முன்னோக்கு

உலகம் முழுவதும் இளைஞர்களுக்கு ஓர் அழைப்பு: உக்ரேன் போரை நிறுத்த ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டமைப்போம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

IYSSE (சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்), டிசம்பர் 10 சனிக்கிழமை அன்று, போர் உந்துதலுக்கு எதிரான ஒரு இயக்கத்தைக் கட்டமைக்க ஒரு சர்வதேச இணையவழி கூட்டத்தை நடத்துகிறது. இன்றே பதிவு செய்யுங்கள்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தேசியப் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளின் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு (IYSSE), உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ பினாமி போருக்கும் மூன்றாம் உலகப் போரை நோக்கிய பொறுப்பற்ற விரிவாக்கத்திற்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க கோரி இளைஞர்களின் வெகுஜன உலகளாவிய இயக்கத்தை கட்டமைக்க அழைப்பு விடுக்கின்றது.

பிப்ரவரி 11, 2022 வெள்ளிக்கிழமை, கிழக்கு ருமேனியாவின் கருங்கடல் துறைமுக நகரமான கான்ஸ்டன்டாவிற்கு அருகிலுள்ள மிஹைல் கோகல்னிசியானு விமானத் தளத்தில் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க்கின் வருகையின் போது அமெரிக்க துருப்புக்கள் வரிசையில் நிற்கின்றனர் [AP Photo/Andreea Alexandru]

உலகளாவிய பேரழிவை ஏற்படுத்துவதற்கு முன்னர் போர் நிறுத்தப்பட வேண்டும். போரின் விளைவுகளை பொருட்படுத்தாமல் உலகளாவிய புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரலை பொறுப்பற்ற முறையில் தொடரும் நேட்டோவின் ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கும் ரஷ்யாவின் தன்னலக்குழு முதலாளித்துவ ஆட்சியின் அதிகரித்துவரும் விரக்திக்கும் இடையிலான எதிர்வினைகள் அணுசக்தி மோதலாக அதிகரிக்க அச்சுறுத்துகின்றன.

'நீதி வெற்றிபெறும்' மற்றும் போர் விரைவில் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கை அரசியல் ரீதியாக முடக்கும், ஆபத்தான அவநம்பிக்கைகளாகும். நேட்டோ 'அமைதியை' விரும்பவில்லை. அது போரையே விரும்புகிறது. ரஷ்யாவின் எல்லைகளை நோக்கி பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட நேட்டோ விரிவாக்கத்தின் மூலமும், கியேவில் அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஊழல் ஆட்சியை பாரியளவில் ஆயுதமயமாக்குவதன் மூலமும் மோதலை வேண்டுமென்றே தூண்டிவிட்ட ஏகாதிபத்திய சக்திகள், கிரெம்ளினின் தவறாக கணக்கிடப்பட்ட, அரசியல் ரீதியாக பிற்போக்குத்தனமான உக்ரேனின் பேரழிவுகரமான படையெடுப்பை இறுதிவரை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதில் உறுதியாக உள்ளன.

ரஷ்யா மீது இராணுவ வெற்றி சாத்தியம் என்ற நம்பிக்கையோடு, நேட்டோ ரஷ்ய அரசாங்கத்தின் அனைத்து 'சிவப்பு கோடுகளையும்' மீறுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பெரும்பாலான காலகட்டத்தில், குறிப்பாக 1950 களில் ஹைட்ரஜன் குண்டுகளின் அபிவிருத்திக்குப் பின்னர், அணு ஆயுதங்கள் மனித நாகரிகத்தின் அழிவை அச்சுறுத்துகிறது என்பது உணரப்பட்டு, அணு ஆயுதங்கள் ஒருபோதும் பயன்படுத்தப்படக்கூடாது என்ற அரசியல் முடிவுக்கு வழிவகுத்தது. ஏனெனில் அத்தகைய மோதலில் வெற்றியாளர்கள் யாரும் இருக்க முடியாது. 'பரஸ்பர உறுதி அழிவு' (Mutually Assured Destruction) என்ற சித்தாந்தம் —MAD என்ற சுய விளக்க சுருக்கத்துடன்- ஒரு நடைமுறையிலிருக்கும் இராணுவக் கோட்பாடாக மாறியது.

ஆனால் அணுஆயுதப் போர் என்பது வெல்ல முடியாததும், பைத்தியக்காரர்களால் மட்டுமே தூண்டிவிடப்பட முடியும் என்ற கொள்கை இப்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. அணுஆயுதப் போர் சமூக நிர்மூலமாக்கலை ஏற்படுத்தும் என நம்பக்கூடிய தன்மை இருந்தபோதிலும், MAD என்பது குற்றவியல் பைத்தியக்காரத்தனத்தின் கோட்பாடான 'அதனால் என்ன!' என்பதால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவும் நேட்டோ சக்திகளும் அணு ஆயுதப் போரின் சாத்தியக்கூறுகளால் 'அச்சுறுத்தப்பட மாட்டார்கள்' என்று பகிரங்கமாக அறிவிக்கும்போது, அணுசக்தி பேரழிவின் அபாயத்தால் கூட அவர்களின் கொள்கைகளும் நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்படாது என்பதையே அவர்கள் கருதுகின்றார்கள்.

வரலாற்றின் படிப்பினைகள்

தற்போதைய ஆபத்தின் அளவைப் புரிந்து கொள்ள, கடந்த கால அனுபவங்களை ஆராய வேண்டும். பூகோள அதிகாரம், பெருநிறுவன இலாபங்கள் மற்றும் தனிப்பட்ட செல்வம் ஆகியவற்றைத் அடைவதற்கு ஆளும் வர்க்கம் பயன்படுத்தமுடியாத காட்டுமிராண்டித்தனம் எதுவும் இல்லை.

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாரிய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியுடனும் சர்வதேச வங்கிகள் மற்றும் நிதி மூலதனத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சியுடனும் ஏகாதிபத்தியம் தோன்றியது. ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா ஆகியவை காலனித்துவத்தின் கொடுங்கோன்மைக்கு உட்படுத்தப்பட்டன. சந்தைகள், மூலப்பொருட்கள் மற்றும் உழைப்பைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் பிரதான சக்திகள் ஒரு மேலாதிக்க நிலைக்கு போட்டியிட்டன. இந்த போராட்டத்தின் விளைவு, மனித வரலாற்றில் முன்னோடியில்லாத வகையில், உலகப் போராகவும், வன்முறையாகவும் இருந்தது.

வேர்டன் அகழியில் பிரெஞ்சு சிப்பாய்கள் [Photo]

1914 இல் வெடித்த முதலாம் உலகப் போர், 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றது. ஏகாதிபத்தியம் அகழிப் போர் மற்றும் விஷ வாயு மற்றும் வான்வழி குண்டுவீச்சுகள், நீருக்கடியில் செல்லும் ஏவுகணைகள் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் டாங்கிகள் போன்ற கொலைகார தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் கொடூரங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆனால் அந்த உலகளாவிய மோதலின் கொடூரங்கள், முதல் உலகப் போர் முடிந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னர், 1939 இல் தொடங்கிய இரண்டாம் உலகப் போரின் காட்டுமிராண்டித்தனத்திற்கு ஒரு முன்னோடியாக மட்டுமே இருந்தது. இரண்டாம் உலகப் போர், உத்தியோகபூர்வமானதும், வேண்டுமென்ற செய்யப்பட்ட கொள்கையின் ஒரு விஷயமாக, பொதுமக்களின் பாரிய அழிப்புக்கு சாட்சியாக இருந்தது. யூதப்படுகொலையின் தொழில்மயமாக்கப்பட்ட இனப்படுகொலை மற்றும் பிரதான நகரங்களில் (ஜேர்மனியில் டிரெஸ்டன் மற்றும் ஹம்பேர்க், ஜப்பானில் டோக்கியோ) தீ-குண்டு வீச்சு ஆகியவை இதில் அடங்குவதுடன், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசுவதில் இது உச்சக்கட்டத்தை அடைந்தது. மரணத்தின் அளவு கிட்டத்தட்ட புரிந்துகொள்ளுதலை மீறியது. 6 மில்லியன் யூதர்கள், சோவியத் ஒன்றியத்தின் 27 மில்லியன் குடிமக்கள் மற்றும் 20 மில்லியன் சீனர்கள் உட்பட 85 மில்லியன் மனிதர்கள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜேர்மன் யூதர்கள், நாஜி திடீர்தாக்குதல் துருப்புக்களால் அங்கு எழுதப்பட்ட யூத எதிர்ப்பு கோஷங்களைத் துடைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்

இப்போது, 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கிய மூன்றாவது உலகளாவிய மோதலை நோக்கி ஒரு வெறித்தனமான உந்துதல் உள்ளது. இது பல மில்லியன் அல்ல, நூற்றுக்கணக்கான மில்லியன் மற்றும் பில்லியன் கணக்கான மக்களின் இறப்புகளுக்கு வழிவகுக்கும். போர் 'மனிதகுல அழிவை' ஏற்படுத்தக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒப்புக் கொண்டாலும் கூட, அவர் மோதலின் விரிவாக்கத்தை தொடர்ந்து தீவிரப்படுத்தியுள்ளார்.

ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருடன், ஏகாதிபத்தியம் இன்னும் பெரியதொரு அழிப்புக்கு தயாராகி வருவதாக அறிவித்துள்ளது. அக்டோபர் 2022 இல் வெளியிடப்பட்ட ஆவணங்களில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நோக்கங்களை கோடிட்டுக் காட்டி, உக்ரேனில் மோதல் என்பது சீனாவுடனான மோதலுக்கு ஒரு முன்னோடி என்பதை பைடென் நிர்வாகம் அப்பட்டமாக ஒப்புக் கொண்டுள்ளது.

கடந்த ஆகஸ்டில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்படுவதாக பைடென் அறிவித்தபோது, அது 'நிரந்தர போருக்கு' முடிவு என்று அவர் கூறினார். இப்போது, அமெரிக்கா நிரந்தரமாக வாழ்க்கையை அழித்துவிடக்கூடிய ஒரு போரில் ஈடுபட்டுள்ளது.

ஆளும் வர்க்கம் தனது புவிசார் அரசியல் நலன்களை முன்னெடுக்க கோடிக்கணக்கான உயிர்களை பலி கொடுக்காது என்று நம்பும் எவரும் கடந்த இரண்டரை ஆண்டு கால அனுபவத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். கோவிட்-19 தொற்றுநோய்க்கு விடையிறுக்கும் வகையில், பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழு, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தத் தேவையான மிக அடிப்படையான பொது சுகாதார நடவடிக்கைகளை நிராகரித்தது, ஏனெனில் அவை இலாபத்திற்கு தடையாக இருந்தன. இதன் விளைவாக 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தனர், அவர்களில் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் அமெரிக்காவில் இறந்தனர்.

இந்தப் போரை நடத்தும் ஏகாதிபத்திய அரசாங்கங்கள் கூறும் நியாயங்கள் அனைத்திலும் பொய்கள் மற்றும் நயவஞ்சகத்தனத்தின் துர்நாற்றம் வீசுகிறது.

இந்த மோதலை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அத்தியாயமாகவும், ரஷ்ய படையெடுப்பின் திகதிக்கு முந்தைய நிகழ்வுகளுடன் தொடர்பில்லாததாகவும் ஒரு பரந்த வரலாற்று சூழலுக்கு வெளியிலும் பார்க்கப்பட்டால், உக்ரேனில் போர் வெடிப்பதற்கு வழிவகுத்த காரணங்களையும் நலன்களையும் புரிந்து கொள்ள முடியாது. 'முதலில் சுட்டவர் யார்' என்பதை அடையாளம் காண்பதன் மூலம் போருக்கான பொறுப்பை தீர்மானிக்க முடியாது. தனி நபர்களின் செயல்களின் விளைவாக போரை விளக்கும் முயற்சிகள் இன்னும் அபத்தமானவை. கடந்த மூன்று தசாப்தங்களாக அமெரிக்கா ஈராக்கில் சதாம் ஹுசைன், சேர்பியாவில் ஸ்லோபோடன் மிலோசெவிக், சிரியாவில் பஷர் அல்-அசாத், லிபியாவில் முயம்மர் கடாபி போன்றவர்களுக்கு எதிராக நடத்திய அனைத்து போர்களும் ஒன்று அல்லது மற்றொரு 'அரக்கனுக்கு' எதிரான தார்மீக சிலுவைப் போர்களாக நியாயப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சமீபத்திய 'அரக்கனாக' விளாடிமிர் புட்டின் இருப்பதுடன், மேலும் புவிசார் அரசியல் தேவை எழும்போது புதிய பிசாசுகள் கண்டுபிடிக்கப்படும். சீனாவின் ஜி ஜின்பிங்கை அரக்கத்தனமாக சித்தரிக்கும் நடவடிக்கை ஏற்கனவே நடந்து வருகிறது.

அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் ஏகாதிபத்தியப் போரை நடத்தி வருகின்றன

உக்ரேனில் தற்போதைய மோதலுக்கான காரணம் ஒருபுறம் இருக்கட்டும், எந்தவொரு தனிப்பட்ட அரசியல் தலைவருக்கும் எதிரான பிரச்சாரங்கள், ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்ட போர்களின் மூலங்கள் பற்றி எதையும் விளக்கவில்லை.

அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளால் நடத்தப்படும் பினாமிப் போர், அதன் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சாராம்சத்தில், ஏகாதிபத்திய போராகும். அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரேனில் ஜனநாயகம் பற்றியோ அல்லது பீரங்கித் தீவனமாகப் பயன்படுத்தப்படும் உக்ரேனிய மக்களின் தலைவிதியைப் பற்றியோ சிறிதும் கவலைப்படவில்லை. முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரைப் போலவே, போரின் அடிப்படை நோக்கம் பூகோளத்தை மீண்டும் ஒழுங்கமைப்பதும் அதன் வளங்களை ஏகாதிபத்திய சக்திகளிடையே மறுபங்கீடு செய்வதும் ஆகும்.

நேட்டோவால் உருவாக்கப்பட்ட ஒரு வரைபடம், இராணுவக் கூட்டணியின் 'கிழக்கு பக்கத்தை' காட்டுகிறது

உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ போர் என்பது கடந்த மூன்று தசாப்தங்களாக அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்ட போர்களின் புதிய மற்றும் ஆபத்தான நிலையின் தொடர்ச்சியாகவும் விரிவாக்கமாகவும் உள்ளது. அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால பொருளாதார வீழ்ச்சியை மாற்றியமைக்கவும், பெருகிவரும் உள் பதட்டங்களை அடக்கவும் முயலும் அமெரிக்க ஆளும் வர்க்கம் போரையும் உலக மேலாதிக்கத்தை அடைவதையும் அதன் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வாக கருதுகிறது. அதன் இராணுவவாத வெறியாட்டம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்று வளைவரைபாதை பற்றி, இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக லியோன் ட்ரொட்ஸ்கியின் தீர்க்கதரிசன பகுப்பாய்வை நிரூபித்துக் கொண்டிருக்கிறது:

உலகம் பங்கிடப்பட்டுள்ளதா? அதை மீண்டும் பங்கிட வேண்டும். ஜேர்மனியைப் பொறுத்தவரை இது 'ஐரோப்பாவை ஒழுங்கமைப்பது' என்ற கேள்வியாக இருந்தது. அமெரிக்கா உலகை 'ஒழுங்கமைக்க' வேண்டும். வரலாறு, மனிதகுலத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலை வெடிப்புடன் நேருக்கு நேர் கொண்டு வருகிறது.

1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து, நேட்டோவின் செல்வாக்கு மண்டலத்தில் உக்ரேனை இணைத்துக்கொள்வதை, அந்நாட்டின் பரந்த மூலோபாய வளங்களுக்கு கட்டுப்பாடற்ற அணுகலைப் பெற ரஷ்யாவை உடைக்கும் அதன் நீண்டகால நோக்கங்களின் இன்றியமையாத அங்கமாக அமெரிக்கா கருதுகிறது. யூரேசிய நிலப்பரப்பின் மீது தீர்க்கமான கட்டுப்பாட்டைப் பெற்று, அந்த அடிப்படையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்கத்தை சவால் செய்யும் சீனாவின் திறனை இறுதியில் அழிப்பது என்பது, இணையத்தில் கிடைக்க்கூடிய எண்ணற்ற அமெரிக்க அரசாங்க ஆவணங்கள் மற்றும் ஏகாதிபத்திய சிந்தனைக் குழுமங்களின் மூலோபாய பகுப்பாய்வுகளில் இந்த குற்றவியல் நோக்கங்கள் அப்பட்டமாக கூறப்பட்டுள்ளன.

அமெரிக்காவும் நேட்டோ சக்திகளும் உக்ரேனின் பாரிய இராணுவ ஆயுதமயமாக்கலால் படையெடுப்பைத் தூண்டிவிட்டன, உக்ரேன் அமெரிக்காவின் நிஜமான பாதுகாப்பு பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளதுடன், உத்தியாகபூர்வமற்று நேட்டோவில் உறுப்பினராக உள்ளது. இது ரஷ்யாவின் எல்லைகள் வரை கிழக்கு ஐரோப்பாவிற்குள் நேட்டோ இராணுவக் கூட்டணியின் பல தசாப்த கால விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும்.

ரஷ்யாவைக் கண்டிப்பதில், அமெரிக்காவும் நேட்டோவும் அரசு எல்லைகளின் புனிதத்தன்மை, ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் உக்ரேனின் 'சுய-நிர்ணய உரிமை' பற்றி பல ஆணித்தரமான அறிவிப்புகளை வெளியிடுகின்றன. 1990 களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் யூகோஸ்லாவியாவை துண்டாடியபோது, 1999 இல் சேர்பியாவிற்கு எதிரான போரில் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, அத்தகைய கவலைகள் எதுவும் எழுப்பப்படவில்லை. தனது சொந்த புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்குத் தேவைப்படும் நாடுகளில் தலையிடுகையிலும், குண்டுவீசுகையிலும் மற்றும் படையெடுக்கையிலும் அமெரிக்கா தான் 'சுயநிர்ணய உரிமை' என்ற கோட்பாட்டை உலகில் முதன்மையாக மீறுகிறது.

மார்ச் 21, 2003 வெள்ளிக்கிழமை மாலை அமெரிக்கா தலைமையிலான படைகள் ஈராக்கின் பாக்தாத் மீது கடும் குண்டுவீச்சின் போது ஒரு அரசாங்க கட்டிடம் எரிகிறது [AP Photo/Jerome Delay]

2003 இல், பொய்களின் அடிப்படையில் தொடங்கப்பட்ட ஈராக்கிற்கு எதிரான இரண்டாம் போரை விவரிக்க 'அதிர்ச்சி மற்றும் அச்சுறுத்தல்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க இராணுவம் முன்னோடியாக இருந்தது. அந்தப் போரில் அமெரிக்கா நூறாயிரக்கணக்கான மக்களைக் கொன்றதோடு ஒரு முழு சமூகத்தையும் அழித்தது.

ஆப்கானிஸ்தான் (2001), லிபியா (2011) மற்றும் சிரியா (2011), யூகோஸ்லாவியா மற்றும் ஈராக்கில் உட்பட, அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய போர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பத்து மில்லியன் மக்கள் அகதிகளாகியுள்ளனர். 'பயங்கரவாதத்தின் மீதான போரின்' ஒரு பகுதியாக, 'விரிவுபடுத்தப்பட்ட விசாரணை', 'அபு கிரைப்,' 'ஒரு குற்றம் நடந்த நாட்டிற்கு கைதிகளை ஒப்படைத்தல்', 'நீரில்மூழ்கடித்தல்,' 'குவாண்டனாமோ விரிகுடா', 'ட்ரோன் படுகொலை' மற்றும் 'பயங்கர செவ்வாய்க்கிழமைகள்' போன்ற சொற்கள் உலகளாவிய அகராதிக்குள் நுழைந்தன. ஒரு அமெரிக்க செனட்டராக, வெள்ளை மாளிகையின் தற்போதைய குடியிருப்பாளரான பைடென் இந்தப் போர்கள் அனைத்திற்கும் வாக்களித்தார்.

'ஜனநாயகம்' குறித்த வாஷிங்டனின் மிகுந்த அக்கறை, பாசாங்குத்தனத்திற்கும் வஞ்சகத்தனத்திற்கும் குறைவு இல்லாதது. கியேவில் உள்ள அரசாங்கம் 2014ல் அமெரிக்க ஆதரவுடைய ஆட்சி மாற்ற நடவடிக்கையால் நிறுவப்பட்டதுடன், தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை மிதித்து வரும் உக்ரேனிய தன்னலக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த அரசாங்கம், அசோவ் பட்டாலியன் உட்பட தீவிர வலதுசாரி மற்றும் பாசிச அமைப்புகளுடன் கூட்டணி வைத்துக்கொள்வதுடன் அவற்றை ஊக்குவிக்கிறது. இவை, இரண்டாம் உலகப் போரின் போது வெகுஜன கொலைகாரன் ஸ்டீபன் பண்டேரா மற்றும் உக்ரேனில் உள்ள நாஜி ஒத்துழைப்பாளர்களிடம் அதன் மூலவேர்களை கொண்டுள்ளது.

ஜனவரி 1, 2019, உக்ரேனின் கியேவில் நடந்த ஒரு பேரணியின் போது தீவிர வலதுசாரி கட்சிகளின் ஆதரவாளர்கள் தீப்பந்தங்கள் மற்றும் ஸ்டீபன் பண்டேராவின் உருவப்படம் கொண்ட ஒரு பதாகையை எடுத்துச் செல்கின்றனர். பதாகையில், 'நேரம் வந்துவிட்ட ஒரு கருத்தை எதுவும் தடுக்க முடியாது' என்று எழுதப்பட்டுள்ளது [AP Photo/Efrem Lukatsky]

பைடென் நிர்வாகம் சர்வாதிகாரத்திற்கு எதிராக 'ஜனநாயகத்திற்கான' உலகளாவிய போராட்டத்தைத் தூண்டுவதன் மூலம் வெளிநாடுகளில் அதன் போர்களை நியாயப்படுத்தும் அதே வேளையில், ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு போர் அமெரிக்க ஆளும் வர்க்கத்தால் உள்நாட்டிலேயே நடத்தப்படுகிறது. அமெரிக்காவுக்குள் உள்ள ஜனநாயக அமைப்பு சரிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தற்போதுள்ள அரசியலமைப்பு தசாப்த காலம் நீடிக்காது என்று பைடெனே பகிரங்கமாக எச்சரித்துள்ளார். பாசிசம் அமெரிக்க அரசியலில் தொற்றிக்கொண்டுள்ளது. ஜனவரி 6, 2021 அன்று, ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதில் கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிய ட்ரம்பின் முயற்சி நடைபெற்று இரண்டு ஆண்டுகளே ஆகிறது.

குடியரசுக் கட்சியை ஒரு அரை-பாசிச அமைப்பாக மாற்றுவது, இத்தாலியில் முசோலினியின் அபிமானியான ஜியோர்ஜியா மெலோனி தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து பிரான்சில் மரீன் லு பென்னின் தேசிய பேரணி, பிரேசிலில் உள்ள ஜெய்ர் போல்சனோரோவின் கட்சி வரையிலான தீவிர வலதுசாரிகளின் உலகளாவிய வளர்ச்சியுடன் பிணைந்துள்ளது.

ஜனநாயகத்தின் சிதைவு மற்றும் பாசிசத்தின் மீள் எழுச்சியுடன், இராணுவவாதம் மற்றும் போரின் வெளிப்படையான மகிமைப்படுத்தல் வருகிறது. டிரில்லியன் கணக்கான டாலர்கள் மறுஆயுதமயமாக்கல் திட்டங்களில் கொட்டப்படுகின்றன. ஜேர்மன் ஆளும் வர்க்கம், 20 ஆம் நூற்றாண்டில் உக்ரேனை இரண்டு முறை ஆக்கிரமித்து அதன் மில்லியன் கணக்கான குடிமக்களை கொன்றது. இப்போது உக்ரேன் போரை அதன் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை மும்மடங்காக உயர்த்துவதற்கு ஒரு சாக்காகப் பயன்படுத்திக் கொள்கிறது. அனைத்து ஏகாதிபத்திய நாடுகளிலும், சமூக செலவினங்களிலிருந்து நிதிகள் போரை நடத்துவதற்கு திருப்பி விடப்படுகின்றன.

இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அனைத்து நேட்டோ சக்திகளும் உக்ரேனை ஆயுதங்களால் நிரப்பியுள்ளன. கனேடிய அரசாங்கம், அதன் துணைப் பிரதம மந்திரி கிறிஸ்டியா ஃபிரீலாண்ட் (Chrystia Freeland) உக்ரேனிய தீவிர வலதுசாரிகளுடன் நேரடி குடும்ப உறவுகளைக் கொண்டுள்ளார், உக்ரேன் முறையாக நேட்டோவில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோருவதில் முன்னணியில் உள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான போரை முழுமையாக ஆதரிக்கும் ஆஸ்திரேலியா, சீனாவுடனான எந்தவொரு மோதலிலும் முன்னணியில் இருக்க தயாராகி வருகிறது.

ஆக்கிரமிப்பு மற்றும் சூழ்ச்சி மூலம், ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான தங்கள் மூலோபாய தாக்குதல்களுக்கு உலகம் முழுவதும் உள்ள அரசுகளைப் பயன்படுத்தவும் கீழ்ப்படுத்தவும் முயல்கின்றன. இந்த செயல்பாட்டில், அவர்கள் உலகப் போருக்கான தூண்டுதலாக மாற அச்சுறுத்தும் எண்ணற்ற பிராந்திய மோதல்களைத் தூண்டி, தீப்பற்றவைக்கின்றனர். இந்தியாவை சீனாவிற்கு எதிரான ஒரு முன்னணி எதிரி நாடாக மாற்றுவதற்கான வாஷிங்டனின் உந்துதல், ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் கூறினால், இந்தியா-பாகிஸ்தான் மோதலானது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலாக பிரிக்கமுடியாத வகையில் பின்னிப்பிணைந்துள்ளதுடன் இரண்டுக்கும் புதிய வெடிமருந்துகளை சேர்த்து விடுகிறது.

உக்ரேனில் ரஷ்யாவின் பிற்போக்கு தலையீடு

அமெரிக்க-நேட்டோ பினாமிப் போரின் அப்பட்டமான ஏகாதிபத்திய தன்மை, உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை எந்த வகையிலும் சட்டபூர்வமாக்கவில்லை, இதை IYSSE எதிர்க்கிறது மற்றும் கண்டிக்கிறது. ஆனால் எமது எதிர்ப்பானது தொழிலாள வர்க்க மற்றும் சோசலிச இடது நிலைப்பாட்டிலான எதிர்ப்பே தவிர, ஏகாதிபத்திய சார்பு வலதுசாரிகளினது எதிப்பு அல்ல. நேட்டோ மற்றும் மேற்கத்திய பெருநிறுவன ஊடகங்களால் புனையப்பட்ட பிற்போக்குத்தனமான மற்றும் இழிவான கதைகளுக்கு அடிபணியாமல், படையெடுப்பைக் கண்டிப்பதற்கு, சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் போதுமான காரணங்கள் உள்ளன.

சோவியத் ஒன்றியத்தில் உணவுக்காக காத்திருக்கும் மக்கள், 1991 [Photo]

ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான மோதல், 1917 ஆம் ஆண்டு அக்டோபர் சோசலிசப் புரட்சி ஸ்ராலினித்தால் காட்டிக்கொடுக்கப்பட்டதன் மற்றொரு பேரழிவுகரமான விளைவு ஆகும், இது 1991 இல் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் (சோவியத் ஒன்றியம்) கலைக்கப்பட்டு, முதலாளித்துவத்தின் மறுசீரமைப்பு மற்றும் உருவாக்கத்தால் உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்த ஆட்சி, முன்னர் சோவியத் அரசுக்குச் சொந்தமான சொத்துக்களைத் திருடித் தங்களை வளப்படுத்திக் கொண்ட ஊழல்மிக்க முன்னாள் அதிகாரத்துவத்தின் தன்னலக்குழு ஆட்சி ஆகும். புட்டின் இந்த பிற்போக்கு முதலாளித்துவ மாஃபியாவின் பிரதிநிதியாவர்.

ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை கலைத்த போது, ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் இது ஒரு புதிய செழிப்பானதும் சமாதானமானதுமான காலத்தை கொண்டு வரும் என்று கூறப்பட்டது. அப்படி எதுவும் நடக்கவில்லை. அரச சொத்துக்களைக் கொள்ளையடித்தமை வாழ்க்கைத் தரத்திலும் ஆயுட்காலத்திலும் பாரிய வீழ்ச்சிக்கு வழிவகுத்தது மட்டுமன்றி, ரஷ்யா இப்போது ஏகாதிபத்தியத்தால் சூழப்பட்டுள்ளது. உக்ரேன் மீதான படையெடுப்பு, ரஷ்யாவின் 'பாதுகாப்பு நலன்களுக்காக' —அதாவது ஏகாதிபத்திய சக்திகளின் தேவையற்ற குறுக்கீடுகள் இல்லாமல் நாட்டின் பரந்த வளங்களை கொள்ளையடிக்கும் தன்னலக்குழுக்களின் உரிமைக்காக— அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு அவநம்பிக்கையான, பேரழிவுகரமான மற்றும் தவறாக கணக்கிடப்பட்ட முயற்சியாகும்.

அமெரிக்கா மற்றும் நேட்டோவிடமிருந்து தனது இருப்பிற்கான அச்சுறுத்தலை ரஷ்யா எதிர்கொள்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மற்றும் முதலாளித்துவத்தின் மறுசீரமைப்புமே ரஷ்யாவை ஏகாதிபத்திய பலிபீடத்தில் நிறுத்தியது. ஜாரிச 'புனித ரஷ்யாவின்' பிற்போக்குத்தனமான, மாய தேசியவாதத்தை தூண்டுவதன் மூலம் புட்டின் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள முற்படுகிறார். இந்த முயற்சி வீணான ஒன்றாகும். 1917 இல் தூக்கியெறியப்பட்ட ஜாரிச ரஷ்யாவை அடிப்படையாகக் கொண்ட அரசுகலையும் இராஜதந்திரமும், 2022 இல் வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க முடியாது.

ரஷ்யாவிலிருந்து சுயாதீனமான ஒரு நவீன உக்ரேனின் அடித்தளங்களை அமைத்ததற்காக அக்டோபர் புரட்சியையும் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி தலைமையிலான போல்ஷிவிக் ஆட்சியையும் புட்டின் வெளிப்படையாகவும் மீண்டும் மீண்டும் கண்டனம் செய்தார். ரஷ்ய பேரினவாதியும் சோசலிச விரோதியுமான புட்டின் வெறுப்பது எதையெனில், சோவியத் ஒன்றியம் புரட்சிக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1922 இல் சோசலிச குடியரசுகளின் தன்னார்வ ஒன்றிமாக நிறுவப்பட்டதையாகும். தொழிலாளர்களின் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட சோவியத் ஒன்றியம், ஜாரிச ஆட்சியால் ஒடுக்கப்பட்டிருந்த அனைத்து தேசிய இனங்களின் ஜனநாயக மற்றும் தேசிய உரிமைகளைப் பாதுகாப்பதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தது. சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துவ சீரழிவு, ஸ்ராலினின் அதிகார உயர்வின் ஆளுமையின் கீழேயே இடம்பெற்றது, இது குறிப்பாக சோவியத் ஒன்றியத்திற்குள்ளே தேசிய சிறுபான்மையினரின் நியாயமான ஜனநாயக அபிலாஷைகளை மீறுவதிலும் அடக்குவதிலும் கடுமையான வெளிப்பாட்டைக் கண்டது. தற்போதைய ரஷ்ய அரசாங்கத்தின் தேசிய பேரினவாதம் வரலாற்று ரீதியாக ஜாரிசத்தின் பிற்போக்கு மரபுகளில் மட்டுமல்ல, ஸ்ராலினிசத்திலும் வேரூன்றியுள்ளது.

லியோன் ட்ரொட்ஸ்கி, நான்காம் அகிலத்தின் நிறுவனர் [Photo]

புரட்சிகர மார்க்சிசம் மற்றும் சோசலிச சர்வதேசியத்தின் மரபுகளுக்கு உண்மையாக இருக்கும் IYSSE, 'தேசிய பாதுகாப்பு' என்ற காலாவதியாகிப்போன கருத்தாக்கத்தின் அடிப்படையில் போருக்கான எந்த நியாயப்படுத்தலையும் நிராகரிக்கிறது. 'எமது நிலைப்பாடு ரஷ்யா மற்றும் உக்ரேன் இரண்டிற்கும் பொருந்தும். புட்டின் மற்றும் செலென்ஸ்கியின் போர்க் கொள்கைகளுக்கு எதிராக ரஷ்ய, உக்ரேனிய தொழிலாளர்களின் ஐக்கியத்தை நாங்கள் முன்வைக்கின்றோம். இந்த இரு ஆட்சிகளின் பிற்போக்கு பேரினவாதத்தை எதிர்ப்பதில், ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளுக்கு நாம் கவனத்தை ஈர்க்கிறோம்:

தற்போதைய தேசிய அரசு ஒரு முற்போக்கான காரணியைப் பிரதிநிதித்துவப்படுத்துமேயானால், நிச்சயமாக யார் முதலில் போரை 'தொடங்கினார்' என்பதைப் பொருட்படுத்தாமலும், அதன் அரசியல் வடிவத்தைப் பொருட்படுத்தாமலும் அது பாதுகாக்கப்பட வேண்டும். தேசிய அரசின் வரலாற்று செயல்பாடு குறித்த கேள்வியை, ஒரு குறிப்பிட்ட அரசாங்கத்தின் 'குற்றம்' என்ற கேள்வியுடன் குழப்புவது அபத்தமானது. கவனக்குறைவின் மூலமாகவோ அல்லது உரிமையாளரின் தீய நோக்கத்தின் மூலமாகவோ தீப்பிடித்தது என்பதற்காக, ஒருவர் வசிக்கக்கூடிய வீட்டைக் காப்பாற்ற மறுக்க முடியுமா? ஆனால் இங்கே கொடுக்கப்பட்ட வீடு வாழ்வதற்கு அல்ல, இறப்பதற்கு மட்டுமே பொருத்தமாக இருக்கின்றது என்பதே துல்லியமாக உள்ள விடயமாகும். மக்கள் வாழ்வதற்கு ஏதுவாக, தேசிய அரசின் கட்டமைப்பை அதன் அடித்தளங்களங்கள் வரை தரைமட்டமாக்கப்பட வேண்டும்.

தேசிய பாதுகாப்பை போதிக்கும் ஒரு' சோசலிவாதி' என்பவர், வீழ்ச்சியடைந்து வரும் முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும் ஒரு குட்டி-முதலாளித்துவ பிற்போக்குவாதியாவர். சமாதானமான காலத்தில் தேசிய அரசின் மீது சமரசமற்ற போரை அறிவித்த ஒரு கட்சிக்கு மட்டுமே, போர் காலத்தில் தேசிய அரசுடன் தன்னை பிணைத்துக் கொள்ளாமல், போர் வரைபடத்தை அன்றி வர்க்கப் போராட்டத்தின் வரைபடத்தைப் பின்பற்றுவது சாத்தியமாகும். ஏகாதிபத்திய அரசின் புறநிலையான பிற்போக்கு பாத்திரத்தை முழுமையாக உணர்ந்து கொள்வதன் மூலம் மட்டுமே, பாட்டாளி வர்க்க முன்னணிப் படையினர் அனைத்து வகையான சமூக தேசபக்தியாலும் பாதிக்கப்படாதவர்களாக மாற முடியும். இதன் பொருள், சர்வதேச பாட்டாளி வர்க்க புரட்சியின் நிலைப்பாட்டில் இருந்து மட்டுமே 'தேசிய பாதுகாப்பு' என்ற சித்தாந்தம் மற்றும் கொள்கையுடன் உண்மையாக முறித்துக்கொள்வது சாத்தியமாகும். [போரும் நான்காம் அகிலமும், 1934]

எதிர்காலத்திற்காக இளைஞர்கள் போராட வேண்டும்!

இளைஞர்கள் எதிர்காலத்தின் நம்பிக்கைகளையும் வாக்குறுதிகளையும் உள்ளடக்கி பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். ஆனால் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நோக்கங்களை பொறுப்பற்ற முறையில் பின்பற்றுவதன் மூலம், முதலாளித்துவம் மனிதகுலத்தின் உயிர்வாழ்வையே ஆபத்தில் ஆழ்த்துகிறது. நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட்டில் ஒரு அடிப்படை இருத்தலியல் கேள்வியை முன்வைத்தார்: 'வாழ்வதா அல்லது இல்லையா?' இன்றைய உலகில், இந்தக் கேள்வி ஒரு தத்துவ ஊகமாக எழுப்பப்படவில்லை, மாறாக மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அரசியல் சவாலாக எழுப்பப்படுகிறது. அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தலுக்கு கூடுதலாக, பருவநிலை மாற்றம் மற்றும் எதிர்கால தொற்றுநோய்கள் வரவிருக்கும் தசாப்தங்களில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களின் வாழ்க்கையை அச்சுறுத்துகின்றன. முதலாளித்துவம் உலகை அழிப்பதற்கு முன்னர் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தை ஒழிக்க வேண்டும்.

அணுஆயுத மூன்றாம் உலகப் போரை நோக்கிய அதன் விரிவாக்கத்திற்கும் உக்ரேனில் போருக்கு எதிராகவும் ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாக சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பின்வரும் மூலோபாயக் கோட்பாடுகளை முன்வைக்கின்றனர்

ஆளும் வர்க்கத்திற்கும் அதன் அரசாங்கங்களுக்கும் விடுக்கப்படும் முறையீடுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் அல்லாது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அணிதிரட்டலின் மூலமே போரை நிறுத்தமுடியும். சுரண்டப்படுவதன் மூலம் அனைத்து இலாபங்களுக்கும் மூலஆதாரமாக உள்ள தொழிலாள வர்க்கமே, உலக மக்களில் பெரும்பான்மையானதாக இருக்கின்றது. அதற்கு போரில் ஆர்வம் இல்லை. தொழிலாளர்கள், குறிப்பாக இளம் தொழிலாளர்கள் ஒரு புதிய உலகப் போரில் பீரங்கி தீவனமாக பயன்படுத்தப்படுவர்.

இந்த போர் ஏற்கனவே உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தில் பாரிய சரிவை உருவாக்கியுள்ளது. இது, உயரும் பணவீக்கத்திற்கு காரணமாக இருக்கின்றது. இதனால் தொழிலாளர்கள் அடிப்படை தேவைகளுக்கு பணம் செலுத்த முடியாமல் போகிறது. வாழ்க்கைத் தரங்களின் சரிவால் உருவாக்கப்பட்ட நெருக்கடியானது, அமெரிக்கா, ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய எழுச்சிக்கு வழிவகுத்துள்ளது.

அது ஒவ்வொரு ஆண்டும் டிரில்லியன் கணக்கான டாலர்களை போர்க் கருவிகளுக்காகச் செலவழிக்கும் அதே வேளையில், பொதுக் கல்வி உட்பட தொழிலாள வர்க்கத்திற்கு முக்கியமான சமூகத் திட்டங்களுக்கு நிதியளிக்கவோ அல்லது கண்ணியமான ஊதியம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்கவோ பணம் இல்லை என்று ஆளும் வர்க்கம் கூறுகிறது. போரின் விரிவாக்கம் தவிர்க்கமுடியாமல் தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளின் வறுமையுடன் இணைந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA), ஜேர்மனியில் பசுமைவாதிகள் மற்றும் இடது கட்சி, கிரேக்கத்தில் சிரிசா மற்றும் ஸ்பெயினில் பொடெமோஸ் வரை அமெரிக்க மற்றும் நேட்டோ ஏகாதிபத்தியங்களின் மிகவும் உறுதியான ஆதரவாளர்களாக பணியாற்றும் அதே வேளையில் தங்களை சோசலிஸ்ட் என மோசடித்தனமாக கூறிக்கொள்ளும் அனைத்து அமைப்புகளையும் IYSSE கண்டிக்கிறது.

'உக்ரேனிய இறையாண்மையை' பாதுகாப்பது என்ற பிழையான மற்றும் பிற்போக்கு பதாகையின் கீழ், இந்தக் குழுக்கள் அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகளை விமர்சிக்கின்றன. அதாவது உக்ரேனை ஆயுதமயப்படுத்தியதற்காகவோ ரஷ்யாவிற்கு எதிராக ஒரு பினாமி போரை நடத்துவதற்காகவோ அன்றி, போதுமான ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என்பதற்காகவே அவை விமர்சிக்கின்றன. பல தசாப்தங்களாக, போலி-இடதுகளின் அமைப்புகள் இன மற்றும் பாலினப் பிரிவினையின் அரசியலை, குறிப்பாக வளாகங்களில், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கு ஊக்குவித்துள்ளன. அதே நேரத்தில் அவர்கள் தங்கள் பதவிகளை பாதுகாக்கும் போராட்டத்தில் உயர்-நடுத்தர வர்க்க சமூக அடுக்குகளின் சார்பாக பேசுகிறார்கள். இப்போது அவர்கள் தங்களை ஏகாதிபத்தியத்தின் வெளிப்படையான ஆதரவாளர்களாக அம்பலப்படுத்திக் கொள்கின்றார்கள்.

“தொழிலாளர் இயக்கம்' என்று அழைக்கப்படும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களைப் பொறுத்தவரை, ஆயிரக்கணக்கான உயர்-நடுத்தர வர்க்கச் செயல்பாட்டாளர்கள் அதற்காக பணிபுரிவதுடன், போருக்கான அவர்களின் ஆதரவு, தொழிலாள வர்க்கத்தின் மீதான அவர்களின் விரோதப் போக்கினதும் மற்றும் பெருநிறுவன நிர்வாகத்தின் கருவிகளாக அவர்களின் பங்கினதும் மறுபக்கமாகும்.

இரண்டு அடிப்படைக் காரணங்களுக்காக 'தேசிய பாதுகாப்பு' என்ற பிற்போக்குத்தனமான திட்டத்தை IYSSE நிராகரிக்கிறது.

முதலாவதாக, தேசிய அரசு என்பது, ஒருங்கிணைந்ததும் ஒன்றையொன்று சார்ந்தும் உள்ள உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பொருந்தாத காலத்திற்கு ஒவ்வாத ஒன்றாகும். இது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும், அனைத்து மனிதகுலத்திற்குமான அமைதியான பிரயோசனமான அவற்றின் உற்பத்தி பயன்பாட்டிற்கும் தடையாக உள்ளது.

இரண்டாவதாக, அனைத்து தேசிய அரசுகளும் வர்க்க மோதலால் சிதைக்கப்படுகின்றன மற்றும் அனைத்து அதிகாரமும் அரசாங்கங்களைக் கட்டுப்படுத்தும் முதலாளித்துவ உயரடுக்கின் கைகளில் உள்ளன மற்றும் அவர்களின் பொருளாதார நலன்களை முன்னேற்றுவதற்கு அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது என்பதை மறுப்பதை அடிப்படையாகக் கொண்டதே 'தேசிய ஒற்றுமை'க்கான வேண்டுகோள்கள் ஆகும். ஏகாதிபத்திய அரசுகளால் பின்பற்றப்படும் உலகின் வளங்களைக் கட்டுப்படுத்துவதற்கான இடைவிடாத மற்றும் வன்முறையுடன் உந்தப்படும் வெளியுறவுக் கொள்கை 'தங்கள் சொந்த' நாடுகளில் உள்ள முதலாளிகளின் இலாபங்கள் மற்றும் செல்வத்திற்கான உந்துதலின் உலகளாவிய அளவிலான விரிவாக்கமாகும்.

'தேசிய நலன்' மற்றும் பிற பாசாங்குத்தனமான கோஷங்களின் ('ஜனநாயகம்' மற்றும் 'மனித உரிமைகள்') பதாகையின் கீழ் நடத்தப்படும் தேசிய பேரினவாதத்திற்கும் போர்களுக்குமான தொழிலாள வர்க்க எதிர்ப்பு வெறுமனே தார்மீகக் கருத்தாய்வுகளை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக, உழைக்கும் மக்களின் வெகுஜனங்கள் ஒரு சர்வதேச வர்க்கத்தை உருவாக்கியுள்ளதுடன், அதன் பொது நலன்கள் தேசிய அரசுகளை மீறுகின்றன. மிக ஆழமான வரலாற்று மற்றும் பொருளாதார அர்த்தத்தில், தொழிலாள வர்க்கத்திற்கு தாய் நாடு என்பது இல்லை.

ஜூலை 9, 2022, சனிக்கிழமை, இலங்கை, கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் செல்லும் தெருவில் எதிர்ப்பாளர்கள் கூடுகிறார்கள். (AP Photo/Amitha Thennakoon) [AP Photo/Amitha Thennakoon]

உற்பத்தியின் பூகோளமயமாக்கல் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. இதில் ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் உள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் புதிய தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், இளைஞர்கள் உட்பட பரந்த மக்கள் பிரிவுகளும் முக்கிய முதலாளித்துவ நாடுகளில் பாட்டாளி வர்க்கமாக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், கடந்த மூன்று தசாப்தங்களாக தொலைத்தொடர்புகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண முன்னேற்றங்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தேசிய எல்லைகளைக் கடந்து ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளவும், ஒரு பொதுவான வேலைத்திட்டம் மற்றும் பொதுவான செயல்திட்டத்தின் அடிப்படையில் தங்கள் போராட்டங்களை ஒழுங்கமைக்கவும் அனுமதித்துள்ளது.

இந்த உலகளாவிய யதார்த்தத்தை அங்கீகரிக்கும் வகையில், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்களும் மாணவர்களும் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பி முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கான ஒரு இயக்கத்தை உருவாக்குவதற்கான ஒரு பொதுவான போராட்டத்தில் உலகெங்கிலும் உள்ள இளைஞர்களையும் மாணவர்களையும் ஒன்றிணைக்க போராடுகிறார்கள்.

போர் வேண்டாம்! சமூக சமத்துவத்திற்காக சர்வதேச இளைஞர், மாணவர் அமைப்பை கட்டியெழுப்புவோம்!

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பின்னர், ஆளும் வர்க்கத்தின் கருத்தியலாளர்கள் அதனை 'வரலாற்றின் முடிவு' என்று பிரகடனப்படுத்தினர். இந்த கோஷத்தின் பொருள் என்னவென்றால், பனிப்போரில் ஏகாதிபத்தியத்தின் 'வெற்றி' என்று கூறப்படுவது முதலாளித்துவத்திற்கு மாற்றாக வேறெதுவும் இருக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளது என்பதாகும். தேசிய அரசு அமைப்பு, உற்பத்தி வழிமுறைகளின் தனியார் உரிமை, இலாப அமைப்பு மற்றும் முதலாளித்துவ ஜனநாயகம் ஆகியவை சமூக வளர்ச்சியின் மிக உயர்ந்த மற்றும் இறுதிக் கட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இந்த 'வரலாற்றின் முடிவு' ஆய்வறிக்கை என்பது டான்டே (Dante) இன் நரகத்தைப் பற்றிய திகிலூட்டும் பார்வையின் முதலாளித்துவ மொழிபெயர்ப்பாகும்: 'இங்கே நுழைபவர்களே, எல்லா நம்பிக்கையையும் கைவிடுங்கள்.' மனிதகுலம் அதில் இருந்து தப்பிக்க முடியாத ஒரு முதலாளித்துவ அழிவிடத்தில் சிக்கியுள்ளது. சமூக சமத்துவமின்மை, வறுமை, சுரண்டல் மற்றும் கலாச்சாரத்தின் நிரந்தர மதிப்பிழப்பு ஆகியவை மனிதகுலத்தின் மீது விதிக்கப்பட்ட தலைவிதியாகும்.

ஊடகங்களால் தழுவி, விரிவுபடுத்தப்பட்டு எண்ணற்ற கல்வியாளர்களால் பிரசங்கிக்கப்பட்ட 'வரலாற்றின் முடிவு' என்ற கதையானது ஊக்கமின்மை, மனச்சோர்வு மற்றும் அரசியல் அக்கறையின்மை ஆகியவற்றை விதைப்பதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் அது ஒரு தவறான கதை. வரலாறு ஒரு பழிவாங்கலுடன் திரும்பியுள்ளது. முதலாளித்துவத்தின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக அடித்தளங்கள் தகர்ந்து வருகின்றன. வரலாற்றின் முன்னேற்றத்தின் பெரும் உந்து சக்தியான வர்க்கப் போராட்டம் சமூகக் கட்டுப்பாட்டின் அனைத்து நிறுவன வழிமுறைகளையும் உடைத்து வருகிறது.

போரின் வளர்ச்சி இளைஞர்களுக்கும் மனிதகுலம் அனைத்திற்கும் பெரும் ஆபத்துக்களை முன்வைக்கும் அதே வேளையில், IYSSE அதன் வேலைத்திட்டத்தை விரக்தியில் அல்ல, எதிர்காலத்தை எதிர்த்துப் போராடி வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

அவநம்பிக்கையாளர்களின் தலைவிதிவாதம், முதலாளித்துவ உலக ஒழுங்கிற்குள் சாத்தியமான எல்லைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது. எமது நம்பிக்கையானது போர், சர்வாதிகாரம், காலநிலை மாற்றம் மற்றும் சமூக பிற்போக்குத்தனத்தை உருவாக்கும் அதே முதலாளித்துவ நெருக்கடியே சர்வதேச தொழிலாள வர்க்க போராட்டத்தின் வளர்ச்சியையும் உருவாக்குகிறது என்ற புரிதலில் இருந்து எழுகிறது.

சமத்துவமின்மை மற்றும் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களுக்கு நாம் திரும்ப வேண்டும். முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து, மனிதகுலத்திற்கு முன்னோக்கி செல்லும் வழியை உருவாக்கும் வல்லமை வாய்ந்த மாபெரும் சக்தி அவர்களேயாவர். IYSSE போருக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களின் ஆதரவை மட்டும் நாடவில்லை. உலக முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி மற்றும் தீர்க்கமான புரட்சிகர சக்தியாக சோசலிச வேலைத்திட்டத்துடன் ஆயுதம் ஏந்திய தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியிலேயே ஏகாதிபத்தியத்தின் தோல்வி தங்கியிருக்கிறது என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

உலக வரலாற்றில் தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெரிய தலையீடான ரஷ்யப் புரட்சி, முதலாம் உலகப் போரின் வெகுஜன படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போலவே, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலையீடுதான் இன்று மூன்றாம் உலகப் போரை நோக்கிய விரிவாக்கத்தையும் நிறுத்தும்.

1917 ரஷ்யப் புரட்சியின் போது லெனின் கூட்டத்தில் உரையாற்றுகிறார்

IYSSE இன் முன்னோக்கு, சோசலிச இயக்கத்தின் - குறிப்பாக நான்காம் அகிலத்தின் வரலாறு, ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தில் மார்க்சிசத்தின் தொடர்ச்சியைப் பாதுகாத்த ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. மார்க்சிசம் மீதான ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்களாலும், அனைத்து வகையான பிற்போக்கு சித்தாந்தங்களையும், வரலாற்றுப் பொய்மைகளையும் ஊக்குவிப்பதாலும் இளைஞர்கள் இந்த வரலாற்றிலிருந்தும் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் முழு வரலாற்றிலிருந்தும் பெருமளவில் துண்டிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் மத்தியில் அதன் பணியில், IYSSE, குறிப்பாக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பங்கை மறுத்து சோசலிசத்திற்கான அரசியல் போராட்டத்தை எதிர்க்கும் பிற்போக்குத்தனமான பிராங்ஃபேர்ட் பள்ளி மற்றும் பின்நவீனத்துவத்தின் இரட்டிப்பான பிற்போக்குத்தனமான பகுத்தறிவுவாதத்துடன் தொடர்புடைய அனைத்து விதமான மார்க்சிச-எதிர்ப்பு தத்துவங்களையும் எதிர்க்கிறது.

மேலும், IYSSE விஞ்ஞானத்தையும், கல்வித்துறையையும் ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கு அடிபணிய வைக்கும் முயற்சிகளை அம்பலப்படுத்துகிறது. வரலாற்று உண்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளதுடன், மேலும் பாசிசம் மற்றும் போருக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பை நசுக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் எதிர்க்கிறோம்.

போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதை இலக்காகக் கொண்ட, ஒரு பொதுவான போராட்டத்தில் இளைஞர்களை ஒன்றிணைக்கும் ஒரு இயக்கத்தை IYSSE ஆரம்பிக்க முனைகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நாம் ஒன்றை தெரிவிக்கிறோம்: எமக்கு எதிர்காலம் வேண்டுமானால், அதற்காக நாமே போராட வேண்டும்! ஆளும் வர்க்கங்கள் முழு உலகையும் அணு நரகமாக மாற்ற சதி செய்யும் போது நாம் ஒதுங்கி நிற்க முடியாது!

இந்த பிரச்சாரம், டிசம்பர் 10 ஆம் தேதி இடம்பெறும் உலகளாவிய இணையவழி கருத்தரங்கம் மூலம் தொடங்கப்படும். 'உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ பினாமிப் போரை நிறுத்து' என்ற தலைப்பில், இந்திய, இலங்கை நேரம் இரவு 11:30 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்த கருத்தரங்கம் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் ஒருங்கிணைந்த தொடர் கூட்டங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைக்கப்படும். இந்த நிகழ்வு போரின் வரலாற்று தோற்றத்தை விளக்குவதுடன், அதன் விரிவாக்கத்தை உந்துகின்ற உண்மையான அரசியல் மற்றும் பொருளாதார நலன்களையும் அம்பலப்படுத்தும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த கருத்தரங்கம் ஒரு புரட்சிகர மூலோபாயத்தை முன்வைத்து, போரை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கும்.

இதில் பங்கேற்க விரும்பும் அனைவரையும் இணையவழியில் பதிவு செய்து IYSSE ஐ தொடர்பு கொள்ளுமாறு அழைக்கிறோம்.

சமூக சமத்துவத்திற்காக சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் இணையுங்கள்! அணுசக்தி போரை நோக்கிய பொறுப்பற்ற உந்துதலை நிறுத்துங்கள்! வறுமை, சுரண்டல், போர் மற்றும் அனைத்து வகையான ஒடுக்குமுறைகளும் இல்லாத ஒரு சோசலிச எதிர்காலத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்போம்!

மேலதிக தகவலுக்கும் IYSSE இல் இணையவும், wsws.org/iysse இனை பார்வையிடவும்.

Loading