தோழர் கீர்த்தி பாலசூரியவின் நினைவு நீடூடி வாழ்க!(1948-1987)

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பின்வரும் கடிதமானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த், கீர்த்தி பாலசூரியவின் இறப்பின் முப்பத்தைந்தாவது நினைவாண்டில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சிக்கு அனுப்பியதாகும்.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் அன்பான தோழர்களே:

சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய குழு கூட்டத்தின் நேற்றைய தொடக்கம் தோழர் கீர்த்தி பாலசூரிய மறைந்து முப்பந்தைந்தாவது ஆண்டு நிறைவில் அவரை கௌரவிக்க, அவர் பற்றிய புகழஞ்சலியுடனும் ஒரு நிமிட மௌன அஞ்சலியுடனும் ஆரம்பமானது.

கீர்த்தி பாலசூரிய [Photo: WSWS]

சர்வதேச தொழிலாள வர்க்கம், உலச சோசலிசத்துக்கான தூண்டுதல் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முழுவதிலும் உள்ள அவரின் எண்ணற்ற தோழர்கள் மற்றும் நண்பர்களைப் பாதித்த இழப்பின் உணர்வை கீர்த்தியின் மரணத்திற்கு பின்னரான கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலப்பகுதி குறைத்துவிடவில்லை. அவரது அகால மரணத்தால் ஏற்பட்ட துயரமானது கீர்த்தியை அறிந்தவர்கள், அவருடன் பணிபுரிந்தவர்கள் மற்றும் அவரை மதித்த மற்றும் மெச்சிய அனைவராலும் இன்னும் ஆழமாக உணரப்படுகிறது. இறக்கும் போது அவருக்கு 39 வயது. வருகின்ற வருடத்தின் நவம்பர் மாதத்தில் அவர் 75ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி இருப்பார். அனைத்துலகக் குழு அடுத்தாண்டு அதை நினைவுகூரும்.

எவ்வாறாயினும், தோழர் கீர்த்திக்கான இன்றைய அஞ்சலி துக்கத்தால் தூண்டப்பட்டது அல்ல, மாறாக ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டம், அனைத்துலக குழுவின் பாதுகாப்பு, அதன் இலங்கை கட்சியைக் கட்டியெழுப்புதல் மற்றும் உலக சோசலிசப் புரட்சியின் வெற்றி ஊடாக முதலாளித்துவ ஒடுக்குமுறையில் இருந்து தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்டம் ஆகியவற்றிக்கு அவர் செய்த பாரிய பங்களிப்புக்கான ஆழமிக்க போற்றுதலால் துண்டப்பட்டது ஆகும்.

1987 டிசம்பர் 23 அன்று தோழர் கீர்த்தியின் இறுதி நிகழ்வில் அவரின் வாழ்க்கை பற்றிய எனது அஞ்சலியில் ஒரு முன்கணிப்பு உள்ளடக்கப்பட்டிருந்தது:

உடனடியாக அடுத்து வரவிருக்கும் காலத்தில், ஆசியாவில் மட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், தோழர் கீர்த்தியின் எழுத்துக்களை வாசித்துக் கற்றுக்கொள்வார்கள். இளைஞர்களின் ஆசிரியர்களாக இருக்கப் போவது மா ஓ சேதுங், கோ சி மின் மற்றும் காஸ்ட்ரோக்கள் அல்ல என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. மாறாக, தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்கள் மத்தியில் உள்ள முன்னேறிய தட்டினர், தங்களது புரட்சிகரப் பாடங்களை கீர்த்தி பாலசூரிய, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மற்றும் அனைத்துலகக் குழுவில் இருந்தே கற்றுக்கொள்வார்கள்.

தோழர் கீர்த்தியின் வாழ்க்கையில், அனைத்துலகக் குழு பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தலைவரை உருவாக்கியது. ஒரு தனி மனிதனாக தோழர் கீர்த்தியை பதிலீடு செய்ய முடியாது. ஆனால் அவர் கட்டியெழுப்பிய இயக்கம் வாழ்ந்துகொண்டிருப்பதோடு அது இனிவரும் காலங்களில் மில்லியன் கணக்கானோருக்கு ஒரு புரட்சிகர வழிகாட்டியாக மாறும்.

வரலாற்றில் கீர்த்தியின் பங்கு குறித்த அந்த மதிப்பீட்டின் சரியான தன்மைக்கு கடந்த முப்பத்தைந்து வருட நிகழ்வுகள் சான்றளிக்கின்றன. அவர் இறந்து இரண்டு ஆண்டுகளுக்குள் பலம்வாய்ந்தவையாக தெரிந்த ஸ்ராலினிச இயக்கங்கள் அனைத்தும் அவற்றின் இறுதி மரண வேதனையை அடைந்தன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியானது 1989 ஜுனில் முதலாளித்துவ மறுசீரமைப்பை நோக்கி அது திரும்பியதற்கு எதிராக தலைதூக்கிய எதிர்ப்பை தியனன்மென் சதுக்கத்தில் நடந்த இரத்தக் களரிப் படுகொலையுடன் நசுக்கியது. அந்த ஆண்டு முடிவதற்குள், கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் உள்ள ஸ்ராலினிச ஆட்சிகள், இழிவான முறையில் தங்களைத் தாங்களாகவே கலைத்துக்கொண்டன. 1991 டிசம்பரில், கீர்த்தியின் மரணத்துக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், கோர்பச்சேவ் ஆட்சியானது சோவியத் ஒன்றியத்தை கலைத்து ஸ்ராலினிச எதிர்புரட்சியை பூர்த்திசெய்தது. நான்காம் அகிலத்தின் ஸ்தாபிதத்துக்கு அத்திவாரமாக இருந்த வரலாற்று முன்னோக்கானது துன்பகரமான முறையில் நிரூபிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகள் ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான சந்தர்ப்பவாத திருத்தங்களை நிராகரித்தன. சோவியத் அதிகாரத்துவமானது ஒரு புரட்சிகர சக்தி, அதன் தலைமைத்துவத்தின் கீழ் ஊனமுற்ற தொழிலாளர் அரசுகளின் வடிவில் நூற்றாண்டுகளைக் கடந்தேனும் சோசலிசம் அடையப்படும் என்ற பப்லோ மற்றும் மண்டேலின் கவர்ச்சியானதும் போலியானதுமான கூற்றுக்களுக்கு எதிராக, 1953 நவம்பரில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உருவாக்கப்பட்டது.

முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களும் வெகுஜனங்களை சோசலிசத்தை நோக்கி வழிநடத்தும் திறன் கொண்டவை என்பது பப்லோவாத கலைப்புவாதத்தின் ஒரு பிற்போக்கு பின் இணைப்பு ஆகும். ஆதலால், தொழிலாள வர்க்கத்தின் ஒரு மார்க்சிச-ட்ரொட்ஸ்சிச கட்சி ஒரு புறம் இருக்க, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் நடவடிக்கைக்கான தேவை கிடையாது. நான்காம் அகிலத்தின் ஒட்டுமொத்த வரலாற்று முன்னோக்கும் குப்பையில் போடவேண்டியதாகும். முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ தேசிய இயக்கங்களில் ஏதாவது ஒன்றால் சோசலிசத்தை யதார்த்தமாக்க முடியும்போது, ட்ரொட்ஸ்சிச இயக்கத்துக்கும், தொழிலாள வர்க்கத்தில் சோசலிச நனவின் அபிவிருத்திக்கும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமைத்துவ நெருக்கடியின் தீர்வுக்கும் அங்கே என்ன தேவை இருக்கின்றது? இதுவே அவர்களின் கருத்தாக இருந்தது.

கீர்த்தி தனது முழுமையான இளமைக்கால வாழ்க்கையையும் பப்லோவாதிகளின் நயவஞ்சக சந்தர்ப்பவாத போராட்டத்துக்கு எதிராக அர்பணித்தார். தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தேசிய சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் அவரது இன்றியமையாத பங்களிப்பே இந்தப் போராட்டத்தின் உயர்ந்த புள்ளியாக உள்ளது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் இருப்பே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த 1985-86 போராட்டத்தில் கீர்த்தி ஆற்றிய பங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

கடந்த 35 வருடங்களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மகத்தான முன்னேற்றங்களை கண்டுள்ளது. இந்த முன்னேற்றங்கள், கீர்த்தி பாலசூரிய அவற்றின் பாதுகாப்புக்கும் அபிவிருத்திக்கும் மிகப் பாரியளவில் பங்பளிப்பு செய்த அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.

தோழர் கீர்த்தி பாலசூரியவின் நினைவு நீடூடி வாழ்க!

Loading