இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக போராட்டம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலம்.

ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT), தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராக ஆயிரக்கணக்கான சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்கள், நவம்பர் 25 மற்றும் 28 அன்று நாடு பூராவும் நடந்த மதிய நேர ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர். தெற்கில் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை, வட மத்திய பிராந்தியத்தில் அனுராதபுரம் மற்றும் கிழக்கில் திருகோணமலை மற்றும் கல்முனை உட்பட பல நகரங்களில் எஸ்.எல்.டி. அலுவலகங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “இலாபம் ஈட்டும் தொலைத்தொடர்பு நிறுவனத்தை தனியார்மயமாக்குவதை நிறுத்து!”, “தனியார்மயமாக்கலால் இலங்கை திவாலாகி விட்டது!” 'தேசிய வளங்களை விற்பதை நிறுத்து!' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.

28 நவம்பர் 2022 அன்று கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் முன் ஸ்ரீலங்கா டெலிகொம் ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர் [Photo: WSWS]

பெருகிவரும் வாழ்க்கைச் செலவுகளுக்கும் தொழில்கள் மற்றும் ஊதியங்கள் மீதான தாக்குதல்களுக்கும் எதிராக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் பெருகிவரும் அலையின் ஒரு பகுதியே இந்தப் ஆர்ப்பாட்டங்கள் ஆகும். அரசாங்கங்களும் பெருநிறுவனங்களும் தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் போரினாலும் துரிதப்படுத்தப்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்துகின்றன.

அனைத்து தொலைத்தொடர்பு தொழிலாளர் சங்கம் (ATWU), பொதுஜன முற்போக்கு தொலைத்தொடர்பு தொழிலாளர் சங்கம் (PPTWU), ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கம் (SLNSS), ஐக்கிய ஊழியர் சங்கம் (SSS) மற்றும் தேசிய ஊழியர் சங்கம் (JSS) உட்பட 20 தொழிற்சங்கங்களின் குழுவான டெலிகொம் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (TTUC) இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் சிக்கன நடவடிக்கைகளை மற்றும் தனியார்மயமாக்கல்களை ஆதரிக்கும் அல்லது உண்மையில் செயல்படுத்தும் பாராளுமன்ற ஸ்தாபனத்தின் கட்சிகளுடன் பிணைந்துள்ளன. PPTWU, SLNSS, SSS மற்றும் JSS ஆகியவை முறையே ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.), பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டில் உள்ள அகில இலங்கை தொலைத்தொடர்பு தொழிலாளர் சங்கம் உத்தியோகபூர்வமாக இந்த நடவடிக்கையில் இணையவில்லை என்றாலும் அதன் உறுப்பினர்கள் மறியல் போராட்டங்களில் கலந்து கொண்டனர்.

சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட பரந்த வர்த்தக சார்பு 'மறுசீரமைப்புகளுக்கு' இணங்க, நவம்பர் 14 அன்று விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி, தனியார்மயமாக்கப்படவுள்ள பல அரச நிறுவனங்களில் எஸ்.எல்.டி.யும் ஒன்றாகும். ஸ்ரீ.ல.பொ.ஜ.மு., ஐ.தே.க., ஐ.ம.ச., ஸ்ரீ.ல.சு.க., ஜே.வி.பி. மற்றும் தொழிற்சங்கங்கள் அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்திற்கு ஆதரவளிக்கின்றன.

டெலிகொம் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (TTUC), தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் கோபத்தை ஆவியாக்கிவிடும் நோக்கத்துடனயே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. முன்னதாக, இந்த வாரம் வியாழன் வரை போராட்டங்கள் தொடரும் என்று டி.டி.யு.சி. அறிவித்த போதிலும், எஸ்.எல்.டி. தலைவர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக உறுப்பினர்களிடம் கூறி, திங்களன்று நடவடிக்கையை நிறுத்திக்கொண்டது.

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவது மற்றும் வேண்டுகோள் விடுப்பதன் ஊடாக தனியார்மயமாக்கலை நிறுத்தலாம் என்ற பொய்யை ஊக்குவிப்பதன் மூலம், டி.டி.யு.சி. தொழிலாளர்களை கலைத்துவிட முயற்சிக்கிறது.

நவம்பர் 21 அன்று வெளியிடப்பட்ட டி.டி.யு.சி. துண்டுப் பிரசுரம், எஸ்.எல்.டி.யை தனியார்மயமாக்குவது 'தேசிய பாதுகாப்பு மற்றும் தேசியப் பொருளாதாரத்திற்கு' அச்சுறுத்தல் என்று கூறியது. எஸ்.எல்.டி. ஒரு இலாபகரமான நிறுவனமாகவும், 2022 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 933 பில்லியன் ரூபாவை சம்பாதித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய துண்டுப் பிரசுரம், எஸ்.எல்.டி.யை 'அரசியல் தலையீடுகள் இல்லாத ஒரு சுயாதீன நிறுவனமாக' மாற்றியமைக்குமாறும் 'ஒழுங்குமுறை மற்றும் கணக்கெடுப்புக்கு' உட்பட்டதாக ஆக்குமாறும் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

28 நவம்பர் 2022 அன்று கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் முன் இலங்கை தொலைத்தொடர்பு தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர் [Photo: WSWS]

எஸ்.எல்.டி. இலாபமடைந்திருப்பதானது தொழிலாளர்களை குறைப்பதற்கும் வேலைச் சுமையை அதிகரிப்பதற்கும் நிர்வாகத்துடன் தொழிற்சங்கங்கள் ஒத்துழைத்ததன் நேரடி விளைவாகும். டி.டி.யு.சி., இலாபத்தை மேலும் அதிகரிக்க, தொழிலாளர்களை அர்ப்பணிக்க வைப்பதற்கு தொடர்ந்து ஒத்துழைப்பதாக உறுதியளிக்கிறது.

நேற்றைய ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் தொழிலாளர்கள் முன் உரையாற்றிய அனைத்து தொலைத்தொடர்பு தொழிலாளர் சங்க (ATWU) சிரேஷ்ட துணைச் செயலாளர் ஜகத் குருசிங்க, அரசாங்கம் தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிடவில்லை என்றால், 'நாங்கள் அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர்களையும் கொழும்புக்கு அழைப்போம்' என்று அறிவித்தார். 'நாங்கள் மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் துறைமுகங்கள் உட்பட மற்ற தொழிற்சங்கங்களுடன் கூட்டுப் போராட்டம் நடத்துவது பற்றி பேசுவோம்' என்று அவர் வாய்ச்சவடால் விடுத்தார்.

நவம்பர் 21 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பொதுஜன முற்போக்கு தொலைத்தொடர்பு தொழிலாளர் சங்க (PPTWU) தலைவர், ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துடன் பேசுவதாகவும், அரசாங்கம் முன்மொழிவை கைவிடவில்லை என்றால் கட்சியில் இருந்து விலகுவதாகவும் கூறினார். இத்தகைய வாய்ச்சவடால்கள் எஸ்.எல்.டி. தொழிலாளர்களை ஏமாற்றி, தனியார்மயமாக்கலுக்கான களத்தை தயாரிப்பதில் தொழிற்சங்கங்களின் அழுகிய சாதனையை மூடிமறைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.

தற்போதைய ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தையான அப்போதைய ஐ.தே.க. தலைவர் ரணசிங்க பிரேமதாசவினால் மேற்கொள்ளப்பட்ட 'சுதந்திர சந்தை' பொருளாதார சீர்திருத்தங்களின் கீழ் 1990 களின் முற்பகுதியில் எஸ்.எல்.டி.யை தனியார்மயமாக்குவதற்கான தயாரிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. முதலாவதாக, தொலைத்தொடர்புத் துறையானது 1991ல் எஸ்.எல்.டி. கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டது. 1996ல், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், அது பகிரங்கமாக வர்த்தக நிறுவனமாக மாறியது.

1997ல் குமாரதுங்க அரசாங்கம் எஸ்.எல்.டி. பங்குகளில் 40 சதவீதத்தை ஜப்பானிய நிப்பான் டெலிகிராப் அன்ட் டெலிபோன் கம்பனிக்கு (NTT) விற்றது. 2007ல் என்.டி.டி. அதன் 25 சதவீத பங்குகளை மெக்ஸிஸ் கொமுனிகேஷன் பேர்ஹட்டின் துணை நிறுவனமான மலேசியன் Usaha Tegas Sdn இற்கு விற்றது.

இந்த படரும் தனியார்மயமாக்கலானது வெகுஜன வேலை நீக்கங்களுடன் சேர்ந்து இடம்பெற்றது. எஸ்.எல்.டி.யின் தொழிலாளர்கள் எண்ணிக்கை 2000-2006 ஆண்டுகளுக்கு இடையில் சுய வேலைநீங்கல் திட்டம் என்று அழைக்கப்படுவதன் கீழ், 8,600 இலிருந்து 6,600 ஆக குறைக்கப்பட்டதுடன், பல தொழிலாளர்கள் குறைந்த ஊதியம் பெறும் ஒப்பந்தக்காரர்களால் பதிலீடு செய்யப்பட்டனர்.

மறுசீரமைப்பு செயல்முறை முழுவதும் எஸ்.எல்.டி. மற்றும் அரசாங்கத்தின் துணைக்குழுக்களாக செயலாற்றியதன் மூலம் இந்த வரலாற்றுத் தாக்குதல்களுக்கு தொழிற்சங்கங்கள் பொறுப்பாளிகள் ஆகும். தனியார்மயமாக்கல் மற்றும் வேலை அழிவுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்கள் வீண் போராட்டங்களாக மட்டுப்படுத்தப்பட்டு காட்டிக் கொடுக்கப்படுவதை இந்த அமைப்புகள் உறுதி செய்தன.

தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக இதுவரை வந்த அரசாங்கங்களால் தனியார்மயமாக்கல் செயல்முறையை முடிக்க முடியவில்லை. இப்போது, விக்கிரமசிங்க அரசாங்கம், பாரிய வெளிநாட்டுக் கடன்களை எதிர்கொண்டுள்ளதோடு, அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை விற்பதன் மூலம் அதன் நிதி நெருக்கடியை ஓரளவு தீர்க்க முயல்கிறது.

எஸ்.எல்.டி.க்கு மேலதிகமாக, 2023 வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், வாட்டர்ஸ் எட்ஜ் மற்றும் கொழும்பு ஹில்டன் ஹோட்டல்கள் தனியார்மயமாக்கப்பட உள்ளன. இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உட்பட ஏனைய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளன.

வேலைகள், ஊதியங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான வரலாற்றுத் தாக்குதலின் ஒரு பகுதியே இந்த தனியார்மயமாக்கல்கள் ஆகும். அரசாங்கம், அரச ஊழியர்களை பாதியாக அல்லது 850,000 ஆக குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

டி.டி.யு.சி.யும் ஏனைய அனைத்து தொழிற்சங்கங்களும் சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து, அவற்றுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்க தொழில்துறை பொலிஸாக செயல்படுகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் முன்னாள் அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன எழுச்சியின் போது, ஏப்ரல் 28 மற்றும் மே 6 அன்று பொது வேலைநிறுத்தங்களில் எஸ.எல்.டி. தொழிலாளர்களும் மில்லியன் கணக்கான வர்க்க சகோதர சகோதரிகளுடன் இணைந்து கொண்டனர். தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தை காட்டிக் கொடுப்பதில் ஏனைய தொழிற்சங்கங்களுடன் ஒத்துழைத்து விக்கிரமசிங்க அரசாங்கத்தை நிறுவுவதற்கு வழி வகுத்தன.

தொழிலாளர்கள் இந்த அனுபவங்களில் இருந்து தேவையான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டி இருப்பதோடு கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களில் இருந்தும் அனைத்து முதலாளித்துவ கட்சிகளில் இருந்தும் சுயாதீனமாக தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க வேண்டும்.

ஆளும் வர்க்கத்தின் பொருளாதாரத் தாக்குதலுக்கு எதிராக, கிராமப்புற ஏழைகளின் ஆதரவுடன் தொழிலாள வர்க்கத்தின் பொதுப் போராட்டத்தை ஒழுங்கமைக்க, ஒவ்வொரு வேலைத் தளத்திலும், தொழிற்சாலைகளிலும், சுற்றுப்புறங்களிலும் மற்றும் கிராமப்புறங்களிலும் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் இதே தாக்குதல்களை எதிர்கொள்ளும் தொழிலாளர்களுடன் இலங்கை தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான அடிப்படையை இந்தக் குழுக்கள் ஏற்படுத்தும்.

அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் உடனடியாக தனியார்மயமாக்கப்படாமல் முதலாளித்துவ அரசின் ஒரு பகுதியாக இருந்தாலும் கூட, தொழில்கள், வேலை நிலைமைகள் மற்றும் பொது சேவைகள் மீதான தாக்குதல்களுக்கு முடிவே இருக்காது. நல்ல ஊதியம் பெறும் தொழில்கள், உயர் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் அடிப்படை சமூக உரிமைகளை உத்தரவாதம் செய்வதற்கான ஒரே வழி, சமூக சமத்துவமின்மை மற்றும் போலினதும் தோற்றுவாயான முதலாளித்துவத்தை ஒழிப்பதை இலக்காகக் கொண்ட ஒரு அரசியல் போராட்டம் ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), இலங்கை முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் நடவடிக்கைக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்படும், ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மாநாட்டைக் கூட்ட போராடுகிறது. தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிச கொள்கைகளை செயல்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தை இது முன்னெடுத்துச் செல்லும்.

Loading