அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாளர்களின் வளர்ந்து வரும் போராட்டங்களை நசுக்குவதில் இலங்கை தொழிற்சங்கங்களின் துரோக பாத்திரம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளின் எழுச்சி அலை, விக்கிரமசிங்க ஆட்சி மற்றும் முதலாளித்துவ அரசுடன் ஒரு பெரிய மோதலுக்கு வழிவகுக்கும் என்று தொழிற்சங்கங்கள் அஞ்சுகின்றன.

மார்ச் 1 அன்று, தீவு முழுவதிலும் உள்ள அரசாங்க மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த அரை மில்லியன் தொழிலாளர்கள் அரசாங்கத்தின் சமூகத் தாக்குதல்களுக்கு எதிராக தொழிற்துறைப் போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டபோது இது மிகவும் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டது. வேலைநிறுத்தத்திற்கு எதிரான அத்தியாவசிய சேவை உத்தரவுகளை மீறியே இந்த போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையில் கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கு வெளியே புதிதாக அதிகரிக்கப்பட்ட வருமான வரிக்கு எதிராக இலங்கை துறைமுக ஊழியர்கள் 1 மார்ச் 2023 புதன்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டம். [AP Photo/Eranga Jayawardena]

வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் எழுச்சி அலைகள், கடந்த ஆண்டு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றிய போராட்டங்களை மீண்டும் வெளிப்படுத்தி, விக்கிரமசிங்க ஆட்சியுடனும் முதலாளித்துவ அரசுடனும் பெரும் புரட்சிகர மோதல்களுக்கு இட்டுச் செல்லும் என்று தொழிற்சங்கங்கள் பீதியடைந்துள்ளன.

நேற்று செய்தியாளர் கூட்டமொன்றில் பேசும்போது, அரசாங்கத்தின் சமூகத் தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்காக ஒருங்கிணைந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளை தாம் அடக்கி வைத்துக்கொண்டிருப்பதாக, சுகாதார தொழில் வல்லுநர்களின் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தனது கவலைகளை வெளிப்படுத்தினார்.

“ஒவ்வொரு சுகாதார ஊழியர்களும் ஒரே குரலில் நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என கோரியுள்ளனர் [ஆனால்] அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் என்ன நடக்கும்? நம்மால் அதை செய்ய முடியாது என்று யாராவது நினைக்கிறார்களா? இல்லை எம்மால் அதை செய்ய முடியும்,” என்று குமுதேஷ் கூறினார்.

“கூட்டுப் போராட்டத்தில் பங்கேற்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தால், அனைவரும் வீதிக்கு வருவார்கள். இதுபோன்ற வேலைநிறுத்தத்தை எங்களால் செய்ய முடியாது என்று கூறி நாங்கள் மக்களை அடக்கி வைத்திருக்கிறோம்,'' என அவர் அறிவித்தார்.

ரவி குமுதேஷ் [Photo: WSWS]

குமுதேஷின் கருத்துக்கள், தொழிலாளர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக ஒன்றுபட்ட நடவடிக்கையை விரும்புகிறார்கள் என்பதை மட்டுமன்றி, அவர்களின் கோரிக்கைகள் தொழிற்சங்கங்களால் வேண்டுமென்றே நசுக்கப்படுகின்றன என்பதையும் தெளிவாக ஒப்புக்கொள்கின்றார். தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் அதே வேளை, இந்த போராட்ட நடவடிக்கைகளை ஒரு நாள் அல்லது அரை நாள் வேலைநிறுத்தங்களுக்கு மட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றன. இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் எப்போதும் ஒரு பிரச்சினைக்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்படுகின்றன. மார்ச் 1 அன்று, குமுதேஷின் தொழிற்சங்கமானது ஏனைய சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து, போராட்ட நடவடிக்கையை நான்கு மணி நேர வேலைநிறுத்தத்திற்குள் மட்டுப்படுத்தியது.

அதேபோல், சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளனமும் தொழிலறிஞர்களை உள்ளடக்கிய பெரும்பாலான தொழிற்சங்கங்களும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ஊதியத்தை கடுமையாக பாதித்துள்ள அரசாங்கத்தின் புதிய பிற்போக்கு ஊதியத்தை ஒத்த வரி (PAYE) விகிதங்களை மையமாகக் கொண்டே போராட்டங்களை ஏற்பாடு செய்கின்றன.

கடந்த நவம்பர் வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய வரி விகிதங்கள், சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட கொடூரமான கோரிக்கைகளில் ஒன்றாகும். மறுசீரமைப்பு, தனியார்மயமாக்கல் மற்றும் பல்லாயிரக்கணக்கான அரசதுறை வேலைகளை அழித்தல், ஊதியம் மற்றும் மேலதிக நேர வேலையை வெட்டுதல், மின் கட்டண அதிகரிப்பு மற்றும் பல்வேறு சமூக மானியங்களை நீக்குதலும் இந்த சிக்கன நடவடிக்கைகளில் அடங்கும்.

தொழிற்சங்கங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து ஊதியத்தை ஒத்த வரி விதிப்புகளை பிரித்தெடுப்பது தற்செயலானது அல்ல. இது சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு இந்த தொழிற்சங்கங்களதும் அவை சார்ந்துள்ள கட்சிகளதும் ஆதரவுடன் இணைந்ததாகும். கடந்த ஜூன் மாதம், அப்போதைய அரசாங்கம் சிக்கனத் திட்டத்தைத் திணிக்க வேண்டும் என்று கோருவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று கொழும்புக்கு விஜயம் செய்தபோது, தொழிற்சங்கங்கள் சில வெளிப்படையாகவும் மற்றவை மௌனமாகவும் அதற்கு ஒப்புக்கொண்டன.

குமுதேஷ் சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைகளுக்கு வெளிப்படையாக வக்காலத்து வாங்குபவர் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. குமுதேஷ், கடந்த ஜூன் மாதம் உலக சோசலிச வலைத் தளத்திற்கு அளித்த பேட்டியில், அவசர நிதிக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை 'தனிப்பட்ட முறையில்' ஆதரிப்பதாகக் கூறிய அதே நேரம். கடுமையான நிபந்தனைகள் இணைக்கப்படும் என்பதையும் ஒப்புக்கொண்டார்.

அதன் உறுப்பினர்களின் அழுத்தத்தின் கீழ், இலங்கை வங்கி ஊழியர் சங்கம் (இ.வ.ஊ.ச.) புதன்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இ.வ.ஊ.ச. தலைவர் சன்ன திசாநாயக்க, 'அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலளிக்கவில்லை என்றால், இ.வ.ஊ.ச. மற்றும் பல துறைகளில் உள்ள தொழிற்சங்கங்கள் வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஏற்கனவே முடிவு செய்துள்ளன' என்று சவடாலாகக் கூறினார்.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டின் தொடக்கத்தில், இலங்கை 'சாத்தியமான வங்கித் துறை நெருக்கடியை' எதிர்கொண்டுள்ளதாக த மோர்னிங் பத்திரிகையிடம் கூறிய திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

வரி அதிகரிப்பை ரத்து செய்யக் கோருவதற்குப் பதிலாக, தொழிற்சங்கங்கள் இப்போது விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் 'நியாயமான வரி' முறைக்காக கெஞ்சுகின்றன. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும் (GMOA) பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பும் (FUTA) இவ்வாறு வேண்டுகோள் விடுப்பதில் முன்னணியில் உள்ளன.

ஏனைய சுகாதார தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும், புதனன்று தொழில்துறை போராட்டத்தை நான்கு மணி நேர வேலைநிறுத்தத்திற்கு மட்டுப்படுத்தியது. அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே, 'அரசாங்கம் எங்களை தொடர்ந்து புறக்கணித்தால், மார்ச் 8 ஆம் திகதிக்குப் பிறகு எந்த நேரத்திலும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை நாங்கள் தொடங்குவோம்,' என்று ஊடகங்களுக்கு கூறினார்:

எவ்வாறாயினும், இந்த அச்சுறுத்தல்கள் சில ஒப்பனை மாற்றங்களைச் செய்ய அரசாங்கத்திற்கு விடுக்கும் அவநம்பிக்கையான வேண்டுகோள்களாகும். அவை, தொழிலாளர்களுக்கு காட்டுவதற்காக ஏதாவது தொழிற்சங்கங்களுக்கு கொடுக்கப்படாவிட்டால், வரப்போகும் அமைதியின்மையை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது என்ற எச்சரிக்கையும் ஆகும்.

மார்ச் 1 அன்று தொழிற்சங்கத் தலைவர்கள் ஒன்றிணைந்த நடவடிக்கையைத் தடுப்பதற்கு எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. கடந்த மாதம், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்பு அகில இலங்கை பொதுத் துறைமுக ஊழியர் சங்கம் (ACGPEU), வரி நடவடிக்கைகள் மாற்றியமைக்கப்படாவிட்டால், மார்ச் 1 அன்று துறைமுகங்களில் வேலைநிறுத்தம் செய்யப்படும் என்று அரசாங்கத்தை அச்சுறுத்தியது. இருப்பினும், புதன் அன்று, அதன் வேலைநிறுத்த அச்சுறுத்தல் 'ஒத்துழையாமை' போராட்டத்துக்கு கீழிறக்கப்பட்டது.

அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகள் வேலைநிறுத்தத் தடைக்கு சரணடைந்ததை நியாயப்படுத்த, இலங்கை பொதுத் துறைமுக ஊழியர் சங்க செயலாளர் நிரோஷன் கோரகன, “துறைமுக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால், கொழும்பு துறைமுகத்தில் பல்வேறு இயந்திரங்களை இயக்குவதில் பயிற்சி பெற்ற ஒரு குழுவை அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டிருந்தது,' என்று ஒரு விசித்திரக் கதையை உருவாக்கினார். கோரக்கனாவின் திரிக்கப்பட்ட தர்க்கத்தின்படி, தொழிற்சங்கத்தின் 'ஒத்துழையாமை' நடவடிக்கை அரசாங்கத்தின் வேலைநிறுத்தத்தை முறிக்கும் திட்டங்களை 'தோற்கடித்ததுவிடும்'! என்பதாகும்.

இந்த வார தொடக்கத்தில், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுப்பது மிகவும் கடினம் என்பதை தொழிற்சங்கங்கள் உணர்ந்தபோது, புதனன்று என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைப் பற்றி அவை தங்கள் உறுப்பினர்களை இருட்டில் வைத்திருந்தன. கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள், மார்ச் 1 அன்று என்ன நடவடிக்கை திட்டமிடப்பட்டது என்பதை அறிய விரும்பி, தொழிற்சங்கத்தை அணுகியபோது, தொழிற்சங்கத் தலைமைத்துவத்தால் அவர்கள் கண்டிக்கப்பட்டு மௌனமாக்கப்பட்டனர், என உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்திருந்தனர்.

அதேபோன்று, இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பானது (JTUACEB) மார்ச் 1 நடவடிக்கையை 'சுகயீன விடுமுறை' எதிர்ப்புக்கு மட்டுப்படுத்தியது.

இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் [Photo: WSWS]

ஜே.வி.பி.யின் முன்னணி உறுப்பினரான இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால், பெப்ரவரியில் நடந்த வேலைநிறுத்தத்தின் போது, ஏப்ரல் மாதத்திற்குள் விக்கிரமசிங்க வரிக் கொள்கையை விலக்கிக்கொள்ளவில்லை என்றால், “நாங்கள் அரசாங்கத்தை விரட்டியடிப்போம். அரசாங்கத்திற்கு ஒரு பொது வேலைநிறுத்தம் தேவைப்பட்டால், நாங்கள் அதை செய்வோம். இந்த மோதல் வெற்றியுடன் முடிவடையும் என்பது உறுதி,” என்று அறிவித்தார்.

கோரகன மற்றும் ஜெயலாலின் சூழ்ச்சிகளும் வெற்று தோரணைகளும் சர்வதேச நாணய நிதியத்தின் முழு வேலைத்திட்டத்திற்கும் அர்ப்பணித்துக்கொண்டுள்ள ஜே.வி.பி.யின் வெளிப்படையான முதலாளித்துவக் கொள்கைகளுடன் ஒத்துப்போகின்றன.

புகையிரதம், தபால் திணைக்களங்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களதும் தொழிற்சங்கங்கள் புதன்கிழமை தேசிய நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாகக் கூறிக்கொண்டாலும், அவை தங்கள் உறுப்பினர்களை வேலைநிறுத்தத்திற்கு அழைக்க மறுத்து, அதற்குப் பதிலாக மட்டுப்படுத்தப்பட்ட போராட்டங்களை நடத்தின. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள், தங்கள் உறுப்பினர்களை கறுப்பு ஆடை அல்லது கருப்பு பட்டி அணிந்து வேலைக்கு வருமாறு கேட்டுக் கொண்டன.

கடந்த ஆண்டு இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன எழுச்சியின் போதும் இந்த தொழிற்சங்கங்கள் இதே பாத்திரத்தை ஆற்றின. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு வெளியில் வெகுஜனப் போராட்டங்களில் சேரத் தொடங்கிய பின்னரே, ஏப்ரல் 28, மே 6 மற்றும் 10 ஆகிய திகதிகளில், தொழிற்சங்கங்கள் ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்தன. மேலும், இந்த வேலைநிறுத்தங்கள், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. போன்ற பாராளுமன்ற எதிர்கட்சிகளால் பிரேரிக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திற்கான -அதாவது ஒரு மாற்று முதலாளித்துவ அரசாங்கத்திற்கான- கோரிக்கைகளுக்கு இந்த வெகுஜன இயக்கத்தை திசை திருப்பிவிடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.

இவ்வாறு, முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) போன்ற போலி-இடது அமைப்புகளால் ஆதரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், வெகுஜன இயக்கத்திற்கு துரோகம் இழைத்து, விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதற்கு வழி வகுத்தன. இப்போது, தொழிலாள வர்க்கம் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் அதே துரோக பாத்திரத்தை வகிக்கின்றன.

புதனன்று தொழிலாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை ஒன்று விளக்கியதாவது: 'தொழிற்சங்கங்களும் போலி-இடது குழுக்களும் முதலாளித்துவ முறைமை, அதன் கட்சிகள் மற்றும் அரசுடன் பிணைந்துள்ளதுடன், அவை அரசாங்கமும் முதலாளிகளும் முன்னெடுக்கும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கு விரோதமாக இருக்கின்றன.

“தொழிலாளர்கள் தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களை அனைத்து முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக ஒவ்வொரு வேலைத் தளத்திலும், தொழிற்சாலைகளிலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் தங்கள் சொந்த நடவடிக்கை குழுக்களை அமைக்க வலியுறுத்துகிறது. கிராமப்புற ஏழை மக்களும் இதுபோன்ற குழுக்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

'சோசலிச சமத்துவக் கட்சியானது, கிராமப்புற மக்களின் ஆதரவுடன் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்திற்காக போராடுகிறது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை நிவர்த்தி செய்யும் அடிப்படை கோரிக்கைகளைச் சுற்றிய அணிதிரட்டலுக்கு இந்த நடவடிக்கைக் குழுக்கள் வசதியளிக்க வேண்டும்.”

இந்த நடவடிக்கைக் குழுக்களின் அடிப்படையில் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டை கட்டியெழுப்புவதற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் அழைப்பை அந்த அறிக்கை விளக்கியது. கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த வெகுஜன எழுச்சியின் போது சோசலிச சமத்துவக் கட்சி இந்தத் திட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கியது. தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிசக் கொள்கைகளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக, கிராமப்புற ஏழைகளை ஒருங்கிணைத்துக்கொண்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கத்தை கட்டியெழுப்புவதே இதன் நோக்கம் ஆகும். இந்தப் போராட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சியுடன் இணையுமாறு தொழிலாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading