நீச்சலாளர்கள் : அகதி நெருக்கடியின் கொடூரமான காட்சிகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பிரிட்டிஷ்-எகிப்திய திரைப்படத் தயாரிப்பாளர் சாலி எல் ஹொசைனி இயக்கிய  (The Swimmers) நீச்சலாளர்கள் என்ற திரைப்படம் Netflix இல்  காணக்கிடைக்கிறது. சாலி எல் ஹொசைனி தான் (My Brother the Devil) ஜ  இயக்கியவர் மற்றும் நீச்சலாளர்கள் இனது திரைக்கதையை எல் ஹொசைனி மற்றும் ஜாக் தோர்ன் ((Radioactive/கதிரியக்கம் ) இருவரும் இணைந்து எழுதியுள்ளார்கள் . இந்த திரைப்படமானது ஆகஸ்ட் 2015 இல் இடம்பெற்ற நன்கு அறியப்பட்ட ஒரு உண்மைக் கதையின் புனைவாகும். 

சிரியாவைச் சேர்ந்த சகோதரிகளும், போட்டி நீச்சல் வீராங்கனைகளுமான சாரா மார்டினி மற்றும் யுஸ்ரா மார்டினி இருவரும், 18 அகதிகளுடன் துருக்கியிலிருந்து கிரேக்க தீவான லெஸ்போஸ் வரையான ஏஜியன் கடலை கடக்க முயன்றபோது பேரழிவு அவர்களை பயமுறுத்துகிறது. இந்த அகதிகள் குழு பழுதடைந்த மற்றும் வெளிப்புறமாக பொருத்தப்பட்ட இயந்திரத்துடன் கூடிய ஆபத்தான சிறிய காற்றூதப்பட்ட படகில் பயணம் செய்துகொண்டிருந்தனர். படகின் அளவைவிட அதிகமானவர்கள் இருந்ததால், படகு நீரில் மூழ்குவதைத் தடுக்க, சாராவும் யுஸ்ராவும் கடலில் குதித்து நீந்தி, அதன் சுமையைக் குறைக்க முயன்று, பாதி மூழ்கிய படகை தங்கள் மூன்றரை மணி நேர நீச்சலினால் பாதுகாப்பாக கரைக்கு இழுத்துச் சென்றனர். 'நான் இறந்துவிடுவேனோ என பயந்தேன், ஆனால் படகை இலகுவாக்க யாராவது அதை செய்ய வேண்டும் என்று நான் உணர்ந்தேன்,' என யுஸ்ரா நினைவு கூர்ந்தார்.

Manal Issa and Nathalie Issa in The Swimmers [Photo]

தமது இறுதி தரிப்பிடமான ஜேர்மனியை அடைந்தபின்னர், சாரா கிரேக்கத்திலுள்ள லெஸ்போஸ் தீவுக்கு திரும்பி அகதிகளுக்கு உதவும் முயற்சிகளில் பங்கேற்கிறார். அதன்பிறகு அவர் கிரேக்கத்தின் சிரிசா (தீவிர இடதுகளின் கூட்டணி) அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு 100 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தப்பிக்கும் துரதிர்ஷ்டசாலிகளுக்கு உதவ முயற்சித்ததற்காக சாரா மற்றும் மேலும் இருவர் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுக்களை — மக்கள் கடத்தல், மோசடி, ஒரு குற்றவியல் அமைப்பில் உறுப்பினர் மற்றும் பணமோசடி போன்ற குற்றச்சாட்டுக்களை — எதிர்கொண்டனர், இதற்காக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அவர்களுக்கு விதிக்கப்பட்டது. கடந்த ஜனவரியில், கிரேக்க நீதிமன்றம் இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்தது .

எல் ஹொசைனியின் திரைப்படமானது, 17 வயதான யுஸ்ரா மற்றும் 20 வயதான சாரா இருவரும் (நதாலி மற்றும் மணல் இசா என்ற சகோதரிகள் நடிக்கிறார்கள்) தலைநகர் டமாஸ்கஸின் தராயாவில் வசித்து வருவதையும், ​​சிரியாவின் உள்நாட்டுப் போரின் போது குண்டுகள் விழத் தொடங்குவதையும் பின்தொடர்கிறது. ஒலிம்பிக் பதக்கத்திற்காக போட்டியிடும் கனவுகளுடன் திறமையான நீச்சல் வீரர்கள் இருவருக்கும் அவர்களின் தந்தை எசாட் (அலி சுலிமான்) பயிற்சி அளித்து வருகிறார். நகரின் சில பகுதிகள் பேரழிவுக்குள்ளானதால் இவர்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் ஆபத்தானதாகிறது. நீந்திக்கொண்டிருந்த போது ஒரு வெடிகுண்டு நீச்சல் குளத்தில் வீழ்ந்ததால், அந்த கட்டிடமே  இடிந்துபோகிறது.

குடும்ப நிலமையின் காரணமாக, இரு சகோதரிகளும் வீட்டை விட்டு ஐரோப்பாவுக்குச் சென்றாக வேண்டும் என்பது முடிவாகிறது. சகோதரிகள் இருவரும் பேர்லின் வந்தவுடன், குடும்ப மறு ஒருங்கிணைப்புக்கு விண்ணப்பித்தால் அவர்களின் பெற்றோர்களும் உடன்பிறந்தவர்களும் அவர்களுடன் சேர அனுமதிக்கப்படலாம் என்பதால்  இரு பெண்களும் சிரியாவிலிருந்து புறப்படுகின்றனர்.

அகதியாகப் பயணம் செய்வது என்பது மிக ஆபத்தானதும், பெரும் விலைசெலுத்தும் சோதனையாகும் என்பதை சகோதரிகளும் அவர்களது உறவினரான மைத்துனர் நிசாரும் (அஹ்மத் மாலேக்) கண்டுகொள்கிறார்கள். ​​ மார்டினிஸ் சகோதரிகள் இருவரும் விமானம் மூலம் துருக்கிக்கு வந்து கிரீஸ் வழியாக ஜேர்மனியை அடைய அவர்களின் பயணத்தின் போது திட்டமிட்டிருந்தனர். இந்த கட்டத்தில்தான், ஏஜியன் கடற்பகுதியில் அபாயகரமான படகுப் பயணம் மற்றும் அவர்களது நீச்சல் சம்பவம் இடம்பெறுகிறது. கடலைக் கடக்க முயன்றவர்களில் பலர் பாதுகாப்புக்காக ஒரு குழுவாக பயணம் செய்கிறார்கள், இதில் புதிய அறிமுகமானவர்களான ஷதா (நாஹெல் ட்ஸேகாய்), எமாட் (ஜேம்ஸ் கிருஷ்ணா ஃபிலாய்ட்), பிலால் (எல்மி ரஷித் எல்மி) மற்றும் பலர் உள்ளனர். நேர்மையற்ற கடத்தல்காரர்கள் மற்றும் கிட்டத்தட்ட பாலியல் பலாத்காரத்தை உள்ளடக்கிய ஒரு ஆபத்தான பயணத்தைத் அவர்கள் தொடர்ந்தனர். இருவரும் 25 நாட்கள் கால் நடையாகவும், பேருந்துகளிலும் பயணம் செய்தும் மற்றும் அவர்களால் ஏறக்கூடியதாக இருந்த அனைத்து போக்குவரத்தை வாகனங்களையும் பயன்படுத்திக்கொண்டு பேர்லினுக்கு வருகிறார்கள்.

யுஸ்ராவும் சாராவும் பேர்லினில் உள்ளூர் நீச்சல் கிளப்பைக் கண்டுபிடித்தனர், 2016 இல் ரியோ டி ஜெனிரோவிற்கான அகதிகள் ஒலிம்பிக் அணிக்கு யுஸ்ரா தகுதிபெறும் திறன் யுஸ்ராவுக்கு இருப்பதாக பயிற்சியாளர் ஸ்வென் (மத்தியாஸ் ஷ்வீஃபர்) நம்புகிறார், அதே நேரத்தில் சாரா அதிகரித்துவரும் அகதி நெருக்கடிக்கு உதவ கிரேக்க லெஸ்போஸ் தீவுக்கு திரும்பிப்போக விரும்புகிறார்.

Nathalie Issa in The Swimmers [Photo]

நீச்சலாளர்கள் படத்தின் முக்கிய கவனம், மிக உடனடி மற்றும் நேரடி அர்த்தத்தில் அகதிகளின் கொடூரமான அவலநிலை ஆகும். மே 2022 நிலவரப்படி, உலகளவில் அகதிகளின் மொத்த எண்ணிக்கை 100 மில்லியனை எட்டியுள்ளது, உக்ரேனில் நடந்த போரின் காரணமாக 7.8 மில்லியன் பேர் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2011 முதல் சுமார் 5.7 மில்லியன் சிரியர்கள் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் ரோஸின் திறமையால், திரைப்படம் அதன் உச்சநிலையை எட்டியுள்ளதுடன், ஏஜியன் கடல் பாதையின் முக்கிய, பதற்றம் நிறைந்த காட்சியில் அதன் மிகப்பெரிய வலிமையை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு நீராலான கல்லறையில் இதுவரை இறந்துபோன எண்ணற்றவர்களுடன் இந்த 20 பேரும் சேரக்கூடிய உண்மையான சாத்தியத்தையும் காட்சிகள் வெளிப்படுத்தியது. இந்தப் படத்தின் காட்சிகள் மில்லியன் கணக்கானவர்களின் அனுபவத்தைப் பேசுகின்றன, அவர்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் 2014 முதல் மத்தியதரைக் கடலின் பல்வேறு பகுதிகளில் மூழ்கி ஒரு துன்பியலான விதியை சந்தித்திருந்தனர்.

இயக்குனர் எல் ஹொசைனியின் கூற்றுப்படி, mashable.com உடனான ஒரு நேர்காணலில், 'அந்த காற்றூதப்பட்ட படகில் இருந்தவர்கள், அதே மரண பயணத்தை மேற்கொண்டிருந்தனர். நான் படத்தில் நிறைய அகதிகளை நடிக்க வைத்தேன், மேலும் திரைக்குப் பின்னால் அகதிகளாகப் பணிபுரிந்தவர்களும் படத்தில் நடித்துள்ளனர்.’’

யுஸ்ரா மேலும் கூறுகையில், “பெரும் எண்ணிக்கையிலான அகதிகள் இந்த கொடூரமான அனுபவங்களை கடந்து சென்றுள்ளனர், நான் அந்த கொடூரமான அனுபவங்களில் இருந்து தப்பித்த ஒரு அதிர்ஷ்டசாலி மட்டுமே. துரதிர்ஷ்டவசமாக ஏராளமான அகதிகள் அந்தக் கடலில் மூழ்கி இறந்தனர், அதனால்தான் இந்தக் கதையை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். பகிர்வது எனக்கு வேதனையாக இருந்தாலும் கூட... அகதியாக இருப்பது என்பது ஒரு மனிதனது தனிப்பட்ட ஒரு தேர்வாக இருக்கவில்லை. அகதிகளானவர்கள் எங்கிருந்து வந்தாலும் கூட அவர்கள் வரவேற்கப்பட்டாக வேண்டும், அந்த பயங்கரமான பயணங்களை அவர்கள் கடந்து செல்ல விடாமல், அவர்களை ஒருங்கிணைக்க ஒரு அமைப்பு இருந்தாக வேண்டும்’’  என்று யுஸ்ரா தெரிவித்தார்.

“எவரும் தங்கள் குழந்தைகளை இதுபோன்ற காற்றூதப்பட்ட படகில் அனுப்ப விரும்பவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் உண்மையில் விரும்புகிறேன். என் பெற்றோரைப் போலவே, நாங்கள் ஒரு மணி நேரம் தொலைபேசியில் பதிலளிக்காத பிறகு, அவர்கள் எங்களை இழந்துவிட்டதாக நினைத்தார்கள். எனது சொந்தக் குழந்தைகளுடன் நான் அதை அனுபவிக்க விரும்பவில்லை. அந்த விஷயங்களை யாரும் கடந்து செல்ல விரும்பவில்லை, நாங்கள் கட்டாயப்படுத்தப்படுகிறோம்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

'சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள, வெளிநாட்டவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்கள் மீது ' அக்கறைகொண்டு இருப்பதாகக் வேறொரு இடத்தில், இந்தத் திரைப்படத் தயாரிப்பாளர் குறிப்பிட்டார்.

நீச்சலாளர்கள் படமானது அகதிகள் நெருக்கடியின் கொடூரங்களை அழிக்கமுடியாத வகையில் சித்தரிக்கிறது. இது முற்றிலும் செல்லுபடியானதும் மற்றும் பாராட்டுக்குரியதாகும். எவ்வாறாயினும், மில்லியன் கணக்கான சிரியர்கள் ஏன் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்பதை ஆராய்வதற்கோ அல்லது பொறுப்பானவர்களின் பெயரைக் குறிப்பிடுவதற்கோ திரைப்படம் எந்த முயற்சியும் செய்யவில்லை. எல் ஹொசைனி 'மனிதாபிமான ஏகாதிபத்திய' பிரச்சாரத்தின் பொறியைத் தவிர்க்க விரும்பியிருக்கலாம், இது சிரியாவில் ஏற்பட்ட கொந்தளிப்பை பயன்படுத்தி அமெரிக்க மற்றும் மேற்கத்திய இராணுவத் தலையீட்டினை சட்டப்பூர்வமாக்கியது.

ஆயினும்கூட, பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்காமல் இருப்பது ஒரு மட்டுப்படுத்தலாகும். ஒபாமா நிர்வாகமும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அதன் கூட்டாளிகளும் ஆட்சி மாற்றத்தை இலக்காகக் கொண்ட ஒரு பெரிய பிரச்சாரத்தைத் தொடங்குவதற்காக 2011 இல் அசாத் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைப் பயன்படுத்தினர். WSWS  விளக்கியது போல், “சிஐஏ மற்றும் வாஷிங்டனின் பிராந்திய கூட்டாளிகளான வளைகுடா பெட்ரோ-மன்னர்கள், துருக்கி மற்றும் இஸ்ரேல் ஆகியவை அசாத்தை பதவி நீக்கம் செய்யும் பணியை நிறைவேற்ற, இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்கு அடுத்தடுத்து நிதியுதவி, பயிற்சிகள் அளித்து உதவினர். இந்த சுனி மத குறுங்குழுவாத சக்திகள், அவர்களில் சிலர் அல்-நுஸ்ரா முன்னணி போன்றவர்கள் அல்-கொய்தாவுடன் தொடர்புடையவர்கள் ஆவர். இவர்கள் 'புரட்சியாளர்கள்' என்று கேலிக்குரிய வகையில் புகழப்பட்டனர்.

சிரியாவில் இரத்தம் தோய்ந்த ஏகாதிபத்திய தலையீடு, மார்டினிஸ் சகோதரிகள் போன்ற மில்லியன் கணக்கானவர்களின் வெளியேற்றம் மற்றும் 400,000 க்கும் அதிகமான மக்களின் மரணம் உட்பட பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் 60 சதவீத மக்கள் மனிதாபிமான உதவிகளுக்கு உரித்தானவர்களாக இருக்கின்றனர். சிரியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 500,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் நீண்டகால ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளனர். பைடன் நிர்வாகம் அப்பிராந்தியம் முழுவதும் அமெரிக்க கொலைகாரக் கொள்கைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Loading