மின்சாரம், பெற்றோலியம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊழியர்களுக்கு ஓர் அழைப்பு! தனியார்மயமாக்கல் மற்றும் வேலை வெட்டுக்கு எதிராக போராட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை உருவாக்குவோம்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை மின்சார சபை (இ.மி.ச.), பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கன் விமானசேவை ஆகிய நிறுவனங்களை அவசரமாக மறுசீரமைக்க ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால், இந்த மூன்று நிறுவனங்களில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உடனடியாக வேலை இழப்பு, ஊதிய வெட்டுக்கள் மற்றும் வேலை அதிகரிப்பு போன்ற ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.

22 ஆகஸ்ட் 2022 அன்று எரிசக்தி அமைச்சின் முன் பெட்ரோலிய கூட்டுத்தாபன தொழிலாளர்கள் நடத்திய மறியல் போராட்டம் [Photo: WSWS]

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு இணங்க அனைத்து பொது நிறுவனங்களையும் மறுசீரமைத்து தனியார்மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இ.மி.ச., பெட்ரோலியம் மற்றும் ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனங்களில் இந்த திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்பட உள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), தொழிலாளர்கள் உடனடியாக தங்கள் நிறுவனங்களில் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கி, வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்திற்கு முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றது.

தற்போதுள்ள தொழிற்சங்கங்கள் இந்த உரிமைகளுக்கான போராட்டத்தை நசுக்கவே செயல்படுகின்றன. இந்த தொழிற்சங்கங்கள் ஏற்கனவே அரசாங்கம் மற்றும் பெருநிறுவன அதிகாரிகளுடன் 'மறுசீரமைப்பு' திட்டத்தில் இணைந்துகொள்ள தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.

அரசாங்கம் மற்றும் தனியார் துறையில் ஒவ்வொரு வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும், நிறுவனங்களிலும் மற்றும் கிராமங்களிலும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக சோ.ச.க. இந்த கோரிக்கையை முன்வைக்கிறது. எல்லா இடங்களிலும் அரசாங்கம், அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுடன் ஏதோ ஒரு வகையில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்கி, கலைத்து, சிக்கனத் திட்டத்தைச் செயல்படுத்த கூட்டுச் சேர்ந்துள்ளன.

தொழிலாளர்-ஏழை தொழிலாளர் குழுக்களின் மூலம், அனைத்து தொழிலாளர்களையும் ஏழைகளையும் ஐக்கியப்படுத்தி, முதலாளிகள் மற்றும் அவர்களது அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதற்காக, தொழிலாளர்களதும் ஏழைகளதும் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டைக் கட்டியெழுப்ப சோ.ச.க. போராடி வருகிறது.

இலங்கையின் முதலாளித்துவ அமைப்பு முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ள நிலைமையில், சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கனத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விக்கிரமசிங்க அரசாங்கம் சபதம் செய்துள்ளதை நாம் அறிவோம்.

இ.மி.ச. மற்றும் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்புக்காக நியமிக்கப்பட்ட குழு, அதன் பிரேரணையை இம்மாத இறுதியில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, 'இ.மி.ச. மற்றும் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்பு யார் எதிர்த்தாலும் செயற்படுத்தப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் 4,200 தொழிலாளர்களுக்குப் பதிலாக 500 'நல்ல' தொழிலாளர்களும் 26,000 இ.மி.ச. தொழிலாளர்களில் பாதி பேரும் போதுமானவர்கள் என அமைச்சர் விஜேசேகர ஆகஸ்ட் 27 அன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் வலியுறுத்தினார். கிட்டத்தட்ட 3,700 எரிபொருள் கூட்டுத்தாபன தொழிலாளர்கள் மற்றும் 13,000 இ.மி.ச. தொழிலாளர்களின் வேலைகளை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்பதை இது குறிக்கிறது.

நீர் மின்சாரம், அனல் மின்சாரம், நிலக்கரி மின்சாரம் மற்றும் புதுப்பிக்க முடியாத எரிசக்தி உற்பத்தி, மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பிற செயல்பாடுகள் போலவே இ.மி.ச. செயற்பாடுகளை மேற்கொள்ள, முதலாளித்துவ வணிகர்களுடன் தனி மின் உற்பத்தி கூட்டு முயற்சிகளை அமைப்பதும் அரசாங்கத்தின் முன்மொழிவுகளில் அடங்கும்.

பெட்ரோலியம் இறக்குமதி விநியோகம் மற்றும் விற்பனை மற்றும் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 700 நிரப்பு நிலையங்கள் அளவில் அந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன.

தற்போது அரசாங்கத்திற்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனத்தின் 49 சதவீத பங்குகள் தனியாருக்கு விற்கப்படுகின்றன. முதல் கட்டமாக, உணவு விநியோகம் மற்றும் அடித்தள சேவை துறைகள் அரச-தனியார் கூட்டு நிறுவனங்களாக மாற்றப்படும். இதன் விளைவாக நூற்றுக்கணக்கான வேலைகள் அழிக்கப்படுவதுடன் தொழிலாளர்கள் இதுவரை அனுபவித்து வந்த வேலை நிலைமைகள் மற்றும் சலுகைகளில் வெட்டுக்கள் முன்னெடுக்கப்படும்.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள், ஆழ்ந்துவரும் உலகப் பொருளாதார நெருக்கடியை தொழிலாளர்கள் மற்றும் எஞ்சிய ஏழைப் பிரிவினர் மீது சுமத்தி, முதலாளிகளின் இலாபங்களைப் பாதுகாப்பதற்கான தாக்குதலைத் தொடங்கியுள்ளன. கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் உக்ரைனில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோ முன்னெடுத்து வரும் போரின் காரணமாக அனைத்து நாடுகளிலும் நெருக்கடி ஆழமடைந்து வருகிறது.

விக்கிரமசிங்க அரசாங்கத்தின் தலைமையிலான இலங்கையின் முதலாளித்துவ ஆளும் வர்க்கம், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் இழப்பில் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளைத் தாக்குவதன் மூலம் நெருக்கடியிலிருந்து மீள முயற்சிக்கிறது. பொதுமக்களை மேலும் நெருக்குவதன் மூலம் வெளிநாட்டுக் கடனை அடைப்பதாக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு உறுதியளித்துள்ளது.

மேலும், அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக எழும் எந்தவொரு எதிர்ப்பையும் அல்லது போராட்டத்தையும் ஈவிரக்கமின்றி நசுக்கத் தயாராக இருப்பதாக விக்கிரமசிங்க அரசாங்கம் நிரூபித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றிய வெகுஜனப் போராட்டங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும், பல்கலைக்கழக மாணவர்களை பயங்கரவாத தடைச்சட்டங்களின் கீழ் தண்டிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இ.மி.ச., பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமானசேவையினதும் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு பிரிவினருக்கும், முதலாளித்துவ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் பிரச்சாரங்களின் மூலம் தங்கள் உரிமைகளை பாதுகாக்க முடியாது.

தொழிற்சங்க அதிகாரத்துவம் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் தாக்குதலுக்கு முழுமையாக ஆதரவளிக்கிறது. இ.மி.ச. பொறியியலாளர் சங்க அதிகாரத்துவம், ஆகஸ்ட் 7 அன்று, த மார்னிங் செய்தித்தாளிடம் பேசும் போது, தொழிற்சங்கம் தனியார்மயமாக்கலுக்கு எதிரானது அல்ல என்றும் அது துறைசார் 'நிபுணர்களால் மேற்கொள்ளப்பட வேண்டும்' என்றும் கூறியுள்ளது.

இதே பத்திரிகைக்கு இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ரஞ்சன் ஜெயலால், 'நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும், எனவே நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் நாங்கள் அதை தனியார்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கக்கூடாது' என்று கூறியிருந்தார். 'மறுசீரமைப்பு' செயல்முறை தனியார்மயமாக்கலின் முதல் படியாகும்.

முதலாளித்துவ அமைப்பின் தற்போதைய மோசமான நெருக்கடியையே 'நாட்டின் தற்போதைய நிலை' என்று ஜெயலால் குறிப்பிடுகிறார். இ.மி.ச. மற்றும் ஏனைய துறையில் உள்ள தொழிற்சங்கங்கள், முதலாளித்துவ வர்க்கம் விரும்பியபடி நெருக்கடியைத் தீர்க்க உதவுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) ஒரு தலைவராகவும் ஜெயலால் உள்ளார். இந்தக் கட்சி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு எதிரானது அல்ல.

ஆகஸ்ட் 22 அன்று, எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி, கூட்டுத்தாபனத்தை 'தனியார்மயமாக்க வேண்டாம்' என்று கோரி அமைச்சரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தன. எரிபொருள் கூட்டுத்தாபனத் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ள கோபத்தின் காரணமாக, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து தனியார்மயமாக்கலைத் தடுத்து நிறுத்தலாம் என்ற மாயையை உருவாக்குவதன் பேரில் தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தாலும், அதை கணக்கெடுக்கப் போவதில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த காலத்தில் தொழிற்சங்கங்கள் எவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுக்கின்றன என்பதை சிந்திக்கும் தொழிலாளர்கள் அறிவார்கள்.

ஏப்ரல் முதல் நான்கு மாதங்களில், இராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம், முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு போதுமான பலத்தைக் காட்டியது. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போதிலும், தொழிற்சங்கங்களோ இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்திற்கான ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஜே.வி.பி.யினதும் அழைப்புகளுக்கு பின்னால் தொழிலாளர்களை திருப்பிவிட்டன. இந்த முதலாளித்துவக் கட்சிகள் எதுவும் சர்வதேச நாணய நிதிய உத்தரவுகளை அமல்படுத்துவதற்கு எதிரானவை அல்ல.

இ.மி.ச., எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமானசேவை தொழிலாளர்களுக்கு, முதலாளித்துவ அரசாங்கம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே தனியார்மயமாக்கலுக்கு எதிராக வேலைகள் மற்றும் ஊதியங்கள் உட்பட தங்கள் சமூக உரிமைகளைப் பாதுகாக்க முடியும். இந்தப் போராட்டத்தை தங்கள் கைகளில் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த நிறுவனங்கள் மற்றும் வேலைத் தளங்களில் தொழிற்சங்கங்கள் சாராத நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதன் மூலமே இதைச் செய்ய முடியும்.

இந்த நடவடிக்கை குழுக்கள் தனியார்மயமாக்கல், வேலை மற்றும் ஊதிய வெட்டுக்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தீவிரமாக போராடும். ஏனைய தொழிலாளர்கள், கிராமப்புற ஒடுக்கப்பட்ட மக்கள், வேலையில்லாத இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரை இந்தப் போராட்டக் குழுக்களில் அணிதிரட்ட நடவடிக்கை குழுக்கள் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும்.

கடந்த மாதங்களில் இலங்கையில் நடந்ததைப் போலவே, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளில் உள்ள தொழிலாளர்களும் பணவீக்கத்துக்கும் வாழ்க்கை நிலைமைகள் நசுக்கப்படுவதற்கு எதிராகவும் ஊதிய அதிகரிப்பு கோரியும் தங்கள் வேலைகளை காப்பாற்றிக்கொள்வதற்கான வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்கு வருகிறார்கள். அந்த நாடுகளில் பலவற்றில், வாகன உற்பத்தி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற துறைகளில் உள்ள தொழிலாளர்கள் முதலாளித்துவ தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை குழுக்களை அமைக்க முன்வருகின்றனர். இலங்கையின் நடவடிக்கை குழுக்கள் ஏனைய நாடுகளின் நடவடிக்கை குழுக்களுடன் இணைந்து 'தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை' உருவாக்குவதற்காக நாங்கள் போராடுகிறோம்.

தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும் அரச அடக்குமுறைக்கு எதிராகவும், முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சிக்கு எதிராகவும், சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்துகின்ற தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக நாம் போராட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி முன்மொழிகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி ஏற்கனவே சுகாதாரம், பெருந்தோட்டம் மற்றும் ஆடைத் தொழிலாளர்கள் மத்தியிலும் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் மத்தியிலும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை அமைத்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி, இ.மி.ச. எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமானசேவை தொழிலாளர்களுக்கு நடவடிக்கை குழுக்களை அமைப்பதற்கு ஆதரவளிக்க தயாராக உள்ளது. அதற்கு, பின்வரும் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளவும்.

தொலைபேசி இலக்கம்: 0773562327 / 011-2869239

மின்னஞ்சல்: wswscmb@sltnet.lk

பேஸ்புக்: facebook.com/sep.lk

முகவரி: 716 1/1, கோட்டே வீதி, அதுல் கோட்டே, கோட்டே.

கூட்டத்துக்கு இங்கு பதிவுசெய்துகொள்ளுங்கள்


https://us06web.zoom.us/meeting/register/tZEkceugrTkrGtS-4Y5i5AIvMQog5lo54kg4

Loading