முன்னோக்கு

கிளாரியோஸ் வேலைநிறுத்தமும், தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய எதிர்தாக்குதலும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

டானா ஆலை தொழிலாளர்களின் சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழு உறுப்பினர்கள் கிளாரியோஸ் வேலைநிறுத்தக்காரர்களை ஆதரிக்கிறார்கள். [Photo: WSWS]

வியாழக்கிழமை, ஓஹியோவின் டொலிடா உள்ளாட்சி நீதிபதி ஒருவர், கார் பேட்டரி உற்பத்தி நிறுவனமான கிளாரியோஸில் வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்கள் ஐந்து பேருக்கு அதிகமாக குழுக்களாக மறியல் செய்வதற்குத் தடை விதித்து ஓர் உத்தரவு பிறப்பித்தார்.

அமெரிக்கா எங்கிலும் உள்ள Big Three வாகன உற்பத்தி ஆலைகள் மற்றும் அவற்றின் அசெம்பிளி ஆலைகளுக்கான பேட்டரிகள் உற்பத்தியை நிறுத்தி உள்ள இந்த வேலைநிறுத்தம், “கடுமையான தீவிர தன்மை கொண்ட அவசரநிலையை” உருவாக்கி உள்ளதாக அந்தப் பெருநிறுவனம் கூறியதும், ஒரு குடியரசுக் கட்சியினரான நீதிபதி மைக்கெல் கொல்டிங் இந்த ஜனநாயக விரோத உத்தரவைப் பிறப்பித்தார். மறியலில் ஈடுபடுவதன் மூலம் தொழிலாளர்கள் “ஆபத்தை” உருவாக்குவதாக கூறும் இந்த உத்தரவு, வேலைநிறுத்தம் செய்வதற்கான மற்றும் ஒன்று கூடுவதற்கான தொழிலாளர்களின் உரிமை மீதான ஒரு தாக்குதலாக உள்ளது.

இந்த உத்தரவு, அரசின் வர்க்கத் தன்மையை வெளிப்படுத்துகிறது. நீதிமன்றங்கள், பொலிஸ் மற்றும் அரசு அமைப்புகள், வர்க்கப் போராட்டத்திற்கு மேலே அமர்ந்திருக்கும் நடுநிலையான மத்தியஸ்த அமைப்புகள் இல்லை, மாறாக அவை பெரும் பணக்காரர்களின் கோரிக்கைகளை அமுலாக்கப் பெருநிறுவனங்களின் சேவகர்களாக உள்ளன. முதலாளித்துவத்தின் கீழ், நிறுவனங்களால் வரி செலுத்துவதைத் தவிர்க்க முடிகிறது, சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை மீற முடிகிறது, அவை இன்னமும் அரசாங்கப் பிணையெடுப்புகளைப் பெறுகின்றன, அதேவேளையில் டொலிடொவில் சட்டத்திற்குக் கீழ்படியும் தொழிலாளர்களைச் சிறையில் அடைக்க முடிகிறது அல்லது ஒரே நேரத்தில் ஆறு பேர் சேர்ந்து மறியலில் ஈடுபட்டதற்காக அவர்கள் மீது அபராதம் விதிக்க முடிகிறது.

ஏறக்குறைய 90 ஆண்டுகளுக்கு முன்னர், 1934 இல் சோசலிஸ்டுகள் தலைமையில் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனமான எலக்ட்ரிக் ஆட்டோ-லைட் ஆலை தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தத்திற்கு எதிராக டொலிடொ நீதிமன்றங்கள் தடை உத்தரவு பிறப்பித்தன. தொழிலாளர்கள் அந்த உத்தரவை மீறினர், வேலைநிறுத்தம் பரவியது. அதற்கடுத்த ஒரு சில வாரங்களில் இன்னும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலையற்றவர்களும் அந்த மறியலில் இணைந்தனர். அந்த மே மாதம், அம்மாநிலத்தின் ஜனநாயகக் கட்சி ஆளுநர் ஜோர்ஜ் வொயிட் நிலைநிறுத்திய 900 தேசிய பாதுகாப்புப் படை துருப்புகளும் மற்றும் லூகாஸ் உள்ளாட்சி நகரசபை தலைவர்களும், வேலைநிறுத்தம் செய்தவர்களைத் தாக்கியதில், இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

அந்த வேலைநிறுத்தம், அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் (American Federation of Labor) பழமைவாத தலைமைக்கு எதிராக சாமானியத் தொழிலாளர்களின் நாடு தழுவிய கிளர்ச்சியின் பாகமாக இருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த உள்ளிருப்பு வேலைநிறுத்த அலையால், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தை (UAW) அங்கீகரித்தது.

தற்போது, வாரக்கணக்கில் நீடிக்கும் வாகனத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் நீதிமன்றங்கள் வேகவேகமாக தலையிடுவதானது, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு நிதி வழங்க பைடென் நிர்வாகம் பில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சி வரும் அதேவேளையில், அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில், அமெரிக்காவில் வர்க்க போராட்ட அபிவிருத்திக்கு அமெரிக்க அரசாங்கமும் மற்றும் வாகனத்துறை பெருநிறுவனங்களும் மிகவும் உன்னிப்பாக உள்ளன என்பதையே காட்டுகிறது.

கிளாரியோஸ் வேலைநிறுத்தத்தை ஆளும் வர்க்கம் வெறும் ஒப்பந்த பிரச்சினையாகவோ அல்லது உள்ளூர் பிரச்சினையாகவோ பார்க்கவில்லை, மாறாக தேசியளவிலும் சர்வதேச அளவிலும் நீண்டகால தாக்கங்களைக் கொண்ட ஒரு போராட்டமாக பார்க்கிறது என்பதற்கு இந்த நீதிமன்ற உத்தரவு ஓர் அடையாளமாகும்.

525 தொழிலாளர்களின் இந்த வெளிநடப்பானது, தொழில்துறை முழுவதையும் மின்சார வாகனங்களுக்கு (EV) மாற்றுவதன் மீது ஒரு முன்னணி தாக்குதலாக இருப்பதுடன், செப்டம்பரில் Big Three ஆலையின் 150,000 தொழிலாளர்களின் ஒப்பந்தங்கள் காலாவதி ஆகும் போது என்ன நடக்கவிருக்கிறதோ அதற்கான ஓர் முன் அறிகுறியாகவும் உள்ளது. மின்சார வாகனங்களுக்கு மாற்றுவதற்காக, அளப்பரிய அரசியல் மூலதனத்தை அர்ப்பணித்துள்ள பைடென் நிர்வாகம், சீன உற்பத்தியை மிஞ்சவும், ரஷ்ய மற்றும் மத்தியக் கிழக்கு எண்ணெய்யைச் சார்ந்திருப்பதை மட்டுப்படுத்துவதற்கும், ஒரு போர் பொருளாதாரத்திற்கு அவசியப்படும் தேசியளவிலான வினியோகச் சங்கிலி வகையை அபிவிருத்தி செய்வதற்கும் இதை அவசியமானதாக பார்க்கிறது.

உலகெங்கிலும் உள்ள 56 கிளாரியோஸ் ஆலைகளில் 16,000 பேர் பணியாற்றுகிறார்கள். மின்சார வாகனங்களுக்கு மாற்றுவதிலும் ஒட்டுமொத்தமாக உலகளாவிய வாகனத் தொழில்துறையிலும் அது ஒரு முக்கிய இடத்தில் உள்ளது. முன்னதாக ஜோன்சன் கண்ட்ரோல்ஸ் என்றிருந்த கிளாரியோஸ், உலகின் மொத்த கார்களில் மூன்றில் ஒரு பங்கு கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளை உற்பத்தி செய்கிறது.

ஓஹியோவில் அதன் ஹோலாண்டு ஆலையில் தொழிலாளர்களுக்கு வழங்கிய ஒப்பந்தத்தில், 3 சதவீத வருடாந்திர ஊதிய உயர்வும் (பணவீக்கத்தின் அடிப்படையில் கணக்கிட்டால் இது கணிசமான சம்பளக் குறைப்பாகும்) மற்றும் தொழிலாளர்களின் சம்பளக் காசோலையில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 15,000 டாலரை வெட்டும் வகையில் மிகைநேர வேலைக்கு நடைமுறையளவில் தடை விதித்திருப்பதும் உள்ளடங்கும். அதிகரித்தளவில் போராடுவதற்கு தயாராக இருப்பதற்கான ஓர் அறிகுறியாக 98 சதவீத தொழிலாளர்கள் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்தனர்.

Big Three ஆலையும், மின்சார வாகனங்களுக்கு மாறுவதை அவசியமாக பார்க்கும் மிகப் பெரிய வங்கிகளும் தான் இந்த வறிய ஒப்பந்தத்தின் ஈவிரக்கமற்ற வரையறைகளைக் கட்டளையிடுகின்றன. மின்சார வாகனங்களுக்குப் பேட்டரிகளை உற்பத்தி செய்யும் வகையில், கிளாரியோஸ் நிறுவனம் உற்பத்தியை மாற்றும் நிகழ்வுபோக்கில் உள்ளது. அது இந்த நோக்கத்திற்காகச் சமீபத்திய ஆண்டுகளில் எரிசக்தித்துறையிடம் இருந்து நூறு மில்லியன் கணக்கான டாலர்களைப் பெற்றுள்ளது.

கடந்த வாரம் முதலீட்டாளர்களுடனான ஒரு சந்திப்பில், கிளாரியோஸ் தலைமை செயலதிகாரி மார்க் வாலஸ் கூறுகையில், மின்சார வாகனங்களுக்கு மாறுவது “50% முதல் 80% வரையிலான அதிக வருவாய் வழங்கும் என்பதோடு, வழக்கத்தில் உள்ள குறைந்த வோல்டெஜ் பேட்டரியில் கிடைக்கும் டாலர்களின் இலாபத்தை இரண்டு மடங்காக்கும்”, ஆனால் இந்த மாற்றத்தைச் செய்வதற்கு, “அமெரிக்க செயல்பாடுகளை விரிவாக்குவதற்காக, பெரிதும் செலவு குறைப்பு நடவடிக்கைகளில் இருந்து கூடுதலாக 50 மில்லியன் டாலர்” தேவைப்படும் என்றார். வட்டி விகித உயர்வுகள் அவர்களின் கடன் கடமைப்பாடுகளை அதிகரித்திருப்பதாகவும், இதைத் தொழிலாளர் சக்தியில் இருந்து இன்னும் கூடுதலாக விட்டுக்கொடுப்புகளை உறிஞ்சுவதன் மூலமாக ஈடுகட்ட முயன்று வருவதாகவும் வாலஸ் முதலீட்டாளர்களுக்குத் தெரிவித்தார்.

சமீபத்திய தசாப்தங்களில் செலவினங்களைக் குறைப்பதற்கும் இலாப வரம்புகளை அதிகரிப்பதற்கும் பெருநிறுவனங்கள் ஏற்றுக் கொண்ட 'உரிய நேர விநியோகம்' (just-in-time delivery) முறையின் பலவீனங்களையும் கிளாரியோஸ் வேலைநிறுத்தம் வெளிப்படுத்துகிறது. கிளாரியோஸ் ஆலையின் 525 தொழிலாளர்கள் வாரத்திற்கு 150,000 பேட்டரிகளை ஃபோர்ட் நிறுவனத்துக்காக உற்பத்தி செய்கிறார்கள். ஜெனரல் மோட்டார்ஸின் உலகளவிய Buick மற்றும் GMC பிரிவின் துணை தலைவர் டங்கன் ஆல்ட்ரெட் கடந்த செப்டம்பரில் கூறுகையில், நிறுவனத்தின் கையிருப்பு “வரலாற்றிலேயே மிகவும் குறைவாக” உள்ளது என்றார். ஏப்ரல் 16 கட்டுரையில் Automotive News குறிப்பிடுகையில், “ஜெனரல் மோட்டார்ஸ் வேலை நிறுத்தம் கடுமையாக தாக்கிய 2019 ஐ விட, இன்று வினியோகச் சங்கிலி வடிவம் மிகவும் மோசமாக உள்ளது” என்றும், “2023 வேலைநிறுத்தம் இன்னும் மோசமாக இருக்கும்,” என்றும் எச்சரித்தது.

பெருநிறுவனங்கள் நூறாயிரக்கணக்கான வேலைகளைக் குறைக்க திட்டமிடுகின்ற நிலையில், கிளாரியோஸில் இந்த வேலைநிறுத்தம் நடக்கிறது. மே 3 இல் நியூ யோர்க் டைம்ஸ் ஒப்புக் கொண்டதைப் போல, மின்சார வாகனங்களுக்கு மாறுவது என்பது “வாகனத்துறை தொழிலாளர்களின் செலவில்” செய்யப்படுகிறது, “ஏனென்றால் எரிவாயுவில் இயங்கும் ஒரு காரை உற்பத்தி செய்ய தேவைப்படும் தொழிலாளர்களில் பாதிக்கும் குறைவானவர்களே மொத்த மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய தேவைப்படுகிறார்கள்.”

அமெரிக்கா முழுவதிலுமான ஆலைகளில், வேலைநீக்கங்கள், ஆலைமூடல்கள் தொடர்பான அச்சுறுத்தல்கள் மற்றும் எதேச்சதிகார வேலைநேர மாற்றங்கள் மீது சாமானியத் தொழிலாளர்களிடையே எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. ஒப்பந்தம் காலாவதி ஆவதற்கு முன்னதாக, நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தியை வேகப்படுத்துவதால் விபத்துக்களும் பாதுகாப்பற்ற நிலைமைகளும் மிகவும் சகஜமான விஷயமாகி வருகின்றன. ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கான ஆர்வத்தின் அடையாளமாக, ஓஹியோ டொலிடொ பகுதியின் பல்வேறு வாகனத்துறை ஆலைகளின் தொழிலாளர்களும் கிளாரியோஸ் ஆலை மறியல் களத்தில் இணைய அங்கே பயணித்துள்ளனர், அதேவேளையில் பல தொழிலாளர்கள் சமூக ஊடகங்களில் இந்த வேலைநிறுத்தத்தை விரிவாக்குவதற்கான அவர்களின் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றனர்.

வோல் ஸ்ட்ரீட், வாகனத்துறை பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் என இவற்றிற்கு உகந்த வரையறைகளின் மூலம் சாமானியத் தொழிலாளர்களின் பலத்தைத் தடுத்து வைப்பதற்காக, பெருநிறுவனங்களும் மற்றும் அரசாங்கமும் பெருநிறுவன-சார்பு UAW அதிகாரத்துவத்தைச் சார்ந்துள்ளன. வரலாற்றிலேயே மிகவும் குறைந்த வாக்குகளைப் பெற்றதில் எடுத்துக்காட்டப்பட்டவாறு ஒரு மோசடி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட UAW தலைவர் ஷான் ஃபெய்ன் கிளாரியோஸ் வேலைநிறுத்தம் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பதோடு, இந்த வேலைநிறுத்தம் டெட்ராய்டில் உள்ள UAW சங்க தலைமையகத்தில் இருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் தான் நடக்கிறது என்றாலும் கூட, அவர் மறியல் களத்திற்கு நேரில் வரவில்லை.

ஃபெய்ன் ஒரு 'சீர்திருத்தவாதி' என்றும், நிறுவனங்களுடனான பல ஆண்டுகால ஊழல்கள் மற்றும் ஒத்துழைப்புக்குப் பின்னர் அவர் UAW இல் “ஜனநாயகத்தை” ஏற்படுத்துவார் என்றும் பெருநிறுவன ஊடகங்கள் ஊக்குவிக்கும் கட்டுக்கதையை, கிளாரியோஸ் வேலைநிறுத்தத்தில் UAW அதிகாரத்துவத்தின் செயல்பாடுகள் அம்பலப்படுத்துகின்றன. ஃபெய்ன் நிர்வாகம் “எதையும் மறைக்காது, அனைத்தும் விவாதிக்கப்படும். வெறும் முக்கிய புள்ளிகளைக் காட்டுவதை நான் எதிர்க்கிறேன்,” என்று Detroit Free Press இக்கு ஜெனரல் மோட்டார்ஸின் UAW துணை தலைவர் அறிக்கையில் இருந்த பொய்களை வெளிப்படுத்தும் வகையில், கிளாரியோஸ் தொழிலாளர்களுக்கு வெறும் “முக்கிய புள்ளிகளை” காட்டும் அந்தப் பக்கம் மட்டுமே வழங்கப்பட்டு, அவர்கள் அந்த ஒப்பந்தத்திற்கு வாக்களிக்க நிர்பந்திக்கப்பட்டார்கள். கிளாரியோஸ் பேட்டரிகளைப் பயன்படுத்தும் உற்பத்தி ஆலைகள் தொடர்ந்து உற்பத்தியைத் தொடர்வதற்குப் ஃபெய்ன் நிர்வாகம் அனுமதித்துள்ளது.

கிளாரியோஸ் மற்றும் அதற்கு அப்பாலும், விற்றுத்தள்ளல்கள் மூலமாக தொழிலாளர்களை நிர்பந்திக்க தொழிற்சங்க அதிகாரத்துவம் தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் சூழ்ச்சி செய்து வருகிறது என்பதில் ஒரு துளியும் சந்தேகம் இல்லை. மார்ச் மாதத்தில் இருந்து ஓர் உள்அலுவலக சுற்றறிக்கையில் ஃபெய்ன் அலுவலகம் குறிப்பிடுகையில், மிகப் பெரியளவில் சம்பள உயர்வுகள், சம்பள அடுக்கை நீக்குதல், பாதுகாப்பற்ற வேலையிட நிலைமைகளைச் சீர்படுத்துதல் மற்றும் வாழ்க்கைச் செலவு ஏற்ற இறக்கங்களின் சீரமைப்பை வென்றெடுத்தல் என இவற்றின் மீது தொழிலாளர்களுக்கு “யதார்த்தத்திற்கு முரணான எதிர்பார்ப்புகள்” உள்ளதாக எச்சரித்தது. “எதிர்பார்ப்புகள் யதார்த்திற்கும், நாம் எங்கே இருக்கிறோம் என்பதற்கும் பொருந்தி இருக்க வேண்டும்,” என்று ஃபெய்ன் சுற்றறிக்கைக் குறிப்பிட்டது. “நியாயமற்ற அதிக பேரம்பேசும் எதிர்ப்பார்ப்புகளை அமைக்க முடியாது … இதை 6 மாதங்களில் செய்து விட முடியாது,” என்று அது குறிப்பிட்டது.

உறுப்பினர்கள் அவர்களுக்குத் தேவையானதைப் பெறுவதற்கான போராட்டத்திற்கு அதிகாரத்துவம் ஒரு தடையாக உள்ளது. கடந்தாண்டு UAW தலைவர் தேர்தல்களில், மேக் ட்ரக்ஸ் ஆலையின் சாமானிய தொழிலாளரான சோசலிசவாதி வில் லெஹ்மன் UAW ஐ ஒழித்து, அதிகாரத்தையும் மற்றும் ஜனநாயகரீதியில் முடிவெடுப்பதையும் கடைநிலை தொழிலாளர்களுக்கு மாற்றி, தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, வினியோகச் சங்கிலியை முறிக்கும் அடித்தளத்தில் போட்டியிட்டார்.

முக்கியமாக லெஹ்மன், நாடுகடந்த நிறுவனங்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சர்வதேச மூலோபாயத்திற்கு அழைப்பு விடுத்ததுடன், சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) மூலமாக தொழிலாளர்களாலேயே கட்டுப்படுத்தப்படும் உலகளவில் இணைக்கப்பட்ட சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களைக் கட்டியெழுப்பவும் அவற்றில் இணையவும் அவர் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். பெருந்திரளான தொழிலாளர்கள் ஒரு சாமானியத் தொழிலாளருக்கு வாக்களிக்க வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது என்று UAW தொழிற்சங்க அதிகாரத்துவம் அந்த வாக்கெடுப்பை ஒடுக்கியது.

தேர்தல் முடிந்துவிட்டது என்றாலும், லெஹ்மனின் சாமானியத் தொழிலாளர்களுக்கான சர்வதேசவாத மூலோபாயம் முன்னோக்கிய பாதையைச் சுட்டிக்காட்டுகிறது.

பல தசாப்தங்களில் முதல் முறையாக, இந்தாண்டு, அமெரிக்க மற்றும் கனடாவின் Big Three ஆலை தொழிலாளர்களின் ஒப்பந்தங்கள் ஒரே நேரத்தில் காலாவதியாகின்றன. தற்போது, THK Rhythm Automotive ஆலையில் வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் சுமார் 300 தொழிலாளர்கள் ஒரு விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தத்தை 251-11 என்ற வாக்குகளுடன் நிராகரித்த பின்னர், அவர்கள் ஒன்டாறியோவின் செயிண்ட் காதேரைன்ஸில் சுமார் மூன்று வாரங்களாக வேலைநிறுத்தத்தில் உள்ளனர். அமெரிக்க-மெக்சிகோ எல்லையை ஒட்டி மத்தமொரொஸ் போன்ற நகரங்களில் பத்தாயிரக் கணக்கான வாகனத் தொழில்துறை தொழிலாளர்களின் ஒப்பந்தங்கள் மே 1 இல் காலாவதி ஆகின.

பிரான்ஸ், ஜேர்மனி, இலங்கை மற்றும் உலகம் முழுவதிலும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் வளர்ச்சியில் நிரூபித்துக் காட்டப்பட்டுள்ளவாறு, இதே நிலைமைகள் தான் ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களையும் உந்தி வருகிறது. டொலிடொ எங்கிலுமான தொழிலாளர்கள் இந்த உலகளாவிய இயக்கத்துடன் அவர்களின் போராட்டங்களை இணைக்கவும் மற்றும் அரை நூற்றாண்டு கால விட்டுக்கொடுப்புகளை மாற்றவும் ஏற்கனவே சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுவை உருவாக்கி உள்ளனர். தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக போராடி வரும் இந்த உலகளாவிய வலையமைப்பைக் கட்டியெழுப்ப, இன்றே சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களில் இணையுங்கள்.

Loading