முன்னோக்கு

நடிகர்கள் SAG-AFTRA சங்கத் தலைமையை எச்சரிக்கின்றனர்: எங்களை விற்காதே!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

தொலைக்காட்சி மற்றும் ரேடியோ கலைஞர்களின் திரையுலக நடிகர்களது அமெரிக்க-கழக கூட்டமைப்பு என்ற (Screen Actors Guild–American Federation of Television and Radio Artists - SAG-AFTRA) அவர்களின் சங்கத் தலைமைக்கு 300 இக்கும் அதிகமான நடிகர்கள் கையெழுத்திட்டு ஒரு பகிரங்க கடிதம் அனுப்பி இருப்பது, சங்க உறுப்பினர்களைக் காட்டிக்கொடுக்கும் திட்டங்களை வெளிப்படையாக கண்டிக்கும் ஓர் உயர்ந்த கொள்கைப்பிடிப்பான அறிக்கையாகும்.  

எல்லா மிகப் பெரிய ஸ்டுடியோக்களும், ஒளிபரப்பு வலையமைப்புகள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகள் உட்பட, 350 இக்கும் அதிகமான அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும், பேசும் படத் தயாரிப்பாளர்கள் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் கூட்டணி (AMPTP) உடனான சுமார் 160,000 SAG-AFTRA உறுப்பினர்களின் ஒப்பந்தம் ஜூன் 30 நள்ளிரவுடன் முடிவடைகிறது.

லோஸ் ஏஞ்சல்ஸில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்கள், அமெரிக்க எழுத்தாளர்கள் கழகத்தின் மேற்கு கட்டிடத்திற்கு முன்னால் அணிவகுத்து செல்கின்றனர். [Photo: WSWS]

சரணடைய வேண்டாமென சங்கத்தை எச்சரிக்கும் நடிகர்களின் அந்த கடிதம், சமரசத்திற்கிடமின்றி பெருநிறுவனங்களை எதிர்த்துப் போராடுவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. அவர்கள் எழுதுகிறார்கள், ஒரு வேலைநிறுத்தம் பலருக்கும் கஷ்டங்களைத் தருகிறது என்றாலும், “வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு தான் ஆக வேண்டும் என்றால், அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.” இது “சமரசத்திற்கான தருணம் இல்லை” என்று அதில் கையெழுத்திட்டவர்கள், வழக்கத்திற்கு மாறாக கடுமையான மொழியில் வலியுறுத்துகிறார்கள்.

கெவின் பேகன், மெரில் ஸ்ட்ரீப், லியாம் நீசன், குயின்டா புருன்சன், பென் ஸ்டில்லர், ஜூலியா லூயிஸ்-ட்ரேஃபஸ், டேவிட் டுச்சோவ்னி, க்ளென் க்ளோஸ், பிரெண்டன் ஃப்ரேசர், ஜெனிஃபர் லாரன்ஸ், ஜோன் லீகுஜமொ, டீ லியோனி, லாரா லின்னி, பாப் ஓடென்கிர்க், மார்க் ருஃப்பலோ, மரிஸ்சா டொமெ ஆகியோர் உட்பட, இந்த சிந்தனைப்பூர்வ, உணர்வுப்பூர்வ கடிதத்தில் இன்னும் பல முக்கிய பிரமுகர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமான கலைஞர்கள் சிலரும், தங்கள் பங்கிற்கு, பொதுவான வர்க்க ஐக்கிய உணர்வை வெளிப்படுத்தி, இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களின் நோக்கங்களுக்கும் SAG-AFTRA சங்க அதிகாரத்துவத்தின் நோக்கங்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பதை அவர்கள் கண்கூடாக உணர்கிறார்கள். மேலும் ஒரு வேலைநிறுத்தத்திற்கு 98 சதவீதம் வாக்களித்த சாமானிய தொழிலாளர்களிடம் இருந்தும், அண்மித்து இரண்டு மாதங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்களிடம் இருந்தும் ஊக்கம் பெற்று, அவர்கள் தைரியமாக கருத்துக்களைக் கூறுகிறார்கள்.

இது முற்றிலும் வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும். இந்த இலாப அமைப்புமுறையைத் தீவிரமாக விமர்சித்த Succession, The Dropout மற்றும் Dopesick போன்றவை வெறும் தற்செயலான வெளிப்பாடுகள் இல்லை. நிலைமைகள் முதிர்ந்துள்ளன. தசாப்தங்களாக மேலோங்கி இருந்த மந்தமான, பிற்போக்குத்தனமான அரசியல் மற்றும் கலாச்சார சூழல், சமூக வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் மிகப் பெரிய தாக்கங்களுடன், உடைந்து வருகிறது.

அமெரிக்க எழுத்தாளர்கள் கழகத்தின் (WGA) 11,500 உறுப்பினர்கள் மே 2 இல் வேலைநிறுத்தத்தில் இறங்கியதில் இருந்து, எழுத்தாளர்களின் இந்த வேலைநிறுத்தம் பரவக் கூடாது என்பதற்காக பெருநிறுவன குழுமங்களும், WGA உட்பட பல்வேறு சங்க நிர்வாகங்களும் மற்றும், சந்தேகத்திற்கிடமின்றி திரைக்குப் பின்னால் இருந்து பைடென் நிர்வாகமும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இது பொழுதுபோக்கு துறை தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு சூழ்ச்சித் தன்மையை எடுத்திருந்தது.

முதலாவதாக, அமெரிக்க இயக்குனர்கள் கழக (DGA) தலைமை மீது கடுமையான அழுத்தம் கொடுக்க அதிக முயற்சி தேவைப்படாது என்பதால், அந்தப் பணியாளர்களுடன் ஓர் ஏற்றுக் கொள்ளவியலாத ஒப்பந்தத்தை எட்ட, அவர்கள் மீது முதலில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதன் விளைவாக எட்டப்பட்ட உடன்படிக்கை, பணவீக்கம் அல்லது வேறெந்த சீரழிவுகளில் இருந்தும் இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், திரைப்படத் தயாரிப்பு மேலாளர்கள் மற்றும் மற்றவர்களைப் பாதுகாக்கவில்லை. அந்த உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டது என்றாலும், பரந்த அவநம்பிக்கையும் ஏமாற்றமும் பிரதிபலித்தன. அதன் உறுப்பினர்களில் வெறும் 41 சதவீதத்தினர் மட்டுமே அந்த உடன்படிக்கை மீது வாக்களித்தனர், அதிலும் ஒட்டுமொத்த DGA உறுப்பினர்களில் வெறும் 35 சதவீதத்தினர் மட்டுமே அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அடுத்ததாக, கடந்த ஜூன் 30 பேச்சுவார்த்தைகளை விரிவுபடுத்துவது குறித்து பகிரங்கமாகக் கூச்சலிடத் தொடங்கிய SAG-AFTRA தலைமை, நிர்வாகத்துடனான இரகசிய பேச்சுவார்த்தைகளை “முற்றிலும் ஆக்கப்பூர்வமாக” இருப்பதாகப் புகழ்ந்ததுடன், காலக்கெடுவுக்கு முன்னரே ஓர் உடன்பாட்டை எட்டி விடுவதில் அவர்களுக்கு “நம்பிக்கை” இருப்பதாகவும் வலியுறுத்தியது. “வெளிப்படையாக கூறினால், அங்கே என்ன நடக்கிறது என்பது மிகவும் இரகசியம் என்பதால், உங்களுக்கு நிறைய விரிவான விபரங்களை இன்றிரவு எங்களால் வழங்க முடியாது,” என்று SAG-AFTRA தலைவர் ஃபிரான் ட்ரெஷ்சர் ஆணவத்தோடு கூறி இருந்தார்.

இத்தகைய அபிவிருத்திகள் மிகச் சரியாக எச்சரிக்கை மணிகளை ஒலித்து, உடனடியான விற்றுத்தள்ளலைத் தடுக்கும் உறுதிப்பாட்டைக் கொண்டு வந்தது. Rolling Stone செய்திகள் குறிப்பிடுவதைப் போல, “தங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யாத ஓர் ஒப்பந்தத்தை SAG ஏற்க வேண்டாமென வலியுறுத்தும் நிறைய நடிகர்களுக்கு” சங்கத்தின் சேதி “சரியாகப் பொருந்துவதாக இல்லை.” இதனால் தான், பிரச்சினைக்குரிய இந்தக் கடிதம், SAG-AFTRA தலைமைக்கும் மற்றும் பேச்சுவார்த்தைக் குழுவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பகிரங்கக் கடிதம் தொழிற்சங்க தலைவர்களைக் கவனத்தில் கொள்கிறது. செயற்கை நுண்ணறிவு “எங்கள் வாழ்வாதாரத்திற்கு ஓர் அச்சுறுத்தலாகும், அதை இப்போதே கவனிக்க வேண்டும்,” என்று அது குறிப்பிடுகிறது. “எங்கள் சம்பளமும் இதர பிற விஷயங்களும் எவ்வளவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பதாக உணர்ந்தோம், பருவக் காலங்களுக்கு இடையே இன்னும் எத்தனை காலத்திற்கு நாங்கள் காத்திருக்க விடப்படுவோம். வேறு வார்த்தைகளில் சொன்னால், ‘நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதை இப்போது நீங்கள் எடுத்துக்காட்டி வருகிறீர்கள்…’” என்று அக்கடிதம் குறிப்பிடுகிறது.

'ஒற்றுமையாக இருக்க நேர்மை வேண்டும், நாங்கள் எங்கள் உறுதிப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது' என்று 300 நடிகர்களின் அந்தக் கடிதம் குறிப்பிடுகிறது. அக்கடிதம், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான விருப்பத்தை சுட்டிக்காட்டிய பின்னர், அதன் வலுவான பத்தியில், 'SAG-AFTRA இன் உறுப்பினர்கள் தியாகங்களைச் செய்ய தயாராக உள்ளனர், சங்கத் தலைமை அல்ல என்ற கருத்தைக் குறித்து நாங்கள் கவலையடைகிறோம்,” என்று குறிப்பிடுகிறது. (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது.)  இது கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரியும் ஒரு காட்டிக்கொடுப்பு குறித்த ஒரு நேரடியான எச்சரிக்கையாகும்.

பொழுதுபோக்குத் துறை 'ஒரு முன்னோடியில்லாத மாற்றத்தை' எட்டியுள்ளது என்றும், 'மற்ற ஆண்டுகளில் ஒரு நல்ல ஒப்பந்தமாக கருதப்பட்ட ஒன்று மட்டும் போதாது' என்றும் அந்த எதிர்ப்புக் கடிதம் விவரிக்கிறது. “பணவீக்கமும், ஒளிபரப்பு சேவையின் தொடர்ச்சியான வளர்ச்சியும் இருக்கையில், எங்களுக்கு அதிரடியான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது,” “அனைத்தையும் புரட்டிப்போடும் ஒப்பந்தத்திற்கு” குறைவில்லாத ஒன்று தேவைப்படுகிறது. அது அப்பட்டமாக “தொழிலாள வர்க்க நடிகர்களின்” பிரச்சினைகளைத் தன்னுடன் இணைத்து பேசுகிறது.

SAG-AFTRA தலைமைக்கு எழுதப்பட்ட அந்தக் கடிதம், சுருக்கமாக குறிப்பிட்டாலும், பொருளாதார பிரச்சினைகளுக்கும் அப்பாற்பட்டு, மற்ற முக்கியமான விஷயங்களைப் போலவே, கலாச்சார-கலைத்துறைப் பிரச்சினைகளும் முக்கியமானவை என்று குறிப்பிடுகிறது. “எங்கள் சம்பளங்கள்” மற்றும் “எங்கள் படைப்பு” ஆகியவற்றுடன் சேர்ந்து, “எங்கள் ஆக்கப்பூர்வ சுதந்திரமும்” “கடந்த தசாப்தத்தில் கீழறுக்கப்பட்டுள்ளது” என்று அது வாதிடுகிறது. திரைப்பட மற்றும் தொலைக்காட்சி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், பொழுதுபோக்குத் துறையின் ஒவ்வொரு மூலைமுடுக்கெல்லாம் நாடு கடந்த பெருநிறுவன குழுமங்களின் சவாலுக்கிடமற்ற மேலாதிக்கத்தைக் குறித்தும் அது குறிப்பிடுகிறது. இந்த இரும்புப்பிடியை உடைக்க, சமூகத்தைச் சோசலிச பாணியில் மறுஒழுங்கமைக்கும் நோக்கில், ஒரு புதிய அரசியல் நோக்குநிலை தேவைப்படுகிறது.

கூர்மையான வார்த்தைகள் கொண்ட அந்தக் கடிதம், “வரலாற்றின் கண்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்று கூறினால் அது மிகையாகாது. எங்களுக்குத் தேவையான அனைத்து மாற்றங்களுக்கும் மற்றும் எங்களுக்குரிய பாதுகாப்புகளுக்கும் நீங்கள் அழுத்தமளித்து, அதை வரலாறாக ஆக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அவற்றைச் செய்ய உங்களால் முடியவில்லை என்றால், உறுப்பினர்களாகிய நாங்கள் உங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்துமாறும், WGA உடன் [எழுத்தாளர்களுடன்] மறியல் களத்தில் இணையுமாறும் கேட்டுக் கொள்கிறோம்,” என்று வலியுறுத்தி நிறைவு செய்கிறது.

சங்க நிர்வாகிகளை நோக்கி இருந்ததைப் போலவே அதேயளவுக்கு சாமானிய உறுப்பினர்களை நோக்கி திரும்பி இருந்த SAG-AFTRA கடிதம், பல்வேறு தொழிற்சங்க தலைமையிடங்களுக்கும், ஸ்டூடியோ மற்றும் ஒளிபரப்பு நிறுவனப் பொதுக்குழுக்கள் மற்றும் வெள்ளை மாளிகைக்கும் என எல்லா தரப்பினருக்கும் ஆச்சரியமாகவும் மற்றும் கோபமூட்டுவதாகவும் இருக்கும். பிளவுபடுத்த, உடைக்க, தனிமைப்படுத்த மற்றும் காட்டுக்கொடுப்பதற்கான தொழிற்சங்க முயற்சிகள் எதிர்ப்புச் சுவரில் முட்டி உள்ளது. சுயநலம் மற்றும் தனிநபர்வாதத்திற்குப் (individualism) பதிலாக, ஒற்றுமை மேலோங்கி உள்ளது.

நடிகர்களின் இந்தக் கடிதம், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழிலாளர்கள் மத்தியிலும் மற்றும் அதைக் கடந்தும் பரவலாக நடந்து வரும் நிகழ்வுபோக்குகளைச் சுட்டிக்காட்டுகிறது. ஒரு தீவிரமயப்படல் நடந்து வருகிறது. இது தைரியமான நிலைப்பாடு எடுத்த எழுத்தாளர்களுக்காகவும் மற்றும் SAG-AFTRA உறுப்பினர்களுக்காகவும் மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்தமாக கலாச்சார வாழ்வுக்காகவும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மிகவும் அவசியமான முன்னெடுப்பாகும். தற்போதுள்ள நிலைமைகளால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சீற்றமடைந்துள்ளனர், மேலும் இங்கே நாம் கலாச்சார வாழ்வுக்குத் திரும்புவதற்கான கிளர்ச்சிகரமான உணர்வை பெறுகிறோம்! ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளை வைத்துக் கூறினால், தற்போதைய யதார்த்தத்திற்கு எதிரான ஒரு போராட்டம், எப்போதுமே ஒரு நிஜமான கலைப்படைப்பின் அல்லது சமூக நடவடிக்கையின் ஆக்கப்பூர்வமான வேலையின் பாகமாக இருக்கும். கலாச்சாரத்தில் ஒவ்வொரு முன்னோக்கிய படியும் கிளர்ச்சியோடு தொடங்குகிறது. இது பொது சமூகச் சூழ்நிலைக்கும் பொருந்தும் — எங்கெங்கிலும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர்களும், அத்துடன் மற்ற உழைக்கும் மக்களும், பணவீக்கத்தாலும், மோசமடைந்து வரும் நிலைமைகளாலும், ஒவ்வொரு முகப்பிலும் இடைவிடாத பெருநிறுவனத் தாக்குதல்களாலும் தாக்கப்பட்டுள்ளனர். மிகப்பெரும் நிறுவனங்கள், அவற்றின் ஒளிபரப்புச் சேவை முயற்சிகளில் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளன. பைனான்சியல் டைம்ஸ் செய்தியின்படி, கடந்தாண்டு “மிகப் பெரிய பொழுதுபோக்கு குழுமங்களில் இருந்து அரை ட்ரில்லியனுக்கும் அதிகமான டாலர் மதிப்பைப் பங்குச் சந்தை இழந்துள்ளது. இதற்கு தொழிலாளர்களை விலை கொடுக்கச் செய்ய அவை உத்தேசிக்கின்றன.

ஸ்டுடியோ மற்றும் ஒளிபரப்பு நிறுவன நிர்வாகிகள் நினைத்துப் பார்க்க முடியாதளவில் பணத்தைக் குவித்து வருகிறார்கள், சிலர் ஓராண்டுக்கு 50 மில்லியன் டாலர், 100 மில்லியன் டாலர் அல்லது அதற்கும் அதிகமாக குவிக்கிறார்கள் என்பது ஒவ்வொரு நடிகருக்கும், எழுத்தாளர், இயக்குனர் மற்றும் குழு உறுப்பினர்களுக்கும் தெரியும். அதேவேளையில் தொழிலாளர்கள் பணத்தில் மிதக்க முயல்கிறார்கள் என்று கூறுவது “நியாயமற்றது”, இது இந்தத் தொழில்துறைக்கே “பாதிப்பாக” இருக்கும்.

பொதுவாக, அமெரிக்க ஆளும் உயரடுக்கு அதன் முடிவில்லா வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்புகளுக்கான செலவுகளையும் மற்றும் அதேயளவுக்கு அதன் முடிவற்ற கொலைபாதக போர்களின் ஒட்டுமொத்த செலவையும் தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்த முயல்கிறது. பெருநிறுவன-சார்பு, அணுஆயுத போர்வெறி கொண்ட பைடெனுக்கும் நாஜி போல கூச்சலிடும் ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கும் இடையே ஏதாவது ஒன்றை உத்தியோகப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மட்டுமே அரசியல் ரீதியாக மக்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒட்டுமொத்த சமூக மற்றும் பொருளாதார அமைப்பு முறைக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்து வருகிறது. அரசியல் மற்றும் கலாச்சார வாழ்வு ஒரு முறிவு புள்ளியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்படியே இவர்கள் போய் கொண்டிருந்தால், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் குப்பைகளையும், ஓராண்டுக்கு ஒரு சில விரல்விட்டு எண்ணக்கூடிய “மகத்தான வெற்றிகளையும்” தவிர வேறொன்றையும் உருவாக்க முடியாது என்பதோடு, ஒவ்வொருவரின் மூளையையும் முடங்க வைத்து விடுவார்கள். ஆனால் இந்த நிகழ்வுபோக்கு மீது மக்கள் கண்களை மூடிக் கொள்ளவில்லை. மறியல் களத்தில் உள்ள பல எழுத்தாளர்கள் உட்பட, பலரும் புரிந்து கொண்டிருப்பதைப் போல, “கலையும்” “இலாபமும்” பரம எதிரிகள் ஆகும். “முதலாளித்துவம்” என்பது மேலும் மேலும் ஒரு சாபக்கேடாக ஆகி வருகிறது.

எழுத்தாளர்களின் இந்த வேலைநிறுத்தத்தின் போக்கை மாற்றுவதற்கும் மற்றும் SAG-AFTRA உறுப்பினர்கள் எதிர் கொண்டிருக்கும் ஆபத்துகள் குறித்து எச்சரிப்பதற்கும் WSWS போராடி வருகிறது. மூன்று வாரங்களுக்கு முன்னர், நாம் எழுதினோம்: “சாமானியத் தொழிலாளர்களையும் மற்றும் மக்களின் பரந்த அடுக்குகளின் அரசியல்-கலாச்சார தேவைகளையும் பிரதிநிதித்துவம் செய்யும், புதிய அமைப்புகளோடு, எழுத்தாளர்களின் வேலைநிறுத்தம் ஒரு புதிய திசையை நோக்கிச் செல்ல அழைப்பு விடுக்கிறோம். ஒற்றுமை அவசியமே, ஒவ்வொரு தொழிலாளரும் உள்ளுணர்வாகவே அந்தத் திசையில் ஈர்க்கப்படுகிறார். ஆனால் தலைமையில் இருப்பவர்கள் சாமானிய உறுப்பினர்களைத் தங்களுக்குப் பின்னால் ஒரு பொறிக்குள் இட்டுச் செல்லும் போது, இயல்பாகவே இதை அவர்களால் தவிர்க்க இயலாத நிலையில், சாமானிய உறுப்பினர்களின் ஒற்றுமை ஆரோக்கியமானதில்லை. அந்த தருணத்தில், அதிருப்தி மற்றும் எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட வேண்டும். வேறுவேறு சங்க உறுப்பினர்களாக இருந்தாலும், அந்த “குரல்கள்” எழும்பத் தொடங்கி உள்ளன.

நடிகர்களின் இந்தக் கடிதம், உருவெடுத்து வரும் சாமானியத் தொழிலாளர் கிளர்ச்சியின் அம்சத்தில், ஒரு முக்கிய சமூக மற்றும் அரசியல் அபிவிருத்தியாகும். முதலாளித்துவ முறிவு நிலைமைகளின் கீழ், இது, கலைத்துறை வட்டாரங்களில் நோக்குநிலை மாறி வருவதன் ஆரம்பத்தையும், மற்றும் இடதை நோக்கிய ஒரு பரந்த, மக்கள் இயக்கத்தின் முன்னறிவிப்பையும் குறிக்கிறது. முன்னெடுத்துப் போராடுவதற்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன என்றாலும், இது ஒரு மைல்கல்லாகும்.

Loading