, இது இரண்டு முன்னாள் தலைவர்கள் உட்பட சுமார் ஒரு டசின் உயர் தொழிற்சங்க அதிகாரிகளை பெருநிறுவன லஞ்சம் அல்லது தொழிலாளர்களின் உறுப்பினர் சந்தாவை மோசடி செய்ததற்காக சிறைக்கு அனுப்பியது. UAW 'சுத்தப்படுத்தப்பட்டது' என்று முன்வைக்கும் முயற்சிகள் இருந்தபோதிலும், டெட்ராய்ட் செய்தியால் சமீபத்தில் மேற்கோள் காட்டப்பட்ட Fain இன் ஒரு குறிப்பு 'UAW அதிகாரிகளின் தற்போதைய கூட்டாட்சி விசாரணைகள் நடந்து வருகின்றன' என்று சுட்டிக்காட்டியது.

அமெரிக்காவின் போலி-இடது ஜனநாயக சோசலிஸ்டுகளால் ஆதரிக்கப்படும் ஜனநாயகத்திற்காக அனைத்து தொழிலாளர்கள் ஒன்றிய (UAWD) காகஸ் ஆகியவற்றின் மௌனம், UAW ஐ 'சீர்திருத்தம்' செய்து 'ஜனநாயகத்தை' மற்றும் 'வெளிப்படைத்தன்மையை' செயல்படுத்துவது என்ற அவர்களின் பாசாங்குகளை வெடிக்கச் செய்கிறது.

உண்மையில், UAW அதிகாரத்துவம், வெள்ளை மாளிகை, நீதிமன்றங்கள் மற்றும் முதலாளித்துவ அரசின் அனைத்து நிறுவனங்களும், தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை இழிவுடன் பார்ப்பதை தவிர வேறொன்றுமில்லை என்பதைக் காட்டுகின்றன.

ஒரு சோசலிசவாதியான லெஹ்மன் மட்டுமே UAW தலைவர் பதவிக்கு கார்ப்பரேட்-சார்பு தொழிற்சங்க இயந்திரத்தை ஒழித்து, அதிகாரத்தை சாமானிய தொழிலாளர் கைகளில் கொண்டு வருவதுடன் ஒரு பொதுவான சர்வதேச மூலோபாயத்தை சுற்றி தொழிலாளர்களை ஒன்றுபடுத்தும் திட்டத்தில் போட்டியிடுகிறார்.

லெஹ்மன் WSWS க்கு வியாழன் அன்று இவ்வாறு தெரிவித்தார்; “இது ஒரு போலியான முடிவாகும், இது நூறாயிரக்கணக்கான சாமானிய UAW உறுப்பினர்களின் அர்த்தமுள்ள தொழிற்சங்கத் தேர்தலில் பங்கேற்கும் உரிமையைப் பறிக்கிறது' என்றார். 'அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட மற்றும் முறைகேடான காரணங்களுக்காக, UAW அதிகாரத்துவம் வேண்டுமென்றே வாக்குப்பதிவை நசுக்குவதற்கும், தேர்தல்கள் பற்றி தொழிலாளர்களை இருட்டில் தள்ளுவதற்கும் வேலை செய்ததற்கான அனைத்து ஆதாரங்களையும் தொழிலாளர் துறை புறக்கணித்தது. 'ரயில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைத் தடைசெய்து, கடந்த ஆண்டு தொழிலாளர்கள் எதிர்த்து வாக்களித்த ஒப்பந்தத்தை அவர்கள் விதித்ததைப் போலவே, பைடெனும், தொழிலாளர் துறையும் அரசு வர்க்க ஆட்சியின் ஒரு கருவி என்பதையும், ’'தொழிற்சங்க ஜனநாயகம்’' என்பது ஒரு புனை கதை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.'

ஆனால் அவர்கள் என்ன நினைத்தாலும், இந்த முடிவு UAW எந்திரத்தை பற்றிக்கொண்டிருக்கும் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வராது. UAW தேர்தல்களுக்கு அரசின் ‘ஆசீர்வாதம்’ தொழிலாளர்களின் பார்வையில் அவர்களை மேலும் சட்ட விரோதமாக காண்பிக்கும்.

'இந்த முடிவு தொழிற்சங்க எந்திரத்தை ஒழித்து, அதிகாரத்தையும் முடிவெடுப்பதையும் பணித்தளத்தில் உள்ள தொழிலாளர்களின் கைகளில் வைப்பதன் அவசியத்தை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எனது சக ஊழியர்களுக்கு: நீங்கள் தொழிலாளர்களின் அதிகாரம் மற்றும் எங்கள் பொதுவான நலன்களுக்காகப் போராட விரும்பினால், உங்கள் ஆலையில் சாமானிய தொழிலாளர் குழுவில் சேரவும் அல்லது அதனை உருவாக்கவும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியில் ஈடுபடுங்கள். இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக மாறுங்கள்.'

Loading