அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவை உத்தரவுகளை மீறி இலங்கை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.


அரசாங்கம் சுமத்தியுள்ள கொடூரமான சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கையின் அரசாங்க மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த அரை மில்லியன் தொழிலாளர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களில் இணைந்துகொண்டனர். தொழிலாளர்களின் ஊதியத்தை ஒத்த வரி (PAYE), வங்கிக் கடன்களுக்கான வட்டி விகித அதிகரிப்பு, மேலதிக நேரக் கொடுப்பனவுகளில் வெட்டுக்கள், தனியார்மயமாக்கல் மற்றும் பல்லாயிரக்கணக்கான அரச வேலை வெட்டுக்களும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.

1 மார்ச் 2023 அன்று கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் அலுவலகத்திற்கு முன்பாக தொலைத்தொடர்பு ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் [Photo by Telecom workers]

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பெட்ரோலியம், மின்சாரம், நீர் வழங்கல், துறைமுகம், வங்கி, சுகாதாரம், தபால், புகையிரதம், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அடங்குவர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைநிறுத்தத்தை தடைசெய்யும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை மீறி மேற்கொள்ளப்பட்ட இந்த தொழில்துறை போராட்டமானது, முழு மற்றும் அரை நாள் வேலைநிறுத்தங்கள், சுகயீன விடுமுறை பிரச்சாரங்கள், 'ஒத்துழையாமை போராட்டம்,' மதிய உணவு மறியல் போராட்டம் மற்றும் ஏனைய எதிர்ப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கியிருந்தது.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) உறுப்பினர்கள் நேற்றைய போராட்டங்களில், அரசாங்கத்தின் கொடூரமான சிக்கனவெட்டு தாக்குதல்களுக்கு எதிரான வேலைநிறுத்தத்திற்கு ஆதரவை அணிதிரட்டுவோம்! ஜனாதிபதியின் கொடூரமான அத்தியாவசிய சேவை உத்தரவுகளை நீக்கு! சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவோம்! என்ற தலைப்பிலான கட்சியின் அறிக்கையின் பிரதிகளை விநியோகித்து தலையிட்டனர்.

வைத்தியர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் தீவு முழுவதும் அரை நாள் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களை நடத்தினர். கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலை, தேசிய கண் வைத்தியசாலை மற்றும் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அரை நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதிக வங்கி வட்டி விகிதங்கள் மற்றும் புதிய ஊதியத்தை ஒத்த வரியையும் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரியதுடன் மின் கட்டணங்களையும் ஏனைய விலைவாசிகளையும் குறைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

கண்டி தேசிய வைத்தியசாலையில், தாதியர்கள், வைத்தியர்கள், சுகாதார உதவியாளர்கள் மற்றும் ஏனைய வைத்தியசாலை ஊழியர்களும் காலை 8 மணி முதல் நண்பகல் வரை வெளிநடப்பு செய்திருந்தனர். வெளிநோயாளர் பிரிவு மற்றும் பல சிகிச்சை கிளினிக்குகளை அவர்கள் மூடியிருந்தனர். அவசர சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டன. இராணுவ சிப்பாய்கள் வேலை நிறுத்த கருங்காலிகளாக அந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் முன்முயற்சியின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட கண்டி வைத்தியசாலையின் சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்கள், வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளித்ததுடன் சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கையை அவர்களது சக ஊழியர்களிடையே விநியோகித்தனர். பல சுகாதார ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதைப் படித்து, குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினர்.

1 மார்ச் 2023 அன்று கண்டி வைத்தியசாலைக்கு வெளியே வேலைநிறுத்தம் செய்யும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் இதர சுகாதார ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். [Photo: WSWS]

கருத்து தெரிவித்த பெரும்பாலான சுகாதார ஊழியர்கள், மட்டுப்படுத்தப்பட்ட தொழில்துறை நடவடிக்கை மூலம் வேலைநிறுத்தத்தை வெல்ல முடியும் என்று தாங்கள் நம்பவில்லை என்றும் அனைத்து சுகாதார ஊழியர்களையும் உள்ளடக்கிய தொடர்ச்சியான நடவடிக்கை வேண்டுமெனவும் கோரினர். ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்தைத் தடுத்ததமைக்காக தொழிற்சங்கத் தலைமையை பலர் குற்றம் சாட்டினர்.

அரசாங்க கணக்கெடுப்பை மேற்கோள்காட்டி, நேற்றைய டெய்லி மிரர் பத்திரிகை, இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் உள்ள 148,451 அரசாங்க ஊழியர்களில் 44,540 பேர் வேலைநிறுத்தம் செய்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. இதில் வடமேற்கில் 36 வீதமும், வட மத்திய பகுதியில் 40 வீதமும், தெற்கில் 49 வீதமும், மத்திய பகுதியில் 25 வீதமும், கிழக்கில் 21 வீதமும், ஊவாவில் 19 வீதமும் அடங்கும்.

அனைத்து மாகாணங்களிலும் உள்ள அரசு மருத்துவர்களின் பரவலான பங்கேற்பையும் கணக்கெடுப்பு வெளிப்படுத்தியது. இதில் வடமேற்கில் 1,322 ஊழியர்ளில 914 பேரும், வட மத்திய பகுதியில் 690 ஊழியர்ளில 434 பேரும், மத்திய மாகாணத்தில் 2,472 ஊழியர்ளில 1,547 பேரும், தெற்கில் 1,339 ஊழியர்ளில 942 பேரும், கிழக்கில் 1,338 ஊழியர்ளில 454 பேரும் மற்றும் ஊவா மாகாணத்தில் 918 ஊழியர்ளில 790 பேரும் பங்குபற்றியிருந்தனர். 

கொழும்பு தேசிய வைத்தியசாலை ஊழியர்கள் ஊதியத்தை ஒத்த வரி திணிப்புக்கு எதிராக 1 மார்ச் 2023 அன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். [Photo: WSWS]

துறைமுக அதிகாரசபை முனையம் மற்றும் தனியாருக்குச் சொந்தமான கொழும்பு கப்பல்துறை நிறுவனத்தைச் சேர்ந்த சில ஆயிரம் தொழிலாளர்கள் தங்களது ஒரு மணி நேர மதிய உணவு இடைவேளையின் போது கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு சொந்தமான துறைமுக முனையங்களில் உள்ள தொழிலாளர்கள் புதன்கிழமை காலை 7.00 மணிக்கு தொடங்கி 24 மணி நேர ஒத்துழையாமை போராட்டத்தை நடத்தினர்.

கொலன்னாவ எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் சபுகஸ்கந்தே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தமது மதிய உணவு இடைவேளையின் போது தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தனர்.

பல்லாயிரக்கணக்கான இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் (இ.வ.ஊ.ச.) உறுப்பினர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அதன் 637 கிளைகளிலும் அதன் தலைமை அலுவலகத்திலும் இருந்து கலந்து கொண்டு ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தனியார் வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், நாடு முழுவதும் வங்கி செயல்பாடுகள் முடங்கின. இ.வ.ஊ.ச., அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய 15 தொழிற்சங்கங்களின் ஒரு குடை அமைப்பான தொழிலறிஞர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றது.

மின்சார ஊழியர்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) ஊழியர்கள், 22,000 தொழிலாளர்கள் அல்லது மொத்த தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் ஒரு நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தை நடத்தினர்.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள், கொழும்பு நகர மையத்தில் இருந்து 15 கிலோமீற்றர் தெற்கே ரத்மலானையில் உள்ள தமது தலைமை அலுவலகத்திற்கு முன்பாக பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்ததுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மொரட்டுவை, களனி, ஜயவர்தனபுர, பேராதனை, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு நாவலையில் உள்ள திறந்த பல்கலைக்கழகம் போன்ற அரச பல்கலைக்கழகங்களின் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தியதுடன், நாடளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான பாடசாலை ஆசிரியர்கள் கறுப்பு ஆடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள கொட்டாவாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதன்கிழமை வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் அரசாங்கத்தின் சமூகத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்கான தொழிலாளர்களின் உறுதிப்பாட்டை சக்திவாய்ந்த முறையில் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கு நேர்மாறாக, தொழிற்சங்கங்கள் தொழில்சார் போராட்டத்தை மட்டுப்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தன. விக்கிரமசிங்கவைப் போலவே, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தின் மீது அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பு, கடந்த ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் வெளியேற்றிய பாரிய எழுச்சியாக அபிவிருத்தியடையும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

புதன்கிழமை ஆர்ப்பாட்டங்களின் போது, தொழிற்சங்கத் தலைவர்கள் வழக்கமான வெற்றுக் கண்டனங்களை வெளியிட்ட அதே வேளையில் அரசாங்கம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அரச ஒடுக்குமுறையை தயார் செய்வதற்கு நேரத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களை, பல அரச மற்றும் தனியார் துறை தொழிலாளர்களை பாதித்துள்ள ஊதியத்தை ஒத்த வரி என்ற ஒரே பிரச்சினைக்குள் கட்டுப்படுத்தின.

விக்கிரமசிங்க திங்கட்கிழமை இரவு துறைமுகங்கள் உட்பட போக்குவரத்து துறைக்கு அத்தியாவசிய சேவை உத்தரவை நீட்டித்தமை, துறைமுக ஊழியர்களின் வேலைநிறுத்தம் மற்றும் ஒத்துழையாமை பிரச்சாரத்தை நிறுத்தாது என அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கத்தின் (ACGPEU) பொதுச் செயலாளர் நிரோஷன் கோரகன அறிவித்தார். இந்த தொழிற்சங்கம் மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) சார்ந்ததாகும்.

விக்கிரமசிங்க அத்தியாவசிய சேவைகள் ஆணையைத் திரும்பப் பெறவில்லை என்றால், தனது தொழிற்சங்கம் சுகாதாரம், வங்கி, பல்கலைக்கழகம், பெட்ரோலியம், மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர்களுடன் ஒன்றிணைந்து 'அடுத்த வாரம் காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்துடன் பதிலளிக்க' தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார்.

கோரக்கனவின் வெற்று வாய்வீச்சு, துறைமுக தொழிற்சங்கங்களும் அவரது சொந்த அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கமும், ஒரு நாள் வேலை நிறுத்தத்தை “ஒத்துழையாமை” பிரச்சாரத்துக்கு கீழிறக்கி, அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகள் உத்தரவுக்கு சரணடைந்ததை மூடிமறைக்கும் ஒரு வெளிப்படையான முயற்சியாகும்.

இ.வ.ஊ.ச. தலைவர் சன்ன திசாநாயக்க, “எங்கள் வேலைநிறுத்தம் வெற்றியடைந்துள்ளது [மேலும்] இது எங்களின் ஆரம்பமாகும். நாங்கள் வரி செலுத்த தயாராக இருக்கிறோம், ஆனால் வரி வரம்புகள் நியாயமானதாக இருக்க வேண்டும். தொழிலறிஞர்களும் புத்திஜீவிகளும் கடுமையான நெருக்கடியில் இருப்பதுடன் நாட்டை விட்டு வெளியேறலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கிறார்கள்,” என்றார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இ.வ.ஊ.ச. தலைவர் ஊதியத்தை ஒத்த வரியை எதிர்க்கவில்லை, மாறாக ஒப்பனை மாற்றங்களுக்கு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றார். எவ்வாறாயினும், விக்கிரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளபடி, அவர் இந்த வரிகளை மாற்றியமைக்க மாட்டார்.

தொழிற்சங்கத் தலைமையின் கூற்றுகளுக்கு மாறாக, கொடூரமான சிக்கன நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் மாற்றப்படாது. உண்மையில், இந்த தொழிற்சங்கங்களில் பெரும்பாலானவை சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்திற்கு முற்றிலும் அர்ப்பணிப்புடன் உள்ள முதலாளித்துவ ஸ்தாபனத்தின் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவை ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளபடி: 'புறநிலையாக வெளிப்பட்டிருப்பது என்னவென்றால், தொழிலாள வர்க்கம் நேரடியாக அரச அதிகாரத்தை எதிர்கொள்கிறது என்பதாகும். ஆளும் வர்க்கத்தின் பிற்போக்கு தயாரிப்புகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான எதிர் தாக்குதலை ஒழுங்கமைக்க வேண்டும்...

“தொழிலாளர்கள் தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி, அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு வேலைத் தளத்திலும், தொழிற்சாலைகளிலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்க அழைப்பு விடுக்கிறது. அதேபோல், கிராமப்புற ஏழைகளும் இதுபோன்ற நடவடிக்கை குழுக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை, இந்த நடவடிக்கைக் குழுக்களின் அடிப்படையில் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அதன் பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை விளக்கியது. இது, தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிச வேலைத்திட்டத்திற்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதற்கு, கிராமப்புற ஏழைகளையும் அணிதிரட்டிக்கொண்ட தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனப் புரட்சிகர இயக்கத்திற்கான அடிப்படையை ஸ்தாபிக்கின்றது.

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரகர்கள் நேர்காணல் செய்த எதிர்ப்பாளர்களில் பலர், தொழிற்சங்கத் தலைமையின் மீது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். துறைமுக அதிகாரசபையின் கடலோடல் பிரிவு ஊழியர், பெப்ரவரி 28 அன்று தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாராக இருந்ததாகவும் ஆனால் அவர்கள் தொழிற்சங்கத் தலைமையால் காட்டிக் கொடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

அன்றைய தினம் மதியம் 2.00 மணிக்கு., ஜே.வி.பி தலைமையிலான அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கம் உட்பட தொழிற்சங்கங்கள், ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்து “ஒத்துழையாமை” போராட்டத்துக்கே அழைப்பு விடுத்தன, வேலைநிறுத்தத்துக்கு அல்ல. இது அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று அவர்கள் கூறிக்கொண்டனர். இதற்கு கடலோடல் பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே கட்சி அறிக்கைகளை விநியோகித்தனர். ஸ்ரீ.ல.சு.க. தொழிற்சங்கத்துடன் இணைந்த ஒரு தொழிலாளி பிரச்சாரகர்களிடம் பேசினார். முன்னதாக தொழிற்சங்கத் தலைவர்கள் மார்ச் 1 பொது வேலைநிறுத்தத்தை அறிவித்த பெப்ரவரி 22 அன்று கோட்டை நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் அவர் பங்கேற்றிருந்தார்.

'எங்கள் மதிய உணவு இடைவேளையின் போது [எதிர்ப்பு] மறியல் நடத்தும்படி எங்களை கேட்டுக் கொண்டனர். 40 தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டது, ஆனால் அது தோல்வியடைந்தது. அரசாங்கம் உடன்படவில்லை. அவர்கள் எங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை, ஆனால் நாங்கள் [அரசாங்கத்தை] அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார். எவ்வாறாயினும், அரசாங்கம் 'தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள்' மற்றும் பிற சர்வதேச நாணய நிதிய நடவடிக்கைகளுடன் முன்செல்லும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

வைத்தியர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் மின்சார சபை ஊழியர்களும் 1 மார்ச் 2023 அன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். [Photo: WSWS]

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இ.மி.ச. யாழ் அலுவலக ஊழியர் ஆர். பிரபா கூறியதாவது: “அத்தியாவசியப் பொருட்களின் விலை வானளாவ உயர்ந்துள்ள போதிலும் எங்களின் சம்பளம் வாழ்க்கைச் செலவை சமாளிக்க எந்த வகையிலும் போதுமானதாக இல்லை. செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம். அதனால் தான் இந்த போராட்டத்திற்கு வந்துள்ளோம். கடந்த இரண்டு வருடங்களாக எங்களுக்கு சுகயீன விடுமுறை கொடுப்பனவுகள் அல்லது போனஸ் எதுவும் வழங்கப்படவில்லை, மேலும் நிர்வாகம் எங்களின் மேலதிக நேர வேலைகளை குறைத்துவிட்டது.”

திட்டமிடப்பட்ட மார்ச் 9 உள்ளூராட்சித் தேர்தலை விக்கிரமசிங்க அரசாங்கம் இரத்து செய்ததையும் அவர் விமர்சித்தார்: “அவர்கள் முன்பு தேர்தல்களை அறிவித்தனர், ஆனால் இப்போது பணம் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் இது பணப் பிரச்சினை அல்ல, நாங்கள் அரசாங்கத்திற்கு வாக்களிக்க மாட்டோம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள். தேர்தலில் தோற்போம் என்று புரிந்துகொண்டுள்ளதால், ஜனநாயக விரோதமாக தேர்தலை நிறுத்தியுள்ளனர்.” 

அரசாங்கத்தின் கொடூரமான சிக்கனவெட்டு தாக்குதல்களுக்கு எதிரான வேலைநிறுத்தத்திற்கு ஆதரவை அணிதிரட்டுவோம்! ஜனாதிபதியின் கொடூரமான அத்தியாவசிய சேவை உத்தரவுகளை நீக்கு! சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவோம்!

உள்ளூராட்சித் தேர்தல்கள் இரத்து செய்யப்படுவதற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீதான பொலிஸ் தாக்குதலை இலங்கை சோ.ச.க. கண்டிக்கிறது

ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான இலங்கை தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்காக!

Loading