அரசாங்க-விரோத போராட்டங்களை நசுக்கப் போவதாக இலங்கை ஜனாதிபதி மிரட்டுகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

புதனன்று, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நசுக்க பொலிஸ் அரச நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தினார். வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் பேசிய அவர், “அரசாங்கத்தை மாற்ற மற்றொரு போராட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு நான் இடம் கொடுக்க மாட்டேன். நான் இராணுவத்தையும் படைகளையும் அழைப்பேன் மற்றும் அவசரகால நிலையை விதிப்பேன்,” என்றார்.

21 ஜூலை 2022 வியாழன், இலங்கையின் கொழும்பில் பதவியேற்பு விழாவின் போது ரணில் விக்கிரமசிங்க [AP Photo/Sri Lankan President's Office]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது ஆட்சியையும் வெளியேற்றிய ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் பாரிய எழுச்சியின் சாத்தியமான மீள் வருகையையே விக்கிரமசிங்க குறிப்பிடுகிறார்.

அவசரகால நிலை பிரகடனமானது ஜனாதிபதிக்கு இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கும், அரசியல் கட்சிகள் உட்பட எந்தவொரு அமைப்பையும் தடை செய்வதற்கும், போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை தடை செய்வதற்கும், எவரையும் எதேச்சதிகாரமாக கைது செய்வதற்கும் அல்லது தடுத்து வைப்பதற்கும், சொத்துக்களை தேடுவதற்கும் மற்றும் ஊடகங்களை தணிக்கை செய்வதற்கும் கடுமையான அதிகாரங்களை வழங்குகிறது.

ஏப்ரலில் தொடங்கிய வெகுஜனப் போராட்டங்கள், இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் இராஜினாமா செய்ய வேண்டும் என்றும், சகிக்க முடியாத பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் நீண்ட மணிநேர மின்வெட்டுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் கோரியது. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை உள்ளடக்கிய இந்த நான்கு மாதப் போராட்டம், முழு ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும் இயக்கப்பட்டதுடன், இராஜபக்ஷ தனது அரசாங்கம் சரிந்தவுடன் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இந்த வெகுஜன இயக்கம், முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) உட்பட போலி-இடது குழுக்களின் ஆதரவுடன் தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டது. மதிப்பிழந்த பாராளுமன்றத்தின் ஜனநாயக விரோத வாக்கெடுப்பின் மூலம் அமெரிக்க சார்பு கைக்கூலியான விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதற்கு இந்த சக்திகள் முதலாளித்துவ எதிர்க்கட்சிகளுடன் அணிவகுத்தன.

விக்கிரமசிங்கவின் பதவி உயர்வு, மக்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகள் எதனையும் தீர்க்கவில்லை. மாறாக, அவரது ஆட்சி வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியது, பணவீக்கம் மற்றும் பட்டினியை அதிகரிக்கச் செய்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்ட வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போதே வெகுஜன எதிர்ப்பை நசுக்க விக்கிரமசிங்க தனது அச்சுறுத்தலை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. செலவினக் குறைப்புக்கள், அதீத வரிகள் மற்றும் தனியார்மயமாக்கல்கள் உட்பட கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை அது உள்ளடக்கியுள்ளதுடன், அரச துறையில் இலட்சக்கணக்கான வேலை வெட்டுக்களை முன்னறிவிக்கின்றது.

இந்த நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கப் போராட்டங்களையும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் எதிர்ப்பின் புதிய அலையையும் தூண்டிவிடும் என்று அரசாங்கமும் முழு ஆளும் வர்க்கமும் பீதியடைந்துள்ளன.

'எவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க சுதந்திரம் உள்ளது' என வஞ்சத்தனமான முறையில் கூறிய விக்கிரமசிங்க, அத்தகைய நடவடிக்கைகளுக்கு பொலிஸ் அனுமதி தேவை என்றும் சேர்த்துக் கூறினார். ' பொலிஸிடம் அனுமதி பெற்று, சாலைகளில் நடந்து செல்லுங்கள், நான் சர்வாதிகாரி அல்லது நான் ஹிட்லரைப் போல் இருக்கிறேன்' என்று சத்தமிடுங்கள், ஆனால் 'போக்குவரத்தை தடுக்க வேண்டாம்' என்று அவர் அறிவித்தார்.

ஜனாதிபதி தனது முன்னோடிக்கு எதிராக பல மாதங்களாக நடந்த போராட்டங்கள் பயங்கரவாதத்தால் தூண்டப்பட்ட நடவடிக்கைகள் என்று வலியுறுத்தினார். ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வெடித்த “வன்முறையை” அவர் சுட்டிக்காட்டினார். உண்மையில், மே 9 அன்று அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாகவும், காலி முகத்திடலில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகவும், முன்னாள் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவால் அணிதிரட்டப்பட்ட குண்டர்களால் வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

2 நவம்பர் 2022 அன்று கொழும்பு, புறக்கோட்டையில் போராட்டக்காரர்களுக்கு எதிராக அதிரடிப் படை மற்றும் இராணுவத்தின் ஆதரவுடன் தண்ணீர் பீரங்கியுடன் தயார்நிலையில் உள்ள பொலிஸ் படைகள் [Photo: WSWS]

அந்த சந்தர்ப்பத்தில், சில அரசியல் ஸ்திரமற்ற சக்திகளால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறை அரசை பலப்படுத்தும் என்று சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) எச்சரித்தது.

பாராளுமன்றத் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் அழைப்பை நிராகரித்த ஜனாதிபதி, 'பொருளாதார நெருக்கடி தீர்க்கப்படும் வரை நான் பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க மாட்டேன்,' என அறிவித்தார். முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது என்ற போர்வையில், விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஆட்சியை காலவரையின்றி சட்டவிரோதமாக நீடிக்க இந்த சாக்குப்போக்கு பயன்படுத்தப்பட முடியும்.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) பொதுத் தேர்தலுக்கு விடுக்கும் அழைப்புக்கும மக்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மாறாக, இந்தக் கட்சிகள் தங்கள் அரசியல் அதிகாரத்திற்காக முன்னெடுக்கும் பிரச்சாரத்தின் பின்னால் வெகுஜன எதிர்ப்பைத் திசைதிருப்ப முயல்கின்றன.

முன்னிலை சோசலிசக் கட்சியால் தூண்டிவிடப்பட்ட வன்முறை என்ற விக்கிரமசிங்கவின் கூற்றுக்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் முன்வைக்கப்பட்டவை. இந்தக் குழுவுடன் சோசலிச சமத்துவக் கட்சி அடிப்படை அரசியல் வேறுபாடுகளை கொண்டிருந்த போதிலும், முன்னிலை சோசலிசக் கட்சிக்கு எதிரான ஜனாதிபதியின் அச்சுறுத்தல்களை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். குறிப்பாக தொழிலாள வர்க்கத்தின் மத்தியில், கோபம் அதிகரித்து வருவதற்கான பல அறிகுறிகள் உள்ள நிலையில், அவரது கருத்துகள் அனைத்து அரசியல் எதிர்ப்பையும் அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டவை ஆகும்.

மஸ்கெலியா, சாமிமலையில் உள்ள கிளனுகி தோட்டத்தில் உள்ள 500 தோட்டத் தொழிலாளர்கள், இடுப்பு உடையும் வேலைப்பளு மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பள வெட்டுக்களுக்கு எதிராக 18 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் 1,200 அரச அச்சக ஊழியர்கள் சம்பளக் குறைப்புக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்று, தனியார்மயத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான தொலைத்தொடர்பு ஊழியர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தினர்.

விக்கிரமசிங்கவுக்கு எந்த மக்கள் ஆதரவும் இல்லை. அவரது அரசியல் தளமான, வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), வெகுஜன எதிர்ப்பிற்கு மத்தியில் உடைந்துவிட்டது: ஜூலையில் அவர் 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், அவரது வரவு செலவு திட்டமானது 121 வாக்குகளால் மட்டுமே நிறைவேற்றப்பட்டது.

விக்ரமசிங்கே தனது முன்னோடியாக இருந்தவரின் அதே சர்வாதிகார முறைகளைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்துள்ளார். ஜூலை 22 அன்று ஜனாதிபதியாக ஆன அவர் செய்த முதல் செயல், பல மாதங்களாக ஜனாதிபதி செயலகத்தை ஆக்கிரமித்திருந்த நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற இராணுவத்தையும் பொலிஸையும் அனுப்பியதாகும். பல வாரங்களின் பின்னர், காலி முகத்திடலை ஆக்கிரமித்திருந்த எதிர்ப்பாளர்களும் பொலிஸாரால் வன்முறையில் வெளியேற்றப்பட்டனர். போராட்டக்காரர்களை பயங்கரவாதிகள் என்றும் பாசிஸ்டுகள் என்றும் வெறித்தனமாக கண்டித்த ஜனாதிபதி, நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்து, பொலிஸ் வேட்டையாடலை கட்டவிழ்த்துவிட்டார்.

மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் சுகாதாரத் துறைகளில் வேலைநிறுத்தங்களைத் தடைசெய்யும் கொடூரமான அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை விக்கிரமசிங்க அமுல்படுத்தியுள்ளார். ஆகஸ்ட் 21 அன்று, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (அ.ப.மா.ஒ.) ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, அனைத்துப் பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கல்வெவ சிறிதம்மா ஆகியோருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவில் அவர் கையெழுத்திட்டார்.

கல்வி மற்றும் சுகாதாரம் நிதி பற்றாக்குறையில் இருக்கும் அதே வேளை, இராணுவம் மற்றும் பொலிசுக்கு 539 பில்லியன் ரூபாய்கள் (1.46 பில்லியன் டொலர்) வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

விக்கிரமசிங்கவின் சமீபத்திய அச்சுறுத்தல்கள் குறித்து பிரதான எதிர்க்கட்சிகள் அடையாள விமர்சனங்களையே முன்வைத்துள்ளன. ஜனாதிபதியின் அறிக்கைகள் 'கண்டிக்கத்தக்கவை' என்றும் அடக்குமுறை நடவடிக்கைகளை அவரது கட்சி 'அனுமதிக்காது' என்றும் ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அமைதியான, ஜனநாயக மக்கள் போராட்டத்தை நடத்துவதற்கு ஐ.ம.ச. தயாராக இருப்பதாக கூறிய அவர், 'யாராவது வன்முறையில் ஈடுபட்டால், அதற்கு எதிராக பாதுகாப்புப் படைகள் செயல்பட முடியும்' என சேர்த்துக் கூறியதன் மூலம், அடக்குமுறையை முன்னெடுக்க அரசாங்கத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.

விக்ரமசிங்கவின் கருத்துக்களை குறைத்து மதிப்பிட்ட ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, 'ஜனாதிபதி பதவியை விட மக்களின் பலம் பெரியது' என்றார். 'ரணில் விக்கிரமசிங்கவின் கதைகளை யார் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள்?' 'ஜே.வி.பி அவற்றைப் பற்றி கவலைப்படவில்லை' என அவர் வீம்பாக பேசினார்.

இரு கட்சிகளும், பாரிய ஆபத்துக்களின் எதிரில் தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்க முயல்கின்றன. ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி., சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன. அவை ஆட்சிக்கு வந்தால், குறித்த சிக்கன நடவடிக்கைகளை விக்கிரமசிங்க ஆட்சியை விட ஈவிரக்கமின்றி செயல்படுத்தும்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொடவும் இதேபோல் அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களைக் குறைத்து மதிப்பிட்டார்: “[விக்கிரமசிங்க] மக்கள் தனக்குச் செவிசாய்த்து பயந்து நடுங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறாரா? மக்கள் அவரைப் பற்றி பயப்பட மாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும்,” என அவர் தெரிவித்தார்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் மற்றுமொரு தலைவரான துமிந்த நாகமுவ, ஜனாதிபதி தனது ஜனநாயக விரோத திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார் என்றும், 'நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் முன்வர வேண்டும்' என்றும் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களை தோற்கடிப்பதன் பேரில், எதிர் முதலாளித்துவக் கட்சிகளுடன் ஒரு பரந்த அரசியல் முன்னணியை உருவாக்க முன்னிலை சோசலிசக் கட்சி பரிந்துரைக்கின்றது. இது ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக ஒரு சோசலிச அடிப்படையில் அணிதிரட்டுவதை தடுக்கும் ஒரு அரசியல் பொறியாகும்.

மனநிறைவை ஊக்குவிக்கும் வகையில், ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய தொழிற்சங்க மையத்தின் செயலாளர் வசந்த சமரசிங்க, வெகுஜன போராட்டங்களை இராஜபக்ஷவால் தடுக்க முடியவில்லை, விக்கிரமசிங்கவாலும் தடுக்க முடியவில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஏனைய தொழிற்சங்கங்கள் கொடிய மௌனம் காக்கின்றன. விக்கிரமசிங்க ஆட்சிக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் எதிரான, ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்குவதில் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஜனாதிபதியின் அச்சுறுத்தல்களை பாரதூரமானதாக எடுத்துக் கொள்ளுமாறு தொழிலாளர்களை சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கிறது. சமூக ரீதியில் அழிவுகரமான கொள்கைகளை திணிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. அவற்றை அமைதியான முறையில் செய்ய முடியாது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் உள்ள ஆளும் உயரடுக்குகள், தொற்றுநோயினாலும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினாலும் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு, சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி வேகமாக நகர்வதன் மூலமே பிரதிபலிக்கின்றன.

ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதில் தொழிலாள வர்க்கம் முன்முயற்சி எடுப்பது கட்டாயமாகும். அதனால்தான் தொழிற்சங்கங்கள், முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் போலி-இடது ஒட்டுண்ணிகளில் இருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் புறநகர் பகுதிகளிலும் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புமாறு தொழிலாளர்களை சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் அவசரகாலச் சட்டங்கள், பயங்கரவாதத் தடைச் சட்டம், அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டம் மற்றும் பிற அடக்குமுறைச் சட்டங்களை நீக்குவதற்கும் இந்தக் குழுக்கள் போராட வேண்டும்.

தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைத் தரங்களையும் சமூக நிலைமைகளையும் பாதுகாப்பதற்கான ஒரே வழி, சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கனத் திட்டத்தை நிராகரித்து, வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தின் கட்டுப்பாட்டை தங்கள் கையில் எடுத்துக்கொள்வதே ஆகும். அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் திருப்பிச் செலுத்துவதை நிராகரிப்பதோடு வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்கள் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும்.

இந்தத் வேலைத்திட்டத்திற்காகப் போராட, தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட, ஜனநாயகத்துக்கும் சோசலிசலிசத்துக்குமான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மாநாட்டைக் கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. கிராமப்புற ஏழைகளின் ஆதரவைக் கொண்ட இந்த தொழிலாளர்களுக்கான மூலோபாய மையம், உலகப் பொருளாதாரத்தை சோசலிச வழிகளில் மறுசீரமைப்பதற்கான சர்வதேசப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு அடித்தளமாக இருக்கும்.

Loading