விரோத நிலம் 94 : வதிவிட ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் துன்பியல்களும் தியாகங்களும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

விரோத நிலம் 94 : ஆவணமற்ற இடம்பெயர்வு திட்டம் என்பது அமெரிக்க-மெக்சிகோ எல்லையைக் கடக்க முயற்சிக்கும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் பயணங்கள் மற்றும் சாட்சியங்களின் கண்காட்சி ஆகும். ஜேசன் டி லியோன், மைக்கேல் வெல்ஸ் மற்றும் ஆஸ்டின் எல்லா ஷிப்மேன் ஆகியோரால் கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸ் இல் அமைந்துள்ள கலாச்சாரம் மற்றும் கலைகளின் சதுக்கத்தில் இந்தக்கண்காட்சி இடம்பெறுகிறது. இதனை, செப்டம்பர் 17, 2022 - முதல் ஜூலை 9, 2023 வரை பார்வையிடலாம். 

அமெரிக்க-மெக்சிகோ எல்லையைத் தாண்ட முயற்சிக்கும், மத்திய அமெரிக்காவின் காடுகளில் இருந்து, மெக்சிகோ மற்றும் சோனோரன் பாலைவனம் வழியாகவும் மிகவும் பின்தங்கிய மற்றும் மக்கள் வாழ்விடமில்லாத பகுதிகள் வழியாகவும் நடந்து சென்ற வதிவிட ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் பயணங்கள் மற்றும் சாட்சியங்களை விரோத நிலம் 94 கண்காட்சியானது பதிவு செய்கிறது.

1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி பில் கிளிண்டனால் நிறுவப்பட்ட 'தடைகள் ஏற்படுத்துவதன் மூலம் தடுப்பு' எனப்படும் குடியேற்ற அமுலாக்க உத்தியின் விளைவாக புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்துகளை இந்த கண்காட்சி ஆவணப்படுத்துகிறது.

'விரோத நிலம் 94' கண்காட்சிக்கான நுழைவாயில் [Photo: WSWS]

இந்தக் கண்காட்சியானது, எல்லையைத் தாண்டி வருபவர்கள் பாலைவனத்தில் விட்டுச் சென்ற பொருட்களைக் காட்டுவது மற்றும் திரைப்படம் மற்றும் சாட்சியங்களை பயன்படுத்துவதன் மூலம் புலம்பெயர்ந்தோரின் கதைகளை புகைப்படக் கதைகூறல் முறையில் எடுத்துக்காட்டுகிறது. பொதுமக்கள் தங்களுடைய தனிப்பட்ட குடியேற்றக் கதைகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு ஒலிப்பதிவு ஸ்டுடியோவும், இறந்தவர்களை நினைவுபடுத்தும் வகையில் அரிசோனா-மெக்சிகோ எல்லையின் 20-அடி உயரமுள்ள பங்கேற்பு நினைவுச் சுவர் வரைபடமும் அங்குள்ளது. 

கண்காட்சிக்குள் நுழையும் பார்வையாளர்கள் முதலில் பார்ப்பது வெற்று தண்ணீர் குடங்களின் தொகுப்பாகும், அவற்றில் ஒன்று 'எல்லைக்காவல் ரோந்துக்கு கடவுள் ஆசீர்வதிக்கட்டும்' என்று ஒரு பக்கத்தில் சிடுமூஞ்சித்தனமான முறையில் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த வார்த்தைகளை எழுதியது சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) அதிகாரியா அல்லது குறிப்பாக இருண்ட நகைச்சுவை உணர்வு கொண்ட புலம்பெயர்ந்த நபரா என்று ஒருவர் ஆச்சரியப்படலாம். ஆயினும்கூட, CBP மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் மனித வாழ்க்கை மீதான கொடூரம் மற்றும் அலட்சியத்தன்மையை இது அம்பலப்படுத்துகிறது. 

ஆயிரக்கணக்கான மைல்கள் கால் நடையாகப் பயணிக்கும் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் துன்பங்கள் மற்றும் ஆபத்துகளுக்கு சக்திவாய்ந்த மனிதநேய அணுகுமுறையை கண்காட்சி நிரூபித்துக்காட்டுகிறது. புலம்பெயர்ந்தோர் ரயில்களின் மேல் மற்றும் ஆறுகளின் குறுக்கே தற்காலிக படகுகளில் பயணிக்கும் புகைப்படங்கள் உள்ளன. காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களில் சோனோரன் பாலைவனத்தின் வரைபடம் ஒரு பெரிய சுவரில் இருந்தது, அடையாளம் காணக்கூடிய அல்லது வேறுவிதமாக மனித எச்சங்கள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. ஒவ்வொரு உடலும் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது என்பதைக் காட்டும் கால் குறிச்சொற்களால் இவை ஒட்டப்பட்டுள்ளன.

அரிசோனா-மெக்சிகோ எல்லையின் 20-அடி நீள வரைபடம், சுமார் 3,200 எண்ணிக்கையிலான கையால் எழுதப்பட்ட கால் குறிச்சொற்கள். ஒவ்வொரு குறிச்சொற்களும் 2000-2020 க்கு இடையில் சோனோரன் பாலைவனத்தின் வழியாக அமெரிக்க தெற்கு எல்லையைக் கடக்கையில் இறந்த ஒருவரின் உடலைக் குறிக்கிறது. அவை வண்ணங்களில்-குறியிடப்பட்டவை: அடையாளம் காணப்பட்ட உடல்களுக்கு மணிலா நிறமும் மற்றும் அடையாளம் தெரியாதவர்களுக்கு ஆரஞ்சு நிறமும் கொடுக்கப்பட்டுள்ளது. [Photo: WSWS]

தேசிய பூங்கா சேவையின்படி, சோனோரன் பாலைவனமானது தோராயமாக 100,387 சதுர மைல்கள் ஆகும், இது தென்மேற்கு அமெரிக்காவிற்கும் வடமேற்கு மெக்ஸிகோவிற்கும் இடையில் நீண்டுள்ளதுடன், இதில் அரிசோனாவின் தெற்குப் பகுதி, தென்கிழக்கு கலிபோர்னியா, சோனோரா, பாஜா கலிபோர்னியா மற்றும் மெக்சிகோ மாநிலங்கள் ஆகியவை அடங்கும். 

சோனோரன் பாலைவனத்தின் காலநிலை மிதவெப்ப மண்டலமாக உள்ளது, ஆண்டுக்கு 3-15 அங்குல மழை பெய்யும். இது வட அமெரிக்காவின் வெப்பமான பாலைவனமாகும். கோடை காலத்து காற்றின் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு (40 டிகிரி செல்சியஸ்) அதிகமாகவும், பெரும்பாலும் 118 டிகிரி பாரன்ஹீட்டை (48 டிகிரி செல்சியஸ்) அடையும். ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் பருவமழை காலத்தில் ஒரு வன்முறை புயலுக்குப் பிறகு சில நிமிடங்களில் வெப்பநிலை 50 க்கு குறையக்கூடும். குளிர்கால மாதங்களில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில், வெப்பநிலை இரவில் 40 க்குள் இருக்கும். 

UCLA நியூஸ்ரூம் இன் கூற்றின் படி, 1998 மற்றும் 2019 க்கு இடையில் 7,800  புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர், அவற்றில் குறைந்தது 3,800 இறப்புகள் அரிசோனாவில் நிகழ்ந்துள்ளன. அந்த இறப்புகளில் பெரும்பாலானவை, வெப்பத்தினை உடல் உறுப்புக்களால் தாங்கமுடியாத நிலையில் உடலின் நீரிழப்புகளால் ஏற்பட்டவை ஆகும். யு.எஸ்.ஏ டுடே விசாரணையில் ஃபெடரல் ஏஜெண்டுகளும் உள்ளூர் பொலிசும் புலம்பெயர்ந்தோரின் இறப்புக்களை இட்டு புகாரளிக்கத் தவறியிருப்பது கண்டறியப்பட்டது. சரியான எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை, ஏனென்றால் அதிகாரிகள் இறந்துபோன புலம்பெயர்ந்தோரை அடையாளம் தெரியாத பாரிய கல்லறைகளில் புதைக்கிறார்கள். 

புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் துன்பங்களுடன் கூடுதலாக, தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருப்பதும், அவர்களிடம் இருந்து எந்தச் செய்தியும் வராமல் இருப்பதும் தான் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனுபவிக்கும் மிகப்பெரும் வேதனையாகும். இந்தக் கண்காட்சியானது, காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி விரக்தியில் அழும் குடும்ப உறுப்பினர்களின் காட்சியப்படுத்தப்பட்டிருந்த வீடியோக்கள், அவர்களின் முழுக் குடும்பமும் மனச்சோர்வு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் எடுத்துக்காட்டியது. 

இக்கண்காட்சியின் மற்றொரு பகுதியானது, கைவிடப்பட்ட அல்லது இழந்த தனிப்பட்ட பொருட்கள், ஆடைகள், காலணிகள், மருந்து போத்தில்கள், தண்ணீர் போத்தில்கள், முதுகுப்பைகள் மற்றும் முகசல கூட அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட காட்சி கண்ணாடிப் பெட்டிகளை உள்ளடக்கியது. வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்க இனப் படுகொலை (Holocaust) நினைவு அருங்காட்சியகத்தில் இதேபோன்ற காட்சிப் பொருட்கள், அழுக்கடைந்த பொருட்களின் குவியல்கள் நினைவூட்டுகின்றன. நெருக்கடியின் அளவைப் பற்றி எதையாவது தெரிவிக்க கால் குறிச்சொற்களின் சுத்த அளவு போதுமானது,

அதே நேரத்தில் தனிப்பட்ட கலைப்பொருட்களின் காட்சி மனித முகத்தை அளிக்கிறது.

பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட தனிப்பட்ட உடமைகள்  [Photo: WSWS]

இறுதியாக, இந்தக் கண்காட்சியில் குடியேற்ற அமுலாக்கம் எவ்வாறு பாலைவனத்தில் புலம்பெயர்ந்தோரின் இறப்பு எண்ணிக்கையை விண்ணளவு உயர்த்தியது என்பதைக் காட்டும் அரசாங்க பொறுப்புக்கூறல் அலுவலகத்தின் சில குறிப்பிடத்தக்க ஆவணங்களைக் கொண்டுள்ளது. கண்காட்சியின் பெயர் இந்த ஆவணங்களில் உள்ள சில கருத்துகளிலிருந்து பெறப்பட்டது. 'விரோத நிலம்' என்பது முதலில் ஒரு இராணுவச் சொல்லாகும், எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த கருத்தாக்கமானது புலம்பெயர்ந்தவர்களை எப்படி அரசு கையாள்கிறது என்பதை வண்ணப்படுத்துகிறது.

பயணத்தை மேற்கொண்டவர்கள் மற்றும் தொலைந்து போனவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் விரோத நிலம் '94 இல் உள்ள சாட்சியம் விலைமதிப்பற்றது. எவ்வாறாயினும், இந்த சோகமான வரலாற்றின் ஆழமான காரணங்களை ஆராய்வது அவசியம். புலம்பெயர்ந்தோர் மரணங்கள் என்பது அரசாங்கக் கொள்கையின் நேரடி விளைவாகும், முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் ஆகிய இரண்டும், நீண்ட காலமாக குடியேற்ற எதிர்ப்பு மூலோபாயத்தை செயல்படுத்தி வருகின்றன.

கடந்த மூன்று அமெரிக்க அதிபர்களின் சாதனை பதிவேடுகளை ஆராய்ந்தாலே போதும், இவைகளை நிரூபணம் செய்யும். 1896 மற்றும் 2000 க்கும் இடைப்பட்ட காலத்துடன் ஒப்பிடுகையில், 'தலைமை நாடுகடத்துபவர்' என்று அழைக்கப்பட்ட ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ்தான், அனைத்து நிர்வாகங்களையும் விட அதிகமான புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்பட்டனர். ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது பிரச்சாரத்தை புலம்பெயர்ந்தோருக்கு எதிரான இனவெறியை அடிப்படையாகக் கொண்டிருந்தார். மேலும், அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க (ICE) முகவர்களைப் பயன்படுத்தி, ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை அவர்களது வீடுகள் மற்றும் பணியிடங்களில் சுற்றிவளைத்தல் மற்றும் நாடு கடத்தல் மூலம் பயமுறுத்தினார்.

இந்த வரைபடம் மெக்சிகோவின் தெற்கு எல்லையில் இருந்து டெக்சாஸ், எல் பாசோ வரையிலான 2,000-மைல் (3,200+ கிமீ) மலையேற்றத்தைக் காட்டுகிறது. உணவு மற்றும் தங்குமிடங்களில் தரித்து நிற்பதற்கான இடங்களைக் காட்டுவதுடன், தாக்குதல்கள் மற்றும் கொள்ளைகள் இடம்பெறும் இடங்களும் இங்கே எச்சரிக்கை செய்யப்படுகிறது. [Photo: WSWS]

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்ட குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளான அமெரிக்க சட்டக் குறியீட்டின் தலைப்பு 42 ஐ பைடன் நிர்வாகமும் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவதுடன், அதை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது, இந்தக் கொள்கையின் பிரகாரம், அமெரிக்காவில் தொற்றுநோய் பரவலாக்கத்தினை இனம்காணக்கூடியவர்கள், அமெரிக்கர் அல்லாத எவரையும் கடுமையான ஆபத்து என்ற காரணத்தின் கீழ் அமெரிக்காவிற்குள் நுளைவதற்கு தடைசெய்யலாம்.  சட்டவிதி தலைப்பு 42, மே 11 அன்று காலாவதியாகிவிடும் என்பதால், எல்லையைத் தாண்ட முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவினால் துன்புறுத்தப்படுவதற்கும் வழிவகுக்கும் என்று பெரும்பாலான செய்தி ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். 

வாழ்க்கைத் தரம் மோசமடைவதாலும், காலநிலை மாற்றம் அதிகரிப்பதாலும், போர்கள் இடப்பெயர்வைத் தூண்டுவதாலும், அதிகமான மக்கள் தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி, தங்கள் குடும்பங்களுக்கு வேறு இடங்களில் பாதுகாப்பு மற்றும் சிறந்த வாழ்க்கையைத் தேட முயற்சிக்கிறார்கள். புலம்பெயர்ந்தோர் நெருக்கடிக்கான ஒரே தீர்வு, முதலாளித்துவத்தால் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் எல்லைகளை உலகெங்கும் இல்லாது செய்வதாகும், எனவே முதலாளித்துவ தன்னலக்குழுவின் தேவைகளை விட மனிதகுலத்தின் தேவைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். இது சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே வெற்றிகொள்ளப்பட முடியும்.

Loading