இலங்கையின் ஜே.வி.பி. "நாட்டைக் காப்பாற்ற" அதிகாரத்தை பெற முயற்சிக்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி  (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) கூட்டமைப்பு, உள்ளூராட்சி சபை தேர்தல்களில் அதிக வாக்குகளைப் பெறுவதன் மூலம் பாராளுமன்ற தேர்தலுக்கு அழைப்பு விடுத்து ஆட்சிக்கு வர முடியும் என கணக்கிடுகின்றது. இதற்கான பிரச்சாரத்தை கடந்தாண்டு கடைப் பகுதியிலேயே தொடங்கிய ஜே.வி.பி., பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்து, தமக்கு வாக்களித்து ஆட்சிக்கு கொண்டுவருமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்து, நாடு முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்தி வருகின்றது.

1948 இல் உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்றதில் இருந்தே இலங்கையை ஆட்சி செய்த ஏனைய ஊழல் முதலாளித்துவக் கட்சிகளைப் போலன்றி, தாம் 'பொருளாதார, சமூக மற்றும் கலாச்சாரப் படுகுழியில் இருந்து நாட்டைக் காப்பாற்றக்கூடிய' ஒரு சுத்தமான அமைப்பு என்று தே.ம.ச. கூறுகிறது.

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பாரிஸில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகிறார் [Photo by Anura Kumara Dissanayake]

இது ஒரு அரசியல் கேலிக்கூத்து ஆகும். ஜே.வி.பி./தே.ம.ச., சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கன திட்டத்தை செயல்படுத்துவதன் மூலமே 'நாட்டைக் காப்பாற்ற' விரும்புகிறது. எவ்வாறாயினும், பொது மேடைகளில் உரையாற்றும் போது, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளைப் பின்பற்றுவதன் மூலம் இலங்கை முதலாளித்துவத்தை காப்பாற்றும் அதன் உள் நோக்கத்தை குறிப்பிடாமல் மக்களை ஏமாற்றுகிறது.

அக்டோபர் 17 அன்று ஸ்வர்ணவாஹினி தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க, இலங்கை வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாததால், 'சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது' என்றார். சர்வதேச நாணய நிதிய திட்டத்தை செயல்படுத்துவதில், 'சமூகம் ஒரு கனிசமான செலவை ஏற்க வேண்டும்' என்றே அவர் கூறினார். அவரது வாதம், 'ஒரு முன்மாதிரியான குழுவின் ஆட்சி', அதாவது அவரது கட்சியின் ஆட்சி, 'செலவை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்' என்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகும், எனத் தெரிவித்தார். பெரும் வேலை இழப்புகள், உயரும் பணவீக்கம் மற்றும் அடிப்படை சமூக சேவைகளின் அழிவை உறுதி செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.

லங்கா சம சமாஜக் கட்சி (ல.ச.ச.க.) 1964ல் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்துகொண்டு பெரும் காட்டிக்கொடுப்பை செய்த பின்னரே 1960களின் கடைப் பகுதியில் ஜே.வி.பி. தலைதூக்கியது. ல.ச.ச.க. சோசலிச அனைத்துலகவாதத்தை அப்பட்டமாக கைவிட்டமை, இனவாத அரசியலில் வேரூண்றிய தீவிரவாத குட்டி முதலாளித்துவ குழுக்கள் உருவாவதற்கு கதவைத் திறந்து விட்டது. ஜே.வி.பி., சோசலிச வாய்ச்சவடால்களையும் சிங்கள தேசப்பற்றுடன் “ஆயுதப் போராட்டத்தை” தூக்கிப் பிடிப்பதையும் சேர்த்து, மாவோவாதம் மற்றும் காஸ்ட்ரோவாதத்துடன் கலந்த ஒரு நச்சு கலவையை அடிப்படையாகக் கொண்டதாகும்.

சர்வதேச அளவில் இதே போன்ற குழுக்களைப் போலவே, ஜே.வி.பி.யும் கடந்த நான்கு தசாப்தங்களாக, வசதியான பாராளுமன்ற ஆசனங்களுக்காக தனது துப்பாக்கிகளையும் காட்டு சீருடைகளையும் கைவிட்டு கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் தன்னை இணைத்துக் கொண்டது. அது 2015ல், அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேற்று கருத்துக்களுடைய கல்விமான்கள், தொழிலறிஞர்கள், ஜே.வி.பி. கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய அமைப்புகளுடன் சேர்ந்து தே.ம.ச.யை உருவாக்கியது. அப்போதிருந்து, இந்த உயர் மத்தியதர வர்க்க போக்கு மற்றும் உள்ளூர் வணிகர்களின் ஒரு அடுக்கினதும் மத்தியில் அதன் தளத்தை விரிவுபடுத்தி வந்துள்ளது.

ஜே.வி.பி./தே.ம.ச., ஏனைய கட்சிகளை ஊழல்வாதிகள் என்று விமர்சித்தாலும், இதே முதலாளித்துவக் கட்சிகளுடன் இணைந்து ஆதரவளித்த வரலாற்றை ஜே.வி.பி. கொண்டுள்ளது. அதன் பிற்போக்கு தேசியவாத முன்னோக்கு, சிங்கள உயரடுக்கின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக 26 ஆண்டுகால இரத்தக் களறி தமிழர்-விரோத இனவாதப் போருக்கு அது ஆதரவளித்ததில் முன்நிலைக்கு வந்தது. உழைக்கும் மக்கள் மத்தியில் பரவலாக மதிப்பிழந்துள்ள ஜே.வி.பி., தே.ம.ச.யை ஒரு அரசியல் முன்னணியாகப் பயன்படுத்துவதன் மூலம் தனது கடந்த காலத்தை மறைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஜே.வி.பி. மற்றும் பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் (ஐ.ம.ச.), பரவலாக வெறுக்கப்படும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு விரோதமாக பெருகும் பாரிய எதிர்ப்பை கட்டுப்படுத்த முடியாது என்று கவலைகொண்டுள்ளதோடு, புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்கின்றன.

தாங்க முடியாத வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளுக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய மாபெரும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில், அவரது முன்னோடியான கோட்டாபய இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், மதிப்பிழந்த பாராளுமன்றத்தால் விக்கிரமசிங்க  ஜூலை 13 அன்று ஜனநாயக விரோதமான முறையில் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் பங்குபற்றிய அந்த எழுச்சியானது ஜே.வி.பி. மற்றும் முன்நிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) போன்ற போலி-இடது குழுக்கள் சார்ந்த தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டது. இடைக்கால முதலாளித்துவ அரசாங்கம் ஒன்றை அமைத்து அதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற ஜே.வி.பி. மற்றும் ஐ.ம.ச.யின் கோரிக்கைகளுக்குப் பின்னால் அவர்கள் தொழிலாளர்களை வழிநடத்தினர்.

எவ்வாறாயினும், ஊதிய உயர்வும் முன்னேற்றமான வேலை நிலைமைகள் கோரியும் தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அரச துறைகளில் வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய அலை எழுகிறது. கிராமப்புற ஏழைகள், வேகமாக சீரழிந்து வரும் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல ஆயிரம் பேர் பல்வேறு தேர்தல் தொகுதிகளில் அதன் கூட்டங்களில் கலந்து கொள்வதுடன் தே.ம.ச. இந்த பரவிவரும் கோபத்தை சுரண்டிக்கொள்ள முயல்கிறது.

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, கொழும்பு புறநகர் பகுதியான மஹரவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது [Photo by Anura Kumara Dissanayake]

டிசம்பர் 4 அன்று, கொழும்பின் புறநகர்ப் பகுதியிலுள்ள மஹரவில் பேசிய திசாநாயக்க, திறந்த சந்தைப் பொருளாதாரக் கொள்கைகள், பாரிய வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றமை மற்றும் தேசிய சொத்துக்களை விற்பதன் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றார். 'இப்போது என்ன செய்ய வேண்டும்?'  என  அவர் கேட்டார். எவ்வாறாயினும், மில்லியன் கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் சமூக அவலத்திற்கு அவரது பதில்கள் எந்த தீர்வையும் அளிக்கவில்லை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி, அனைத்து அதிகாரங்களையும் பாராளுமன்றத்திற்கு வழங்கும் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று திசாநாயக்க அழைப்பு விடுத்தார். பொலிஸ் அரசியல் தலையீடு இல்லாமல், சட்டப்படி செயல்பட அனுமதிக்கப்படும், என் அவர் தெரிவித்தார்.

மேடையில்  அமர்ந்திருக்கும் கல்வியாளர்களின் தகுதிகளைப் பற்றி கூறி, எதிர்கால தே.ம.ச. அரசாங்கம், 25 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையையும் 25 இராஜாங்க அமைச்சர்களையும் மட்டுமே நியமிக்கும் என்று திசாநாயக்க உறுதியளித்தார். “மோசடி மற்றும் ஊழலை தே.ம.ச.யால் மட்டுமே ஒழிக்க முடியும். எங்களிடம் ஊழல்வாதிகள் இல்லை,'' என அவர் தெரிவித்தார்.

உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் மாபெரும் சமூக நெருக்கடியை ஊழலை ஒழிப்பதன் மூலம் பாராளுமன்றத்தின் ஊடாக தீர்க்க முடியும் என்ற மாயைகளை தே.ம.ச. வெட்கமின்றி விதைக்கிறது. ஜே.வி.பி. இணைந்திருந்த அல்லது ஆதரவளித்த அரசாங்கங்களில் ஊழல் ஏராளமாக இருந்தாலும், பொருளாதார நெருக்கடியை உருவாக்கியது ஊழல் அல்ல. மாறாக, ஜே.வி.பி. மற்றும் அனைத்து பாராளுமன்றக் கட்சிகளும் இறுதிவரை பாதுகாத்து வரும் முதலாளித்துவ முறைமையே இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகும்.

இலங்கையின் உலக அங்கீகாரத்தை உயர்த்துவதற்கும் சிறந்த இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கும் உறுதியளித்த திசாநாயக்க, 'இலங்கையை உலகில் பிரகாசிக்கச் செய்வதாகவும்' கூறினார். அவ்வாறான சூழ்நிலையில் தூய்மையான முதலீட்டாளர்கள் மற்றும் பணக்கார தொழில்முனைவோர் மட்டுமே தீவிற்கு ஈர்க்கப்பட முடியும் என்று அவர் அறிவித்தார்.

சமீப மாதங்களில், ஏகாதிபத்தியம் மற்றும் உலக மூலதனத்தின் கோரிக்கைகளை செயல்படுத்தும் ஒரு சாத்தியமான மாற்று அரசாங்கமாக பல்வேறு சக்திகளுக்கு தங்களை உயர்த்திக் காட்ட, ஜே.வி.பி. தலைவர்கள் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தி வருகின்றனர்.

ஜூலை மாதம், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், ஜே.வி.பி. தலைவர்களைச் சந்தித்து, 'அண்மைக் காலங்களில் பொதுமக்கள் மத்தியில் எதிரொலிக்கும்' 'வளர்ந்து வருகின்ற' 'ஒரு குறிப்பிடத்தக்க கட்சி' என்று தாராளமாக பாராட்டினார். அந்த சந்திப்பு 'உண்மையில் புத்துணர்ச்சியூட்டுகின்றதும் நேர்மையுடனதுமாக இருந்தது' என்று கூறிய அவர், 'எங்களுக்கு நல்ல புரிதல் இருப்பதாக நான் நினைக்கிறேன்' என்று கூறி முடித்தார்.

ஜே.வி.பி. தலைவர்கள் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை 16 நவம்பர் 2022 அன்று சந்தித்தனர். இடமிருந்து ஜே.வி.பி.யின் தகவல் தொடர்பு செயலாளர் விஜித ஹேரத், ஹல்டன் மற்றும் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க [Photo by JVP]

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களுடன் ஜே.வி.பி. கலந்துரையாடல்களை நடத்தியது. பாராளுமன்றத்தில் பேசிய திசாநாயக்க, பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பிரதான நாடுகளுடனான 'முன்மாதிரியான' இராஜதந்திர சூழ்ச்சியை பாராட்டி, அதைப் பின்பற்றுவதற்கான ஜே.வி.பி.யின் விருப்பத்தை சமிக்ஞை செய்தார்.

தே.ம.ச., ஜனவரி 4 அன்று முன்னாள் ஜெனரல்கள் மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தும் என்று திசாநாயக்க 4 மஹர கூட்டத்தில் அறிவித்தார். உறுதிபூண்டுள்ள சிக்கன திட்டத்தை செயல்படுத்தும் போது தலைதூக்கும் எதிர்ப்பை சந்திக்கும் போது, இராணுவம் மற்றும் பொலிஸ் அடக்குமுறையை தே.ம.ச. கையில் எடுக்கும் என்ற எச்சரிக்கையாக தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்கள் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஜனவரி 24 அன்று, பெரிய வணிகர்களுடன் தே.ம.ச. ஒரு சந்திப்பை நடத்தியது. 'ஒரு நாடு அதன் பொருளாதாரம் வலுவாக இருந்தால் உலகில் ஒளிரும்,' என்று திசாநாயக்க குறிப்பிட்டார். இது நிதி மூலதனத்தின் கட்டளைகளை தே.ம.ச. செயல்படுத்தும் என்ற அறிவிப்பைத் தவிர வேறொன்றுமில்லை.

நவம்பர் 22 அன்று பாராளுமன்றத்தில் பேசிய திசாநாயக்க, சிக்கனக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே பொருளாதார மீட்சி ஏற்படும் என்று அறிவித்தார். “மக்கள் தாங்கிக்கொண்டு சில தியாகங்களைச் செய்ய வேண்டும். மக்கள் ஆணையைக் கொண்ட அரசாங்கத்தின் கீழ் மட்டுமே இதைச் செய்ய முடியும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

ஜூலை மாதம் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய திசாநாயக்க, தொடர்ந்து வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவது போதாது. மாறாக நாடு அதன் 'நுகர்வு முறையை மாற்ற வேண்டும்... எல்லாவற்றையும் அனுபவித்துக்கொண்டு எம்மால் டொலர்களை சேமிக்க முடியாது,' என்றார்.

திசாநாயக்க, 2015ல் கிரேக்கத்தில் சிக்கன வெட்டுக்களை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்து பின்னர், வாழ்க்கைத் தரத்தில் ஆழமான வெட்டுக்களை முன்னெடுக்க கூறிய நிதி மூலதனத்தின் கோரிக்கைகளை மட்டுமே செயல்படுத்திய போலி-இடது சிரிசாவை உதாரணமாக தூக்கிப் பிடித்தார். 'ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 20 யூரோக்கள் செலவழிக்க கிரேக்க அரசாங்கம் உத்தரவிட்டது. ஒரு ரொட்டி, ஒரு கொக்ககோலா மற்றும் ஒரு சிகரெட் மட்டுமே அனுமதிக்கப்பட்டது,” என்று கூறிய அவர், ஜே.வி.பி. இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்கும் என்பதை சமிக்ஞை செய்தார்.

ஜே.வி.பி.யின் தலைவர்கள் ஸ்பெயினின் முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியின் மிகுவல் அர்பன் கிரெஸ்போ உட்பட ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகளை 2 நவம்பர் 2022 அன்று ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர். ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (இடமிருந்து நான்காவது) தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்கவுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். [Photo by JVP]

பாராளுமன்றத்தில் பேசிய திசாநாயக்க, அரச நிறுவனங்களை விற்கவும் அரச ஊழியர்களை வேலைநீக்கம் செய்யவும் ஜே.வி.பி.யின் விருப்பத்தை முன்னறிவித்தார். “திறைசேரிக்கு ஒரு ரூபாய் வருமானத்தில் 58 சதம் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காக செலவிடப்படுவதாக ஒரு விமர்சனம் உள்ளது,” என்று அவர் புகார் கூறிய அவர், அமைச்சர்கள் தங்கள் ஆதரவாளர்களால் அரச நிர்வாகத்தை நிரப்பி வைத்துள்ளனர் என மேலும் கூறினார். 'பொருளாதார சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்,' 'எல்லாவற்றையும் அரசே செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை,' என்று அவர் கூறினார்.

தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்கள் தற்போதைய சமூகப் பேரழிவை முடிவுக்குக் கொண்டுவர ஒரு மாற்றீட்டைத் தேடுகின்றனர், ஆனால் மற்ற எல்லா முதலாளித்துவக் கட்சிகளைப் போலவே தே.ம.ச./ஜே.வி.பி. எல்லாவற்றிற்கும் மேலாக முதலாளித்துவத்தையும் முதலாளித்துவ ஆட்சியையும் காப்பாற்றுவதில் உறுதிபூண்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) விளக்கியது போல், இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பாரிய பொருளாதார மற்றும் சமூகப் பேரழிவை உருவாக்கியுள்ள இலாப முறைமைக்குள் உழைக்கும் மக்களுக்கு தீர்வு கிடையாது. ஒரு சிறிய செல்வந்த உயரடுக்கின் கைகளில் இருந்து உற்பத்தி மற்றும் விநியோகச் சாதனங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, அதை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதன் மூலம் பெரும்பான்மை சமூகத்தின் நலனுக்காக பொருளாதாரம் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

அதனாலேயே சோசலிச சமத்துவக் கட்சியானது அனைத்து முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தின் உண்மையான வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கிறது. இதற்கு ஒவ்வொரு வேலைத் தளத்திலும் சுற்றுப்புறத்திலும் தொழிலாளர்களால் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட கிராமப்புற மக்கள் மத்தியில் நடவடிக்கை குழுக்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும். 

சோசலிச சமத்துவக் கட்சி இந்த நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட தொழிலாளர்களையும் கிராமப்புற மக்களையும் அணிதிரட்டுவதற்கான ஒரு மூலோபாய மையமாக இது செயல்படும். சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றே அவசியம். 

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளை சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறும் இந்த புரட்சிகர வேலைத்திட்டத்திற்காக போராடுமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, மார்ச் 5, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சோசலிச சமத்துவக் கட்சி இணையவழி பொதுக் கூட்டமொன்றை நடத்துகிறது. தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புற உழைப்பாளிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அனைவரையும் அரசியல் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கு குறித்த இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இக்கூட்டத்திற்கு இன்றே பதிவு செய்துகொள்ளுங்கள்.

சிங்களப் பேரினவாத ஜே.வி.பி. தன்னை மாற்றீடு இலங்கை அரசாங்கமாக முன்னிலைப்படுத்துகிறது

இலங்கையில் அபிவிருத்தி அடைந்து வரும் புரட்சிகர எதிர்ப்பின் சர்வதேச முக்கியத்துவம்

இலங்கை: 'மக்கள் போராட்டத்தின் செயல் திட்டம்' பற்றிய கலந்துரையாடல்: தொழிலாளர்-ஒடுக்கப்பட்ட மக்களை முதலாளித்துவ அரசோடு கட்டிவைக்கும் வஞ்சகப் பொறி

Loading