இலங்கை அரசாங்கம் பெட்ரோலிய தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு எதிராக இராணுவத்தையும் பொலிஸாரையும் நிலைநிறுத்தியுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

விக்கிரமசிங்க அரசாங்கம் முழு தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு கூர்மையான எச்சரிக்கையாக, கடந்த வாரம் சில்லறை எரிபொருள் துறையில் தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோலியத் தொழிலாளர்கள் முன்னெடுக்கும் வேலைநிறுத்தத்தை முறியடிக்க, ஆயிரக்கணக்கான ஆயுதமேந்திய இராணுவத்தினரையும் பொலிஸாரையும் நிலை நிறுத்தியது. அமைச்சரவையின் தனியார்மயமாக்கல் முடிவானது, அரசாங்கம் திணித்துவரும் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு ஏற்ப எடுக்கப்பட்டதாகும்.

பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் கொழும்பு கோட்டையில் 8 பெப்ரவரி 2023 அன்று நடத்திய ஆர்ப்பாட்டம். [Photo: WSWS]

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் வரயைறுக்கப்பட்ட இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனையங்களிலும் (CPSTL) தொழிலாளர்கள் செவ்வாய்கிழமை மாலை வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தனர். எரிபொருள் நிரப்பவும் விநியோகிக்கவும்  தொழிலாளர்கள் மறுத்ததால், தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

விக்கிரமசிங்க, எரிபொருள் விநியோகத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஆயிரக்கணக்கான விசேட அதிரடிப்படை உறுப்பினர்களையும் பொலிஸாரையும் அனுப்பியதன் மூலம் பதிலளித்தார். பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்தை விட்டு வெளியேறும் பெட்ரோல் தாங்கிகளை கனமாக ஆயுதம் ஏந்திய படையினர் பாதுகாப்பதையும், நிரப்பு நிலையங்களில் எரிபொருளை விநியோகிப்பதையும் தொலைக்காட்சிகள் காட்டின.

இலங்கை பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கம்-பெட்ரோலியம் (SLPPEU-P) தலைவர் பந்துல சமன் குமார, தொழிற்சங்க நடவடிக்கையை உடனடியாக கைவிட்டார். ஆயுதபாணி சிப்பாய்கள் 'பெற்றோலிய தொழிலாளர்களை மிரட்டுகிறார்கள்,' தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று 'அவர்களை வேலைக்குத் திரும்பும்படி' கட்டாயப்படுத்துகிறார்கள் என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

வேலைநிறுத்தம் செய்த 20 பெட்ரோலியத் தொழிலாளர்களை, பெரும்பாலும் தொழிற்சங்கத் தலைவர்களை அரசாங்கம் கட்டாய விடுமுறையில் அனுப்பியது. மார்ச் 29 அன்று, பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனைய சேவை வளாகங்களும் வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு 'தடைசெய்யப்பட்ட வலயங்களாக' அறிவிக்கப்படும் என்றும் ஏனைய ஊழியர்களை வேலைக்கு வரவேண்டும் என்றும் அறிவித்து பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் கடிதம் அனுப்பினார்.

ஒரு செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய பெட்ரோலிய அமைச்சர் கஞ்சன விஜேசேகர, 'எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த பாதுகாப்புப் படைகளை அழைத்ததாக' கூறியதுடன் பெற்றோலிய கூட்டுத்தாபன நிர்வாகமும் சட்ட அமலாக்க முகவர்களும் வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு எதிராக 'ஒழுங்கு மற்றும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்றும் கோரினார்.

பெட்ரோலியத் தொழிலாளர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் வேலைநிறுத்த முறியடிப்பு முயற்சியானது, அனைத்து இலங்கைத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் மட்டுமன்றி, அதன் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் நசுக்குவதற்கான அதன் ஈவிரக்கமற்ற உறுதிப்பாட்டை மீண்டும் நிரூபிப்பதும் ஆகும். சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தொழிலாள வர்க்கத்திற்கு அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்க்கவும், பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சேமிப்பு முனையங்களில் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளைப் பாதுகாக்கவும் அழைப்பு விடுக்கின்றது.

கடந்த ஆண்டு தொடர்ச்சியான ஜனநாயக விரோத சூழ்ச்சிகள் மூலம் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக உயர்த்தப்பட்டார். உள்ளூர் மற்றும் சர்வதேச நிதிய மூலதனத்தால் கோரப்படும் சமூக சேவைகள், வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான செலவுக் குறைப்பு தாக்குதல்களை இரக்கமின்றி சுமத்துவேன் என்பதை அவர் ஆரம்பத்தில் இருந்தே தெளிவுபடுத்தினார்.

ரணில் விக்கிரமசிங்க [Photo by United National Party Facebook]

கடந்த வாரம், பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சர்வதேச நாணய நிதியமானது இலங்கை அரசாங்கத்திற்கு நான்கு ஆண்டுகளில் 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடனுக்கு ஒப்புதல் அளித்தது. சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் அதன் சிக்கன கோரிக்கைகளை 'கொடூரமான பரிசோதனை' என்று விவரித்தது.

பெட்ரோலியத் தொழிலாளர்கள் மீதான வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் தாக்குதல், தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. தனது ஆட்சிக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பின் எழுச்சியை எதிர்கொண்டுள்ள விக்கிரமசிங்க, அனைத்து தொழிலாள வர்க்க எதிர்ப்பையும் நசுக்க தனது நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரங்களைப் பயன்படுத்துகிறார். வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களைத் தடைசெய்ய கடுமையான அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை (EPSA) பயன்படுத்தி வரும் அவர், மார்ச் 9 அன்று நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தலை இரத்து செய்தார்.

மார்ச் 22 அன்று, பேர்போன பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) பதிலீடு செய்வதற்காக அரசாங்கம் ஒரு புதிய 'பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை' அறிவித்தது. பயங்கரவாத தடைச் சட்டத்தை விட அடக்குமுறையான புதிய சட்டம், இலங்கை அரசாங்கத்தையும், வேறு எந்த நாட்டு அரசாங்கத்தையும் அல்லது சர்வதேச அமைப்புகளையும் விமர்சிக்கும் எந்தவொரு செயலையும் அல்லது அறிக்கையையும் 'பயங்கரவாதம்' என வரையறுக்கும் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் 'கொடூரமான பரிசோதனைக்கு' தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் காட்டும் அனைத்து எதிர்ப்புகளும் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட உள்ளன.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கத் தலைமையின் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறையை சோசலிச சமத்துவக் கட்சி பகிரங்கமாக கண்டிக்கிறது. ஆனால் தொழிலாளர்கள் தங்கள் வேலைகள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாக்க அல்லது அரசாங்கத்தின் ஜனநாயக விரோதத் தாக்குதல்களை எதிர்த்துப் போராட தொழிற்சங்கங்கள் மீது நம்பிக்கை வைக்க முடியாது என்று எச்சரிக்கிறோம். அரசாங்கத்தின் வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் தாக்குதலுக்கு மற்றும் அதன் புதிய, மேலும் அடக்குமுறையான சட்டங்களுக்கு, தொழிற்சங்க அதிகாரத்துவம் காட்டும் பிரதிபலிப்பு இந்த முதலாளித்துவ சார்பு சங்கங்களின் வங்குரோத்து தன்மையை அம்பலப்படுத்துகிறது.

இலங்கை பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கம்-பெட்ரோலியம் சங்கத்தின் தலைவர் குமார, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை இராணுவம் அச்சுறுத்துவது பற்றி புகார் செய்த போதிலும், வேலைநிறுத்தத்தை முறியடிக்க இராணுவத்தை அனுப்புவதை சவால் செய்யத் தவறிவிட்டார் அல்லது பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சேமிப்பு முனைய வளாகங்களில் இருந்து படையினர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் எனக் கூட அவர் கோரவில்லை.

அவர் உட்பட, கட்டாய விடுமுறை அறிவிப்புகள் வெளியிடப்பட்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய குமார, அரசாங்கத்திற்கு தொழிற்சங்கம் தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.

“இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு நாங்கள் உழைத்துள்ளோம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, அரசாங்கத்திற்கு எதிரான சதி எங்களிடம் இல்லை” என்று அவர் அறிவித்தார். அவரது தொழிற்சங்கமானது விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு அடித்தளமாக இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) கட்சியுடனேயே இணைந்துள்ளது.

குமார வஞ்சத்தனமாக அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் கொள்கைகளை மூடிமறைக்க முயன்றார். 'ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. இன் கொள்கை தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதல்ல' என்று அவர் கூறிய போதிலும், தொழிற்சங்கம் 'அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டது' என்று கபடத்தனமாக வலியுறுத்தினார். தனியார்மயமாக்கலை எதிர்க்கும் குமாராவின் கூற்று போலியானது. பல ஆண்டுகளாக அவர் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார்மயமாக்கும் அரசாங்கத் திட்டங்களுக்கு விசுவாசமான ஆதரவாளராக இருந்து வருகிறார்.

கடந்த அக்டோபரில், பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார்மயமாக்கல் மீதான பாராளுமன்ற விவாதத்தின் போது, தொழிலாளர்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த பெட்ரோலிய தொழிற்சங்கத் தலைமை ஒரு குறுகிய எதிர்ப்பு வேலைநிறுத்தத்தை நடத்தியது. பிரதானமாக தொழிற்சங்க அலுவலர்கள் பங்குபற்றிய இந்த தொழிற்சங்க நடவடிக்கை சில மணிநேரங்களுக்குப் பிறகு கைவிடப்பட்டது.

பாராளுமன்றம் மசோதாவை நிறைவேற்றும் என்பதால் 'வேலைநிறுத்தத்தை தொடர்வது மற்றும் சேவைகளை சீர்குலைப்பது பிரயோசமனாது அல்ல' என குமார கூறினார். அதை தோற்கடிக்க தொழிற்சங்கங்கள் 'மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கும்' என்று அவர் பொய்யாகக் கூறினார்.

ஏனைய அனைத்து பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களும், சாதாரண தொழிலாளர்களின் பெரும் எதிர்ப்பை மீறி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனியார்மயமாக்கலுக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன. தொழிலாளர்கள் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை கோரும் போதெல்லாம், தொழிற்சங்கங்கள் எந்தவொரு நடவடிக்கையையும் குறுகிய, இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்புகளுக்கே மட்டுப்படுத்துகின்றன.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைவர்களில் ஒருவரும் இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளருமான ரஞ்சன் ஜெயலால், புதன்கிழமை அரசாங்கத்திற்கு எதிராக வெற்று வாய்ச்சவடால் அச்சுறுத்தலை விடுத்தார். 'நாங்கள் உங்களை கட்டாய விடுமுறையில் அல்ல, உங்களையும் [அரசாங்கத்தில்] உள்ள அனைவரையும் வீட்டிற்கே அனுப்புவோம், என்று நாங்கள் எரிசக்தி அமைச்சரிடம் கூறுவோம்,' என்று அவர் அறிவித்தார்.

'தொழிற்சங்கங்கள் நடத்திய தொடர்ச்சியான போராட்டத்தின் காரணமாகவே' எண்ணெய், மின்சாரம், தபால், வங்கி மற்றும் துறைமுகம் ஆகிய துறைகளில் அரசாங்கத்தின் கட்டுப்பாடு இன்னும் வரையறுக்கப்பட்ட வடிவத்தில் உள்ளது என்றும்  ஜெயலால் பொய்யாகக் கூறினார்.

இது, அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களால் அரச நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டமை மற்றும் அரச முதலீடுகளை திரும்பப் பெற்றமைக்கும் ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்களும் ஆற்றி வரும் பங்கை மூடிமறைக்கும் நோக்கத்தில் கூறப்படும் பொய்யாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்துடன் எந்த அடிப்படை முரண்பாடுகளும் கொண்டிராத ஜே.வி.பி., விக்கிரமசிங்க ஆட்சிக்கு எதிராக அதிகரித்து வரும் வெகுஜன எதிர்ப்பைப் பயன்படுத்தி மற்ற முதலாளித்துவக் கட்சிகளுடன் சேர்ந்து தனது சொந்த அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கிறது. ஜே.வி.பி. தேர்ந்தெடுக்கப்பட்டால், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை ஈவிரக்கமின்றி செயல்படுத்தும்.

இலாப அமைப்பைப் பாதுகாத்து, ஆளும் உயரடுக்குடன் முறையாக ஒத்துழைக்கின்ற சகல தொழிற்சங்கத் தலைமைகளதும் வெற்றுப் பேச்சுக்களை தொழிலாளர்கள் புறக்கணிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு, முந்தைய இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான ஏப்ரல்-ஜூன் வெகுஜன எழுச்சியின் போது, தொழிற்சங்கங்கள் அனைத்து தொழிலாள வர்க்க எதிர்ப்பையும் பாராளுமன்ற எதிர்க்கட்சியின் பின்னால் கட்டிப்போட்டு திசை திருப்பிவிட்டதுடன், விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதற்கான வழியைத் திறந்துவிட்டு, தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீதான கொடூரமான சமூகத் தாக்குதல்களை தீவிரப்படுத்த வழிவகுத்துள்ளன. .

சோசலிச சமத்துவக் கட்சி, இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் சுயாதீனமாக தங்களுடைய சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைத்து, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அவர்களது அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இலங்கை அரசதுறை தொழிலாளர்களும், தொழிலாள வர்க்கத்தின் ஏனைய அனைத்து பிரிவினரும் தங்களுடைய சொந்த நடவடிக்கை குழுக்களை ஸ்தாபித்துக்கொண்டு, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாநாட்டிற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கிற்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக தொழிலாள வர்க்கத்தினதும் கிராமப்புற ஏழைகளினதும் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்திற்கு அத்தகைய மாநாடு அடித்தளம் அமைக்கும்.

ஒவ்வொரு வேலைத் தளத்திலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு! இலங்கை அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஐக்கியப்பட்ட போராட்டத்தை கட்டியெழுப்ப போராடு!

இலங்கைக்கான தனது திட்டம் ஒரு 'கொடூர பரிசோதனை' என்று சர்வதேச நாணய நிதியம் அறிவிக்கிறது

வேலைநிறுத்தம் செய்யும் இலங்கை ஆசிரியர்களின் உரிமையைப் பாதுகாத்திடு!

Loading