இலங்கை தொலைத்தொடர்பு மற்றும் காப்புறுதி தொழிற்சங்க அதிகாரத்துவம் சோ.ச.க. உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொண்ட குண்டர் நடவடிக்கையை கண்டனம் செய்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

டிசம்பர் 08 அன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன ஊழியர்களின் போராட்டத்தில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தனியார்மயமாக்கல் தாக்குதல்களுக்கு எதிராக ஒரு சோசலிச வேலைத் திட்டத்தை முன்வைத்து தலையிட்ட கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக, தொழிற்சங்க அதிகாரத்துவம் மேற்கொண்ட குண்டர் நடவடிக்கையை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) கடுமையாக கண்டிக்கிறது.

டிசம்பர் 8 அன்று கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் [Photo: WSWS]

தேசிய தொழிலாளர் சங்கம், பொதுஜன முற்போக்கு தொழிலாளர் சங்கம், இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்கம், அனைத்துக் கூட்டுத்தாபன ஊழியர் சங்கத்தை சேர்ந்த காப்புறுதி கூட்டுத்தாபன தொழிலாளர் சங்கம் மற்றும் 20 தொழிற்சங்கங்கள் சேர்ந்த டெலிகொம் தொழிற்சங்க கூட்டினாலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த தொழிற்சங்கங்கள் முறையே ஐக்கிய மக்கள் சக்தி, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய முதலாளித்துவக் கட்சிகளைச் சார்ந்தவை ஆகும். இந்தக் கட்சிகள் அனைத்தும் சர்வதேச நாணய நிதியம் கோரும் தனியார்மயமாக்கல் உட்பட சிக்கனத் திட்டங்களை ஏற்றுக்கொண்டவை ஆகும்.

இந்த கட்சிகளின் ஆதரவாளர்களான குறித்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற போதிலும், உறுப்பினர்களின் கண்களில் மண் தூவுவதற்காக அவ்வப்போது போலி விமர்சனங்களை முன்வைக்கின்றன.

28 நவம்பர் 2022 அன்று கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு முன்னால் ஸ்ரீலங்கா டெலிகொம் ஊழியர்கள் மறியலில் ஈடுபட்ட போது [Photo: WSWS]

'சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராட தொழிலாளர்கள் நடவடிக்கை குழுக்களை அமைப்பது அவசியம்' என்ற சோ.ச.க. அறிக்கை மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக போராட்டம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரையும் போராட்டக்காரர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுக்கொண்டிருந்த போதே, சோ.ச.க. பிரச்சாரகர்களுக்கு எதிரான குண்டர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நாடளாவிய ரீதியில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்து கலந்துகொண்டனர்.

சோ.ச.க. உறுப்பினர்கள் தங்கள் அறிக்கையில் அடங்கியுள்ள முன்னோக்கு பற்றி காப்புறுதி கூட்டுத்தாபன மற்றும் தொலைத் தொடர்புத் தொழிலாளர்களுடன் அன்று காலை ஆர்ப்பாட்டம் தொடங்கியதில் இருந்தே கலந்துரையாடி வந்தனர். அதற்கு அவர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. மதியம் 12:30 மணியளவில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அதிகாரத்துவம் இந்த குண்டர் நடவடிக்கையை மேற்கொண்டது.

தொழிலாளர்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்கள் பரவியதால் கோபமடைந்த டெலிகாம் மற்றும் காப்புறுதி தொழிற்சங்க அதிகாரத்துவம், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதை நிறுத்துமாறு அச்சுறுத்தி, சோ.ச.க. உறுப்பினர்களின் கைகளில் இருந்து துண்டுப் பிரசுரங்களைப் பறித்துக்கொண்டு அவர்களை போராட்ட இடத்தில் இருந்து வெளியேற்ற முயற்சித்தது. சோ.ச.க. உறுப்பினர்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது அவர்களின் ஜனநாயக உரிமை என்பதை தொழிலாளர்களுக்கு விளக்கி, தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு சவால் விடுத்தனர். பின்னர், அதிகாரத்துவக் கும்பல், சோ.ச.க. உறுப்பினர்களை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் 'குழப்பக்காரர்கள்' என்று முத்திரை குத்தி உடல்ரீதியாக தாக்க முயன்றது.

தனியார்மயத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் இந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு, சோ.ச.க. துண்டுப் பிரசுரம் முன்வைக்கும் வேலைத்திட்டத்தை அறிந்துகொள்ளும் உரிமையையும் இந்த குண்டர்கள் பறித்தனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, சமூக ஊடக ஆர்வலராகத் தோன்றும் லால் பெரேரா என்ற நபர், தனது 'டோக் வித் லால்' (Talk With Lal) எனும் யூடியூப் சேவையில், சோ.ச.க.க்கு எதிராக ஒரு கோபமான அவதூறு வீடியோவை வெளியிட்டார். சோ.ச.க. உறுப்பினர்களை தொழிற்சங்க அதிகாரத்துவம் தடுக்கும் காட்சிகளுடன் கூடிய வீடியோ, 'தொலைத்தொடர்பு காப்புறுதிப் போராட்டத்தை குழப்ப வந்த குழுவால் மோதல்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டதுடன், அங்கு அவர், சோ.ச.க. உறுப்பினர்களை 'அரசாங்கத்தின் பகடைக் காய்கள்' என்று அர்த்தப்படுத்தி ஒரு ஆத்திரமூட்டலைத் தூண்ட முயற்சிக்கிறார். இந்த ஆத்திரமூட்டல் சோ.ச.க. துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகளை கோழைத்தனமாக மூடி மறைத்திருந்தது.

கோட்டாபாய இராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய கடந்த வெகுஜன கிளர்ச்சியின் போது, காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மத்தியில் தலையிட்ட சோ.ச.க. உறுப்பினர்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைத் தூண்டிய குண்டர்களுடன் லால் பெரேரா ஒத்துழைத்தார் என்பதற்கான சான்றுகள் உள்ளன.

தொழிற்சங்க அதிகாரத்துவம் சோ.ச.க. உறுப்பினர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்ட கோழைத்தனமான குண்டர் நடவடிக்கை மற்றும் இழிவான அவதூறுகளை கண்டித்து, முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கமாக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலாக கொள்கை அடிப்படையில் போராடிய சோ.ச.க.யை பாதுகாக்க முன்வருமாறு அனைத்து தொழிலாளர்களுக்கும் அழைப்புவிடுக்கிறோம்.

சோ.ச.க. அறிக்கை பற்றி தொழிற்சங்க அதிகாரத்துவம் இந்தளவு அச்சமடைந்திருப்பது ஏன்?

சோ.ச.க. அறிக்கையின் மூலம், அவர்களின் முதலாளித்துவ-சார்பு வகிபாகம் சக்திவாய்ந்த முறையில் அம்பலப்படுவதோடு தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சியடைந்து வரும் தீவிரமயமாதல் சோ.ச.க. முன்நோக்குடன் ஒன்றிணையும் சாத்தியம் குறித்து அவர்கள் பயப்படுகிறார்கள்.

இந்த தொழிற்சங்கங்கள், போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கத் தள்ளப்பட்டிருப்பது, தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்துவரும் கோபத்தின் காரணமாகவே அன்றி, அனைத்திற்கும் மேலாக 'கோட்டாபய இராஜபக்ஷ அரசாங்கத்தை' வீழ்த்திய வகையிலான மற்றொரு தொழிலாள வர்க்க எழுச்சியைப் பற்றி அவர்கள் பீதியடைந்திருப்பதாலேயே அன்றி,' தொழிலாளர்களின் தொழில்கள் மற்றும் நிலைமைகள் மீதான அக்கறையினால் அல்ல, என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி-இடது அமைப்புகளின் ஆதரிவைக் கொண்ட தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகள் தூக்கிப் பிடித்த இடைக்கால அரசாங்கத் திட்டத்தின் கீழ், தொழிலாள வர்க்க எழுச்சியை எவ்வாறு திசைதிருப்பி இறுதியில் காட்டிக் கொடுத்தன என்பதையும் சோ.ச.க. அறிக்கை விளக்குகிறது.

இந்த முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து அதன் சொந்த சுயாதீன அதிகார அமைப்புகளைக் கட்டமைக்குமாறு சோ.ச.க. விடுக்கும் அழைப்பையிட்டே அவர்கள் மிகவும் சீற்றமடைந்துள்ளனர். சோ.ச.க. அறிக்கை கூறுவதாவது: 'தங்கள் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராடுவதற்கு, முடிவுகள் தீர்மானங்களை எடுக்கும் உரிமையை தங்கள் கைகளில் எடுப்பதற்கு, அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை ஒவ்வொரு வேலைத் தளத்திலும், தொழிற்சாலைகளிலும், சுற்றுப் பிரதேசத்திலும் அமைக்குமாறு சோ.ச.க. தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள ஒடுக்கப்பட்டவர்களையும் இதே போன்ற நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.'

தொழிற்சங்க அதிகாரத்துவமும் போலி-இடது கட்சிகளும் சோ.ச.க.யின் கருத்து வெளிப்படுத்தும் அடிப்படை ஜனநாயக உரிமைக்கும், தொழிலாளர்கள் அந்தக் கருத்துக்களை அறிந்து கொள்ள உள்ள ஜனநாயக உரிமைக்குமே தடுப்புச் சுவர் கட்டுகின்றன. இது உழைக்கும்-ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஜனநாயக விரோதத் தாக்குதல்களை முழுமையாக ஆதரிப்பதன் மூலம் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அடக்குமுறைக் கரத்தை பலப்படுத்துகிறது. உண்மையில், தொழிலாளர்களை திசைதிருப்பி விடுவதற்கும் அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான வேலைத்திட்டத்திற்காக போராடுவதைத் தடுப்பதற்கும் விக்கிரமசிங்க அரசாங்கத்தினதும் முதலாளித்துவக் கட்சிகளினதும் முகவர்களாகச் செயற்படுவது தொழிற்சங்க அதிகாரத்துவமே ஆகும்.

தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்காக, தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு வேலைத் தளத்திலும், தொழிற்சாலைகளிலும், தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளிலும் நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் பொருந்தும் தன்மையே மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. சோ.ச.க., தொழிலாளர்களை முதலாளித்துவக் கட்சிகள், அரசாங்கங்கள் மற்றும் முதலாளிகளுக்கு அடிபணிய வைப்பதற்கு எதிராக போராடுவதன் மூலம், சோசலிச வேலைத்திட்டத்தை செயல்படுத்தும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்காக, தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக சுயாதீனப்படுத்தி அணிதிரட்டுவதற்கே செயற்படுகின்றது.

சமூக உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்தக்கூடிய வலுவான சமூக சக்தியான தொழிலாள வர்க்கம், சோ.ச.க.யை ஜனநாயக விரோத தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க முன்வர வேண்டும்.

அதன் ஒரு பகுதியாக, தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் சோ.ச.க. உறுப்பினர்களுக்கு எதிராக டிசம்பர் 08 அன்று மேற்கொள்ளப்பட்ட குண்டர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உலக சோசலிச வலைத் தளத்திற்கு இயன்ற அளவு கடிதங்களை அனுப்புமாறும், அதற்கு எதிரான சோ.ச.க.யின் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சோ.ச.க. கேட்டுக்கொள்கின்றது.

Loading