முன்னோக்கு

புத்தாண்டு அறிக்கை

2023: உலக முதலாளித்துவ நெருக்கடியும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்துவரும் தாக்குதலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

1. புத்தாண்டு தொடக்கக் கொண்டாட்டம் குறுகிய காலத்திற்கே இருக்கும். பழைய ஆண்டு வரலாறாகி விட்டடாலும் அதன் நெருக்கடிகள் தொடர்வதோடு தீவிரமடையவும் உள்ளன. 2023 தொடங்கும் வேளையில், கோவிட்-19 பெருந்தொற்று முடிவிற்கான எந்த அறிகுறியுமில்லாமல், அதன் நான்காவது ஆண்டில் நுழைகிறது. ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் தொடர்ந்து அதிகரித்துச் செல்கிறது. உலக முதலாளித்துவப் பொருளாதாரமானது ஒரேநேரத்தில் நாசகரமான பணவீக்கத்தாலும் மந்தநிலையினாலும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், முதலும் முக்கியமானதுமாக அமெரிக்காவில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் நிறுவனங்கள் பொறிந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்க அரசியல் அமைப்புமுறை, ஜனவரி 6, 2021 கிளர்ச்சியில் இருந்து எழுந்த பின்னதிர்வுகளை கையாள்வதில் மிகக் குறைவாகவே வெற்றி பெற்றிருக்கிறது. உலகெங்கிலும் வலது-சாரி மற்றும் நவ-பாசிச இயக்கங்கள் தொடர்ந்து வேரூன்றிக் கொண்டிருக்கின்றன. உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்கள் உலகெங்கிலும் வீழ்ச்சியடைந்து வரும் வேளையில், வர்க்கப் போராட்டம் தீவிரமடைந்து உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டை உடைத்துச் சென்று கொண்டிருக்கின்றன.

2. உலக முதலாளித்துவ நெருக்கடியின் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட காரணிகளின் ஒன்றுதிரண்ட அழுத்தமானது 2022 இல் ஒரு சிக்கலான அளவை அடைந்துள்ளதுடன், —ஒரு சமூகப் பிரளயத்தை நோக்கி இயக்கம் செல்வதை— கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கங்கள் கொண்டிருக்கும் திறனுக்கு அப்பால் நெருக்கடியின் இயங்குநிலை சென்றுள்ள ஒரு புள்ளியை அடைந்துள்ளன. ஆளும் வர்க்கங்கள் நெருக்கடியை மட்டுப்படுத்தத் திறனற்றவையாக இருக்கின்றன; அவற்றின் பொருளாதார, அரசியல், சமூகக் கொள்கைகள் அதிகரித்தளவில் பொறுப்பற்றவையாகவும் இன்னும் பகுத்தறிவற்ற தன்மையைக் கொண்டதாகவும் கூட இருக்கின்றன. பெருந்தொற்றுக்கான ஒரு பொருத்தமான பதிலிறுப்பாக “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையை அவை ஊக்குவித்ததிலும், ரஷ்யாவுடனான மோதலில் அணு ஆயுதப் போருக்கும் துணிவதற்கான விருப்பம் காட்டியதிலும், ஏகாதிபத்திய சக்திகள் உலக மக்கள்தொகையின் மிகப்பெருவாரியான மக்களை நோக்கி ஒரு கொலைபாதக அலட்சியத்தை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கின்றன. ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தில் ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் தலையீடு மட்டுமே, மனிதகுலத்திற்கு முதலாளித்துவத்தினால் உருவாக்கப்பட்ட பெருநாசத்தில் இருந்து வெளியேறுவதற்கான வழியை வழங்க முடியும்.

கோவிட்-19 பெருந்தொற்று

3. 2021 நவம்பரில் ஓமிக்ரோன் மாறுபாடு வந்தபோது, கோவிட்-19 பரவலை மெதுவாக்கும் தணிப்பு நடவடிக்கைகளை கைவிடுவதற்கான ஒரு போலிக்காரணமாக, பைடென் நிர்வாகத்தின் கீழான அமெரிக்காவின் தலைமையில் முதலாளித்துவ அரசாங்கங்கள் அதனை வரவேற்றன. ஓமிக்ரோன் ஒரு 'உயிர்ப்புள்ள வைரஸ் தடுப்பூசிக்கு' சமமானது, அதன் பரவலானது குறிப்பிட்ட மட்டத்திற்கு நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும், இந்த அடிப்படையில் கொரோனா வைரஸ் சிறிது சிறிதாக மறைந்துபோகும் என்பதே அரசாங்கங்களது “தத்துவ”மாக இருந்தது, ஆனால் இந்த தத்துவத்திற்கு எந்த நம்பகமான விஞ்ஞான அடிப்படையும் இருக்கவில்லை.

உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய மாறுபாட்டு வகையாக அறிவித்த மூன்று நாட்களின் பின்னர் ஓமிக்ரோனின் ஆபத்துக்களை குறைத்துக் காட்டுகிறதான ஒரு உரையை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் வழங்குகிறார். [AP Photo/Evan Vucci]

4. இந்த வைரஸ் ஒரு ”வழமைத்தொற்று” ஆக ஆகிவிடும், பருவகால காய்ச்சல்களை விடவும் அபாயகரமானதாக இருக்காது என்ற பொய்யான வாக்குறுதியுடன், அமெரிக்கர்கள் “வைரஸுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்” என்று ஆளும் வர்க்கம் கோரியது. முகக்கவசம் அணிவது, பரிசோதிப்பது, தொடர்புகளின் தடமறிவது, தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்துவது, மற்றும் தொற்றுக்கள் மற்றும் இறப்புகள் குறித்த செய்திகளை முறையாகப் பதிவது ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஊக்குவிக்கும் ஒரு ஊடகப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. பைடென் “பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டது” என்றும் வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்பலாம் என்றும் பிரகடனம் செய்து, மக்களை கோவிட்-19 இன் நடப்பு அபாயங்களுக்கு முன்னால் நிராயுதபாணியாக்கினார்.

5. இந்த விவரிப்பு பொய்களையும் பிரச்சாரங்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. இன்று சாதாரண நிகழ்வாக ஆகிவிட்டிருக்கிற கோவிட்-19 தொற்று மறுபடியும் தாக்கும்போது அது தொற்று பாதித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மற்றும் மரணத்தைச் சந்திக்கும் ஆபத்துகளை மேலும் சிக்கலாக்குகிறது என்ற விஞ்ஞானபூர்வமான உண்மையை அது உதாசீனப்படுத்தியது. நெடுங்கோவிட் (Long COVID) நிலைக்கும் அது வைரஸ் தொற்றியவர்கள் உடம்பில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் விடயத்திற்கும் முதலாளித்துவ வெகுஜன ஊடகங்கள் கிட்டத்தட்ட எந்த கவனமும் கொடுக்கவில்லை. புதிய மாறுபாடுகளின் தொடர்ச்சியான மற்றும் துரிதமான பரிணாமவளர்ச்சியானது தடுப்பூசிகளின் திறனையும் முந்தைய தொற்றுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற நோயெதிர்ப்பு சக்தியையும் பலவீனப்படுத்துகிறது என்ற, நுண்ணுயிரியியலாளர்களின் நிரூபிக்கப்பட்ட அபாயம் தொடர்பில் அவை பொய்யுரைத்தன. மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) புதிய அபாயகரமான ஓமிக்ரோன் துணை வகை ஒன்றின் பரவலை மூடிமறைத்திருக்கின்றன என்ற திடுக்கிடும் செய்தி வெளிவந்ததுடன் ஆண்டு நிறைவடைந்திருக்கிறது. XBB.1.5 வகையானது, முதலில் வடகிழக்கு பிராந்தியம் முழுமையிலும் மேலாதிக்கமிக்க வகையாக ஆகி தொற்றுகள் மற்றும் மருத்துவமனை அனுமதிகளுக்கான காரணமான பின்னர், அமெரிக்காவெங்கிலும் மேலாதிக்கம் செலுத்தும் வகையாக துரிதமாக ஆகியிருக்கிறது.

6. தொற்று மற்றும் மறுதொற்றின் முடிவற்ற அலைகளுக்கு மத்தியில் “வைரஸுடன் வாழப் பழகிக் கொள்வது” என்பது மரணம் மற்றும் உடல் பலவீனத்தின் திகைப்பூட்டும் மட்டங்களை ஏற்றுக் கொள்வது என்றே அர்த்தமளித்திருக்கிறது. உலகளாவிய எதிர்பார்த்த ஆயுட்காலம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதன்முறையாக சரிவு கண்டிருக்கிறது. உலகெங்கும் 10 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது பிரதான பராமரிப்பாளரையோ கோவிட்-19 க்கு இழந்திருக்கின்றன. நூறு மில்லியன்கணக்கான மக்கள் உடலின் கிட்டத்தட்ட ஒவ்வொரு அவயத்தையும் பாதிக்கக் கூடிய நெடுங்கோவிட் நிலையால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

7. கூடுதல் மரண மதிப்பீடுகளின் படி, மூன்று ஆண்டுகளில் 21 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கோவிட்-19 பெருந்தொற்றினால் மரணமடைந்திருக்கிறார்கள், இது முதலாம் உலகப் போரின் முதல் நான்கு ஆண்டுகளின் போது ஏற்பட்ட மொத்த இராணுவத்தரப்பு மற்றும் மக்கள்தரப்பு பலி எண்ணிக்கைக்கு கிட்டத்தட்ட நிகரானதாகும். உலகளாவிய அளவில் மரணத்திற்கான முதன்மைக் காரணங்களில் கோவிட்-19 2020 இல் மூன்றாவது இடத்தில் இருந்தது, 2021 இல் முதல் இடத்தில் இருந்தது என்று கூடுதல் மரணங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு நடத்திய ஒரு சமீபத்திய ஆய்வு கண்டறிந்தது. 2022 இல் உலகளாவிய அளவில் 5.1 மில்லியன் கூடுதல் மரணங்கள் நிகழ்ந்திருந்தன, “மிதமான” ஓமிக்ரோன் வகை, மரணத்திற்கான முதன்மைக் காரணங்களில் மூன்றாவதாய் இருந்தது. ஒரு புதிய வைரஸ் உலகெங்கும் பரவவும் உலகின் மிகமோசமான கொலைகாரர்களில் ஒன்றானதாகவும் அரசாங்கங்கள் அனுமதித்தன.

8. 2022 இல் அமெரிக்காவில் மட்டும், 270,000 உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 மரணங்களும் 350,000க்கும் அதிகமான கூடுதல் மரணங்களும் நிகழ்ந்திருந்தன. இந்த மரணங்களில் வயதானவர்களின் விகிதம் அதிகமானதாக இருந்தது. 2022 இன் கோவிட்-19 மரணங்களில் முக்கால்வாசி, அல்லது 186,000 பேர் 65 வயதிற்கும் மேற்பட்டவர்களாக இருந்தனர், இந்த சதவீதம் ஆண்டு முழுவதும் அதிகரித்துச் சென்றவாறே இருந்தது. ஒரு புதிய மல்தூஸியன்வாதம் ஆளும் வர்க்கத்தை பீடித்திருக்கிறது, வயதானவர்களின் மரணத்தை அது திகைப்பூட்டும் அலட்சியத்துடன் காண்கிறது. சார்லஸ் டிக்கன்ஸின் கிறிஸ்துமஸ் கதைகளில் சுயநலவாதிபற்றி சொல்லும் வார்த்தைகளான “அவர்கள் இறக்க விரும்பினால் அதை அவர்கள் செய்வதே சிறப்பானது, உபரி மக்கள்தொகை குறையட்டும்” என்பது நிதிய ஒருசிலவராட்சிக் கூட்டத்தின் மந்திரமாக இப்போது இருக்கிறது.

9. 2022 நவம்பர் வரையில், சீனா “பூச்சிய கோவிட்”, அதாவது வைரஸ் பரவலை நிறுத்துவதற்கு அவசியமான நன்கறிந்த பொது சுகாதார நடவடிக்கைகளை அமல்படுத்துவது, எனும் ஒரு கொள்கையைக் கடைப்பிடித்து வந்தது. பெருந்தொற்றின் முதல் மூன்று ஆண்டுகளில் இந்த கொள்கையினால், 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட சீனாவில் வெறும் 5,000 க்கும் அதிகமான எண்ணிக்கைக்கு, அதாவது, அந்த சமயத்தில் அமெரிக்காவில் இருந்த மரண விகிதத்திற்கு வெறும் 0.1 சதவீதம் என்ற வீதத்தில், கோவிட்-19 மரணங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. 2022 மார்ச்-ஜூனில், பூச்சிய கோவிட் மூலோபாயமானது ஷாங்காயில் ஓமிக்ரோன் BA.2 துணைவகையின் வெடிப்பை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது, அதன்மூலம் இந்த மிகவும் தொற்றும்திறனுடைய மாறுபாட்டு வகையுடன் போராடுவதிலும் கூட இந்த மூலோபாயம் திறம்பட்டதாக இருந்தது என்பதையும் நிரூபித்தது.

சென்ற ஆண்டில் ஓமிக்ரோன் அதிகரிப்பின் போது கொரானா வைரஸ் தொற்றியவர்களைத் தடமறியும் பொருட்டு பெய்ஜிங்கில் சுகாதாரப் பணியாளர்கள் தொண்டையில் இருந்து சளிமாதிரிகள் எடுக்கின்றனர். [AP Photo/Andy Wong]

10. சீனாவின் நடவடிக்கைகள், அவற்றைப் பொறுத்தவரையில் எவ்வளவு சரியானவையாக இருந்தபோதும், ஒரு அடிப்படையான மற்றும் ஆபத்தான தவறைக் கொண்டிருந்தன: உலகளாவிய பெருந்தொற்றானது ஒரு தேசிய மூலோபாயத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட முடியாது. நாடுகளின் எல்லைகள் ஊடுருவ முடியாதவையாக ஆக்க முடியாது. வைரஸ் சீனாவுக்குள் நுழையாமல் தடுப்பதென்பது எப்போதும் முடியாத ஒரு காரியமாக இருந்தது. அதைத் தவிர, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உலக வர்த்தகத்தையும் விநியோகச் சங்கிலிகளையும் பலவீனப்படுத்தின. அதாவது, அவை நாடுகடந்த நிறுவனங்களின் இலாப நலன்களுக்குத் தீங்கிழைப்பவையாக இருந்தன என்ற காரணத்தைச் சொல்லி சீனா அதன் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையைக் கைவிட வேண்டும் என்று கோருகின்ற ஒரு தீவிரமான பிரச்சாரத்தை முக்கிய முதலாளித்துவ நாடுகளின் அரசாங்கங்களும் ஊடகங்களும் முன்னெடுத்தன. ஆப்பிள், நைக் மற்றும் பிற முக்கிய பெருநிறுவனங்கள் தமது உற்பத்தி ஆலைகளை மற்ற நாடுகளுக்கு இடம்பெயர்த்தப் போவதாக மிரட்டின.

11. இந்த பொருளாதார மற்றும் புவியரசியல் அழுத்தங்களுக்கான பதிலிறுப்பில், நவம்பர் தொடங்கி, ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) பூஜ்ஜிய-கோவிட் கொள்கையைக் கைவிட்டது. ஒரு மாத கால இடைவெளியில், அது அத்தனை பூட்டல்கள், பாரிய பரிசோதனைகள், தொடர்புகள் தடமறிதல், தனிமைப்படுத்தல் நெறிமுறைகள், மற்றும் பயணக் கட்டுப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவந்தது.

12. டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மட்டும், சீனாவில், 248 மில்லியன் மக்கள் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளானதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது பெருந்தொற்றின் முதல் மூன்று ஆண்டுகளில் தொற்றிய எண்ணிக்கையினும் 100 மடங்கு அதிகமானதாகும். சீனாவின் 1.4 பில்லியன் மக்களில் பெருவாரியானோர் 2023 மார்ச்சுக்குள்ளாக தொற்றுக்கு ஆளாகியிருப்பார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. மரணங்களின் எண்ணிக்கை 1 மில்லியனில் இருந்து 2 மில்லியனுக்குள் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. சீனாவெங்கும் நகரங்களின் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன, பிணங்கள் குவிவதை அடுத்து பிணக்கிடங்குகள் எரிப்பு சேவைகளை நிறுத்தி வைக்கின்றன. நாடெங்கிலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் இறந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

13. சீனாவில் பூச்சிய-கோவிட் கொள்கை அகற்றப்பட்டிருப்பதும் “நிரந்தர கோவிட்” கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதும் பெருந்தொற்றின் ஒரு புதிய மற்றும் இன்னும் அதிக ஆபத்தானதாக இருக்க சாத்தியமுடைய ஒரு கட்டத்தைக் குறிக்கிறது. பாரிய தொற்று எண்ணிக்கை புதிய மாறுபாடுகள் எழுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலகின் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினர் சமூகத்துடன் ரஷ்ய சக்கர சூதாட்டம் விளையாடிக் கொண்டிருக்கின்றனர், இன்னும் அதிக தொற்றுதிறன்மிக்க, நோயெதிர்ப்புசக்தியை-தகர்க்கும், மரணகரமானதொரு மாறுபாடு உலகளவில் இன்னும் கொடிய நோய்தொற்று அலையைக் கட்டவிழ்த்து விடும் அபாயத்தை அதிகரிக்கிறது.

14. பாரிய எண்ணிக்கையில் நோயாளராவதிலும், மரணங்களிலும் சென்று முடிவடையும் எனத் தெரிந்த கொள்கைகளை அமல்படுத்துவதன் மூலம் வெளிப்படையாக பாசிசத்தனத்துடன் நடந்து கொள்ளும் அரசாங்கங்களுக்கு, நவீன வரலாற்றில் எந்த முன்னுதாரணத்தையும் காண முடியாது. ஆனால் பெருந்தொற்றின் காலத்தில் முதலாளித்துவ அரசுகள் அனைத்துமே துல்லியமாக அதைத் தான் செய்திருக்கின்றன.

15. பெருந்தொற்றுக்கான பதிலிறுப்பானது, காலநிலை மாற்றத்தால் முன்நிறுத்தப்பட்டுள்ள அதனினும் பெரிய அச்சுறுத்தலுக்கு முதலாளித்துவ அரசாங்கங்கள் இதிலிருந்து வித்தியாசப்பட்டு பதிலிறுத்து விடப் போவதில்லை என்பதில் எந்த சந்தேகத்தையும் விட்டுவைத்திருக்க முடியாது. மொத்தமான அழிவின் அபாயமும் கூட ஆளும் உயரடுக்கினரை பெருநிறுவன இலாபங்கள் மற்றும் தனிமனித செல்வத்தை அழிவுகரமான விதத்தில் பின்தொடர்ந்து செல்வதில் இருந்து மாற்றி விடப் போவதில்லை. பாகிஸ்தானிலும் மற்றும் ஆபிரிக்காவின் பெரும்பகுதிகளிலும் பயங்கரமான வெள்ளம், ஐரோப்பா, சீனா மற்றும் கிழக்கு ஆபிரிக்கா எங்கிலும் நாசகரமான வறட்சி நிலைமைகள், அமெரிக்காவில் இயன் புயல் மற்றும் குளிர்கால வெடிகுண்டு சூறாவளி, மற்றும் உலகெங்குமான அதீத காலநிலை நிகழ்வுகள் உள்ளிட காலநிலை நெருக்கடியில் ஒரு பெரும் தீவிரப்படலை சென்ற ஆண்டு கண்டிருந்தது. காலநிலை மாற்றமானது உலகளாவிய உணவு நெருக்கடியை தொடர்ந்து மோசமாக்கி, மில்லியன் கணக்கான மக்களைக் கொன்று, இன்னும் நூறுமில்லியன் கணக்கான மக்களை இடம்பெயர்த்துவதுடன், வருங்காலத்தில் பெருந்தொற்றுக்கான சாத்தியத்தை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர்

16. ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் மூன்றாம் உலகப் போரை நோக்கிய பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கிறது. ஒரு போரின் அத்தியாவசியமான காரணமும் தன்மையும் எந்த நாடு “முதலில் சுடுவதை ஆரம்பித்தது” என்பதில் இருந்து தீர்மானமாவதில்லை, மாறாக மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகளைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் வர்க்கங்களது சமூகப்பொருளாதார மற்றும் புவியரசியல் நலன்களைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது. ஒரு பினாமிப் போரில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் கைகளில் உக்ரேன் அதன் ஊழலடைந்த முதலாளித்துவ சிலவராட்சியினால் வைக்கப்பட்டுள்ளது. பின்வரும் காரணங்களுக்காய் ரஷ்யாவைத் தோற்கடிப்பது அவற்றின் நோக்கமாய் உள்ளது: 1) அந்த பரந்த நாட்டை சிதறடித்து அதன் செறிந்த முக்கிய இயற்கை ஆதாரவள விநியோகத்தின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவது; 2) யூரேசிய துணைக்கண்டத்தின் மீது அமெரிக்காவின் வழிகாட்டுதலின் கீழான ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு இருக்கும் அத்தனை முட்டுக்கட்டைகளையும் அகற்றுவது; மற்றும் 3) சீனாவின் மீதான சுற்றிவளைப்பை முழுமை செய்து, பொருளாதார மற்றும் இராணுவ நடவடிக்கைகளது ஒரு கூட்டின் மூலமாக, அதனை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கீழ்ப்படியச் செய்வது.

2022 டிசம்பர் 26 திங்கட்கிழமை அன்று உக்ரேனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் அவ்திவ்கா பகுதி அருகே ரஷ்ய நிலைகள் மீது உக்ரேனிய படையினர்கள் பிரெஞ்சு தயாரிப்பான CAESAR ஏவுகணைத் தாக்குதல் நடத்துகின்றனர். [AP Photo/Lib's]

17. 2022 பெப்ரவரி 24 அன்று உக்ரேன் மீது ரஷ்யா “எந்தக் காரணமும் இல்லாமல் ஆக்கிரமித்தது” என்ற முதலாளித்துவ ஊடகங்களது பிரச்சாரம் பொய்கள், பாதி-உண்மைகள் மற்றும் முக்கியமான தகவல்கள் நசுக்கியது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இப்பிரச்சாரமானது இந்த மோதலை அதன் ஒட்டுமொத்த முன்வந்த வரலாற்றில் இருந்தும், கடந்த 30 ஆண்டுகளது அமெரிக்க-தலைமையிலான போர்கள் மற்றும் படையெடுப்புகளது வரலாற்றில் இருந்தும் பிரிக்கிறது.

18. 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை அமெரிக்கா, தனது இராணுவ ஆற்றலைக் கொண்டு உலகெங்கிலும் போட்டியற்ற மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகக் கண்டது. வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களின் பேரில் ஒரு “புதிய உலக ஒழுங்கை” அமெரிக்கா கட்டளையிடத்தக்க ஒரு “ஒற்றைத்துருவ தருணம்” என்று ஏகாதிபத்திய பிரச்சாரகர்களால் அது போற்றப்பட்டது. அமெரிக்க மூலோபாயமானது, “வருங்காலத்தில் எந்த உலகளாவிய போட்டியாளரும் எழுந்துவிடும் வாய்ப்பை இல்லாதுசெய்வதை” அடிப்படையாகக் கொள்ள வேண்டியிருந்ததாக 1992 ஆம் ஆண்டின் பென்டகனின் மூலோபாய ஆவணம் ஒன்று பிரகடனம் செய்தது.

19. உக்ரேனில் “இனப்படுகொலை” நடத்தியதாக ரஷ்யாவை இப்போது கண்டனம் செய்கின்ற அதே அரசாங்கம்தான் உலகை வெற்றிகாணும் அதன் திட்டத்தில் ஒட்டுமொத்த சமூகங்களை அழித்தது நூறாயிரக்கணக்கில் படுகொலை செய்தது. 1990-91 இல், சோவியத் ஒன்றியத்தின் இறுதி ஆண்டில் ஈராக்கிற்கு எதிராக தொடுக்கப்பட்ட முதல் போரைத் தொடர்ந்து 1990கள் முழுவதும் நடந்த யூகோஸ்லாவிய சிதறடிப்பு பின்தொடர்ந்து, 1999 இல் சேர்பியாவுக்கு எதிரான போரில் இது உச்சமடைந்தது. உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாடு குறித்தும் கிரீமியாவை திருப்பியளிக்கக் கோரியும் இப்போது வலியுறுத்தும் அதே ஏகாதிபத்திய சக்திகளுக்கு சேர்பியாவில் இருந்து கொசோவோவை கிழித்தெடுப்பது குறித்து எந்தவிதமான குற்றவுணர்வும் இருக்கவில்ல.

20. 2001 செப்டம்பர் 11 தாக்குதல்கள், “பயங்கரவாதத்தின் மீது போர்” மற்றும் ஜனாதிபதி ஜோர்ஜ் W. புஷ் அழைத்தவாறாக “இருபத்தியோராம் நூற்றாண்டின் போர்”களை பிரகடனம் செய்வதற்காக பற்றிக் கொள்ளப்பட்டது. அமெரிக்கா 2001 இல் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தமை, 2003 இல் ஈராக்கிற்கு எதிரான இரண்டாவது போருக்கு இட்டுச்சென்றது. அதன்பின், ஒபாமா நிர்வாகத்தின் கீழ், அது லிபியாவிற்கு எதிராக ஒரு போரை நடத்தியதோடு 2011 இல் சிரியாவில் உள்நாட்டுப் போருக்கும் ஏற்பாடு செய்தது. இந்த போர்கள் ஒவ்வொன்றுமே ஒழிக்கப்பட வேண்டிய ஏதாவதொரு சாத்தானுக்கு எதிராக அமெரிக்கா “ஜனநாயகம்” மற்றும் “சுதந்திரம்” ஆகியவற்றுக்காக போராடிக் கொண்டிருந்தது என்ற விதத்தில் நியாயப்படுத்தப்பட்டன.

21. எனினும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு மற்றும் தலைமை கொடுக்கப்பட்ட இந்த இரத்த ஆறு, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் யூரோசியா நிலப்பிராந்தியத்தின் மீது போட்டியற்ற கட்டுப்பாடு என்ற அதன் இலட்சியத்தை எட்டுவதில் தோல்விகண்டது. அதன்பின் அதிகரித்த விதத்தில், சீனாவுடனான ஒரு மோதலுக்கான முன்னோட்டமாக ரஷ்யாவுடன் ஒரு நேரடி மோதலுக்கான அவசியம் குறித்து அமெரிக்காவின் புவியரசியல் மூலோபாயவாதிகள் விவாதிக்கத் தொடங்கினர். 2021 ஆகஸ்டில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கத் துருப்புகளை திரும்பப் பெறுவதாக பைடென் அறிவித்தபோது, “நிரந்தரப் போரை” முடிவுக்குக் கொண்டுவருவதாக அவரே கூறிக் கொண்டார். அது, “எவ்வளவு நெடிய காலம் எடுக்குமோ அவ்வளவு காலத்திற்கு” தொடரும் என்று அவர் உறுதியளித்திருக்கின்ற ரஷ்யாவுக்கு எதிரான போருக்கான தயாரிப்பிற்காகத்தான் இவ்வாறு செய்யப்பட்டிருந்தது என்பது இப்போது வெட்டவெளிச்சமாகிறது.

1949 முதல் நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை காட்டும் வரைபடம் [Photo by Patrickneil / CC BY-NC-SA 4.0]

22. ரஷ்ய எல்லைகள் வரையில், நேட்டோவின் பல தசாப்த கிழக்கத்திய விரிவாக்கத்தின் மூலம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகள் தான் இந்தப் போரைத் தூண்டியிருந்தன. இந்த படையெடுப்புக்கு முன்வந்த ஆண்டுகளில், குறிப்பாக உக்ரேனில் ஒரு ரஷ்ய-ஆதரவு அரசாங்கம் அமெரிக்காவினால் ஒழுங்கமைக்கப்பட்ட 2014 ஆட்சிக்கவிழ்ப்பு மூலமாக கவிழ்க்கப்பட்ட பின்னர், அமெரிக்காவும் நேட்டோவும், உத்தியோகபூர்வமாக இல்லாவிடினும் ஏனைய எல்லா விதத்திலும் நேட்டோவின் ஒரு உறுப்பினராக உருமாற்றப்பட்டிருக்கும் உக்ரேனுக்குள் பத்து பில்லியன்கணக்கான டாலர்களில் ஆயுதங்களைப் பாய்ச்சியுள்ளன.

23. ஜேர்மனியின் முன்னாள் சான்சலரான அங்கேலா மேர்க்கெல் சென்ற மாதத்தில் Die Zeit இதழிடம் பேசுகையில் உண்மையை உளறினார்: “2014 மின்ஸ்க் உடன்பாடு [உக்ரேன் ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து ஏற்பாடானது] உக்ரேனுக்கு அவகாசம் வழங்குவதற்கான ஒரு முயற்சியாக இருந்தது. இந்த அவகாசத்தை, இன்று நீங்கள் காண்பதைப் போல, வலிமைப்படுவதற்கும் அது பயன்படுத்திக் கொண்டது.”

24. ரஷ்யாவுக்கு எதிரான போர் திட்டங்கள் 2022 இல் செயல்படுத்தப்பட்டன. போர் வெடிப்பதற்கு ஏழு வாரங்கள் முன்பாக, WSWS பின்வருமாறு எச்சரித்தது:

பெருந்தொற்றின் இரண்டாண்டு காலத்திலும் இராணுவவாத மிரட்டல்கள் அதிகரிக்கவே செய்துள்ளன. பைடென் நிர்வாகமானது உக்ரேனில் பொறுப்பற்றதொரு நேட்டோ ஆதரவு இராணுவப் பெருக்கத்திற்கு தலைமை கொடுத்து, உக்ரேனின் வலதுசாரி அரசாங்கம் ரஷ்யாவுடனான அதன் எல்லையில் 125,000 படையினரை நிலைநிறுத்தும்படி தூண்டிவிட்டு, அமெரிக்கா “எவரொருவரது சிவப்புக் கோடுகளையும் ஏற்காது” என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை எச்சரித்துள்ளதுடன் இந்த புத்தாண்டு தொடங்குகிறது. உக்ரேன் ஆட்சியை பின்வாங்கச் செய்வதற்கெல்லாம் வெகுதூரத்தில், பைடென் நிர்வாகமானது ஒரு இராணுவ மோதலை ஊக்குவிப்பதில்தான் நோக்கம் கொண்டுள்ளதாய் தென்படுகிறது. “ரஷ்யா இன்னும் அதிகமாய் நகர முடிவுசெய்யுமானால் அப்போது உக்ரேன் அதற்கு அடுத்த ஆப்கானிஸ்தானாக மாறும்” என்று டிசம்பரில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் கிறிஸ் மர்பி மிரட்டல் விடுத்தார்.

25. அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ உடந்தையாளர்களால் நடத்தப்படும் ஒவ்வொரு போரிலும் போலவே, ரஷ்யாவுடனான மோதலானது ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான ஒரு போராட்டம் என்பதாக முடிவற்ற கூற்றுகள் காணக் கிடைக்கின்றன. ஆனால் ஏகாதிபத்திய சக்திகளின் நடவடிக்கைகளுக்கு கீழமைந்திருக்கின்ற பொருளாதார நலன்களைக் எடுத்துக்காட்டும் எந்தவொரு செய்தியையும் ஊடகத்தில் காண முடிவதில்லை. உலக சோசலிச வலைத் தளம் 2022 மே 22 அன்று ”இன்றியமையாத வளங்களும், ஏகாதிபத்தியமும், ரஷ்யாவுக்கு எதிரான போரும்” என்ற தலைப்பில் வெளியான ஒரு விரிவான கட்டுரையில் இந்த பிரச்சினையை விரிவாக ஆய்வு செய்திருந்தது. அது விளக்கியது:

ரஷ்யா உலகின் மிகப்பெரும் நாடாக உள்ளது. ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒப்பிட்டால் அதன் பொருளாதாரம் சிறிதானதாக இருக்கிறது, ஆனால் அதன் நிலப்பரப்பு இரண்டு கண்டங்களில் விரிந்து பரந்த மொத்தம் 6.6 மில்லியன் சதுர மைல்கள் கொண்டதாகும். அடுத்தடுத்த இடங்களில் வரும் கனடா (3.8 மில்லியன் சதுர மைல்கள்), சீனா (3.7 மில்லியன் சதுர மைல்கள்) மற்றும் அமெரிக்கா (3.6 மில்லியன் சதுர மைல்கள்) ஆகியவை நிலப்பரப்பின் அளவில் கணிசமாகப் பின்னால் இருக்கின்றன. உலகின் மொத்த நிலப்பரப்பில் ரஷ்யா மட்டும் 11 சதவீதம் கொண்டுள்ளது.

இந்த பரந்த நிலப்பரப்பில் ஏராளமான முக்கிய கனிமங்களும் பிற வளங்களும் உள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இயற்கை எரிவாயுவில் சுமார் 40 சதவீதம் ரஷ்யா உற்பத்தி செய்கிறது, அத்துடன் உலகின் எண்ணெய் உற்பத்தியில் கிட்டத்தட்ட 12 சதவீத பங்களிப்பை ரஷ்யா கொண்டுள்ளது. அத்துடன் உலகில் நிலக்கரி கையிருப்பு மிக அதிகமாகக் கொண்டிருக்கும் இரண்டாவது பெரிய நாடாகவும் (175 பில்லியன் டன்கள்) ரஷ்யா உள்ளது. இப்போது நடைபெற்று வரும் சண்டையில் இந்த வளங்கள் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றன. உலகளாவிய எரிசக்தி விநியோகம் இறுகிக் கொண்டிருப்பதன் மத்தியில், இந்த வளங்கள் உலகளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு, குறிப்பாக சீனாவின் எழுச்சியை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் முயற்சிக்கு ஒரு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கின்றன.

ஹைட்ரோகார்பன்கள் தவிர, ரஷ்யா பாரியளவில் அடிப்படை உலோக வளங்களையும் கொண்டிருக்கிறது. இரும்புத் தாது கையிருப்பில், 25 பில்லியன்கள் டன்களுடன், ரஷ்யா மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. தங்க கையிருப்பிலும் (6,800 டன்கள்) அது இரண்டாவது இடத்தில் உள்ளது, அத்துடன் வெள்ளியில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. வைர உற்பத்தியிலும் இந்நாடு உலகில் முதலிடத்தில் உள்ளது, சமீப ஆண்டுகளில், சராசரியாக, உலகின் வைரங்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கினை இது உற்பத்தி செய்கிறது.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளது புவிமூலோபாய இலட்சியங்களைப் புரிந்துகொள்வதில் இந்த வளங்கள் ஒவ்வொன்றுமே கவனத்துக்குரியவை தான் என்கிற வேளையில், இந்த கட்டுரை இன்றியமையாத கனிமங்கள் என்ற உலக ஆதாரவள அரசியலின் மிகக் குறைவாக அறியப்பட்ட ஒரு அம்சத்தை ஆய்கிறது. அடுத்த இரண்டு தசாப்தங்களில், தேவையில் மிக அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகின்ற உலகளாவிய உற்பத்திக்கு அதிகரித்தளவில் இன்றியமையாததாக ஆகியிருக்கும் உலோகங்கள் மற்றும் தாதுக்களது ஒரு வரிசையையே இன்றியமையாத கனிமவளங்கள் குறிக்கின்றன. 21வது நூற்றாண்டின் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சக்திக்கு மிக முக்கியமானதாக அமெரிக்கா நம்பும் இன்றியமையாத கனிமவளங்களின் ஒரு பல்தரப்பட்ட வரிசையின் கணிசமான ஆதாரவளங்களை ரஷ்யா கொண்டிருக்கிறது.

26. ரஷ்யாவின் மூலோபாய வளங்கள் மீதான ஒரு கவனமான திறனாய்வின் அடிப்படையில், அந்த கட்டுரை இவ்வாறு நிறைவுசெய்தது:

ரஷ்யாவையும் அதன் மேலாதிக்கத்தையும் அமெரிக்க மூலதனத்தைக் கொண்டு உடைப்பதென்பது சீனாவையும் யூரேசிய நிலப்பரப்பையும் மிகப்பரந்தளவில் தனது நோக்கங்களுக்கு கீழ்ப்படியச் செய்வதன் மூலம் ஒரு “புதிய அமெரிக்க நூற்றாண்டை” திணிப்பதற்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒரு மூலோபாய படிக்கட்டாக இருக்கும். ஆதாரவளங்கள் இதில் ஒரு பாத்திரம் வகிக்கின்றன. எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கான தொடர்ந்த தேவைகள், மற்றும் இன்றியமையாத தாதுக்களுக்கு துரிதமாகப் பெருகும் தேவை ஆகியவற்றின் மத்தியில், ரஷ்யா மிகப்பரந்த வளங்களுடனான ஒரு அதிமுக்கிய நிலப்பரப்பாகப் பார்க்கப்படுகிறது.

27. எவ்வாறெனினும், நேட்டோவால் நடத்தப்படும் போரின் ஏகாதிபத்தியத் தன்மையானது உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நியாயப்படுத்த முடியாது மட்டுமல்லாது, அதற்கு எவ்விதமான முற்போக்கான தன்மையையும் வழங்கவும் முடியாது. 2022 டிசம்பர் 10 அன்று சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினால் (IYSSE) நடத்தப்பட்ட இணையவழி பேரணியில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு புட்டின் ஆட்சியின் நடவடிக்கைகளை ஐயத்திற்கிடமற்ற குரலில் கண்டனம் செய்தது:

போரைத் தூண்டுவதில் அமெரிக்க-நேட்டோ கூட்டணியின் முக்கிய பொறுப்பு இருந்தாலும், 2022 பிப்ரவரி 24 அன்று உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தமையானது 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் அதிகாரத்துக்கு வந்த ஆளும் முதலாளித்துவ சிலவராட்சியின் சார்பில் புட்டின் ஆட்சியால் எடுக்கப்பட்ட ஒரு பிற்போக்குத்தனமான மற்றும் விரக்தியான நடவடிக்கையாக இருந்தது.

ஜாரிசம் மற்றும் நவ-ஸ்ராலினிச தேசியப் பேரினவாதத்தின் பிற்போக்கு பாரம்பரியத்தை தூண்டுவதன் மூலம் போருக்கு நியாயம் கற்பிக்க புட்டின் ஆட்சி மேற்கொள்ளும் முயற்சிகள் ஒரு வெறுப்புக்குரிய வரலாற்று பிற்போக்குத்தனத்தைக் குறிக்கிறது. அக்டோபர் புரட்சிக்கு ஐந்து ஆண்டுகளின் பின்னர், 1922 இல் ஸ்தாபிக்கப்பட்ட சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் கட்டியமைக்கப்பட்ட ஜனநாயகக் கொள்கைகளை முழுமையாக மறுத்ததன் விளைவாக புட்டினின் ஆட்சி இருப்பதே நேட்டோவின் ஆத்திரமூட்டல்கள் வெற்றியடைவதற்கான காரணமாக இருக்கின்றது. லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி தலைமையிலான போல்ஷ்விக் அரசாங்கமானது, ஒரு தன்னார்வ அடிப்படையிலான ஒன்றியமாகவே சோவியத் ஒன்றியத்தை ஸ்தாபித்திருந்தது என்பதுடன், அத்தனை தேசிய மற்றும் இனக் குழுக்களுக்கும் ஜனநாயக சமத்துவமளிக்க அரசியல்சட்டரீதியாக உறுதிப்பாடு கொண்டதாக இருந்தது. அதன் பகிரங்க பாசிச மறுபக்கத்தை உக்ரேனில் காணும் தேசியப் பேரினவாதத்தை ரஷ்யாவில் திட்டமிட்டு ஊக்குவித்தமையானது இரண்டு பாதிக்கப்பட்ட நாடுகளது வெகுஜனங்களுக்கும் இடையில் ஒரு சகோதர மோதலுக்கு அவசியமான கருத்தியல் முன்நிபந்தனைகளை உருவாக்கியிருந்தது.

வரலாற்று முன்னோக்கில் வைத்துப் பார்க்கையில், உக்ரேனிலான அமெரிக்க-நேட்டோ போர், முதலாளித்துவத்தையும் அது பொதிந்துள்ள தேசிய-அரசு அமைப்புமுறையையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவசியத்தை மீண்டுமொரு முறை நிரூபணம் செய்கிறது. உண்மையில், இந்தப் போரானது, உற்பத்தி சாதனங்கள் முதலாளித்துவ தனியார் உடைமைகளாக இருப்பது மற்றும் உலகம் குரோதமிக்க தேசிய அரசுகளாக பிளவுபட்டுக் கிடப்பது ஆகியவற்றுக்கும் மனிதகுலத்தின் முற்போக்கான அபிவிருத்தி, மற்றும் அதன் உயிர்வாழ்வு ஆகியவற்றுக்கும் இடையில் நிலவும் முற்றுமுழுதான இணக்கமின்மையின் ஒரேயொரு வெளிப்பாடாக மட்டுமே இருக்கிறது.

28. இந்தப் போர் சோவியத் ஒன்றியக் கலைப்பின் இன்னுமொரு துயரகரமான பின்விளைவுகளில் ஒன்றாக இருக்கிறது. முதலாளித்துவத்தின் மீட்சியில் இருந்து பிறக்கக் கூடிய பிரமிக்கத்தக்க நன்மைகள் குறித்து கோர்பசேவ், யெல்ட்சின் மற்றும் சலுகைகொண்ட நடுத்தர-வர்க்க நோமன்குளோத்ரா (Nomenklatura)க்குள்ளாக இருந்த அவர்களது ஆதரவாளர்கள் கூறிய அனைத்தும் கடந்த 30 ஆண்டு கால நிகழ்வுகளால் மறுதலிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் புரட்சியின் ஒட்டுமொத்த பாரம்பரியமும் பிரம்மாண்டமான சமூக மற்றும் கலாச்சார சாதனைகளும் மறுதலிக்கப்பட்டமையானது, அமைதி, வளமை மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை உருவாக்கவில்லை, மாறாக சகோதரப் போர்கள், பாரிய வறுமை மற்றும் எதேச்சாதிகார ஆட்சிகளைத் தான் உருவாக்கியிருக்கிறது.

2019 ஜனவரி 1 அன்று, உக்ரேனின் கியேவ் நகரில் நடந்த ஒரு பேரணியில் அதி-வலது கட்சிகளின் ஆதரவாளர்கள் ஒளிப்பந்தங்களையும் ஸ்டீபன் பண்டேராவின் சித்திரம் கொண்ட ஒரு பதாகையையும் ஏந்திச் செல்கின்றனர். (AP Photo/Efrem Lukatsky) [AP Photo/Efrem Lukatsky]

29. சோவியத் ஒன்றியக் கலைப்பின் விளைபொருட்களான கியேவ் மற்றும் மாஸ்கோவிலுள்ள ஆட்சிகள் இரண்டுமே தமது சித்தாந்த உத்வேகத்தை அரசியல் பிற்போக்குத்தனத்தின் கழிவுக் கிடங்கில் இருந்தே பெறுகின்றன. இரண்டாம் உலகப் போரின் போது யூதர்களையும் போலந்தினத்தவரையும் கூட்டுப் படுகொலை செய்ததில் நாஜிக்களுடன் ஒத்துழைத்த உக்ரேனிய தேசியவாதிகள் அமைப்பின் (Organization of Ukrainian Nationalists) தலைவரான பாசிச ஸ்டீபன் பண்டேரா, இப்போது உக்ரேனின் ஸ்தாபகத் தந்தையாக கௌரவம் செய்யப்படுகிறார். புட்டின் அவரது பங்கிற்கு, லெனின் 1922 இல் ஸ்ராலினை கருத்தில் கொண்டு கூறிய, “அந்த ரஷ்ய-மனிதர், மகா-ரஷ்ய பேரிவனாதி, சாரத்தில் வழக்கமான ரஷ்ய அதிகாரத்துவவாதியைப் போன்ற ஒரு அயோக்கியன் மற்றும் கொடுங்கோலன்” என்று வருணித்த அரசியல் மற்றும் சமூக வகைக்கு சிகரம் போன்றவராக இருக்கிறார். [VI லெனின், 'தேசியங்கள் அல்லது 'தன்னியக்கமயமாக்கல்' பற்றிய கேள்வி', இல்: தேர்வு நூல், தொகுதி.36]

30. அணுஆயுதங்களை புவியரசியல் மோதலுக்கான ஒரு நியாயமான சாதனமாக இயல்பானதொன்றாக்கி இருப்பதுதான் இந்த பினாமிப் போரின் மிகப் பிற்போக்குத்தனமான பின்விளைவுகளில் ஒன்றாய் இருக்கிறது. அணு ஆயுதங்களை பயன்படுத்தும் சாத்தியத்தைக் கொண்டு நேட்டோ சக்திகள் ”பின்வாங்கச் செய்யப்பட” முடியாது என்ற தொடர்ந்த கூற்றானது ரஷ்யாவின் மீதும், நேரம் வரும்போது, பில்லியன் கணக்கான மக்களின் உயிர் அபாயத்தில் வைக்கப்பட்டாலும் சீனாவின் மீதும் முழுமையாக வெற்றி காண்பதற்கான போரை பின்பற்றிச் செல்வதற்கு அவை தீர்மானமான உறுதி கொண்டுள்ளன என்று மட்டுமே அர்த்தமளிக்க முடியும்.

31. போர் அதன் இரண்டாம் ஆண்டில் நுழையும் போது, இராணுவ விரிவாக்கத்தின் தர்க்கம் தவிர்க்கமுடியாமல் தொடர்வதுடன், இது யதார்த்தமற்ற இலக்குகள் மற்றும் பேரழிவுகரமான தவறான கணக்கீடுகளின் அடிப்படையில் தீர்க்கரமாக முன்னேறி செல்ல வேண்டியதன் அவசியத்தால் தூண்டப்படுகிறது. புத்தாண்டு தினத்தன்று டொனெட்ஸ்க் இல் ரஷ்ய படையினர்கள் தங்கியிருந்த ஒரு கட்டிடத்தின் மீது உக்ரேன் நடத்திய தாக்குதலில் ஏராளமான, அநேகமாக நூற்றுக்கணக்கில், புதிதாக படைக்குச் சேர்ந்திருந்தவர்கள் கொல்லப்பட்டிருக்கும் சம்பவத்தில் போரின் அபாயகரமான பயணப்பாதை எடுத்துக்காட்டப்படுகிறது. கூடுதலான ஆயுதங்கள் மற்றும் இராணுவ ஆதரவைப் பெறுவதே இப்பயணத்தின் நோக்கமாக இருந்ததென பகிரங்கமாக கூறப்பட்ட உக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கியின் அமெரிக்க பயணத்தின் ஒரேயொரு வாரத்திற்குப் பின்னர் இந்தப் பாரிய தாக்குதல் நடந்திருந்தது.

32. அமெரிக்கா வழங்கும் முன்னேறிய HIMARS ஏவுகணைவீசு எந்திரத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளைக் கொண்டு இந்த ஜனவரி 1 தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. போரின் திசைவகுப்பதில் அமெரிக்கா கொண்டிருக்கும் கட்டளையிடத்தக்க பாத்திரம் மற்றும் இந்த ராக்கெட் முறையின் நவீனமைப்பு ஆகியவற்றைக் கொண்டு பார்த்தால், இந்த தாக்குதல் பைடன் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது என்பதும், ரஷ்ய படையினர்களைக் குறிவைப்பதிலும் ஏவுகணைகளை ஏவுவதிலும் அமெரிக்காவின் இராணுவத் தொழில்நுட்ப நிபுணர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தனர் என்பதும் சந்தேகத்திற்கிடமற்றதாக இருக்கிறது.

33. பைடன் நிர்வாகம் ஒரு அதிரடியான ரஷ்யப் பதிலிறுப்பை தூண்டத் தலைப்படுகிறதா அல்லது நேட்டோவுடன் போர் தீவிரமடைவதை புட்டின் ஆட்சி தவிர்க்கும் என்று அது நம்புகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும், திட்டமிட்ட ஆத்திரமூட்டலாக இருந்தாலும் சரி அல்லது ரஷ்யக் கொள்கை குறித்த ஒரு தவறான மதிப்பீடாக இருந்தாலும் சரி, வெள்ளை மாளிகையானது ஒரு உலகளாவிய பேரழிவுக்கு இட்டுச் செல்லத்தக்க அபாய செயல்பாடுகளுக்குத் துணிகிறது. உக்ரேனியர்களை பீரங்கித் தீனியாகவும் பகடைக்காய்களாகவும் பயன்படுத்தி அமெரிக்காவும் மற்ற முக்கிய நேட்டோ சக்திகளும், ஒரு இராணுவ வெற்றியை சாதிக்க உறுதிபூண்டுள்ளன; அவை ரஷ்ய சரணாகதிக்குக் குறைந்த எதுவொன்றையும் எதிர்நோக்குவதில்லை. பிரிட்டிஷ் நிதி மூலதனத்தின் பிரதான அங்கமான ஃபைனான்சியல் டைம்ஸ், ஜனவரி 2 அன்று வெளியான ஒரு தலையங்கத்தில் கூறியிருந்தவாறாக: “உக்ரேனின் போர்க்கள வெற்றிகள் அதன் கூட்டாளிகள் ஆதரவைத் தளர்த்தலாம் என்று அர்த்தமளிக்கவில்லை… அல்லது போர்நிறுத்தங்கள் அல்லது பேச்சுவார்த்தைக்கான யோசனையை ஊக்குவிப்பதற்கான நேரமும் இதுவல்ல.”

34. ஏனைய பிரதான ஏகாதிபத்திய சக்திகளும் கூட உலகப் போருக்கு தயாரிப்பு செய்து கொண்டுதானிருக்கின்றன. கடந்திருக்கும் சென்ற ஆண்டில் ஜேர்மனியும் ஜப்பானும் நிறைவேற்றிய பாரிய இராணுவ வரவு-செலவுத் திட்ட அறிக்கைகள் போர் வரவு-செலவுத் திட்ட அறிக்கைகளாகும். IYSSE இன் இணையவழி பேரணியில் குறிப்பிடப்பட்டவாறாக, ரஷ்யா மற்றும் சீனாவுடனான மோதலில் பெரும் சக்திகள் இப்போதைக்கு ஒன்றுபட்டிருந்தாலும், “நேட்டோ கூட்டணியும் ஆசியா மற்றும் ஆசிய-பசிபிக்கில் உள்ள நாடுகளையும் உள்ளடக்கிய அதன் துணை இராணுவ ஒப்பந்தங்களும் ’சகோதரர்களின் ஒரு குழு’வாக இருக்கவில்லை, மாறாக ஏகாதிபத்திய திருடர்கள் மற்றும் கொலைபாதகர்களின் ஒரு கூடாரமாகவே இருக்கிறது. ஏகாதிபத்தியங்களுக்கு-இடையிலான போட்டிகளின் தர்க்கமானது இன்றைய தற்காலிக கூட்டாளிகளின் மத்தியில் கடுமையான மோதல்களுக்கு இட்டுச் செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. கடந்த கால பகைமைகள், உதாரணமாக அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலானது, தவிர்க்கவியலாமல் மீண்டும் எழும்.”

ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதியும் அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடியும்

35. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பொறுப்பற்ற தன்மையை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவியரசியல் நலன்களின் அடிப்படையில் மட்டும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. அமெரிக்காவிற்குள் நிலவுகின்ற அதிதீவிரமான உள்நாட்டு நெருக்கடியும் ஒரு மையக் காரணியாக உள்ளது. உலகை வெற்றிகொள்ளும் கனவுகள் இருந்தபோதிலும் அமெரிக்க ஆளும் வர்க்கமானது அதிகரித்த வகையில் செயலிழந்த ஒரு அரசியல் அமைப்புமுறைக்கு தலைமை தாங்குகின்றது. வெகுமுன்பே, 1998-99 கிளிண்டன் பதவி நீக்க விசாரணையைச் சுற்றியுள்ள நெருக்கடி மற்றும் 2000 இல் வாக்கு எண்ணிக்கையை ஒடுக்கவும் ஜோர்ஜ் W. புஷ்ஷுக்கு ஜனாதிபதி பதவியை வழங்கவும் உச்ச நீதிமன்றம் தலையீடு செய்தமை ஆகியவற்றின் சமயத்திலேயே, அமெரிக்க ஆளும் வர்க்கம் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது என்று அனைத்துலகக் குழு எச்சரித்திருக்கிறது.

2021 ஜனவரி 6 அன்று, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு விசுவாசமான வலது-சாரி கலகக்காரர்கள் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியில் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க செயலகக் கட்டிடத்திற்குள் அதிரடியாக நுழைகின்றனர். [AP Photo/Jose Luis Magana]

36. இந்த ஜனநாயக-விரோத சீரழிவின் நீடித்த நிகழ்ச்சிப்போக்கானது, 2021 ஜனவரி 6 அன்று, அதிகார மாற்றத்தை தடுக்கவும் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கவும் ஒரு பாசிச ஆட்சிக்கவிழ்ப்பை நடத்துவதற்கு டொனால்ட் ட்ரம்ப் செய்த முயற்சியில் உச்சமடைந்தது. இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு குடியரசுக் கட்சியின் பெரும்பான்மையோரின் மற்றும் ஆளும் வர்க்கத்திற்குள்ளும் இராணுவ-அரசு எந்திரத்திற்குள்ளும் இருந்த கணிசமான கூறுகளின் ஆதரவு இருந்தது.

37. சென்ற ஆண்டின் பாதையில், ஜனவரி 6 சம்பவத்தை விசாரணை நடத்தும் காங்கிரஸ் குழுவின் தொடர்ச்சியான விசாரணைகள் இவற்றை நிரூபணம் செய்தன: 1) ஆட்சிக் கவிழ்ப்புக்கு தலைமை கொடுக்கவும் வழிநடத்தவும் ட்ரம்ப் சதிசெய்திருந்தார்; 2) இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சி வெற்றிக்கு நெருக்கமானளவுக்கு சென்றிருந்தது. ட்ரம்ப் கைதுசெய்யப்பட்டு அவர் மீது “ஒரு கிளர்ச்சியைத் தூண்டவும், அதற்கு துணைசெய்யவும் அல்லது உதவவும் சதிசெய்ததாக” குற்றம் சாட்டப்பட வேண்டும் என நீதித்துறைக்கு பரிந்துரை செய்து டிசம்பரில் விசாரணை நிறைவு செய்யப்பட்டது.

38. மூலோபாய ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனம் (IISS) அமெரிக்க அரசியலின் பலவீனம் குறித்து 2022 ஆம் ஆண்டுக்கான அதன் வருடாந்திர மூலோபாய ஆய்வில் சுட்டிக்காட்டியது. அது கூறுகிறது:

ட்ரம்ப்பின் சதி தோல்வியுற்ற போதிலும், இந்த முயற்சியின் துணிச்சலானது, வருங்காலத்தில் தேர்தல் முடிவுகள் நிராகரிக்கப்படக்கூடும் மற்றும் தலைகீழாக்கப்படக் கூடும் என்றவகையில் நனவிலும், எதிர்பார்ப்புகளிலும் ஒரு மாற்றத்திற்கு கட்டியம் கூறியது. அப்படியானதொரு நிலை சிந்திக்கத்தக்கதாக இருக்கிறது என்றால் அதற்குக் காரணம், 2021-22 இல் வாஷிங்டனிலும் மாநிலத் தலைநகரங்களிலும் இருந்த அரசியல் உயரடுக்கினர் மத்தியில் நிலவிய அரசியல் துருவப்படுத்தலை நோக்கி செலுத்தும் நடத்தையின் அசாதாரண மட்டமும், அத்துடன் அமெரிக்கர்களும் கூட சமீபத்தின் எந்தவொரு சமயத்தையும் விட ஒருவரிலிருந்து ஒருவர் சமூகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் அதிக பேதப்பட்டு நிற்பவர்களாக ஆகியிருக்கிறார்கள் என்பதும் மட்டுமே ஆகும்....

வரவிருக்கும் தசாப்தத்தில் அமெரிக்கா ஒரு உள்நாட்டுப் போரை எதிர்கொள்ளக் கூடுமா என்பதைக் குறித்து கல்விசார் வட்டாரத்தில் ஒரு விவாதம் இருக்கிறது. இதற்கான பதில், வரையறைகளைச் சார்ந்ததாக இருக்கலாம். வன்முறை அமெரிக்க அரசியலின் ஒரு தனிச்சிறப்பு அம்சமாக மீண்டும் எழுந்திருக்கிறது.

39. ட்ரம்ப் மட்டுமே அமெரிக்க அரசியலில் பாசிச எதேச்சாதிகாரவாதத்தின் ஒரே அச்சுறுத்தலைக் குறித்து நிற்பவராக இல்லை. குடியரசுக் கட்சி பெருமளவுக்கு பாரம்பரிய ஜனநாயக நெறிமுறைகளை நிராகரிக்கிறது, புளோரிடாவில் ஆளுனர் ரோன் டிசாண்டிஸ் போன்ற ஆளுமைகளின் உயர்ச்சி மூலம் காட்டப்படுவதைப் போல, அரசியல் எதிர்ப்பை தாட்சண்யமின்றி ஒடுக்கும் ஒரு எதேச்சாதிகார அரசை உருவாக்க அது தலைப்படுகிறது. Roe v. Wade தீர்ப்பை தலைகீழாக்க உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு கருக்கலைப்பை குற்றமாக்கும் ஜனநாயக-விரோத அரசுச் சட்டங்களது ஒரு அலையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. உள்ளூர் போலிஸ் ஒவ்வொரு ஆண்டும் 1,000க்கும் அதிகமான பேரை கொலை செய்கிறது. ஜனநாயக அரிப்பின் இந்த அத்தனை வெளிப்பாடுகளுக்கும் கீழமைந்திருப்பது உள்நாட்டு ஒடுக்குமுறை எந்திரத்தின் (NSA மற்றும் FBI, மற்றும் ஒவ்வொரு மாநிலம் மற்றும் முக்கிய நகரத்திலும் இருக்கும் அவற்றின் சக அமைப்புகள் போன்ற கண்காணிப்பு மற்றும் ஒடுக்குமுறையின் பாரிய முகமைகள்) தொடர்ச்சியான வளர்ச்சி ஆகும்.

இத்தாலியின் சகோதரர்கள் அமைப்பின் ஜியோர்ஜியா மெலோனி ரோமில் நடந்த மத்திய-வலது கூட்டணியின் நிறைவுப் பேரணியில் பங்கேற்கிறார், செப். 22, 2022 [AP Photo/Gregori Borgia, file]

40. ஜனநாயகத்தின் பொறிவும் அதி-வலது மற்றும் பாசிச இயக்கங்களது அரசியல் செல்வாக்கு வளர்வதும் ஒரு உலகளாவிய நிகழ்வாக இருக்கிறது. இத்தாலியில், பாசிச இத்தாலிய சமூக இயக்கத்தின் அடுத்துவந்ததும் பாசிச சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் வாரிசுகளுமான இத்தாலியின் சகோதரர்கள் அமைப்பு (FdI), அக்டோபரில் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தலைமையில் அதிகாரத்துக்கு வந்தது. பிரான்சில், மார்ச்சில் நடந்த தேர்தலில், நவ-பாசிச வேட்பாளரான, மரின்–லு-பென் இமானுவல் மக்ரோனுக்கு எதிரான இறுதிக்கட்ட தேர்தலில் 45 சதவீத வாக்குகள் பெற்றார். இருபதாம் நூற்றாண்டின் மோசமான குற்றங்களுக்கு பொறுப்பாயிருந்த நாஜி சர்வாதிகாரம் இருந்த ஜேர்மனியில், டிசம்பரில் நடந்த ஒரு சோதனையானது இராணுவப் படை மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஒரு பாசிச பயங்கரவாத சதி திட்டமிடப்பட்டதை அம்பலப்படுத்தியது. “றைஸ் குடிமக்கள்” (Reichsbürger) இயக்கம் அதி-வலது ஜேர்மனிக்கான மாற்றுடன் (AfD) நெருக்கமான தொடர்புகள் கொண்டுள்ளது, அத்துடன் இந்த நவ-நாஜி இயக்கமானது உளவுத்துறை மற்றும் இராணுவ எந்திரத்திற்குள்ளாகவும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருக்கிறது.

41. ஐரோப்பா முழுமையிலும், இராணுவவாதத்தின் ஊக்குவிப்பு, பொது சுகாதார நடவடிக்கைகளைக் கைவிடல், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் மீதான தாக்குதல், மற்றும் அனைத்திற்கும் மேல், தொழிலாளர் வர்க்கத்துடன் ஒரு மோதலுக்கான தயாரிப்புகள் இவற்றுக்கான இன்றியமையாத அரசியல் ஆதரவை வழங்கும் விதத்தில், பாசிசக் கட்சிகள் அரசியல்ரீதியாக சட்டபூர்வமாக்கப்படுகின்றன.

42. வரலாற்று அனுபவம் காட்டுவது போல், பாசிசம் என்பது சோசலிசப் புரட்சியின் அச்சுறுத்தலுக்கு ஆளும் வர்க்கங்களின் எதிர்வினையாகும். 1923 இல், தொழிலாளர் வர்க்கத்தின் இயக்கத்தை வன்மையாக ஒடுக்குவதற்காக முசோலினியும் அவரது fascisti குழுவினரும் இத்தாலிய முதலாளித்துவ வர்க்கத்தால் ஆட்சியில் அமர்த்தப்பட்டனர். ஜேர்மனியில், இதே நோக்கத்திற்காக, ஹிட்லரும் அவரது நாஜிக்களும், இன்னும் அதிக மிருகத்தனத்துடன், பயன்படுத்திக் கொள்ளப்பட்டனர். பாசிச இயக்கங்கள் எடுத்த வடிவங்கள் நாட்டிற்கு நாடு வேறுபட்டதாய் இருந்திருக்கிறது. ஜேர்மனி மற்றும் இத்தாலியில் போல், சில இடங்களில் அவை கிட்டத்தட்ட முதலாளித்துவ அரசின் முற்றுமுதலான கட்டுப்பாட்டை பெற்றிருக்கின்றன. மற்ற இடங்களில் —சொல்லப் போனால், பெரும்பாலும்— பாசிச அமைப்புகள் அரசு ஒடுக்குமுறையின் துணையமை துணைஇராணுவ கருவிகளாகச் செயல்பட்டு, அரசினால் வழிநடாத்தப்பட்ட எதிர்ப்புரட்சி எனும் இரத்தக்கறை படிந்த வேலையில் இராணுவத்திற்கும் போலிசுக்கும் உதவி வந்திருக்கின்றன (உதாரணமாக, ஸ்பெயின், ஆர்ஜென்டினா, சிலி, இந்தோனேசியாவில் போல).

43. இப்போதைய சூழ்நிலையில், புறநிலை நெருக்கடியின் அழுத்தமானது ஜனநாயக ஆட்சி வடிவங்களைக் கைவிட்டு தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சிகாணும் இயக்கத்திற்கு எதிராய் முன்கூட்டிய ஒரு பலத்த அடி கொடுப்பதை நோக்கி ஆளும் உயரடுக்கினரை இட்டுச்செல்கின்றது.

அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் பொருளாதார நெருக்கடி

44. இறுதி ஆய்வில், அதீத அரசியல் ஸ்திரமின்மையானது, அதிகரித்துச் செல்லும் ஸ்திரமற்ற பொருளாதார மற்றும் நிதி நிலைமையின் மூலமாக உந்தப்படுகின்றது. சந்தைகளுக்குள் முன்னினும் அதிகமாய் பணத்தைப் பாய்ச்சுவது தான் கடந்த மூன்று தசாப்த காலத்தில் ஆளும் வர்க்கக் கொள்கையின் மையமான கூறாக இருந்து வந்திருக்கிறது. இது 1979 இன் “வோல்க்கர் அதிர்ச்சி”க்கு (போல் வோல்க்கரின் கீழான அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்தி ஒரு மந்தநிலையை உருவாக்கி வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்கச் செய்ததான ஒரு காலகட்டம்) பிந்தைய காலத்தில் தொடங்கியது. அதன்பின் 1990கள் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களது முழு நீளத்திற்கு, குறைந்த வட்டி விகிதங்களின் ஒரு நீடித்த காலம் பின்தொடர்ந்தது, நிதிச் சந்தைகளில் பணத்தைப் பாய்ச்சி அதிகரிக்கும் பங்கு விலைகளுக்கு எரியூட்டியது.

45. அமெரிக்க ஆளும் வர்க்கமானது வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்பு ஒன்றின் மூலமாக 2008 பொருளாதார மற்றும் நிதிப் பொறிவுக்கு பதிலிறுப்பு செய்தது. பெடரல் ரிசர்வ் மூலம் ஊகவிலைச் சொத்துக்கள் வாங்கப்படுவதற்கு நூறுபில்லியன்கணக்கான டாலர்களை நிதியாதாரம் திரட்டும் முயற்சியில் தேசியக் கடனானது கிட்டத்தட்ட ஒரேநாள் இரவில் இரட்டிப்பாகியிருந்தது. 2020 இல் கோவிட்-19 பெருந்தொற்றின் ஆரம்ப மாதங்களின் போதும் இது பெருமளவில் மீண்டும் நடத்தப்பட்டு, பாரிய மரணங்கள் மற்றும் சமூகத் துயரத்தின் மத்தியில் பங்குகளின் விலைகளை முன்காணாத மட்டங்களுக்கு உந்தித் தள்ளியது.

2022 ஆகஸ்டு 22 வெள்ளியன்று Moran, Wyo. கிராண்ட் டீடன் நேஷனல் பார்க்கில் உள்ள ஜாக்சன் லேக் லாட்ஜில் நடைபெற்ற மத்திய வங்கியின் வருடாந்திர கருத்தரங்கில் பங்குபெற்றவர்களுடன் பெடரல் ரிசர்வ் தலைவரான ஜெரோம் பவல் (நடுவிலிருப்பவர்) காப்பி இடைவேளையை செலவிடுகிறார். [AP Photo/Amber Barsler]

46. பணத்தை அச்சடித்து நிதிச் சொத்துக்களை பணவீக்கம் செய்வது, அதேவேளையில் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதின் மூலம் ஊதியங்களை குறைவாகப் பராமரிப்பது என்பதே, அமெரிக்காவின் தலைமையில், ஆளும் வர்க்கத்தின் கொள்கையாக இருந்தது. பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கினது மட்டுமல்ல, உயர் நடுத்தர வர்க்கத்தின் கணிசமான பிரிவுகளினது செல்வமானது அதிகரித்தளவில் உண்மையான உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் இருந்து அந்நியபப்பட்டுச் சென்றிருந்தது.

47. இந்த ஊக வெறித்தனத்தின் மிக அதீத வடிவம், 2008 நெருக்கடியைத் தொடர்ந்த தசாப்தத்தில் விலைமதிப்பில் வெடிப்பு கண்ட கற்பனை மூலதனத்திற்கான ஒரு கற்பனை நாணயமதிப்பான கிரிப்டோகரன்சி சந்தையில் நடந்தேறியது. 2009 இல் உருவாக்கப்பட்ட பிட்காயின், 2021 இல் அதன் உச்சத்தில் $64,000 க்கும் அதிகமாய் உயர்ந்திருந்தது. 2021 நவம்பரில், ஒட்டுமொத்த கிரிப்டோ (பிட்காயின் மற்றும் மற்றவை) சந்தை 3 டிரில்லியன் டாலர்களுக்கு அதிக மட்டத்திற்காய் உச்சம் கண்டிருந்தது, ஒட்டுமொத்த நிதிச் சந்தையில் பாரியளவில் பணம் பாய்ச்சப்பட்டதன் மூலம் இது தாக்குப்பிடிக்க முடிந்திருந்தது.

48. கடந்த ஆண்டின் போது, இந்த கொள்கையானது ஒரு முட்டுச் சந்தை எட்டியது. நான்கு தசாப்தங்களிலான மத்திய வங்கிகளின் பணம் அச்சிடும் நடவடிக்கைகளின் ஒரு விளைபொருளான மிகப்பெரும் பணவீக்க மட்டங்கள், பெருந்தொற்றினாலும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் மீது உண்டாக்கிய பாதிப்பினால் மேலும் சிக்கலாக்கப்பட்டு உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

49. அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைமையில், 1980ளின் ஆரம்ப காலம் தொடங்கி மத்திய வங்கிகள் கூர்மையான வட்டிவிகித அதிகரிப்புகளைக் கொண்டு பதிலிறுத்துள்ளன. ஆனால், பணவீக்கத்திற்கான பதிலிறுப்பிலான நடவடிக்கைகள் பொருளாதார நெருக்கடியை மேலும் சிக்கலாக்கவே செய்கின்றன என்பதுடன், வர்க்கப் போராட்டத்தின் ஒரு மேலெழுச்சியை உருவாக்கிக் கொண்டிருக்கும் சமூகப் பதட்டங்களை தீவிரப்படுத்திக் கொண்டுமிருக்கின்றன.

50. வட்டி விகிதங்களின் அதிகரிப்பு ஏற்கனவே நிதிச் சந்தைகளில் ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆண்டின் பாதையில் NASDAQ பங்குச் சந்தை கிட்டத்தட்ட 35 சதவீதம் சரிவு கண்டிருக்கிறது, S&P 500 குறியீடு 20.6 சதவீதமும் டோவ் ஜோன்ஸ் 9.5 சதவீதமும் சரிந்திருக்கின்றன. ஊகத்தால் செழித்திருந்த டெஸ்லா, கூகுள், அமசன், மைக்ரோசாஃப்ட் மற்றும் பல பிற நிறுவனங்களது சந்தை மதிப்பு பெரும் சரிவைக் கண்டிருக்கிறது. கிரிப்டோகரன்சி சந்தையின் மொத்த மதிப்பு, 2.3 டிரில்லியன் டாலர்களாய் இருந்ததில் இருந்து 800 பில்லியன் டாலர்களுக்காய், 60 சதவீதத்திற்கும் அதிகமாய் சரிந்திருக்கிறது. பொறிவுகண்ட கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தை FTX இன் நிறுவனர் சாம் பாங்க்மன்-பிரைட் டிசம்பரில் கைது செய்யப்பட்டமை, நிதி மூலதனத்தின் ஊக வெறித்தனம் பணச்சுருக்கம் கண்டிருப்பதன் மிக அப்பட்டமான வெளிப்பாடு மட்டுமேயாகும்.

51. உலகப் பொருளாதாரம் 2023 இல் ஒரு மந்தநிலைக்குள் நுழையும் என்பதற்கான அறிகுறிகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி 2.7 சதவீதத்திற்கு, அதாவது 2008-2009 நெருக்கடி மற்றும் பெருந்தொற்றின் ஆரம்ப ஆண்டு தவிர்த்து 2001க்குப் பிந்தைய மிகக்குறைந்த வளர்ச்சி மட்டத்திற்கு, சரியும் என்று அக்டோபரில் சர்வதேச நாணய நிதியம் கணித்திருந்தது. எனினும் இந்த மதிப்பீடு, மிகை நம்பிக்கைவாதமுடையதாகத் தென்படுகிறது. புவியரசியல் மோதலால் உருவாக்கப்பட்டுள்ள “நிரந்தரநெருக்கடி”யின் பாதிப்பு, அதிகரித்துச் செல்லும் பொருட்களது விலைகள், மற்றும் அதிகரிக்கும் வட்டி விகிதங்களின் காரணத்தினால் “பெருநிலைப் பொருளாதார ஸ்திரமின்மை” ஆகியவற்றை மேற்கோளிட்டு 2023 இல் உலகளாவிய மந்தநிலை “தவிர்க்கமுடியாதது” என்று நவம்பரில் Economist எழுதியது.

52. வட்டி விகித அதிகரிப்புகள் பங்குச் சந்தையில் ஏற்படுத்தியுள்ள தாக்கமானது, ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டத்தில், சென்ற ஆண்டில் தமது வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்டுள்ள திகைப்பூட்டும் சரிவுக்கு தொழிலாள வர்க்கத்தில் எழுந்திருக்கும் எதிர்ப்பை முறியடிப்பது என்ற, அதனினும் முக்கியமான மூலோபாய இலக்கைச் சாதிப்பதற்கு அவசியமான ஒரு தீமையாக பார்க்கப்படுகிறது. வட்டி விகித அதிகரிப்புகளில் இனி எந்த தயக்கமும் இருக்காது என்று, பெடரல் தலைவர் ஜெரோம் பவல், ஆகஸ்டில் அறிவித்தபோது, “குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கும் சற்று வலி தரக்கூடிய”தாக இருக்கும். “மென்மையான தொழிலாளர் சந்தை நிலைமைகளை” உருவாக்குவது அதாவது பாரிய வேலைவாய்ப்பின்மையை உருவாக்குவது அவசியமாக இருந்ததை” அவர் வலியுறுத்தினார்.

53. மேல்நோக்கிப்பாயும் பணவீக்கமானது உலகெங்கிலும் தொழிலாளர்களது வாழ்க்கைத் தரங்களில் ஒரு நாசகரமான பாதிப்பைக் கொண்டிருக்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) கூற்றுப்படி, 2022 இல் உண்மை ஊதியங்கள் கிட்டத்தட்ட 1 சதவீதம் வரை சரிந்திருந்தன, பல தசாப்தங்களில் முதன்முதலில் இத்தகைய உலகளாவிய சரிவை இது குறித்தது. வருடாந்த பணவீக்கம் 2022 அக்டோபரில் 11.5 சதவீதத்தை எட்டியிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் வருடாந்த பணவீக்கம் 2022 அக்டோபரில் 11.5 சதவீதத்தை எட்டியிருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் உண்மை ஊதியங்கள் 2022 இன் முதல் பாதியில் மலைப்பூட்டும் 2.4 சதவீதம் வரையில் சரிவு கண்டிருந்தன.

54. உண்மை ஊதியங்கள் சரிவு கண்டிருக்கும் வேளையில், தொழிலாளர் உற்பத்தித் திறன் தொடர்ந்து வளர்ந்து சென்று, தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டல் முன்கண்டிராத மட்டங்களை எட்டிக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது. விளைவாக, முன்னேறிய நாடுகளிலும் சரி வளரும் நாடுகளிலும் சரி, 2023 இல் வேலைநிறுத்தங்களும் சமூக ஆர்ப்பாட்டங்களும் மேலாதிக்கம் செலுத்தும் என்று பெருநிறுவன ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். அமெரிக்க தொழிற்துறை உறவுகள் தொடர்பிலான A Bloomberg Law இன் ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது: “குறைந்தபட்சம் 150 பெரும் தொழிற்சங்க ஒப்பந்தங்கள் அடுத்தாண்டு காலாவதியாகவிருக்கும் நிலையானது, மேல்நோக்கிப் பாயும் பணவீக்கம் மற்றும் அதிகரித்துச் செல்லும் பெருநிறுவன இலாபங்கள் இவற்றின் மத்தியில் அதிகமான தொழிலாளர் அமைதியின்மைக்கு கட்டியம்கூறும் சாத்தியமுடையதாய் இருக்கிறது. காலாவதியாகும் ஒப்பந்தங்களின் மூலம் குறைந்தபட்சம் 1.6 மில்லியன் தொழிலாளர்கள், அதாவது பிலடெல்பியாவின் மக்கள்தொகைக்கும் அதிகமானவர்கள், பாதிக்கப்படுவார்கள்.”

எழுச்சியடையும்தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய தாக்குதல்

55. விலைவாசியேற்றமானது உலகெங்கிலும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் கீழமைந்த நிகழ்ச்சிப்போக்குகளை துரிதப்படுத்தியுள்ளது. தொழிற்சங்க எந்திரப் பொறிமுறையின் மூலமான நீண்ட கால பலவந்தமான தேக்கம் பாரிய எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாடாய், தொழிலாள வர்க்க போர்க்குணத்தின் ஒரு மறுமலர்ச்சியைக் காணமுடிகிறது. ட்ரொட்ஸ்கி ஒருமுறை எழுதியவாறாக, “வரலாற்றின் விதிகள், அதிகாரத்துவ எந்திரத்தை விட அதிக சக்திவாய்ந்தவை.”

56. வாழ்வாதாரப் பொருட்களிலான விலை அதிகரிப்பு உட்பட, அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவினங்கள் சமூக அமைதியின்மையின் அதிகரிப்பில் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. சர்வதேச நாணய நிதியம் (IMF) கூறுவதன் படி, 2020 ஏப்ரலுக்கும் 2021 டிசம்பருக்கும் இடையில் உலகம் கோவிட்-19 பெருந்தொற்றின் பிடியில் சிக்கியிருந்த வேளையில், உணவுப்பொருட்களின் விலைகள் 1970களுக்குப் பிந்திய அவற்றின் மிகவுயர்ந்த மட்டங்களை எட்டின, கோதுமையின் விலை 80 சதவீதம் அதிகரித்தது. 2022 இல் இதுவரை கோதுமை விலைகள் 37 சதவீதமும் மக்காச்சோளம் 21 சதவீதமும் அதிகரிப்பு கண்டுள்ளன. கோதுமை ஃப்யூச்சர்ஸ் ஆறுமாதங்களுக்கு முன்பு இருந்ததை விட 80 சதவீதம் அதிக விலையிலும், மக்காச்சோளத்தினது 58 சதவீதம் அதிக விலையிலும் இருக்கின்றன.

2022 ஜூலை 9 சனிக்கிழமையன்று, இலங்கை, கொழும்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் செல்லும் ஒரு வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரள்கின்றனர். [AP Photo/Amitha Thennakoon]

57. இலங்கையில், அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மார்ச் பின்பகுதியில் தொடங்கி ஏப்ரல் மற்றும் மே முழுக்க தொடர்ந்தன, மூன்று பாரிய பொது வேலைநிறுத்தங்களில் உச்சமடைந்தன, ஜனாதிபதி கோத்தாபய இராஜபக்‌ஷ இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு ஓடும்படி இது தள்ளியது. உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருள் விலைகளை மையப்படுத்தி பெரும் ஆர்ப்பாட்டங்கள் ஈக்வடோர், பெரு, லெபனான், பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளிலும் நடைபெற்றன.

58. துருக்கியில், உருக்காலைத் தொழிலாளர்கள், காகிதத் தொழிலாளர்கள், காலணி தொழிலாளர்கள், இரும்புத் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பங்குபெற்ற ஏராளமான திடீர் வேலைநிறுத்தப் போராட்டங்கள் டிசம்பரில் நடைபெற்றன, ஜனவரியிலும் தொடர்கின்றன.

59. ஈரானில், கட்டாய ஹிஜாப் சட்டத்தை மீறியதாகக் குற்றம்சாட்டி வழிகாட்டல் ரோந்து அறநெறி போலிசால் கைது செய்யப்பட்ட மஹ்சா அமீன் மரணத்தைத் தொடர்ந்து, செப்டம்பரில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. ஆரம்பகட்ட போராட்டங்கள் அயதுல்லா காமேனியின் முதலாளித்துவ-மதபோதக ஆட்சிக்கான குரோதத்தால் ஊக்கம்பெற்றிருந்த நடுத்தர வர்க்கத்தின் அடுக்குகளையே பிரதானமாகக் கொண்டிருந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியமும் மத்திய கிழக்கில் தனது சொந்த நலன்களை முன்னெடுப்பதற்கு ஈரானின் உள்நாட்டு நெருக்கடியை சுரண்டிக் கொள்ள முயற்சிக்கிறது.

60. டிசம்பரில், போராட்டங்களின் பகுதியாக, பெட்ரோகெமிக்கல் தொழிலாளர்கள், உருக்காலை மற்றும் சிமெண்ட் ஆலை தொழிலாளர்கள், மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் உள்ளிட ஈரானிய தொழிலாள வர்க்கத்தின் அடுக்கினர் ஒரு மூன்று நாள் “தேசிய வேலைநிறுத்த”த்தில் பங்குபெற்றனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆட்சி-மாற்ற நடவடிக்கைகளை ஆதரிக்காத அதேவேளையில் ஈரானிலுள்ள முதலாளித்துவ அரசாங்கத்தை எதிர்ப்பது என்ற ஒரு முற்போக்கான திசையில் ஆர்ப்பாட்டங்கள் அபிவிருத்தி காண்பதென்பது தொழிலாள வர்க்கத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிசத் தலைமையை கட்டியெழுப்புவதைச் சார்ந்த விடயமாக உள்ளது.

61. ஆபிரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியில் பணவீக்கம் ஒரு தீவிர தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. ஆபிரிக்காவின் 54 நாடுகளில் 23 நாடுகள் அவற்றின் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றின் இறக்குமதியில் பாதிக்கும் மேலான பகுதிக்கு ரஷ்யா மற்றும் உக்ரேனைச் சார்ந்திருக்கின்றன. ஆபிரிக்க நாடுகளில் அநேகமானவை எந்த சமூக பாதுகாப்பு வசதியும் வழங்குவதில்லை என்ற நிலைமைகளின் கீழ் விலைவாசியேற்றமானது பட்டினிகளை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தமது உணவுப்பொருட்களில் பெரும்பகுதியை இறக்குமதி செய்வனவாகவும் கோவிட்-19 இன் பொருளாதார விளைவுகளால் மோசமாகப் பாதிக்கப்பட்டவையாகவும் இருக்கும், நைஜீரியா, கென்யா, கானா, ருவாண்டா மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இந்த பாதிப்பு மிக மோசமானதாக இருக்கிறது. கண்டத்தின் மொத்த மக்கள் தொகையான 1.2 பில்லியன் மக்களில் 500 மில்லியனுக்கும் அதிகமானோர் பட்டினிக்கு முகம்கொடுக்கும் நிலையை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

62. ஆபிரிக்கா எங்கிலும், தொழிற்சங்க எந்திரத்தின் முயற்சிகளையும் தாண்டி தொழிலாளர்கள் போராட்டத்திற்குள் நுழைந்திருக்கின்றனர். கென்யாவின் சுகாதாரப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவை மீறி டிசம்பர் 9 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நைஜீரியாவிலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் குடிமைப் பணியாளர்களின் வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. குறிப்பான முக்கியத்துவமானதாகக் கூற வேண்டுமென்றால், நைஜீரியாவின் லாகோஸ் நகரில் உத்தியோகபூர்வ தொழிற்சங்கமான சாலைப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான தேசிய தொழிற்சங்கத்தில் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்களை மீறி சாமானியப் பேருந்து ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்றது.

63. தென்னாபிரிக்காவிலும் ஊதியப் பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற மக்ரோ தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் முதல் எஸ்கோம் இல் பணிநீக்கம் செய்யப்பட்ட தென்னாபிரிக்க மின்விநியோகத் தொழிலாளர்களை மீண்டும் பணியிலமர்த்தக் கோரி நடைபெற்ற வேலைநிறுத்தம் வரையில் பல வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. தென்னாபிரிக்காவில், முதலாளித்துவ ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) மற்றும் ஸ்ராலினிச தென் ஆபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் முக்கூட்டில் இருக்கும் தென்னாபிரிக்க தொழிற்சங்கங்களது காங்கிரஸின் (Congress of South African Trade Unions) அதிகாரத்துவத்துக்கு சாமானியத் தொழிலாளர்கள் முகம்கொடுக்கின்றனர். நவம்பரில் ஆயிரக்கணக்கான தென்னாபிரிக்க அரசாங்கப் பணியாளர்கள் 10 சதவீத ஊதிய உயர்வு கோரி தேசியளவில் ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றனர். இந்த போராட்டங்கள் பொதுப்பணித்துறை முழுவதும் ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தில் உச்சத்தை எட்டின.

பிரேசிலின் மேர்சிடஸ்-பென்ஸ் தொழிலாளர்கள் São Bernardo do Campo இல் பேரணி நடத்துகின்றனர், செப்.8, 2022

64. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக, சமூக சமத்துவமின்மைக்கும் பிராந்தியத்தின் உருக்குலைந்த அரசியல் ஆட்சிகளுக்கும் எதிரான பாரிய கிளர்ச்சிகளுக்கான களமாய் திகழ்ந்த இலத்தீன் அமெரிக்கா, 2022 இல் வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய அலையைக் கண்டது. துறைமுகத் தொழிலாளர்கள், டயர் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தங்களால் உந்தப்பட்டு, ஆர்ஜென்டினா, 2022 இல் 9,000க்கும் அதிகமான வீதிப் போராட்டங்களை பதிவு செய்து, நாட்டின் வரலாற்றில் மிக அதிக எண்ணிக்கையிலான “முற்றுகைப் போராட்டங்கள்” நடைபெற்ற ஆண்டாக அதனை ஆக்கியது. பிரேசிலில், ஆண்டின் முதல் பாதியில் நடைபெற்ற ஊதியப் போராட்டங்களது ஒரு அலையானது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 75 சதவீதம் அதிகரித்த வேலைநிறுத்தங்களைக் கண்டிருந்தது, அத்துடன் பணிமுடங்கிய வேலை நேரங்கள் இருமடங்காகி இருந்தது.

65. ஏராளமான இலத்தீன் அமெரிக்க நாடுகளில் வாழ்க்கைச் செலவின அதிகரிப்புக்கு எதிராக, குறிப்பாக, 6,000 மைல்கள் தள்ளி உள்ள உக்ரேனில் அமெரிக்கா-நேட்டோவால் தூண்டப்பட்ட போரினால் உருவாக்கப்பட்ட பொருளாதார அதிர்வுகளுக்குப் பின்னர், பாரிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. ஹைத்தியில் ஏரியல் ஹென்றியினது மற்றும் ஈக்வடாரில் கில்லர்மோ லாசோவினது போன்ற வெளிப்படையான வலது-சாரி அரசாங்கங்களானாலும், பெருவின் பெட்ரோ காஸ்டில்லோவினது மற்றும் சிலியின் காப்ரியல் போரிக்கினது போன்ற போலி-இடதுகள்-ஆதரவு கொண்ட “இளஞ்சிவப்பு அலை” அரசாங்கங்களானாலும், இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மூர்க்கத்தனமான அரசு ஒடுக்குமுறையைக் கொண்டு பதிலிறுப்பு செய்தன.

66. ஐரோப்பாவில், ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் பிரெஞ்சு அரசாங்கம் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்த அலையால் அதிர்ந்துள்ளது. வேலைநிறுத்தக்காரர்களை வேலைக்குத் திரும்ப மிரட்டல் விடுத்ததற்குப் பின்னர், மக்ரோன் இறுதியில், இத்தாக்குதலை கழுத்துநெரிக்க CGT தொழிற்சங்கங்களின் சேவைகளை பயன்படுத்திக் கொண்டார். ஜேர்மனியிலான அபிவிருத்திகளும் தொழிலாள வர்க்கத்தின் தீவிரப்படலால் குறிக்கப்படுவதாக இருந்தது, இது வரிசையான வேலைநிறுத்தங்களில் வெளிப்பாட்டைக் கண்டது. இலையுதிர் காலத்தில், பணவீக்கத்தின் விளைவுகள் தொடர்பிலும் ஜேர்மன் அரசாங்கத்தின் போர் கொள்கைகள் தொடர்பிலும் தொழிலாளர்களின் பெருகிச் செல்லும் கோபத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு உலோகத் தொழிலாளர்களது தொழிற்சங்கமான IG Metall, நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களை ஒரு எச்சரிக்கை வேலைநிறுத்தத்தில் இறங்க அழைப்புவிடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. ஆண்டு முழுவதிலும் நடைபெற்ற செவிலியர் மற்றும் வான்போக்குவரத்துத் துறை வேலைநிறுத்தங்கள், மற்றும் கோடையில் துறைமுகத் தொழிலாளர்கள் மத்தியில் நடைபெற்ற வேலைநிறுத்தம் ஆகியவை மற்ற குறிப்பிடத்தக்க வேலைநிறுத்தங்களாக இருந்தன.

போர்னிமவுத், ஆல்டர் ஹில்ஸ் டெலிவரி அலுவலகத்தில் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள், டிச.23, 2022 [Photo: WSWS]

67. ஐக்கிய இராச்சியத்தில், இரயில்வே தொழிலாளர்கள், துறைமுகத் தொழிலாளர்கள், தொலைதொடர்பு தொழிலாளர்கள், அஞ்சல் விநியோகத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவினர் நடத்திய வரிசையான போராட்டங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்திரமற்றமாக்குவதில் முக்கிய பங்காற்றி, 1924க்குப் பின்னர் முதன்முறையாக ஓராண்டுக்குள்ளாக மூன்று பிரதமர்களை கண்ட நிலை உருவானது. ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான பெருகும் கோரிக்கைகளை பிரிட்டனில் புதிய “அதிருப்தியின் குளிர்காலம்” என்று ஊடகங்களால் வருணிக்கப்படுகின்ற ஒன்றுடன் மட்டுப்படுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் தலைப்படும் நிலையுடன் ஆண்டு நிறைவடைந்திருக்கிறது.

68. ஆஸ்திரேலியாவில், வேலைநிறுத்தங்களை மட்டுப்படுத்துவதற்கும் பிளவுபடுத்துவதற்கும் தொழிற்சங்க எந்திரத்தால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் தாண்டி, ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்தில் கண்டிராத மட்டங்களை தொழிலக நடவடிக்கைகள் எட்டியிருக்கின்றன. 2022 மே மாதத்தில் அந்தோனி அல்பானிஸ் தலைமையிலான தொழிற் கட்சி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்த காலத்தில், தாங்கமுடியாத பணிச்சுமைகளுக்கு எதிராகவும் பணவீக்கத்தால் வீழ்ச்சிகண்டிருந்த ஊதியங்களுக்கு எதிராகவும் செவிலியர்கள், ஆசிரியர்கள், இரயில், நீர்வழி மற்றும் சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்களின் வேலைநிறுத்த நடவடிக்கைகளது ஒரு மேலெழுச்சி பின்தொடர்ந்தது. வேலைநிறுத்த-விரோத சட்டங்களையும் நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு பயன்பட்டு வந்திருக்கும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்துவது தான் அல்பானிஸ் அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கங்களது பதிலிறுப்பாக இருந்திருக்கிறது.

69. நியூசிலாந்தில், பணவீக்கம் 7.2 சதவீதத்தை தொட்ட நிலையில், வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் கோவிட் நெருக்கடியால் உருவாக்கப்பட்ட அழுத்தங்களுக்கு எதிராக தொழிலாளர்களின் பரந்த பிரிவுகள் போராட்டங்களில் நுழைந்தன. தீயணைப்புத் துறை தொழிலாளர்கள் இருபதாண்டுகளில் முதன்முறையாக தேசியளவிலான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர், அவர்களுடன் சேர்த்து கல்வியகப் பணியாளர்கள், உற்பத்தித் துறை மற்றும் விருந்தோம்பல் துறை தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் இறங்கினர், ஆர்டன் தொழிற் கட்சி அரசாங்கம் தற்காலிக “குளிர்கால மேலதிககொடுப்பனவுத்” தொகைகளை முடிவுக்குக் கொண்டுவந்ததை எதிர்த்து பொதுமருத்துவமனை செவிலியர்கள் மேலாதிகநேர பணிமுறைகளில் வேலைசெய்ய மறுத்தனர்.

70. கனடாவில், ஓன்டாரியோவில் 55,000 கல்வி உதவிப் பணியாளர்கள் வேலைநிறுத்த-விரோத சட்டம் ஒன்றை மீறி போராட்டம் நடத்தினர், இது டக் ஃபோர்டின் வலது-சாரி இடைக்கால அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு தொழிலாள வர்க்கத்தில் பரந்த ஆதரவை உருவாக்கியது. தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை முடித்ததன் மூலம் மட்டுமே அது தடுக்கப்பட முடிந்தது.

கலிஃபோர்னியா பேர்க்லி வளாகத்தில் UC வேலைநிறுத்தக்காரர்கள், நவ. 21, 2022, திங்கள்கிழமை [Photo: WSWS]

71. இறுதியாக, மிகவும் வெடிப்பான வர்க்க போராட்டங்களில் சில, உலக முதலாளித்துவத்தின் மையமாகத் திகழும் அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, இங்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022 இல் வேலைநிறுத்தங்களின் எண்ணிக்கை கணிசமாக, 40 சதவீதம் வரை, அதிகரித்திருந்தது என்று கார்னெல் பல்கலைக்கழகத்தின் ஒரு தரவுத்தளம் தெரிவிக்கிறது. எண்ணெய் உற்பத்தித் தொழிலாளர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பராமரிப்பு தொழிலாளர்கள், உற்பத்தித் துறை தொழிலாளர்கள், மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வித் துறை பணியாளர்களது வேலைநிறுத்தங்களும் இதில் அடங்கும். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 48,000 கல்வியகப் பணியாளர்கள் நடத்திய ஒரு சக்திவாய்ந்த வேலைநிறுத்தம் ஐக்கிய வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் சங்கத்தினால் (UAW) ஏற்கப்பட்ட சலுகை ஒப்பந்தங்களது அடிப்படையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன் ஆண்டு நிறைவடைந்தது.

72. எவ்வாறெனினும், வேலைநிறுத்தங்களது எண்ணிக்கையானது, தொழிலாள வர்க்கத்தின் உண்மையான எதிர்ப்பின் நிலையை முழுமையாக வெளிப்படுத்தி விடுவதில்லை. இன்னும் அதிக பரந்துவிரிந்தவொரு போராட்டம், சமூக கோபத்தை மட்டுப்படுத்துகின்ற ஒரு தீவிர முயற்சியில் பெருநிறுவனங்களுடனும் அரசாங்கத்துடனும் நெருக்கமாய் இணைந்து வேலைசெய்யும் அதிகாரத்துவ எந்திரத்தினால், தடுத்து வைக்கப்பட்டு வந்திருக்கிறது. இது 100,000 இரயில் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வடிவத்தை எடுத்தது; தொடர்ச்சியான ஒப்பந்த நிராகரிப்புகள் மற்றும் வேலைநிறுத்த அங்கீகார வாக்களிப்புகளுக்குப் பின்னரும் கூட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களை முடக்கின. டிசம்பரில் ஒரு வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமாக்குவதற்கு அராசங்கம் நேரடி தலையீடு செய்ததில் இது உச்சமடைந்தது, அடிப்படையில் ஒரு பாசிச தன்மையுடையதாக இருந்த இந்த நடவடிக்கை எந்த எதிர்ப்புமின்றி கடந்து சென்றது, இன்னும் சொல்லப் போனால் தொழிற்சங்க எந்திரத்தின் ஆதரவைக் கண்டிருந்தது.

சோசலிசப் புரட்சியின் தசாப்தத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு

73. உலகளாவிய வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியானது ஒரு முக்கிய வரலாற்று திருப்புமுனையை குறிக்கிறது. வர்க்கப் போராட்ட வரைபடத்தில் 1970களின் பின்பகுதி முதலாகவே கீழ்நோக்கிய சாய்வைக் கொண்டதாய் இருந்திருக்கும் நிலை தெளிவாக திசைமாற்றம் கண்டு மேல்நோக்கி திரும்பியிருக்கிறது.

74. இந்த புதிய புறநிலை சூழலுக்குள், புரட்சிகரக் கட்சியின் பாத்திரமும் நடைமுறையும் தீர்மானகரமானது. சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) அதன் 2019 கோடைப் பள்ளியில், முதலாளித்துவத்தின் புறநிலை நெருக்கடி மற்றும் நான்காம் அகில வரலாற்றின் மீதான ஒரு பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டு, அரசியல் சூழலிலான பண்புரீதியான மாற்றத்தை அடையாளம்கண்டது. இப்போதைய காலகட்டமானது, “சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர மேலெழுச்சி அனைத்துலகக் குழுவின் அரசியல் நடவடிக்கையுடன் ஒன்றிணைவதை” கொண்டு குணாம்சபடுத்தப்படுவதாக இருக்கும், என்று அது குறிப்பிட்டது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, ட்ரொட்ஸ்கிச இயக்க வரலாற்றின் ஐந்தாவது காலகட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. இந்தக் காலகட்டமே சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக ICFI இன் பரந்த வளர்ச்சியை காணவிருக்கும் நிலையாகும். 30 ஆண்டுகளுக்கும் முன்னர் அனைத்துலகக் குழுவால் அடையாளம் காணப்பட்ட, பொருளாதார பூகோளமயமாக்கத்தின் புறநிலை நிகழ்ச்சிப்போக்குகள், மேலும் பிரம்மாண்டமானதொரு அபிவிருத்திக்குள் சென்றிருக்கின்றன. தகவல்தொடர்பில் புரட்சிகளை உண்டாக்கியிருக்கும் புதிய தொழில்நுட்பங்களது எழுச்சியுடன் சேர்ந்து, இந்த நிகழ்ச்சிப்போக்குகள் 25 ஆண்டுகள் முன்புவரை கூட கற்பனை செய்திருக்க முடியாத ஒரு மட்டத்திற்கு வர்க்கப் போராட்டத்தை சர்வதேசியமயப்படுத்தியிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டமானது, ஒரு பரஸ்பரஇணைப்புடைய மற்றும் ஐக்கியப்பட்ட உலக இயக்கமாக அபிவிருத்தி காணும். இந்த புறநிலை சமூகப்-பொருளாதார நிகழ்ச்சிப்போக்கின் நனவான அரசியல் தலைமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கட்டியெழுப்பப்படும். அது ஏகாதிபத்தியப் போர் எனும் முதலாளித்துவ அரசியலுக்கு எதிராக, உலக சோசலிசப் புரட்சி எனும் வர்க்க-அடிப்படையிலான மூலோபாயத்தை எதிர்நிறுத்தும். இதுவே நான்காம் அகிலத்தின் வரலாற்றில் புதிய காலகட்டத்தின் அடிப்படையான வரலாற்றுப் பணியாகும்.

75. இந்த பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டு, 2020 ஜனவரி 3 அன்று வெளியான அதன் புத்தாண்டு அறிக்கையில், WSWS, வரவிருக்கும் தசாப்தம் “சோசலிசப் புரட்சியின் தசாப்தமாக இருக்கும்” என்று எழுதியது. “சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் எண்ணிக்கை வளர்ச்சியும் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியும் புரட்சிக்கான புறநிலை அடிப்படைகளாக இருக்கின்றன. ஆயினும், தொழிலாளர்களின் தன்னெழுச்சியான போராட்டங்களும் உள்ளுணர்வுரீதியாக சோசலிசத்திற்கான அவர்களது உந்துதலும் மட்டுமே தன்னளவில் போதுமானதல்ல. வர்க்கப் போராட்டத்தை சோசலிசத்திற்கான ஒரு நனவான இயக்கமாக உருமாற்றுவது என்பது அரசியல் தலைமை குறித்த ஒரு பிரச்சினையாக உள்ளது.”

76. அரசியல் தலைமையின் சவால், முதலாளித்துவ நெருக்கடியின் புறநிலை தர்க்கத்தை பகுப்பாய்வு செய்வதும், அதன் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் நனவை உயர்த்தக் கூடிய, அதன் தன்னம்பிக்கையை அதிகரிக்கக் கூடிய மற்றும் முதலாளித்துவக் கட்சிகளின் அரசியல் செல்வாக்கை பலவீனப்படுத்தக் கூடிய முன்முயற்சிகளை அபிவிருத்தி செய்வதுமாகும்.

77. 2021 நவம்பரில், ஓமிக்ரோன் அதன் உலகளாவிய பரவலை அப்போது தான் தொடங்கிக் கொண்டிருந்த வேளையில், கோவிட்-19 பெருந்தொற்றுக்கான உலகளாவிய தொழிலாளர் விசாரணை ஆய்வு எனும் முன்முயற்சியை ICFI தொடக்கியது. அதன் முதல் ஆண்டில், இந்த விசாரணை ஆய்வானது, ஆளும் வர்க்கத்தின் குற்றவியல்தனமான பதிலிறுப்பை ஆவணப்படுத்தும் விதமான, மற்றும் இந்த பெருந்தொற்றை ஒரேயடியாக ஒழித்துக்கட்டுவதற்குத் தேவையான விஞ்ஞான, மற்றும் அனைத்திற்கும் மேல், அரசியல் மூலோபாயத்தை எடுத்துரைக்கின்ற விதமான ஏராளமான அறிக்கைகளை விஞ்ஞானிகள் மற்றும் தொழிலாளர்களிடம் இருந்து பெற்றது.

78. 2022 டிசம்பர் 10 அன்று, ICFI இன் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பான, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE), இளைஞர்களின் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்திற்கான முன்முயற்சியில் ஒரு உலகளாவிய இணையவழி பேரணியை நடத்தியது. நவம்பரில், ICFI இன் ஜேர்மன் பிரிவான, சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei, - SGP) 2023 பெப்ரவரியில் நடைபெறவிருக்கும் பேர்லின் மாநிலத்தேர்தலுக்கு ஒரு தீவிர பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது. ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கா-நேட்டோ போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்குப் போராடுகின்ற ஒரேயொரு கட்சி SGP மட்டுமேயாகும்.

79. இலங்கையில், ஜூலை மாதத்தில், வெறுக்கப்பட்ட இராஜபக்‌ஷ அரசாங்கத்தை, சர்வதேச நாணய நிதியத்தினால் கோரப்படும் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கு அதேயளவுக்கு உறுதிபூண்டதாயிருக்கும் ஒரு புதிய அரசாங்கத்தைக் கொண்டு பிரதியிட அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளாக நடந்து கொண்டிருந்த சதிகளுக்கு எதிராய், ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான இலங்கை தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் ஒரு முன்முயற்சியை, இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சி தொடக்கியது.

80. ஒவ்வொரு நாட்டிலுமே பெருநிறுவன தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்திற்கான ஒரு பிரதான முட்டுக்கட்டையாக இருக்கின்றன. அவை பல தசாப்த கால பெருகிய சமூக சமத்துவமின்மையை திணிப்பதில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்திருக்கின்றன; ஆளும் வர்க்கத்தின் போர் கொள்கையை ஆதரித்தும், பெருந்தொற்று காலத்தில் வேலைக்கு திரும்பக் கூறும் பிரச்சாரத்தை செயல்படுத்தியும் வந்திருக்கின்றன. சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேசத் தொழிலாளர்கள் கூட்டணிக்கான (IWA-RFC) ICFI இன் அழைப்பானது உலகெங்குமான தொழிலாளர்களது போராட்டங்களை ஐக்கியப்படுத்தப்படுவதற்கான வழிவகையாகும். நிலவும் பெருநிறுவன தொழிற்சங்க எந்திரத்தின் புனிதத்தன்மையை மீறக்கூடாது என மற்றவர்கள் வலியுறுத்துவதற்கு எதிரான விதத்தில், அனைத்துலகக் குழுவானது தொழிலாளர்களாலான, அவர்களால் கட்டுப்படுத்தப்படுகின்ற அமைப்புகளைக் கட்டியெழுப்ப அறிவுறுத்துகிறது.

UAW தலைவர் பதவிக்கு வில் லெஹ்மனுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் தொழிலாளர்கள் [Photo: WSWS]

81. சென்ற ஆண்டின் போது, தொழிலாளர்களை தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து விடுதலை செய்வதற்கான போராட்டமானது, அமெரிக்காவில், ஜூன் மாதத்தில் தொடங்கிய, ஐக்கிய வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் சங்கத் (UAW) தலைவர் பதவிக்கான வில் லெஹ்மனின் பிரச்சாரத்தில் சக்திவாய்ந்த விதத்தில் வெளிப்பட்டது. இந்த பிரச்சாரம் சாமானியத் தொழிலாளர்களிடம் இருந்து பரந்த ஆதரவைப் பெற்றது. தொழிற்சங்க எந்திரத்தை முற்றிலுமாய் ஒழிப்பதற்கும் அதிகாரத்தை வேலையிடத் தொழிலாளர்களுக்கு மாற்றுவதற்கும் அவர் விடுத்த அழைப்புக்கு அவர்கள் பதிலிறுத்தனர்.

82. சாமானியத் தொழிலாளர்களுக்கும், மக்கள்தொகையில் மேல்மட்டத்திலுள்ள 5 சதவீதத்தில், இன்னும் சொன்னால் 1 சதவீதத்திலும் கூட அமர்த்தும்படியான வருமானத்தைக் கொண்ட ஆயிரக்கணக்கான மனிதர்களை நிர்வாகத்தில் கொண்டிருக்கும் UAW எந்திரத்திற்கும் இடையில் நிலவுகின்ற மிகவிரிந்த சமூகப் பிளவை இந்த பிரச்சாரம் அம்பலப்படுத்தியது. UAW ஐ சூழ்ந்த பாரிய ஊழல் மோசடியின் காரணமாக ஒரு நேரடித் தேர்தலை நடத்த தள்ளப்பட்ட நிலையில், எந்திரம், வாக்குகளை ஒடுக்கும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையைக் கொண்டு பதிலிறுத்தது.

83. இந்த நாசவேலையின் காரணமாகவும், அதனுடன் சேர்ந்து சாமானியத் தொழிலாளர்கள் எந்திரத்தில் இருந்து அந்நியப்படுத்தப்பட்ட நிலையின் காரணத்தாலும், வாக்களிப்பு சதவீதம் மிகக் குறைவாக, வெறும் 9 சதவீதம் மட்டுமே, பதிவாகியது. மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே வாக்குப்பதிவு நடந்திருந்த நிலையிலும், வில் லெஹ்மனுக்கு 5,000 வாக்குகள் கிடைத்திருந்தமையானது சோசலிசக் கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தில் வலுவான ஆதரவுப் பகுதி இருப்பதை வெளிப்படுத்துகிறது. நாடெங்கிலும் உள்ள வாகன உற்பத்தி ஆலைகளிலும் பிற வேலையிடங்களிலும் சாமானியத் தொழிலாளர் குழுக்களின் ஒரு வலைப்பின்னலை அபிவிருத்தி செய்வதற்கான அடிப்படையை இந்த பிரச்சாரம் வழங்கியிருக்கிறது.

84. ஒவ்வொரு துறையிலும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் சாமானியத் தொழிலாளர் குழுக்களை கட்டியெழுப்புவது, சுரண்டலுக்கும் சமத்துவமின்மைக்கும் எதிராய் மட்டுமின்றி, போர், ஆளும் வர்க்கங்களின் பெருந்தொற்றுக் கொள்கை, பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய அவற்றின் உந்துதலுக்கும் எதிராகவுமான ஒரு இயக்கத்திற்கு அத்தியாவசியமான அடித்தளமாக இருக்கும் வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்திக்கு அவசியமானதாகும்.

உலக சோசலிச வலைத் தளமும் ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டும்

85. நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில், ட்ரொட்ஸ்கி, இந்தக் கட்சிக்கு வெளியில், “புரட்சிகர நீரோட்டம் என்ற பெயருக்கு உண்மையிலேயே தகுதியான இன்னொன்று இந்த கோளத்தில் இல்லை” என்று எழுதினார். உலகளாவிய வர்க்கப் போராட்டத்திலும் உலக சோசலிசப் புரட்சிக்கு தொழிலாள வர்க்கத்தை தயார்படுத்துவதிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வகிக்கும் பாத்திரம் குறித்தும் இதே மதிப்பீடு கூறப்பட முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ட்ரொட்ஸ்கிஸ்ட் என்று கூறிக் கொள்ளும் பல “கன்னைகளில்” ஒன்று அல்ல. மார்க்சிசப் பாரம்பரியத்தில் செயல்படும் மற்றும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியை பாதுகாக்கும் ஒரேயொரு அரசியல் கட்சி ICFI மட்டுமேயாகும். இது வெற்று தற்பெருமை அல்ல. ICFI இன் தத்துவம், வேலைத்திட்டம் மற்றும் நடைமுறையால் ஊர்ஜிதம் பெற்றதாகும்.

86. 2023 பெப்ரவரி 14 அன்று, உலக சோசலிச வலைத் தளம் 1998 இல் ஸ்தாபிக்கப்பட்டதன் 25வது ஆண்டுதினமாகும். புதிய இணையவழி தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சர்வதேச சோசலிச இயக்கத்தின் முதல் உண்மையான உலகளாவிய பிரசுரமாக உலக சோசலிச வலைத் தளத்தை ICFI உருவாக்கியது. இத்தகையதொரு பிரசுரம் அபிவிருத்தி காண்பதற்கான சாத்தியத்தையும் வாய்ப்புவளங்களையும் புரட்சிகரமான தொழில்நுட்பம் வழங்கியிருந்தது. என்றாலும் நான்காம் அகிலத்தின் ஒட்டுமொத்த தத்துவார்த்த மற்றும் அரசியல் பாரம்பரியத்தில் வேரூன்றியிருந்தமை தான் WSWS இன் அத்தியாவசிய அடித்தளமாக இருந்தது; 25 ஆண்டு கால தினசரி வெளியீட்டை சாத்தியமாக்கியிருந்தது. அரசியல், சமூக, கலாச்சார மற்றும் புத்திஜீவித நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிப்போக்குகள் மீதான உலக சோசலிச வலைத் தள கட்டுரைகளது விரிவெல்லையானது மார்க்சிச பகுப்பாய்வு வழிமுறை மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்று முன்னோக்கின் சக்திக்கு சாட்சியமளித்திருக்கிறது.

87. WSWS, இருபதாம் நூற்றாண்டின் மையமான புரட்சிகர மற்றும் எதிர்ப்புரட்சிகர அனுபவங்களில் இருந்தான படிப்பினைகளை உள்ளீர்த்துக் கொண்டதன் அடிப்படையில், இருபத்தியோராம் நூற்றாண்டின் மையமான அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும் செய்தி வெளியிட்டிருக்கிறது மற்றும் பகுப்பாய்வு செய்திருக்கிறது. முதலாளித்துவ ஊடகங்களின் மூளையை-மழுங்கடிக்கும் மற்றும் ஏமாற்றுத்தனமான பிரச்சாரத்தை எதிர்த்து, அது தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களது ஒரு ஒட்டுமொத்த தலைமுறைக்கும் புத்திஜீவிதரீதியாக விடுதலை செய்கின்ற மற்றும் புரட்சிகரமான ஒரு நோக்குநிலையை வழங்கி வந்திருக்கிறது. நிகழ்வுகள் குறித்து அரசியல்ரீதியாக மிகவும் முன்னேறிய பகுப்பாய்வை வழங்கும் அதேவேளையில், கலாச்சார பின்தங்கிய தன்மை மற்றும் புத்திஜீவித ஏமாற்று மற்றும் நயவஞ்சகத்தன்மை ஆகியவற்றின் சூழலை எதிர்த்தும் சளைப்பின்றி போராடி வந்திருக்கிறது.

1927 இல் இடது எதிரணியின் உறுப்பினர்கள். (முதல்வரிசை இடதிலிருந்து வலமாக) லியோனிட் செரிப்ரையகோவ், காரல் ரடெக், லியோன் ட்ரொட்ஸ்கி, மிக்கையில் போகஸ்லாவ்ஸ்கி, யெவ்ஜெனி பிரியோபிரசன்ஸ்கி; (பின்வரிசை) கிறிஸ்டியான் ராக்கோவ்ஸ்கி, ஜேகப் ட்ரோப்னிஸ், அலெக்சாண்டர் பெலோபோரோடோவ் மற்றும் லெவ் சோஸ்னோவ்ஸ்கி [Photo]

88. இன்னுமொரு ஆண்டு தினத்தின் அனுசரிப்பும் இந்தாண்டு இலையுதிர் காலத்தில் தொடங்கவிருக்கிறது. 2023 அக்டோபர் மாதம் லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் இடது எதிர்ப்பு ஸ்தாபிக்கப்பட்ட நூறாவது ஆண்டு நிறைவடைவதைக் குறிக்கிறது. ஸ்ராலினிச அதிகாரத்துவமும் மற்றும் அதன் ஆட்சியும் அக்டோபர் புரட்சியின் கோட்பாடுகளை காட்டிக்கொடுத்தமையானது சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றுப் பெரும் தோல்விகளிலும், இறுதியாக, சோவியத் ஒன்றியத்தை அழித்து முதலாளித்துவம் மீட்சி காண்பதிலும் முடிந்தற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பின் தொடக்கத்தை அது குறித்திருந்தது.

89. இடது எதிர்ப்பு ஸ்தாபகம் செய்யப்பட்டதன் நூறு ஆண்டுகளின் பின்னர், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன்னோக்கும் வேலைத்திட்டமும் வரலாற்றால் சரியென நிரூபணமாகியுள்ளன. “புரட்சிக்கு புதைகுழி தோண்டியவர்களாக” ஸ்ராலின் மற்றும் ஸ்ராலினிசத்தின் பாத்திரமானது சோசலிச இயக்கத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் எதிரான அவர்களது எண்ணற்ற குற்றங்களில் பதிவாகியிருக்கிறது.

90. உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, இருபத்தியோராம் நூற்றாண்டில் புரட்சிகர மார்க்சிசத்தின் ஒரேயொரு பிரதிநிதியாக உள்ளது. அனைத்து பல்வேறு பப்லோவாத, அரசு முதலாளித்துவ மற்றும் பிற போலி-இடது அமைப்புகளும் ஏகாதிபத்தியத்தின் முகவர்களாக, தொழிற்சங்க எந்திரத்தின் பாதுகாவலர்களாக மற்றும் தொழிலாள வர்க்கத்தின் எதிரிகளாக அம்பலப்பட்டிருக்கின்றனர்.

91. மார்க்சிசமானது வெகுஜன புரட்சிகர இயக்கங்களுக்கு வித்திடக்கூடிய புறநிலை விதிகள் மற்றும் நிகழ்ச்சிப்போக்குகள் குறித்த ஒரு வரலாற்று சடவாத புரிதலை அடிப்படையாகக் கொண்டதாகும். ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்ட நிரந்தரப் புரட்சி தத்துவமே, உலக சோசலிசப் புரட்சிக்கான அத்தியாவசிய மூலோபாய அடித்தளமாக தொடர்ந்து திகழ்கிறது. ICFI இன் முன்னோக்கானது முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தொழிலாள வர்க்கம் கொண்டுள்ள புரட்சிகர ஆற்றல் குறித்த ஒரு விஞ்ஞானபூர்வ புரிதலின் அடிப்படையிலமைந்த அரசியல் நம்பிக்கையால் நிரம்பியதாகும். ஆனால் இந்த நம்பிக்கையானது “வரலாறு நம் பக்கம் இருக்கிறது” என்ற சிந்தனையில் இருந்து ஆறுதல்பட்டுக் கொள்ளும் ஒரு செயலூக்கமற்ற பார்வையாளருடையது அல்ல. முதலாளித்துவத்தின் நெருக்கடி புரட்சிக்கு வழிவகுக்கிறது என்பது உண்மையே. ஆனால் புரட்சிக்கு தயாரிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும், போராடப்பட்டிருக்க வேண்டும். முதலாளித்துவ நெருக்கடிக்கான சோசலிசத் தீர்வானது தொழிலாள வர்க்கத் தலைமை நெருக்கடிக்கான தீர்வை அவசியமாக்குகிறது.

92. இந்த புத்தாண்டின் தொடக்கத்தில், தொழிலாளர்களும் இளைஞர்களும் சென்ற ஆண்டின் படிப்பினைகளையும், அத்துடன் வரலாற்றின் படிப்பினைகளையும் உட்கிரகித்துக் கொள்ள வேண்டும் என்றும் முதலாளித்துவம் ஒரு முட்டுச் சந்தை எட்டி விட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் அழைக்கிறோம். மனிதகுலத்தின் எதிர்காலம் சோசலிசத்தின் வெற்றியைச் சார்ந்திருக்கிறது. இந்த போராட்டத்தில் இணைந்து கொள்வதற்கும், சாமானியத் தொழிலாளர் குழுக்களின் சர்வதேசத் தொழிலாளர்கள் கூட்டணியை கட்டியெழுப்புவதற்கும், கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான உலகளாவிய தொழிலாளர்’ விசாரணை ஆய்வில் பங்குபெறுவதற்கும், உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், எல்லாவற்றுக்கும் மேல், உங்கள் நாட்டிலுள்ள சோசலிச சமத்துவக் கட்சியில் இணைகின்ற முடிவை மேற்கொண்டு சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டியெழுப்புவதில் பங்கேற்பதற்கும் உங்களை அழைக்கிறோம்.

Loading