ஆயிரக்கணக்கான இலங்கை சுகாதாரத் தொழிலாளர்கள் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வேலை நிறுத்தம் செய்தனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை முழுவதும் உள்ள அரச சுகாதாரத் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு கோரியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டக் கோரியும் திங்களன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஒன்றிணைந்தனர். வாழ்க்கைச் செலவு சுட்டெண்ணுக்கு ஏற்ற ஊதியம் அல்லது கொடுப்பனவுகள் வேண்டும், கடன்கள் மீதான நியாயமற்ற வட்டி உயர்வை குறைக்க வேண்டும், பலநோக்கு செயலணிப் படையில் இருந்து சுகாதார சேவைக்கான ஆட்சேர்ப்பை நிறுத்த வேண்டும் ஆகியவை அவர்களின் கோரிக்கைகளில் உள்ளடங்கியிருந்தன.

9 ஜனவரி 2023 அன்று கொழும்பில் சுகாதார அமைச்சுக்கு முன்னால் சுகாதார ஊழியர்களின் ஒரு பகுதியினர் மறியலில் ஈடுபட்டுள்ளனர் [Photo: WSWS]

தொழிலாளர்களால் எடுக்கப்பட்ட கடன்களுக்கான வங்கி வட்டி விகிதம் கடந்த வருடத்தில் 8 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக எகிறிள்ளது. இது ஊதியத்தில் இருந்து கழிக்கப்படும் மாதாந்த தவணைக் கட்டணங்களை கணிசமானமுறையில் அதிகரிக்கின்றது. பெரும்பாலும் பரவலான பணவீக்கத்தால் உணமையான ஊதியம் பாதியாக சரிந்துள்ள நிலைமைகளின் கீழேயே இந்த வட்டி அதிகரிப்பு வருகின்றது.

பல்நோக்கு செயலணிப் படையானது குறைந்த ஊதியத்திலும் பொது நடைமுறைகளின் கீழ் சேர்க்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உள்ள அடிப்படை உரிமைகள் இன்றியும் அரச தொழிலுக்கு வேலையற்ற இளைஞர்களை சேர்த்துக்கொள்வதற்காக ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் முந்தைய அரசாங்கத்தால் உருவாக்கப்ட்டதாகும்.

கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள தேசிய  மருத்துவமனைகள் உட்பட பல மருத்துவ மனைகளில் கணிஷ்ட உத்தியோகத்தர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் இணைந்து கொண்டனர். சுகாதாரம் உட்பட பல பொதுத் துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடைசெய்கின்ற, ஜனவரி 4 அன்று மீண்டும் புதிப்பிக்கப்பட்ட அத்தியவசிய சேவைகள் சட்டங்களை மீறியே சுகாதாரத் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தை செய்தனர்.

இந்த வேலை நிறுத்தம், இவ் ஆண்டில் முதலாவதும் தமது அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் ஆழமான தாக்குதல் சம்பந்தமாக தொழிலாளர்களின் மத்தியில் அதிரித்துவரும் சீற்றத்தையும் வெளிப்படுத்துவதுமாகும். அரசாங்கம், நாட்டின் கூர்மையான பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அவசர கடன் வசதியை பெறுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்திக் கொண்டிருக்கின்றது.

கடந்த வருடம் ஏப்ரலில் இருந்து ஜீலை வரையான நான்கு மாத கால வெகு-ஜன  எழுச்சி, கோடாபய இராஜபக்ஷ அரசாங்கத்தின் வெளியேற்றத்தை நிர்ப்பந்தித்தது. அதிகரித்து வரும் விலைவாசி மற்றும் அத்தியவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடுகளால் உருவாக்கப்பட்ட தாங்க முடியாத நிலைமைகளுக்கு எதிராக பல ஒரு-நாள் பொது வேலை நிறுத்தங்களில் மில்லியன் கணக்காணோர் பங்குபற்றிய போது, சுகாதார தொழிலாளர்கள் உட்பட தொழிலாளர் வர்க்கம் பிரதான பாத்திரம் வகித்தது.

தொழிலாளர்களின் குறிக்கோள்களுக்கு மாறாக, 10 கணிஷ்ட சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்கங்களை கொண்ட ஒரு குழுவான ஒன்றிணைந்த சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டணியானது (UHSTUA), பரந்த சீற்றம் மற்றும் எதிர்ப்புகளை அடக்கிவைக்கவே இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்ததே அன்றி, ஒரு நேர்மையான போராட்டத்தை கட்டியெழுப்ப அல்ல. இந்த தொழிற்சங்கம், இதை ஒரு சுகயீன விடுமுறை போராட்டமாகவே அறிவித்தது. அநேகமான இடங்களில் தொழிலாளர்களை வீட்டில் இருக்கவும் கூட்டங்களோ போராட்டங்களோ ஏற்பாடு செய்ய வேண்டாம் எனவும் கூறியிருந்தது. இது, ஒன்றிணைந்த சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டணி சார்ந்திருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டின் வழியில் உள்ளது. நீண்டகால  முதலாளித்துவ கட்சிகளில் ஒன்றான ஸ்ரீ.ல.சு.க., கடந்த காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை அமுல்படுத்தி வந்ததுடன் தற்போதும் அதன் நிபந்தனைகளுக்கு ஆதரவளிக்கின்றது. 

விக்கிரமசிங்கவின் 2023க்கான வரவு-செலவுத் திட்டம், தொழிலாளர்களுக்கு பாரிய வரி உயர்வுகள், விலை மாணியங்களில் வெட்டுக்கள் பாரிய அரச துறை வெட்டுக்கள் மற்றும் தனியார் மயமாக்கலையும் உள்ளடக்கியுள்ளது. சுகாதாரத் துறையின் தனியார் மயமாக்களின் ஒரு பாகமாக அராசாங்கம் பொது மருத்துவ மனைகளில் கட்டண வார்ட்டுகளை அறிமுகம் செய்வதை முன்மொழிந்துள்ளது.

9 ஜனவரி 2023 அன்று கொழும்பில் சுகாதார அமைச்சுக்கு முன்னால் சுகாதார தொழிலாளர்கள் நடத்திய மறியல் போராட்டம் [Photo: WSWS]

பொதுச் சுகாதார முறைமையானது கோவிட்-19 தொற்று நோய் மற்றும் பொருளாளதார நெருக்கடி காரணமாக ஏற்கனவே சரிவின் விளிம்பில் உள்ளது. மருத்துவமனைகள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துக்கு 322 பில்லியன் ருபா ஒதுக்கப்பட்டுள்ள அதேநேரம் பாதுகாப்பு மற்றும் உள்ளகப் பாதுகாப்புக்காக 539 பில்லியன் ருபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சுகாதாரத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமானது இலங்கை மற்றும் உலகளவில் தொழிலாளர வர்க்க வேலை நிறுத்தங்களின் மறு எழுச்சியின் பாகம் ஆகும். அதே நாள் அன்று நியுயோர்க்கில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைநிறுத்த்தில் ஈடுபட்டனர்.

சுகாதாரத் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் நிலைமைகள் இலங்கையில் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் நிலைகளை ஒத்தவை ஆகும். எவ்வாறாயினும், தொடக்கத்தில் இருந்தே தொழிற்சங்கங்கள் தொழிலாளர் வர்க்கத்தின் ஏனைய பகுதியினரை அணிதிரட்ட மறுத்தது. அது சுகாதாரத் துறையினுள்ளும் கூட வைத்தியர்கள் மற்றும் தாதியர்ககளை அணிதிரட்ட மறுத்தது. தொழிற்சங்கம், பல்வேறு மருத்துவ மனைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தம் தொடர்பாக தகவலளிக்கவும் தவறியது.

“பொலிசாருக்கும் தொழிலாளர்களுக்கும்இடையில் மோதலைத் தடுக்கவும் அரசாங்கத்துக்கு சிரமங்களைத் தவிர்க்கவும்” வேண்டுமென்றே தொழிலார்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தியே தொழிற்சங்கங்கள் கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சுக்கு முன்னாள் ஒரு போராட்டத்தை ஒழுங்கமைத்தன. போராட்டத்தின் போது ஒருங்கிணைந்த சுகாதார ஊழியர் தொழ்றிசங்க கூட்டமைப்பின் செயலாளர் ரோய் டி மெல், “நாம், கொழும்பில் உள்ள சகல தொழிலாளர்களையும் அணிதிரட்டும் அத்தகைய தவறான நடவடிக்கைகளை தேர்ந்தெடுக்கவில்லை” என்று அப்பட்டமாக அறிவித்தார்.

9 ஜனவரி 2023 அன்று கொழும்பில் சுகாதார அமைச்சின் முன் மறியல் செய்த தொழிலாளர்களுக்கு எதிராக அணிதிரட்டப்பட்ட பொலிசார் [Photo: WSWS]

தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சுமார் 300 வரையிலான தொழிலாளர்கள் காலை 10 மணியில் இருந்து இரண்டு மணித்தியாலங்களாக இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டணர். தொழிலாளர்களைப் பயமுறுத்த ஒரு பொலிஸ் படையணியும் தண்ணீர் தாரை இயந்திரமும் நிலைநிறுத்தப்பட்டிருந்தன.

போராட்டத்தின் போது தொழிற்சங்கத் தலைவர்கள் அதிகாரிகளுடன் ஒரு கலந்துறையாடலுக்காக நிதி அமைச்சகத்துக்கு ஓடினர். பின்னர், அரசாங்கத்திடம் இருந்து எந்தவொரு நம்பிக்கையான உறுதி மொழிகளும் இன்றி “இந்தப் பிரச்சினையைத் தீர்க்க” அரசாங்கத்துக்கு 14 நாட்கள் அவகாசம் கொடுத்து போராட்டத்தை நிறுத்த அழைப்புவிடுத்தனர். இந்த வேலை நிறுத்தம் 24  மணித்தியாலங்கள் தொடர்ந்தது.

தொழிற்சங்கத் தலைவர்கள் கூறிக்கொள்வதற்கு நேர் மாறாக, அரசாங்கம் தொழிலாளர்களின்எந்தவொரு கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு அன்றி, எந்தவொரு மேலதிக நடவடிக்கையையும் நசுக்க தயார்படுத்துவதற்கு அடுத்த 14 நாட்களைத் பயன்படுத்தும். அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் கீழ், எந்தவொரு தொழில்துறை நடவடிக்கையும் தண்டனைக்குரிய குற்றவியல் செயலாகும். வேலைநிறுத்தத்தை உடைக்கும் முயற்சியில் அரசாங்கம் பல மருத்துவமனைகளுக்கு இராணுவத்தை அனுப்பியது.

தொழிற்சங்கள், சுகாதாரத் தொழிலாளர்களை ஏனைய தொழிலாளர் பகுதியினருக்கு எதிராக நிறுத்துவதற்கே பலநோக்கு செயலணி படையின் ஆட்சேர்பை நிறுத்துமாறு கோருகின்றன. சுகாதாரத் தொழிலாளர்கள், இந்தச் சேவைக்கு ஆட்சேரக்கப்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கான ஒழுக்கமான ஊதியம் மற்றும் அடிப்படைத் தேவைகளை உறுதிசெய்யவும் போராட வேண்டும்.

சுகாதாரத் தொழிலாளர்கள் தமது அடிப்படை உரிமைகளுக்காக போராடுவதற்கு ஒவ்வொரு வைத்தியசாலையிலும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தொழிலாளர்கள் அவர்களாலேயே  ஜனநாயக முறையில் கட்டுபடுத்தப்படுகின்ற சாமானியத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பது அவசியமாகும். பொருளாதாரச் சுமையைத் தொழிலாளரகள் மீது முழுமையாகத் திணிப்பதில் உறுதியாக இருக்கும் முதலாளித்துவ முறைமையுடன் தமது கோரிக்கைகள் நேரடியாகவே மோதுவதால், அவர்கள் அரசியல் ரீதியாக சோசலிச முன்னோக்கை தங்களை அடித்தளமாகக் கொண்டிருப்பது அவசியமாகும். இந்த நடவடிக்கைக் குழுக்கள், தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான ஒரு பொதுவான போராட்டத்தில் இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் உள்ள ஏனைய சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களின் பக்கம் திரும்ப வேண்டும்.

கட்டண வாட்டுகளுக்கு எதிரான அதன் அறிக்கைளின் பிரதிகளை விநியோகித்த சுகாதாரத் தொழிலாளர்களின் நடவடிக்கை குழு (சு.தொ.ந.கு) உறுப்பினர்கள், சுகாதாரத் தொழிலாளர்களுடன் இந்த முன்னோக்கை கலந்துறையாடினர். சுகாதாரத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு தமது போராட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான அவசியத்தையும் பற்றி பேசினர்.

கொழும்பு தேசிய மருத்துவமனைத் தொழிலாளர் ஒருவர் மருத்துவமனைகளில் உள்ள அதிக வேலைச்சுமை பற்றி  பேசினார். “நாம், மருத்துவமனையில் தொழிலாளர்களின் பற்றாக்குறைக்கு முகங்கொடுக்கின்றோம். ஒரு தொழிலாளி இரு தொழிலாளர்களின் வேலையைச் செய்ய வேண்டும், நாங்கள் களைப்படைந்துள்ளோம். தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அவர்களின் வேலையையும் நாம் ஈடுசெய்ய வேண்டியுள்ளது, ஏனென்றால் அரசாங்கம் புதிய தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கவில்லை.”

மாதாந்த ஊதியம் வெறும் ரூபா 26,000 ஆகும். இது குறைந்தது ஒரு வாரத்துக்கு சாப்பாட்டு சாமான் வாங்குவதற்கு போதாது என அவர் குறிப்பிட்டார். “கடன்களுக்கான வட்டியை உயர்த்துவதால் எமது வருமானம் குறைகின்றது என அவர் தெரவித்தார். இந்தப் போராட்டத்தின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று எமது ஊதியத்தை உயர்த்துவது ஆகும். எங்களால் இந்த ஊதியத்தில் உயிர் வாழ முடியாது.”

தேசிய வைத்தியசாலையில் இன்னொரு தொழிலாளியும் இந்த கலந்துறையாடலில் இணைந்துகொண்டார். அவர், கடன்களை கொடுத்த பின் ஊதியத்தில் இருந்து ரூபா 5,000 மட்டுமே மிதமாக உள்ளதாகத் தெரிவித்தார். “இப்போது அரசாங்கத்தின் கட்டளையின் படி, வங்கிகளின் வட்டி விகித அதிகரிப்புக்குப் பின்னர், மேலும் ரூபா 3,000 கழிக்கப்படவுள்ளது. அத்தியவசயப் பொருட்களின் விலைகள் அதிகரிப்புக்கு மத்தியில் எப்படி வாழ்வது என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது.”

சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கை குழுவின் முன்னோக்குடன் உடன்பட்ட அவர் பின்வருமாறு குறிப்பிட்டார். “ஆட்சியாளர்கள் செவிமடுப்பதில்லை. நீதி கிடைக்கும் என நினைத்து நாங்கள் இந்தப் போராட்டத்தில் இணைகின்றோம். இந்தப் போராட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல எமக்கு சுயாதீனமான இயக்கம் அவசியம்.”

சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கை குழு, மத்திய இலங்கையின் பெருந்தோட்ட பிரதேசங்களில் உள்ள டிக்கோயா மாவட்ட மருத்துவமனையில் தொழிலாளர்கள் மத்தியில் தலையீடு செய்துள்ளது. இந்த வேலை நிறுத்தம் பற்றி கூட தமக்குத் தெரியாது என அங்குள்ள தொழிலாளர்கள் கூறினர். தொழிற்சங்கங்கள் அவர்களுக்கு எதுவும் கூறவில்லை.

மருத்துவமனை உதவியாளரான மோகன் விளக்கியதாவது. “எந்தத் தொழிற்சங்கங்களும் இன்றைய வேலை நிறுத்தம் பற்றி எமக்கு தகவலளிக்கவில்லை. நாம் தற்போதைய வாழ்க்கைச் செலவுடன் நிறையப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றோம். இது வாழ்வதற்கு மிகக் கடினமாக உள்ளது. எமது கடன் கொடுப்பனவுகள் அதிகரித்துள்ளன. தற்போது கடன் பெறுவதும் கடினமாகியுள்ளது.”

தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தும் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளை அவர் எதிர்த்தார். “உதவியாளர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள், தாதியர்கள மற்றொரு நாள் வேலை நிறுத்தம் செய்கின்றனர், வைத்தியர்கள் வேறொருநாள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். ஆனால் எமது கோரிக்கைகளை வெல்வதற்கு சகல தொழிலாளர்களும் ஒன்றினைந்து தமது உரிமைகளுக்காகப் போராட வேண்டும். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துகின்றன. எமக்கு, தொழிலாளர்களை ஒன்றிணைக்க புதிய தலைமைத்துவம் அவசயமாக உள்ளது.”

தென் மாகாணத்தில் உள்ள பலபிட்டிய போதானா வைத்திய சாலையில் இருந்து ஒரு கணிஷ்ட ஊழியர், உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினார். “முன்னர், தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக எமக்கு அறிவித்தனர். ஆனால் தற்போது இந்த வேலை நிறுத்தம் பற்றி எமக்கு கூறவில்லை. என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பது எமக்குத் தெரியாது. மருந்துகளின் பற்றாக்குறை மற்றும் கொடுப்பனவு வெட்டுக்கள் உட்பட எதிர்ப்புத் தெரிவிக்க எங்களிடம் பல பிரச்சினைகள் உள்ளன. ஆனால் தொழிற்சங்கங்கள் இந்தப் பிரச்சினைகளில் எதையும் பற்றி தொழிலாள்ரகளுடன் கலந்துறையாடவில்லை.”

இலங்கை ஜனாதிபதி வரவு-செலவுத் திட்டம் சம்பந்தமாக 'கடுமையான முடிவுகளை' எடுக்கப்போவதாக அச்சுறுத்துகிறார்

இலங்கை அரச மருத்துவமனைகளில் கட்டண வாட்டுகளை உருவாக்கும் திட்டத்தை தோற்கடி!

இலங்கை சுகாதார ஊழியர்களின் போராட்டத்திற்கு முன்னோக்கிய பாதை

Loading