வழக்கறிஞர் ஜெனிஃபர் ராபின்சன் ஆஸ்திரேலியாவின் தேசிய ஊடக மையத்தில் அசான்ஜூக்கு வலுவான ஆதரவை வழங்குகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்று கான்பெர்ராவில் உள்ள ஆஸ்திரேலியாவின் தேசிய ஊடக மையத்தில் பேசிய ஜூலியன் அசான்ஜின் வழக்கறிஞர் ஜெனிஃபர் ராபின்சன், தனது கட்சிக்காரர் மீது தொடரப்படும் நீண்டகால அரசியல் துன்புறுத்தல் பற்றி சக்திவாய்ந்த மற்றும் பதிலளிக்க முடியாத குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அக்டோபர் 19, 2022 அன்று, கான்பெர்ராவில் உள்ள ஆஸ்திரேலியாவின் தேசிய ஊடக மையத்தில் ஜெனிஃபர் ராபின்சன் பேசுகிறார். [Photo by Twitter]

அரசு நிதியுதவி பெற்ற ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட ராபின்சனின் உரை, அசான்ஜின் அவல நிலை மற்றும் அவர் மீது அமெரிக்கா வழக்குத் தொடர முயற்சிப்பதன் தாக்கங்கள் பற்றி கூர்மையாக எச்சரிப்பதாக இருந்தது.

அசான்ஜ், மேலும் பல ஆண்டுகள் சிறைவாசம் மற்றும் ‘துன்புறுத்தல் செயல்முறை’ ஆகியவற்றிலிருந்து தப்பிக்க முடியாது என்று அவர் கூறினார். அவர் பிரிட்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டு, உண்மைத் தகவலை வெளியிட்டதற்காக கங்காரு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டால், அது பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு விழும் பெரும் அடியாக இருக்கும் என்றார்.

ஆஸ்திரேலியாவில் அசான்ஜ் வழக்கு பற்றிய இந்த உரை, அமைதியான சூழலில் நிகழ்ந்த ஒரு அரிதான மீறலாக இருந்தது. அவரது பல்வேறு நீதிமன்ற தேதிகள் பற்றி மேலோட்டமாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன, ஆனால் ஒரு ஆஸ்திரேலிய குடிமகன் மற்றும் பத்திரிகையாளரின் துன்புறுத்தல் பற்றி எந்தவொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியும் அல்லது கணிசமான அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை.

2019 ஆம் ஆண்டு ஈக்வடோரின் இலண்டன் தூதரகத்திலிருந்து பிரித்தானிய பொலிசாரால் அசான்ஜ் இழுத்துச் செல்லப்பட்டபோது அவரது தோற்றத்தைப் பார்த்து பலர் அதிர்ச்சியடைந்ததாக ராபின்சன் குறிப்பிட்டார். அவர் இல்லை என்று அவர் கூறினார், ஏனென்றால் ‘ஏழு ஆண்டுகளாக நான் அவரது உடல்நிலை மோசமடைவதைக் கண்டேன்’ என்றார்.

இதேபோல், அமெரிக்கா அசான்ஜ் மீது குற்றப்பத்திரிகை வெளியிட்டு, அவர் கைது செய்யப்பட்டவுடனேயே அவரை நாடுகடத்தும் கோரிக்கையையும் வெளியிட்டபோது சிலர் ஆச்சரியமடைந்தனர். எவ்வாறாயினும், அசான்ஜ், விக்கிலீக்ஸ் மற்றும் தான் உட்பட அதன் பாதுகாவலர்கள் இதைத்தான் பல ஆண்டுகளாக எச்சரித்து வருவதாக ராபின்சன் குறிப்பிட்டார்.

மேலும், ‘பிரிட்டனின் குவாண்டனாமோ விரிகுடா,’ என்று அழைக்கப்படும் பிரிட்டனின் ‘அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட சிறையில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக அசான்ஜ் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்’, அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து வருகிறது என்று ராபின்சன் குறிப்பிட்டார். கடந்த அக்டோபரில் நடந்த நீதிமன்ற விசாரணையில், அசான்ஜை அமெரிக்காவுக்கு நாடுகடத்த வாதிடும் வழக்கறிஞர்கள் அவரது மோசமான நிலை குறித்த மருத்துவ ஆதாரங்களை ஏளனம் செய்து கொண்டிருந்தபோது, அசான்ஜ் கைகளில் தலையை வைத்து சரிவதை நீதிமன்ற பார்வையாளர்கள் பார்த்ததை ராபின்சன் நினைவு கூர்ந்தார். அசான்ஜ், அந்த நேரத்தில் அல்லது அதற்கு சற்று முன்னர், ஒரு சிறிய பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது, அது பெரும்பாலும் ஒரு பெரிய பக்கவாதத்திற்கான முன்னோடியாகும்.

‘ஜூலியனின் மனைவி ஸ்டெலா, அவர் பயப்படும் தொலைபேசி அழைப்பிற்காக கவலையுடன் காத்திருக்கிறார்,’ என்றும், ‘அவர் சிறையில் கடும் துன்பத்தை அனுபவித்து வருகிறார், அவர் அதிலிருந்து தப்பிப்பிழைப்பாரா என்பதும் அவருக்குத் தெரியாது’ என்றும் ராபின்சன் கூறினார்.

அசான்ஜின் நாடுகடத்தல் வழக்கு எந்த நிலையில் உள்ளது என்பதை ராபின்சன் சுருக்கமாக விளக்கினார். அமெரிக்க சிறைச்சாலை அமைப்பில் அசான்ஜ் தடுத்து வைக்கப்படும் நிலைமைகளின் காரணமாக அவரை நாடுகடத்துவது ‘அடக்குமுறையாகும்’ என்று கடந்த ஆண்டு தொடக்கத்தில் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம், முதல் பிரிட்டிஷ் விசாரணையில் அவர் வெற்றி பெற்றதாக ராபின்சன் விளக்கினார். அவர் ‘சிறப்பு நிர்வாக நடவடிக்கைகளின் (Special Administrative Measures-SAMs) கீழ் வைக்கப்படுவார், அது உரிமை கோரும் குழுக்களால் விவரிக்கப்பட்டது போல அமெரிக்க சிறைச்சாலைகளின் ‘இருண்ட மூலையில்’ முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு கொடூர நிலைக்கு அவரை ஆளாக்கும்.

ட்ரம்ப் நிர்வாகம், ‘கோல் கம்பங்களை மாற்ற முயன்றது’ என்று ராபின்சன் மேலும் தொடர்ந்தார். அசான்ஜ் சிறப்பு நிர்வாக நடவடிக்கைகளின் கீழ் வைக்கப்பட மாட்டார் என்று அது ‘உறுதி’ அளித்துள்ளது. இருப்பினும், சர்வதேச மன்னிப்பு சபை, அத்தகைய வாக்குறுதிகள் ‘எழுத்துபூர்வமாக இல்லாத பட்சத்தில் மதிப்பற்றவையே’ என்று விவரித்ததை ராபின்சன் மேற்கோள்காட்டினார்.

அசான்ஜ் விஷயத்தில், அது இன்னும் மோசமாக இருந்தது, அமெரிக்காவில் ஒருமுறை எந்த நேரத்திலும் அவரை சிறப்பு நிர்வாக நடவடிக்கைகளின் கீழ் வைக்க அனுமதிக்கும் உட்பிரிவுகள் அடங்கிய உத்தரவாதங்கள் வழங்கப்பட்டன. அவர் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவாரா என்பதை அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) தீர்மானிக்கும்.

ராபின்சன், Yahoo News செய்திகளை மதிப்பாய்வு செய்தார்! 2017 இல், அசான்ஜ் இலண்டனில் அரசியல் அகதியாக இருந்தபோது, அவரை நாடுகடத்த அல்லது படுகொலை செய்ய CIA சதித்திட்டம் தீட்டியதை கடந்த செப்டம்பரில் வெளியான புலனாய்வு அறிக்கை காட்டியது என்று கூறினார். சதித்திட்டத்தின் அசாதாரணமான மற்றும் முன்னோடியில்லாத தன்மையை வலியுறுத்தி, அவர் இந்த விஷயத்தை பலமுறை கூறினார்.

ஆயினும்கூட, உயர் நீதிமன்றம் அமெரிக்க ‘உறுதிமொழிகளை’ ஏற்றுக்கொண்டது.

‘சரியான செயல்முறையோ அல்லது சட்ட விதிமுறைகளோ குறைவாகவே பின்பற்றப்படும்’ அசான்ஜின் வழக்கில், CIA இன் வெளிப்பாடுகள் துன்பியல் கோரிக்கைகளின் ஒரு பகுதியாகும் என்று ராபின்சன் கூறினார்.

“அமெரிக்க சட்ட வரலாற்றில் ஒரு பத்திரிகையாளர் மேற்கொண்ட இதழியல் நடவடிக்கைகளுக்காக அவர் மீது உளவுச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படுவது இதுவே முதல் முறையாகும். அதிலும், ஒரு ஆஸ்திரேலிய குடிமகனாக அஜான்ஜ் எந்த அரசியலமைப்பு பாதுகாப்பும் பெற தகுதியற்றவர் என்று அமெரிக்கா வாதிடும்.”

அசான்ஜை நாடுகடத்த முனைவதற்கு அடிப்படையாக இருந்த அமெரிக்க-இங்கிலாந்து உடன்படிக்கை, அரசியல் குற்றங்களுக்காக அவர் நாடுகடத்தப்படுவதை வெளிப்படையாகத் தடை செய்தது. ஆனால், வழக்கின் வெளிப்படையான அரசியல் தன்மை இருந்தபோதிலும், நடவடிக்கைகள் தொடர்ந்தன. அமெரிக்க குற்றப்பத்திரிகையின் முக்கிய சாட்சியான ஐஸ்லாந்திய குற்றவாளியான சிகுர்தூர் தோர்டார்சன் கடந்த ஆண்டு தனது சாட்சியம் பொய்யானது என்று ஒப்புக்கொண்டார். அமெரிக்கா ‘வழக்கின் உண்மைகளை வேண்டுமென்றே தவறாக சித்தரித்தது.’ மேலும் அது, CIA இன் செயல்பாடுகள் மூலம், வழக்கறிஞர்களுடனான அசான்ஜின் சலுகை பெற்ற தகவல்தொடர்புகளை உளவு பார்த்ததுடன், ஒப்படைப்பு வழக்கு தொடர்பான சட்ட ஆவணங்களைக் கைப்பற்றியது.

வியட்நாமில் அமெரிக்கப் போரின் குற்றத்தன்மையை அம்பலப்படுத்திய பென்டகன் ஆவணங்களை கசியவிட்ட பிரபல டேனியல் எல்ஸ்பேர்க்கை ராபின்சன் மேற்கோள் காட்டினார். நிக்சன் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட உளவுச் சட்டத்தின் கீழ் எல்ஸ்பேர்க்கின் வழக்கு, தவறான அபிப்பிராயத்தின் பேரில் நீதிமன்றத்தால் புறக்கணிக்கப்பட்டது. அசான்ஜின் வழக்கை விட தனது சொந்த வழக்கில் துஷ்பிரயோகங்கள் மிக அதிகம் என்று எல்ஸ்பேர்க் கூறியுள்ளார்.

அசான்ஜின் வழக்கறிஞர்கள், நாடுகடத்தலுக்கு ஒப்புதல் அளித்த உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வருமா என்பதை நீதிமன்றம் இன்னும் தெரிவிக்கவில்லை. அது நடந்தால், அசான்ஜ் தனது சுதந்திரத்திற்கான எந்தவொரு வாய்ப்புக்கும் முன்னதாக, பல ஆண்டுகளுக்கு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார் என்று ராபின்சன் குறிப்பிட்டார். ‘அவர் அவ்வளவு காலம் வாழ மாட்டார்’ என்று அவர் எச்சரித்தார்.

இதன் பொருள், இந்த வழக்கிற்கு ‘ஒரு அவசர அரசியல் தீர்வு தேவை’ என்பதாகும்.

அசான்ஜ் எதற்காக வழக்குத் தொடரப்படுகிறார் என்பதை ராபின்சன் நினைவு கூர்ந்தார். ஈராக்கின் பாக்தாத்தில் அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் பொதுமக்களையும் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்களையும் சுட்டுக் கொன்றதைக் காட்டும், பாராட்டப்பட்ட ‘கூட்டுக்கொலை’ காணொளியைக் குறிப்பிட்டு, அறையில் இருந்த பத்திரிகையாளர்களிடம் அவர் நேரடியாக இவ்வாறு கூறினார்: “ஈராக்கில் உங்கள் பத்திரிகையாளர் சகாக்கள் கொல்லப்பட்டதை அம்பலப்படுத்தியதற்காக ஜூலியன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.”

விக்கிலீக்ஸ் வெளியீடுகள், அமெரிக்காவால் மறைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலைகளையும், மற்றும் அதன் போர்க்குற்றங்களையும் அம்பலப்படுத்தியது. ‘இதுபோன்ற பத்திரிகைகள் பலம் படைத்தவர்களை ஆய்வுக்கு உட்படுத்துகின்றன, ஆனால் அவர்கள் அதை விரும்பவில்லை,’ என்று அவர் கூறினார். விக்கிலீக்ஸ், வாஷிங்டன், இலண்டன் மற்றும் கான்பெர்ராவில் உள்ள அதிகார கட்டமைப்புகள், மற்றும் ‘ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள மக்களின் தெருக்களிலும் வீடுகளிலும்’ அவை எப்படி நடந்து கொள்கின்றன என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, ஆஸ்திரேலிய அரசாங்கங்கள், தொழிற்கட்சி மற்றும் தாராளவாத தேசியக் கட்சி ஆகியவை, அசான்ஜ் ஒரு ஆஸ்திரேலிய குடிமகன் மற்றும் பத்திரிகையாளர் என்ற முறையில் அவரது சுதந்திரத்தைப் பாதுகாக்க தலையிட வேண்டும் என்பதான அசான்ஜின் வழக்கறிஞர்களின் முறையீடுகளை நிராகரித்து வந்துள்ளதாக ராபின்சன் குறிப்பிட்டார். தற்போதைய பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸ், ‘போதும் என்பது போதும்’ என்றும், அசான்ஜ் மீது வழக்குத் தொடர தொடரப்படும் ‘வேலைகளை அவரால் பார்க்க முடியவில்லை’ என்றும் கூறினார். ஆனால் அந்த வார்த்தைகள் செயல் வடிவம் பெற வேண்டும் என்று ராபின்சன் கூறினார்.

உண்மையில், அல்பானிய அரசாங்கம் அசான்ஜ் தொடர்பாக அமெரிக்காவிடம் எந்த கோரிக்கையும் முன்வைத்ததற்கான ஒரு சிறு அறிகுறியும் தெரியவில்லை. மாறாக, அல்பானீஸ் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான அமெரிக்க இராணுவ மோதல்களுடனான ஆஸ்திரேலியாவின் ஒருங்கிணைப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார்.

ராபின்சன் பேசுகையில், அசான்ஜின் வழக்கு ஒரு முன்னுதாரணத்தை நிறுவும் என்று குறிப்பிட்டார், அதாவது, “அமெரிக்காவைப் பற்றிய உண்மைத் தகவலை வெளியிடும் எந்தவொரு பத்திரிகையாளரோ அல்லது ஆசிரியரோ அவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர் நாடுகடத்தப்படக்கூடும்” என்பதுடன், அமெரிக்காவில் சிறைத் தண்டனையை அவர் எதிர்கொள்ள நேரிடும் என்பதற்கு இந்த வழக்கு முன்னுதாரணமாக இருக்கும்.

உத்தியோகபூர்வ ஊடகங்களின் பிரதிநிதிகளை கொண்டிராத அறையில் இந்த எச்சரிக்கை செய்யப்பட்டது. Sydney Morning Herald இன் டேவிட் குரோவ் மட்டுமே, ஊடக மன்ற நிகழ்வில் கலந்து கொண்டு ராபின்சனிடம் கேள்வி எழுப்பிய ஒரே முக்கிய பத்திரிகையாளர் ஆவார்.

ராபின்சன் நன்கு அறியப்பட்ட மற்றும் மிகவும் மதிக்கப்படும் ஒரு நபராவார். அவர் ஆஸ்திரேலியாவின் மிகவும் வெற்றிகரமான மனித உரிமைகள் வழக்கறிஞர்களில் ஒருவராவார்.

நாட்டின் அனைத்து முக்கிய ஊடகவியலாளர்கள் உட்பட செய்தியாளர்கள் குழுவின் புறக்கணிப்பு என்பது, ஊடகங்களின் அரசாங்கத்திற்கு ஒத்தூதும் மற்றும் ஊழல் நிறைந்த தன்மையை வெட்கக்கேடான வகையில் காட்சிப்படுத்துவதாக இருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கான சீனத் தூதர் கடந்த ஆகஸ்ட் மாதம் இதே ஊடக மையத்தில் பேசியபோது, பத்திரிகையாளர்கள் ஒருவரை அடுத்து ஒருவர் எழுந்து நின்று சீனாவில் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றி கோபமாக அவரிடம் கேள்விகள் கேட்டனர்.

உத்தியோகபூர்வ ஆஸ்திரேலிய ஊடகம், தைவான், உக்ரேன் மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் பிற மையப் புள்ளிகளில் ஜனநாயக உரிமைகள் குறித்து தீவிர அக்கறை கொண்டிருப்பதாகக் கூறுகிறது. ஆனால், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் உலகெங்கிலும் உள்ள உண்மையான பத்திரிகையாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு பரந்த தாக்கங்களை ஏற்படுத்திய பத்திரிகை சுதந்திரத்தின் மீதான ஒரு பெரிய மற்றும் முன்னோடியில்லாத தாக்குதல் குறித்து இது அலட்சியமாக உள்ளது.

Loading