ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கான மறைப்பாக ஆப்கானிஸ்தானுக்கான பிரிட்டனின் "உதவி" பயன்படுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அரசாங்கத்தின் சொந்த கண்காணிப்புக் குழுவின் கூற்றுப்படி, 2000 க்கும் 2020 க்கும் இடையில் ஆப்கானிஸ்தானுக்கான இங்கிலாந்தின் 3.5 பில்லியன் பவுண்டுகள் உதவியின் பெரும்பகுதி 'மனிதாபிமான உதவிக்காக' அல்ல, ஆனால் பொலிஸ் மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்களின் துணை இராணுவ நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டது. இது ஊழலையும் அநீதியையும் நிலைநாட்ட உதவியது.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட உதவித் தாக்கத்திற்கான சுயாதீன ஆணையத்தின் (Independent Commission for Aid Impact - ICAI) அறிக்கை, அரசாங்கத்தின் உதவி மற்றும் அரசு மறுசீரமைப்புக் கொள்கையின் பேரழிவு தரும் குற்றச்சாட்டாகும்.

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள குப்பைத் தொட்டியில், விறகுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மற்றும் பிற பொருட்களை உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஆப்கானிய குழந்தை டிசம்பர் 15, 2019 இல் தேடுகிறது [AP Photo/Altaf Qadri]

பகிரங்கமாக சித்தரிக்கப்பட்டபடி, நேட்டோ தலைமையிலான போர் மற்றும் ஆக்கிரமிப்பின் பின்னர் மனிதாபிமான உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்குவதற்கு மாறாக, இந்த நிதி பாய்ச்சல்கள் ஏகாதிபத்திய சக்திகளின் பரந்த புவிசார் மற்றும் இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு முதன்மையானது. மேலும், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்ற அனைத்து சர்வதேச நிறுவனங்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டன.

முன்பு சர்வதேச மேம்பாட்டுத் துறையால் விநியோகிக்கப்பட்டு, இப்போது வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் (FCDO) கீழ் மேற்கொள்ளப்படும் இங்கிலாந்து வெளிநாட்டு உதவி வரவு-செலவுத் திட்டத்தை ஆய்வு செய்யும், ICAI அறிக்கையானது, இந்த உதவி வரவு-செலவுத் திட்ட நிதியை ஆப்கானிய தேசிய காவல்துறையின் சம்பளத்திற்கு நிதியளிக்கப் பயன்படுத்துவது ‘இங்கிலாந்து உதவியை கேள்விக்குரியதாக்கும் பயன்பாடாகும்’ என்று விமர்சித்துள்ளது. ஏனென்றால், காவல்துறையின் முதன்மைப் பணி பொதுமக்களைக் காப்பது அல்ல, ஆனால் எதிர் நடவடிக்கைகள் என்பதே இதற்குக் காரணம்.

ஒட்டுமொத்தமாக, ICAI மதிப்பாய்வு காலகட்டத்தில், அதாவது ஆப்கானில் பிரிட்டனின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் கடந்த ஆறு ஆண்டுகளில், ஆப்கானிய தேசிய காவல்துறையின் (ANP) சம்பளத்திற்காக 252 மில்லியன் பவுண்டுகளையும், மற்றும் ஆப்கானிய பாதுகாப்பு சேவைகளுக்காக 400 மில்லியன் பவுண்டுகளையும் இங்கிலாந்து செலவிட்டுள்ளது. நிதியுதவியை நிறுத்துவதற்கான இங்கிலாந்து உதவி அதிகாரிகளின் முயற்சிகளை அரசாங்கம் நிராகரித்தது. இதற்கு காரணம் இலண்டன் தான், ஏனென்றால் ‘அட்லாண்டிக் நாடுகடந்த கூட்டணிக்கு முன்னுரிமை அளிக்கத் தேர்ந்தெடுப்பதில்,’ அடிப்படையில் சந்தேகங்கள் இருந்தபோதிலும், காபூலில் உள்ள வாஷிங்டனின் மிகவும் செல்வாக்கற்ற கைப்பாவை அரசாங்கத்திற்கு எதிரான தாலிபானின் நீண்டகால மற்றும் தீவிரமடைந்து வரும் கிளர்ச்சியை நசுக்க பெரும்பாலும் இராணுவ அடிப்படையிலான அமெரிக்கத் தேவைகளுக்கு இலண்டன் இணங்கியது.

எந்தவொரு அரசியல் தீர்விலும் தாலிபான்களை சேர்க்க மறுக்கும் வாஷிங்டனுடன் இலண்டன் உடன்படவில்லை என்றாலும், அது ‘அமெரிக்க அணுகுமுறையை சவால் செய்ய விரும்பவில்லை’ என்பதை மூத்த அதிகாரிகளுடனான அதன் விவாதங்கள் வெளிப்படுத்தியதாக ICAI கூறியது. இது வெற்றிக்கான வாய்ப்புகளை குறைவாகக் கொண்டிருப்பதை அதிகாரிகள் அறிந்திருந்தாலும், இலண்டன் ‘உடனடி வெற்றிக்கான கதைக்கு பகிரங்கமாக உறுதியளித்தது’.

ஆப்கானிய தேசிய காவல்துறை தாலிபான்களை ஒடுக்க முயன்றதால், நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய சோதனைச் சாவடிகளை இயக்கியது. சிறியளவில் பயிற்சி பெற்ற ஆட்களை அது பணியமர்த்தியதால், அதிக உயிரிழப்புக்கள் நிகழ்ந்தன, இது வருடத்திற்கு 25 சதவீத மக்கள் வெளியேற்றம் மற்றும் அழிவுக்கு வழிவகுத்தது. ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களின் பரவலான திருட்டு அங்கு நடந்தது, அதே நேரத்தில், “பணப்பரிமாற்றம், தன்னிச்சையான காவலில் வைத்தல், சித்திரவதை மற்றும் நீதிக்கு புறம்பான கொலைகள் உட்பட, பொலிஸின் ஊழல் மற்றும் மிருகத்தனம் பற்றிய மனித உரிமை அமைப்புகளின் பல அறிக்கைகளுக்கு” மத்தியில், ஆப்கானிய தேசிய காவல் படையினருக்கான (ANP) ஊதியங்கள் ‘உயர் அதிகாரிகளால்’ உயர்த்தப்பட்டது.

ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சர்வதேச அளவிலான நிதி மற்றும் இராணுவ ரீதியான இந்த மிகப்பெரியளவு ஆதரவு என்பது, ஈராக்கிற்கு பிந்தைய இரண்டாவது பெரிய அமெரிக்க ‘உதவி’ திட்டமாகும். 2020 ஆம் ஆண்டில், இந்த உதவிகளை நிர்வகிப்பதற்கான தொழில்முறை திறன் அரசாங்கத்திடம் இல்லாத சூழ்நிலையில், காபூலின் தேசிய வரவு-செலவுத் திட்டத்தின் பெரும்பகுதிக்கு அவை பயன்படுத்தப்பட்டன. மாறாக, நல்ல ஊதியம் பெறும் மேலாண்மை ஆலோசகர்களின் உண்மையான படையால் உதவிகள் நிர்வகிக்கப்பட்டன. நிதி அமைச்சகத்தில் 2017 ஆம் ஆண்டில் 780 ஆலோசகர்கள் இருந்துள்ளனர், பின்னர் இவர்களின் எண்ணிக்கை குறைந்து 2020 இல் 585 ஆலோசகர்கள் மட்டும் இருந்ததாக அறிக்கை கூறியுள்ளது.

இந்த ஆலோசகர்கள் அரசாங்கத்திற்கு நெருக்கமான வணிக உயரடுக்குகளுக்கு ஒப்பந்தங்களை வழங்கினர், அவர்கள் சர்வதேச பணப்புழக்கங்களை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தங்கள் மற்றும் துணை-ஒப்பந்தங்களுக்காக போராடிய நிலையில் பெரும்பகுதி உதவிகளை அவற்றிற்காக பயன்படுத்தினர். ஆசியா அறக்கட்டளையின் 2021 ஆம் ஆண்டு ஆய்வை மேற்கோள் காட்டி, 98.7 சதவீத ஆப்கானியர்கள் ஊழலை ஒரு பெரிய பிரச்சினையாக விவரித்துள்ளனர் என்றும், இது 2014 இல் 76 சதவீதமாக இருந்தது என்றும் ஆய்வு குறிப்பிட்டது.

2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்ட சிலவற்றை உள்ளடக்கிய இங்கிலாந்து அரசாங்க ஆவணங்களை ICAI பெற்றது, அது “நிலைமையை அரசு கைப்பற்றுதலின் தீவிர வடிவமாக விவரிக்கிறது, அதாவது மக்களின் பேரிழப்பில் ஆப்கானிய அரசியல் உயரடுக்கின் ஒரு குறுகிய குழு மட்டுமே பயனடைந்தது” என்கிறது. மேலும், “இந்த சூழ்நிலைகளில் அர்த்தமுள்ள நிறுவன வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. ஓராண்டுக்குப் பின்னர், 2020 இல், சர்வதேச மேம்பாட்டுத் துறை, பல ஆண்டுகளாக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், மத்திய அரசு நிறுவனங்கள் பெரும்பாலும் தங்கள் ஆணைகளை வழங்க முடியவில்லை என்று மதிப்பிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைவர்கள் அதை பொது நலன்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளாக பார்ப்பதைக் காட்டிலும், வெளிநாட்டு ஆதரவுக்கான நிவாரணங்களாகக் கண்டனர்” என்றும் அது கூறியது.

பிரிட்டனின் மிகப்பெரிய பங்களிப்பான 668 மில்லியன் பவுண்டுகள் நிதியானது, அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்தும் உலக வங்கியின் ஆப்கானிஸ்தான் மறுசீரமைப்பு அறக்கட்டளை நிதிக்கு (ARTF) வழங்கப்பட்டது. இது, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அடிப்படை சேவைகளுக்கு நிதியளிக்கவும், உள்கட்டமைப்பு முதலீடுகளை வழங்கவும், விவசாயம் மற்றும் வேலைகளுக்கு ஆதரவளிக்கவும், மற்றும் அரசாங்கத்தின் நிதிப்பற்றாக்குறைக்கு நிதியளிக்கவும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இது பெரும்பாலும், ஏழ்மையான நாட்டில் ஒரு ஒட்டுண்ணித் தொழிலை உருவாக்கிய சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட, ‘பலதரப்பு விநியோக பங்காளிகளால்’ நிர்வகிக்கப்பட்டது.

இவை எதுவும் ஆப்கானிய மக்களின் வாழ்வில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இது “குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்” என்று ICAI கூற முயற்சித்தாலும் அதனால் முடியவில்லை, ஆனால் “ARTF அதன் தலையீடுகளின் காரணமான வளர்ச்சி வெளிப்பாடுகளை அளவிடுவதற்கு போராடியது” என்பதையும், “மதிப்பாய்வு காலத்தில் ஒட்டுமொத்த வறுமை விகிதங்கள் அதிகரித்தன” என்பதையும் அது குறிப்பிட்டது. பெண்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களை பெண்கள் அணுகுவதை மேம்படுத்துவதற்கான அதிக முக்கியத்துவம், “[ஆப்கான்] அரசாங்கத்தின் உரிமை மற்றும் செயல்படுத்தும் திறன் இல்லாமையால் வரையறுக்கப்பட்டது' மற்றும் அதன் நடைமுறை தாக்கம் “இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருந்தது.”

இரண்டு தசாப்த கால பினாமிப் போர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்குப் பின்னர், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து துருப்புக்கள் இழிவான முறையில் திரும்பப் பெறப்பட்டது, நாட்டை மிருகத்தனமாகவும், ஏழ்மையாகவும் மாற்றியது, மற்றும் ஒரு மனிதாபிமான பேரழிவை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டது. முழுமையான 20 ஆண்டுகால ஆக்கிரப்பின்போது, ஏகாதிபத்திய சக்திகள் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. உதவிகள் என்ற பெயரில் அதன் பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டது, விவசாயமும் சீரழிக்கப்பட்டது. பாதுகாப்பின்மையுடன் சேர்ந்து, 40 ஆண்டுகளில் இல்லாத மிகக் கடுமையான வறட்சி, பூகம்பங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளும் நிகழ்ந்ததால், வறிய விவசாயிகள் கசகசா சாகுபடி மற்றும் அபின் வணிகத்திற்கு திரும்பிய நிலையில், ஆப்கானிஸ்தான் படையினர் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளின் கைகளில் நாடு சிக்கியது.

உலக வங்கியின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தான் உலகின் ஆறாவது வறிய நாடாகும், அந்நாட்டின் தனிநபர் மொத்த தேசிய வருமானம் வெறும் 500 டாலர் மட்டுமே. 24 மில்லியன் ஆப்கானியர்கள் அல்லது மொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கடுமையான பட்டினியால் அவதிப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிடுகிறது. 8.7 மில்லியன் மக்கள் பஞ்சத்தின் ஆபத்தில் உள்ளனர், அதே நேரத்தில் 5 மில்லியன் குழந்தைகள் பட்டனியின் விளிம்பில் உள்ளனர். கடந்த மாதங்களில் அடிப்படைப் பொருட்களின் விலைகள் உயர்வதற்கு முன்னர், செப்டம்பர் மாதத்தில் கோதுமை விலைகள் ஒரு வருடத்திற்கு முன்பிருந்த விலையை விட 37 சதவீதம் அதிகரித்ததால் இது நிகழ்ந்தது.

ஆகஸ்ட் 2021 இல் தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர், அமெரிக்க இராணுவம் அதன் மிக நீண்டகாலப் போரில் இருந்து அவமானகரமாக பின்வாங்கியதற்கு மத்தியில், நாட்டை முற்றிலும் பட்டினியில் தள்ளும் வகையில், ஆப்கானிஸ்தானின் நிதிச் சொத்துக்களை வாஷிங்டன் முடக்கியது, வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்டது மற்றும் பொருளாதார முற்றுகை சுமத்தப்பட்டது ஆகியவற்றுடன் சேர்ந்து இதுவும் நிகழ்ந்தது. உலக வங்கியின் கூற்றுப்படி, இது பொருளாதாரத்தில் 30 சதவீத சுருக்கத்திற்கு வழிவகுத்தது.

ஆப்கானிஸ்தானில் பல தசாப்தங்களாக அமெரிக்காவால் திட்டமிடப்பட்ட போர்கள் உலகின் மிகப்பெரிய அகதிகள் கூட்டத்தை உருவாக்கியுள்ளன. உக்ரேனில் போர் தொடங்குவதற்கு முன்னர், 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 10 ஆப்கானியர்களுக்கு ஒருவர் வீதம் – அதாவது 3 மில்லியன் மக்கள் – அகதிகளாக இருந்தனர், பெரும்பாலும் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் ஈரானில் அவர்கள் வசித்து வந்தனர்.

அந்நாட்டிலிருந்து நேட்டோ வெளியேறி ஒரு வருடத்திற்கும் மேலாக, பிரிட்டிஷ் படைகள் மற்றும் அதிகாரிகளுடன் பணிபுரிந்த பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்களை அவர்களது குடும்பத்தினருடன் வெளியே கொண்டுவர இங்கிலாந்து அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும், பல்லாயிரக்கணக்கான பாதிக்கப்படக்கூடிய ஆப்கானியர்கள் ஆப்கானிஸ்தானில் அல்லது அண்டை நாடான பாகிஸ்தானில் சிக்கித் தவிக்கின்றனர், இது அவர்கள் பிரிட்டனைச் சென்றடைய ஆபத்தான மற்றும் அதிகாரபூர்வமற்ற பாதைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்குகிறது. மீள்குடியேற்றத்திற்கான விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் பிரிட்டனில் உள்ள ஹோட்டல்களில் நிர்கதியாக சிக்கித் தவிக்கின்றனர்.

இந்த பேரழிவுகரமான நிலைமைகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நான்கு தசாப்த கால இரகசிய நடவடிக்கைகள், போர் மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றின் பேரழிவுகரமான தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன —இவை அனைத்தும் மனிதாபிமானம் மற்றும் ‘ஜனநாயகத்தை கட்டியெழுப்புதல்’ என்ற இழிந்த சொல்லாட்சியுடன் நியாயப்படுத்தப்படுகின்றன— அதிலும் ஏற்கனவே கிரகத்தின் மிக வறிய நாடுகளில் ஒன்றான அங்கு இது நடக்கிறது. ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும், மற்றும் சீனாவுடனான போருக்கும் தயாராகி வரும், அமெரிக்காவும் நேட்டோவும் தங்கள் ‘கூட்டாளிகள்’ மற்றும் எதிரிகளுக்கு என்ன சேமித்து வைத்திருக்கின்றனர் என்பது பற்றி உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Loading