போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் ஆண்டு நிறைவுக் கூட்டத்திற்கான வாழ்த்துக்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த், ரஷ்யாவிலும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கு அதன் அரசியல் ஆதரவை அறிவித்துள்ள ஒரு ட்ரொட்ஸ்கிச அமைப்பான போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டதன் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஒரு இணையவழிக் கூட்டத்தில் வழங்கிய கருத்துரைகளாகும். 

***

அன்புள்ள தோழர்களே,

போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினதும், உலகெங்கிலுமுள்ள அதன் பிரிவுகளினதும் புரட்சிகர வாழ்த்துக்களை உங்களுக்கு வழங்க அனுமதியுங்கள்.

இது கொண்டாடப்பட வேண்டிய மைல்கல் ஆகும்.  போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) இன் வரலாறு ட்ரொட்ஸ்கிசத்தை நோக்கிய அமைப்பின் வளர்ச்சியைப் பதிவு செய்கிறது. இது கடந்த ஆண்டில் தோழமை உறவுகளை ஸ்தாபிப்பதிலும் அனைத்துலகக் குழுவுடன் நெருக்கமான அரசியல் ஒத்துழைப்பை ஸ்தாபிப்பதில் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. எதிர்பார்த்தது போலவே, உண்மையான புரட்சிகர மார்க்சிசத்தை நோக்கிய போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) இன் பாதை சிக்கலானதும் மற்றும் முரண்பாடானதுமாக இருந்திருக்கிறது. சிறப்புமிக்க உணர்வின் தோற்ற நிகழ்வியல் (Phenomenology of Spirit) என்ற படைப்பின் முன்னுரையில், ஹெகல் விஞ்ஞானரீதியான உண்மைக்கு ஒரு சிக்கலற்ற 'அரச பாதை' உள்ளது என்கின்ற நடைமுறைவாதக் கருத்தாக்கத்தை கேள்விக்குட்படுத்தினார். மேலோட்டமான மற்றும் பொதுவானவற்றுடன் தன்னை திருப்திப்படுத்திக்கொள்ளும் வழமையான சிந்தனைமுறை (vulgar thought) குறித்த அவரது விமர்சனத்தை அரசியல் களத்தில் பயன்படுத்தலாம். முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கியெறிந்து அதற்குப் பதிலீடாக உலக அளவில் சோசலிசத்தை நிறுவக்கூடிய ஒரு அரசியல் சக்தியான தொழிலாள வர்க்கத்திற்கும், அதன் அமைப்பிற்கும் கல்வியூட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மார்க்சிசக் கட்சியானது, ஒரு முழு சகாப்தத்தின் வரலாற்றுப் பிரச்சினைகளை திட்டமிட்டமுறையில் அபிவிருத்தி செய்வதன் மூலமும் தெளிவுபடுத்துவதன் மூலமும் அபிவிருத்தி அடைகிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது ரஷ்யாவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் எழுச்சியின் மகத்தான முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மூலத்தோற்றத்தை கருத்தில் கொள்ளும்போது, மார்க்சிசம் ஸ்ராலினிசத்தால்  உருத்திரிபு செய்யப்பட்டதற்கும் மற்றும் அக்டோபர் புரட்சியை  காட்டிக்கொடுத்தற்கும்  எதிரான போராட்டத்தால் எழுப்பப்பட்ட வரலாறு மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் என்று அறியப்பட்ட 'ரஷ்யப் பிரச்சினை' ஆனது நான்காம் அகிலத்தின் வரலாற்றில் இன்றியமையாத ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்தது.

நான்காம் அகிலத்தின் ஸ்தாபகர் லியோன் ட்ரொட்ஸ்கி [Photo]

ஏதோ ஒரு வடிவத்தில், நான்காம் அகிலத்திற்குள்ளான மோதல்கள் சோவியத் அரசின் வர்க்கத் தன்மை, ஸ்ராலினிசத்தின் வரலாற்று பாத்திரம், அத்தோடு சோவியத் ஒன்றியத்தின் தலைவிதி மற்றும் உலக சோசலிசப் புரட்சியுடனான அதன் உறவு தொடர்பான பிரச்சினைகளை எப்போதும் எழுப்பின. 1939-40இல் நான்காம் அகிலத்திற்குள் நடந்த முதல் பெரிய போராட்டமானது, ஹிட்லரின் ஜேர்மனியுடனான போரில் கூட, சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பை நிராகரித்த மக்ஸ் சட்மன் மற்றும் ஜேம்ஸ் பேர்ன்ஹாம் தலைமையிலான ஒரு பிரிவின் உருவாக்கத்தால் தூண்டப்பட்டது. சோவியத் ஒன்றியத்தை ஒரு சீரழிந்த தொழிலாளர் அரசு என்று வரையறுப்பது இனியும் செல்லுபடியாகாது என்றும், சோவியத் ஒன்றியமானது மார்க்சிஸ்டுகளால் முன்கூட்டி எதிர்பார்க்கப்படாத சுரண்டும் 'அரசு முதலாளித்துவ' சமூகத்தின் ஒரு புதிய வடிவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் அது வாதிட்டது.

இந்தத் தத்துவத்தின் அரசியல் சாராம்சம், அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் விரிவாக்கம் தெளிவாக்கியது போல், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிசத்தின் முழு வரலாற்று முன்னோக்கும் பொய்யானது என்பதாகும். இந்த விரக்தியுற்ற முன்னோக்கை முன்னெடுத்த கிட்டத்தட்ட அனைவருமே முதலாவதாகவும் முக்கியமாகவும், சட்மன் மற்றும் பேர்ன்ஹாம் ஆகியோர் விரைவில் ஏகாதிபத்திய எதிர்ப்புரட்சி முகாமுக்குள் சென்றனர்.

மார்க்சிச-எதிர்ப்பு மற்றும் ட்ரொட்ஸ்கிச-விரோத திருத்தத்தின் அடுத்த முக்கிய வடிவம் மைக்கேல் பப்லோ மற்றும் ஏர்னஸ்ட் மண்டேல் ஆகியோரால் முன்வைக்கப்பட்டது. காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தில் ட்ரொட்ஸ்கி முன்வைத்த பகுப்பாய்வுக்கு மாறாக, 1951 மற்றும் 1953 க்கு இடையில், ஸ்ராலினிசம் இன்னும் ஒரு புரட்சிகர பாத்திரத்தை வகிக்கும் என்று அவர்கள் முன்னெப்போதையும் விட அதிக அழுத்தத்துடன் வாதிட்டனர். ஸ்ராலினிசக் கட்சிகளால் வழிநடத்தப்படும் புரட்சிகள் பல நூற்றாண்டுகளுக்கு நீடிக்கும் 'உருக்குலைந்த தொழிலாளர் அரசுகளை' உருவாக்கும் என்று வாதிடும் அளவுக்கு பப்லோவும் மண்டேலும் சென்றனர்!

பப்லோ மற்றும் மண்டேல் ஆகியோரின் தத்துவமானது சட்மன் மற்றும் பேர்ன்ஹாமின் தத்துவத்திற்கு நேர்மாறானதாகத் தோன்றினாலும், ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும், அதன் அரசியல் கட்சிகளின் வலையமைப்பிற்கும் இரண்டு கருத்தாக்கங்களும் ஒரு தீர்க்கமான வரலாற்று பாத்திரத்தை வழங்கின. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை வர்க்க சமூகத்தின் ஒரு புதிய வடிவமாக ஷக்ட்மானிசவாதிகள் மாற்றினர். முதலாளித்துவத்தை தூக்கியெறியும் தீர்க்கமான புரட்சிகர சக்தியாக இந்த அதிகாரத்துவத்தை பப்லோவாதிகள் புகழ்ந்தனர். இரண்டு திருத்தல்வாத போக்குகளும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர ஆற்றலையும், அதன் தனித்துவமான வரலாற்று பாத்திரத்தையும் நிராகரித்தன.

1953 நவம்பரில் சோசலிச தொழிலாளர் கட்சித் (SWP) தலைவர் ஜேம்ஸ் பி. கனெனால் எழுதப்பட்ட பகிரங்க கடிதத்தால் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, மார்க்சிசத்தின் பப்லோவாத திருத்தங்களை அம்பலப்படுத்தியதுடன், ஸ்ராலினிசம் தொடர்பான ட்ரொட்ஸ்கிச பகுப்பாய்வு, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரம் மற்றும் தொழிலாள வர்க்கத்தில் சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதற்கும் புரட்சிகரத் தலைமையின் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான போராட்டத்தில் நான்காம் அகிலத்தின் தீர்க்கமான முக்கியத்துவத்தையும் நிலைநிறுத்தியது. 

ஜேம்ஸ் பி. கனென்

ஏறக்குறைய சரியாக 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த வரலாற்று ஆவணத்தில், உலக சோசலிசப் புரட்சியின் வெற்றிக்கு 'முக்கிய தடையாக' இருப்பது ஸ்ராலினிசமே என்று கனென் வலியுறுத்தினார்.

இது ரஷ்யாவில் அக்டோபர் 1917 புரட்சியின் மதிப்பை தனக்கு  சாதகமாக பயன்படுத்திக்கொள்வதன் மூலம் தொழிலாளர்களை ஈர்க்கிறது, பின்னர் அது அவர்களின் நம்பிக்கையை காட்டிக் கொடுப்பதால், அவர்களை சமூக ஜனநாயகத்தின் கரங்களில், செயலின்மைக்குள் அல்லது முதலாளித்துவத்தின் மாயைகளுக்குள் மீண்டும் தள்ளுகிறது. இந்த காட்டிக்கொடுப்புகளுக்கான தண்டனை பாசிச அல்லது முடியாட்சி சக்திகளின் ஒருங்கிணைப்பு மற்றும் முதலாளித்துவத்தால் அபிவிருத்தி செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட புதிய போர் வெடிப்புகளின் வடிவத்தில் உழைக்கும் மக்களுக்கு வழங்கப்படுகிறது. நான்காம் அகிலமானது அதன் ஆரம்பத்தில் இருந்தே, சோவியத் ஒன்றியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஸ்ராலினிசத்தை புரட்சிகரமாக தூக்கியெறிவதை அதன் முக்கிய பணிகளில் ஒன்றாக தீர்மானித்தது.

அதற்குப் பிந்தைய தசாப்தங்களில், ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர பாத்திரம் குறித்த இந்தப் பகுப்பாய்வு கிரெம்ளின் அதிகாரத்துவத்திற்கும் மற்றும் 'உண்மையான நடப்பிலுள்ள சோசலிசத்திற்கான' எண்ணற்ற வக்காலத்து வாங்குபவர்களுக்கும் எதிராக அனைத்துலகக் குழுவால் நிலைநிறுத்தப்பட்டது. இதில் பப்லோவாதிகளும் அடங்குவர், அவர்கள் அதிகாரத்துவத்தின் கௌரவத்திற்கு முட்டுக்கொடுக்கவும் அதற்கு எதிரான போராட்டத்தை திசை திருப்பவும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர்.

அனைத்துலகக் குழுவிற்குள்ளும் கூட, 1970 களின் நடுப்பகுதியிலிருந்தும் 1980 களின் முற்பகுதியிலும் பிரித்தானிய தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) தலைமையானது ஸ்ராலினிசத்தினை அதிகரித்தளவில் தழுவிக்கொள்ளும் நிலைப்பாட்டைப் பின்பற்றியது. இந்த அரசியல் பின்வாங்கல் எதிர்ப்பைத் தூண்டி மற்றும் 1985-86 இல் பிளவுக்கு வழிவகுத்த மோதலைத் தூண்டுவதிலும் தீவிரப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்தது. 1982 மற்றும் 1985 க்கு இடையில் தொழிலாளர் கழகத்திற்கும் (அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) மற்றும் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கும் இடையிலான அரசியல் மோதல் வெளிப்படையாக வெளிப்பட்டது என்பது தற்செயலானதல்ல. சோவியத் அதிகாரத்துவம் அதன் இறுதி நெருக்கடிக்குள் நுழைந்த அதே ஆண்டுகளில், கோர்பச்சேவின் பதவியேற்புடன், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு முதலாளித்துவத்தின் மீட்சியை விரைவுபடுத்தும் வழிவகுக்கும் ஒரு கொள்கையை நோக்கி தீர்க்கமாக நகர்ந்தது.

இந்தப்பிளவு ஏற்பட்ட உடனேயே, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் மூன்று முக்கிய தலைவர்களும் ட்ரொட்ஸ்கிசத்தை நிராகரித்தனர். அதன் பொதுச் செயலாளர் மைக்கேல் பண்டா, ட்ரொட்ஸ்கியைக் கண்டித்ததோடு, தன்னை ஸ்ராலினின் தீவிர ஆதரவாளராக  பிரகடனப்படுத்திக் கொண்டார்.  1953 இல் பகிரங்க கடிதத்தில் முதலில் கையொப்பமிட்டவர்களில் ஒருவராகவும், மொஸ்கோ போலி விசாரணைகளுக்கு விடையிறுப்பாக 1937 இல் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவை முறித்துக் கொண்டவருமான ஜெர்ரி ஹீலி, சோவியத் ஒன்றியத்தில் அரசியல் புரட்சியின் தொடக்கமாக கோர்பச்சேவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டார். கிளிஃப் சுலோட்டரைப் பொறுத்தவரை, அவரது பிரிவானது அக்டோபர் புரட்சி மீதான கம்யூனிச எதிர்ப்பு எதிரிகளாகவும், ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர்களாகவும் விரைவாக பரிணமித்தது.

அனைத்துலகக் குழுவானது, இந்த துரோகப் பிரிவுகளை தீர்க்கமாக தோற்கடித்து, நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தையும் கொள்கைகளையும் நிலைநிறுத்தி அபிவிருத்தி செய்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, 1986 மற்றும் 1991ம் ஆண்டுகளுக்கு இடையில், கோர்பச்சேவின் போலித்தங்கமான பெரெஸ்ட்ரோய்காவினை அம்பலப்படுத்தியதும், கண்டனம் செய்ததும், அது சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கும் முதலாளித்துவத்தின் மீட்சிக்கும் இட்டுச் செல்லும் என்று மீண்டும் மீண்டும் எச்சரித்தது என்பது வரலாற்றுப் பதிவாகும். 

இந்த நெருக்கடியான ஆண்டுகளில், சோசலிசத்திற்கும் அக்டோபர் புரட்சியின் பாரம்பரியத்திற்கும் தொடர்ந்து ஆதரவைக் கூறி வந்த சோவியத் தொழிலாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் பிரிவுகளை எச்சரிப்பதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது. நான் 1989 மற்றும் 1991 இல் சோவியத் ஒன்றியத்திற்கு விஜயம் செய்தேன். கணிசமான எண்ணிக்கையிலான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் அறிவுஜீவிகளுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. இந்த விவாதங்களில் முதலாளித்துவ மீட்சி என்ற பிற்போக்கு ஸ்ராலினிசக் கொள்கைக்கான எதிர்ப்பானது அக்டோபர் புரட்சியின் வரலாறு மற்றும் அதன் பின்விளைவுகள் பற்றிய அறிவு கிட்டத்தட்ட முழுமையாக இல்லாததன் மூலம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகியது. ஸ்ராலினிச ஆட்சியால் சோவியத் வரலாற்றை திட்டமிட்டு பொய்மைப்படுத்திய 60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் நோக்கிநிலையற்ற சூழலை உருவாக்கியது. அக்டோபர் புரட்சி ஒரு பேரழிவுகரமான தவறு என்றும் சோசலிசம் ஒரு குற்றவியல் நிறுவனமாகவோ அல்லது கற்பனாவாத மாயையாகவோ பார்க்கப்பட வேண்டும் என்ற அவர்களின் கூற்றுக்களை முன்வைக்க கோர்பச்சேவ் மற்றும் யெல்ட்சின் ஆதரவாளர்களால் இது சுரண்டப்பட்டது.

அக்டோபர் புரட்சி மற்றும் சோசலிசம் மீதான இந்த கண்டனங்களை அடித்தளமாகக் கொண்ட அடிப்படை பொய்மைப்படுத்தல், புரட்சிக்குப் பின்னர் ஆட்சி பின்பற்றிய கொள்கைகளுக்கு எந்த மாற்றீடும் இல்லை என்பதை மறுப்பதாகும். 1917 முதல் 1991 வரையிலான பாதையானது பேரழிவை நோக்கிய தவிர்க்க முடியாத மற்றும் இடைவிடாத உந்துதலாக இருந்தது. ஸ்ராலினிசம் என்பது 1917 அக்டோபரின் ஒரு பிறழ்வு, உருத்திரிபு மற்றும் காட்டிக்கொடுப்பு அல்ல, மாறாக அதன் தவிர்க்க முடியாத மற்றும் அவசியமான விளைவாக இருந்தது எனக்கூறப்பட்டது.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் மட்டுமன்றி, உலகெங்கிலும் மார்க்சிசத்தின் மறுமலர்ச்சிக்கு இந்த பொய்யான கட்டுக்கதையை மறுப்பது ஒரு முக்கியமான பணி என்பதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அங்கீகரித்தது.

சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த மாதம், பெப்ரவரி 1993 இல், வரலாற்றாசிரியரும் சமூகவியலாளருமான வாடிம் ரோகோவினை கியேவில் முதன்முதலில் சந்தித்தேன். அனைத்துலகக் குழுவால் வெளியிடப்பட்ட நான்காம் அகிலத்தின் புல்லட்டின் (Bulletin of the Fourth International) வெளியீடுகளை பல ஆண்டுகளாக அவர் படித்து வந்தார். இறுதியாக, ரோகோவினால் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது, நாங்கள் கியேவில் சந்திக்க ஏற்பாடு செய்தோம். அங்கு நான் அனைத்துலகக் குழுவின் வரலாறு குறித்து விரிவுரைகளை வழங்கவிருந்தேன். பல நாட்கள் நடந்த கலந்துரையாடலின் போது, வரலாற்றின் அனைத்து அத்தியாவசிய கேள்விகள் தொடர்பாகவும் நாங்கள் உடன்பட்டுக்கொண்டோம். எல்லாவற்றிற்கும் மேலாக, அனைத்துலகக் குழுவின் மிகப் பெரிய பணி, அதன் வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவதைச் சார்ந்திருந்தது. அதாவது அக்டோபர் புரட்சியின் வரலாற்றையும் அதன் பின்விளைவுகளையும் தெளிவுபடுத்துவதாகும் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம். எல்லாவற்றிற்கும் மேலாக, லெவ் டேவிடோவிச் ட்ரொட்ஸ்கிக்கும் இடது எதிர்ப்பு (Left Opposition) அணிக்கும் எதிராக 1923ல் இருந்து அதிகாரத்துவத்தால் இயக்கப்பட்ட அனைத்து பொய்களையும் மறுப்பது இதற்கு அவசியமாக இருந்தது. ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பு அணியும் ஸ்ராலினிசத்திற்கு ஒரு புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேசிய மாற்றீட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வேலைத்திட்டத்தினை முன்வைத்து போராடி இருந்ததை நிரூபிக்க வேண்டியிருந்தது

ஜனவரி 1998 இல் வாடிம் ரோகோவின் [Photo: David North/WSWS]

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், ரஷ்யா மற்றும் மேற்கிலுள்ள வரலாற்றாசிரியர்கள் ஸ்ராலினிச ஆட்சியின் பழைய பொய்களை மீண்டும் கூறுவதன் மூலம் மட்டுமல்லாமல், புதியவற்றைக் கண்டுபிடிப்பதன் மூலமும் ட்ரொட்ஸ்கி மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான ஆர்வத்தின் மறுமலர்ச்சியை முன்கூட்டியே தடுக்க முயன்றனர். பழைய, புதிய பொய்கள் அனைத்தையும் மறுப்பது அவசியமாக இருந்தது. எனவே, கியேவில் தோழர் ரோகோவின், சோவியத்துக்குப் பிந்தைய வரலாற்றுப் பொய்மைப்படுத்தலுக்கு எதிரான உலகளாவிய பிரச்சாரத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் இணைந்து போராடுவதற்கு தனது அறிவார்ந்த ஆற்றல் முழுவதையும் அர்ப்பணிப்பதாக ஒப்புக்கொண்டார்.

1994ல் முதன்முதலில் கண்டறியப்பட்டு, 1998 செப்டம்பரில் தனது உயிரைப் பறித்த கொடிய நோய் இருந்தபோதிலும், தோழர் வாடிம், அனைத்துலகக் குழு ஏற்பாடு செய்த கூட்டங்களில் உலகெங்கிலும் விரிவுரையாற்றியதுடன் மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான இடது எதிர்ப்பினதும் நான்காம் அகிலத்தினதும் போராட்டம் குறித்த தனது வரலாற்று புகழ்மிக்க ஏழு தொகுதிகளை கொண்ட படைப்பில்  'ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்றீடு இருக்கிறதா?' என்ற கேள்விக்கு அவர் தீர்க்கமாக பதிலளித்தார்.

போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டதன் ஐந்தாவது ஆண்டு நிறைவை நீங்கள் கொண்டாடும் வேளையில், அதன் காரியாளர்கள் இந்த மாபெரும் ட்ரொட்ஸ்கிச மற்றும் புரட்சிகர வரலாற்றாசிரியரின் நினைவிற்கு அஞ்சலி செலுத்துவது மட்டுமல்லாமல், ரஷ்யாவிலும் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதிலும் நான்காம் அகிலத்தை கட்டியெழுப்புவதில் வரலாற்று உண்மைக்கான போராட்டம் மிக முக்கியமான பணியாக உள்ளது என்பதை அங்கீகரிப்பதும் முக்கியமாக இருக்கிறது.

சோவியத்துக்குப் பிந்தைய வரலாற்றுப் பொய்மைப்படுத்தலுக்கு எதிரான சமகாலப் போராட்டமானது, இப்போது சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மற்றும் முதலாளித்துவ மீட்சியின் பேரழிவுகரமான விளைவுகளை அம்பலப்படுத்தும் ஒரு போர் நிலைமைகளின் கீழ் அபிவிருத்தியடைகிறது. போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பிற்க்கும் அனைத்துலகக் குழுவிற்கும் இடையிலான அரசியல் தொடர்பானது 2022 ஜனவரியில், உக்ரேனில் போர் வெடிப்பதற்கு முன்னதாகவே தொடங்கியது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும் தோழர்களான றிற்ஸ்கி மற்றும் ரோரிச்சுக்கும் இடையிலான பரந்த கடிதப் போக்குவரத்து நெருங்கிவரும் போரின் நிழலில் தொடங்கி, இந்த தீவிரமடைந்து வரும் மோதலின் ஆண்டு முழுவதும் தொடர்கிறது.

பெரும் நிகழ்வுகள் அரசியல் போக்குகளை பரிசோதிக்கின்றன. நேட்டோ ஏகாதிபத்தியம் மற்றும் ரஷ்ய தேசிய பேரினவாதத்தை எதிர்க்கும் ரஷ்யா மற்றும் உக்ரேன் இரண்டிலுமுள்ள போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் தோழர்களின் விடையிறுப்பு ட்ரொட்ஸ்கிச சர்வதேசியவாதத்தின் அடித்தள கொள்கைகளுக்கு உங்கள் உறுதிப்பாட்டிற்கு சான்றளிக்கிறது. புட்டின் ஆட்சியின் பொறுப்பற்ற மற்றும் விரக்தியான கொள்கைகளுக்கு எதிரான உங்கள் உறுதியான நிலைப்பாடு நிகழ்வுகளால் நிரூபணமாகியுள்ளது. போர் குறித்து பெப்ரவரி 21 அன்று புட்டின் ஆற்றிய உரையானது, அவரது அரசியல் தவறான கணிப்புகளை மட்டுமன்றி, அவரது ஆட்சியின் வரலாற்று முன்னோக்கின் திவால்தன்மையின் பரிதாபகரமான சுய வெளிப்பாடாகும்.

ஏமாற்றமடைந்த மற்றும் நிராகரிக்கப்பட்ட காதலனின் மொழியைப் பயன்படுத்தி, புட்டின் இப்போது ஏகாதிபத்தியவாதிகளை ஈர்ப்பதற்கான தனது முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாக புகார் கூறுகிறார். அவரது 'மேற்கத்திய கூட்டாளிகளால்' அவர் கொடூரமாக காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளார். சமாதானத்திற்கான அவரது விருப்பத்தை அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை. புட்டின் இவ்வாறு குற்றம்சாட்டினார்:

மேற்கத்திய ஆட்சியாளர்களின் வாக்குறுதிகள், டொன்பாஸில் அமைதியை விரும்புவதற்கான அவர்களின் உறுதிமொழிகள், இப்போது நாம் பார்ப்பது போல, ஒரு போலி, கொடூரமான பொய்யாக மாறியதை காண்கின்றோம். அவர்கள் வெறுமனே நேரத்தை கடத்தி, நிறைய ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டு, அரசியல் படுகொலைகளை கண்டுகொள்ளாமல் இருந்தனர். தேவையில்லாதவர்கள் மீதான கியேவ் ஆட்சியின் ஒடுக்குமுறை, விசுவாசிகளை அச்சுறுத்துதல் மற்றும் உக்ரேனிய நவ-நாசிக்களை டொன்பாஸில் பயங்கரவாதச் செயல்களைச் செய்ய அதிகரித்தளவில் ஊக்குவித்தனர். தேசியவாத பட்டாலியன்களின் அதிகாரிகள் மேற்கத்திய கல்விக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் பயிற்சி பெற்றனர், அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன.

டால்ஸ்டாயின் படைப்பில் ('Anna Karenina') வரும் அன்னாவின் ஏமாற்றப்பட்ட கணவரான அலெக்ஸி கரெனின் எனும் கதாபாத்திரத்திற்கு இணையான பொறுமையுடன், புட்டின் தனது காதலர்களான மேற்கத்திய கூட்டாளிகளுக்கு சந்தேகத்தின் ஒவ்வொரு நன்மையையும் வழங்கினார். ஆனாலும் அவர் காட்டிக்கொடுக்கப்பட்டார்.

டொன்பாஸ் எரிந்துகொண்டிருந்தபோது, இரத்தம் சிந்தப்பட்டபோது, ரஷ்யா நேர்மையாக ஒரு அமைதியான தீர்வைத் தேடியபோது, இதை நான் வலியுறுத்த விரும்புகிறேன், அவர்கள் மக்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள், உண்மையில், நன்கு அறியப்பட்ட வட்டாரங்களில் அவர்கள் சொல்வது போல மறைத்துவைத்த திட்டத்துடன் விளையாடிக் கொண்டிருந்தனர். முழு காலப் பகுதியிலும் அது வெளிப்படுகிறது.

இந்த கேவலமான ஏமாற்றும் முறை இதற்கு முன்பு பல முறை முயற்சிக்கப்பட்டுள்ளது. யூகோஸ்லாவியா, ஈராக், லிபியா, சிரியாவை அழித்தபோது அதே நேர்மையற்ற, போலித்தனமான முறையில் அவர்கள் நடந்து கொண்டனர். இந்த அவமானத்தில் இருந்து அவர்களால் ஒருபோதும் தங்களை கழுவிக் கொள்ள முடியாது. கௌரவக் கருத்துக்கள், நம்பிக்கை, கண்ணியம் போன்ற கருத்துக்கள் அவர்களுக்கானவை அல்ல. 

மேலும், இறுதி புலம்பலில், புட்டின் தனது அதிர்ச்சிகரமான கண்டுபிடிப்பை அறிவிக்கிறார்:

காலனித்துவம், சர்வாதிகாரம், மேலாதிக்கம் ஆகியவற்றின் நீண்ட நூற்றாண்டுகளின் போது, அவர்கள் முழு உலகத்தைப்பற்றியும் கவனத்திலெடுக்காது எல்லாவற்றையும் அனுமதிப்பதையும் வழமையாக்கிக் கொண்டனர். அவர்கள் தங்கள் சொந்த நாட்டு மக்களை அதே அலட்சியத்துடனும் கண்ணியத்துடனும் நடத்துகிறார்கள் என்பது வெளிப்படுகிறது. அவர்கள் சமாதானத்தை நாடுவது குறித்தும், டொன்பாஸ் குறித்த ஐ.நா பாதுகாப்பு குழுவில்  தீர்மானங்களை கடைப்பிடிப்பது பற்றிய கட்டுக்கதைகள் மூலம் அவர்களையும் சிடுமூஞ்சித்தனமாக ஏமாற்றியுள்ளனர். உண்மையில், மேற்கத்திய உயரடுக்கினர் முற்றிலும் கொள்கையற்ற பொய்களுக்கான அடையாளமாக மாறிவிட்டனர்.

ஏகாதிபத்தியவாதிகள், ஏகாதிபத்தியவாதிகளாகவே செயற்பட்டனர். என்ன ஒரு அதிர்ச்சியான ஆச்சரியம்! ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களைப் படித்திருந்தால் புட்டின் இந்த வெளிப்பாட்டின் அதிர்ச்சியிலிருந்து தப்பித்திருக்கலாம். ஆனால், அவர் தனது உரையில் தெளிவுபடுத்தியபடி, அவர் தனது உத்வேகத்தை அக்டோபர் புரட்சியின் அறிவுக்கூர்மையுடைய மார்க்சிச தலைவர்களிடமிருந்து பெறவில்லை, மாறாக ஜாரிச எதிர்ப்புரட்சியின் சிற்பியான பியோர் ஸ்டோலிபினிடமிருந்து (Pyotr Stolypin) பெறுகிறார். ஆனால் துரதிஷ்டமான ஜாரினுடைய பிரதம மந்திரியின் முன்னோக்கு, 100 ஆண்டுகளுக்கும் மேலாக புரட்சியின் அணுகுமுறையை எதிர்ப்பதில் இருந்ததை விட, 21 ஆம் நூற்றாண்டில் புரட்சிகர சக்திகளை எதிர்த்துப் போரிடுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்காது. 

போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் பணியானது மிகப் பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவைக் கட்டியெழுப்பும் பணியை முன்னெடுத்துச் செல்வதில், நீங்கள் வரலாற்றுரீதியான 'ரஷ்யப் பிரச்சினைக்கு' தத்துவத்திலும் நடைமுறையிலும் தீர்வு காண்கிறீர்கள்.

உங்கள் தோழர்,

டேவிட் நோர்த்

Loading