கிளனுகி தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய வெட்டுக்கும் வேலைச் சுமைகளுக்கும் எதிராக காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கையின் மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தின் சாமிமலையில் உள்ள கிளனுகி தோட்டத்தில் தொழிலாளரகள் வேகமாக வேலை செய்தல் மற்றும் ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக அக்டோபர் 27 ல் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இத் தோட்டத்தின் கிளனுகி மற்றும் டீசைட் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 500 தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் இணைந்துள்ளனர்.

தோட்ட நிர்வாகம், நாளொன்றுக்கு 16 கிலோவாக பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்தின் அளவினை 18 கிலோவாக அதிகரித்துள்ளதோடு துப்பரவு செய்வதற்கான இடத்தின் அளவினையும் 75 ல் இருந்து 150 சதுர மீட்டர்கள் என இரு மடங்காக்கியுள்ளது. அதிகரிக்கப்பட்ட இந்த வேலை இலக்குகளை எட்டுவது மிகவும் கடினமானதுடன், அது சம்பள வெட்டுக்களுக்கும் வழிவகுக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் தேவராஜா, நவம்பர் 6, 2022 அன்று வேலைநிறுத்தம் செய்யும் டீசைட் தோட்டத் தொழிலாளர் மத்தியில் உரையாற்றுகிறார் [Photo: WSWS]

தொழிலாளர்கள், முன்னைய அளவுகளுக்கு இலக்குகளை குறைக்கவும், இலக்குகள் எட்டப்படாத போது ஊதியங்கள் வெட்டப்படக் கூடாது என்றும், மற்றும் தமக்கு ரூபா 1000 நாளாந்த ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர். அவர்கள் இந்து சமய நிகழ்வான தீபாவளி பண்டிகைக்கான முற்கொடுப்பனவை ரூபா 15,000 இருந்து ரூபா 10,000 ஆக குறைத்தமைக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர்.

தோட்டத் தொழிலாளர்கள், வானளவாக உயர்கின்ற விலைகள், பொருள் தட்டுப்பாடுகள் மற்றும் சொற்ப ஊதியம் போன்றவற்றால் தமது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைமைகளின் கீழே இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த வருடம் ஆரம்பத்தில் கம்பனி வேலைச்சுமைகளை அதிகரிப்பதை அறிமுகப்படுத்தியதிலிருந்து, தொழிலாளர்கள் தொடுத்த பல போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களை தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுத்தமையால் தொழிலாளர்கள் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் (தொ.தே.ச) ஆகியன வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர மோசமாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

இ.தொ.க வின் மஸ்கெலியா உள்ளுர் தலைவர் பிச்சமுத்து இந்த வேலை நிறுத்தத்தை நிறுத்துமாறு கோரி தொழிலாளர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்புவிடுத்தார். அவர் ஹட்டனில் உள்ள அரச உதவித் தொழில் ஆணையாளருடன் கலந்துரையாடுவதன் மூலம் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும் என அவர்களுக்குக் கூறினார். ஆனால் அக்டோபர் 31 ம் திகதி உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை தோட்ட முகாமையாளர் ஏற்க மறுத்ததால் அது தோல்வியில் முடிந்தது.

2022 நவம்பரில் டீசைட் தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர் [Photo: WSWS]

வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய முயற்சி தோல்வியடைந்தமையால், பின்னர் இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், நாளை (நவம்பர் 07) தோட்டக் கம்பனி முகாமையாளர்களுடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதாகக் கூறி அதுவரையில் வேலைநிறுத்தத்தை தொடருமாறு தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். உள்ளுர் தொழிற்சங்கத் தலைவர்கள் வாக்குறுதியளிக்கப்பட்ட கலந்துரையாடலுக்கு பல தொழிலாளர்களை இணைக்க முயற்சிக்கின்றனர்.

வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கான அனுதாப நடிப்பில் இ.தொ.கா உள்ளுர்த் தலைவர்கள் தோட்ட அலுவலகத்திற்கு முன்பாக கொட்டகை அமைத்தனர். அனைத்து தோட்ட கம்பனிகளும் வேலை இலக்குகளை தாங்கமுடியாத அளவுகளில் அதிகரித்துக்கொண்டும் அவ் இலக்குகளை அடைய முடியாதவர்களின் ஊதியத்தை வெட்டிக்கொண்டிருக்கும் போது இவையாவும், தொழிலாளர்களின் போராட்டதை குழப்பவும் காட்டிக்கொடுப்பதற்குமான சதி திட்டங்கள் ஆகும்.

அதிகரித்துவருகின்ற தொழிலாளர் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளை தடுப்பதற்கு முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ கடந்த வருட ஏப்ரலில் 1000 ரூபா நாளாந்த ஊதியத்தை வழங்க தோட்டக் கம்பனிகளுக்கு உத்தரவிட்டார். தோட்டக் கம்பனிகள், அதை மறுத்ததோடு அரசாங்கத்தின் உத்தரவை சவால் செய்ய நீதிமன்றத்துக்குச் சென்றன. தொழிலாளர்கள் மத்தியிலான கொதித்துக்கொண்டிருக்கும் கோபத்துக்கு மத்தியில், நீதிமன்றம் இந்த சவாலை நிராகரித்தது. எவ்வாறாயினும் தோட்டக் கம்பனிகள் 1000 ரூபா ஊதியத்தை வழங்காததோடு, பதிலாக நாளாந்த வேலைச்சுமைகளை அதிகரிப்பதன் மூலம் ஊதிய வெட்டை அமுல்படுத்தின.

ஒரு வருடத்துக்கும் மேலாக, கிளனுகி, ஒல்டன், தலவாக்கலை கட்டுகலை தோட்டம், ஹட்டன் வெலிஓயா மற்றும் பிற தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் இந்தப் பிரச்சினைகள் மீது வேலை நிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளில் ஈடுபட்டனர்.

செப்டெம்பரில், மஸ்கெலியா தோட்டக் கம்பனியால் நிர்வகிக்கப்படும் 14 தோட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையை கொழும்புக்கு ஏற்றுமதிசெய்வதை தடுக்க ஒரு எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு இ.தொ.கா அழைப்பு விடுத்தது. அந்த நடவடிக்கை செப்டெம்பர் 14 ல் இருந்து 23 வரை நீடித்த அதேவேளை, இ.தொ.கா தலைவர்கள் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு கம்பனிகளை ஏற்க கட்டாயப்படுத்துவதற்கு உறுதியளித்தனர், ஆனால் எந்தவொரு பிற நடவடிக்கையிலும் ஈடுபடுவதில் இருந்து தொழிலாளர்களைத் தடுத்தனர்.

இந்த எதிரப்பு பிரச்சாரத்தை நிறுத்திய பின், 1,000 ஊதியத்தை வழங்கவும், ஏனைய கோரிக்கைகளை நிறைவுசெய்யவும் கம்பனி முகாமையாளர்கள் எழுத்துமூலமான உறுதியை வழஙகியுள்ளனர் என ஊடகங்களுக்கு தெரிவித்த இ.தொ.கா இதை ஒரு வெற்றி என கோரியது. இது ஒரு முழுமையான பொய். தொழிற்சங்கமானது தொழிலாளர்களின் கோபத்தை கலைக்கவே போராட்டம் என அழைக்கப்பட்டதை வெறுமையாக நடாத்தியது.

இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளிக்கவும் அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களால் ஆதரவளிக்கபட்ட தோட்டக் கம்பனிகளின் தாக்குதல்களுக்கு எதிராக ஒரு பொதுவான போராட்டத்தில் இணையுமாறும் ஏனைய தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுத்து, இந்த சமீபத்திய காட்டிக்கொடுப்பை அம்பலப்படுத்துவதற்கு கிளனுகி தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழு பலமான முறையில் பிரச்சாரம் செய்தது.

கிளனுகி தோட்ட தொழிலாளர்கள் அதிக ஊதியம் மற்றும் குறைந்த தினசரி வேலை இலக்குகளை கோரி, 12 செப்டம்பர் 2022 அன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். [Photo: WSWS]

உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் உயர்வடைகின்ற வாழ்க்கைச் செலவுகளை தெரிவித்து தமது மிகவும் மோசமான நிலைமைகளை விளக்கினர்.

“நாங்கள் பெறும் சம்பளத்துடன் ஒரு நாளுக்கு ஒரு வேளை உணவைக் கூட சாப்பிட முடியாது” என ஒருவர் கூறினார். “பிள்ளைகளுக்கு ஒரு பால் பையைக் வாங்குவது மிகவும் கடினமாக உள்ளது” பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் நாம் எமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாது உள்ளது, ஆனால் தோட்ட முகாமையாளர்கள் எமது சம்பளங்களை வெட்டுகின்றனர். அவர்கள் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் இதைச் செய்கின்றார்கள்”

2014 ல் இருந்து, தேயிலைத் தோட்ட துறை முகங்கொடுத்த மோசமான உலக நெருக்கடியை தோட்டத் தொழிலாளர்கள் முகங்கொடுக்கச் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா-வைரஸ் தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரால் இது ஆழமாக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் நிலைமைகள் மீதான தாக்குதலானது பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மீது சுமத்திவிட கொழும்பு அரசாங்கம் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் பரந்த தாக்குதலின் ஒரு பாகமாகும். சர்வதேச நாணய நிதியத்தினால் கட்டளையிடப்பட்ட மோசமான சிக்கன வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கின்றது.

தேயிலை ஏற்றுமதியாளர்கள் சபையின் அறிக்கையின் படி, தேயிலை ஏற்றுமதிகள், இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் 192.62 மில்லியன் கிலோ கிராம் ஆக வீழ்ச்சிகண்டுள்ளது. இது கடந்த வருடத்தின் அதே காலப்பகுதியில் 211.11 மில்லியன் கிலோ கிராம் ஆக இருந்தது.

தோட்டக் கம்பனிகள் ஊதிய வெட்டுக்கள் மற்றும் வேகப்படுத்துதல் ஊடாக உற்பத்தி செலவுகளைக் குறைப்பது உட்பட, உற்பத்திதிறனை அதிகப்படுத்தல் போன்ற சுரண்டலின் தீவிரப்படுத்தப்பட்ட முறைகளை அமுல்படுத்துவதன் மூலம் இதை நிலைநிறுத்த முயற்சிக்கின்றது.

இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு வருமான-பங்கீட்டு முறையை அமுல்படுத்துவது அவசியம் என கம்பனிகள் வலியுறுத்துகின்றன. இந்த முறையின் கீழ், ஒரு தொழிலாளிக்கு சுமார் 1000 தேயிலை கன்றுகள் என்ற அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும். குடும்ப அங்கத்தவர்களின் உதவியுடன் தேயிலை செடிகளின் பாதுகாப்பு தொழிலாளியின் பொறுப்பு ஆகும். கம்பனி உள்ளீடுகளை வழங்கி, அறுவடையை பெற்று, அதன் செலவுகள் மற்றும் இலாபங்களைக் கழித்து ஒரு குறித்த தொகையை தொழிலாளி ஒவ்வொருவருக்கும் வழங்கும்.

பல வருடங்களுக்கு முன்னர் முன்மொழியப்பட்ட இந்தப் புதிய சுரண்டல் மோசடிக்கு தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் ஆதரவளித்ததோடு அனைத்து தோட்ட தொழிற்சங்கங்களும் இதற்காக பிரச்சாரம் செய்கின்றன. ஆனால், தொழிலாளர்கள் இதை எதிர்ப்பதோடு சில தோட்ட நிர்வாகங்களை இந்த திட்டத்தை கைவிடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

தொழிலாளர்கள் தமது உரிமைகளை, தோட்டங்களிலோ அல்லது பிற தொழில் இடங்களிலோ தொழிற்சங்கங்கள் ஊடாக வெற்றிபெற முடியாது என்பதே தொடர்ச்சியான அனுபவம் ஆகும். தொழிற்சங்கங்கள் தாம் அடிக்கடி அழைப்புவிடுக்கும் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளை தடுக்கமுடியாவிடில், அவர்கள் வழமையாக வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுப்பது தொழிலாளர்களின் எதிர்ப்பை கரைத்து விடுவதற்காக மட்டுமேயாகும். அவர்கள் கம்பனிகளினதும், அரசாங்கத்தினதும் தொழில்தறை பொலிஸ்கார்களாக தொழில்படுகின்றனர்.

அதனாலே தான் சோசலிச சமத்துவக் கட்சி ஒவ்வொரு வேலைத்தளத்ததிலும், தோட்டம் மற்றும் பாரிய பொருளாதார மையம் போன்றவற்றில் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்துக்காக, தொழிற்சங்களிலிருந்து சுயாதீனமாக தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை அமைப்பதற்காக அழைப்புவிடுக்கிறது.

தோட்ட நடவடிக்கைக் குழு பின்வரும் அத்தியவசியமானதும் உடனடியாகத் தேவைப்படும் கோரிக்கைகளுக்கா போராட வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி முன்மொழிகின்றது.

ஊதிய வெட்டுக்கள் மற்றும் வேலைச்சுமை அதிகரிப்புகள் வேண்டாம்! வருவாய்-பங்கீடு முறை வேண்டாம்!

அனைவருக்கும் ரூபா 75,000 மாதாந்த ஊதியம், முழு ஓய்வூதிய உரிமை, முழு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு!

ஏற்புடைய வீடுகள், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள்!

சோசலிச சமத்துவக் கட்சியால் ஆரம்பிக்கப்பட்ட கிளனுகி மற்றும் ஒல்டன் தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுக்கள் இந்த கோரிக்கைகளுக்காகப் போராடுகின்றன. நாம் ஒவ்வொரு தோட்டத்திலும் இதுபோன்ற நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு தொழிலாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.

கம்பனிகள், இந்த கோரிக்கைகளை வழங்க முடியாது என்றும் தங்களுக்கு இலாபங்களை வழங்க தொழிலாளர்கள் மாடாய் உழைக்க வேண்டும் என்றும் கூறும். இது, தொழிலாளர்களின் நியாயமான மற்றும் நீண்டகாலமாக தேவைப்படும் உரிமைகளை முதலாளித்துவ அமைப்பின் கீழ் வெல்ல முடியாது என்பதை நிரூபிக்கிறது.

தோட்டத் தொழிலாளர்கள், பாரிய தோட்டங்கள், பெரு நிருவனங்கள், வங்கிகளை தொழிலாள வர்க்த்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குதல் உட்பட சோசலிச கொள்கைகளுக்கான பரந்த போராட்டத்தால் மட்டுமே தமது உரிமைகளை பாதுகாக்க முடியும் என சோசலிச சமத்துவக் கட்சி விளக்குகின்றது. அனைத்து வெளிநாட்டு கடன்களும் இரத்து செய்யப்படவேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி, நடவடிக்கை குழுக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அடிப்படையில் ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான இலங்கை தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்காக பிரச்சாரம் செய்து, உழைக்கும் மக்களின் வர்க்க நலன்களுக்காக போராட ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை ஏற்பாடு செய்கிறது. சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதற்கான போராட்டத்திற்கான அடிப்படையை இந்த மாநாடு வழங்குகிறது.

Loading