இலங்கை ஜனாதிபதி ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தை தடை செய்கின்ற அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை அமுல்படுத்த அச்சுறுத்துகின்றார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த வியாழன் அன்று, சகல ஆசிரியர்களுக்கும் எதிராக, வேலை நிறுத்த-விரோத அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை (EPSA) பயன்படுத்த அச்சுறுத்தியுள்ளார். இந்த தாக்குதலானது, இலங்கை முழுவதிலும் இருந்து வந்து சுமார் 500 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கொழும்பில் நடத்திய போராட்டத்துக்கு மறுநாள் நடத்தப்பட்டது.

அரசாங்கம் ஆசிரியர் இடம் மாற்ற சபையை கலைத்தமைக்கு எதிராக 22 மார்ச் 2023 அன்று கொழும்பில் இடம்பெற்ற  இலங்கை ஆசிரியர்களின் போராட்டம் [Photo: WSWS]

புதன்கிழமை காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நடைபெற்ற போராட்டமானது ஆசிரியர்கள் இடமாற்ற சபையை அரசாங்கம் ஜனநாயக விரோதமான முறையில் கலைத்துவிட்டதற்கு எதிராக அழைக்கப்பட்டது. இந்த தீர்மானமானது சுமார் 12,000 ஆசிரியர் அதிபர்களின் இட மாற்றத்தை பாதித்துள்ளது.

விக்கிரமசிங்க தனது வேலைநிறுத்த-விரோத அச்சுறுத்தலை கொழும்பு சங்கமித்த பெண்கள் பாடசாலையில் ஆற்றிய உரையின் போது விடுத்தார். அவர், பாடசாலை பிள்ளைகளை பல்வேறு குழுக்கள் பணையக் கைதிகளாக்குவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என அறிவித்தார். கல்வி என்பது பாடசாலையில் இருந்து வர வேண்டிய முன்மாதிரி ஆகும். பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் முன்னுதாரணத்தை உருவாக்க வேண்டும்” என விக்கிரமசிங்க கூறினார்.

பரீட்சைகள் நடத்துவது உட்பட முழுமையான கல்வியை வழங்குவதற்கு “இடையூறு” அல்லது “குழப்பம்” ஏற்படுத்த முடியாது எனத் தொடர்ந்த ஜனாதிபதி, ஆசிரியர்களின் போராட்டங்கள் தொடருமாயின் தனது அரசாங்கம் கல்வியை “அத்தியாவசிய சேவையாக“ ஆக்கும் என எச்சரித்தார்.

விக்கிரமசிங்கவின் அச்சுறுத்தலானது, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளை அமுல்படுத்த அரச ஒடுக்கு முறைகளைப் பயன்படுத்த அரசாங்கம் தயங்காது என்பதை தெளிவாக்குகின்றது. இது வெறுமனே ஆசிரியர்களுக்கு மாத்திரமன்றி முழுத் தொழிலாள வர்க்கத்துக்குமான ஒரு எச்சரிக்கை ஆகும்.

பெப்ரவரி 28 அன்று, அரசாங்கம் பேருந்து, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து உட்பட இலங்கையின் துறைமுகம் மற்றும் போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் கீழ் கொண்டுவந்துள்ளது.

பல மாதங்களுக்கு முன்பே, சுகாதாரம். பெற்றோலியம் மற்றும் மின்சாரத் துறைகள் மீது அத்தியாவசிய சேவை சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

மார்ச் 22 அன்று நடைபெற்ற ஆசிரியர்களின் போராட்டமானது இலங்கை ஆசிரியர்கள் சங்கம், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்த இலங்கை ஆசிரியர்கள் சேவைகள் சங்கம் மற்றும் அனைத்து இலங்கை ஒன்றினைந்த ஆசிரியர்கள் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், “ஆசிரியர்களின் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம்!” ”ஜனாதிபதியின் முறையற்ற தலையீட்டை எதிர்த்திடு” போன்ற பதாகைகளை ஏந்தியிருந்தார்கள். 

போராட்டக்காரர்கள் காலி முகத்திடல், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி இல்லம் மற்றும் நிதியமைச்சை நோக்கி ஊர்வலம் செல்வதை தடுப்பதற்கு, கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பின்பற்றி, பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் இருந்து கட்டளையை பெற்றுக்கொண்டனர். இந்த கட்டளையானது சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தரால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது.

வழமையான பலத்த பொலிஸ் பிரசன்னத்துடன், அரசாங்கமானது பிரதானமாக வலது-சாரி மத்தியதர வர்க்க சக்திகள் மற்றும் ஒடுக்கப்பட்ட அடுக்களில் இருந்து திரட்டப்பட்ட சுமார் 50 ஆத்திரமூட்டல்காரர்களைக் கொண்ட இரண்டு குழுக்களை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. 

”பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான கூட்டணி” என தங்களை அழைத்துக்கொண்ட அந்தக் குழுக்கள், கல்வியைச் சீர்குலைப்பதாக குற்றம் சாட்டி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். “[இலங்கை ஆசிரியர் சங்க தலைவர்] ஜோசப் ஸ்டாலின், கல்வியை அழித்த தந்தை”, ”செயலாளர் ஜோசப் ஸ்டாலினை விரட்டியடி”, ”சீர்குலைக்கும் ஆசிரியர்களின் வேலை நிறுத்தங்களை நிறுத்து” மற்றும் ”பிள்ளைகளின் கல்வி உரிமை மீது கை வைக்காதே” போன்ற சுலோகங்களை அவர்கள் எழுப்பினர். 

”பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான கூட்டணியின் செயலாளர் இன்திக இராஜபக்ஷ ஊடகங்களிடம் பேசுகையில் “இந்த தருணத்தில் ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் அவசியம் அற்றது. பிள்ளைகளின் கல்வி மூன்று வருடங்களாக சீர்குலைக்கப்பட்டுள்ளது,” என்றார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஸ்டாலின், இந்த ஆத்திரமூட்டலானது ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத் தயாரிப்பாளரும் தற்போதைய பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சருமான வஜிர அபேவர்தனவால் துாண்டிவிடப்பட்டது என ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஜனாதிபதியின் ”கைக்கூலி” என அபேவர்தனவை கண்டித்த ஸ்டாலின், ஆசிரியர்களின் போராட்டமானது இந்த அமைப்புக்களால் சீர்குலைக்கப்படாது என்றார்.

ஆசிரியர்களுக்கு எதிரான விக்கிரமசிங்கவின் போலியான கருத்துக்களும் அவர் அரசாங்க ஆத்திரமூட்டல்காரர்களை அணிதிரட்டியதும், தொழிலாளர் வர்க்கத்தின் வளர்ந்துவரும் போாட்டங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு அரசாங்கம் தயாராகி வருவதை காட்டுகின்றது. ஆசிரியர்கள், அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கும் சிவில் உரிமைகள் மீதான அதன் தாக்குதலுக்கும் எதிராக, தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐக்கியப்பட்ட போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினர்களுடன் ஒன்றிணைய வேணடும்.

கொழும்பில் 22 மார்ச் 2023 அன்று இடம்பெற்ற இலங்கை ஆசிரியர்களின் போராட்டத்தின் ஒரு பகுதி. [Photo: WSWS]

அவர்களின் வாய்வீச்சுப் பேச்சுகள் ஒருபுறம் இருக்க, புதன்கிழமைப் போராட்டத்தை ஏற்பாடு செய்த இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், மற்றும் அனைத்து இலங்கை ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கத்தினதும் தலைவர்கள், அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வரக்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட அணிதிரள்வைத் தடுக்க தொடர்ந்து செயற்பட்டனர்.

2021 இன் பிற்பகுதியில் தொடங்கி, சுமார் 200,000 ஆசிரியர்கள் சம்பள் உயர்வு கோரி 100 நாள் வேலை நிறுத்தத்தை நடத்தினர். இது, முன்னாள் இராஜபக்ஷ அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளையும் மீறியே மேற்கொள்ளப்பட்டது. ஆசிரியர்களின் இந்த துணிச்சலான மற்றும் போர்க்குணமிக்க போராட்டம் தொழிற்சங்கங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டது. அவர்கள், ஆசிரியர்கள் கோரிய சம்பள உயர்வில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே வழங்குவதற்கு அரசாங்கம் உறுதியளித்ததைத் தொடரந்து, வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நிர்ப்பந்தித்தனர்.

இலங்கையின் ஏனைய தொழிற்சங்க இயக்கத்துடன் இணைந்து ஆசிரியர் சங்கத் தலைமையானது இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான வெகுஜன எழுச்சியை தடம்புரளச் செய்ய உதவியது. அவர்கள். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி போன்ற பாராளுமன்ற எதிர்க்கட்சிகளால் அழைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்துக்கான முன்மொழிவுகளின் பின்னால் இந்த இயக்கத்தை திசை திருப்புவதில் முக்கிய பங்கு வகித்தன.  இதுவே இராஜபக்ஷ திணிக்க முயன்ற திட்ட நிரலை முன்னெடுத்துச் செல்லும் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு வழி வகுத்தது.

ஆசிரியர்கள், தொழிற்சங்கங்களில் இருந்தும் அனைத்து முதலாளித்துவ கட்சிகளில் இருந்தும் சுயாதீனமாக, நடவடிக்கை குழுக்களை அமைப்பதன் மூலம். ஒழுக்கமான ஊதியம், வேலை நிலைமைகள் மற்றும் உயர் தரத்திலான கல்விக்கான நிதி அதிகரிப்புக்குமான போராட்டத்தை தங்களின் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) அரசியல் முன்முயற்சியில் உருவாக்கப்பட்ட ஆசிரியர்கள்-மாணவர்கள்-பெற்றோர்கள் நடவடிக்கை குழுவானது, அரசாங்கத்தின் அதிகரித்துவரும் தாக்குதல்களுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஐக்கியப்படுத்தப் போராடுகின்றது. இது ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கத் தயாராக உள்ளது.

சோ.ச.க., தீவு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் சுயாதீன நடவடிக்கை குழுக்களின் அடிப்படையில், ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டைக் கட்டியெழுப்ப ஒரு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. இது சோசலிச கொள்கைகளுக்காக அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டத்தில் ஒரு முதல் படியாகும். இந்தப் போராட்டத்தில் சோ.ச.க உடன் இணையுமாறு ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் பேசினர்.

கொழும்பு பாடசாலை ஒன்றின் ஆங்கில ஆசிரியர் ஒருவர், இடமாற்றச் சபை கலைக்கப்பட்டமையானது தனது பாடசாலை ஆசிரியர்களை எவ்வாறு பாதித்தது என விளக்கினார். “ஆசிரியர்கள், மனிதாபிமான அடிப்படையிலேயே இடமாற்றம் கேட்டுள்ளனர். ஆனால் சிலரது எதேச்சதிகாரமான செயற்பாடுகளால் இவை இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. அதற்கு நியாயம் பெறவே ஆசிரியர்கள் இன்று இங்கு வந்துள்ளனர். அரசாங்கத்தின் எதேச்சதிகாரமான ஆசிரியர் இடமாற்றங்களை தடுப்பது பற்றி நாம் பேச வேண்டும்.“

“நானும் இடமாற்றம் கேட்டுள்ளேன். ஆனால், அது நிறுத்தப்பட்டுள்ளது. நான் பத்து வருடங்களாக கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்றேன் அத்தோடு கொழும்பிற்கு உள்ளேயே எனது இடமாற்ற கோரிக்கை இருந்தது. எனது பாடசாலையில் பத்து ஆண்டுகளை நிறைவு செய்த அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் உள்ளனர்” என அந்த ஆசிரியர் மேலும் கூறினார்.

“பாடசாலைக்கு வரும் பிள்ளைகள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள். தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர்களுக்கு எவ்வளவு செலவாகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்” என அவர் தெரிவித்தார். 

கொழும்பிற்கு தெற்காக 27 கிலோ மீற்றர் துாரத்தில் உள்ள பாணந்துரவில் சுமங்கல பெண்கள் பாடசாலையில் 17 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒரு விஞ்ஞான ஆசிரியர் தெரிவிக்கையில், “தற்போதைய இடம் மாற்றப் பிரச்சினையால், நான் பாதிக்கப்படவில்லையாயினும், நானும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்தேன். காரணம், இது கொள்கை சம்பந்தப்பட்டது. ஆசிரியர்களின் இடம் மாற்ற உரிமை மீறலானது சர்வதேச மூலதனத்துடன் சேர்ந்து சர்வதேச நாணய நிதியம் முன்னெடுக்கும் பாரிய தாக்குதல்களின் ஒரு பாகமாகும்” என அவர் தெரிவித்தார்.

அவர், அரசாங்கத்தால் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற சமூகத் தாக்குதல்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை கீழறுக்கும் முயற்சியில் ஆத்திரமூட்டல்காரர்களை ஏற்பாடு செய்ததை கண்டித்தார். அரசாங்கம் போக்கற்றவர்களின் குழுக்களைக் கொண்டு இந்தப் போராட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருகின்றது,” என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் போராட்டத்தின் மூன்று மாத அனுபவம்

இலங்கையில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய வேலைநிறுத்தத்தில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்

ஒவ்வொரு வேலைத் தளத்திலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு! இலங்கை அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஐக்கியப்பட்ட போராட்டத்தை கட்டியெழுப்ப போராடு!

Loading