இலங்கை அரசாங்கம் IMF இன் சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதால் பொருளாதார அழிவு மோசமடைகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

விக்கிரமசிங்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்ட நிரலைத் தொடர்ந்து திணித்து வருவதால், இலங்கையில் தொழிலாள வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பேரழிவு நிலைமை மோசமடைந்து வருகிறது. சர்வதேச நிதி மூலதனத்திற்கு நாடு செலுத்தத் தவறிய கடன்களை செலுத்துவதற்கு, 2.9 பில்லியன் டொலர் சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு கடனைப் பெறுவதற்கான முன் நிபந்தனையாகவே இந்த நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுகின்றன.

இலங்கையின் தலைநகர் கொழும்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 8 பெப்ரவரி 2023 புதன்கிழமை, சிக்கன கொள்கை உரையை ஆற்றுவதற்காக பாராளுமன்றத்திற்கு வந்த போது. நடுவில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இருக்கிறார். [AP Photo/Eranga Jayawardena]

மார்ச் 7 அன்று, பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து முன்நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளதாகவும் மார்ச் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் கடனுக்கான நிறைவேற்று சபையின் ஒப்புதலைப் பெற எதிர்பார்த்துள்ளதாகவும் பெருமையடித்தார். இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்திய கடந்த 16 தடவைகள் போல் அல்லாமல், இம்முறை சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளில் இருந்து அரசாங்கம் தடம்மாற முடியாது என்று அவர் எச்சரித்தார். இது, அரசாங்கம் அதன் சமூகத் தாக்குதல்கள் சம்பந்தமான அனைத்து வெகுஜன எதிர்ப்பையும் நசுக்குவதில் உறுதியாக உள்ளது என்று தொழிலாள வர்க்கத்திற்கு விடுக்கும் ஒரு தெளிவான அச்சுறுத்தலாகும்.

சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு கடன் நான்கு வருட காலத்திற்குள் வழங்கப்படும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது. சர்வதேச நாணய நிதியம் கடனுதவிக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, நிதி நிறுவனங்கள் மற்றும் இருதரப்பு கடன் வழங்குபவர்களிடமிருந்து 7 பில்லியன் டொலர்களை பெற அரசாங்கம் எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவித்தார். கடந்த ஏப்ரலில் இலங்கை அரசு கடன் தவணை தவறியதால் அரசாங்கம் இருதரப்பு, பலதரப்பு மற்றும் வணிகக் கடன்களுக்காகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தடை ஏற்பட்டது.

சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளில், மத்திய வங்கியின் 'சுதந்திரம்', பொது நிறுவனங்கள் 'மறுசீரமைப்பு', பொது வருவாயை அதிகரிப்பது மற்றும் பொது செலவினங்களை 'கட்டுப்படுத்துதல்' ஆகியவை அடங்கும் என்று விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கூறினார்.

மத்திய வங்கியின் 'சுதந்திரம்' பற்றிய அவரது குறிப்பு என்னவென்றால், வங்கியானது சர்வதேச நாணய நிதியத்தின் நேரடி முகவராக வேலை செய்ய வேண்டியிருப்பதோடு கொழும்பு அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக வட்டி விகிதங்களை தொடர்ந்து அது உயர்த்த வேண்டும் என்பதுமாகும்.

மார்ச் 12 அன்று, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் நீடிக்கப்படும் என்று எச்சரித்தார். 'இலங்கை இப்போது முந்தைய நீடித்து நிலைக்க முடியாத மாதிரியிலிருந்து விலகி, ஒரு புதிய பொருளாதார மாதிரிக்கு மாறிக் கொண்டிருக்கிறது,' என்று கூறிய அவர், 'எனினும், இது கதையின் முடிவு அல்ல. விஷயங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று பலர் நினைக்கிறார்கள். இல்லை, இது ஒரு புதிய பயணத்தின் ஆரம்பம்,” என்றும் மேலும் விளக்கினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க, அரசாங்கம் மின்சாரம், எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்தும் அதேவேளை, உழைக்கும் மக்கள் மீது அபரிமிதமான வரியை உயர்த்தியுள்ளதுடன் உரங்கள் உட்பட மானியங்களை வெட்டிக் குறைக்கிறது. உழைக்கும் மக்களை மேலும் ஏழைகளாக்கும் அதே வேளை, அரசாங்கம் அற்பமான 'சமூக பாதுகாப்பை' வழங்க உள்ளது. அதுவும் ஏழைகளிலும் ஏழைகளுக்கு மட்டுமேயாகும்.

மத்திய வங்கி அதிக வட்டி விகிதங்களை பராமரிப்பதாலும் ரூபாயானது சந்தை மாற்று விகிதங்களை பிரதிபலிக்க அனுமதிப்பதாலும் பணவீக்கம் இன்னும் 50 சதவீதத்திற்கு மேலேயே இருக்கின்றது. இந்த நடவடிக்கைகள் பொருளாதாரத்தின் தீவிரமான சுருங்குதலுக்கு வழி வகுத்து, தொழில்களையும் தொழிலாளர்களின் ஊதியத்தின் உண்மையான மதிப்பையும் அழிக்கின்றன. வெளிநாட்டு நாணய கையிருப்பானது வெளிநாட்டுக் கடன்களை செலுத்த பயன்படுத்தப்படுவதுடன், மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை சீரழித்துள்ளன.

2022 ஆம் ஆண்டில் குறைந்து வரும் உணவு உற்பத்தி மற்றும் பணவீக்கம் காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து குடும்பங்களில் 59 வீதமானவற்றுக்கு தேவையான அளவு உணவை பூர்த்தி செய்ய இயலவில்லை என்று துபாயில் சமீபத்தில் அமெரிக்க சோயா பீன் ஏற்றுமதி கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு அறிவித்துள்ளது. சுமார் 28 சதவீதம் அல்லது 6.3 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டனர்.

கடந்த மாதம், இலங்கை மருத்துவ சங்கமானது, நாட்டின் சுகாதாரத் துறை அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இல்லாததால், 'ஒட்டுமொத்த பொறிவை' நோக்கிச் செல்கிறது என்று எச்சரித்தது.

உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் உட்பட அனைத்து உள்ளீடுகளின் அதிக விலை மற்றும் பெருவணிகத்தின் நலனுக்காக அவர்களின் உற்பத்திக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அற்ப விலையினாலும் கிராமப்புற விவசாயிகள் பேரழிவை எதிர்கொள்கின்றனர்.

சுயதொழில் செய்யும் தொழிலாளர்கள் உட்பட பெரும்பாலான சிறு மற்றும் நுண் வர்த்தகங்களும் வட்டி விகிதங்கள், உள்ளீடுகளின் பற்றாக்குறை மற்றும் வானளாவிய செலவுகளாலும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

வட்டி விகிதங்கள் குறைக்கப்படாவிட்டால் நாட்டின் 'நுகர்வோர் சந்தை ஏப்ரல் மாதத்திற்குள் 60 வீதத்தால் சுருங்கிவிடும்' என இந்த மாத தொடக்கத்தில் இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தக கூட்டமைப்பு எச்சரித்தது. மார்ச் மாதம், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கை மத்திய வங்கி வட்டி விகிதங்களை 100 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தியது.

ஒரு ஆய்வின்படி, 2015 இல் நிலவிய நுகர்வு அளவைத் தக்கவைத்துக்கொள்ள உழைக்கும் மக்களின் வருமானம் 160 சதவிகிதம் அதிகரிக்கப்பட வேண்டும். வேறுவிதமாகக் கூறினால், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கை நிலைமைகள் 2015 உடன் ஒப்பிடும்போது 160 சதவிகிதம் சுருங்கிவிட்டது.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஒட்டுமொத்த பொருளாதாரம் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 8 சதவீதத்திற்கு சுருங்கியதுடன் இந்த ஆண்டு சுருக்கம் 3 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் ஏனைய பிரதான மத்திய வங்கிகளின் வட்டி வீத அதிகரிப்பு, அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வு, அதீத இறக்குமதி வரிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மீதான ஏனைய மறைமுக வரிகளும் இலங்கையின் பொருளாதாரச் சுருக்கத்திற்கு பங்களித்துள்ளதுடன், அதன் பணவீக்க விகிதங்கள் தொடர்ந்து உயர்வதையும் உறுதிப்படுத்தியுள்ளன.

பொருளாதார சுருக்கமானது அந்நிய நாணயத்துக்கான கேள்வி குறைவதையும், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சமீபகாலமாக ஓரளவு உயர்ந்ததையும் கண்டுள்ளது. இது 'பொருளாதார மீட்சிக்கான' அறிகுறியாகவும் தனது கொடூரமான சிக்கனத் திட்டமே 'சரியான பாதை' என்றும் காட்டுவதற்கு உடனடியாக அரசாங்கத்தால் பற்றிக்கொள்ளப்பட்டது.

எவ்வாறாயினும், ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்திருப்பது தற்காலிகமானது என்று ஃபிச் மதிப்பீடு (Fitch Ratings) வலியுறுத்தியுள்ளது. 'உலகளாவிய நாணய நிலைமைகளை இறுக்குவதன் மூலம் இலங்கை ரூபாவும் அழுத்தத்திற்கு உள்ளாகலாம்' என்று ஃபிட்ச் கூறியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரூபாய் 20 சதவீதம் சரிவடையும் என்று அது கணித்துள்ளது.

கொழும்பு இன்னும் கடுமையான சமூக நடவடிக்கைகளை திட்டமிடுகிறது. அரச துறை ஊதியம் மற்றும் ஓய்வூதிய செலவை வெட்டுதல், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை வணிகமயமாக்குதல் மற்றும் தனியார்மயமாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். அரசாங்கம் ஏற்கனவே அரச வேலைக்கான ஆட்சேர்ப்புகளை முடக்கியுள்ளது, ஓய்வூதிய வயதைக் குறைத்துள்ளது, சுயவிருப்பு ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் அரச ஊழியர்கள் வெளிநாட்டிலோ அல்லது தனியார் துறையிலோ வேலை செய்வதற்காக நீட்டிக்கப்பட்ட ஊதியமற்ற விடுமுறையை எடுக்க அனுமதித்துள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தனவின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை தனது வெளிநாட்டுக் கடனில் 2.6 பில்லியன் டொலர்களை பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு செலுத்த வேண்டும்.

2029 ஆம் ஆண்டு வரை இலங்கை வருடாந்தம் சராசரியாக 6 முதல் 7 பில்லியன் டொலர் வரை வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று விக்கிரமசிங்க கூறியுள்ளார். உலகளாவிய நிதி மூலதனத்தின் நேரடி முகவராகச் செயல்படும் ஒரு ஆட்சியால் உழைக்கும் மக்கள் மீது கடுமையான சமூகத் தாக்குதல்கள் திணிக்கப்படவுள்ளது என்பதை இது தெளிவாக்குகிறது.

பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்தை வாயளவில் மட்டுமே விமர்சிக்கின்றன. அவற்றின் கண்டனங்கள் போலியானவை மற்றும் அதிகரித்து வரும் வெகுஜன எதிர்ப்பை அரசியல்ரீதியாக சுரண்டிக்கொள்வதை நோக்கமாகக் கொண்டவை.

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக 15 மார்ச் 2023 அன்று ஹோமாகமவில், ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் [Photo: WSWS]

கடந்த ஆண்டு இறுதியில் தொழிலாள வர்க்கம் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கியது. மார்ச் 15 அன்று, நாடு முழுவதிலும் இருந்து அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த சுமார் அரை மில்லியன் தொழிலாளர்கள், அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைக்கு எதிராகவும் வேலைநிறுத்தங்களை தடுக்கும் அத்தியாவசிய சேவை உத்தரவுகளை மீறியும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் இணைந்துகொண்டனர். இந்த வளர்ந்து வரும் இயக்கம் பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் காணப்படும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி பெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்க, தொழிற்சங்கங்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில், அவை அவற்றை ஒரு நாள் நிகழ்வுகளுக்கு மட்டுப்படுத்தின. பாராளுமன்றத்தில் உள்ள  எதிர்க்கட்சிகளைப் போலவே, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுடன் தொழிற்சங்கங்களுக்கு அடிப்படை வேறுபாடுகள் எதுவும் கிடையாது. மேலும்  பாராளுமன்ற எதிர்க்கட்சிகளின் தேர்தல் திட்டங்களுடன் தொழிலாளர்களை கட்டிப்போட அவை முயற்சிக்கின்றன.

அரசாங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் அனைத்தும் தொழிலாள வர்க்கத்தின் சீற்றம் கடந்த ஆண்டு கோட்டாபய இராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றிய இயக்கத்தைப் போன்ற ஒன்றுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சுகின்றன. கடந்த ஆண்டு இராஜபக்ஷவுக்கு எதிரான வெகுஜன எழுச்சியில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுள்ள விக்கிரமசிங்க, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு எதிராக பொலிஸ், இராணுவம் மற்றும் அத்தியாவசிய சேவை உத்தரவுகள் உட்பட கொடூரமான சட்டங்கள் போன்ற அரச இயந்திரத்தை பயன்படுத்துகிறார்.

2023 பெப்ரவரி 8 ஆம் திகதி கொழும்பு கோட்டைக்கு அருகில் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவப் படையினர் சிலர். [Photo by Facebook Malainadu ]

இந்த முதலாளித்துவ தாக்குதலை எதிர்கொள்வதற்கு, தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த மூலோபாயம் அவசியமாகும். இதற்கு, தொழிலாளர்கள் தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு வேலைத் தளத்திலும், தொழிற்சாலைகளிலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியிலும், அவர்களது சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் நடவடிக்கைக் குழுக்களில் இருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கின்றது. சோசலிசக் கொள்கைகளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். இது தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு இலங்கை தொழிலாள வர்க்கம் பிராந்தியத்திலும் பூகோள ரீதியிலும் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுவது அவசியமாகும். இந்த முன்னோக்கிற்கான போராட்டத்தை முன்னெடுக்குமாறு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

ஒவ்வொரு வேலைத் தளத்திலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு! இலங்கை அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஐக்கியப்பட்ட போராட்டத்தை கட்டியெழுப்ப போராடு!

அரசாங்கத்தின் கொடூரமான சிக்கனவெட்டு தாக்குதல்களுக்கு எதிரான வேலைநிறுத்தத்திற்கு ஆதரவை அணிதிரட்டுவோம்! ஜனாதிபதியின் கொடூரமான அத்தியாவசிய சேவை உத்தரவுகளை நீக்கு! சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவோம்!

ஆழமடைந்து வரும் கடன் மற்றும் நாணய நெருக்கடிகள் ஏழை நாடுகளைத் தாக்குகின்றன

Loading