இலங்கை ஆளும் கட்சி கடந்த ஆண்டு வெகுஜன எழுச்சியை வெறுப்புக்குரியதாக காட்டுகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மே 9 அன்று, இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், 'ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த வன்முறைகள் பற்றி அமைச்சரவை விவாதித்தது' என்றும், எதிர்காலத்தில் அத்தகைய வன்முறை அமைதியின்மை ஏற்படுவதைத் தடுப்பதற்கான முழுமையான அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். விக்கிரமசிங்கவின் பதில் குறித்த எந்த விவரங்களையும் அவர் வழங்கவில்லை.

பந்துல குணவர்தன, மே 16, 2023 [Photo by Bandula Gunawardena Facebook]

குணவர்தன பேசியது, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடியிருந்த அரசாங்க சார்பு குண்டர்களால் 2022 மே 9 அன்று காலி முகத்திடல் மைதானத்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான உடல் ரீதியான தாக்குதல் பற்றி அல்ல.

போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட குண்டர் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இலங்கை முழுவதும் இடம்பெற்ற பழிவாங்கும் வன்முறைகள் தொடர்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டதற்கும், டசின் கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அரசாங்க ஆதரவாளர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதற்கும் வழிவகுத்தது.

விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க ஆதரவாளர்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த பழிவாங்கும் நடவடிக்கைகள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதையும் அவர்களின் 'மனித உரிமைகள்' பாதுகாக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டுமென அமைச்சரவை அமைச்சர்கள் விரும்புவதாக ஊடகங்களுக்கு குணவர்தன கூறினார்.

விக்கிரமசிங்க அத்தகைய ஆணைக்குழுவை ஸ்தாபித்தால், அது கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை உருவாக்கி, அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக அவை பயன்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கும். ஜனநாயக உரிமைகள் மீதான அதன் தாக்குதலுக்கு பரவலான எதிர்ப்பை சந்தித்த அரசாங்கம், கடந்த மாதம் அதன் புதிய பயங்கரவாத எதிர்ப்பு மசோதா மீதான பாராளுமன்ற விவாதத்தை ஒத்திவைக்க நிர்பந்திக்கப்பட்டது. இருப்பினும், புதிய கடுமையான சட்டங்கள் அதன் நிகழ்ச்சி நிரலில் உள்ளன.

அமைச்சரவையின் கலந்துரையாடல்கள், கடந்த ஆண்டு நடைபெற்ற வெகுஜனப் போராட்டத்தை இழிவுபடுத்தும் மற்றும் கொச்சைப்படுத்தும் தீவிரமான அரசியல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இந்தப் போராட்டம் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ வை பதவி விலகக் கோரியும் வெகுஜனங்கள் மீதான அவரது அரசாங்கத்தின் சகிக்க முடியாத சமூகத் தாக்குதல்களுக்கு முடிவு கட்ட கோரியும் நாடு தழுவிய ரீதியில் நடந்த வெகுஜன எழுச்சியாகும்.

இந்த வெகுஜன இயக்கத்தை எதிர்கொண்ட இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி பின்னர் இராஜினாமா செய்தார். அவரது ஆட்சி வீழ்ச்சியடைந்ததுடன் அரசியல் ரீதியாக மதிப்பிழந்த விக்கிரமசிங்க ஜனநாயக விரோதமான முறையில் பாராளுமன்றத்தால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த வெகுஜன எழுச்சி, இலங்கையில் முதலாளித்துவ ஆட்சிக்கு நேரடியாக சவால் விடுப்பதை தடுப்பதற்காக, போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் பிற அரசியல் அமைப்புகளின் ஆதரவுடன், தொழிற்சங்கங்கள் இந்த பாரிய தொழிலாள வர்க்க இயக்கத்தை பாராளுமன்ற கட்டமைப்போடு கட்டிப்போட்டு வைத்ததால் இந்த அரசியல் சூழ்ச்சி சாத்தியமானது. 

ஏற்கனவே மில்லியன் கணக்கானவர்களை வறுமை, வேலையின்மை மற்றும் பட்டினிக்குள் தள்ளியுள்ள, சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட அரசாங்கத்தின் சிக்கன திட்டத்திற்கு எதிராக தற்போது அதிகரித்து வரும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் எதிர்ப்பைப் பற்றி விக்கிரமசிங்க ஆட்சி மிகவும் பதட்டமாக உள்ளது.

கடந்த வாரம், அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட மே 9 தாக்குதலின் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், காலி முகத்திடலில் அல்லது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் நடக்கக்கூடிய ஆர்ப்பாட்டங்களைத் தடுக்கும் வகையில், கொழும்பு நீதவான் ஒருவரிடமிருந்து பொலிஸ் தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளது.

மேலும், வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி மூன்று நாட்களுக்கு, அரசாங்கம் கொழும்பில் ஆயிரக்கணக்கான முழு ஆயுதம் தாங்கிய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவ சிப்பாய்களை ஒரு பெரிய பாதுகாப்பு நடவடிக்கையில் நிலை நிறுத்தியது. முன்னிலை சோசலிசக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (அ.ப.மா.ஒ.) நடத்த திட்டமிட்டுள்ள போராட்டம் தொடர்பாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கூறினர்.

இப்போது கடந்த ஆண்டு நடந்த எழுச்சியை வெறுப்புக்குரியதாக்கும் அவதூறு பிரச்சாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) உறுப்பினர்கள், கடந்த ஆண்டு இராஜபக்ஷவை வீழ்த்திய வெகுஜன இயக்கத்தின் பின்னணியில் 'வெளிநாட்டு கை' இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை பரப்புகின்றனர்.

முன்னாள் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவின் மகனான ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் இராஜபக்ஷ, “அரகலயாவின் [வெகுஜன போராட்டத்தின்] பின்னணியில் உள்ள வெளிநாட்டு தலையீடு பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும்,” என்று கடந்த வாரம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் ஒன்பது: ஒழிந்திருக்கும் கதை என்ற சமீபத்திய புத்தகத்தைப் பற்றிய குறிப்பாகும். 'ஒன்பது' என்பது இராஜபக்ஷவின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த 2022 மே 9 முதல் ஜூலை 9 வரையிலான காலப்பகுதியாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பதவி விலகும் வரை, வீரவன்ச இராஜபக்ஷவின் அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக இருந்தார்.

ஒரு தீவிரமான சிங்களப் பேரினவாதியான வீரவன்ச, இனவாத மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் தலைவரும், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாதப் போரின் வெறித்தனமான ஆதரவாளரும் ஆவார்.

ஏப்ரல் 2023 இன் பிற்பகுதியில் விமல் வீரவன்ச தனது ஒன்பது: ஒழிந்திருக்கும் கதை என்ற புத்தகத்தை விளம்பரப்படுத்துகிறார். [Photo by Wimal Weerawansa Facebook]

கடந்த ஆண்டு அரசாங்க எதிர்ப்பு எழுச்சியை கசப்புடன் எதிர்த்த வீரவன்ச, இந்த இயக்கம் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கின் அரசியல் சூழ்ச்சியின் விளைபொருள் என்று கூறுகிறார்.

வெறுக்கப்பட்ட இராஜபக்ஷ ஆட்சியை வீழ்த்திய, வரலாற்று ரீதியாக முன்னெப்போதும் இடம்பெற்றிருக்காத நாடளாவிய வெகுஜன இயக்கத்திற்கு எதிரான அரசியல் அவதூறே வீரவன்சவின் குற்றச்சாட்டுகள் ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சி விரிவாக ஆவணப்படுத்தியுள்ளபடி, 2015ல், சீனாவுடனான நெருக்கமான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளைப் பேணியமைக்காக ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றுவதற்கான திரைமறைவு நடவடிக்கைகளில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டது. மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக நியமித்த ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, விக்கிரமசிங்க மற்றும் ஆளும் உயரடுக்கின் இதர பிரிவுகள் மற்றும் உயர்-மத்தியதர வர்க்க அடுக்குகளின் ஆதரவு இருந்தது.

இதற்கு நேர்மாறாக, கடந்த ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவிற்கும் அவரது அரசாங்கத்திற்கும் எதிராக வெடித்த வெகுஜன இயக்கம், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களை இனரீதியாக ஐக்கியப்படுத்தியது. இதன் போது எதிர்ப்புக்கள், ஆர்ப்பாட்டங்களுடன் ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஆகிய நாட்களில் சக்திவாய்ந்த ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்களும் நடத்தப்பட்டன.

இது இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் அவர்களின் ஏகாதிபத்திய எஜமானர்களையும் பயமுறுத்தியது. அமெரிக்கத் தூதுவர் நிச்சயமாக கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்த அதே வேளை, அவரோ அல்லது அவர் பேசியவர்களோ இந்த வெகுஜன இயக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை.

9 ஜூலை 2022, சனிக்கிழமை, இலங்கை, கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் செல்லும் வீதியில் எதிர்ப்பாளர்கள் கூடியிருந்த போது. [AP Photo/Amitha Thennakoon]

முற்றிலும் மதிப்பிழந்த அரசாங்க அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும், இன்னும் பெரிய அளவில் மற்றொரு எழுச்சி வெடிக்கும் என்ற பீதியில், கடந்த ஆண்டு வெகுஜன எதிர்ப்புகளுக்கு எதிராக அவதூறுகள் மற்றும் பொய் பிரச்சாரத்தை இப்போது கட்டவிழ்த்துவிடுகின்றன.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடந்த வியாழன் அன்று பாராளுமன்றத்தில் பேசிய போது, ஆர்ப்பாட்டக்காரர்களை 'ஊர்சுற்றிகள்' என்று கூறினார். 'கடந்த ஆண்டு கூடாரங்களுக்குள் இருந்த எதிர்ப்பாளர்களுக்கு கருத்தடைகளைப் பயன்படுத்தக் கூடத் தெரியாது, இப்போது பிரசவித்த குழந்தைகள் தெருக்களிலும் ரயில்களிலும் கைவிடப்படுகின்றனர்' என்று அவர் கேலிக்கூத்தாகக் கூறினார்.

ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, ஒரு சிறு ஆதாரமும் இல்லாமல், “யாராவது வங்கியை கொள்ளையடித்தால், அது போராட்டத்தின் செயல்பாட்டாளர், பாலியல் பலாத்காரம் நடந்தால், அது போராட்டத்தின் செயல்பாட்டாளர், கொலை நடந்தால், போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார்” என்று குற்றம் சாட்டினார்.

இந்த நச்சுத்தன்மை வாய்ந்த அரசியல் சூழலுக்கு மத்தியில், கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களில் முக்கியமானவரான சமூக ஊடக ஆர்வலர் பியத் நிகேஷலவை, அரசாங்க ஆதரவு குண்டர்கள் சமீபத்தில் தாக்கினர். தாக்குதலுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொலிசார், ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபயரத்னவையும் தாக்குதலில் தொடர்புடைய மற்ற குண்டர்களையும் கைது செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

ஆளும் உயரடுக்கின் சில பிரிவுகள் இந்த அவதூறு மற்றும் வன்முறை பிரச்சாரம், தங்கள் பக்கமே திரும்பி மற்றொரு அரசியல் எதிர்ப்பு வெடிக்க வழிவகுக்கும் என்று பீதியடைந்துள்ளன.

மே 12 ஐலண்ட் பத்திரிகையின் தலையங்கம், 'அதன் காரணங்களைச் சமாளிப்பதை விட போராட்டத்தை அருவறுப்புக்குள்ளாக்குவது எளிதாக இருக்கலாம், ஆனால் அத்தகைய நடவடிக்கை எதிர்காலத்தில் வெகுஜன எழுச்சிகளைத் தடுக்க உதவாது' எனக் கூறியது. அரசாங்கம், 'ஒரு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க மக்களை அனுமதிக்க' மற்றும் 'அவர்களது கோபத்தை வெளிப்படுத்த' பதவி விலகிக்கொள்ளலாம் என்றும் அது அறிவுறுத்தியது.

கடந்த ஆண்டு வெகுஜன இயக்கத்திற்கு எதிரான ஆளும் கட்சியின் அவதூறுகள், சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட விக்கிரமசிங்கவின் சமூகத் தாக்குதல்களுக்கு எதிரான தவிர்க்க முடியாத சமூக வெடிப்பை நசுக்கத் தயாராகின்றன என்று சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து எதிர்க் கட்சிகளும் விக்கிரமசிங்க ஆட்சியை கண்டனம் செய்வது, வெகுஜன கோபத்தை அரசியல் ரீதியாக சுரண்டிக்கொள்வதற்கான இழிந்த முயற்சிகள் ஆகும். இந்த கட்சிகள் அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் தலையீட்டையும் அதன் சிக்கன கோரிக்கைகளையும் ஆதரிக்கின்றன.

இப்போது விக்கிரமசிங்க ஆட்சிக்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக்கொள்கின்ற, தொழிற்சங்க அதிகாரத்துவம், போலி-இடது கட்சிகள் மற்றும் பல்வேறு மத்தியதர வர்க்க அமைப்புக்களும், கடந்த ஆண்டு இந்த முதலாளித்துவ எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் அரசியல் முட்டுச்சந்துக்குள் தொழிலாள வர்க்கத்தை திசைதிருப்பி விட்டன.

வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் இவை மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதையும் அரசியல் ரீதியாக கட்டுப்படுத்தப்படுவதையும் உறுதி செய்தன. 'எதிர்ப்பு ’அரசியல் அல்லாதது’' என்று அறிவித்து, அவர்கள் சோசலிச சமத்துவக் கட்சியையும் ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க மூலோபாயம் மற்றும் சோசலிச முன்னோக்கிற்கான அதன் போராட்டத்தையும் அவை தடுக்க முயன்றனர்.

'அரசியல் வேண்டாம்' என்ற திரைக்குப் பின்னால், தொழிற்சங்கங்கள் ஒரு இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் ஜே.வி.பி.யும் விடுத்த அழைப்பை ஊக்குவித்தன. இதன் மூலம் அவை, விக்கிரமசிங்க ஆட்சிக்கு வரவும், எதிர்ப்பாளர்களுக்கு விரோதமாக அரச அடக்குமுறையை கட்டவிழ்த்து விடவும் வழி வகுத்தனர்.

வெகுஜன எழுச்சியில் தலையிட்ட சோசலிச சமத்துவக் கட்சி, இராஜபக்ஷவை நீக்கக் கோருவது மட்டும் போதாது என்று விளக்கியது. அவர், ஊழல் மற்றும் பிற்போக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினதும் முதலாளித்துவ முறையினதும் அசிங்கமான முகம் மட்டுமே. சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தை தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து விடுவிப்பதற்காகப் போராடியதுடன் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப தீவிரமாக பிரச்சாரம் செய்தது.

கடந்த ஆண்டு அரசியல் அனுபவங்கள், சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் அழைப்பின் அவசரத்தை உறுதிப்படுத்துகின்றன. இந்த மாநாடு தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சக்திகளை ஒருங்கிணைப்பதற்கும், கிராமப்புற மக்களின் தீவிர ஆதரவைப் பெறுவதற்கும், சோசலிச வழியில் சமுதாயத்தை மறுகட்டமைக்க அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தின் மூலம் அதன் சொந்த ஆட்சியை நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைப்பதற்கும் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான கட்டமைப்பை வழங்கும். 

Loading