இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி கொண்டாட்டம் மற்றொரு கடும் போராட்டமாக மாறியுள்ளது

இலங்கையின் பல தேயிலைத் தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், பிரதான இந்து மதப் பண்டிகையான தீபாவளியைக் கொண்டாடுவதற்கு சம்பள முன்பணத்தைப் பெறுவதற்காக அந்தந்த தோட்டங்களில் போராட்டங்களை நடத்தியிருந்தனர். மத்திய மலையகத்தில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தங்கள் எதிர்கால ஊதியத்தில் இருந்து இந்தக் கடனைப் பெற்றுக் கொள்வதற்காக, புதிய துணிகள் வாங்குவதற்காக மற்றும் நல்ல சாப்பாடு அல்லது ஒரு எளிய குடும்ப நாளைக் கொண்டாடுவதற்காக கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் போராடி வருகின்றனர்.

என்பீல்ட் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்துகளை தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்கின்றனர். [Photo: WSWS]

உணவுப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் நிலையில், ஊதியங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு தொழிலாளர்களின் கோரிக்கைகள் கடனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. வானளாவ உயர்ந்துள்ள வாழ்க்கைச் செலவில் தீபாவளியைக் கொண்டாட, எந்த வழியிலும் போதாத பண்டிகை முன்பணமாக 15,000 ரூபாய் மட்டுமே தொழிலாளர்கள் பெற வேண்டியிருந்தது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், பொருளாதார நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதற்காக சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துகிறது.

கோவிட்-19 தொற்று மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினால் உலகளவில் தீவிரமடைந்துள்ள இலங்கைப் பொருளாதார நெருக்கடிகள் மிகவும் கடுமையான வெளிப்பாடாக உள்ளது.

சில தோட்டங்களில், தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டதுடன், முன்பணத்தை அதிகரிக்கவும், தாமதமின்றி வழங்கவும் தோட்ட நிர்வாகங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். மாறாக, தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாதது உள்ளிட்ட பல காரணங்களைக் கூறி, தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களை முன்கூட்டியே பதிவு செய்வதை நிராகரித்தன.

பெருந்தோட்டக் குடும்பங்கள் கோதுமை மா மற்றும் அரிசி போன்ற அன்றாடப் பாவனைக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றன. ஒரு கிலோ அரிசி 200 ரூபாவுக்கு அதிகமாகும். ஒரு கிலோ கோதுமை மாவின் விலை கிட்டத்தட்ட 300 ரூபாவாகும். தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாகும், அது நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கு உட்பட்டதாகும். இந்த ஊதியத்தை வென்றெடுக்க கூட தோட்டத் தொழிலாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக போராட வேண்டியிருந்தது.

தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைத் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினராவர். அவர்கள் தமது சம்பளம், வேலை நிலைமைகள் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்க அடிக்கடி போராட வேண்டியுள்ளது.

பெருந்தோட்டத்தின் பிரதான நகரமான ஹட்டனுக்கு பண்டிகைக் காலங்களில் சிறு வியாபாரிகள் வந்து தங்களுடைய பொருட்களை தற்காலிகமாக நிர்மாணித்த கொட்டகைகளில் விற்பனை செய்வது வழமையாக இருந்த போதிலும், இம்முறை மிகக் குறைவான வர்த்தகர்களே அங்கு காணப்பட்டனர்.

கண்டியைச் சேர்ந்த ஒரு சிறு வியாபாரியான முகமட் பாரூக் உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களிடம் பேசும் போது, தொழிலாளர்கள் உடைந்து போயுள்ளனர் என்று கூறினார். “நான் இங்கு பத்து அல்லது பதினைந்து வருடங்களாக வியாபராத்துக்கு வருகிறேன். பொதுவாக, தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே முழு அளவிலான வியாபாரம் தொடங்கும். அப்படி இருக்கும்போது, உங்களைப் போன்ற ஒரு பத்திரிகையாளரின் பக்கம் கூட என்னால் திரும்ப முடியாது. இங்கு வாங்க வருபவர்களிடம் பணம் இல்லை. இவர்களின் கஷ்டங்கள் எங்களுக்கு தெரியும்” என்றார்.

அவர் தொழிலாளர்கள் மீதான தனது அனுதாபத்தை விவரித்தார்; “மழை பெய்யும் போது தேயிலை மலையில் ஒரு பெண் தொழிலாளி, ஒரு கையில் ரொட்டித் துண்டை சாப்பிட்டுகொண்டு, மற்ற கையில் ரப்பர் போர்வையை பிடித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தபோது எனக்கு வருத்தமாக இருந்தது. அவர்கள் கடின உழைப்பாளிகள். இம்முறை முற்பணமாக கிடைக்கும் பணம் சாப்பாட்டுக்கு மட்டுமே போதுமானது, துணி வாங்குவதற்குப் போதாது. அவர்களுக்கு பழைய கடன்கள் மற்றும் மின் கட்டணம் செலுத்த இருக்கலாம். அவர்கள் இந்த விஷயங்களை எல்லாம் சமாளிக்க வேண்டும்.”

உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தையான என்ஃபீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி சிவலிங்கம் பல பிரச்சினைகளை விளக்கினார்.

`தீபாவளிக்கு செலவழிக்கலாமா அல்லது அடுத்த மாதத்திற்கான அத்தியாவசியப் பொருள்களுக்குச் செலவு செய்யலாமா என்று இரு மனதோடு தானும் தன் மனைவியும் சாமான் வாங்க வந்தோ என்று அவர் கூறினார். “அடுத்த மாதம் இந்தப் பணம் எங்களிடம் இருக்குமா என்பது எங்களுக்குத் தெரியாது. விலை மீண்டும் அதிகரிக்கலாம். தீபாவளிக்கு எந்த விலை குறைவையும் காணோம். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த முறை தீபாவளி மிகவும் வித்தியாசமானது. கடந்த ஆண்டுகளில் 10,000 ரூபாயில் துணிகள் மற்றும் பிற பொருட்களை வாங்க முடிந்தது. இம்முறை 15,000 ரூபாயில் துணிகள் வாங்குவதா அல்லது உணவுப் பொருட்களை வாங்குவதா என்ற குழப்பத்தில் உள்ளோம். பணவீக்கத்தால் பாதிக்கப்படுவது அரசு அல்ல, மக்கள் மட்டுமே.

“முந்தைய வருடங்களில் 2 கிலோவுக்கு செலவழித்த பணத்தில் இன்று அரை கிலோ மட்டுமே வாங்கலாம். பயறு மற்றும் கவ்பி போன்ற சில அத்தியாவசிய தானியங்களைத் தவிர்க்கிறோம். சிற்றுண்டிகளை நாங்கள் கைவிட்டுவிட்டோம். சில விலைகள் நம்மை பயமுறுத்துகின்றன அதனால் வேறு பொருட்களை வாங்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.

“மீன் அல்லது கோழிக்கறியை கொள்வனவு செய்வதில் சிரமங்களை எதிர்நோக்குகிறோம். ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,900 ரூபாவிற்கு தற்போது விற்கப்படுகிறது. அந்த விலைக்கு முன்பு இரண்டு அல்லது மூன்று கிலோ வாங்கினோம். சேப்பில் 500 ரூபாய் மட்டுமே இருக்கும், ஆனால் கடைக்காரர் கோழித் துண்டைத் தராசில் போட்டுவிட்டு 700 ரூபாய் என்பார். தீபாவளிக்கு வடை சுடுவதற்கு கடலை பருப்பு அல்லது உளுந்து விலைகள் நினைத்துப் பார்க்க முடியாதவை. கடலை பருப்பு 320 ரூபாயாகவும், பச்சைப்பயிறு 1,200 ஆகவும், உளுந்து 1,500 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. எப்படி உணவு அல்லது இனிப்புகளை செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள்?

“நாங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமே துணி வாங்கப் போகிறோம், எங்களுக்கு வாங்கினால், நாங்கள் துணியுடன் மட்டுமே வீட்டுக்குப் போக வேண்டி வரும். வருஷத்துக்கு ஒருமுறைதான் துணி வாங்குறோம், அதுனால் பிள்ளைகளுக்குப் பிடிப்பதை வாங்கித் தரணும். அதுதான் ஒரே சாத்தியம்.”

தோட்டத் தொழிலாளர்கள் அன்றாடம் பயன்படுத்தும் கோதுமை மாவே பெரும் பிரச்சினையாக உள்ளது என அவர் விளக்கினார். “இப்போது ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 290 ரூபா. எனவே, முழு நாளும் சோற்றைக் கொண்டு சமாளிக்கிறோம். காய்கறி வாங்குவதும் ஒரு பிரச்சனை. 250 கிராம் மட்டுமே வாங்க முடியும். முன்னர் ஒரு கிலோ வாங்கிய காசில் இப்போது 250 கிராம் மட்டுமே வாங்க முடியும். மழைக்காலங்களில் வீட்டுத்தோட்டத்தில் பயிரிட முடியாது. முன்பெல்லாம் மூன்று முறை மரக்கறி சமைப்போம். ஆனால் இப்போது நாங்கள் ஒரு காய்கறியை சமைத்து அதை மூன்று வேளை சமாளிக்கிறோம்.

அவர் நால் கூலி வேலையை நம்பி வாழும் மக்களின் நிலை குறித்தும் விளக்கினார். “குறைந்தபட்சம், நாங்கள் தோட்டத்தில் வேலை செய்வதால் அவசர தேவைக்காக கடனையாவது பெறலாம். ஆனால் தினசரி கூலி வேலைகளில் தங்கியிருக்கும் நபர்களைப் பற்றி சிந்தியுங்கள். அவர்கள் எப்படி கடன் வாங்க முடியும்? எங்களுக்குத் தெரிந்த இரண்டு மூன்று பிள்ளைகள் உள்ள குடும்பங்கள் கூலி வேலைகளை நம்பி இருக்கின்றன. அதிக பணம் கிடைக்கும் போது அவர்கள் செலவு செய்கிறார்கள், அது மாத இறுதியில் முடிந்து விடும். வரும் மாதத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க அவர்களிடம் பணம் இருக்காது.

தோட்டங்களில் வேலை நிலைமைகள் குறித்து விளக்கிய அவர், தினசரி 1,000 ரூபாய் ஊதியத்தை உறுதி செய்ய மாதம் 10 நாட்களுக்கு மேல் வெயிலிலும், மழையிலும், புயலிலும் வேலை செய்ய வேண்டியுள்ளது. “அதுவும் அதை இதை கழித்த பிறகு 900 ரூபாயாகிவிடும். சில தோட்டங்கள் கொடுப்பனவுகளுடன் 1,000 ரூபாவை செலுத்துகின்றன, சில தோட்டங்கள் 900 ரூபா அல்லது அதற்கும் குறைவாகவே செலுத்துகின்றன. கடன் வாங்கியும் அடகு வைத்தும் வாழ்வை ஓட்டுகிறோம்.

“அவர்கள் எங்களை ஏமாற்றி சுரண்டுகிறார்கள். முன்னதாக நாங்கள் வேலையை முறையாகச் செய்தோம். ஆனால் இப்போது மாற்றங்கள் உள்ளன. நிர்வாகம் தான் நினைப்பதைச் செய்கிறது. கம்பனிகள் தோட்டங்களை வாங்குவதற்கு முன்பு சில சலுகைகள் மற்றும் உரிமைகள் இருந்தன. இப்போது ஒன்றும் இல்லை. வலுக்கட்டாயமாக வேலை வாங்குகிறார்கள். தொழிலாளர்கள் கண்டிப்பாக ஒரு நாளைக்கு 18 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும். சில நூறு கிராம் குறைவாக இருந்தாலும் அரை நாள் பெயர் போடுகிறார்கள். முன்பு இதுபோன்ற முறை இல்லை. பின்னர் தேயிலை கொழுந்தின் மீதியை மேலதிக கிலோவுக்கு, கிலோ 40 ரூபாய் என்று கணக்கிடுவார்கள். இதுபற்றி பல தொழிலாளர்களுக்கு சம்பள நாளில் தான் தெரிய வரும். தொழிலாளர்கள் கனமழையின் போது கொழுந்து பறித்து வந்தாலும் இந்த சலுகை கொடுப்பதில்லை.

'பெண் தொழிலாளர்களுக்கு வேலை மிகவும் கடினம். ஆண்களைப் போல் அவர்கள் வாக்குவாதம் செய்ய மாட்டார்கள் என்பதால் பெண்களுக்கு அதிகம் சட்டம் போடுவார்கள். கொழுந்தின் எடையை வெட்டுவதுத் இதில் அடங்கும். 20 கிலோ கொழுந்துக்கு பல காரணங்களை கூறி 2 கிலோவை குறைப்பார்கள். நாம் கொழுந்து பறிக்கும் இலக்கைப் பார்த்து அவர்கள் இரண்டு அல்லது மூன்று மடங்கு நிறுப்பார்கள். மூன்று முறை நிறுக்கும் போது 9 கிலோவை வெட்டுவார்கள். தராசில் 18.5 என்று காட்டினால், அவர்கள் 18 கிலோவை மட்டும் குறிப்பார்கள், மீதியை அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். 50 பேருக்கு இதை செய்தால் எவ்வளவு இலாபம் என்று யோசியுங்கள்.

“நோய் அல்லது ஏதேனும் விசேட தேவைகளுக்காக நீண்ட விடுமுறை எடுத்தால் மருத்துவ சான்றிதல் கொடுக்க வேண்டும். இதுபோன்ற மருத்துவ சான்றிதழ்களைப் பயன்படுத்தி, எங்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் இருப்பதாகக் கூறி ஓய்வுபெற்றுக்கொள்ள நிர்வாகம் கோரும். இதன் மூலம் தொழிலாளர்களை குறைத்து, ஓய்வு பெற்ற வயதான தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பர். அப்போது அவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க வேண்டியதில்லை. புதிய தலைமுறைக்கு தோட்டங்களில் வேலை கொடுப்பதில்லை.”

தொழிற்சங்கங்களின் பங்கு பற்றி கேட்டபோது அவர் கோபமாக பதிலளித்தார், “தொழிற்சங்கங்கள் எங்கள் பக்கம் திரும்புவதில்லை. தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் இல்லை என்பது போல் தெரிகிறது. தொழிலாளர்கள் சந்தாக்களை நிறுத்திவிட்டதால் அவர்கள் தொழிலாளர்களுக்காக பேசுவதில்லை.”

சோசலிச சமத்துவக் கட்சி 'ஜனநாயக மற்றும் சோசலிசத்திற்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் மாநாட்டிற்காக' முன்னெடுக்கும பிரச்சாரம் பற்றி கலந்துரையாடிய போது, அவர் சாதகமாக பதிலளித்தார். “வேலைத் தளங்களில் நடவடிக்கைக் குழுக்களை அமைத்து, ஒரு மாநாட்டுக்குச் செல்வதற்கான உங்கள் முன்மொழிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், தங்களின் நலன்களுக்காகச் செயல்படும் தொழிற்சங்கத் தலைவர்களைப் போல் நாம் செயல்படக் கூடாது. எங்களுக்காக போராட நடவடிக்கை குழுக்களை உருவாக்குகிறோம். கிடைக்காதவற்றைப் பெற நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். கொழும்பில் இருந்து வந்த உங்கள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை ஏற்கனவே சந்தித்தேன். அத்தகைய குழுக்கள் பற்றி மேலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.”

Loading