இலங்கை அரசாங்கம் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்திடு! தொழில் மற்றும் ஊதியத்துக்காகப் போராட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், அரசுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை அல்லது 'வணிகமயமாக்குவதை' இலக்காகக் கொண்டு முன்வைக்கப்பட்ட அரச நிறுவனங்களின் 'மறுசீரமைப்பு கொள்கைக்கு' இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் பெரும் பகுதியினரைப் பேரழிவிற்கு உட்படுத்தும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் பாரதூரமான மறுசீரமைப்பு, 3 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடனுக்கு ஈடாக அடுத்த ஆறு மாதங்களில் செயல்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கோரிக்கைகளில் ஒன்றாகும்.

இந்த திட்டத்தின் கீழ், 39 கூட்டுத்தாபனங்கள், 218 கம்பனிகள் உட்பட 21 பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் 173 அதிகார சபைகளுமாக 430 அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை அரசாங்கம் வெட்டுகிறது. சில நிறுவனங்கள் வெளிநாட்டு அல்லது உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு விற்கப்படும், மற்றவை ஒன்றிணைக்கப்படும், மறுசீரமைக்கப்படும் அல்லது முழுமையாக மூடப்படும்.

இலங்கை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன. [Photo by Bandula Gunawardena Facebook]

அமைச்சர் பந்துல குணவர்தன மே 17 அன்று ஊடகங்களிடம் கூறியதாவது: 'கொள்கையின் நோக்கம் [அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை] செலவு-குறைப்பு கொள்கையுடன் சந்தை சார்ந்ததாக மாற்றுவதாகும்... ஆகவே அவை நாட்டிற்கும் வரவு செலவுத் திட்டத்துக்கும் சுமையாக இருக்காது. மறுசீரமைப்பின் நோக்கம் 'உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்குவதும்' ஆகும்.

இந்த நிறுவனங்களில் பணிபுரியும் அரை மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். பல்லாயிரக் கணக்கானோர் தங்கள் வேலைகளை இழப்பார்கள், எஞ்சியிருப்பவர்கள் ஊதியங்கள், ஓய்வூதியம் மற்றும் வேலை நிலைமை வெட்டுக்களையும் வேலைச் சுமை அதிகரிப்புகளையும் எதிர்கொள்வார்கள். இந்த தொழிலாளர்களை நம்பி மில்லியன் கணக்கான குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த 'செலவு குறைப்பு கொள்கை' என்பது, அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை இலாபத்தை அதிகரிக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டு, ஏற்கனவே அதிக பணவீக்கம் மற்றும் கடுமையான பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது மேலும் அதிக சுமைகளை தினிப்பதையே அர்த்தப்படுத்துகிறது.

குறைந்த பட்சம் 500,000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதுடன் வறுமையில் உள்ளவர்களின் விகிதம் 2019 இல் 13.1 சதவீதத்திலிருந்து 2022 இல் 25.6 சதவீதமாக உயர்ந்துள்ளதோடு குறைந்தபட்சம் 32 சதவீதமான இலங்கையர்கள் இப்போது பசி அல்லது பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கடுமையான சமூக நெருக்கடி இப்போது இன்னும் மோசமாவதற்கு வழியமைக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள், மின்சாரம், பெட்ரோலியம், தொலைத்தொடர்பு, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு, காப்புறுதி மற்றும் அரசுக்கு சொந்தமான வங்கிகள் போன்ற பிரதான துறைகள் இந்த வெட்டுக்களுக்காக குறிவைக்கப்பட்டுள்ளன. 21 பிராந்திய தோட்டக் கம்பனிகளில் உள்ள சுமார் 150,000 வறிய தொழிலாளர்களும் இதனால் பாதிக்கப்படுவர்.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் 1960கள் மற்றும் 1970 களில் இலங்கையில் அரசாங்கங்களால் தேசிய பொருளாதார ஒழுங்குமுறை மற்றும் இறக்குமதி மாற்றீடு கொள்கையின் ஒரு பகுதியாகவும் தனியாருக்கு சொந்தமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் சுரண்டல் நிலைமைகளுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு பிரதிபலிக்கும் வகையிலும் ஸ்தாபிக்கப்பட்டன.

அவர்களின் போராட்டங்களின் விளைவாக, சில நிறுவனங்களில் தொழிலாளர்கள் ஓரளவு வேலைப் பாதுகாப்பையும் ஊதியம் மற்றும் வேலை நிலைமை அபிவிருத்திகளையும் வென்றனர். கடந்த நான்கு தசாப்தங்களாக அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தனியார்மயமாக்கல் உட்பட விரிவான சந்தை சார்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டதால் இந்த நன்மைகள் குறிப்பிடத்தக்களவு சீரழிக்கப்பட்டன. இப்போது மீதமுள்ள அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் துரிதமாக விற்றுத்தள்ளப்பட உள்ளன அல்லது தனியார்மயமாக்கலுக்கான தயாரிப்பில் இலாபம் ஈட்டும் அமைப்புகளாக மறுசீரமைக்கப்பட உள்ளன.

பொதுக் கல்வி மற்றும் சுகாதார சேவைகள் அப்படியே உள்ள போதிலும், நிதி மற்றும் ஊழியர் பற்றாக்குறை கடுமையாக இருக்கும் அதே நேரம், இந்தத் துறைகளுக்குள் தனியார் வர்த்தகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளில் பொதுக் கல்வி மற்றும் சுகாதாரத்தை மேலும் வெட்டித் தள்ளுதலும் தனியார் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதும் அடங்கும்.

7 ஜூலை 2022 அன்று கொழும்பில் சுகாதார ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியில் ஒரு பகுதி [Photo: WSWS]

அரசாங்கமும் முதலாளித்துவ ஊடகங்களும் அரச நிறுவனங்களில் ஏற்படும் இழப்புகளுக்கு தொழிலாளர்களைக் குற்றம் சாட்டுகின்றன. அதிகப்படியான தொழிலாளர்கள் உள்ளனர், அதிகப்படியான ஊதியம் வழங்கப்படுகிறது மற்றும் மேலதிக நேர வேலை மற்றும் நுகர்வோருக்கான மானிய விலை ஆகியவற்றின் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவை கூறிக்கொள்கின்றன.

இவை அப்பட்டமான பொய்கள் ஆகும். அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பேரழிவுகரமான சிக்கன நடவடிக்கைகள், உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியின் நேரடி விளைவு ஆகும். இது கடந்த ஆண்டு கடன் தவணைத் தவறலை விளைவாக்கியது. சர்வதேச நிதி மூலதனமும் இலங்கை ஆளும் வர்க்கமும் இதன் முழுச் சுமையையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதில் உறுதியாக உள்ளன.

ஆயினும், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட இந்த தனியார்மயமாக்கல் திட்டங்கள் பற்றி தொழிற்சங்கங்கள் எதுவும் கூறவில்லை. இது தற்செயலானது அல்ல. தொழிற்சங்க எந்திரங்கள் முதலாளித்துவத்தை பாதுகாப்பதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைக்கு மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ ஆதரவளிப்பதோடு வர்க்கப் போராட்டத்தை அடக்குவதற்காகவும் ஒடுக்குவதற்காகவும் அரசாங்கத்திற்கும் பெருவணிகத்திற்கும் ஒரு தொழில்துறை பொலிஸ்காரனாக செயல்படுகின்றன.

எவ்வாறாயினும், தொழிலாளர்கள் இந்த தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள போவதில்லை. அவர்கள் தொழில், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளை பாதுகாக்க போராடுவார்கள். அவர்கள் அரசியல் ரீதியாக தயாராக வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), இந்த அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை, இந்த மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு எதிராக உறுதியுடன் போராடுவதற்கு தங்கள் வேலைத் தளங்கள் மற்றும் சுற்றுப்புறங்களிலும், தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளில் இருந்தும் சுயாதீனமாக, நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு வலியுறுத்துகிறது. உங்கள் வேலைகள், ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் பிற உரிமைகளை காப்பாற்ற தொழிற்சங்கங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க முடியாது.

விக்கிரமசிங்க ஆட்சியை வீழ்த்துவதற்கு அதன் சுயாதீனமான அரசியல் மற்றும் தொழில்துறை பலத்தை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே, தொழிலாள வர்க்கத்தால் இந்த கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை நிறுத்த முடியும். இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, நடவடிக்கை குழுக்களில் இருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டை கட்டியெழுப்ப சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.

கடந்த சில மாதங்களாக தொழிலாளர்களின் அனுபவங்கள் இந்தப் பணிகளின் அவசரத்தை எடுத்துக்காட்டுகின்றன.

அரசாங்கத்தின் சிக்கனத் திட்டங்களுக்கு எதிராக தொழிலாளர்களின் எதிர்ப்பு வளர்ச்சியடைந்த நிலையில் மார்ச் 1 மற்றும் 15 ஆகிய திகதிகளில் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை உள்ளடக்கிய ஒரு நாள் போராட்டங்களுக்கு அரச துறையில் உள்ள பல தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன.

மார்ச் 1 அன்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் மற்றும் சுகாதார மற்றும் மின்சார ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் போன்ற தொழிலறிஞர்களின் தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

மார்ச் 15 வேலை நிறுத்தமானது பிரதானமாக எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்களின் ஒரு பெரிய கூட்டான தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இரண்டு சந்தர்ப்பங்களிலும், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை, புதிய ஊதியத்தை ஒத்த வருமான வரியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு வேண்டுமென்றே மட்டுப்படுத்தின. ஒரு தொழிற்சங்கம் கூட சர்வதேச நாணய நிதியத்தின் பரந்த சிக்கன திட்ட நிரலை எதிர்க்கவில்லை.

உண்மையில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் மற்றும் பிற தொழிலறிஞர்களின் சங்கங்கள், மார்ச் மாதம், கொழும்பில் இருந்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளைச் சந்தித்தன. கடந்த வாரம் வருகை தந்த சர்வதேச நாணய நிதிய குழு, மீண்டும் தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் தொழிற்சங்கங்களை சந்தித்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் இயக்குனரான கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் ஒரு ஊடக மாநாட்டில் கூறியதாவது: “நாடு நெருக்கடியில் உள்ளது, அவசியமான இலட்சிய மறுசீரமைப்புகளை அமுல்படுத்த வேண்டும், மற்றும் அவை ஒரு வழிமுறையில், ஒரு பல்பூரணமான வழிமுறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி ஒரு பரந்த அங்கீகாரம் [தொழிற்சங்க தலைவர்கள் மத்தியில் உட்பட] உள்ளது.”

பரந்த வெகுஜன அழுத்தம் அரசாங்கத்தை அதன் சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதில் இருந்து பின்வாங்கச் செய்யும் என்ற ஆபத்தான மாயையை தொழிற்சங்கங்கள் பரப்பிவிடுகின்றன. முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற போலி-இடது குழுக்கள், தொழிற்சங்கங்களையும் அவற்றின் துரோக பாத்திரத்தையும் ஆதரிக்கின்றன.

அவை அனைத்தும் முதலாளித்துவத்தை பாதுகாப்பதுடன், வளர்ச்சியடைந்து வரும் வர்க்கப் போராட்டங்கள் விக்கிரமசிங்க ஆட்சியுடனான ஒரு புரட்சிகர மோதலாக வெடித்து, ஒட்டுமொத்த முதலாளித்துவ ஆட்சிக்கே அச்சுறுத்தல் விடுக்கும் என்று ஆளும் வர்க்கத்தைப் போலவே அவையும் பீதியடைந்துள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் எழுச்சியின் விளைவு என்ன? முன்னிலை சோசலிசக் கட்சியின் ஆதரவு பெற்ற தொழிற்சங்கங்கள், முதலாளித்துவ எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் ஜே.வி.பி.யும் விடுத்த இடைக்கால அரசாங்கத்திற்கான அழைப்புக்கு அந்த வெகுஜன இயக்கத்தை அடிபணியச் செய்தன.

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைக்கு எதிராகப் போராடுவதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கிராமப்புற ஏழைகளின் ஆதரவுடன், தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான சோலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தை தொழிற்சங்கங்களும் போலி இடதுகளும் கசப்புடன் எதிர்த்தன.

தொழிற்சங்கங்களின் துரோகத்தின் விளைவாக, இராஜபக்ஷவின் வெளியேற்றத்திற்குப் பின்னர், பாராளுமன்றத்தில் நடத்திய ஜனநாயக விரோத வாக்கெடுப்பின் மூலம், போதுமான மக்கள் ஆதரவு இல்லாத வலதுசாரி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக அமர்த்த ஆளும் வர்க்கத்தால் முடிந்தது.

விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்தியுள்ளதுடன் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க பொலிஸ் அடக்குமுறையை நாடியுள்ளார். அவர் மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் சுகாதார சேவை உட்பட பிரதான அரச துறைகளில் தொழிலாளர் போராட்டங்களை குற்றமாக்குவதற்காக அத்தியாவசிய சேவை விதிமுறைகளைப் பயன்படுத்தினார்.

மார்ச் 20 மற்றும் 28 ஆகிய திகதிகளில் தனியார்மயமாக்கலுக்கு எதிராக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தை முறியடிக்க, அரசாங்கம் ஆயிரக்கணக்கான துருப்புக்களையும் பொலிஸாரையும் அனுப்பியது. தொழிற்சங்கத் தலைவர்களையும் தொழிலாளர்களையும் கட்டாய விடுமுறையில் அனுப்பிய போதிலும், தொழிற்சங்கங்கள் அதற்கு எதிராக ஒரு விரலைக் கூட தூக்கவில்லை.

ஜனாதிபதி விக்கிரமசிங்க மே 21 அன்று ஒரு பொது விழாவில் தனது மந்திரத்தை மீண்டும் கூறினார்: “சர்வதேச நாணய நிதியம் எங்கள் மீது கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. இருப்பினும், எங்களுக்கு வேறு வழிகள் இல்லை.” எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது குழுக்கள் அனைத்தும் இந்த அடிப்படைக் கருத்தில் உடன்படுகின்றன.

இலாப அமைப்பிற்குள், மாற்று வழி இல்லை என்பது உண்மைதான், அதனால்தான் தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச முன்னோக்கின் பக்கம் திரும்பி அதன் அடிப்படையில் தங்கள் உரிமைகளை பாதுகாக்க போராட வேண்டும். சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் போது, சோசலிச சமத்துவக் கட்சி அவர்கள் போராடக்கூடிய ஒரு தொடர் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது:

* தனியார்மயமாக்கல், வணிகமயமாக்கல் அல்லது ஆலை மூடல்கள் வேண்டாம்!

* வேலை, ஊதியம் மற்றும் ஓய்வூதிய வெட்டுக்கள் வேண்டாம்!

இந்த கோரிக்கைகள் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கொள்கைகளுக்கு எதிரான மற்றும் முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்துகின்ற ஒவ்வொரு முயற்சிக்கும் எதிரான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

* அனைத்து பெரிய நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகள் மற்றும் அனைத்து அரசுக்கு சொந்தமான நிறுவனங்களையும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கு!

* அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்! அவற்றுக்கு தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் பொறுப்பாளிகள் அல்ல.

என நாங்கள் சொல்கிறோம்.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க, சோசலிச சமத்துவக் கட்சி பின்வருமாறு அழைப்பு விடுக்கிறது:

பரவலாக வெறுக்கப்படும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து, பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் நீக்க வேண்டும்!

முதலாளித்துவத்தின் உலகளாவிய சிதைவின் வெளிப்பாடாக இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு, சீர்திருத்தவாத மற்றும் தேசியவாத தீர்வு எதுவும் கிடையாது. அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வர்க்கப் போராட்டங்கள், இலாப முறைமையையும் ஒரு சில செல்வந்தர்களின் நலன்களைப் பாதுகாக்கும் முதலாளித்துவ அரசையும் நேரடியாக எதிர்கொள்கின்றன.

ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறிந்து தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான சவாலை இது தொழிலாள வர்க்கத்தின் முன் முன்வைக்கின்றது.

தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டைக் கட்டியெழுப்புவது, இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான முன்னோக்கிய வழியாகும்.

சர்வதேச அளவில், தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் நாட்டிற்கு நாடு வேகமாக அதிகரித்து வருகின்றன. பிரான்சில், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஓய்வூதியங்களில் அரசாங்கத்தின் ஆழமான வெட்டுக்களுக்கு எதிராக பல மாதங்களாக போராடி வருகின்றனர். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில், வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாக்க தொழிலாளர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இலங்கையைப் போலவே இந்த நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் துரோகத்தை எதிர்கொள்கின்றனர்.

சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தின் மீள் எழுச்சி ஏற்கனவே பல நாடுகளில் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களின் தோற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியுடன் தங்களது நடவடிக்கைக் குழுக்களை ஒருங்கிணைப்பதன் மூலம், இலங்கைத் தொழிலாளர்கள் சர்வதேச அளவில் அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுவதற்கான நிலைமைகளை உருவாக்கியுள்ளன.

இந்த வேலைத்திட்டத்திற்காக போராடுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading