விக்கிரமசிங்கவின் பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவுக்கு எதிராக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாரிய போராட்டங்கள் நடைபெற்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவுக்கு (Anti-Terrorism Bill) எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாபெரும் ஹர்த்தாலினால் (வேலை நிறுத்தம் மற்றும் வணிக மூடல்) ஸ்தம்பிதமடைந்தன.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏப்ரல் 25 ஹர்த்தாலின் போது யாழ்ப்பாண வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. [Photo: WSWS]

உலக சோசலிச வலைத்தளம் முன்னர் எச்சரித்ததைப் போல,'மிகவும் பரந்த மற்றும் தெளிவற்ற இந்த மசோதா, எந்தவொரு அரசாங்க எதிர்ப்பு அரசியல் நடவடிக்கையும் பயங்கரவாதம் என்று வரையறுப்பதோடு' பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையும் விதிக்கப்படலாம்.

ஆனால், அவர்கள் “அரசாங்கத்தை தவறாக அல்லது சட்ட விரோதமாக நிர்ப்பந்திப்பது, எந்த ஒரு செயலையும் செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ, சட்டத்திற்குப் புறம்பாக அரசாங்கத்தை செயல்படவிடாமல் தடுப்பது” போன்ற விஷயங்களையும் அவர்கள் இதில் சேர்க்கலாம். இது சர்வதேச நிதி அமைப்புக்களின் சார்பில் செயல்படுத்தப்படும், பரந்த சமூக வெட்டுக்களுக்கு இருக்கும் வெகுஜன எதிர்ப்பை சட்டவிரோதமாக்குவதற்கான ஒரு தெளிவான முயற்சியாகும்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், சில பொதுத்துறை அலுவலகங்கள், தனியார் போக்குவரத்து சேவைகள் மற்றும் இதர வியாபார நிறுவனங்களை மூடும் நடவடிக்கையில் அனைத்து மாகாணங்களிலிருந்தும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். வழக்கறிஞர்கள் பற்றாக்குறையால் நீதிமன்றங்கள் செயல்பட முடியவில்லை. மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் முக்கிய நிர்வாக அலுவலகங்கள் மட்டுமே திறந்திருந்தன. வீதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுவதற்காக இலங்கை இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படை பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

1983 இல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிரான போரை கொழும்பு ஆரம்பிப்பதற்கு முன்பே, வடக்கு கிழக்கு மாகாணங்கள் பல தசாப்தங்களாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருந்து வருகின்றன.

பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அருகில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவார்கள் என்று முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், கொழும்பில் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், இந்த கொடூரமான நடவடிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை அரசாங்கம் ஒத்திவைத்துவிட்டது என்று சிறிய சாக்குப்போக்கைப் பயன்படுத்தி, திட்டமிட்ட போராட்டங்களை  நாசப்படுத்தியது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி உள்ளிட்ட ஒன்பது தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்த மதிப்பிழந்த முதலாளித்துவக் கட்சிகள், அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான அதிகரித்துவரும் தாக்குதல்களுக்கு எதிராக பெருகிவரும் கோபத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை ஆரம்பித்தன.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், 1979ல் இருந்து நடைமுறையில் இருந்துவரும், தொடர்ந்து கொழும்பு அரசாங்கங்களால் குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வரும் இழிபுகழ்பெற்ற பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) பதிலீடு செய்கிறது. இந்தக் கட்சிகள் பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்தாலும், அவர்கள் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரவில்லை. அத்தோடு, வடக்கில் புதிய சிங்களக் குடியேற்றங்களை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

விக்கிரமசிங்க ஆட்சியை நோக்கிய அணுகுமுறையைக் கொண்டிருக்கும் இந்த தமிழ் தேசியவாத குழுக்களுக்கு தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக உரிமைகள் பற்றிய எந்த தீவிரமான அக்கறையும் கிடையாது. இவர்களின் அரசியல் சூழ்ச்சிகள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் அரசியல் அதிகாரப் பகிர்வு மற்றும் தமிழ் உயரடுக்கிற்கான சலுகைகளைப் பெறுவதற்கு கொழும்பிற்கு அழுத்தம் கொடுப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பு ஆட்சியாளர்கள் மேற்கொண்ட 26 ஆண்டுகால யுத்தமானது, 1948ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான நடந்துவரும் தொடர்ச்சியான இனவாத பாகுபாட்டின் உச்சக்கட்டமாகும். இந்த யுத்தமானது, சிங்கள உயரடுக்கினால் தொழிலாள வர்க்கத்தை இன ரீதியாக பலவீனப்படுத்தவும், பிளவுபடுத்தவும் பயன்படுத்தப்பட்டது.

இரண்டு மாகாணங்களையும் நாசமாக்கி, பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றுதள்ளி, அவர்களை இடம்பெயர வைத்த இந்தப்போர், 2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. ஐ.நாவின் கூற்றுப்படி, இம் மோதலின் போது இலங்கை இராணுவத்தால் ஏராளமான போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதோடு, போரின் இறுதி வாரங்களில் குறைந்தது 40,000ம் தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இராணுவத்தால் 'காணாமல் ஆக்கப்பட்டுள்ள' நூற்றுக்கணக்கான மக்கள் பற்றிய தகவல்களை அரசாங்கமும் ஆயுதப் படைகளும் வெளியிட வேண்டும் என்று கோரி வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை இன்னும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கனக் கோரிக்கைகளை கொழும்பு ஆளும் வர்க்கம் இரக்கமற்ற வகையில் திணிப்பதுக்கு எதிராக அதிகரித்துவரும் கோபத்தின் மத்தியில் இந்த ஹர்த்தால் கடந்த 25ம் திகதி நடைபெற்றது.

கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூலை மாதங்களில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் பதவி நீக்கம் செய்த நாடு தழுவிய போராட்டங்கள் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களும் ஏழைகளும் இன வேறுபாடுகளைக் கடந்து சிங்கள மக்களுடன் ஐக்கியப்பட்டு போராட்டங்களை மேற்கொண்டனர். இந்த வருடம், மார்ச் 1 மற்றும் 15 ஆகிய தேதிகளில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களில் இதர தொழிலாளர்களுடன் இணைந்து போராடினர்.

ஹர்த்தால் நடைபெற்ற நாளன்று, முச்சக்கர வண்டி ஓட்டுநரான உதயன் என்பவர் WSWS இடம் பின்வருமாறு கூறினார்: “இந்த ஹர்த்தாலுக்கு நான் எனது ஆதரவை வழங்குகிறேன். பயங்கரவாத தடைச் சட்டத்தால் பல ஆண்டுகளாக நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம், மேலும் இந்த புதிய சட்டம் அனைத்து மக்களுக்கும் எதிராக பயன்படுத்தப்படும்.’’

பொதுப் போக்குவரத்து பேருந்து ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், ‘’அரச போக்குவரத்து சபை அதிகாரிகளால் நாங்கள் இன்று வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டோம், ஆனால், இந்த போராட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம். எவ்வாறாயினும், எங்கள் டிப்போவில் உள்ள தொழிற்சங்கங்கள், பல அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்திருப்பதால், இதுபோன்ற போராட்டங்களை ஆதரிக்கவில்லை. அதனால்தான் எங்களால் இந்த போராட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனது. இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த தமிழ்க் கட்சிகள் கூட அதைச் சரியாகத் திட்டமிட்டு ஒழுங்கமைக்கவில்லை’’என்று கூறினார்.

ஏப்ரல் 20 அன்று, கொழும்பில் ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்திய தொழிற்சங்க கூட்டுத் (TUC) தலைமையானது, ஏப்ரல் 25 அன்று பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவுக்கு எதிராக வேலையிடங்களுக்கு வெளியே நாடளாவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று அறிவித்தது. தேசிய வளங்களை தனியார்மயமாக்குவதை நிறுத்த வேண்டும், அநியாயமான வருமான வரி முறையை ஒழிக்க வேண்டும், மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று இந்தப் போராட்டங்களில் வலியுறுத்தப்படும் என்பதாக இருந்தது.

TUC என்பது பல தொழிற்சங்கங்களின் ஒரு கூட்டுக் கலவையாகும், இதில் நிறுவனங்களுக்கு இடையிலான தொழிலாளர் சங்கம் (ICWU), இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் (DOU) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) கட்டுப்பாட்டில் உள்ள அகில இலங்கை துறைமுக தொழிலாளர் சங்கம் (ACPWU) ஆகியவை அடங்கும். இதர முன்னணி உறுப்பினர்களில் அனைத்து தொலைத்தொடர்பு தொழிலாளர் சங்கம் (ATWU) மற்றும் இலங்கை தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்கம் ஆகியவையும் இந்த கூட்டுக் கலவையில் அடங்கும்.

நிறுவனங்களுக்கு இடையிலான தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் ஜே.வி.பியின் தலைவருமான வசந்த சமரசிங்க [Photo: WSWS]

உலக சோசலிச வலைத்தள நிருபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ICWU க்கும் மற்றும் ஜே.வி.பி. க்கும் தலைவராக இருக்கும் வசந்த சமரசிங்கவிடம் போராட்டம் ஏன் ரத்து செய்யப்பட்டது என்று கேட்டபோது, ஏப்ரல் 25 அன்று எந்த நடவடிக்கையும் திட்டமிடப்படவில்லை என்று கூறினார். இது அப்பட்டமான பொய். ஏப்ரல் 20 செய்தியாளர் சந்திப்பில் சமரசிங்க இந்த தேதியை பகிரங்கமாக அறிவித்தார்.

உலக சோசலிச வலைத் தளம் ATWU மற்றும் DOU இன் பொதுச் செயலாளர்களான ஜகத் குருசிங்க மற்றும் சந்தன சூரியாராச்சி ஆகியோரிடமும் இதே கேள்வியைக் கேட்டபோது, அரசாங்கம் பாராளுமன்றத்தில் பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை சமர்ப்பிக்க ஒத்திவைத்ததால் போராட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

“வடக்கு மற்றும் கிழக்கில் ஹர்த்தாலை நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டிருந்தோம், ஆனால் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததால் போராட்டத்தை ஒத்திவைத்தோம். அது முன்வைக்கப்படும் போது நாங்கள் இதனை செய்வோம்” என்று குருசிங்க மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை ஏப்ரல் 25 அன்று சமர்ப்பிக்கப்படும் என்று ஆரம்பத்தில் அறிவித்த நீதி அமைச்சர் விஜயதாச இராஜபக்ஷ, மக்களின் எதிர்ப்பின் பிரதிபலிப்பாக இது ஒத்திவைக்கப்பட்டது என்றும் 'அனைவரும்' முன்மொழிவுகளை சமர்ப்பித்த பிறகு, இது மாற்றங்களுடன் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.

'ஒத்திவைத்தல்' என்பது வெகுஜன எதிர்ப்பைத் தடம் புரள்வதை நோக்கமாகக் கொண்ட மற்றொரு அரசியல் சூழ்ச்சியாகும். சட்டத்தின் அனைத்து கடுமையான கூறுகளையும் தக்க வைத்துக் கொண்டு  செய்யப்படும் எந்தவொரு மாற்றங்களும் வெறும் ஒப்பனையாக மட்டுமே இருக்கும். சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக வளர்ந்து வரும் மக்கள் எதிர்ப்பை கொடூரமாக நசுக்குவதற்கு இலங்கையின் அரச இயந்திரத்தை வலுப்படுத்துவதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.

கடந்த வாரம், ஜனாதிபதி விக்கிரமசிங்க, கல்வியை 'அத்தியாவசிய சேவையாக' அறிவிப்பேன் என்று மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை புறக்கணிக்கும் பல்கலைக்கழக மற்றும் பள்ளி ஆசிரியர்களை அச்சுறுத்தினார். தொழில்துறை நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்த ஆசிரியருக்கும் சிறைத் தண்டனைகள் மற்றும் அபராதம் உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது.

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு ஏற்ப வேலைகள், மேம்பட்ட ஊதியங்கள் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைக் கோருவதற்கு நடவடிக்கை எடுத்து வரும் இலங்கைத் தொழிலாளர்களின் அதிகரித்து வரும் கோபம் குறித்து அரசாங்கமும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் அஞ்சுகின்றன. இலங்கை ஆளும் உயரடுக்கு அதன் அடக்குமுறை எந்திரத்தை வலுப்படுத்தி வரும் நிலையில், இந்த ஜனநாயக விரோத தாக்குதலை தோற்கடிக்க ஒரு தொழிலாள வர்க்க போராட்டத்தை தடுக்க தொழிற்சங்கங்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றன.

ஏப்ரல் 25 அன்று, ஜே.வி.பியின் சமரசிங்க ஒரு செய்தியாளர் கூட்டத்தில், தொழிற்சங்க கூட்டுத் தலைமையானது, வெளிநாட்டு தூதர்கள், ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு அதிகாரிகள், மனித உரிமை அமைப்புகள், எதிர்க்கட்சி நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் மற்றும் மதப் பிரமுகர்கள் ஆகியோரை சந்தித்து பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை  திரும்பப் பெறுவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் என்று கூறினார்.

தொழிற்சங்க கூட்டுத் தலைமை மற்றும் இலங்கையில் உள்ள ஏனைய தொழிற்சங்கத் தலைவர்கள் சிக்கன நடவடிக்கை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவைப் பற்றி மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களை முன்வைத்தாலும், அவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை ஆதரிக்கும் சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் JVP போன்ற கட்சிகளுடன் இணைந்துள்ளனர். இந்த எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை இரக்கமின்றி திணிப்பார்கள்.

ஆழமான நெருக்கடியில் சிக்கியுள்ள ஆளும் உயரடுக்கு, அதன் சர்வாதிகார நகர்வுகள் மற்றும் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்களை எந்த அழுத்தமும் மாற்றாது.

இதனால்தான் தொழிலாளர்கள் ஒவ்வொரு பணியிடத்திலும், தோட்டங்களிலும், முக்கிய பொருளாதார மையங்களிலும், கிராமப்புறங்களிலும் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும். இந்த நடவடிக்கைக் குழுக்களின் அபிவிருத்தியானது, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தொழிலாளர்கள், அதே போல் தெற்கில் உள்ள தொழிலாளர்கள், தமிழ் தேசியவாதிகள் மற்றும் சிங்கள உயரடுக்கின் இனவாத அரசியலை எதிர்ப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கும்.

தொழிலாளர்களின் கோரிக்கைகள் பின்வருமாறு உள்ளடக்கப்பட வேண்டும்: நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும்! பயங்கரவாத எதிர்ப்பு மசோதா வேண்டாம்! அவசரநிலை, அத்தியாவசிய சேவைகள் மற்றும் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறை சட்டங்களையும் ரத்து செய்! அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்! சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை இல்லை!

சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டை கட்டியெழுப்ப தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது. அத்தகைய மாநாடானது, வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான போராட்டத்தில் அவர்களின் அதிகார மையமாக செயல்படும். இந்த வழிகளில் அரசியல் ரீதியாகப் போராடுவதன் மூலம், தொழிலாள வர்க்கம் சர்வதேச சோசலிசத்திற்கான மாற்றத்தின் ஒரு பகுதியாக சமூகத்தை மறுசீரமைக்க உறுதிபூண்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்குத் தளத்தை தயார் செய்யும்.

Loading