2023 சான் பிரான்சிஸ்கோ சர்வதேச திரைப்பட விழா—பகுதி 1

சினம்கொண்ட மகள், லா போங்கா : கொலம்பியா உள்நாட்டுப் போரின் பேரழிவு, நிகரகுவாவில் பயங்கர வறுமை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

சான் பிரான்சிஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் (ஏப்ரல் 13-23) திரையிடப்பட்ட திரைப்படங்கள் பற்றிய தொடர் கட்டுரைகளில் இதுவே முதல் கட்டுரையாகும்.

உலகம் ஒரு சிக்கலான மற்றும் கடினமான இடமாக இருக்கிறது. இவ்வுலகில் பயங்கரமான இன்னல்கள் இருந்து வருவதுடன் பலர் கடுமையான துன்பங்களையும் அனுபவித்து வருகிறார்கள் என்பது வெளிப்படையானது. இந்த கொடூரங்களை கண்டுகொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டு வாழ்ந்துவிடலாம் என்பது இன்று கடினமாகி வருகிறது. தவிர்க்க முடியாமல், சிறிதளவு உணர்திறன் அல்லது உற்றுக் கவனிக்கும் பண்பு கொண்ட கலைஞர்கள் போர், சமத்துவமின்மை, வறுமை மற்றும் சர்வாதிகாரம் போன்ற பல்வேறு வலிமிகுந்த விடயங்களை கலையில் கையாள அல்லது கையாள்வதற்கு முயற்சிக்கின்றனர்.

சான்பிரான்சிஸ்கோ திரைப்பட விழாவினை பற்றிய எமது அறிக்கையின் இரண்டு பகுதிகள், அமெரிக்காவின் மோசமான பொருளாதார சூழ்நிலைகள், கொலம்பியாவில் உள்நாட்டுப் யுத்தம் மற்றும் நிகரகுவாவில் மிகவும் துன்புறுத்துகிற சமூக அவலங்கள் ஆகியவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சித்தரிக்கும் படைப்புகளைக் கையாளுகிறது. 

தீவிரமான கலை மற்றும் சமூக வாய்ப்புகள் ஏராளம். கலை கையாளும் சிக்கலான பொருள் உள்ளடக்கத்தில் வலுவான உணர்ச்சிகள், துன்பியல் (மற்றும் நகைச்சுவையான!) மற்றும் சமூக விமர்சனம் ஆகியவற்றைக்கொண்ட நாடக காவியத்தினை சாத்தியமாக்க வேண்டும். மனித சமூகத்தின் மிகப்பெரிய கேள்விகளுக்கு விடைகாணப்பட வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக, இந்த கட்டுரையின் ஆசிரியர் மதிப்பாய்வு செய்ய இருக்கும் ஐந்து திரைப் படங்களின் முடிவுகள் ஒப்பீட்டளவில் மிக சொற்பமானவையாகவே உள்ளன.

வரலாற்றின் இந்த தருணத்தில், பெரும்பாலான சமூக அடுக்குகள் தங்கள் கைகளில் கேமராக்கள் மற்றும் வளங்களை தம் வசம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட சமூகக் கண்ணோட்டத்தைக் கொண்டவர்களாக உள்ளனர். உலகில் எதையும் மாற்ற முடியும் என்பதன் மீதான அவநம்பிக்கைவாதத்துடன் கைகோர்த்துச் செல்லும் மற்றும் அநீதியை ஏற்றுக்கொண்டு அடங்கிப்போகும் தன்மை, சமூக அக்கறையில்லாத மனப்பாங்கு, மற்றும் கலைத்துவக் கோழைத்தனம் ஆகியவற்றின் கலவையில் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். பிரச்சனையின் இரு பக்கங்களும் ஒன்றையொன்று சார்ந்து வளர்ச்சியடைகின்றன. 

இதன் விளைவாக, திரைப்பட இயக்குனர்கள்,  சமூக பிரச்சனைகளை பார்வையாளர்களுக்கு தெளிவுபடுத்தாமல் வெறுமனே பதிவுசெய்வதும், அவதானிப்பது மட்டுமே தமது பணியாக பார்க்க முயற்சிக்கிறார்கள். இது கலைப் பொறுப்பில் இருந்து நழுவிப்போகும் பேடித்தனமாகும். (தவறான) பாரபட்சமற்ற தன்மை மற்றும் புறநிலைத்தன்மை என்ற சாக்குப்போக்குடன், தோற்றப்பாடுகளுக்கு பின்னால், என்ன இருக்கிறதோ அதை அப்படியே அடிபணிந்து ஏற்றுக்கொள்வதும், அல்லது பிரச்சனையான விடயங்கள் என்ன இருக்கிறதோ உணர்ச்சிவசப்பட்டு அதற்குள் ஆழமாக மூழ்கிப்போகும் நிலை உள்ளது. 'இதோ, இந்த கடினமான வேலையை நீங்களே செய்யுங்கள்' என்பதுதான் பார்வையாளர்களுக்கான மறைமுகமான செய்தியாகும். கலைஞர்களின் உதவி தேவைப்படும் பார்வையாளருக்கு, உலகின் சுமைகளுக்கான தமது வழியைக் கண்டறிய இது ஒருபோதும் உதவாது.

நிக்கராகுவாவின் திரைப்படமான சினம் கொண்ட மகள் (Daughter of Rage) அதன் தலைப்பே மிகவும் கோபத்துடன் குறிப்பிடுவது போல, ஐந்து படங்களில் வலுவானதாகவும் மற்றும் அவற்றில் கதையம்சம் கொண்ட புனைவாகவும் இருக்கிறது. லாரா பாமிஸ்டரின் இத் திரைப்படம்தான், நிகரகுவா பெண் இயக்கிய முதல் கதை அம்சமான திரைப்படமாகும்.

11 வயது மரியா (Araceli Alejandra Medal) தனது கடினமான மனப்பான்மை கொண்ட தாய் லிலிபெத்துடன் (Virginia Raquel Sevilla Garcia) வாழ்கிறாள் -'உனக்கு ஏதாவது வேண்டுமென்றால், அதை அடைவதற்காக, நீ போராட வேண்டும்'- நிகரகுவாவில் உள்ள மிகப்பெரிய திறந்தவெளிக் குப்பைத் தொட்டியான லா சுரேகாவுக்கு அருகில், தாய் அவளிடம் இதனைக் கூறுகிறாள். 

அவர்களின் குடிசை வீடு குப்பையில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களினால் ஒட்டுவேலை செய்யப்பட்டதாக இருக்கிறது. மரியாவும் அவரது தாயும் மனகுவான் குப்பைக் கிடங்கில் இருந்து பொருட்களை சேகரிப்பதன் மூலம் வாழ்க்கையை நடத்தும் ஆதரவற்ற வறியவர்களின் ஒரு பகுதியாக உள்ளனர். தாய்/மகள் இருவரும் உலோகக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் ஒன்றாக வேலை செய்கிறார்கள், விற்கக்கூடிய நாய்க்குட்டிகளை விற்பதற்காக நாய்களை வளர்த்து வருகிறார்கள். அங்கே, உயிர்வாழ்வது நிச்சயமற்ற ஒன்றாக இருக்கிறது.

சினம் கொண்ட மகள் [Photo]

அவளது தாய் விற்பனை செய்வதற்காக வளர்த்துவரும் நாய்க்குட்டிகளுக்கு தற்செயலாக விஷம் கொடுத்து விடுகிறாள். அதன்பின்னர், லிலிபெத் மரியாவை ஒரு குப்பைக் கிடங்கிற்கு அழைத்துச் செல்கிறாள், அங்கு அனாதை குழந்தைகளை அடிமைகளாக பயன்படுத்துகிறார்கள். அங்கு அடிமையாக வாழும் Tadeo (Carlos Gutierrez) என்ற சிறுவன் ஒருவன் பாதரச விஷத்தால் அவதிப்படுகிறான். ஆனால், மரியாவினைப்போல் அல்லாமல் அவன் தனது சூழ்நிலையில் இருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொண்டவனாக இருக்கிறான். 

தனது தாயால் கைவிடப்பட்டவளாக, தனது தலைவிதி எப்படி இருக்கப்போகிறது எனத் தெரியாத நிலையில், மரியா தனது பாதையை கண்டறிய தன்னைத் தயார் படுத்திக்கொள்கிறாள். வன்முறையான எதிர்ப்பலைகள் நகரத்தை மூழ்கடிக்கிறது, மேலும் அவளுடைய தேடலானது ஆபத்தான ஒன்றாக மாறுகிறது.

'சினம் கொண்ட மகள் என்பது கற்பனையின் ஆற்றலைப் பற்றிய திரைப்படம், நாம் ஒவ்வொருவரும் நமது சொந்தக் கதையின் கதாநாயகர்களாக இருக்க வேண்டிய திறனைப் பற்றியது,' என்று Womenandhollywood.com உடனான ஒரு பேட்டியில் இத்திரைப்படத்தின் இயக்குனர் வலியுறுத்துகிறார். “கற்பனையை செயல்படுத்துவது எது? உருவாக்கும் ஆசைக்கு அப்பால், கண்டுபிடிப்பது ... நாம் மாற்ற விரும்பும் யதார்த்தத்தை எதிர்கொள்ளும் ஒரு வழியாக இது பலப்படுத்தப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முதலில் நமக்குப் பிடிக்காத அனைத்தையும் நாம் கற்பனை செய்த பின்னர், நாம் அதை மாற்ற முயல்வோம், இல்லையா? யாராகினும் ஒருவர் நடவடிக்கைகளில் இறங்குவதற்கு கற்பனையே முன்னுரையாக இருக்கும் போல’’ என்று குறிப்பிட்டார்.

“மரியாவைப் போன்ற ஒரு பெண் தன் தாய் மாறிவிட்டாள், என்றில்லாமல், அவள் இறந்துவிட்டாள் என்று நம்பினால், நாம் அனைவரும் நம் சொந்த வரலாற்றை அதிகபட்சம் எமக்களிக்கப்பட்ட சுயத்துடன் மாற்றி எழுதலாம் என்று படத்தைப் பார்ப்பவர்கள் உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

விழித்தெழுந்த கற்பனை மட்டுமே பெரும் பொருளாதார துயரத்தின் யதார்த்தத்தை மாற்றாது. ஒரு சொற்றொடரைக் கடனாகப் பெற, சிந்தனைகள் எப்போதும் தற்போதைய நிலையைத் தாண்டிச் செல்வதில்லை, ஆனால் அதிகபட்சம் அவற்றைப் பற்றி நாம் கொண்டிருக்கும் கருத்துக்களுக்கு அப்பால் கூட செல்வதில்லை, (சில நேரங்களில் அதுவும் இல்லை) லாரா பாமிஸ்டரின் இந்த திரைப்படம் நெஞ்சைப் பதற வைக்கிறது. ஆனால், அதில் உள்ளடக்கம் இல்லாததால் பார்வையாளர்களால் திருப்திப் படமுடியவில்லை.

நிகரகுவா அந்த பிராந்தியத்திலேயே ஏழ்மையான நாடாகும் மற்றும் வட அமெரிக்காவிலே இரண்டாவது வறிய நாடாகும். 41 சதவீதமான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் வறுமையில் வாழ்வதுடன், கிராமப்புறங்களில் மட்டும் 50 சதவீதம் பேர் வறுமையில் வாழ்கின்றனர்.

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம், எல் சால்வடோர், குவாத்தமாலா, ஹோண்டுராஸ் மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 400 சதவிகிதம் பசியால் வாடும் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாகவும், 1.7 மில்லியன் மக்கள் 'அவசரகால' உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மதிப்பிட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் உணவுப் பற்றாக்குறை மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது, இது பல ஆண்டுகளாக கடுமையான வறட்சிக்குப் பிறகு 'மத்திய அமெரிக்க உலர் தாழ்வாரம்' என்று அழைக்கப்படுகிறது.

சாண்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணியின் (FSLN) அரசாங்கம் ஒரு அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில் பெருநிறுவனங்களின், குறிப்பாக அமெரிக்காவின் பெரு நிறுவனங்களின் நலன்களுக்கு முன்னால் மண்டியிட்டுக்கிடப்பதால் நிகரகுவாவில் ஒரு மனிதாபிமான பேரழிவு உருவாகியுள்ளது. 

லா போங்கா (La Bonga) 

கொலோம்பியா திரைப்படமான லா போங்கா-  வை செபாஸ்டியன் பின்சன் சில்வா மற்றும் கனெலா ரெய்ஸ் இருவரும் இயக்கியுள்ளனர். இது இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு மக்கள் தங்கள் சமூகத்திற்குத் திரும்புவதைப் பற்றிய கதையாகும். நாட்டின் உள்நாட்டுப் போரின் போது வலதுசாரி படைகளால் அவர்கள் அடித்து துரத்தப்பட்டிருந்தனர்.

லா போங்கா நகரம், 16 ஆம் நூற்றாண்டில் அடிமைத்தனத்திலிருந்து தப்பிய மற்றும் கார்டேஜினாவைச் சுற்றியுள்ள காடுகளில் தங்கள் சுதந்திரத்திற்காகப் போராடிய மக்களால் நிறுவப்பட்டது என்பதை இத்திரைப்படம் நமக்குத் தெரிவிக்கிறது, இது அமெரிக்காவின் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட முதல் நகரங்களில் ஒன்றாகும்.

லா போங்கா [Photo]

'இடதுசாரி கெரில்லாக்களுடன் போங்கா மக்கள் ஒத்துழைப்பதாக நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டி வலதுசாரி துணை ராணுவத்தினர், அந் நகரத்து மக்களுக்கு மரண அச்சுறுத்தலை விட்டிருந்தனர். கொலம்பியாவில், 40 வருட ஆயுத மோதலில் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர். 

'இன்று, பல சமூகங்கள் கூட்டு நடவடிக்கை மற்றும் பகிரப்பட்ட நினைவாற்றல் சக்தியால் உந்தப்பட்டு, தங்கள் நிலத்திற்காக தொடர்ந்து போராடி வருகின்றன.”

ஒரு கரவனில் கிராமவாசிகளும் மற்றும் ஒரு தனிமையில் வாழும் தாயும் மகளும் திரும்பி வருகிறார்கள். அவர்கள் முன்னர் வசித்த வீடுகள் காட்டில் கரைந்துபோய் கிடக்கின்றன. 200க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து மாபெரும் கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

மிகப்பெரும் சோகம் படிந்த வரலாறு, ஆனால் இயக்குனர்கள் அமைதியாக உட்கார்ந்து நிகழ்வுகளை படமாக்குவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. நிலைமையைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? ஒரு வர்ணனையாளர் குறிப்பிடுகிறார், சில்வாவும் ரெய்ஸும் 'வேண்டுமென்றே - மற்றும் சில இடங்களில் உண்மையில் - ஒளிபுகா கதை உத்தியைப் பயன்படுத்துகின்றனர். வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்கள் ஒரு நிலைப்பாட்டை முன்வைக்க  மறுக்கிறார்கள் என்பதாகும்.

'வெர்னர் ஹெர்சாக்கின் பிட்ஸ்கரால்டோவால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஒரு திரைப்படத்தை உருவாக்க விரும்புகிறோம்,' என்கிறார் சில்வா (1982 ஆம் ஆண்டு திரைப்படம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் செங்குத்தான மலைப்பகுதியில் ஒரு நீராவிப் படகில் சவாரி செய்யும் முயற்சியை அர்த்தமற்ற முறையில் விவரிக்கிறது), 'ஆரம்பத்தில் லா போங்காவிற்கு திரும்பும் பயணம். நாங்கள் அங்கு சென்றதும், லா போங்காவின் புரவலர் துறவியின் விருந்து நாள் கொண்டாட்டத்தை மீண்டும் உருவாக்குவோம். மிகப்பெரிய ஒலி அமைப்பைக் கொண்டு வருவோம்; அதை அங்கே கொண்டு வருவது ஃபிட்ஸ்கரால்டோவின் படகைக் குறிக்கிறது..’’ என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

இந்த சுறுசுறுப்பான வர்ணனை குறிப்பிடுவது போல, கடந்த காலம், நிகழ்காலம் அல்லது எதிர்காலம் பற்றிய சிறிய பார்வையைத்தான் இது தருகிறது, மேலும் அங்கே சமூக கோபமே கிட்டத்தட்ட  இல்லை. லா போங்கா அரைப் படமாகத் தகுதி பெறுகிறது என ஒருவர் கூற முயற்சிக்கலாம். கொலம்பிய உள்நாட்டுப் போரின் தோற்றம் என்ன? இங்கே மீண்டும், மிகப்பிரமாண்டமான சமூக பிணிகளுக்கு தனிமனித, அரை-உளவியல் செயல்முறைகள் தான் தீர்வு என எமக்கு கூறப்படுகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்களின் கீழ், வோல் ஸ்ட்ரீட் சார்பாக கொலம்பியாவின் கழுத்தை நெரித்துள்ளது. 1960 களில் ஜோன் கென்னடியின் கீழ் கம்யூனிச எதிர்ப்பு வெறியாட்டங்களில் இருந்து கிளின்டன் மற்றும் ஒபாமா வரை 'திட்டம் கொலம்பியா' என்பதன் மூலம் இந்த நாட்டை மீண்டும் மீண்டும் சீரழித்தனர். இங்கு பல்லாயிரக்கணக்கான இடதுசாரி தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளை கொலை செய்து, மனித குலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எண்ணற்ற குற்றங்களுக்கு வாஷிங்டனால் உருவாக்கப்பட்ட ஆயுதம் மற்றும் பயிற்சி பெற்ற அமெரிக்க இராணுவம் மற்றும் கொலம்பிய இராணுவம் மற்றும் போலீஸ் பொறுப்பாகும். இத்திரைப்படத்தில் அதற்கான எந்த குறிப்பும் இல்லை.

தொடரும்

Loading