இலங்கையில் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவடைந்துள்ளது 

இலங்கையில் தமிழ் முதலாளித்துவ தேசியவாத கட்சிகளின் கூட்டணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, அதன் தலைமையில் இருந்த இலங்கை தமிழரசுக் கட்சி, மார்ச் 9 நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவெடுத்ததை அடுத்து மீண்டும் பிளவுபட்டுள்ளது.

அதன் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் படி, தேர்தலுக்காக பொதுச் சின்னமொன்றை அறிமுகப்படுத்தும் பிரேரணையை நிராகரித்தே தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளது. 

தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளைக் காக்க என்ற பெயரில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்புக்குள், ஒவ்வொரு கட்சியினதும் சொந்த முதலாளித்துவ நலன்கள் மோதிக்கொள்வதையே இந்தப் பிளவு மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் கூட்ட மேடையில் இடமிருந்து இரண்டாவதாக கட்சி தலைவர்கள் சி.வி.கே. சிவஞானம், மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ. சுமந்திரன் [Phhoto: Facebook/ Ilankai Tamil Arasu Kadchi]

ஏற்கனவே தமிழர் விடுதலைக் கூட்டணி. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் (ஈ.பி.ஆர்.எல்.எஃப்.) வெவ்வேறு காலப்பகுதியில் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியிருந்தன. 

தமிழரசுக் கட்சியின் வெளியேற்றத்தினைத் தொடர்ந்து, பங்காளிகளான ரெலோவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் (புளட்), சுரேஸ் பிரேமச்சந்திரன் தலமையிலான ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ரெலோவில் இருந்து வெளியேறியிருந்த ந.சிறிகாந்தா தலமையிலான தமிழ் தேசியக் கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் அடங்கிய ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய மூன்றையும் சேர்த்துக்கொண்டு தாங்களே தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ஜனநாயக) என்று அறிவித்துள்ளதுடன் உள்ளூராட்சி தேர்தலிலும் போட்டியிடுகின்றன.

தமிழரசுக் கட்சியோ தேர்தலில் கூடுதல் ஆசனங்களை வெல்வதற்காகவே தனித்துப் போட்டியிடுவதாகவும், தாங்கள் இன்னமும் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிப்பதாகவும் ஆர். சம்பந்தனே இன்னமும் கூட்டமைப்பின் தலைவர் என்றும் கூறிக்கொள்கின்றது. 

தமிழரசுக் கட்சித் தலைவரான மாவை சேனாதிராசா, விமர்சனங்களைத் திசை திருப்பும் முயற்சியில், “நாங்கள் தேர்தலுக்காக இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்திருந்தாலும், தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுக்காக இணைந்து பணியாற்றுவோம்,” என்றார்.

மக்கள் மத்தியில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கிலேயே ஏனைய கட்சிகள் சீவியம் நடத்துவதாக இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்கின்றனர். தமிழரசுக் கட்சி தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும், தங்களால் மக்கள் மத்தியில் பிரசித்திப்படுத்தப்பட்ட கட்சியின் வீட்டுச் சின்னத்தை அது கொண்டுபோய்விட்டதாகவும் மற்றைய கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

புதிய “ஜனநாயக” கூட்டமைப்பில் அடங்கியுள்ள எல்லாக் கட்சிகளும் முன்னாள் ஆயுதக் குழுக்களாகவும், புலிகளுக்கு எதிராக இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தின் துணைப்படைக் குழுக்களாகவும் செயற்பட்டதுடன், புலிகளைப் போலவே சகோதரப் படுகொலையில் ஈடுபட்டவையாகும். 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையில் இருந்த கட்சி என்ற வகையிலும், ஏகாதிபத்திய சக்திகளுடனும் இந்திய ஆளும் வர்க்கத்துடனும் நெருக்கமாக ஒத்துழைத்த கட்சி என்ற வகையிலும், புலிகளின் தோல்விக்குப் பின்னரான கடந்த தசாப்தத்தத்தில் கொழும்பு ஆளும் தட்டுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்களிலும் தமிழரசுக் கட்சியே பங்கெடுத்துக்கொண்டதுடன் உறவுகளை வளர்த்துக்கொண்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை சம்பந்தமாக “அரசியல் தீர்வு” எனப்படுவதைக் காண்பதற்காக பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த காலத்திலேயே தமிழரசுக் கட்சி வெளியேறியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கும் தமிழ் மக்களின் ஜனநாய உரிமைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

கோவிட்-19 தொற்று நோய் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினதும் விளைவாக இலங்கை முதலாளித்துவம் பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ளது. அதிலிருந்து தலைதூக்குவதற்காக அவரது முன்னோடியான இராஜபக்ஷவைப் போலவே, நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்களின் முதுகில் சுமத்துவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ் சிக்கன நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விடும் விக்கிரமசிங்க, அதற்கு எதிராக தொழிலாளர்களின் பெருகிவரும் எதிர்த் தாக்குதலை நசுக்குவதற்கு சபதமெடுத்துள்ளார். 

விக்கிரமசிங்க, தன் கைகளைப் பலப்படுத்திக்கொள்வதற்கு தமிழ் முதலாளித்துவ தட்டுக்களின் ஆதரவைப் பெறுவதன் பேரில், அரசியல் தீர்வு காண தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்தார். தானும் பங்காளியாக உள்ள இலங்கை ஆளும் வர்க்கத்தை காப்பதை கடமையாக உணரும் தமிழரசுக் கட்சி, இந்தியாவின் தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பகிர்வதற்கு வலியுறுத்தி பேச்சுவார்த்தையில் பங்குபற்றியது.

அண்மையில் தமிழ் அரசியல் கட்சிகளை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியைப் பற்றி சுட்டிக் காட்டியதோடு 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்காக பேச்சுவார்த்தைகளை தொடர வலியுறுத்தினார்.

இந்த நிலையில், சமஷ்டி ஒழுங்கே வேண்டும் என கடும்போக்கை கடைப் பிடிக்கும் ஏனைய கட்சிகளை உதறித் தள்ளிவிட்டு, ஏகாதிபத்தியம், இந்தியா மற்றும் கொழும்பு ஆளும் தட்டுடனும் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, கொழும்புடன் கணிஷ்ட பங்காளியாக முன்நகர முடியும் என தமிழரசுக் கட்சி நம்பக் கூடும்.

பிராந்தியத்தில் தங்களது நலன்களுக்கு பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் இருப்பு குறுக்கே நிற்பதால், அதை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், 2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்கா மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வாஷிங்டன் அதன் பயங்கரவாதக் குழுக்களின் பட்டியலில் புலிகளையும் சேர்த்துவிட்டது. இதை அடுத்து அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துடன் புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு, சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நுழைந்தனர். 

இந்த சூழ்நிலையிலேயே, புலி ஆதரவு மற்றும் எதிர் கட்சிகளைக் கொண்டு, ஏகாதிபத்திய சக்திகளதும் இந்தியாவினதும் ஆசியுடன் 2001 இல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. வடக்கு-கிழக்கின் பெரும் பகுதியில் அதிகாரம் செலுத்திய புலிகள் அப்போதிருந்து தங்களது அரசியல் பாராளுமன்ற ஊதுகுழலாக தமிழ் கூட்டமைப்பை பயன்படுத்திக்கொண்டனர். 

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களதும் இந்தியாவினதும் முழு ஆதரவுடன், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், 2009 மே மாதம், பல பத்தாயிரக்கணக்கான தமிழ் பொது மக்களின் படுகொலையுடன் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டதை மௌனமாக ஏற்றுக்கொண்ட தமிழ் கூட்டமைப்பு, அடுத்த கட்டமாக ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்து கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாட்டைப் பெறும் முயற்சியைத் தொடங்கியது. 

அடுத்து 2010 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் போர் குற்றங்களுக்கு பொறுப்பான அமெரிக்கச் சார்பு வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்க தமிழ் கூட்டமைப்பு தேர்வு செய்துகொண்டது. இலங்கையை சீனாவின் செல்வாக்கில் இருந்து தூர விலக்குவதற்காக 2015இல் இராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு முழுமையாக ஒத்துழைத்த தமிழ் கூட்டமைப்பு அதன் மூலம் நியமிக்கப்பட்ட சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு ஏறத்தாழ பங்காளியாக இருந்தது.

கொழும்புடனான கொடுக்கல் வாங்கல்களுக்கு ஏதுவாக, புலிகளின் நீண்ட கால கோரிக்கையான, திவாலான சுயநிர்ணய உரிமை கோரிக்கையை கைவிட்ட தமிழ் கூட்டமைப்பு, ஒன்றிணைந்த இலங்கைக்குள் உள்ளக சுயநிர்ணயத்தை கோரியது. இத்தகைய விட்டுக்கொடுப்புகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் மூலம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் எதுவும் நிறைவேறாத சூழ்நிலையிலேயே அதன் செல்வாக்கு கீழிறங்கி உள் மோதல்கள் வெடிக்கத் தொடங்கின.

போர் முடிவுற்று 14 ஆண்டுகளை நெருக்கியுள்ள போதிலும், போரினால் காணாமல் போன மற்றும் யுத்தத்தின் முடிவில் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரக் கோரியும், புலி சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை ஒப்படைக்க கோரியும் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் தொடர் சத்தியாகிரக போராட்டங்களையும் அடிக்கடி ஊர்வலங்களையும் நடத்தி வருகின்றனர். 

வடக்குகிழக்கில்போரின்போதுகாணாமல்ஆக்கப்பட்டவர்களின்உறவினர்கள்கிளிநொச்சியில்ஆகஸ்ட் 12 நடத்தியஊர்வலம் (Image: WSWS media)

தமிழ் மக்களின் இத்தகைய துயரங்களை தங்களது ஏகாதிபத்திய சார்பு அரசியலுக்காக சுரண்டிக்கொள்ளும் தமிழரசுக் கட்சி மற்றும் ஏனைய தமிழ் முதலாளித்துவ தேசியவாத கட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் தந்திரோபாயமானவையே அன்றி வேறல்ல. அவை அனைத்தும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்தக் கட்சிகள் அனைத்தும், தமிழ் முதலாளித்துவ தட்டுக்களினதும் உயர் மத்தியதர வர்க்கத் தட்டுக்களதும் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. தமிழ் கட்சிகள் ஐக்கியமாக இருந்தால் அதிக சலுகைகளைப் பெற சிறந்த பேரம்பேசல் சக்தியாக இருக்கலாம் என்ற எண்ணத்தில், இவற்றின் பினாமிகளாக இருக்கும் சிலரால் உருவாக்கப்பட்ட, வடக்கு -கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு, கல்விமான்கள் மற்றும் மத குருக்களும் சகல தமிழ் கட்சிகளும் ஓரணியில் வரவேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.

எல்லா தமிழ் கட்சிகளும் தொழிலாள வர்க்கத்தை பரஸ்பரம் சுரண்டுவதற்காக வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை ஏற்படுத்திக்கொள்ள கொழும்புடன் பேரம் பேசுவதற்கு இந்தியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவை நாடுகின்றன. அதற்காக அவை வாஷிங்டனும் புது டில்லியும் சீனாவுக்கு எதிராக திட்டமிடும் போருக்கு ஆதரவளிப்பதுடன், சீன விரோத பிரச்சாரத்தையும் முன்னெடுத்து வருகின்றன. 

கடந்த பெப்பிரவரி 4 அன்று இலங்கை சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கில் இருந்து கிழக்குக்கு முன்னெடுத்த பேரணியில் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இராசமானிக்கம் சாணக்கியனும், இந்திய ஆளும் வர்க்கத்துக்கான தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்த காந்தி தொப்பியை அணிந்திருந்தனர். 

இலங்கை ஆளும் தட்டு, சர்வதேச ரீதியில் வளர்ச்சியடைந்து வரும் தொழிலாளர் போராட்டத்தின் பாகமாக இலங்கையில் தீவிரமடைந்து வரும் வர்க்கப் போராட்டம் சம்பந்தமாக பீதியடைந்துள்ளன. அதனால் கொழும்பு ஆளும் கும்பல் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக சிங்கள இனவாத துரும்புச் சீட்டைப் பயன்படுத்துவதைப் போலவே தமிழ் தட்டுக்கள் தமிழ் தேசியவாத துரும்புச் சீட்டைப் பயன்படுத்துகின்றன. 

போரின் பேரழிவுகளுக்கும் மேலாக விக்கிரமசிங்க அரசாங்கம் கட்டவிழ்த்துவிடுகின்ற சிக்கன நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தொழிலாளர்கள் இளைஞர்கள் நாடு பூராகவும் விரிவடைந்து வரும் போராட்டத்தில் சிங்கள தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்படும் சாத்தியம் பற்றி தமிழ் உயரடுக்கு பீதியடைந்துள்ளது. அதனாலேயே தமிழ் உயரடுக்கின் பினாமிகள், சுதந்திர தினத்தை தமிழருக்கு கரிநாளாகப் பிரகடனம் செய்து, “தமிழர்களின் அபிலாஷகள் சுயநிர்ணயம், தமிழ் தேசியம் மற்றும் மரபுவழித் தாயகம் என்பதை ’சர்வதேசத்துக்கு’ வெளிப்படுத்துவதற்காக” என்ற பெயரில் அந்த எதிர்ப்பை தமிழ் தேசியவாத வழியில் ஏகாதிபத்தியத்துக்கும் இந்தியாவுக்கும் பின்னால் முடிச்சுப் போட்டுவிடும் ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருந்தன. 

கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோடாபய இராபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் இராஜினமாச் செய்யவைத்த ஏப்பிரல்-ஜூலை போராட்டங்களில் தமிழர்கள் உட்பட 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம் என மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் நிராகரித்திருந்தனர். இலங்கையின் முழு முதலாளித்துவ கட்டமைப்புக்கும் சவால் செய்த இந்த போராட்டங்களால் பீதியடைந்த தமிழ் கட்சிகள், சிங்களவர்களுக்கு எதிராக தமிழர்களை நிறுத்த முயற்சித்ததுடன், போராட்டத்தில் தமிழர்களின் பங்குபற்றலை தடுக்க செயற்பட்டன. எவ்வாறெனினும் வெகுஜன எதிர்ப்பு தம்மீது திரும்புவதை தவிர்ப்பதற்காக தமிழ் கூட்டமைப்பு ஒரு சமாளிப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. 

யாழ்ப்பாணபல்கலைக்கழகமாணவர்கள் 4 ஏப்பிரல் 2022 அன்று கோடாபய இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக நடத்தியஎதிர்ப்புப்பேரணி [Photo: WSWS]

வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் பேசும் தொழிலாள வர்க்கத்தின் உண்மையான நண்பர்கள், ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிராக போருக்குத் தயார் செய்யும், உலகம் பூராகவும் போர் குற்றங்களுக்குப் பொறுப்பாளியான அமெரிக்க ஏகாதிபத்தியமோ அல்லது போருக்காக முன்னரங்க அரசாக செயற்படும் இந்திய ஆளும் வர்க்கமோ அல்ல. அத்தகைய ஒரு போர் முழு மனித குலத்தையும் அழிக்கும் ஒரு மூன்றாம் உலக அனுவாயுதப் போருக்கு அச்சுறுத்துகிறது. 

தமிழ் தொழிலாள வர்க்கத்தின் உண்மையான நண்பர்கள், அமெரிக்காவின் போர் தயாரிப்புகளின் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராகப் போராடி வரும் தெற்கில் உள்ள சிங்கள தொழிலாள வர்க்கமும் தெற்காசியாவிலும் உலகம் முழுதும் உள்ள தொழிலாள வர்க்கமுமே ஆகும்.

தமிழரசுக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ஜனநாயக) மற்றும் ஏனைய தமிழ் தேசியவாத கட்சிகளும் தூக்கிப் பிடிப்பது போல், மனித உயிர்கள் பற்றி எந்த அக்கறையும் இல்லாத அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு சேவை செய்வதன் மூலம் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வெல்ல முடியாது. ரஷ்யப் புரட்சியில் லெனினுடன் துணைத் தலைவராக செயற்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கி அபிவிருத்தி செய்த நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு நிரூபித்துள்ளது போல், பின்தங்கிய நாடுகளில் உள்ள முதலாளித்துவ ஆளும் தட்டு குறைந்தபட்ச ஜனநாயகக் கடமைகளைக் கூட இட்டு நிரப்ப இலாயக்கற்றது. 

சிறுபான்மை மக்களின் உரிமைகளை வெல்ல வேண்டுமெனில் இனவாத மற்றும் மதவாத அடக்குமுறைகளின் தோற்றுவாயான முதலாளித்துவ முறைமையை தூக்கி வீசி, சோசலிச கொள்கைகளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிக்க, அனைத்து முதலாளித்துவக் கட்சிகளில் இருந்தும் சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தையும் அதைச் சூழ கிராமப்புற ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்டப் போராட வேண்டியது அவசியமாகும்.

இந்த வேலைத் திட்டத்துக்காகப் போராடுவது உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. சோசலிச சமத்துவக் கட்சியானது இனவாத யுத்தத்துக்கும், சிங்களப் பேரினவாதத்துக்கும் மற்றும் தமிழ் இனவாதத்துக்கும் எதிராக, இன பாகுபாடுகளுக்கு அப்பால் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்ப்படுத்தப் போராடிய வரலாறு கொண்டது. அது தெற்காசியாவிலும் உலகெங்கிலும் சோசலிச குடியரசுகளின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுகின்றது. இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இந்த வேலைத் திட்டத்துக்காக தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டவே சோசலிச சமத்துவக் கட்சி கொழும்பில் கொலன்னாவை, யாழ்ப்பாணத்தில் காரைநகர் மற்றும் மலையகத்தில் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குப் போட்டியிடுகின்றது. 

வடஇலங்கையில்ஏழைக்குடும்பங்கள்பட்டினியைத்தவிர்ப்பதற்காகஇந்தியாவுக்குத்தப்பிச்செல்கின்றன

இலங்கையின்இனவாதபோர்முடிவடைந்துபன்னிரண்டுஆண்டுகள்

வெகுஜனபோராட்டங்களுக்குஎதிராகதமிழ்தேசியவாதிகள்இலங்கைஅரசாங்கத்திற்குமுட்டுக்கொடுக்கமுயற்சிக்கின்றனர்

தமிழ்தேசியவாதிகள்தொழிலாளர்களைபிளவுபடுத்துவதற்காகஇலங்கைபோர்குறித்தஏகாதிபத்திய-ஆதரவுபொய்களைவிதைக்கின்றனர்

Loading