அதானி குழும ஊழல் குற்றச்சாட்டுகள் இந்தியாவின் நிதிச் சந்தைகளை, மோடி அரசாங்கத்தை உலுக்கி எடுத்தன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

ஒரு வோல் ஸ்ட்ரீட் முதலீட்டு நிறுவனமானது, அதன் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் மீது ஊழல் நடைமுறைகளைக் குற்றம் சாட்டி, ஒரு மோசமான அறிக்கையை வெளியிட்டதிலிருந்து, இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் பங்கு மதிப்பீடு இரண்டு வாரங்களில் பாதியாகக் குறைந்துள்ளது.

அதானி குழுமத்தின் அதிர்ஷ்டத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றமானது இந்தியாவின் நிதிச் சந்தைகளையும் நாட்டின் தீவிர வலதுசாரி, நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்தையும் உலுக்கி எடுத்துள்ளது.

அதானி குழுமத்தின் சுருங்கும் சந்தை மூலதனம் இந்திய வங்கிகளின் இருப்புநிலைகளை பாதிக்கும் என்பதால் நிதி தொற்று பரவும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது, அது ஏற்கனவே ஒரு மலை போன்ற கடன் மற்றும் பிற பெரும் கடன் வழங்குவோர் மற்றும் முதலீட்டாளர்களின் அழுத்தங்களின் கீழ் உள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு வரை ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்று கூறப்பட்ட அதானி குழுமமும் மற்றும் அதன் தலைவர் கவுதம் அதானியும் பாஜக அரசாங்கத்தின் விரிவான ஆதரவால் எந்த அளவுக்குப் பலன் அடைந்துள்ளனர் என்பதை இந்தியாவின் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு கந்தலாண்டியாக இருந்தது முதல் பெரும் செல்வந்தராக வளர்ந்த, தன்னலக்குழு கௌதம் அதானியுடன் மோடிக்கு பல தசாப்தங்களாக தொடர்பு இருந்தது. மே 2014 இல் புது தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதானியின் சொத்துக்கள் அபரிமிதமாக வளர்ந்துள்ளன.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கௌதம் அதானி

'அதானி குழுமம்: உலகின் 3வது பணக்காரர் எப்படி கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய மோசடியான ஆட்டத்தை ஆடினார்' என்ற தலைப்பில் ஜனவரி 24 அன்று, ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி ஒரு அறிக்கையை வெளியிட்டது. பொதுவில் பட்டியலிடப்பட்ட 9 நிறுவனங்களை உள்ளடக்கிய அதானி குழுமம்-கௌதம் அதானியின் தலைமையில் ஏழு நிறுவனங்கள்- பரவலான கணக்கியல் மோசடி மற்றும் குழுமத்தின் நிதி மதிப்பீட்டை உயர்த்துவதற்காக வெட்கக்கேடான முறையில் பங்குகளை கையாள்வதாக குற்றம் சாட்டியது. மொரிஷியஸ், சைப்ரஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிற இடங்களில் ஷெல் நிறுவனங்களின் 'பேரரசு' ஒன்றை உருவாக்குவதன் மூலம், சட்டவிரோத 'பங்குகளை ஓரிடத்தில் நிறுத்தல்', 'ஒரே பங்கை வாங்குதல் விற்றல்' மற்றும் பணமோசடி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளதன் மூலம் அது அவ்வாறு செய்துள்ளதாக அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவின் பெரு நிறுவன ஊடகங்கள் அதானி மற்றும் அவரது அதானி குழுமத்தின் விரைவான வளர்ச்சியை 'இந்தியாவின் வளர்ச்சிக் கதைக்கு' மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்று விளம்பரப்படுத்தியுள்ளன. இதைச் செய்வதன் மூலம், அதானிக்காக அவர்கள் நினைத்ததை விட அதிகமாகச் செய்து முடித்திருக்கிறார்கள், உண்மையில் இது புதிதாக உருவாகிய இந்திய பில்லியனர்கள் மற்றும் பன்மடங்கு மில்லியனர்களின் சூதாட்டத்தின் அடையாளமாகும். இது கடந்த மூன்று தசாப்தங்களாக அரசால் செயல்படுத்தப்பட்ட பொதுச் சொத்துக்களைச் சூறையாடுதல், அபாரமான வரி குறைப்புகள் மற்றும் பிற சலுகைகள் மற்றும் நாட்டின் வறிய தொழிலாள வர்க்கத்தை கொடூரமான முறையில் சுரண்டல் மூலம் எழுந்துள்ளது. 

அதானியின் வெற்றிக்கான திறவுகோல் மோடி மற்றும் அவரது அரசாங்கத்துடனான நெருங்கிய உறவுகள் என்பது நீண்ட காலமாக பகிரங்கமான இரகசியமாக உள்ளது. துறைமுகங்கள், மின்சார உற்பத்தி மற்றும் பரிமாற்றம், நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் விமான நிலையங்கள் உட்பட பொதுவில் கட்டப்பட்ட உள்கட்டமைப்பின் பெரும் பகுதிகளை தனியார்மயமாக்கியதன் மூலம் அவர் பயனடைந்துள்ளார். இந்தச் சொத்துக்கள் அவற்றின் மதிப்புக்குக் குறைவாக விற்கப்பட்டன, மேலும் அவை வாங்குவதற்கான பெரும்பகுதி இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் அதானிக்கு வழங்கிய பாதுகாப்பற்ற கடன்களிலிருந்து வந்தன.

மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அடிக்கடி கூடவே இருந்த அதானி, பாஜக அரசாங்கத்தின் உயர்மட்டத் தலையீடுகளாலும் பலனடைந்துள்ளார், அவற்றில் சில பெரிய வெளிநாட்டுக் கையகப்படுத்துதலுக்கான பாதையை சுமூகமாக மோடியே வழங்கியதாகத் தெரிகிறது.

சமீபத்தில், அதானி இஸ்ரேலுடனான இந்தியாவின் வளர்ந்து வரும் இராணுவ-பாதுகாப்பு கூட்டாண்மை மற்றும் இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தை கையகப்படுத்துவதற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் மோடிக்கு இருந்த நெருங்கிய தொடர்புகளை வர்த்தகமாக்கிக் கொண்டார்.  

முன்னதாக, அதானி குழுமம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்தை உருவாக்கும் உரிமையைப் பெற்றது.

அதானி குழுமத்தின் ஊழல் நடவடிக்கை மோடி அரசாங்கத்தின் அடையாளமாக இருக்கும் மற்றும் ஆருயிர் நண்பனாக இருக்கும் முதலாளித்துவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 2001 முதல் 2014 வரை குஜராத் முதலமைச்சராக மோடி இருந்த காலத்தில் முன்னோடியாக இருந்த 'குஜராத் மாதிரி' என்றழைக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி தற்போது தேசிய அரங்கில் நகலெடுக்கிறது. 'குஜராத் மாதிரி' என்பது அடிப்படையில் அரசாங்கக் கொள்கையையும் அரசு அதிகாரத்துவத்தையும் இலாப நலன்களுக்கு முற்றிலும் அடிபணியச் செய்வதாகும். தனியார் பெருநிறுவனங்கள், மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் மற்றும் அரசாங்க சொத்துக்கள் மற்றும் பிற 'முதலீட்டாளர்-சார்பு' கொள்கைகளின் தீயாக பரவும் விற்பனையிலிருந்து பயனடைவதில் முதன்மையானவர்களாக இருந்தார்கள். இதற்கிடையில், தொழிலாளர் போராட்டங்கள் இரக்கமின்றி ஒடுக்கப்பட்டன.

உப்சாலா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அசோக் ஸ்வைன், ஆசியா டைம்ஸுக்குக் கூறியது போல், அதானியின் பிரமாண்டமான தனிப்பட்ட செல்வப்பெருக்கு பிரமிக்க வைப்பதாக இருந்தது மற்றும் மோடி மற்றும் பாஜக அரசாங்கத்துடனான அவரது உறவுகளுடன் அது தெளிவாகப் பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளது. “2013 செப்டம்பரில் மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக வருவதற்கு முன்பு, அதானியின் சொத்து மதிப்பு 1.9 பில்லியன் டாலராக இருந்தது,” என்று ஸ்வைன் விளக்கினார், “ஆகஸ்ட் 2022 இல், 230 மில்லியன் இந்தியர்களை கோவிட் வறுமையில் தள்ளிய போது, அதானியின் மதிப்பு 137 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது குறித்து ஒரு அறிக்கையை எழுதும் யாராவது ஒருவருக்கு ஏன்  ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி தேவைப்படும்?'  என்று அவர் கேட்டிருந்தார்.

ஜனவரி 29 அன்று, அதானி குழுமம் ஹிண்டன்பர்க் அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பெருநிறுவன குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு 413 பக்க 'பதிலை' வழங்கியது. ஆச்சரியமற்ற வகையில், அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் 'இந்தியா மீதான கணக்கிடப்பட்ட தாக்குதல்' என்று கூறி கவுதம் அதானியை தேசியக் கொடியில் அந்த பதில் போர்த்தியது.

அதன் பதிலில், ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கையானது 413 பக்கங்களில் 30 பக்கங்கள் மட்டுமே அதன் ஆரம்ப அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சனைகளை ஏதோ ஒரு வகையில் எடுத்துரைத்துள்ளது, இந்த அறிக்கை எழுப்பிய 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு அதானி குழுமம் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. “தேசத்தை திட்டமிட்டு சூறையாடும் அதே வேளையில், இந்தியக் கொடியில் தன்னைத் தானே போர்த்திய அதானி குழுமத்தால், இந்தியாவின் எதிர்காலம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது” என்றும் சுட்டிக்காட்டியது. 

ஆரம்பத்தில் மோடி அரசாங்கம் ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை குறித்து மரண மௌனம் காத்தது. ஆனால் இந்திய மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகளில் அதானி குழுமம் துடைத்துக் கட்டப்பட்டதால், நெறிப்படுத்தும் அதிகாரிகள் தங்கள் வேலையைச் செய்வார்கள் என்று உறுதியளித்து ஒரு அறிக்கையை வெளியிட நிதியமைச்சரைத் நிர்ப்பந்தித்தது, மேலும் 'நமது பொருளாதாரம் மற்றும்  உருவத்தின் மேக்ரோ பொருளாதார அடிப்படைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை' என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

இருப்பினும், இது சர்வதேச முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கத் தவறிவிட்டது. அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மாபெரும் வங்கியான சிட்டிகுரூப், புதிய கடன்களுக்கான பிணையமாக அதானி குழுமத்தின் பங்குகளையோ அல்லது பத்திரங்களையோ இனி ஏற்கப்போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டது. இதே போன்ற நடவடிக்கைகளை சுவிஸ் வங்கி கிரெடிட் சூயிஸ் மற்றும் பிரிட்டிஷ் கடன் வழங்கும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டும் எடுத்துள்ளன.

திங்கட்கிழமை, பிப்ரவரி 6, ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டபோது அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் அவற்றின் மதிப்பிடப்பட்ட $218 பில்லியனில் இருந்து மொத்தமாக சுமார் $110 பில்லியன்களை இழந்துள்ளன.

திங்களன்று அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலையில் மேலும் சரிவு நிறுத்தப்பட்டது, ஏனெனில் இந்திய பங்கு மற்றும் நெறிப்படுத்தும் அதிகாரிகள் தலையிட்டீனால் அதானியின் அதிகபட்ச பங்கு விலை சரிவு மைனஸ் 5% ஆகவும் அதானி டிரான்ஸ்மிஷன் மைனஸ் 10% ஆகவும் குறைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் பங்கு விலைகளும் இந்த வரம்புகளை நோக்கி சரிந்துள்ளன.

சமீபத்திய நாட்களில், அதானி குழுமத்தின் பங்கு விலைகள் சற்று ஏற்றம் கண்டன. இதற்குக் காரணம் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஏற்கனவே பெரிய அதானி குழும முதலீட்டாளரான இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனம் போன்ற, பிற பிரதானமாக அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் இருந்து மேலும் நிதி உட்செலுத்தப்படுவது தான் என்று நம்புவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன.

அதானி குழுமத்தின் சாத்தியமான சரிவில் இருந்து பொருளாதார மற்றும் அரசியல் வீழ்ச்சியைப் பற்றி அரசாங்கம் தெளிவாகக் கவலை கொண்டுள்ளது. மோடி அரசாங்கமும் இந்தியாவின் பெருநிறுவன  ஊடகங்களும் இந்தியாவின் 'உலகைத் தூக்கிப்போடும்' பொருளாதார வளர்ச்சியைப் பற்றி தொடர்ந்து மேடைப் பேச்சுகள் பேசி வருகின்றன. ஆனால் யதார்த்தம் மிகவும் வேறுபட்டது.

2023-24 பட்ஜெட்டை, பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், பெரு வணிகர்களின் நலனுக்காக துறைமுகங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அல்லது கட்டமைக்க மூலதனச் செலவினங்களுக்காக ரூ.13.7 டிரில்லியன் ($167 பில்லியன்) அபாரமான ஒதுக்கீட்டை அரசாங்கம் அறிவித்தது.

இந்தியாவில் தற்போதுள்ள உள்கட்டமைப்பு மிகவும் மோசமானதாக இருக்கையில்  தனியார் முதலீடு பல ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்து வரும் நிலைமைகளின் கீழ், உள்கட்டமைப்பு செலவினங்கள் அபாரமாக உயர்த்தப்படுவதற்கான முக்கியக் காரணம் பொருளாதாரத்தை முன்தள்ளி எடுத்துச்செல்வது தான்.   ஏனென்றால், இந்தியாவின் நிறுவனங்கள் கடனால் சுருங்கி, அதானி குழுமத்தின் முறையில் அரசாங்கத்தின் பெரும் தொகையிலிருந்து பயனடைய முடியாதபோது, முதலீடு செய்வதை விட பங்குகளை திரும்பப் பெறுதல் மற்றும் பிற நிதிக் கையாளுதல்களில் ஈடுபட விரும்புகின்றன.

அதானி உடனான மோடியின் நெருங்கிய உறவுகள் அம்பலப்படுத்தப்படுவதைப் பற்றி அரசாங்கத்தின் தீவிர உணர்திறனைச் எடுத்துக் காட்டும் நடவடிக்கையாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உரையின் பெரும் பகுதிகளை நாடாளுமன்றப் பதிவேட்டில் இருந்து நீக்கும்படி உத்தரவிட்டார், அந்த உரையில் அதானி குழுமத்துடனான அரசாங்க உறவுகள் மற்றும் 2014-ம் ஆண்டுக்கு முன்னதாக  கெளதம் அதானி உடனான மோடியின் உறவு குறித்த கேள்விகளை ராகுல் காந்தி எழுப்பியிருந்தார்.  

2004-14 வரை பதவியில் இருந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் பல்வேறு இந்திய வணிக நிறுவனங்களுடன் ஏராளமான ஊழல் பரிவர்த்தனைகளில் மூழ்கியிருந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான ஊழல்கள் பற்றி குறிப்பிட்டதன் மூலம் மோடி அதற்கு பதிலடி கொடுத்தார். அரசாங்க-வணிக ஊழலின் இந்த பரந்த தொடர்பு அவரது ஆட்சியில் பெரிதும் விரிவடைந்துள்ளது என்பதை மோடியால் நிச்சயமாக சொல்ல முடியாது மற்றும் சொல்லவும் மாட்டார். அது இந்திய முதலாளித்துவத்தின் DNA யில் வேரூன்றியுள்ளது; ஏகாதிபத்தியம் தலைமையிலான உலக முதலாளித்துவ ஒழுங்குடன் முழு அளவிலான ஒருங்கிணைப்புக்கு ஆதரவாக 1991 இல் இந்திய ஆளும் வர்க்கம் அதன் அரசு தலைமையிலான முதலாளித்துவ வளர்ச்சி மூலோபாயத்தை முறையாக கைவிட்டதிலிருந்து அதிவேகமாக வளர்ந்துள்ளது.

அதானி மற்றும் மோடி இருவரும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் நெருங்கிய தொடர்பு 2003 ஆம் ஆண்டு வரை பின் செல்கிறது.  அதாவது பிப்ரவரி 2002 இல் குஜராத்தில் முஸ்லீம் எதிர்ப்பு படுகொலையைத் தூண்டி மேற்பார்வையிடுவதில் குஜராத்தின் முதலமைச்சராக மோடியின் பாத்திரத்தின் காரணமாக அவர் தேசிய முக்கியத்துவம் பெற்ற சிறிது காலத்திற்குப் பிறகு ஆகும். பிஜேபி மற்றும் அதன் கூட்டணி அமைப்புகளுடன் தொடர்புடைய இந்து-பயங்கரவாத கும்பல்களால் நடத்தப்பட்ட இந்த படுமோசமான படுகொலையானது குறைந்தது 2,000 அப்பாவி மக்களின் கொடூரமான மரணத்திற்கு காரணமாக அமைந்தது, அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் ஆவார். இலட்சக்கணக்கான இதர வறிய முஸ்லிம்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டதோடு, இப்போதும் கூட இருக்கும் மோசமான அகதிகள் முகாம்களில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 2003 இல் புது தில்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில், மோடி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார், அப்போது இரண்டு பிரபல தொழிலதிபர்களான ராகுல் பஜாஜ் மற்றும் ஜம்ஷித் கோத்ரேஜ் ஆகியோர் குஜராத்தில் 'சட்டம் மற்றும் ஒழுங்கு' நிலைமை பற்றி மோடியை மேடையில் வைத்து ஆக்ரோஷமாக வசைபாடினர். 

இது அதானி மற்றும் பல குஜராத் தொழிலதிபர்களை கோபப்படுத்தியது. 'குஜராத்துக்கு அவப்பெயரை' ஏற்படுத்தியதற்காக CII உடன் முறித்துக் கொண்ட அவர்கள், பின்னர் முதல்வர் மோடியின் கீழ் மாநிலத்தை ஒப்பிடமுடியாத வணிக நட்பு மாநிலமாக மேம்படுத்துவதற்காக ”எழுச்சி வாய்ந்த குஜராத்” என்ற அமைப்பை உருவாக்கினர். அரசாங்க அதிகாரத்துவம், மக்கள் எதிர்ப்புகள் அல்லது தொழிலாளர் போராட்டங்களில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் பெருநிறுவனங்களின் இலாப நலன்களைப் பூர்த்தி செய்யும் ஒரு எதேச்சதிகாரத் தலைவராக மோடியைக் காட்டி, இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ”எழுச்சி வாய்ந்த குஜராத்” வணிக உச்சி மாநாட்டை அவர்கள் தொடங்கினர்.

இந்த நிகழ்வு விரைவில் இந்திய மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய ஈர்ப்பாக இருந்தது, ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பு, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) மற்றும் CII ஆகியவை மோடியிடம் 2003 நிகழ்வில் நடந்தது குறித்து  

ஒரு சாஷ்டமாங்கமான மன்னிப்பு கேட்டன. அந்த நிகழ்வுக்கு அவை அனைத்தும் நிதி உதவி அளித்துள்ளன.

முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை இரக்கமின்றி நடைமுறைப்படுத்திய மோடி, டாட்டா சாம்ராஜ்யத்தின் வாரிசான ரத்தன் டாட்டா போன்ற இந்திய தொழிலதிபர்களுக்கு விரைவில் அன்பானவராக ஆகிவிட்டார், டாட்டா  முந்தைய காலத்தில் மோடி போன்ற இந்து மேலாதிக்க குண்டர்களை ஒதுக்கி வைத்திருந்திருப்பார். ஆயினும்கூட, அதானி மோடியுடன் விருப்பமான உறவைத் தொடர்ந்தார்.

2014ல், இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகள் மீதான வர்க்கப் போர்த் தாக்குதலைத் தீவிரப்படுத்தவும், உலக அரங்கில் தங்கள் பெரும் சக்தியின் இலட்சியங்களை இன்னும் ஆக்ரோஷமாக வலியுறுத்தவும், இந்தியப் பெருவணிகங்கள், இந்து மேலாதிக்கப் பலசாலியாக வரக்கூடியவரையும் அவரது பிஜேபியையும் அதிகாரத்திற்கு கொண்டு வந்தது. இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களின் மத்தியில் அதானியின் ஏற்றம் விரைவில் போர் வேகத்தை எட்டியது. அவரை கடந்த ஆண்டு சுருக்கமாக உலகின் இரண்டாவது பெரும் பணக்காரர் ஆக்கியது. ஐந்து நாட்களுக்கு முன்பு, Forbes   அவரை 'வெறும்' $60 பில்லியன் மதிப்புடன் 18வது செல்வந்தராக பட்டியலில் சேர்த்தது.

Loading