சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டிற்கான அறிக்கை

ஏகாதிபத்திய போருக்கும் புட்டினின் ஆட்சிக்கும் எதிரான சோசலிச எதிர்ப்பின் வரலாற்று, அரசியல் கோட்பாடுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

'ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்!' என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டுக்கு கிளாரா வைஸ் அளித்த அறிக்கை.

மாநாடு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிய முழு அறிக்கையையும் இங்கேபடிக்கலாம்.

அனைத்து முக்கிய முன்னேற்றங்கள் மற்றும் கட்சியின் நடைமுறை பற்றிய அரசியல் மதிப்பீட்டை எமது இயக்கம் அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுத் தொடர்ச்சிக்கு இந்த காங்கிரஸ் மைய முக்கியத்துவம் அளித்துள்ளது. ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்திற்கு இந்த அணுகுமுறை மிகவும் முக்கியமானது.

இந்த வரைவுத் தீர்மானத்தில் நாம் குறிப்பிடுவது போல், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்தியப் போர், உலகின் ஒரு புதிய ஏகாதிபத்திய மறு-பங்கீட்டின் தொடக்க கட்டத்தைக் குறிக்கிறது. இந்த வார்த்தையின் மிக ஆழமான அர்த்தத்தில், இந்தப் போர் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டின் விளைவாகும். இந்த ஏகாதிபத்திய போருக்கும் முதலாளித்துவ புட்டின் ஆட்சிக்கும் எதிரான நமது எதிர்ப்பு, முழு 20 ஆம் நூற்றாண்டினதும், ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் போராட்டத்தின் வரலாற்று விளக்கத்திலும் வேரூன்றியுள்ளது.

போரின் தொடக்கத்திலிருந்தே, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான அதன் எதிர்ப்பு சோசலிச இடதிடமிருந்து வந்ததே தவிர, ஏகாதிபத்திய வலதில் இருந்து அல்ல என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. ஆக்கிரமிப்பிற்கு தொடங்கி சில மணிநேரங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ICFI பின்வருமாறு வலியுறுத்தியது: '1917 அக்டோபர் புரட்சிக்கு உத்வேகம் அளித்து சோவியத் ஒன்றியத்தை தொழிலாளர் அரசாக உருவாக்க வழிவகுத்த சோசலிச சர்வதேசியவாதத்தின் மறுமலர்ச்சி, ரஷ்யாவிலும் உலகம் முழுவதிலும் தேவை.' [1]

போருக்கான இந்த புரட்சிகர சர்வதேசியவாத எதிர்ப்பு நிலைப்பாட்டில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) முற்றிலும் தனியாக நிற்கிறது.

ICFI இன் போருக்கு எதிரான எதிப்பும் தேசியவாத மற்றும் போர்-ஆதரவு குட்டி முதலாளித்துவ சக்திகளும்

சர்வதேச அளவில் முன்னாள் பப்லோவாதிகள் மற்றும் அரச முதலாளிகளின் பெரும் பகுதியினர் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளுக்கும் மற்றும் உக்ரேனிய தன்னலக்குழுவிலும், தீவிர வலதுசாரிகளிலும் உள்ள அவர்களின் பினாமிகளுக்கு முற்றிலும் பின்னால் அணிவகுத்துள்ளனர். 'ரஷ்ய ஏகாதிபத்தியத்தை' எதிர்த்துப் போராடும் மோசடிப் பதாகையின் கீழ், சர்வதேச சோசலிஸ்ட் லீக் (International Socialist League) மற்றும் உக்ரேனில் உள்ள சோட்சியல்னி ருக் (Sotsialnyi Rukh) போன்ற சக்திகள் தங்கள் உறுப்பினர்களை அமெரிக்க ஆயுதம் ஏந்திய துணை இராணுவப் படைகளுக்கு அனுப்புகின்றன.

உக்ரேனின் சர்வதேச சோசலிஸ்ட் லீக், உக்ரேனிய தேசியவாதிகளின் இனப்படுகொலை குற்றங்களை மறுத்து, அவர்களின் அமைப்பின் பாரம்பரியத்தில் வெளிப்படையாக தன்னை இணைத்துக் கொள்கிறது. இந்த இரண்டு போக்குகளும் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகளுடனும் (DSA) பேர்னி சாண்டர்ஸுடனும் உறவுகளைப் பேணுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தப் போரைத் தூண்டுவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்ததும் இப்போது உக்ரேனில் உள்ள பாசிசவாதிகளுக்கு ஆயுதம் வழங்கும் அதே ஜனநாயகக் கட்சியுடன் அவர்கள் நேரடி உறவுகளைப் பேணுகின்றனர்.

வெர்னிக்கின் சர்வதேச சோசலிஸ்ட் லீக்கின் உறுப்பினர், துணை இராணுவப் பிராந்திய பாதுகாப்புப் படைகளின் UVO பிரிவில் சேர்ந்தார். ISLவலைத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது

சர்வதேச போலி-இடதுகளின் மற்றொரு பிரிவு இந்தப் போரின் மறுபக்கத்தில் புட்டினின் ஆட்சியுடன் முழுமையாக அணிவகுத்து நிற்கிறது. இந்த அணிகளில் டாரியா மிட்டினாவின் ரஷ்ய ஸ்ராலினிச ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (OKP), துருக்கி புரட்சிகர தொழிலாளர் கட்சி (DIP) மற்றும் சவாஸ் மிஷேல்-மட்சாஸின் கிரேக்க தொழிலாளர் புரட்சிக் கட்சி (EEK) ஆகியவை அடங்கும். கிரேக்க தொழிலாளர் புரட்சிக் கட்சி 1985-86 இன் பிளவை ஒரு தேசியவாத அடித்தளத்தில் இருந்து அனைத்துலகக் குழுவை எதிர்க்கின்றனர். [2]

இந்த குட்டி முதலாளித்துவ தேசியவாதிகள் அவர்களின் அறிக்கையில், புட்டின் ஆட்சியை 'ஏகாதிபத்திய எதிர்ப்பு' போராட்டத்தின் முன்னோடியாக பாராட்டி, அதற்கு ஆதரவு வழங்கவேண்டும் என்றனர். அவர்களின் துருக்கி தலைவர்களில் ஒருவர் சுட்டிக்காட்டியபடி: 'நாங்கள் புட்டினுக்கு எந்த அரசியல் ஆதரவையும் வழங்கவில்லை, ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நாங்கள் அவருக்கு முழு மற்றும் நிபந்தனையற்ற இராணுவ ஆதரவை எங்கள் சாத்தியக்கூறுகளின் கட்டமைப்பிற்குள் வழங்குகிறோம்.' [3]

சர்வதேச போலி-இடதுகளின் இந்த இரண்டு வெவ்வேறு முகாம்கள் இப்போது உண்மையில் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டாலும், முதலாளித்துவத்தையும் முதலாளித்துவ தேசிய அரசையும் பாதுகாப்பதில் அவை ஒன்றுபட்டுள்ளன. ட்ரொட்ஸ்கி துல்லியமாக 'சிதைந்து வரும் முதலாளித்துவத்திற்கு சேவைசெய்யும் குட்டி-முதலாளித்துவ பிற்போக்குவாதிகள்' என்று அவர்களைத்தான் அழைத்தார். மாறாக, ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியது போல், 'பாட்டாளி வர்க்கத்தின் பணி தேசிய அரசைப் பாதுகாப்பது அல்ல, மாறாக அதனை முழுமையாகவும், இறுதியாகவும் இல்லாதொழிப்பதாகும்.'[4]

இந்த சக்திகளால் பகிர்ந்து கொள்ளப்படும் மற்றொரு பண்பும் உள்ளது. அது திரிபுபடுத்தப்பட்ட வரலாற்றுப் பொய்மைப்படுத்தல்களும், அக்டோபர் புரட்சியை நிராகரித்தலுமாகும். உண்மையில், பாசிசத்தை மகிமைப்படுத்துதலும் அக்டோபர் புரட்சி மீதான தாக்குதல்கள் உட்பட வரலாற்றின் பொய்மைப்படுத்தல், இந்த போரில் விதிவிலக்கான முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இந்த அறிக்கையின் பணியானது, இந்த காங்கிரசில் முன்வைக்கப்பட்ட வரைவுத் தீர்மானத்திற்கும், இந்தப் போருக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சோசலிச எதிர்ப்பிற்கு அடிப்படையாக அமைந்த வரலாற்றுக் கோட்பாடுகளை கோடிட்டுக் காட்டுவதாகும்.

அக்டோபர் புரட்சியும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச போராட்டமும்

ரஷ்யா உக்ரேன் மீது படையெடுப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு நீண்ட உரையில், புட்டின் அக்டோபர் புரட்சியைத் தாக்கி, உக்ரேனை 'உருவாக்கியதற்காக' அதன் தலைவர் விளாடிமிர் லெனினைக் குற்றம் சாட்டினார். புட்டின் கடுமையாக எதிர்த்த நிகழ்வு, உலக வரலாற்றில் மிகவும் முற்போக்கான நிகழ்வான 1917இல் போல்ஷிவிக் தலைமையின் கீழ் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியதாகும்.

அக்டோபர் புரட்சியின் இரண்டாம் ஆண்டு தின விழாவில் லெனினும் ட்ரொட்ஸ்கியும்

அக்டோபர் புரட்சியின் அரசியல் தயாரிப்பு மூன்று முக்கியமான தூண்களைக் கொண்டிருந்தது. முதலாவதாக, தேசிய சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக லெனின் தலைமையில் போல்ஷிவிக்குகளின் பல தசாப்த காலப் போராட்டம்; இரண்டாவதாக, ட்ரொட்ஸ்கி நிரந்தரப் புரட்சி முன்னோக்கினை அபிவிருத்தி செய்தது; மூன்றாவதாக, 1914இல் தொடங்கிய ஏகாதிபத்திய உலகப் போருக்கு எதிரான போராட்டத்தில் ஒரு புதிய மார்க்சிச சர்வதேச அகிலத்தை கட்டமைப்பதற்காக லெனினாலும் ட்ரொட்ஸ்கியாலும் நடத்தப்பட்ட போராட்டம்.

பெப்ரவரி 1917 இல் ரஷ்யாவில் புரட்சி வெடித்தவுடன், லெனின் உருவாக்கிய சொற்றொடரைப் பயன்படுத்தினால், ஏகாதிபத்தியம் 'அதன் பலவீனமான இணைப்பில்' உடைந்தது.

ஏகாதிபத்திய நோக்கங்களுடன் ரஷ்யா போரில் இறங்கியிருந்தாலும், பொருளாதாரத்தில் அது இன்னும் பின்தங்கிய நாடாகவே இருந்தது. ரஷ்யப் பேரரசின் பெரும்பகுதியில் நிலப்பிரபுத்துவ மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கு முந்தைய உறவுகள் கூட நிலவின. தேசியப் பிரச்சினை உட்பட முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் பணிகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. ஜார் எதேச்சதிகாரம் ஒரு பரந்த, பன்னாட்டு அரசுக்கு தலைமை தாங்கியது. தேசிய சிறுபான்மையினரை சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் திட்டமிட்ட அரசு பாகுபாட்டையும், அடக்குமுறையையும் அனுபவித்தனர். அந்த நேரத்தில் உலகின் மிகப்பெரிய யூத மக்கள்தொகை, மில்லியன் கணக்கான உக்ரேனியர்கள், அத்துடன் போலந்து, பின்லாந்து மக்கள் மற்றும் ஒரு பெரியளவிலான முஸ்லீம் மக்களும் இதில் அடங்குவர்.

எவ்வாறாயினும், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் விரைவான தொழில்மயமாக்கல் ஒரு தொழிலாள வர்க்கத்தை உருவாக்கியது. அது எண்ணிக்கை ரீதியாக இன்னும் சிறியதாக இருக்கும்போதும், அதிக நெருக்கமான மற்றும் அரசியல் ரீதியாக போர்க்குணமிக்கதாக இருந்தது. உலக அளவில் முதலாளித்துவப் பொருளாதாரம் மற்றும் சமூகப் புரட்சியின் வளர்ச்சியின் பகுப்பாய்வில் இருந்து, ட்ரொட்ஸ்கி, ரஷ்யா போன்ற பின்தங்கிய நாட்டில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் பணிகளைத் தீர்க்க தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே முடியும் என்பதை அங்கீகரித்தார். இந்தப் பணிகளை தீர்ப்பதற்கும், அரசு அதிகாரத்தை எடுப்பதற்கும், தொழிலாள வர்க்கம் சோசலிச நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ரஷ்யாவில் புரட்சியின் தலைவிதி உலக அரங்கில் தீர்மானிக்கப்படும் என்ற புரிதல் இந்த முன்னோக்கிற்கு முக்கியமானது. அதன் வெற்றிகளை மற்ற நாடுகளுக்கு, குறிப்பாக மேற்கு ஐரோப்பாவின் மிகவும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுக்கு புரட்சியின் சர்வதேச விரிவாக்கத்தின் மூலம் மட்டுமே அபிவிருத்தி செய்து பாதுகாக்கப்பட முடியும்.

தனது ரஷ்யப் புரட்சியின் வரலாற்றில், ட்ரொட்ஸ்கி தேசிய இனங்களின் பிரச்சனைக்கான நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் தாக்கங்களை சுருக்கமாகக் கூறினார். அவர் எழுதினார்:

இருபதாம் நூற்றாண்டில் அது இல்லாதொழிக்க வேண்டியிருந்த அந்த இரட்டை காட்டுமிராண்டித்தனங்களான அடிமைத்தனம் மற்றும் சேரிகள் போன்றவற்றைத் தவிர மற்றெல்லாவற்றிலும் ஒரு ஐரோப்பிய நாடாகக் கருதப்படும்போது ரஷ்யாவின் வரலாற்றுத் தாமதமான தன்மையை வேறெதுவும் தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆனால் இந்த பணிகளைச் செய்வதில், ரஷ்யா தனது தாமதமான வளர்ச்சியின் காரணமாக, புதிய மற்றும் முற்றிலும் நவீன வர்க்கங்கள், கட்சிகள், வேலைத்திட்டங்களைப் பயன்படுத்தியது. ரஸ்புட்டினின் கருத்துக்களையும் வழிமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவர, அதற்கு மார்க்சின் கருத்துக்களும் வழிமுறைகளும் தேவைப்பட்டன. …விடுதலையையும், கலாச்சார எழுச்சியையும் அடைவதற்காக, ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தங்கள் தலைவிதியை தொழிலாள வர்க்கத்துடன் இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக அவர்கள் தங்களுடைய சொந்த முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவக் கட்சிகளின் தலைமையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் ஒரு நீண்ட பாய்ச்சலை முன்னோக்கி எடுக்க, அதாவது வரலாற்று வளர்ச்சியின் பாதையில் செல்ல வேண்டியிருந்தது. [5]

ரஷ்யப் பேரரசின் தேசிய முதலாளித்துவ வர்க்கங்கள் இந்த ஜனநாயகப் பணிகளைச் செய்ய முற்றிலும் திறனற்றவை என்பதை நிரூபித்தது மட்டுமின்றி, சோவியத் குடியரசிற்கு எதிரான உள்நாட்டுப் போரில் ஏகாதிபத்திய தலையீட்டிற்கான வாகனமாகவும் இருந்தன. உக்ரேனைப் போலவே, இந்த இயக்கவியல் எந்த ஒரு தெளிவான மற்றும் வன்முறையான தன்மையை எடுக்கவில்லை.

இந்த விலைபோகும் உக்ரேனிய முதலாளித்துவம், இனவெறியுடனும் தேசியவாதத்துடனும் கொதித்தெழுந்து, ஜேர்மன் ஏகாதிபத்தியம் அந்த முழு பிராந்தியத்தையும் காலனித்துவ சுரண்டலுக்கு அடிபணிய வைக்கும் முயற்சிகளுக்கான முக்கிய கையாளாக ஆனது. 1918 ஆம் ஆண்டில், ஜேர்மனி கியேவில் ஒரு சதியை நடத்தி, சோவியத் அதிகாரத்தையும் முன்னாள் ரஷ்ய சாம்ராஜ்யத்தையும் அகற்றுவதற்கான ஒரு ஏவுதளமாக உக்ரேனை மாற்ற முயன்றது. அந்த ஆண்டின் பிற்பகுதியில், நவம்பர் 1918 இல், ஜேர்மனியில் புரட்சி வெடித்ததால்தான், கிழக்கு ஐரோப்பாவிலிருந்து ஜேர்மன் இராணுவம் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

1918 இல் கியேவில் ஜேர்மன் துருப்புக்கள் (Public domain)

சைமன் பெட்லியூரா (Symon Petliura) தலைமையிலான உக்ரேனிய முதலாளித்துவத்தின் மற்றொரு கன்னை, 1920 இல் சோவியத் உக்ரேன் மீதான அதன் படையெடுப்பில் போலந்து முதலாளித்துவத்துடன் ஒத்துழைத்து, உள்நாட்டுப் போரின் மிகவும் வன்முறையான யூத-எதிர்ப்பு இனப்படுகொலைகளை நடாத்தியதற்காக நன்கு அறியப்பட்டது. பெட்லியூராவின் இராணுவத்தின் படையினர்கள் பின்னர் உக்ரேனிய தேசியவாதிகளின் பாசிச அமைப்பை உருவாக்கினர்.

குறிப்பாக உக்ரேனில் சோவியத் அதிகாரத்தை ஸ்தாபித்தல், தேசியப் பிரச்சினையில் போல்ஷிவிக்குகளின் சரியான கொள்கையை விமர்சன ரீதியாக சார்ந்திருந்தது. அதன் 1919 வேலைத்திட்டத்தில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி தேசியப் பிரச்சினையில் அதன் அரசியல் கொள்கைகளை சுருக்கமாகக் கூறியது:

  1. நிலச்சுவான்தார்களையும் முதலாளித்துவ வர்க்கத்தையும் தூக்கியெறிய ஒரு கூட்டுப் புரட்சிகரப் போராட்டத்தை முன்னெடுப்பதில் பல்வேறு தேசிய இனங்களின் பாட்டாளிகள் மற்றும் அரைப் பாட்டாளி வர்க்கங்களை ஒன்றிணைப்பதே எங்கள் கொள்கையின் மூலக்கல்லாகும்.
  2. ஒடுக்கப்பட்ட நாடுகளின் உழைக்கும் மக்கள் அந்த நாடுகளை ஒடுக்கும் அரசுகளின் பாட்டாளி வர்க்கத்தின் மீது கொண்டுள்ள அவநம்பிக்கையை போக்க வேண்டும். இதைச் செய்ய, எந்தவொரு தேசியக் குழுவும் அனுபவிக்கும் ஒவ்வொரு சலுகையையும் இரத்து செய்வது அவசியம். அனைத்து தேசிய இனங்களுக்கும் முழுமையான சம உரிமைகள் நிறுவப்பட வேண்டும். மேலும் காலனிகள் மற்றும் சார்ந்திருக்கும் நாடுகளின் பிரிந்து செல்லும் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  3. இந்த நோக்கத்திற்காக, முழுமையான ஒற்றுமைக்கான பாதையில் ஒரு இடைக்கால வடிவங்களில் ஒன்றாக சோவியத் வழிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட அரசுகளின் கூட்டமைப்பை கட்சி முன்மொழிகிறது. … [6]

1922 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அக்டோபர் புரட்சியின் வெற்றிகள் முன்னாள் ரஷ்யப் பேரரசின் பெரும் பகுதிகளுக்கு விரிவாக்கப்பட்டது.

ஏகாதிபத்திய ஆதரவு எதிர்ப்புரட்சிப் படைகள் தோற்கடிக்கப்பட்டன. சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் (USSR) டிசம்பர் 30, 1922 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது.

முதலாவதாக உள்நாட்டுப் போரின் போக்காலும், அனைத்திற்கும் மேலாக 1918-1919ல் ஜேர்மன் சமூக ஜனநாயகத்தின் பாரிய காட்டிக்கொடுப்பினால் விளைந்த உலகப் புரட்சியின் தாமதத்தாலும், அதன் மட்டுப்படுத்தல்கள் தீர்மானிக்கப்பட்டன. இந்த சர்வதேச தனிமைப்படுத்தல் வளர்ந்து வரும் தொழிலாளர் அரசு மற்றும் போல்ஷிவிக் கட்சியின் மீது பாரிய சமூக, அரசியல் அழுத்தங்களை உருவாக்கி, மேலும் ஒரு அதிகாரத்துவத்தின் வளர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்கியது.

டிசம்பர் 30, 1922 இல் அமைக்கப்பட்ட சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் எல்லைகள் [Photo: WSWS]

சோவியத் ஒன்றியத்தின் உருவாக்கம், லெனினாலும் ட்ரொட்ஸ்கியாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட சர்வதேசிய, மார்க்சிசப் போக்கிற்கும் ஜோசப் ஸ்ராலினைச் சுற்றியுள்ள தேசியவாதப் பிரிவுக்கும் இடையே அதிகரித்து வரும் கசப்பான மோதலுடன் தொடர்புபட்டிருந்தது ஏன் என்பதை இது விளக்குகிறது. உண்மையில், சோவியத் ஒன்றியத்தின் உருவாக்கம் மற்றும் 'தேசியப் பிரச்சினை' ஆகியவற்றின் மீதுதான் லெனின் தனது 'கடைசிப் போராட்டத்தை' ஸ்ராலினுக்கும் அதிகாரத்துவ எந்திரத்திற்கும் எதிராக ட்ரொட்ஸ்கியுடன் கூட்டாக கிட்டத்தட்ட சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கினார்.

பேரினவாதக் கொடுமைக்காரரான ஸ்ராலினைப் பொறுத்தவரை, சோவியத் கூட்டமைப்பின் 'ஐக்கியம்' என்பது, ஒன்றியத்தின் இன மற்றும் தேசிய சிறுபான்மையினரை கேள்வியின்றி ரஷ்ய சோவியத் குடியரசுக்கும் மத்திய அதிகாரத்துவ கருவிக்கும் அடிபணியச் செய்வதாகும். செப்டம்பர் 22, 1922 இல் லெனினுக்கு எழுதிய கடிதத்தில், ஸ்ராலின் சோவியத் குடியரசுகளான உக்ரேன், காகசஸ் மற்றும் பிற பகுதிகளை மாஸ்கோவில் உள்ள மத்திய அமைப்பிற்கு முழுமையாக பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக அடிபணிய வேண்டுமெனக் கோரினார்.

ஒருவேளை மிகவும் வெளிப்படையான விளக்கத்தில், ஸ்ராலின் பின்வருமாறு எழுதினார்: “எல்லை நாடுகளில் உள்ள இளம் தலைமுறை கம்யூனிஸ்டுகள் [எங்கள்] சுதந்திரத்துடன் விளையாடுவதை ஒரு விளையாட்டாக புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். 'உள்நாட்டுப் போர் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தவர்களிடம் 'தாராளவாதத்தை' காட்ட மாஸ்கோவை கட்டாயப்படுத்தியது. ஆனால் இப்போது இது நிறுத்தப்பட வேண்டும் என ஸ்ராலின் வலியுறுத்தினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஸ்ராலினுக்கு, அந்த நேரத்தில் போல்ஷிவிக்குகளால் கடைப்பிடிக்கப்பட்ட தேசிய சுயநிர்ணயக் கொள்கையானது, போல்ஷிவிசம் மற்றும் சோவியத் அரசுக்கு ஆதரவாக ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு 'விளையாட்டு' ஆகும். [7]

விளாடிமிர் லெனின்

ஸ்ராலினின் எதிர்ப்பிற்கு எதிராக, லெனின் ஒன்றியத்தின் அனைத்து தேசிய இனங்களின் சமத்துவம் மற்றும் சோவியத் உக்ரேன் மற்றும் சோவியத் ஜோர்ஜியா உட்பட அனைத்து தேசிய குடியரசுகளுக்கும் பிரிந்து செல்லும் உரிமையின் கொள்கையை வலியுறுத்தினார். 1919 கட்சி திட்டத்தில் கூறப்பட்ட கொள்கைகளை சோவியத் ஒன்றியத்தின் அரசியலமைப்பு அடிப்படையாக செயல்படுத்த ஸ்ராலின் தயார் செய்திருந்த சோவியத் ஒன்றியத்திற்கான வரைவு அரசியலமைப்பில் பெரிய மாற்றங்களை லெனின் முன்மொழிந்தார். இதன் விளைவாக, அனைத்து தேசிய குடியரசுகளுக்கும் ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லும் உரிமை உட்பட சுயநிர்ணயக் கொள்கை அதில் பொறிக்கப்பட்டது. உலக வரலாற்றில் வேறு எந்தக் கூட்டமைப்பும் அதன் பல்வேறு பகுதிகளுக்கு இவ்வளவு பரந்த உரிமைகளை வழங்கியதில்லை.

ஸ்ராலினும் அவரது நிலைப்பாடுகளை உண்மையில் ஆதரித்த மற்ற முன்னணி போல்ஷிவிக்குகளும் லெனினின் ஆளுமைக்கு அடிபணிந்தாலும், இந்த அரசியல் வேறுபாடுகள் நீங்கவில்லை. அடிப்படையில் வேறுபட்ட சமூக சக்திகளுக்காகப் பேசிய போல்ஷிவிக் கட்சிக்குள் இருந்த போக்குகளின் ஒருங்கிணைப்பின் ஆரம்ப, கூர்மையான பிரதிபலிப்பாக அவை இருந்தன. லெனின் கடுமையாக நோய்வாய்ப்பட்டு படுக்கையாக இருந்த நிலையில், 12 ஆம் தேதி தேசியப் பிரச்சினையில் போல்ஷிவிக் கொள்கைகளைப் பாதுகாப்பதை இடது எதிர்ப்பின் வருங்காலத் தலைவர்களான லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் கிறிஸ்தியான் ராகோவ்ஸ்கி (உக்ரேன் சோவியத் குடியரசின் முன்னாள் தலைவர்) ஆகியோர் ஏப்ரல் 1923 இல் கட்சி காங்கிரஸில் கையிலெடுத்தனர்.

1924 இல் லியோன் ட்ரொட்ஸ்கியுடன் கிறிஸ்தியான் ராகோவ்ஸ்கி (public domain)

இப்போராட்டத்தில் ட்ரொட்ஸ்கி மற்றும் ராகோவ்ஸ்கியின் மையப் பங்கு தற்செயல் நிகழ்வு அல்ல: தேசியப் பிரச்சினை மீதான மோதலில் ஆபத்தில் இருப்பது, பல தசாப்தங்களாக ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தின் மத்தியில் இருந்த தொடரும் இரண்டு பிரச்சினைகளான, தொழிலாள வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களின் சர்வதேச ஐக்கியமும் நிரந்தரப் புரட்சி முன்னோக்குமாகும்.

அக்டோபர் 1923 இல், லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் இடது எதிர்ப்பு உருவாக்கப்பட்டது. அப்போது, போல்ஷிவிக் தலைமையில் சர்வதேசியவாத மார்க்சிஸ்டுகள் சிறுபான்மையினராக மாறிவிட்டனர். எதிர்வரவிருக்கும் ஆண்டுகளில் ஏற்பட்ட மோதல் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் உள்கட்சி ஜனநாயகம் ஆகிய சோவியத் உள்நாட்டுக் கொள்கைகளின் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களையும், அத்துடன் கம்யூனிச அகிலத்தின் மூலோபாயத்தையும், கொள்கைகளையும் உள்ளடக்கியிருந்தது.

தேசியக் கேள்வியில், இடது எதிர்ப்பு அதிகாரத்துவ எந்திரத்திற்கு எதிராக போல்ஷிவிசத்தின் கொள்கைகளை பாதுகாத்தது. அதன் 1927 மேடையில் (1927 Platform), கூட்டு இடது எதிர்ப்பானது 'பெரும்-அதிகார இனவாதத்தின் ஆவியால் நிலைபெற்ற அதிகாரத்துவத்தை' கண்டனம் செய்தது. இந்த நிலைப்பாடு, 'சோவியத் மத்தியமயமாக்கலை தேசியங்களுக்கிடையில் உத்தியோகபூர்வ பதவிகளை ஒதுக்கீடு செய்வதற்கான மோதலின் ஒரு மூலகாரணமாக மாற்றுவதில் வெற்றி பெற்றது.' [8]

தொழிலாள வர்க்கத்தினதும் இளைஞர்களினதும் இடது எதிர்ப்பாளர்களுக்கான ஆதரவு குறிப்பாக சோவியத் உக்ரேனின் தொழில்துறை மையங்களிலும் சோவியத் ஜோர்ஜியாவிலும் வலுவாக இருந்தது. உக்ரேனின் தொழில்துறை கார்கோவ் பகுதியில், இடது எதிர்ப்பானது 1927 இல் ஒவ்வொரு நான்காவது தொழிற்சாலை கட்சி கிளையையும் மற்றும் ஒவ்வொரு மூன்றாவது இளைஞர் கட்சி கிளைகளிலும் பிரதிநிதிகளைக் கொண்டிருந்தது. [9] எவ்வாறாயினும், இந்த புள்ளிவிவரங்கள் எதிர்ப்பாளர்களின் செல்வாக்கின் மிகக் குறைந்த அளவீடு மட்டுமே. புரட்சியில் ட்ரொட்ஸ்கியின் பங்கு பற்றிய ஆழமான வேரூன்றிய மக்கள் நனவைக் குறிக்கும் வகையில், கட்சி உறுப்பினராக இல்லாத ஒரு உக்ரேனிய தொழிலாளி, கியேவ் நகர சபைக்கு மே 1926 இல் கியேவை 'ட்ரொட்ஸ்கியேவ்' என மறுபெயரிடப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார்.

அவர் எழுதினார், 'ட்ரொட்ஸ்கியேவ் என நகரத்தினை பெயரிடுவது உக்ரேனில் கொடூரமான வர்க்கப் போராட்டத்தின் ஆண்டுகளில் தோழர் ட்ரொட்ஸ்கி செய்த மாபெரும் புரட்சிகரப் பணியைச் சொல்லும்[…]” [10]

இடது எதிர்ப்பின் பல முன்னணி அங்கத்தவர்களும் இப்போதைய உக்ரேனில் இருந்து வந்தவர்கள். இதில் ட்ரொட்ஸ்கியும் அடங்குவர், ஆனால் கியேவுக்கு அருகில் பிறந்து 1920களின் பிற்பகுதியில் இடது எதிர்ப்பின் பொதுச் செயலாளராக ஆன பழைய போல்ஷிவிக் போரிஸ் எல்ட்சினும் இதில் அடங்குவர்.

பெரும்பான்மையான இடது எதிர்ப்பாளர்கள் ஸ்ராலினிசத்திற்கு சரணடையாது 1930களில் போராட்டத்தைத் தொடர்ந்தனர் என்பதை வலியுறுத்த வேண்டும். அவர்களின் பெயர்கள் இன்றுவரை ரஷ்யா மற்றும் உலகத் தொழிலாள வர்க்கத்திற்குத் தெரியவில்லை என்றால், அதற்குக் காரணம் ஸ்ராலினிசப் பெரும் பயங்கரம் மற்றும் 1917 புரட்சி மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான மார்க்சிச எதிர்ப்பு பற்றிய வரலாற்று உண்மையை நசுக்குவதற்கான பல தசாப்த கால முயற்சிகளின் நீண்டகால தாக்கம் ஆகும். உண்மையில், 1930களின் சோவியத் ஒன்றியத்தில் எதிர்ப்பாளர்களின் மிக முக்கியமான அரசியல் ஆவணங்கள் பல 2018 வரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதாவது, பெரும் பயங்கரத்தின் உச்சத்திற்கு 80 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட. [11] 1930 களின் சோவியத் ஒன்றியத்தில் மிகவும் கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் சோவியத் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஸ்ராலினிசத்திற்கு எதிராக நனவான, செயலூக்கமான அரசியல் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

1928 இல் விக்டர் எல்ட்சின் (மேல் வலது) ஈகோர் போஸ்னான்ஸ்கி (மத்திய இடது) உட்பட சோவியத் இடது எதிர்ப்பின் நாடுகடத்தப்பட்ட தலைவர்கள். MS Russ 13 (T 1086). ஹாக்டன் நூலகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸ்

இந்த காலகட்டத்தில் சோவியத் எதிர்ப்பாளர்களின் அரசியல் உயிர்பிழைப்புக்கும் வலிமைக்கும் முக்கியமானதாக இருந்தது, 1926-1927 சீனப் புரட்சியின் தோல்வியின் படிப்பினைகளும் 'தனியொரு நாட்டில் சோசலிசம்' என்ற ஸ்ராலினிச வேலைத்திட்டத்தின் எதிர்ப்புரட்சிகர தன்மை பற்றிய தெளிவுபடுத்தலும் ஆகும்.

லெனினுக்குப் பின் மூன்றாம் அகிலம் என்றும் அழைக்கப்படும் கம்யூனிச அகிலத்தின் 1928 வரைவு வேலைத்திட்டத்தைப் பற்றிய ட்ரொட்ஸ்கியின் விமர்சனத்தில் இந்தப் படிப்பினைகள் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இன்றுவரை ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு அடித்தளமாக இருக்கும் இந்த ஆவணத்தில் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

ஏகாதிபத்தியத்தின் சகாப்தமாக இருக்கும் நமது சகாப்தத்தில் அதாவது உலகப் பொருளாதாரமும், உலக அரசியலும் நிதிமூலதனத்தின் மேலாதிக்கத்தின் கீழ் உள்ள நிலையில், எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் முழுமையாகவும், பிரதானமாகவும் தனது சொந்த நாட்டினுள் உள்ள நிலைமைகளின், போக்குகளின் வளர்ச்சிகளில் இருந்து ஆரம்பிப்பதன் மூலம் தனது வேலைத்திட்டத்தை ஸ்தாபிக்க முடியாது. இது சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளுக்குள்ளே அரசு அதிகாரத்தை திறமையாகப் பயன்படுத்தும் ஒரு கட்சிக்கும் கூட முற்றிலும் பொருந்தும். 1914 -ஆகஸ்ட் 4ம் திகதி அனைத்துக் காலங்களுக்குமாக தேசிய வேலைத்திட்டங்களுக்கு சாவுமணி அடிக்கப்பட்டது. பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சி தற்போதைய சகாப்தத்திற்கு, முதலாளித்துவத்தின் அதியுயர்ந்த வளர்ச்சியும், வீழ்ச்சியும் கொண்ட சகாப்தத்தின் தன்மையுடன் தொடர்புடையதான ஒரு சர்வதேசிய வேலைத்திட்டம் என்பது ஒரு பொழுதும் தேசிய வேலைத் திட்டங்களின் ஒட்டுமொத்தமோ அல்லது அவற்றின் பொதுத்தோற்றங்களின் கலவையோ அல்ல. சர்வதேச வேலைத்திட்டம், உலகப் பொருளாதார உலக அரசியல் அமைப்பை முழுமையாகக் கொண்டதாகவும் நிலைமைகளின் போக்குகளின் அவற்றின் அனைத்துத் தொடர்புகளையும் முரண்பாடுகளையும் அதாவது அதன் தனிப் பகுதிகள் பரஸ்பர ரீதியாகப் பகைமையுடன் ஒன்றிலொன்று தங்கியுள்ள நிலைமைகள் பற்றிய ஆய்விலிருந்தே நேரடியாக ஆரம்பிக்க வேண்டும். தற்போதைய சகாப்தத்தில் கடந்த காலத்தைவிட மிக அதிக அளவில் பாட்டாளி வர்க்கத்தின் தேசிய நோக்குநிலை ஒரு உலக நோக்குநிலையிலிருந்தே ஊற்றெடுக்க வேண்டும் மற்றும் ஊற்றெடுக்க முடியுமே தவிர எதிர்மாறாக அல்ல. இங்கேதான் கம்யூனிச சர்வதேசியத்திற்கும் தேசிய சோசலிசத்தின் அனைத்து வகையறாக்களுக்கும் இடையிலான அடிப்படையான பிரதானமான வேறுபாடு இருக்கின்றது.'' [12]

சோவியத் அரசுக்குள்ளும், கட்சியினுள்ளும் அதிகாரத்துவமயமாக்கல் அதிகரித்து வந்த போதிலும், 1920 களில் சோவியத் ஒன்றியத்தின் தேசியங்கள் தொடர்பான கொள்கை லெனினின் முத்திரையை முக்கியமான வகையில் கொண்டிருந்தது. பள்ளிகளில், சோவியத் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தங்கள் தாய்மொழிகளில் அறிவுறுத்தல்களைப் பெற்றனர். யிட்டிஷ் மற்றும் உக்ரேனியன் உட்பட டஜன் கணக்கான மொழிகளில் வெளியீடுகளை அரசு நிதியுதவி செய்தது. அனைத்து தேசிய இனங்களின் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒரு தலைமுறைக்கும் குறைவான காலத்திற்குள் தங்கள் சொந்த மொழிகளில் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டனர். உக்ரேனை 'உருவாக்கியதற்காக' லெனினையும் சோவியத் ஒன்றியத்தையும் கண்டனம் செய்தபோது புட்டின் சிந்தனையில் இருந்தது, இந்த முக்கியமான முற்போக்கான கொள்கைகள்தான்.

ஆனால் 1927 டிசம்பரில் இடது எதிர்ப்பை கட்சியில் இருந்து வெளியேற்றிய பின்னர் மற்றும் 1929 இல் சோவியத் ஒன்றியத்தில் இருந்து ட்ரொட்ஸ்கி வெளியேற்றப்பட்ட பின்னர் இந்தக் கொள்கைகள் கடுமையாக மாறின. 1930 களில் கட்டாய ரஷ்யமயமாக்கல் அரசு கொள்கையாக மாறியது. ஆனால் மிகப் பெரிய அடி பெரும் பயங்கரத்துடன் வந்தது. 1936 மற்றும் 1940 களின் முற்பகுதிக்கு இடையில், அதிகாரத்துவம் போல்ஷிவிக் கட்சியின் தலைமையையும், ஸ்ராலினிசத்திற்கு ஒருபோதும் சரணடையாத ஆயிரக்கணக்கான ட்ரொட்ஸ்கிஸ்டுகளையும், பல தலைமுறை சோசலிச தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளையும் படுகொலை செய்தது. புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் இந்த அரசியல் இனப்படுகொலை 1940 இல் மெக்சிகோவில் லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

லியோன் ட்ரொட்ஸ்கி, மெக்சிகோவின் கொயோகானில் டுவி கமிஷன் விசாரணையின் போது அவரது வழக்கறிஞர் ஆல்பேர்ட் கோல்ட்மனை கலந்தாலோசிக்கிறார். அவரது மனைவி நத்தலியா அவருக்கு இடதுபுறம் இருக்கிறார். [Photo]

பயங்கரவாதம் தேசிய குடியரசுகளில் குறிப்பாக மூர்க்கமான பரிமாணங்களை எடுத்துக் கொண்டது. குறிப்பாக சோவியத் உக்ரேனில் NKVD வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அதிகமான கொலைகளை நடாத்தியது. மேலும், NKVD இன் 'தேசிய நடவடிக்கைகள்' என்று அழைக்கப்படுவதன் ஒரு பகுதியாக, பல்லாயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்களும், பொதுமக்களும் பெரும்பாலும் அவர்களின் குடும்பப்பெயர்கள் ஜேர்மனியர்களின் அல்லது போலந்தினரின் போலிருந்ததால் சுற்றி வளைக்கப்பட்டனர்.

வாடிம் ரோகோவின் தனது விமர்சன ஆய்வில் சுட்டிக் காட்டியது போல், சோவியத் ஒன்றியத்தில் அரசியல் இனப்படுகொலையில், ஜேர்மனி, ஹங்கேரி, போலந்து, ருமேனியா, சீனா, கொரியா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகள் உட்பட, கம்யூனிச அகிலத்தின் பெரும்பாலான அங்கத்தவர்கள் கொல்லப்பட்டனர். போருக்குப் பிந்தைய காலத்தில் மற்றொரு களையெடுப்பு அலை இன்னும் வெளிப்படையாக தேசியவாத மற்றும் யூத-விரோத தன்மையை எடுத்துக் கொண்டது. புரட்சி தேசியவாத அடித்தளத்தில் காட்டிக்கொடுக்கப்பட்டமை, மாபெரும் ரஷ்ய தேசியவாதத்தினதும், அப்பட்டமான இனவெறியின் பரவலுக்கான அத்தியாவசியமான அடிப்படையாக இருந்தது.

இந்த குற்றங்கள் இருந்தபோதிலும், ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சோவியத் ஒன்றியத்தை தொடர்ந்து பாதுகாத்தது. 1939-1940ல் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் (SWP) உள்ள ஒரு குட்டி முதலாளித்துவ பிரிவுக்கு எதிராக, சோவியத் ஒன்றியத்தின் மதிப்பீடு, அதன் தோற்றம் பற்றிய வரலாற்று மற்றும் வர்க்கப் பகுப்பாய்வில் வேரூன்றி இருக்க வேண்டும் என ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். சோவியத் அரசு அதிகாரத்துவ ஆட்சியின் கீழ் ஒரு பயங்கரமான சீரழிவிற்கு உட்பட்டது. ஆனால் அக்டோபர் புரட்சியின் முக்கிய வெற்றிகளான உள்நாட்டுப் போரின் போது தொழிலாளர் அரசால் பெரும்பாலான தொழில்துறை தேசியமயமாக்கல், வெளிநாட்டு வர்த்தகத்தின் மீதான அரசின் ஏகபோகம் மற்றும் பொருளாதாரத்தின் திட்டமிடலின் ஆரம்ப கூறுகளை நிறுவுதல் உட்பட இன்னும் தூக்கி எறியப்படவில்லை.

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக தொழிலாளர் அரசைப் பாதுகாப்பது வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்களின் கடமையாகும். இந்த அரசியல் நிலைப்பாடு கிரெம்ளினுக்கான எந்த ஆதரவையும் காட்டவில்லை. ட்ரொட்ஸ்கி 1936இல் எழுதிய காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சியில் ட்ரொட்ஸ்கிச இயக்கம், ஒரு அரசியல் புரட்சியினால் அதிகாரத்துவத்தை தூக்கியெறிவதன் மூலம் அக்டோபர் வெற்றிகளைப் பாதுகாக்க சோவியத் தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அத்தகைய ஒரு அரசியல் புரட்சியும் மற்றும் அக்டோபர் புரட்சியின் சர்வதேசரீதியாக விரிவாக்கமும் இல்லாமல், அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மீட்டெடுத்து, தொழிலாளர் அரசை அழித்து, தன்னை ஒரு புதிய ஆளும் வர்க்கமாக மாற்றுவதன் மூலம் சோவியத் பொருளாதாரத்தை உலக முதலாளித்துவ அமைப்பில் மீண்டும் ஒருங்கிணைக்க இறுதியில் உந்தப்படும் என்பதை ட்ரொட்ஸ்கி முன்னறிவித்தார்.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரதிபலிப்பு

இந்த எச்சரிக்கை நிரூபிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் உக்ரேனிலும் கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் உள்ள நாஜிக்களும் அவர்களது பாசிச கூட்டாளிகளும் செய்யத் தவறியதை 1991 டிசம்பரில், ஸ்ராலினிச அதிகாரத்துவம் நிறைவேற்றியது. அதாவது சோவியத் ஒன்றியத்தை அழித்தது. இந்த நிகழ்வால் அனைத்துலகக் குழு ஆச்சரியம் அடையவில்லை. 1982-1986ல் பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) பப்லோவாத சீரழிவுக்கு எதிரான அனைத்துலகக் குழுவின் போராட்டம், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முழு வரலாறு மற்றும் அரசியல் பாரம்பரியத்தையும், ஸ்ராலினிசத்திற்கும் பப்லோவாதத்திற்கும் எதிரான அதன் போராட்டத்தையும் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டது.

1985-1986 இல் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவு, நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவிற்குள் மார்க்சிசத்தின் மறுமலர்ச்சிக்கான அடிப்படையை உருவாக்கியதுடன் மற்றும் ஸ்ராலினிசத்தின் நெருக்கடியில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் சக்திவாய்ந்த முறையில் தலையிட உதவியது. 1989-1991 இல், அனைத்துலக் குழுவின் பிரதிநிதிகள் சோவியத் ஒன்றியத்திற்கு விஜயம் செய்தனர். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பிரதிநிதிகள், அரை நூற்றாண்டுக்கு முன்னர் நடந்த மாபெரும் பயங்கரத்தின் அரசியல் இனப்படுகொலைக்குப் பின்னர் இப்போதே முதன்முறையாக சோவியத் ஒன்றியத்திற்கு வருகை தந்திருந்தனர். தோழர் டேவிட் நோர்த் மாஸ்கோ மற்றும் கியேவில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட விரிவுரைகளை வழங்கி மற்றும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன், குறிப்பாக சோவியத் ரஷ்யா மற்றும் சோவியத் உக்ரேனில் இருந்து தொடர்புகளை ஏற்படுத்தினார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ரஷ்ய மொழி புல்லட்டின் பரவலாகப் பரவி, இடது எதிர்ப்பின் வரலாறு தொடர்பாக அரசியல் ரீதியாக தனிமையில் நீண்ட காலம் பணியாற்றிய சோவியத் வரலாற்றாசிரியரான வாடிம் ரோகோவினுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான அடிப்படையை உருவாக்கியது.

மாஸ்கோ வரலாற்று காப்பக நிறுவனத்தில் டேவிட் நோர்த் விரிவுரை செய்கிறார் [Photo: WSWS]

கடந்த டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட 30வது ஆண்டு நிறைவையொட்டி, WSWS இந்த ஆவணங்களில் பலவற்றை முதன்முறையாக ஒரு முக்கியமான கண்காட்சியில் வழங்கியது. அவற்றின் அறிவாற்றல் வியக்க வைக்கிறது. மேலும் இந்த ஆவணங்களை கவனமாக மதிப்பாய்வு செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். கட்சியின் நோக்குநிலைக்கும், புரட்சிகர தொழிலாளர்களின் ஒரு புதிய அடுக்கினை பயிற்றுவிப்பதற்கும் தொடர்ந்து முக்கியமானவை. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு, அதன் இடத்தில் புதிய, போட்டி தேசிய அரசுகள் ஸ்தாபிக்கப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, தோழர் நோர்த் கியேவில் ஆற்றிய ஒரு உரையை மட்டுமே நான் மேற்கோள் காட்டுகிறேன். அவர் கூறினார்:

மாஸ்கோவில் இருந்து 'சுதந்திரம்' என்று அறிவித்து, தேசியவாதிகள் தங்கள் புதிய அரசுகளின் எதிர்காலம் தொடர்பான அனைத்து முக்கிய முடிவுகளையும் ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் கைகளில் வைப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. … முதலாளித்துவத்திற்குத் திரும்புவது, அதற்காக தேசியவாதிகளின் பேரினவாதக் கிளர்ச்சி ஒரு மூடுதிரை மட்டுமே. அது ஒரு புதிய ஒடுக்குமுறைக்கு மட்டுமே வழிவகுக்கும். சோவியத் தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் ஏகாதிபத்தியங்களை தனித்தனியாகத் தலை குனிந்து முழங்கால்களைக் மடித்து, பிச்சைக்காகவும் உதவிக்காகவும் நிற்பதற்குப் பதிலாக, அனைத்து தேசிய இனங்களின் சோவியத் தொழிலாளர்களும் உண்மையான சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயகம் என்ற கொள்கைகளின் அடிப்படையில், புதிய உறவை உருவாக்க வேண்டும். இந்த அடிப்படையில் 1917 இன் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் மதிப்புள்ள அனைத்தையும் புரட்சிகரமாக பாதுகாக்கவேண்டும். [13]

ஒரு தலைமுறைக்குப் பின்னர், முதலாளித்துவத்தின் மறுசீரமைப்பு, ஒரு சமூகப் பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுவது கிட்டத்தட்ட ஒரு மிகச் சாதாரணமான ஒன்றாகிவிடும். முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதும், சமூக சமத்துவமின்மைக்கான குறியீடுகளும், அத்துடன் எயிட்ஸ், காசநோய் அல்லது தற்கொலைகள் போன்ற நோய்களுக்கான குறியீடுகள் உலகிலேயே மிக மோசமானவை.

2011 இன் படி ஒரு நாட்டிற்கு இளைஞர்களிடையே (15–49) எச்.ஐ.வி % இல் மதிப்பிடப்பட்ட பாதிப்பு (public domain)

கோவிட்-19 தொற்றுநோய், தொழிலாளர்களின் வாழ்வில் தன்னலக்குழுக்களின் கொலைகார அலட்சியம் மற்றும் சோவியத் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் அழிவின் பேரழிவுகரமான விளைவுகள் ஆகிய இரண்டையும் அம்பலப்படுத்தியுள்ளது. Economist இன் படி அதிகப்படியான இறப்பு எண்ணிக்கையின்படி, ரஷ்யாவில் மட்டும் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சமூக படுகொலைக் கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். Economist ஆல் பட்டியலிடப்பட்ட 10 நாடுகளில், தொற்றுநோயால் அதிக தனிநபர் இறப்புகள் ஏற்பட்டுள்ளன. அதில் ஒன்பது நாடுகள் 1980கள் மற்றும் 1990களில் முதலாளித்துவ மறுசீரமைப்பிற்கு உட்பட்டுள்ளன. சர்வதேச அளவில், சோவியத் ஒன்றியத்தின் அழிவானது சமூக எதிர்ப்புரட்சியின் விரிவாக்கம் மற்றும் அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பு ஆகியவற்றால் குறிக்கப்பட்டது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தோல்வியையும் பின்னடைவையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒருபோதும் மறுக்கவில்லை. எவ்வாறாயினும், ஸ்ராலினிசத்திற்கு தங்களை தகவமைத்துக் கொண்ட மற்றும் உண்மையில் முதலாளித்துவ மீட்சியை ஆதரித்த பப்லோவாதிகளுக்கு முற்றிலும் மாறாக, அனைத்துலகக் குழு 1991 இல் 'சோசலிசத்தின் முடிவை' காணவில்லை. அதற்கு மாறாக, ஸ்ராலின் தேசியவாத அரசியலுக்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கம் பல தசாப்தங்களாக நடத்திய போராட்டத்தை எதிர்மறையாகவேனும் அது நிரூபித்திருந்தது.

உற்பத்தியின் பூகோளமயமாக்கல் அனைத்து தேசிய அடிப்படையிலான அமைப்புகளினதும், அதிகாரத்துவங்களினதும் அடித்தளத்தை இல்லாதொழித்து ஏகாதிபத்தியத்திற்கு மொத்தமாக சரணடைவதை துரிதப்படுத்தியது. மேலும் தொழிற்சங்கங்களை பொறுத்தவரை, அவை அரசு எந்திரத்துடனும், பெருநிறுவன நிர்வாகத்துடனும் ஒருங்கிணைந்தன.

பல தலைமுறைகளாக தொழிலாள வர்க்கத்தை கட்டிப்போட்டுக் காட்டிக் கொடுத்த அதிகாரத்துவங்களினதும் அமைப்புகளினதும் வீழ்ச்சி, ஏகாதிபத்தியப் போர்களின் ஒரு புதிய காலகட்டத்தின் தொடக்கத்தையும், ட்ரொட்ஸ்கிச இயக்கம் முன்னணி பங்கு வகிக்கும் சோசலிசப் புரட்சியின் வளர்ச்சியில் ஒரு புதிய கட்டத்தையும் குறிக்கிறது. தொழிலாள வர்க்கத்தில் மார்க்சிச நனவை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் சோசலிசப் புரட்சியில் ஒரு புதிய எழுச்சியைத் தயாரிப்பதற்கும், அக்டோபர் புரட்சி, லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு பற்றிய வரலாற்று உண்மையைப் பாதுகாப்பதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் மையக் கூறுகளாக ஆக்கியது. 20 ஆம் நூற்றாண்டானது, சோவியத் ஒன்றியத்தின் கலைப்புடன் முடிவடையவில்லை என நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வலியுறுத்தியது. மாறாக, அது முடிவுறாமலும், அதன் தீர்க்கப்படாத பிரச்சினைகளான சமூக சமத்துவமின்மை, போர் மற்றும் பாசிசம் ஆகியவை 21 ஆம் நூற்றாண்டில் நுழையும் போது உலகை வடிவமைக்கும் என்றது.

ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்திய தாக்குதலும் புட்டின் ஆட்சியின் குணாம்சமும்

ஜனவரி 1991 இல் அமெரிக்க படையெடுப்பு மற்றும் ஈராக் மீதான காட்டுமிராண்டித்தனமான குண்டுவீச்சைத் தொடர்ந்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பேர்லினில் ஏகாதிபத்திய போர் மற்றும் காலனித்துவத்திற்கு எதிரான தொழிலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தது. அதன் அறிக்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பின்வருமாறு முடிவு செய்தது:

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் எதிர்கொண்ட அனைத்து பெரிய வரலாற்று, அரசியல் பணிகளும் இப்போது அவற்றின் அப்பட்டமான வடிவத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஈராக் மீதான காட்டுமிராண்டித்தனமான குண்டுவீச்சும் அதன் தொழில்துறை உள்கட்டமைப்பின் உண்மையான அழிவும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் புதிய வெடிப்பின் தொடக்கத்தைக் குறிக்கிறது. மில்லியன் கணக்கானவர்களை அடிமைப்படுத்தி அழிக்காமல் முதலாளித்துவம் உயிர்வாழ முடியாது… [14]

போர் மற்றும் காலனித்துவத்திற்கு எதிரான ICFI மாநாடு, பேர்லின், 1991 [Photo: WSWS]

சோவியத் அதிகாரத்துவம், சோவியத் ஒன்றியத்தை அழித்தொழிப்பதற்கு முன்னர் அதன் இறுதிக் காட்டிக்கொடுப்புச் செயலில், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் மூன்று தசாப்த கால ஏகாதிபத்தியப் போர்களின் தொடக்கமாக நிரூபிக்கப்பட்ட இந்த ஏகாதிபத்திய சூறையாடல் போருக்கு தனது ஆதரவை வழங்கியதை நினைவுகூர வேண்டியது அவசியம். இது ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான ஏகாதிபத்திய தாக்குதலுக்கான இரத்தம் தோய்ந்த வரலாற்றுக்கு முன்னுரையாகும்.

ரஷ்ய தன்னலக்குழு ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் 'சமாதான சகவாழ்வு' மற்றும் ஏகாதிபத்தியத்துடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கான சாத்தியக்கூறுகள் பற்றிய மாயை நம்பிக்கையை மரபுரிமையாக பெற்றுள்ளது. ஆக்கிரமிப்பை தொடங்குவதற்கு சற்று முன்பு, 1990களின் பிற்பகுதியில் புட்டினே ஒப்புக்கொண்டது போல், 1998 இல் ரஷ்யா நேட்டோவில் இணைவதை அமெரிக்கா ஆதரிக்குமா என்று அவர் தனிப்பட்ட முறையில் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டனிடம் கேட்டிருந்தார். நிச்சயமாக, அமெரிக்கா அதை செய்யாது.

நேட்டோ விரிவாக்கம், அதன் எல்லைகளில் ஆட்சிக் கவிழ்ப்புகள் மற்றும் ரஷ்யாவுடனும் சீனாவுடனும் இணைந்த நாடுகளில் இராணுவத் தலையீடுகள் ஆகியவற்றின் மூலம், ஏகாதிபத்திய சக்திகள் திட்டமிட்டும், இடைவிடாமலும் ரஷ்யாவை சுற்றி வளைத்துள்ளன. அமெரிக்க இராணுவவாதத்தின் இந்த வெடிப்பு மற்றும் அது பற்றிய ICFI இன் பகுப்பாய்வு தோழர் ஆண்ட்ரே டேமனின் முக்கிய அறிக்கையில் மதிப்பாய்வு செய்யப்பட்டது. [15]

மார்ச் 21, 2003 வெள்ளிக்கிழமை மாலை அமெரிக்க தலைமையிலான படைகளால் ஈராக், பாக்தாத் மீது கடுமையான குண்டுவீச்சில் ஒரு அரசாங்க கட்டிடம் எரிந்து கொண்டிருக்கிறது [AP Photo/Jerome Delay]

உண்மையில், கடந்த முப்பது ஆண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய போர்களின் வரலாற்றை ஒருவர் மதிப்பாய்வு செய்தால், ரஷ்யாவையும் சீனாவையும் சிதைப்பதற்காக விரிவடையும் போர் ஒரு மிருகத்தனமான தவிர்க்க முடியாதது போல் தோன்றுகிறது. உலக முதலாளித்துவ அமைப்பில் அவர்கள் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்ட போதிலும், ஏகாதிபத்திய சக்திகள், ஆளும் தன்னலக்குழு ஆட்சிகளால் இந்த நாடுகளின் பரந்த வளங்களை நேரடியாகக் கொள்ளையடிப்பதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளன. தங்களுக்குள் இந்த வளங்களுக்காகப் போட்டியிட்டு, தீர்க்க முடியாத உள்நாட்டு நெருக்கடிகளால் உந்தப்பட்டு, அவர்கள் இப்போது இதை மாற்றுவதில் உறுதியாக உள்ளனர்.

புள்ளி 2 இல், மாநாட்டு வரைவுத் தீர்மானம் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கப் போரின் அடிப்படை நோக்கங்களை பின்வருமாறு விவரிக்கிறது: 'ரஷ்யாவில் தற்போதைய ஆட்சியை அகற்றல், அதற்குப் பதிலாக ஒரு அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ள கைப்பாவையால் மாற்றப்படுதல் மற்றும் ரஷ்யாவையே உடைத்தல்” ஆகியவை பற்றி குறிப்பிடப்படுகின்றன. இது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிதி மூலதனத்தினால் அதன் மதிப்புமிக்க வளங்களைச் சொந்தமாக்கி சுரண்டக்கூடிய ஒரு டஜன் அல்லது அதற்கு மேற்பட்ட பலமற்ற நாடுகளாக ரஷ்யாவை 'காலனித்துவமயமாக்கலாகும்'. விரிவடைந்து வரும் மோதல்கள் மற்றும் நேட்டோ-சார்பு போலி-இடதுகளின் அரசியல் மற்றும் ரஷ்யா ஒரு 'ஏகாதிபத்திய நாடு' என்ற அவர்களின் வலியுறுத்தல் ஆகிய இரண்டையும் புரிந்து கொள்வதற்கு இந்தப் பகுதி மையமாக உள்ளது.

1939-1940ல் சாக்ட்மன் மற்றும் பேர்ன்ஹாமின் சோவியத் ஒன்றியம் இனி ஒரு தொழிலாளர் அரசு அல்ல என்ற கூற்றுக்கு எதிரான அவரது விவாதத்தில், ட்ரொட்ஸ்கி அதிகாரத்துவத்தை தூக்கியெறிவதற்கான நான்காம் அகிலத்தின் அழைப்பை சுட்டிக்காட்டி, சாட்மனாலும் பேர்ன்ஹாமாலும் முன்மொழியப்பட்ட வரையறைகளில் இருந்து என்ன புதிய அரசியல் முடிவுகள் பின்பற்றப்படும் என்று கேட்டார். [16]

இதேபோல், ஒருவர் கேட்கலாம்: ரஷ்யாவை ஒரு ஏகாதிபத்திய நாடு என்று கூறுவதன் மூலம் அரசியல் ரீதியாக என்ன பயனைப்பெற முடியும்? நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு புட்டின் ஆட்சிக்கும் அதன் போருக்கும் தனது புரட்சிகர எதிர்ப்பை மிகவும் தெளிவாகக் கூறியுள்ளது. ஒரு சமூக பொருளாதார நிலைப்பாட்டில் இருந்து ரஷ்யாவை ஒரு ஏகாதிபத்திய நாடு என்று கூறுவது சிறிதும் அர்த்தமற்றது. ரஷ்யா டெக்சாஸுக்கு நிகரான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. இப்போது பொருளாதாரத் தடைகளின் பாரிய தாக்கத்தால் இன்னும் குறைவாக உள்ளது. மேலும் ஏனைய முதலாளித்துவ நாடுகளுக்கான மூலப்பொருள் வழங்குனராகவே திறம்பட செயல்படுகிறது.

ஆனால் ரஷ்யாவை 'ஏகாதிபத்தியம்' என்று கூறுவது ஒரு முக்கிய அரசியல் செயல்பாட்டிற்கு உதவுகிறது: இது ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கும் ஏகாதிபத்திய சக்திகளின் போர் நோக்கங்களுக்கும் ஒரு அரசியல் மூடிமறைப்பை வழங்குகிறது. ஜூன் 23 அன்று 'ரஷ்யாவை காலனிமயமாக்கல்' என்ற தலைப்பில் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பெண்களுக்கான இணைய கருத்தரங்கினால் இது தெளிவாக்கப்பட்டது. CIA செயற்பாட்டாளர்கள் மற்றும் உக்ரேன் மற்றும் காகசஸ் வலதுசாரி தேசியவாதிகள் பணிக்கமர்த்தப்பட்ட இணைய கருத்தரங்கில், ரஷ்யா ஒரு காலனித்துவ பேரரசு என்றும் அது வாஷிங்டனின் ஆதரவுடன் உடைக்கப்பட வேண்டும் என்றும் திறம்பட வாதிட்டது. நிகழ்ச்சியை வழிநடாத்தியவர் “காலனித்துவ நீக்கம் என்பது ரஷ்யாவை உடைப்பதா? அப்படியானால், அதனுடன் தொடர்புடைய ஏதேனும் ஆபத்துகள் உள்ளதா? எனக் கேட்டபோது யாராலும் பதில் சொல்ல முடியவில்லை, ஏனென்றால் ஒரே பதில், நிச்சயமாக: ஆம் என்பதாகும்.

இந்த மூலோபாயத்தைத்தான் நேட்டோ சார்பு போலி இடதுகள் 'ரஷ்ய ஏகாதிபத்தியம்' பற்றிய கூச்சலுடன் மூடி மறைக்கிறது. தேசியவாத, பிராந்தியவாத, இனப் பதட்டங்களை வளர்ப்பது பல தசாப்தங்களாக ஏகாதிபத்திய போர்க் கொள்கையின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. 1990 களில் யூகோஸ்லாவியாவின் உடைவு மற்றும் குண்டுவீச்சின் போது இது முறையாகப் பயன்படுத்தப்பட்டது. WRP இன் ஓடுகாலி கிளீவ் சுலோட்டர் மற்றும் WRP இன் எஞ்சியவர்கள் யூகோஸ்லாவியாவில் நேட்டோவின் நடவடிக்கைக்கு முழு அரசியல், தளவாட ஆதரவை வழங்கியபோதும், குரோஷியாவில் உஸ்தாஷி (Ustashi) போன்ற நவீனகால பாசிச ஆதரவாளர்களை ஆதரித்தபோதும், முன்னாள் பப்லோவாதிகள் தீவிர வலதுசாரி மாற்றத்தை எதிர்பார்த்தனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பப்லோவாதிகளின் வலதுபுறம் நோக்கிய இந்த கூர்மையான திருப்பம் 1990களில் மார்க்சிசமும், சந்தர்ப்பவாதமும் பால்கன் நெருக்கடி உட்பட பல முக்கியமான ஆவணங்களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் விரிவாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. [17]

1985-86 இல் WRP உடனான உடைவுக்கு பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அவர்களுக்கு எதிரான வர்க்கப் பாதையில் இறங்கியது. நாடுகளின் சுயநிர்ணய உரிமைக்கான நிலைப்பாட்டின் மீதான திருத்தம், அந்தப் போராட்டத்தின் வளர்ச்சியாகவும், 1991க்குப் பின்னர் அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்புக்கு அனைத்துலகக் குழுவின் பிரதிபலிப்பின் ஒரு முக்கிய அங்கமாகவும் இருந்தது.

2019 ஆம் ஆண்டு விரிவுரையில், 'சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒற்றைத் துருவ தருணமும்' என்று தோழர் பில் வான் ஆக்கென் பின்வருமாறு விளக்கினார். '... முதலாளித்துவ பூகோளமயமாக்கலின் வளர்ச்சி ஒரு புதிய வகை தேசியவாத இயக்கத்திற்கு வழிவகுத்தது. இந்த இயக்கங்கள் 'ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் வேறுபட்ட மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் புதிய அரசுகளை உருவாக்கும் முற்போக்கான பணியை முன்வைத்த முந்தைய தேசிய இயக்கங்களுடன் கடுமையான முரண்பாட்டுடன் இருந்தன ... இருபதாம் நூற்றாண்டின் முடிவில் எழுந்த தேசியவாத இயக்கங்களோ இருக்கின்ற அரசுகளை ஏகாதிபத்தியத்தின் உதவியுடன் இன, மத மற்றும் மொழி வழியில் உடைப்பதற்கு முனைந்தன.' [18]

முன்னாள் சோவியத் ஒன்றியத்தை பொறுத்தவரை இன்று நாம் இந்த நிலைப்பாட்டை வைத்திருக்கிறோம். முதலாளித்துவத்தின் மறுசீரமைப்பு சோவியத் ஒன்றியம் தேசிய-அரசுகளாக உடைவதோடு மட்டும் பிணைக்கப்படவில்லை, ஆனால் புதிய ரஷ்ய ஆளும் வர்க்கத்திற்குள் சக்திவாய்ந்த மையவிலக்கு சக்திகளையும் கட்டவிழ்த்து விட்டது. ரஷ்யாவின் இயற்கை வளங்கள் தன்னலக்குழுவின் சுய-செழுமைப்படுத்தலுக்கான முக்கிய ஆதாரமாக உள்ளன. ஆனால் அவற்றின் பிராந்திய விநியோகம் மிகவும் சமமற்றதாக இருந்தது. இந்த வளங்களின் மீதான கட்டுப்பாட்டில் தன்னலக்குழுவிற்குள் உள்ள போட்டி, பிராந்திய உயரடுக்கினரிடையே உரசல்கள் மற்றும் இந்த பிராந்திய உயரடுக்குகளுக்கும் மொஸ்கோவில் உள்ள மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான பதட்டங்களில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. 1990 களில், ரஷ்ய கூட்டமைப்பு மேலும் உடைவது ஒரு உண்மையான சாத்தியம் என்று உலகம் முழுவதும் உள்ள சிந்தனையாளர்களால் விவாதிக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு முதல் புட்டினின் உள்நாட்டுக் கொள்கையின் மைய அம்சம், பிராந்திய உயரடுக்கினரை 'ஒழுங்குமுறைப்படுத்துதல்', மொஸ்கோவிற்கு அடிபணிதல் மற்றும் மத்திய அரசு எந்திரத்தை வலுப்படுத்துதல் ஆகும்.

தவறான பெயரிடப்பட்டதும், ஏகாதிபத்திய ஆதரவுடைய 'தாராளவாத எதிர்ப்பு' இப்போது மேற்கத்திய முதலாளித்துவ பத்திரிகைகளின் ஆரவாரத்திற்காக 'போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை' ஏற்பாடு செய்கிறது. தன்னலக்குழுவில் உள்ள ஒரு பிரிவுக்காக பேசுகிறது. இந்த தன்னலக்குழு ரஷ்ய கூட்டமைப்பை அதன் தற்போதைய நிலையில் உள்ள வடிவத்திலிருந்து உடைப்பதன் மூலமும், நேட்டோவுடன் நேரடியாக அணிதிரளுவதன் மூலமும் அது தொழிலாள வர்க்கத்தையும் ரஷ்யாவின் வளங்களையும் நேரடியாக சுரண்ட முடியும் என நம்புகிறது. அவர்களின் முக்கிய செய்தித் தொடர்பாளர் அலெக்ஸி நவால்னி (Alexei Navalny) வாஷிங்டனுடனும் பேர்லினுடனும் நெருங்கிய உறவுகளை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அவர் தீவிர வலதுசாரி பேரணிகளில் பங்கேற்று, ரஷ்ய கூட்டமைப்பு முழுவதும் பிரிவினைவாத மற்றும் பிராந்தியவாத போக்குகளுடன் அரசியல் உறவுகளைப் பேணிவரும் ஒரு மோசமான இனவெறியர் ஆவார்.

இந்த சக்திகள், முதலாளித்துவ மறுசீரமைப்பு மற்றும் இராணுவ மற்றும் இரகசிய சேவைகளின் பிரிவுகளில் இருந்து இலாபம் பெற்ற மேல் நடுத்தர வர்க்கத்தின் ஒரு குறுகிய அடுக்குடன் சேர்ந்து, ஏகாதிபத்திய சக்திகளின் ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கான சமூக அடித்தளத்தை உருவாக்குகின்றன. அவர்கள் உக்ரேனில் போரை எதிர்ப்பதாகக் கூறினாலும், உண்மையில் அவர்கள் போரிடும் மற்றொரு தரப்பான நேட்டோவை ஆதரிக்கின்றனர். 'சமாதானத்திற்கு' வெகுதூரம் அப்பாற்பட்டு, அவர்களின் அரசியல் வேலைத்திட்டம் தவிர்க்க முடியாமல் தொடர்ச்சியான போர்கள் மற்றும் உள்நாட்டுப் போர்களை ஏற்படுத்தும் ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான ரஷ்யாவை சிதைக்கும் ஒன்றாகும்.

நிச்சயமாக, ரஷ்யாவை உடைப்பதற்கான இந்தத் திட்டங்கள் குறித்து புட்டின் ஆட்சி நன்கு விழிப்புடன் உள்ளது. உண்மையில், புட்டின் உக்ரேன் மீதான படையெடுப்பைத் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், ரஷ்யாவில் யூகோஸ்லாவிய சூழ்நிலை மீண்டும் வருவதாக பகிரங்கமாக எச்சரித்துள்ளார். பின்னர் இந்த எச்சரிக்கைகளை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் அவரது ஆட்சியே நவால்னி மற்றும் 'தாராளவாத எதிர்ப்பு' போன்ற அதே வர்க்க சக்திகளின் நலன்களுக்காக பேசுகிறது. ஒட்டுமொத்தமாக ரஷ்ய தன்னலக்குழு ஏகாதிபத்தியத்தில் இருந்து எந்த சுதந்திரத்தையும் பெற்றிருக்கவுமில்லை பெறவும் முடியாது. இந்த வர்க்கத்தினுள் வெளியுறவுக் கொள்கை மீதான கசப்பான முரண்பாடுகள் எதுவாக இருந்தாலும், அது ஏதோ ஒரு ஏகாதிபத்திய சக்தியுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதை நோக்கியே உள்ளது. அக்டோபர் 1917க்கு எதிரான எதிர்ப்புரட்சியில் இருந்து எழுந்த நிலையில், தன்னலக்குழுக்கள் தங்கள் முக்கிய எதிரி சர்வதேச தொழிலாள வர்க்கம் என்ற உண்மையை நன்கு உணர்ந்துள்ளனர்.

உண்மையில், புட்டின் ஆட்சி ஜாரிசத்தையும், ஸ்ராலினிசத்தின் பாரம்பரியத்தை ஊக்குவிப்பது, தன்னலக்குழுவின் நிலைப்பாட்டில் இருந்து அது வரலாற்று ரீதியாக எழுந்த எதிர்ப்புரட்சிகர மரபுகளின் நனவானதும், துல்லியமானதுமான வெளிப்பாடு ஆகும். புட்டின் ஆட்சியால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதைப் போலவே, அதன் மாபெரும் ரஷ்ய பேரினவாதத்தின் ஊக்குவிப்பும் தொழிலாள வர்க்கத்தை குழப்பி பிளவுபடுத்தும் அதே வேளையில் ஏகாதிபத்திய சக்திகளின் நோக்கங்களை மேலும் முன்னெடுத்துச் செல்ல மட்டுமே உதவும் என்பதையும் வலியுறுத்த வேண்டும்.

முடிவுரை

விரிவடையும் போரின் ஆபத்துக்கள் கணக்கிட முடியாதவையும் மற்றும் உலக சோசலிச வலைத் தளம் இந்த ஆபத்துக்களை உலக தொழிலாள வர்க்கத்தின் முன் கூர்மையாக அணுஆயுத அழிப்பு என்ற உண்மையான அச்சுறுத்தல் வரை உள்ளது என்பதை உயர்த்திக்காட்டியுள்ளது. ஆனால் இந்த போக்குகளுக்கு இன்னொரு பக்கமும் உள்ளது.

1917 இல் இருந்ததைப் போலவே, உலகப் போருக்கு இட்டுச் செல்லும் அதே முரண்பாடுகள் தவிர்க்க முடியாமல் சமூகப் புரட்சிக்கு வழிவகுக்கும். இது ஒரு வரலாற்று விதியாகும். ஏற்கனவே, சர்வதேச தொழிலாள வர்க்கம் முன்வர ஆரம்பித்துவிட்டது. ஏகாதிபத்தியத்தின் பழைய அரசியல் முட்டுக்களான ஸ்ராலினிசத்தில் இருந்து தொழிற்சங்கங்கள் மற்றும் குட்டி முதலாளித்துவ முன்னாள் இடதுகள் வரை உடைந்துவிட்டன. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் ஐந்தாவது கட்டம் பற்றிய நமது மதிப்பீடு, அக்டோபருக்கு எதிரான ஸ்ராலினிச பிரதிபலிப்புடன் தொடங்கப்பட்ட மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்ற உண்மையை அங்கீகரிப்பதைக் குறிக்கிறது. 1923ல் இருந்து, முந்தைய நான்கு கட்டங்கள் முழுவதும், ஸ்ராலினிசத்திற்கும் குட்டி முதலாளித்துவ சந்தர்ப்பவாதத்திற்கும் எதிரான பல தசாப்த கால போராட்டத்தில் சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக ட்ரொட்ஸ்கிச இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் நான்காம் அகிலத்திற்கும் இப்போது நடந்து கொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உறவில் நீண்டகால, புறநிலை மாற்றத்தை தயார் செய்துள்ளது. அது அதிகாரத்தை கைப்பற்றுவதில் அந்த தீவின் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தில் சக்திவாய்ந்த முறையில் தலையிட்டு தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய நிலையில் இலங்கையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை நிலைநிறுத்தியுள்ளது. இது துருக்கி, பிரேசில் மற்றும் உலகம் முழுவதிலும் அனைத்துலக் குழுவின் பிரிவுகளின் உருவாக்கத்திற்கான அடிப்படையை உருவாக்கியுள்ளது, அத்துடன் தற்போதுள்ள பிரிவுகளின் பரந்த விரிவாக்கத்திற்கும் வழியமைத்துள்ளது. உலகின் ஏகாதிபத்திய மறுபங்கீட்டிற்கான உடனடி இலக்குகளான முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் சீனாவிலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான அரசியல் மற்றும் தத்துவார்த்த அடித்தளங்களையும் அது உருவாக்கியுள்ளது.

இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்ட வரைவுத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தோழர்களை வலுவாக ஊக்குவிப்பதுடன் எனது உரையை முடிக்க விரும்புகிறேன். உலக ஏகாதிபத்தியத்தின் மையத்தில் போராடும் அமெரிக்கத் தொழிலாள வர்க்கமானது ஏகாதிபத்திய போர், முதலாளித்துவம் மற்றும் தேசிய அரசமைப்பிற்கு எதிரான ஒரு சோசலிசப் போராட்டத்தில், ஐரோப்பா, ரஷ்யா மற்றும் ஆசியா முழுவதிலும் உள்ள அதன் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படக்கூடிய அரசியல் வழியை இது தெளிவாக வெளிப்படுத்துகிறது.

[1] International Committee of the Fourth International, “Oppose the Putin government’s invasion of Ukraine and US-NATO warmongering! For the unity of Russian and Ukrainian workers!” WSWS, February 24, 2022.

[2] On the role of Michael-Matsas in the split with teh WRP in 1985–1986, see: David North: “The Demise of Savas Michael’s ‘New Era,’” August 11, 1989. For an analysis of Daria Mitina’s OKP and her alliance with Michael-Matsas, see: Bill Van Auken, Eric London: “Workers Party in Argentina seeks to “refound” Fourth International in alliance with Stalinism,” WSWS, June 7, 2018.

[3] This statement by Sungur Savran from the Turkish DIP was referenced by Daria Mitina on her blog on May 22, 2022.

[4] Leon Trotsky, War and the Fourth International (1934).

[5] Leon Trotsky, History of the Russian Revolution, Ch. 39: “The Problem of Nationalities.”

[6] “Program of the Russian Communist Party (Bolsheviks)”, in: The German Revolution and the Debate on Soviet Power. Documents: 1918–1919, Preparing the Founding Congress, edited by John Riddell, Pathfinder Press 1986, p. 634

[7] Letter by Joseph Stalin to Vladimir Lenin from September 22, 1922, in: Izvestiia TsK KPSS, 1989, No. 9, p. 199.

[8] Platform of the Joint Opposition (1927). Chapter 6: “The National Question.”

[9] OGPU report on the activities of the Left Opposition in the Kharkov region, addressed to Ivan Tovstukha, the secretary of Joseph Stalin, from 3 August, 1927. RGASPI (Russian State Archive of Socio-Political History), f. 17, op. 171, delo 31, p. 45

[10] Pis’mo neizvestnogo rabochego v Kievskii gorsovet, 1 maia 1926 goda [Letter by an unknown worker to the Kiev city council, 1 May, 1926], in: Pis’ma vo vlast’. 1917–1927: Zaiavleniia, zhaloby, donosy, pis’ma v gosudarstvennye struktury i bol’shevistskim vozhdiam [Letters to the government. 1917–1927: Declarations, complaints, denunciations, letters to state organs and the Bolshevik leaders], Moscow: ROSSPEN 1998, p. 503.

[11] For more on the discovery of these documents, see: Clara Weiss, Vladimir Volkov: “Historic discovery of Left Opposition manuscripts from the early 1930s,” WSWS, August 27, 2018.

[12] Leon Trotsky, The Third International After Lenin. Critique of the Draft Program of the Comintern (1928).

[13]David North, “After the August Putsch: Soviet Union at the Crossroads,” October 3, 1991.

[14] International Committee of the Fourth International, “Oppose Imperialist War and Colonialism!” May 1, 1991.

[15] Andre Damon: “America’s “New World Order”— The historical and social roots of US plans for war with Russia and China,” WSWS, September 21, 2022.

[16] Leon Trotsky, “The USSR in War” (September 25, 1939), in: In Defense of Marxism.

[17] International Committee of the Fourth International, “Marxism, Opportunism and the Balkan Crisis,” May 7, 1994.

[18] Bill Van Auken, “The Dissolution of the USSR and the Unipolar Moment of US Imperialism,” lecture given at the 2019 SEP Summer School, July 25, 2019.

Loading