இலங்கை கடற்படை தமிழ் மீனவர்களை கொடூரமாக தாக்குகின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

செப்டம்பர் 5, கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரியில் உள்ள வலைப்பாடு மீன்பிடி கிராமத்தில் இலங்கை கடற்படை பல தமிழ் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.

மாலை ஐந்து மணியளவில், ஆர். சிவதாசன் (வயது 44) மற்றும் எம். ஜெபநேசன் (வயது 46) ஆகியோர் கடலில் மீன்பிடி வலையை விரித்துவிட்டு, கரைநோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். அதேநேரம், படகின் உரிமையாளரான ராஜரத்தினம் நிமல் தனது படகுக்காக கரையில் காத்திருந்தார். இந்த வேளையிலேய இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

படகு இயந்திரம் சரியாக இயங்காததால் மீனவர்கள் கடற்படையின் சோதனைச் சாவடி அருகே வந்தடைந்தனர். அவர்கள் படகில் இருந்த பொருட்களை கடற்படை சோதனைச் சாவடி அருகே இறக்க முற்பட்ட போது, கடற்படைச் சிப்பாய்கள் தடுத்தனர். அப்போது, கடற்படையினருக்கும் மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடற்படை சிப்பாய்கள் குடிபோதையில் இருந்ததாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

செப்டெம்பர் 5 அன்று கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளான ஆர். நிமல் [Photo: WSWS]

“இந்த இடத்தில் பொருட்களை இறக்குவதற்கு எங்களுக்கு சுதந்திரம் இல்லையா?” என்று மீனவர்கள் கேட்டதற்கு பிரதிபலிப்பாகவே கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நிமால், இந்த சம்பவத்தை வீடியோ எடுக்க முற்பட்ட போது, அவருக்கு அருகில் வந்த உயர் அதிகாரி ஒருவர் அவரை சுடுவதற்காக தனது துப்பாக்கியை நீட்டினார். இதனைத் தொடர்ந்து, கடற்படையினர் நிமல் மற்றும் ஏனைய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். நிமலின் கைத்தொலைபேசிகளையும் பறித்துச் சென்றனர்.

ஜெபநேசன் [Photo: WSWS]

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஐந்துக்கும் மேற்பட்ட கடற்படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் மீனவர்களை சுற்றி வளைத்து பொல்லுகள், துப்பாக்கிப் பிடிகள் மற்றும் சப்பாத்துக் கால்களினாலும் தாக்கினர். மீனவர்களின் முகம், தலை, தோள்களில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் மயக்கம் வரும் வரை அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

ஜெபநேசன் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறியதாவது: “நாங்கள் ஓட முடியாதபடி அவர்கள் எங்களைச் சூழ்ந்தனர். நிமாலை கீழே தள்ளி அடித்து உதைத்தனர். நான் நிமாலைப் பார்த்தபோது, அவர் இரத்தத்தில் நனைந்து போயிருந்தார். ஆனால் கடற்படையினர் தங்கள் தாக்குதலைத் தொடர்ந்தனர். அவரது பற்கள் உடைந்தன. எனக்கு உள் காயம் ஏற்பட்டது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் குடும்பங்களை பராமரிப்பது எப்படி?'

அவர்கள், பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உறவினர்களால் வேராவில் கிராமிய வைத்தியசாலையில் முதலில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக 61 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜெபநேசனும் நிமலும் கிளிநொச்சி வைத்தியசாலையில் தங்கி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மீனவர்கள், இதேபோன்ற அடக்குமுறைகளை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றனர். 2009 மே மாதம் இனவாதப் போர் முடிவுக்கு வந்த போதிலும், இலங்கை கடற்படை மீன்பிடி பாஸ் முறை, சோதனை, கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியை தொடர்ந்து நடத்திவருகின்றது. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை என்ற போர்வையில் கடற்படையினர் கடல் மற்றும் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடற்படை ரோந்து செல்லும் போது மீனவர்களை துன்புறுத்தப்படுகின்றனர். மீனவர்கள் மீதான தங்கள் அடக்குமுறை நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு, போதைப்பொருள் தடுப்பு, கண்காணிப்பு மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைத் தடுத்தல் போன்ற சாக்குப் போக்குகளை கடற்படை பயன்படுத்துகிறது.

உள்நாட்டுப் போரின் போது, மீனவர்கள் மிகவும் மோசமான வாழ்க்கையை எதிர்கொண்டனர். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இரத்தக்களரி இனவாத யுத்தம் 2009 மே மாதம் முடிவடைந்த பின்னரும், மீனவர்கள் மோசமான வாழ்க்கை நிலை மற்றும் இராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர்.

இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களின் அடக்குமுறை நிலைமையையே மீனவர்கள் மீதான இத்தாக்குதல் மீண்டும் சுட்டிக் காட்டுகிறது. கிளிநொச்சி மாவட்டம் போரின் பிரதான மையமாக இருந்தது. அங்கு வாழும் மக்கள் பல அழிவுகளைச் சந்தித்தனர். அவர்களின் வாழ்க்கைத் தரம் இன்னும் உயரவில்லை.

இந்த தாக்குதல் குறித்து இலங்கை கடற்படையினர் நேரடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த 7ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்த கடற்படை அதிகாரி ஒருவர், “உள்ளக விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும், ஆரம்பகட்ட விசாரணையில் இரு தரப்பினரும் தவறு செய்திருப்பது தெரியவந்துள்ளது” என்றும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், பாதிக்கப்பட்ட மீனவர் பற்றி முதலைக் கண்ணீர் வடித்த டக்ளஸ் தேவானந்தா, “இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஊடுருவல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு” கடற்படைக்கு அறிவுறுத்தினார். கடலில் கடற்படையின் அடக்குமுறை நடவடிக்கைகளை கடுமையாக்கும் வகையில் தேவானந்தாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியும். அது தவிர்க்க முடியாமல் மீனவர்களை பாதிக்கும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன், “போதையில் இருந்த கடற்படையினர் தமிழ் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்” என்று அறிவித்தார். இத்தகைய கருத்துக்கள், கடற்படையின் தாக்குதலுக்கு எதிரான மக்களின் கோபத்தை சுரண்டிக்கொள்வதை நோக்கமாகக் கொண்டதாகும்.

எவ்வாறாயினும், இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறை நிலைமைகளின் கீழ் வாழும், தொழிலாளர்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்டவர்களின் அவலநிலைகள் பற்றி இந்த தமிழ் உயரடுக்கின் கட்சிக்கு எந்த அக்கறையும் இல்லை. பாராளுமன்றத்திற்குச் சென்று ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கும், தங்கள் சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் மட்டுமே அவர்களுக்கு மக்களின் வாக்குகள் தேவைப்படுகின்றன.

தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராடுவது முதலாளித்துவ ஆட்சியை அச்சுறுத்தும் என்பதையிட்டு, இலங்கையின் தெற்கில் உள்ள தங்களது சமதரப்பினர் போலவே, அவர்களும் அஞ்சுகின்றனர். தொழிலாளர்களை இனவாத ரீதியாகப் பிளவுபடுத்த முதலாளித்துவக் கட்சிகளும், இனவாதக் குழுக்களும் கொழும்பில் சிங்களப் பேரினவாதத்தைத் தூண்டிவிடுவதற்கு சமாந்தரமாக இந்தக் கட்சிகள் தமிழ் இனவாதம் என்ற நச்சு ஆயுதத்தைப் பயன்படுத்துகின்றன.

முதலாளித்துவக் கட்சிகளுடன் மிக நெருக்கமாகச் செயற்படும் வடக்கில் உள்ள மீனவர் சங்கங்கள், இந்த தொடர்ச்சியான அடக்குமுறைகளை எதிர்க்க கூடவில்லை.

தற்போது, ஏனைய மக்களைப் போலவே மீனவர்களும் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரைனில், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளால் முன்னெடுக்கப்படும் போரினால் நெருக்கடி ஆழமடைந்துள்ளது.

போதிய அளவு எரிபொருளை பெற முடியாததாலும், விலை உயர்வு காரணமாகவும் மீன்பிடிக்கும் அளவு குறைந்துள்ளது. எரிபொருள் பிரச்சனை காரணமாக இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். தற்போது, பெரும்பாலான மீனவர்கள், படகுகளைச் செலுத்துவதற்கு துடுப்புக்களைப் பயன்படுத்துகின்றனர். இதற்கிடையில், வருமானம் இல்லாததால் மீனவர்களின் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

பெரு வணிகர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களினால் உருவாக்கப்பட்டு வரும் கடல் அட்டைப் பண்ணைகள், இந்த ஏழை மக்கள் முகம் கொடுக்கும் மற்றொரு பிரச்சனையாகும். ஏற்றுமதியை மேம்படுத்தவும் அந்நிய செலாவணியை ஈட்டவும் இந்த திட்டம் இலங்கை அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படுகின்றது.

இந்த பண்ணைகளுக்காக, கடல் பகுதியில் பல ஏக்கர்களை பெரும் தொழிலதிபர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால், மீனவர்கள் தங்கள் மீன்பிடி பகுதிகளை இழந்துள்ளனர். அவர்களின் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில் பண்ணைகள் அமைக்கப்பட்டிருப்பதால், மீனவர்கள் மற்றய பகுதிகளுக்கு நகர முடியாதுள்ளது. அட்டைப் பண்ணைகளின் உரிமையாளர்கள், ஏழை மீனவர்களுக்கு எதிராக கடற்படையுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருகின்றனர். பாரம்பரிய மீன்பிடி முறைகளான இறால் கூடு, வலை வீசி மீன்பிடித்தல் மற்றும் நண்டு கூடு வைத்தல் போன்ற தொழில்கள் பாதிக்கப்படுகின்றன.

கிளிநொச்சிநகரில் இருந்து மிகவும் தொலைதூரத்தில் அமைந்துள்ள வலைப்பாடு மீனவக் கிராமம், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் நகரங்களை இணைக்கும் பிரதான வீதியிலிருந்து 12 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. பயணம் செய்வது மிகப் பெரிய பிரச்சனை. அரச பேருந்து சேவைகள் இல்லை. தனியார் பேருந்து சேவைகள் இடம்பெற்றாலும் அவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறுகின்றன. வீதிகள் போக்குவரத்துக்கு உகந்ததாக இல்லை.

இக்கிராமத்தில் சுமார் 538 குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில்லை. அவர்கள் கிணறுகளைப் பயன்படுத்தினாலும் கூட அந்த தண்ணீர் உப்பாக இருப்பதால் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. மக்கள் குடிநீருக்காக தண்ணீர் பவுசரையே நம்பி உள்ளனர். பூநகரி பிரதேச சபை மற்றும் தனியார் பவுசர் உரிமையாளர்களால் ஒரு லீற்றர் 2 ரூபாவிற்கு தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் தண்ணீருக்காக மக்கள் 1,000 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது.

மீனவர்கள் மீதான சமீபத்திய மிலேச்சத் தாக்குதல் மற்றும் தொடர்ச்சியான அடக்குமுறை நிலைமைகளைக் கண்டிக்குமாறு தொழிலாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்த நிலைமைகளை முடிவுக்கு கொண்டு வரவதற்கு, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை மீளப்பெற வேண்டும் என்ற கோரிக்கை அவசியமாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளின் புதிய சுற்றுகளை கட்டவிழ்த்துவிட்டுள்ள நிலையில், உழைக்கும் மக்கள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் நாடு முழுவதும் மேலும் கீழறுக்கப்பட்டு வருகின்றன. விக்கிரமசிங்க ஆட்சியானது, தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களை இரக்கமற்ற முறையில் ஒடுக்குவதற்கு தயாராகி வருகிறது.

அதனாலேயே, தங்கள் உரிமைகளுக்காக ஐக்கியப்பட்டுப் போராடுவதற்கு, சகல முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும் சுயாதீனமாகி, தங்கள் சொந்த நடவடிக்கை குழுக்களைக் கட்டியெழுப்புமாறு தொழிலாளர்கள் மற்றும் கிராமப்பபுற வெகுஜனங்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அவசர அழைப்பு விடுக்கின்றது.

சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக, ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தினைக் கட்டியெழுப்புவதற்கு இந்த போராட்டத்தை ஐக்கியப்படுத்துவதன் பேரில் இந்த நடவடிக்கைக் குழுக்களை அடிப்படையாக கொண்ட, தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் ஒரு ஜனநாய மற்றும் சோசலிச மாநாட்டுக்காக சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.

Loading