கிளனுகி தோட்டத்தில் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் இலங்கை தொழிற்சங்கங்களின் முயற்சியை நிராகரி!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் சாமிமலையில் உள்ள கிளனுகி தோட்டத் தொழிலாளர்கள், வேலைச்சுமை அதிகரிப்பு மற்றும் ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தம், ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது. அக்டோபர் 27 அன்று கிளனுகி மற்றும் டீசைட் பிரிவுகளின் சுமார் 500 தொழிலாளர்களுடன் தொடங்கிய இந்த போராட்டம், இப்போது மூன்றாவது வாரத்தில் நுழைகிறது. தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிராகரித்துள்ள நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் (இ.தொ.கா.) மற்றும் தொழிலாளர் தேசிய சங்கமும் (தொ.தே.ச.) தொழிலாளர்களால் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நெருக்குகின்றன.

கிளனுகி தோட்டத் தொழிலாளர்கள் 12 செப்டம்பர் 2022 அன்று ஊதிய அதிகரிப்பும் தினசரி வேலை இலக்கை குறைக்கவும் கோரி நடத்திய ஆர்ப்பாட்டம் [Photo: WSWS]

கிளனுகி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவினராகிய நாங்கள், எங்கள் கோரிக்கைகள் எதையும் அடையாமல் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையை கடுமையாக நிராகரிக்கிறோம். கிளனுகி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு, ஏனைய அனைத்து தோட்டத் தொழிலாளர்களையும், கிளனுகி தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து, எமது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இந்தப் போராட்டத்தை விரிவுபடுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றது. இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள ஏனைய தொழிலாளர்களிடமும் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

எங்களுடைய சொற்ப ஊதியமானது உணவு மற்றும் பிற தேவைகளின் பற்றாக்குறையால் தூண்டிவிடப்பட்டு, வானளாவ உயர்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கைச் செலவுகளுக்கு போதவில்லை. அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் அதே போல் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் இருப்பது போலவே, வேலை நிலைமைகளும் தாங்க முடியாதவை.

கிளனுகி தோட்ட நிர்வாகம், தினசரி கொழுந்து பறிக்கும் இலக்கை 16 முதல் 18 கிலோகிராம் வரை உயர்த்தியுள்ளதுடன் ஒவ்வொரு தொழிலாளியும் துப்புரவு செய்யவேண்டிய பிரதேசத்தை 75 சதுர மீட்டர் முதல் 150 சதுர மீட்டர் வரை இரட்டிப்பாக்கியுள்ளது. இந்த இலக்குகளை நிறைவேற்றத் தவறிய தொழிலாளர்கள் ஊதிய வெட்டுக்களை எதிர்கொள்கின்றனர்.

ஆரம்பத்தில் இருந்தே, வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்க மறுத்த இ.தொ.கா. மற்றும் தொ.தே.ச., போராட்டத்தை தனிமைப்படுத்தி, நிர்வாகத்துடனும் அரசாங்கத்தின் தொழில் திணைக்களத்துடனும் கலந்துரையாடுவதன் மூலம் எங்கள் கோரிக்கைகளை பெற முடியும் என்ற மாயையை பரப்பிவிட்டு, வேலைக்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்தன. எவ்வாறாயினும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிர்வாகம் நிராகரித்ததால், தொழில் திணைக்கள அதிகாரிகளுடன் அக்டோபர் 31 அன்று ஹட்டனில் நடத்தப்பட்ட கூட்டம் தோல்வியடைந்தது.

நவம்பர் 6 அன்று, இ.தொ.கா. பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தோட்டத்தை நடத்தும் மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியுடன் நவம்பர் 8ம் திகதி கொழும்பில் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்வதாக தொழிலாளர்களுக்கு அறிவித்தார். அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தொழிலாளர்களின் பிரதிநிதிகள் குழு தயாராக இருந்த போதிலும், கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக நவம்பர் 7 அன்று இ.தொ.கா. ஹட்டன் பிரதேச தலைவர் பிச்சமுத்து தொழிலாளர்களுக்கு தெரிவித்தார். இந்த நாடகம் தொழிலாளர்களை ஏமாற்றி எங்கள் போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியாகும்.

பிச்சமுத்து, கிளனுகி பிரிவு இ.தொ.கா. கிளைத் தலைவர் ஜெயப்பிரகாஷ், தொ.தே.ச. தொழிற்சங்கக் கிளைத் தலைவர் ஞானப்பிரகாசம் ஆகியோர் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கிளனுகி வேலைநிறுத்தம் தொழிலாளர்கள் இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மற்ற தோட்டங்களுக்கும் பரவும் என்று தொழிற்சங்கங்கள் அஞ்சுகின்றன.

தொழிலாளர்களை தனிமைப்படுத்தும் தொழிற்சங்கங்களின் முயற்சிகள், தண்டனை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிர்வாகத்தின் கரத்தை வலுப்படுத்தியுள்ளது. தோட்டத்தில் விநியோக ஊழியரும் சுயாதீன ஊடகவியலாளருமான ஞானராஜ், வேலை நிறுத்தம் குறித்து செய்தி வெளியிட்டதால் வேலை இடை நீக்கம் செய்யப்பட்டார்.

தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்: தொழிற்சங்கங்கள் நமது உரிமைகளைப் பாதுகாக்க அல்ல, மாறாக தோட்டக் கம்பனிகளின் இலாபத்தை உயர்த்துவதற்காகவே செயல்படுகின்றன என்பதை சாட்சி காட்டுகிறது. கிளனுகி, ஓல்டன், தலவாக்கலையில் கட்டுகெல்லை, ஹட்டனில் வெலிஓயா மற்றும் ஏனைய தோட்டங்களிலும், அதிகரித்துவரும் வேலைப்பளு, சம்பள வெட்டுக்கள் மற்றும் ஏனைய தாக்குதல்களுக்கு எதிராக சமீபத்தில் நடந்த போராட்டங்கள் அனைத்தும், இ.தொ.கா., தொ.தே.ச., மலையக மக்கள் முன்னணி மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உட்பட தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு, நாளொன்றுக்கு பறிக்கப்படும் தேயிலை கொழுந்தின் அளவை 16 கிலோவிலிருந்து 20 கிலோகிராமாக அதிகரிப்பதற்கான நிர்வாகத்தின் முடிவிற்கு எதிராக, கிளனுகி மற்றும் டீசைட் பிரிவுகளின் 500 தொழிலாளர்களால் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 6 வரை முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தத்தை தொ.தே.ச. மற்றும் இ.தொ.கா.வும் காட்டிக் கொடுத்தன. இந்த வேலைநிறுத்தத்தில் தீவிரமாக தலையிட்ட கிளனுகி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழு, தொழிற்சங்கங்களின் நாசவேலைக்கு எதிராக தொழிலாளர்களை ஒன்றிணைக்க போராடியது.

போலிக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் டசின் கணக்கான தொழிலாளர்களை இடைநீக்கம் செய்தது உட்பட, தொழிலாளர்களுக்கு எதிரான கம்பனியின் பழிவாங்கலில் ஓல்டன், கட்டுக்கலை மற்றும் வெலிஓயா தோட்டங்களில் நிர்வாகத்துடன் தொழிற்சங்கங்கள் ஒத்துழைத்தன. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், இந்த சோடிக்கப்பட்ட வழக்குகள் இன்னமும் இழுத்தடிக்கப்படுகின்றன.

தொழிலாளர்களின் பரவலான எதிர்ப்பு இருந்தபோதிலும், தொழிற்சங்கங்கள் உற்பத்தித்திறன் அடிப்படையிலான வருவாய் பகிர்வு மாதிரியை அறிமுகப்படுத்துவதை ஆதரித்தன. இந்த முறைமை, கம்பனிகள் நேரடியாக தொழிலாளர்களின் உழைப்பை மட்டுமன்றி, வயதானவர்கள் மற்றும் பிள்ளைகள் உட்பட அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சுரண்டுவதற்கு அனுமதிக்கிறது. இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை, தேயிலை உற்பத்தியில் சுமார் 30 வீதத்திற்கு பங்களிக்கும் வருமானப் பகிர்வு முறைமையின் கீழ், தோட்டங்கள் தமது உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த முறைமையின் கீழ், ஊழியர் சேமலாப நிதி உட்பட தங்களுடைய ஓய்வு கால நிதியையும் தொழிலாளர்கள் இழக்கின்றனர்.

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரைனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரைத் தொடர்ந்து உக்கிரமாக்கப்பட்டுள்ள, சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகவே தோட்டத் தொழிலாளர்கள் மீதான சுரண்டல் தீவிரமாக்கப்பட்டுள்ளது. உலக முதலாளித்துவ நெருக்கடியின் முழுச் சுமையையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதை இலக்காகக் கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தோட்டத் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்ப முன்முயற்சி எடுத்துள்ள சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) விளக்கியது போல், தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை தொழிற்சங்கங்கள் மூலம் பாதுகாக்க முடியாது. அவை முதலாளிகள் மற்றும் முதலாளித்துவ அரசின் சார்பாக செயல்படும் ஒரு தொழில்துறை பொலிஸ் படையாகும்.

எனவே, கிளனுகி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவானது ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கான அடிப்படையாக, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக மேலும் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப எங்களுடன் இணையுமாறு கிளனுகி தோட்டத்தில் உள்ள ஏனைய தொழிலாளர்களுக்கும் ஏனைய பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். இந்த குழுக்கள் கென்யா, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் சீனா போன்ற நாடுகளில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் உட்பட இலங்கை மற்றும் சர்வதேச அளவில் உள்ள ஏனைய தொழிலாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும்.

இந்தப் போராட்டத்தில், கிளனுகி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழு, பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:

  • வருவாய்-பகிர்வு முறை வேண்டாம்.
  • அனைவருக்கும் 75,000 ரூபாய் மாத ஊதியம், வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அதிகரிக்கும் ஊதிய உயர்வு, முழு ஓய்வூதிய உரிமைகள் மற்றும் முழு ஊதியத்துடன் கூடிய சுகயீன விடுமுறை வேண்டும்.
  • அனைத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவச் சலுகைகள் மற்றும் ஒவ்வொரு தோட்டத்திலும் உயர்தர மருத்துவ வசதிகள் வேண்டும்.
  • அனைவருக்கும் ஒழுக்கமான, வாழக்கூடிய வீடுகள் வேண்டும்.
  • ஓல்டன், கட்டுக்கலை மற்றும் வெலிஓயா தோட்டங்களில் இடைநிறுத்தப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்த வேண்டும், அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொள்ள வேண்டும்.

சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டத்திலிருந்து இந்தக் கோரிக்கைகள் பிரிக்க முடியாதவை என்ற சோசலிச சமத்துவக் கட்சி கூறுகிறது. இந்த நிலைப்பாட்டுடன் கிளனுகி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு உடன்படுகிறது. பெருந்தோட்டங்கள், பெரிய பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதும் இதில் அடங்கும். அனைத்து வெளிநாட்டுக் கடன்களும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட வேண்டும்.

இலங்கையிலும் தெற்காசியாவிலும் மற்றும் உலகம் முழுதும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் நலன்களை வெளிப்படுத்துகின்ற, ஜனநாயகம் மற்றும் சோசலிசத்துக்கான தொழிலாளர் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மாநாட்டிற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு, அனைத்து தொழிலாளர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading