இலங்கை தோட்டத் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்திற்கு மத்தியில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

செப்டம்பர் 14 அன்று, இலங்கையின் பெருந்தோட்டங்களை தளமாகக் கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மஸ்கெலியா தோட்டக் கம்பனிக்கு சொந்தமான 14 தோட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையை ஏற்றுமதிக்கு கொண்டு செல்வதை தடுக்கும் போராட்டமொன்றை திடீரென நடத்தியது. தொழிற்சங்கத்தின் இந்த நடவடிக்கை, செப்டம்பர் 23 வரை தொடர்ந்தது. தோட்டத் தொழிலாளர்களுக்கு தினசரி 1,000 ரூபாய் சம்பளம் -இரண்டு முதல் மூன்று அமெரிக்க டாலர்கள் வரை- வழங்கப்பட வேண்டும் என்பதே இந்த போராட்டத்தின் கோரிக்கையாகும்.

இந்த முற்றுகை உள்ளூர் இ.தொ.கா. தலைவர்களை மட்டுமே உள்ளடக்கியதாக இருந்ததுடன், தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களை நடவடிக்கையில் சேர வேண்டாம் என்று தொழிற்சங்கம் அறிவுறுத்தியது. செப்டெம்பர் 23 அன்று, இ.தொ.கா.வின் உத்தரவுகளை பின்பற்றும் ஊழியர்களுக்கு வேலை வழங்குவதை தோட்ட நிர்வாகம் நிறுத்தியது. தொழிற்சங்க அதிகாரிகள் உடனடியாக சரணடைந்து அன்றைய தினம் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

செப்டம்பர் 19 அன்று, இதே கோரிக்கையை முன்வைத்து மஸ்கெலியாவில் உள்ள கிளென்டில்ட், பிரவுன்ஸ்விக் மற்றும் லக்ஸபான தோட்டங்களில் தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) தனியான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. அந்த தோட்டங்களில் உள்ள தேயிலை தொழிற்சாலைகள் முன்பாக நடத்தப்பட்ட மறியல் போராட்டங்கள் ஒரு மணி நேரம் மட்டுமே இடம்பெற்றன. தொழிற்சங்கங்கள் அழைக்காவிட்டாலும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இ.தொ.கா. மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இந்த நடவடிக்கைகள், சம்பள அதிகரிப்பு மற்றும் மேம்பட்ட வேலை நிலைமைகளுக்காக தோட்டத் தொழிலாளர்களின் உண்மையான போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்கு எதிராக, ஊதியங்கள் மற்றும் நிலைமைகள் மீது கம்பனிகளின் அதிகரித்துவரும் தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாளர்களின் கோபத்தை சிதறடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

போராட்டங்களைத் தொடர்ந்து, கம்பனிகள் ஆகஸ்ட் மாதத்திற்கான 1,000 ரூபாய் தினசரி ஊதியத்தின்படி கணக்கிடப்பட்ட ஊதிய நிலுவைத் தொகையை வழங்கின. 2021 ஏப்ரலில் 1,000 ரூபாய் தினக்கூலி வழங்குமாறு அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்ட 18 மாத ஊதிய நிலுவைத் தொகையை கம்பனிகள் செலுத்தியிருக்க வேண்டும் என்ற உண்மையைப் மூடி மறைத்து, இதை 'வெற்றி' என்று தொழிற்சங்கங்கள் இழிந்த முறையில் பாராட்டிக்கொண்டன.

பத்து கோரிக்கைகள் சம்பந்தமாக கம்பனியிடமிருந்து கடிதம் கிடைத்துள்ளதாக ஊடகங்களுக்கு கூறிய இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், தொழிலாளர்களை ஏமாற்றும் மற்றொரு முயற்சியில், கோரிக்கைகள் என்ன என்பதை வெளிப்படுத்தவில்லை.

தோட்டத் தொழிற்சங்கங்கள் 2015 இல் 1,000 ரூபா நாளாந்த சம்பளத்திற்கு முதன்முதலில் அழைப்பு விடுத்தன, ஆனால் இந்த கோரிக்கைக்காக போராடிய தொழிலாளர்களின் போராட்டங்களை மீண்டும் மீண்டும் காட்டிக்கொடுத்தன.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு தொடர்பாக தோட்டத் தொழிலாளர்களிடையே அதிகரித்துவரும் அமைதியின்மையை எதிர்கொண்ட முன்னாள் இராஜபக்ஷ அரசாங்கம், 2021 ஏப்ரலில் தோட்டக் கம்பனிகளுக்கு 1,000 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்குமாறு வர்த்தமானியை வெளியிட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த நிறுவனங்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அவர்களின் மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 9 அன்று தள்ளுபடி செய்த நீதிமன்றம், அரசின் உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்டது. இதற்குப் பதிலடியாக, தோட்டக் கம்பனிகள், தொழிற்சங்கங்களின் ஆதரவுடன், 1,000 ரூபா தினக்கூலியை முழுவதுமாக வழங்குவதைத் தவிர்ப்பதற்காக, தாங்க முடியாத அளவிற்கு வேலைச் சுமையை உயர்த்தியுள்ளன.

செப்டம்பர் 12, 2022 அன்று நடந்த போராட்டத்தின் போது ஒரு கிளனுகி தோட்டத் தொழிலாளி ஊடகங்களிடம் பேசுகிறார் [Photo: WSWS]

ஒரு தொழிலாளிக்கு தினசரி தேயிலை கொழுந்து பறிக்கும் இலக்கு 16 கிலோவிலிருந்து 20 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளதுடன் தினசரி நிலத்தை துப்புரவு செய்யும் இலக்கு 75 முதல் 150 சதுர மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் புதிய இலக்குகளை அடைய முடியாவிட்டால் அவர்களின் ஊதியம் வெட்டப்படும். எடுத்துக்காட்டாக, ஒரு ஊழியர் 20 கிலோகிராம்களுக்குக் குறைவாக கொழுந்து பறித்தால், முதல் 10 கிலோவுக்கு அவர்களது ஊதியத்தில் பாதி மட்டுமே வழங்கப்படுவதுடன், மேலதிக கொழுந்துக்கு ஒரு கிலோவுக்கு 40 ரூபாய் வழங்கப்படும்.

பணவீக்கம், ஊதிய வெட்டுக்கள் மற்றும் தாங்க முடியாத வேலை நிலைமைகள் மீதான தொழிலாளர்களின் கோபத்திற்கு பிரதிபலிக்கும் வகையில் மட்டும் அன்றி, தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிகளுடனான அவற்றின் ஒத்துழைப்புக்கும் எதிரான தொழிலாளர்களின் எழுச்சி குறித்த அச்சம் காரணமாகவே, இ.தொ.கா. மற்றும் தொழிலாளர் தேசிய சங்க அதிகாரிகள் கடந்த மாத போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

கம்பனி நிர்வாகங்களின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஏனைய தோட்டத் தொழிலாளர்களின் பரந்த பங்கேற்பைத் தடுப்பதற்காகவும், தங்களின் நடவடிக்கைகள் அடையாள நடவடிக்கைகள் மட்டுமே என்ற செய்தியை கம்பனிகளுக்கு அனுப்புவதற்காகவும் எதிர்ப்புகள் வேண்டுமென்றே மட்டுப்படுத்தப்பட்டன.

இ.தொ.கா. மற்றும் தொழிலாளர் தேசிய சங்கமும் தங்கள் எதிர்ப்புக்களை அழைத்ததற்கான மற்றொரு குறிப்பிடத்தக்க காரணம், அப்பகுதியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்ப்பதாகும். சோசலிச சமத்துவக் கட்சியின் முன்முயற்சிகளைத் தொடர்ந்து, தோட்டத் தொழிலாளர்கள், கம்பனிகள் முன்னெடுக்கும் தாக்குதல்களைத் தோற்கடிப்பதற்கும் தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்புகளுக்கும் எதிராகப் போராடுவதற்கும் பல தோட்டங்களில் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை அமைக்கத் தொடங்கியுள்ளனர்.

செப்டெம்பர் 18 அன்று மஸ்கெலியாவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய இ.தொ.கா. பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், “சில அரசியல்வாதிகள் திடீரென மலையகத்துக்கு வந்து தொழிற்சங்கங்களை விமர்சிக்கின்றனர் ஆனால் தோட்ட நிறுவனங்களை விமர்சிக்கவில்லை. நம்மில் சிலர் அவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த நிலை மாற வேண்டும்” என்றார்.

தொண்டமான் இந்த 'அரசியல்வாதிகள்' என்று நேரடியாகப் பெயரிடவில்லை என்றாலும், அவரது இலக்கு சோசலிச சமத்துவக் கட்சியாகும். தோட்டத் தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக அவர்களை அணிதிரட்டுவதற்கும் நீண்ட மற்றும் கொள்கை ரீதியான போராட்ட வரலாற்றை சோசலிச சமத்துவக் கட்சி கொண்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியானது, தோட்டக் கம்பனிகள் மற்றும் முதலாளித்துவ அரசின் சார்பாக தொழிற்சங்கங்கள் ஆற்றிவரும் பிற்போக்கு பாத்திரத்தை முறையாக விமர்சித்து அம்பலப்படுத்தியுள்ளது. 'இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்' என்ற தொண்டமானின் அச்சுறுத்தும் கருத்தை சோசலிச சமத்துவக் கட்சி தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அதன் முன்னோக்கிற்கு அணிதிரளும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக இ.தொ.கா ஒரு ஆத்திரமூட்டலைத் திட்டமிடலாம் என்று எச்சரிக்கிறோம்.

உண்மையில், ஆகஸ்ட் 28 அன்று, சாமிமலையில் உள்ள ஒரு இ.தொ.கா. தலைவர், ஓல்டன் மற்றும் கிளனகி தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து, சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஆத்திரமூட்டலுக்கு முயற்சித்தார். வேலை நீக்கம் செய்யப்பட்ட 38 ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்தக் கோரியும், அவர்கள் மீதான நீதிமன்ற வழக்குகளைத் விலக்கிக்கொள்ளக் கோரியும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1,000 ரூபா நாளாந்த சம்பளம் கோரி தீவு முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை உள்ளடக்கிய வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது வேலை நீக்கம் செய்யப்பட்டனர். ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையாடலில் இ.தொ.கா. நிர்வாகத்துடனும் பொலிஸுடனும் நேரடியாக ஒத்துழைத்தது. அதே நேரத்தில் தொழிலாளர் தேசிய சங்கம் ஒரு குற்றகர மௌனத்தை கடைப்பிடித்தது. இந்த தொழிலாளர்களை பாதுகாப்பதன் பேரில் இலங்கை தொழிலாளர்களை அணிதிரட்ட தலையிட்ட ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.

கிளனுகி தோட்டத் தொழிலாளர்கள் 12 செப்டம்பர் 2022 அன்று ஊதிய அதிகரிப்பு மற்றும் குறைந்த தினசரி வேலை இலக்குகளைக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். [Photo: WSWS]

செப்டம்பர் 12 அன்று, சோசலிச சமத்துவக் கட்சியும் கிளனுகி நடவடிக்கைக் குழுவும் கிளனுகி தோட்டத்தில் ஊதிய வெட்டுக்கள் மற்றும் புதிய வேலைச்சுமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. போராட்டத்தில் 75க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கைத் தொழிலாள வர்க்கத்தின் மிக ஏழ்மையான பிரிவினரான தோட்டத் தொழிலாளர்கள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் குறைந்த சம்பளம் ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 70.2 வீதமாக உயர்ந்துள்ளதுடன் உணவுப் பொருட்களின் விலை 84.6 வீதத்தால் அதிகரித்துள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் பிரதான உணவுப் பொருளான கோதுமை மாவின் விலை கிலோ ஒன்று 350 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்தும் மண்ணெண்ணெயின் விலை அண்மைய மாதங்களில் 87ல் இருந்து 320 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இந்த நிலைமைகளின் கீழ் வெறும் 1,000 ரூபாய் தினசரி ஊதியம் முற்றிலும் போதாது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு சுட்டெண்னுக்கு ஏற்ப ஊதியம், முழு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, ஓய்வூதியம் மற்றும் கண்ணியமான வீடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய குறைந்தபட்சம் 75,000 ரூபாய் (சுமார் 200 அமெரிக்க டாலர்கள்) மாத ஊதியம் தேவைப்படுகிறது.

பெருந்தோட்டங்களில் வளர்ந்து வரும் எதிர்ப்புக்கள், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா உட்பட இலங்கையிலும் சர்வதேச அளவிலும் ஊதியங்கள் மற்றும் நிலைமைகள் மீதான தொழிலாள வர்க்க போராட்டங்களின் அலையின் ஒரு பகுதியாகும்.

தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள், மற்றும் ஏனைய அனைத்து வேலைத் தளங்கள் மற்றும் நிறுவனங்களிலும் உள்ள தொழிலாளர்கள், தங்கள் போராட்டங்களை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதன் மூலம் மட்டுமே தங்கள் ஊதியங்களையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க முடியும். அதனால்தான் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து சுயாதீனமாக ஐக்கியப்பட்ட தொழிற்துறை மற்றும் அரசியல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குமாறு தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டம், வங்கிகள், பெரும் நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை தேசியமயமாக்குவதற்கும், தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் அவற்றை வைப்பதற்கும் சோசலிச கொள்கைகளில் முழு தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டுவதற்குமான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே அபிவிருத்தி செய்யப்பட முடியும். செல்வந்தர்களின் இலாபத்திற்காக அன்றி, பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் அவசரத் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தி மறுசீரமைக்கப்பட வேண்டும்,

இந்த முன்னோக்கிற்கு இணங்க, சோசலிச சமத்துவக் கட்சி, இந்த கொள்கைகளை செயல்படுத்துவதற்கு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டத்திற்கு களத்தை தயாரிப்பதற்காக நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகளால் நடத்தப்படும் ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான தொழிலாளர் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மாநாட்டிற்காகப் பிரச்சாரம் செய்து வருகிறது.

Loading