2002 ஆம் ஆண்டு முஸ்லிம் விரோத குஜராத் படுகொலைகளுக்காக மோடி மீது பிபிசி ஆவணப்படம் குற்றம் சாட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (BJP) அரசாங்கம், 2002 குஜராத்தில் முஸ்லிம்-விரோத  படுகொலைகளை செய்வதை எளிதாக்குவதிலும் மேற்பார்வையிடுவதிலும் தற்போதைய பிரதமரின் பங்கை ஆய்வு செய்யும் BBC ஆவணப்படத்திற்கு மிகவும் கசப்பான விமர்சனத்துடன் பதிலளித்துள்ளது.

பெப்ரவரி 28 முதல் மார்ச் 2, 2002 வரையிலான மூன்று நாட்கள் மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தில் நடந்த வகுப்புவாத வன்முறையில், அதிகார பூர்வமாக 1,044 பேர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் 790 பேர் முஸ்லிம்கள் ஆவார். உண்மையான இறப்பு எண்ணிக்கை 2,000 க்கு நெருக்கமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் நன்கு அறியப்பட்ட பிஜேபி அரசியல்வாதிகளினால் வழிநடத்தப்பட்ட சிலர் மற்றும் பிஜேபியுடன் நெருக்கமாக தொடர்புடைய இந்து வகுப்புவாத குழுக்களின் தலைவர்களினால் தலைமை தாங்கப்பட்ட கண்காணிப்பு கும்பலினால், முஸ்லிம்கள் கொடூரமாக பயமுறுத்தப்பட்டதுடன் அவர்களின் வீடுகளும் கொளுத்தப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன. இதன் விளைவாக நூறாயிரக்கணக்கான வறிய முஸ்லிம்கள் வீடற்றவர்களாக்கப்பட்டனர். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி [Photo by Narendra Modi Facebook page]

2001 ஆம் ஆண்டு முதல் குஜராத்தின் முதல்வராக இருந்த மோடி, 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றது வரையிலான அவரது ஏறுமுக காலத்தில் பிப்ரவரி-மார்ச் 2002 இல் படுகொலைகளைத் தூண்டுவதிலும்  செயல்படுத்துவதிலும் அவர் ஆற்றிய பங்கு நீண்ட காலமாக அறியப்பட்டிருந்தது. 

இந்தியாவின் அப்போதைய பாஜக தலைமையிலான தேசிய அரசாங்கத்தினால் தூண்டப்பட்ட பாகிஸ்தானுடனான போர்-நெருக்கடியின் சூழ்நிலையில், மோடி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டினார். பிப்ரவரி 28 அன்று கோத்ராவில் நடந்த ரயில் தீ விபத்தில் 59 இந்து அடிப்படைவாத செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டதற்கு உடனடியாக முஸ்லிம்களை குற்றம்சாட்டி அதற்கு குஜராத்தின் முஸ்லிம் சிறுபான்மையினரே கூட்டுப் பொறுப்பு என்று வலிமையான விளைவை ஏற்படுத்தும் விதத்தில் அவர் முதலில் பிரச்சாரம் செய்தார்; பின்னர் மாநிலம் தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு இந்து வகுப்புவாத குழுக்கள் விடுத்த அழைப்புகளுக்கு ஆதரவளித்தார். அப்போது அரசு ஆதரவுடன் வகுப்புவாதம் தூண்டப்பட்ட  நிலையில் முன் எதிர்பார்த்தது போலவே, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெடித்தபோது அதில் காவல்துறை தலையிட வேண்டாம் என்று குஜராத் முதல்வர் மோடி அறிவுறுத்தினார்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக மோடி சிறை அறையில் வாடவில்லை என்றால், அதற்கு காரணம், இந்தியாவின் முதலாளித்துவ ஆளும் மேல்தட்டு அவருக்கு உடந்தையாக இருந்ததாலும் அவரை ஆதரவளித்ததாலும் மேலும் காவல்துறை மற்றும் நீதித்துறை முதல் குஜராத் மாநிலம் மற்றும் இந்திய அரசாங்கங்கள் வரையிலான மிகவும் உயர்மட்ட வகுப்புவாத அரசு எந்திரத்தால் அவர் பாதுகாக்கப்பட்டதுதான். 

அப்படி இருக்கையில் “இந்தியா: மோடி குறித்த கேள்வி” என்ற இரண்டு ஆவணப்படத்தின் முதல் பகுதி கடந்த செவ்வாய்கிழமை BBC 2 இல் ஒளிபரப்பப்பட்டது. அது 2002 “கலவரங்களில்” திட்டமிடப்பட்ட மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட தன்மை மற்றும் பரந்தளவிலான படுகொலைகளில் மோடியின் குற்றம் குறித்தும் கூடுதலான உறுதிப்படுத்தலை வழங்கியுள்ளது 

இந்த ஆவணப்படம் குஜராத் படுகொலை பற்றிய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இரகசிய அறிக்கையிலிருந்து ஒரு நீண்ட பகுதியை மேற்கோள் காட்டுகிறது, அப்படி ஒரு அறிக்கை இருப்பது குறித்து இதுவரை அறியப்படவில்லை. வகுப்புவாத இரத்த களரிக்கு பிறகு மேற்கு இந்திய மாநிலத்திற்குச் சென்ற வெளியுறவு அலுவலக விசாரணைக் குழுவால் இது தயாரிக்கப்பட்டது. 'வன்முறையின் அளவு வெளியிடப்பட்ட அறிக்கையை விட அதிகமாக இருந்தது' என்று அறிக்கை கூறுகிறது மற்றும் நன்கு திட்டமிடப்பட்டது : 'இனச் சுத்திகரிப்புக்கான அனைத்து அடையாளங்களுடனும்' 'ஒரு முறையான வன்முறை இயக்கம். 'இந்தக் கலவரத்தின் நோக்கம் இந்துப் பகுதிகளில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவதே' என்றும் மேலும்  'முஸ்லிம் பெண்களை பரவலாகவும் திட்டமிட்டும் பாலியல் பலாத்காரம் செய்வது' என்றும் மக்களை கொடூரமாக பயமுறுத்துவதற்காகவும் அவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

வன்முறையைத் தூண்டுவதில் விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) செயல்பாட்டாளர்களின் பங்கை இந்த அறிக்கை வெளிச்சத்தில் காட்டுகிறது. VHP என்பது 'இந்து தேசத்தின்' மறுமலர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துள்ள ஒரு துணை ராணுவ அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கின் (RSS) ஒரு துணை அமைப்பாகும். மோடி வாழ்நாள் முழுவதும் RSS இன் உறுப்பினராக இருந்து வருகிறார், மேலும் அரசாங்கத்தின் முக்கிய முடிவுகள் குறித்து அதன் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும் VHP இன் இந்து வகுப்புவாத குண்டர்கள் மற்றும் அவர்களது வகையை சேர்ந்தவர்களினால்' தண்டனையிலிருந்து விடுபட முடியும் என்ற மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சூழல் இல்லாமல் இவ்வளவு சேதத்தை ஒருபோதும் ஏற்படுத்தி இருக்க முடியாது' என்று பிபிசி அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதற்கு “நரேந்திர மோடியே நேரடியாகப் பொறுப்பு” என்று அது உறுதிபடக் கூறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய தனி விசாரணையின் முடிவுகளையும் பிபிசி ஆவணப்படம் சுட்டிக்காட்டுகிறது. அந்த விசாரணையில், மோடியின் பிஜேபி மாநில அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் 'வன்முறையில் தீவிரமாகப் பங்கேற்றதாகவும், கலவரத்தில் தலையிட வேண்டாம் என்று மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும்' முடிவாக கூறப்பட்டது.

“இந்தியா: மோடி குறித்த கேள்வி” என்பது முன்னாள் தூதர் ஒருவரின் நேர்காணலையும் உள்ளடக்கியது, அவருடைய அடையாளம் வெளிப்படுத்தப்படவில்லை மற்றும் வெளியுறவு அலுவலக விசாரணைக் குழுவின் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. 'வன்முறையின் போது குறைந்த பட்சமாக 2,000 பேர் கொல்லப்பட்டனர்' என்று முன்னாள் தூதர் கூறுகிறார். “அதில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள். நாங்கள் அதை ஒரு குறிப்பிட்ட சமூகப்பிரிவை இலக்காக வைத்து நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என்று விவரித்தோம் - முஸ்லிம் சமூகத்தை இலக்காகக் கொண்டு வேண்டுமென்றே மற்றும் அரசியல் ரீதியாக உந்தப்பட்ட முயற்சியாக இருந்தது.

2003 இல் ஈராக் மீதான அமெரிக்கா-பிரிட்டனின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் சிற்பிகளில் ஒருவரான பிரிட்டனின் அன்றைய வெளியுறவுச் செயலர் ஜாக் ஸ்ட்ராவையும் பிபிசி ஆவணப்படக்காரர்கள் பேட்டி கண்டனர், அவரது கரங்களிலும் மோடியின் கரங்களை போன்று இரத்தம் சொட்டுகிறது.  

குஜராத் விசாரணைக் குழுவை நிறுவிய வெளியுறவு அலுவலகத்தின் பின்னணி குறித்து ஸ்ட்ரோ விளக்கினார், 'இவை மிகவும் கடுமையான கூற்றுக்கள் – அதாவது காவல்துறையைத் திரும்பப் பெறுவதிலும், இந்து தீவிரவாதிகளை மறைமுகமாக ஊக்குவிப்பதிலும் முதல்வர் மோடி மிகவும் தீவிரமான பங்கை கொண்டிருந்தார்' என்று கூறினார்.

குழுவின் அறிக்கை 'மிகவும் முழுமையானது' என்று ஸ்ட்ரோ கூறினார், பின்னர் பிரிட்டனின் நலன்களை, அதாவது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வணிக மற்றும் மூலோபாய நலன்களைப் புண்படுத்தலாம் என்ற அடிப்படையில் பிரிட்டிஷ் தொழிற்கட்சி அரசாங்கம் அதன் கண்டுபிடிப்புகளைத் தெரியப்படுத்தத் தவறியதை அவர் ஆதரித்தார். ஈராக் போரை நியாயப்படுத்துவது உட்பட, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் வெளியுறவுக் கொள்கையை முன்னிறுத்துவதில் ஸ்ட்ரா 'மனித உரிமைகளை' வலியுறுத்திக் கொண்டிருந்தார், அதுவே இந்தியா தொடர்பாக வந்தபோது, 'மிகவும் வரையறுக்கப்பட்ட' விருப்ப தேர்வுதான் இருந்ததாக அவர் கூறினார். ”இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை நாங்கள் ஒருபோதும் முறித்துக் கொள்ளப் போவதில்லை” எனக் கூறிய அவர் ”ஆனால் அது அவரது (மோடியின்) நற்பெயருக்கு வெளிப்படையாகவே ஒரு கறையாக உள்ளது” என்றார்.

பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் அதன் விசாரணையை நடத்தி முடித்த சில மாதங்கள் மற்றும் ஆண்டுகளுக்கு பிறகு குஜராத் படுகொலைகளுக்கு மோடி உடந்தை என்பதற்கான மேலும் பல சான்றுகள் வெளிப்பட்டன – அந்த ஒரு விசாரணை, இந்திய காவல்துறை மற்றும் நீதிமன்றங்களை நிர்ப்பந்திக்கும் விசாரணை அதிகாரங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

பிப். 27, 2002 அன்று இரவு மோடியின் இல்லத்தில் கூட்டப்பட்ட 'அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில்' மோடியின் குஜராத் மாநில அரசாங்கத்தின் வருவாய்த்துறை அமைச்சரான ஹரேன் பாண்டியா மற்றும் துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் பட் ஆகியோர் கலந்துகொண்ட ஆதாரம் மிகவும் முக்கியமானது. மார்ச் 2003 இல் மர்மமான சூழ்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பாண்டியாவின் கூற்றுப்படி, இந்த சந்திப்பு ஒரு தனித்துவமான நோக்கத்தைக் கொண்டிருந்தது. 'மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும், இந்துக்களின் எதிர்வினைக்கு இடையூறாக வரக்கூடாது' என்று மோடி கூடியிருந்தவர்களுக்கு அறிவுறுத்தினார். பட் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக 2009 இல் சாட்சியம் அளித்தார் மேலும் அவர் பாண்டியா கூறியதை உறுதிப்படுத்தினார். 

ஆனால் வழியின் ஒவ்வொரு அடியிலும், 2002 நிகழ்வுகள் பற்றிய விசாரணையை குறிப்பாக மோடியும் அவரது முக்கிய உதவியாளருமான இந்தியாவின் தற்போதைய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷாவும் சம்பந்தப்பட்டவற்றை - இந்திய அதிகாரிகள் முறியடித்துள்ளனர். 2002 இல் 21 வயதுடைய மற்றும் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பிளிகிஸ் பானோ கொடூரமாக கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார், மற்றும் அதே சமயத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். இவ்வாறாக  பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்து எடுக்கப்பட்ட உறுதியான முயற்சிகளின் விளைவாகத்தான் பொதுவாக சில தண்டனைகள் வழங்கப்பட்டன.  

2002 படுகொலைக்குப் பொறுப்பானவர்களைக் காப்பாற்ற குஜராத்தில் உள்ள காவல்துறை, நீதித்துறை மற்றும் அரசாங்க அதிகாரிகளின் முயற்சிகள் மிகவும் அப்பட்டமாக இருந்தன, அதனால் இறுதியில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எவ்வாறாயினும், மோடி மற்றும் அவரது கூட்டாளிகளின் சேவையில் தகுதியற்ற நற்பெயரை கொண்ட இந்தியாவின் உயர் நீதிமன்றம் விரைவாகவே நீதித்துறையின் நேர்மையற்ற இலட்சணத்தை வெளிப்படுத்தியது. 

இதன் உச்சக்கட்டமாக கடந்த ஜூன் மாதம் வாழ்நாள் முழுவதும் அவமானமாக நீடிக்கும் ஒரு தீர்ப்பு வந்தது. பிப்ரவரி 28, 2022 அன்று அகமதாபாத்தின் ஒரு முஸ்லிம் சுற்றுப்புறத்தில் 68 பேருடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி ஒருவரின் விதவை ஜாகியா ஜாஃப்ரியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, அதாவது அவர்களின் மரணம் ஒரு 'பெரிய சதி'யின் ஒரு பகுதியாக அதாவது, முஸ்லிம் விரோத வன்முறை மற்றும் ஒரு சமூகப்பிரிவை சுத்திகரிப்பு செய்தல் ஆகியவற்றின் திட்டமிட்ட இயக்கத்தின் விளைவாக ஏற்பட்டுள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும்.

அவ்வாறு செய்ததன் மூலம் நீதிமன்றம், மோடி, அமித் ஷா மற்றும் குஜராத் அதிகாரிகளை நிரபராதிகளாக விடுவித்தது மட்டுமல்லாமல், அவர்களை 'குற்றமற்றவர்கள்' என்று அழைத்தது, மேலும் அது ஜாஃப்ரி மற்றும் அவரது இணை மனுதாரரும், பத்திரிகையாளரும், ஆர்வலருமான டீஸ்டா செடல்வாட்டை கண்டனம் செய்தது. அவர்கள் “உள்நோக்கத் திட்டத்துடன் பானை கொதித்துக் கொண்டே இருக்க வேண்டும்” என்று விரும்புவதாகவும் அவர்கள் தான் “விசாரணைக் கூண்டில்” நிற்க வேண்டும் என்றும் அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. 

அடுத்த நாள், குஜராத் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை, இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி செடல்வாட் மற்றும் படுகொலைகளுக்கு காவல்துறை உடந்தையாக இருந்ததை அம்பலப்படுத்திய முன்னாள் குஜராத் காவல்துறை அதிகாரி ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோரைக் கைது செய்தது.

இது ஒரு பெரிய நிகழ்வுப்போக்கின் பகுதியாகும், இதில் இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு எதிராக வர்க்கப் போரை நடத்துவதற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்து அதன் வல்லரசாகும் அபிலாஷைகளை ஆக்கிரோஷமாக தொடருவதற்கும் தேவைப்படும் 'வலிமை வாய்ந்தவர்' என்று மோடியை இந்திய ஆளும் வர்க்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. பாசிச இந்து மேலாதிக்கவாதிகளை தனது செயலூக்கமான செயற்பாட்டாளர் தளமாக கொண்ட பிஜேபி, முக்கிய அரசாங்கக் கட்சியாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய அரசாங்கத்தை வழிநடத்துவதோடு கூடுதலாக அது இப்போது இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்களில் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

மற்ற இடங்களைப் போலவே, தீவிர வலதுசாரி சக்திகள் அதிகாரத்திற்கு வருவது ஒவ்வொரு கட்டத்திலும் 'இடது' என்று கூறும் கட்சிகள் மற்றும் தாராளவாதக் கட்சிகளின் கூர்மையான வலது பக்க திருப்பத்தால் எளிதாக்கப்பட்டுள்ளது. 'இந்து பாசிசத்தை' எதிர்த்துப் போராடுதல் என்ற பெயரில், இந்தியாவின் இரட்டை ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளான CPM மற்றும் CPI ஆகியவை, பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்தை பெருவணிக  காங்கிரஸ் கட்சிக்கு அடிபணியச் செய்துள்ளன, மேலும் அவை அதிகாரத்தை வைத்திருந்த பல்வேறு மாநிலங்களிலும் 'முதலீட்டாளர்  சார்பு' கொள்கைகள் என்று தாங்கள் விவரிப்பதையே செயல்படுத்தியுள்ளன.

இரண்டு தசாப்தங்களாக, இந்த குஜராத் படுகொலைகள் இந்திய அரசியல் அமைப்பில் ஒரு புண்படுத்தும் காயமாக இருந்து வருகிறது. பெப்ரவரி-மார்ச் 2002 நிகழ்வுகளால் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இப்போது ஒதுக்குப்புறமான இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், அவை அனைத்து நடைமுறைகளிலும் உள்நாட்டு இடப்பெயர்வு முகாம்களாக இருக்கின்றன. 

மோடியும் அவரது பிஜேபியும் 2002 நிகழ்வுகளைத் தொடர்ந்து தங்கள் இந்து மேலாதிக்கத் தளத்தை அணி திரட்டவும் வாக்காளர்களை துருவப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். கடந்த ஆண்டு குஜராத் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, பிலிகிஸ் பானோவின் குடும்பத்தின் கொலையில் பங்கு வகித்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அனைத்து 11 பேரையும் மாநில அரசாங்கம் கதாநாயக வரவேற்புடன் விடுவித்துள்ளது.

அஹமதாபாத்தின் நரோடா சுற்றுப்புறத்திற்கான அதன் தற்போதைய மாநில சட்டமன்ற உறுப்பினரை பிஜேபி பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது, இதன் மூலம்  96. முஸ்லிம்களை படுகொலை செய்ததற்காக தண்டிக்கப்பட்ட பிஜேபி செயல்பாட்டாளரான நரோடா பாட்டியாவின் 30 வயது மகள் பயல் குக்ரானி அதன் வேட்பாளராக நிற்க முடியும். முன்பே ஊகிக்கக்கூடிய வகையில், இந்திய அரசாங்கம், பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் BJP யின் பரந்த புலம்பெயர் வலையமைப்பு ஆகியவை பிபிசி ஆவணப்படத்திற்கு மிகவும் கசப்பான பெருமழை மூலம் பதிலளித்துள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி அதனை 'காலனித்துவ மனப்பான்மையால்' வடிவமைக்கப்பட்ட ஒரு 'பிரச்சாரப் பகுதி', மற்றும் 'பக்கசார்பானது' என்று கண்டனம் செய்துள்ளார்.

2002 குஜராத் படுகொலைகளில் மோடி வகித்த பங்கை நன்கு அறிந்த மேற்கத்திய ஏகாதிபத்திய அரசாங்கங்கள் முதலில் அவரிடமிருந்து சிறிது தூரம் விலகி இருப்பது புத்திசாலித்தனம் என்று கருதின. அவர் ஒரு தசாப்த காலமாக இங்கிலாந்துக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை, மேலும் 2014 இல் அவர் இந்தியப் பிரதமரான பிறகுதான் அவருக்கு வாஷிங்டனில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் அதெல்லாம் புராதன வரலாறு ஆகிவிட்டது.

அவர் பிரதமராக இருந்த ஒன்பது ஆண்டு காலம் முழுவதும், குறிப்பாக 2019 இல் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, மோடியும் அவரது பாஜகவும் இந்தியாவை இந்து ராஜ்யமாக (இந்துக்களின் மேலாதிக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டு  சிறுபான்மையினர் துன்பத்தில் வாழும் ஒரு அரசாக) மாற்றும் கருத்தியல் நோக்கத்துடன் முஸ்லிம் மற்றும் சிறுபான்மை எதிர்ப்பு மதவெறியைத் தூண்டி விட்டுள்ளனர். மேலும் பரந்த வேலையின்மை, வறுமை மற்றும் ஆழமடையும் சமூக சமத்துவமின்மை ஆகியவை தொடர்பாக பெருகிவரும் சமூக கோபத்தை பிற்போக்கான வழிகளில் திசை திருப்பும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் அரசியல் நோக்கத்துடன்  இவ்வாறு செய்கின்றனர். 

ஆயினும்கூட இந்த வகுப்புவாத குண்டரை,  பைடன், மக்ரோன், ஷோல்ஸ் மற்றும் ட்ரூடோ போன்றவர்கள் பாராட்டி விருந்தோம்பல் செய்கின்றனர். அவர் உலகின் மிகப்பெரிய 'மக்கள் ஆதரவு பெற்ற ஜனநாயகத்தின்' தலைவராகவும், எதேச்சதிகார சீனாவிற்கு எதிராக 'சுதந்திரத்தின்' உறுதியான பாதுகாவலராகவும் பாராட்டப்படுகிறார். 

இந்த நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு, பிரிட்டனின் பிரதம மந்திரி ரிஷி சுனக் குஜராத் படுகொலையில் மோடியின் பங்கை பிபிசி அம்பலப்படுத்தியதில் இருந்து தன்னைத் தூரமாக விலக்கிக் கொள்ள விரைந்தார். அவர் புதன்கிழமை பிரிட்டன் பாராளுமன்றத்தில், இந்திய பிரதமரின் 'பாத்திரம்' குறித்து பிபிசி கூறுவதுடன் உடன்படவில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது..

Loading