விக்கிலீக்ஸ் வெளியீட்டாளர் ஜுலியன் அசான்ஜ் சிறைவைக்கப்பட்டு நான்கு வருடங்கள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகரும் வெளியீட்டாளருமான ஜுலியன் அசான்ஞ் லண்டனில் உள்ள ஈக்வடோர் துாதரகத்தில் இருந்து பலவந்தமாக இழுத்து வரப்பட்டு பிரிட்டிஷ் பொலிசாரால் கைது செய்யப்பட்டு ஏப்ரல் பதினோராம் திகதியுடன் நான்கு வருடங்கள் ஆகின்றன. அந்த நேரத்தில் இருந்து ஜுலியன் அசான்ஞ்,”பிரிட்டனின் குவான்டனாமோ விரிகுடா தடுப்பு முகாம்” என சிலரால் விவரிக்கப்படும் அதிகூடிய-பாதுகாப்பைக் கொண்ட பெல்மார்ஷ் சிறையில் தொடர்ந்தும் அடைத்து வைக்கபட்டுள்ளார்.

2019 ஏப்ரலில், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்திலிருந்து ஜூலியன் அசான்ஜ் இழுத்துச் செல்லப்படுகிறார் [Photo by Facebook]

பயங்கரவாதிகள் மற்றும் வன்முறைக் குற்றவாளிகளை தடுத்து வைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இடத்தில் அசான்ஜ் தொடர்ச்சியாக சிறை வைக்கப்பட்டிருப்பதன் காரணம், அவர் செய்த ஏதாவதொரு குற்றத்துக்காக குற்றவாளியெனத் தீர்மானிக்கப்பட்டதனால் அல்ல. அதன் ஒரே நோக்கம், அமெரிக்காவின் நாடு கடத்தும் கோரிக்கைக்கு வசதி செய்து கொடுப்பதே ஆகும். மனித உரிமைகள் குழுக்கள் இதை பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கொடிய தாக்குதல் என கண்டனம் செய்துள்ளன.

ஒரு ஊடகவியலாளராக அவர் செய்த ஒரே “குற்றம்” அமெரிக்க தலைமையிலான போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தி, உண்மையான தகவல்களை வெளியிட்டது மட்டுமே ஆகும். அது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க-நோட்டோ படுகொலையில் இருந்து சித்திரவதைகள் வரையிலான ஆயிரக்காணக்கான பொதுமக்கள் உயிரிழப்புகளை காட்டுகின்ற அமெரிக்க இராணுவத்தின் ஆவணங்களை உள்ளடக்கியுள்ளது. சர்வதேச சட்டத்தை முழுமையாக மீறிய இந்தக் குற்றங்களை அமெரிக்க அரசாங்கம் முடிமறைத்துவிட்டது.

இந்தப் பயங்கரமான செயல்களை அம்பலப்படுத்தியமைக்காக வாழ்நாள் சிறைவாசத்தை எதிர்கொள்ளும் ஒரே நபர் அசான்ஜ் மட்டுமே ஆவார். 

அசான்ஜ் கைது செய்யப்பட்ட காட்சிகள் உலகம் முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த ஊடகவியலாளர் பிரிட்டிஷ் பொலிசாரால் முரட்டுத்தனமாக பிடித்து இழுத்துவரப்பட்டது மட்டுமன்றி அவரின் உடல் நிலையும் குறிப்பிடத்தக்களவு சீரழிந்துள்ளது. அசான்ஜ் துாதரகத்தில் தங்கியிருந்த இறுதி ஆண்டுகளில், ஈக்வடோரிய துாதரகமானது ஒரு அகதியின் தங்குமிடத்துக்குப் பதிலாக நடைமுறைச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. அங்கு வேவு பார்ப்பு மற்றும் சூழ்ச்சிகளும் நடந்தன. இந்த சூழ்ச்சிகளில் விக்கிலீக்ஸ் வெளியீட்டாளரை கடத்துவது அல்லது படுகொலை செய்வதற்கான சாத்தியம் தொடர்பாக சி.ஐ.ஏ. நடத்திய கலந்துரையாடல்களும் அடங்கும் என்பது அப்போதே அம்பலத்துக்கு வந்திருந்தது. 

இந்தக் கைது கூட ஒரு குற்றம் ஆகும்.

ஒரு அரசியல் அகதியாக சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அசான்ஜின் தகமை, ஐக்கிய நாடுகள் சபையின் சம்பந்தப்பட்ட அமைப்புக்களால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்துள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்காவின் துாண்டுதலிலேயே அவர் கைது செய்யப்பட்டார். அந்த தூண்டுதல் அவரின் அகதி அந்தஸ்த்தின் அடிப்படைக்கே எதிராக இருந்தது. வலது-சாரி ஈக்வடோரிய அரசாங்கத்தால் அசான்ஜ் வெளியேற்றப்படுவதானது, தமது உயிருக்கும் சுதந்திரத்திற்கும் கடுமையான அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்ற ஒரு நாட்டுக்கு குறித்த புகலிடக் கோரிக்கையாளரை திரும்பவும் அனுப்புவதை தடுக்கின்ற நடைமுறையின் (non-refoulement) அடிப்படை கொள்கையை மீறுவதை இது குறிக்கின்றது.

இருந்தாலும், அசான்ஜ் குறைந்தபட்சம் துாதரகத்தின் சுவர்களுக்குள் பெறமுடியாதிருந்த மருத்துவ வசதிகளையும் சட்ட வசதிகளையும் அவரால் பெற முடியும், மற்றும் முன்னுதாரணங்களையும் சான்றாதாரங்களையும் கொண்ட சரியான சட்டச் செயன்முறையின் அடிப்டையில் வழக்குகள் நடந்தால், அவர் தோற்கமாட்டார் என்பது போன்ற மாயைகளை சிலர் கொண்டிருக்கலாம். 

எவ்வாறாயினும், அத்தகைய மாயைகள் தகர்ந்துபோயின. அசான்ஜின் நான்கு ஆண்டுகால சிறை வாழ்க்கையில் துஷ்பிரயோகங்களின் ஒரு பட்டியலே உள்ளது.

அசான்ஜ் தற்போது பெல்மார்ஸ் சிறைச்சாலையில் 1,460 நாட்களாக அடைக்கப்பட்டுள்ளார். இப்போது 51 வயதான அவர், ஜூலையில் 52 வயதை அடையும் நிலையில், அவர் தனது நடுநிலைவயது காலத்தின் 12 சதவீதத்தை சிறையில் கழித்துள்ளார். அவரது புகலிடக் காலத்தையும் சேர்த்துக்கொண்டால், பதினொரு ஆண்டுகாலம் அல்லது நடுநிலை வயது காலத்தில் சுமார் மூன்றில் ஒரு பகுதியில் அசான்ஜ் ஏதோ ஒரு வகையிலான சிறைவாழ்வையே கடத்தியிருக்கின்றார். 

பிரிட்டனில் அவரது தடுத்து வைப்பானது ஒன்றோடு ஒன்று தொடர்புபட்ட இரண்டு செயல்முறைகளால் பண்புமயப்படுத்தப்பட்டுள்ளது. அவை இரண்டுமே அசான்ஜை அழிப்பதற்கான அமெரிக்காவின் இலக்கை முன்நகர்த்துபவை ஆகும். முதலாவது, அசான்ஜின் சீரழிந்துவரும் உடல்நிலையை முற்றுமுழுதாக புறக்கணிப்பதாகும். இரண்டாவது, விக்கிலீக்ஸ் வெளியீட்டாளருக்கு எதிரான சட்டரீதியான பிரச்சாரத்தை மேம்படுத்துவதற்கு சாத்தியமான சகலதையும் செய்வதற்கு நீதித்துறை கொண்டுள்ள அர்ப்பணிப்பாகும்.

பிரபல மருத்துவ நிபுணர்கள் 2019ல், அசான்ஜின் உடல்நிலை மோசமடைகின்றமையால் அவர் சிறையில் மரணிக்கலாம் என முதன்முலாக பகிரங்கமாக எச்சரித்ததோடு அவரை உடனடியான விடுவிக்கக் கோரிக்கை விடுத்தனர். அதன்பின், அசான்ஜ் எந்தவொரு குற்றத்துக்காகவும் தண்டனை அனுபவிக்கவில்லை. மற்றும் அவர் பலவீமான, வன்முறையற்ற புத்திஜீவி என்ற உண்மை ஒருபுறம் இருக்க, பிரிட்டிஷ் நீதிமன்றங்கள் தொடர்ச்சியாக அவருக்கு பிணை கோரிய விண்ணப்பங்ளை நிராகரித்தன. 

அந்த முடிவுகளின் முற்றிலும் எதிர்பார்க்ககூடிய விளைவுகளால் அவரது உடல்நிலை மேலும் சீர்குலைந்தது. அவரது உறவினர்கள் மற்றும் வழிக்கறிஞர்களின் கூற்றுப்படி, தடுப்பு கம்பிகளுக்குப் பின்னால் அசான்ஜ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதோடு கோவிட்-19 தொற்றுக்குள்ளாகியதுடன் மேலும் மேலும் சுகயீனமடைந்தார். 

இவை மொத்தத்தில் எண்ணற்ற நீதித்துறை தாக்குதல்களுடன் கைகோர்த்துச் சென்றன. விடயத்தோடு தொடர்புடைய இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம், அரசியல் குற்றங்களுக்காக நாடு கடத்துவதை வெளிப்படையாகத் தடுத்தாலும் கூட, ஒற்றர் நடவடிக்கை சட்டத்தின் கீழும் அமெரிக்க அரசாங்கத்தை அம்பலப்படுத்திய ஆவணங்களை வெளியிட்டமைக்காக விக்கிலீக்ஸ் வெளியீட்டாளருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வெளிப்படையாக அரசியல் ரீதியானவையாக இருந்த போதிலும், அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான வேண்டுகோளுடன் ஐக்கிய இராச்சியம் முன்நகர்கின்றது.    

நாடு கடத்துவதற்கான அமெரிக்க வழக்குகள் குழம்பிப்போன போதிலும், “சட்டச் செயல்முறைகள்” தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதோடு அபிவிருத்தி செய்யப்படுகின்றன.  2012 ஜூனில் ஐஸ்லாந்தைச் சேர்ந்த குற்றவாளி என தீர்பபள்ளிக்கபட்ட சிகுர்துர் ”சிக்கி” தோடர்சன், தண்டனையில் இருந்து விலக்களிப்பு பெறுவதற்கு பிரதியுபகாரமாக அசான்ஜிக்கு எதிராக தான் கொடுத்த வாக்குமூலம் பொய் என்பதை ஏற்றுக்கொண்டார். 

ஒப்புக்கொள்ளப்பட்ட அந்தப் பொய்கள், நியாயத்துக்குப் புறம்பாக, இன்னமும் அமெரிக்க குற்றப்பத்திரிகையினுள் இருக்கின்றன. மதிப்பிற்குரிய பிரித்தானிய நீதிபதிகள், தாம் நியாயம் வழங்கப் போகின்ற குற்றப்பத்திரிகையானது பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொய்களை உள்ளடக்கிய நம்பகத்தன்மை அற்றது என்ற உண்மையை சாதாரணமாக புறக்கணித்துள்ளனர்.

பின்னர் 2021 செப்டம்பரில், யாகு செய்திகள் (Yahoo News) ஒரு விரிவான விசாரணை அறிக்கையை வெளியிட்டது. முப்பதுக்கும் மேற்பட்ட தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகளின் அடிப்படையில், சந்தேகத்தின் நிழல் கூட இல்லாமல், ட்ரம்ப் நிர்வாகமும் சி.ஐ.ஏ.யும் லண்டனில் அசான்ஜை சட்டவிரோதமாக கடத்துவது அல்லது படுகொலை செய்வது குறித்து கலந்துரையாடி திட்டமிட்டதை நிரூபித்தது. இந்தப் நடவடிக்கையின் செய்முறையில், வழக்கறிஞர்களுடனான அவரின் இரகசிய கலந்துறையாடல்களையும் மருத்துவர்களுடனான தனிப்பட்ட ஆலோசனைகளையும் அவர்கள் விரிவாகக் கண்காணித்துள்ளனர்.

அசான்ஜிக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டு, இத்தகைய சட்டவிரோத மற்றும் குண்டர் கும்பல் வகையிலான திட்டங்களை பலப்படுத்துவதற்கு மட்டுமே வரையப்பட்டது.

இவற்றில் ஏதேனும் ரஷ்யாவிலோ அல்லது சீனாவிலோ நடந்திருந்தால், கூட்டுத்தாபன பத்திரிகைகள் மேற்கத்தைய அரசியல்வாதிகளுடன் சேர்ந்து, அதை ஒரு இழிவான ஜோடிப்பு மற்றும் அரசியல் துன்புறுத்தலாக கண்டிப்பதில் தயக்கம் காட்டியிருக்கப் போவதில்லை. ஆனால், அதற்குப் பதிலாக, அசான்ஜின் தடுப்புக்காவல் தொடர்வதோடு, நாடு கடத்துவதற்கான வாய்ப்பு இன்னும் நெருக்கமாகிறது. 

இதிலிருந்து திட்டவட்டமான படிப்பினைகளை கற்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த அடுக்குளால் வீரம்மிக்க மற்றும் கொள்கைப் பிடிப்பான நபராகப் பாரக்கப்படும் விக்கிலீக்ஸ் வெளியீட்டாளருக்கு ஆதரவுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால், அந்த ஆதரவு அடிநிலையில் உள்ளதோடு அவரின் சுதந்திரத்துக்காகப் போராடும் ஒரு வெகுஜன இயக்கத்தின் வடிவத்தை அது இன்னும் பெறவில்லை.

சந்தேகத்துக்கு இடமின்றி, பெருநிறுவன ஊடகங்களின் பொய்கள், இருட்டடிப்பு மற்றும் மிகப் பெரும்பாலும் மௌனமும் இதற்கு பங்களிப்பு செய்துள்ளன. 

ஆனால் ஒரு திட்டவட்டமான அரசியல் முன்னோக்கும் பொறுப்பையும் பகிர்ந்து கொள்கின்றது. கடந்த நான்கு ஆண்டுகளாக, உத்தியோகபூர்வ விக்கிலீக்ஸ்-ஆதரவிலான பிரச்சாரமானது, முதலாளித்துவ அரசியல்வாதிகள் மற்றும் ஏனைய முன்னணி நபர்களுடனான பின்கதவு பேச்சுவார்த்தைகளிலேயே கவனம் குவித்திருந்தது. அமெரிக்காவில் ட்ரம்ப்  முதல் பைடன் வரையும் பிரிட்டனில் ஜோன்சன் மற்றும் தொழிற்கட்சிக்காரர்கள் என கிட்டத்தட்ட ஒவ்வொரு அரசாங்கத்திற்கும், தலைவர்களுக்கும் பரிதாபகரமான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவில், கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற் கட்சி அரசாங்கமானது அதன் பழமைவாத முன்னோடியில் இருந்து வேறுபட்டு ஒரு துன்புறுத்தப்பட்ட அவுஸ்திரேலிய குடிமகனை பாதுகாக்கும் என்ற மாயைகள் ஊக்குவிக்கப்பட்டன.  

ஆனால் அந்த மாயைகள் தகர்த்தெறியப்பட்டுள்ளன அல்லது தகர்த்தெறியப்பட்டிருக்க வேண்டும். சகல அரசாங்கங்களும் உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகளும் அசான்ஜை துன்புறுத்துவதற்கு வெளிப்படையான ஆதரவை வழங்கியுள்ளன அல்லது மறைமுகமாக உடந்தையாக இருக்கின்றன. இது சட்டத்துக்குப் புறம்பான பழிவாங்கல் என அம்பலப்படுத்தப்பட்ட போதும் கூட, அவரின் மீதி உயிர்வாழ்வை சி.ஐ.ஏ. நிலவறைக்குள் தள்ளுவதை நோக்கமாகக் கொண்ட ”சட்டச் செயல்முறைக்கு” தமது மரியாதையை பிரகடனம் செய்கின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த வழக்கின் அரசியல் உள்ளடக்கம் மிக மிகத் தெளிவாகியுள்ளது. அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் முயற்சியானது, கடந்த கால சட்டவிரோதப் போர்களை அசான்ஜ் அம்பலப்படுத்தியதற்கான பழிவாங்கல் மட்டும் கிடையாது. இது அமெரிக்கா மற்றும் உலக ஏகாதிபத்தியமும் தயாரித்து வரும் புதிய மற்றும் இன்னும் பெரிய குற்றங்களுக்கு எதிராக வளரும் பரவலான விரோதத்தை அச்சுறுத்தி நசுக்கும் முயற்சி ஆகும்.

அசான்ஜின் பிரிட்டிஷ் சிறைவாசத்தின் கால் பகுதி, உக்ரேன் போருடன் பொருந்திப் போகிறது. வாசிங்டனால் எரியூட்டி, தயார்படுத்தி மற்றும் தொடங்கி வைக்கப்பட்ட இந்த மோதல், இப்போது சர்ச்சைக்கிடமின்றி ஒரு பக்கம் அமெரிக்காவும் நேட்டோவும் மறுபக்கம் ரஷ்யாவுக்கும் இடையே நடக்கும் ஒரு பினாமிப் போராக உருவெடுத்திருக்கிறது. இந்த மாதம்தான் இணையத்தில் கசிந்த ஆவணங்கள், அமெரிக்கத் துருப்புகள் உக்ரேன் நிலப்பகுதியில் இருப்பதையும், அது நேரடியாக போரை வழி நடத்துவதையும் காட்டுகின்றன.

இது ஒரு பூகோளப் போராக வளர்ச்சியடைகின்ற யுத்தத்தின் ஒரு முன்னரங்கு மட்டுமே ஆகும். அசான்ஜைப் பாதுகாக்க மறுக்கின்ற தொழிற் கட்சி அரசாங்கத்தின் ஆதரவுடன், பைடன் நிர்வாகம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்தின் பிரதான அச்சுறுத்தலாக பார்க்கப்படுகின்ற சீனாவுடான ஒரு நேரடி மோதலுக்கான நீண்டகால திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

இருபதாம் நுாற்றாண்டைப் போலவே, யுத்த நகர்வுடன் அடிப்படை ஜனநாயக உரிமைகள் ஒத்துப்போகவில்லை. மற்றும் அது தவிர்க்கமுடியாமல் போலி-வழக்குகள், பழிவாங்குதல் மற்றும் அரசியல் துன்புறுத்தல்களுடன் பிணைந்துள்ளது.

ஆனால் இலங்கையில் இருந்து பிரான்ஸ் வரை மற்றும் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் வெடிக்கும் எழுச்சிகளுடன், சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தின் அபரிமிதமான வளர்ச்சியின் நிலைமைகளின் கீழேயே இந்த போர் கட்டவிழ்ந்து வருகின்றது. புரட்சிகரத் தாக்கங்களைக் கொண்ட இந்த வளர்ந்துவரும் உலக இயக்கம், முதலாளித்துவ சிக்கன நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்துக்கு மட்டுமன்றி, போருக்கு எதிரான போராட்டத்திற்கும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான அடிப்படையாகும். 

அசான்ஜையும் சிவில் விடுதலையையும் பாதுகாப்பவர்கள், வளர்ந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வெகுஜனப் போராட்டங்களின் பக்கம் திரும்ப வேண்டும். கீழ் மட்டத்தில் இருந்தான ஒரு வெகுஜன இயக்கத்தில் இருந்து நெருக்கப்பட்டால் மட்டுமே அரசாங்கங்கள் அசான்ஜை விடுவிக்கும். உலக சோசலிச வலைத் தளமும்  சோசலிச சமத்துவக் கட்சியும் வளர்ந்துவரும் போராட்டங்களில் அசான்ஜின் பிரச்சினையை எழுப்பவும், போராட்டத்தில் நுழையும் தொழிலார்களின் பதாகையில் அவரின் விடுதலைக்கான போராட்டத்தை உள்ளடக்கி ஊக்குவிக்கவும் முடிந்த அனைத்தையும் செய்யும்.

கெர்ஷ்கோவிச்சை விடுதலை செய், ஜூலியன் அசான்ஜ் மீதான கொடூர துன்புறுத்தலை நிறுத்து

அவர்களுக்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்தது? நியூ யோர்க் டைம்ஸ், கார்டியன் இறுதியில் அசான்ஜின் விடுதலைக்கு அழைப்பு விடுக்கின்றன

Loading