இலங்கை ஜனாதிபதி இடைக்கால செலவுக் குறைப்பு வரவு செலவுத் திட்டத்தில் சமூகத் தாக்குதல்களை ஆழப்படுத்துகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

செவ்வாயன்று, நிதியமைச்சராக இருக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆண்டின் பிற்பகுதியில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 20 அன்று இலங்கையின் கொழும்பில் உள்ள பாராளுமன்ற வளாகத்திற்கு 3 ஆகஸ்ட் 2022 அன்று வருகை தந்த போது (AP Photo/Eranga Jayawardena) [AP Photo/Eranga Jayawardena]

ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்கள் மீது இன்னும் பெரிய சுமைகளை சுமத்தியுள்ள இந்த வரவு செலவுத் திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு இணங்க அரசாங்க செலவினங்களைக் குறைத்து, அதிக வரிகளை விதிக்கும் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை விரைவுபடுத்தும்.

இந்த வாரம் கொழும்பில் முடிவடைந்த சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தைகள் 'வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன' என்று விக்கிரமசிங்க கூறினார். இது மேலும் கொடூரமான சமூகத் தாக்குதல்கள் தயாரிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டுகிறது.

தாங்க முடியாத வாழ்க்கைச் செலவுகள் மீதான மக்களின் கோபத்திற்கு மத்தியில், விக்கிரமசிங்க, ஏழைகளுக்கான நலன்புரி கொடுப்பனவுகளில் சோடிப்பு அதிகரிப்பை முன்வைத்தார். இந்த நடவடிக்கை அவர்களது துன்பத்தை தனிக்க எதுவும் செய்யப் போவதில்லை.

இடைக்கால வரவு-செலவுத் திட்டம் பின்வருவனவற்ற உள்ளடக்கியுள்ளது:

* பெறுமதி சேர் வரியில் (VAT) 12 முதல் 15 சதவீதம் வரை மேலும் 3 சதவீதம் அதிகரிப்பு. அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான இந்த வரி இந்த வாரம் முதல் அமலுக்கு வரும். இது மே 31 அன்று அறிவிக்கப்பட்ட வட் மற்றும் பிற கட்டணங்களில் 8 முதல் 12 சதவிகிதம் வரையான அதிகரிப்பின் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை சுமார் 75 சதவிகிதம் அதிகரித்தது, இந்த மாதம் 2 மில்லியன் குடும்பங்களுக்கு 127 சதவிகிதம் தண்ணீர் கட்டணம் உயர்த்தப்பட்டது.

* எயார் லங்கா, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் தொடங்கி அரசுக்குச் சொந்தமான நிறுவனங்ளின் மறுசீரமைப்பு முடுக்கிவிடப்படும். திங்களன்று, ஏயார் லங்கா தரை-கையாளுதல் மற்றும் உணவு விநியோகம் ஆகியவற்றில் 49 சதவீதம் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதுடன் 50 அரச நிறுவனங்கள் எதிர்கால 'மறுசீரமைப்புக்கு' இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

* அரச வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக அவற்றில் உள்ள இருபது சதவீத பங்குகள் வைப்பாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

* கொழும்பு, தனியார்மயமாக்குவதற்கு நீண்டகாலமாக இலக்கு வைத்திருந்த நாட்டின் புகையிரத சேவைக்குள்ளும் தனியார் துறை நுழையும்.

* இலட்சக்கணக்கான அரச தொழில்களை திட்டமிட்டு அழிப்பதன் பாதையில், அரசு மற்றும் அரை அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது முறையே 65 மற்றும் 62 வயதில் இருந்து 60 ஆண்டுகளுக்கு குறைக்கப்பட்டது. ஏற்கனவே புதிய ஓய்வூதிய வயதை எட்டியவர்கள் இந்த ஆண்டு இறுதியில் வெளியேற வேண்டும்.

வறியவர்களுக்கு விக்கிரமசிங்க சலுகை கொடுப்பதாக கூறுவது, மாதாந்திர சமுர்த்தி கொடுப்பனவுகளில் 5,000 ரூபாய் (14 அமெரிக்க டாலர்) முதல் 7,500 ரூபாய் வரையான சிறிய அதிகரிப்பு ஆகும். இந்த அற்ப நலன்புரி கொடுப்பனவுகள் தற்போது 1.7 மில்லியன் குடும்பங்களால் பெறப்படுகின்றன. ஏற்கனவே சமுர்த்தி காத்திருப்போர் பட்டியலில் உள்ள சுமார் 726,000 குடும்பங்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா தற்காலிகமாக வழங்கப்படும்.

முதியோர், ஊனமுற்றோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான கொடுப்பனவுகளும் 5,000 ரூபாவிலிருந்து 7,500 ரூபாவாக சிறிதளவு அதிகரிக்கப்பட்டுள்ளன. குறைந்த வருமானம் பெறும் சுமார் 61,000 குடும்பங்களுக்கு நான்கு மாதங்களுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படும்.

ஆகஸ்டில் பணவீக்கம் 64 சதவீதமாகவும், உணவுப் பற்றாக்குறை 94 சதவீதமாகவும் மோசமாக உயர்ந்துள்ளன. இதனால் கடுமையாக சீரழிக்கப்பட்ட வாழ்க்கை நிலைமைகளை சமாளிக்க இந்த கொடுப்பனவுகள் அற்பத் தொகையாக இருக்கும்.

விக்கிரமசிங்க, வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய திருப்பிச் செலுத்தப்படாத விவசாயிகளின் கடன், 688 மில்லியன் ரூபாவை தள்ளுபடி செய்ய முன்மொழிந்தார். கடந்த ஐந்து மாதங்களாக எரிபொருள், உரங்கள் மற்றும் விவசாய இடுபொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பை எதிர்கொண்டுள்ள மற்றும் இன்னும் வங்கிகளுக்கு வட்டி செலுத்த வேண்டியுள்ள விவசாயிகளின் கடினமான பொருளாதாரப் பிரச்சினைகளை இது தணிக்கப் போவதில்லை.

2021 வரவு-செலவுப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.2 சதவீதமாக இருந்தது, ஆனால் இது இந்த ஆண்டு 9.9 சதவீதமாகவும், 2023ல் 6.8 சதவீதமாகவும், 2025ல் பூஜ்ஜியமாகவும் குறைக்கப்படும் என்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார். இந்த புள்ளிவிவரங்கள், அரச துறையிலும் வெகுஜனங்கள் மீதும் அரசாங்கத்தின் முன்னெப்போதும் இல்லாத சமூகத் தாக்குதலின் கொடூரத் தன்மையை சுட்டிக்காட்டுகின்றன.

நேற்று கொழும்பில் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சின் செயலாளரை பாராட்டினார். இடைக்கால வரவு-செலவுத் திட்டம் 'தொலைநோக்கு' கொண்டது என்று கூறிய அவர், 'இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கு, இந்த வேதனையான செயல்முறையை நாம் கடந்து செல்ல வேண்டும்,' என மேலும் கூறினார். இந்த 'வேதனை நிறைந்த செயல்முறையை', நிச்சயமாக பணக்காரர்கள் அனுபவிக்கப் போவதில்லை, மாறாக, இலங்கை முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடிக்கு விலை கொடுக்கத் தள்ளப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளே அனுபவிப்பர்.

'2026 ஆம் ஆண்டிற்குள் உறுதியான பொருளாதார அடித்தளத்தை நிறுவுவதே எங்களின் அபிலாஷை' என்று விக்கிரமசிங்க அறிவித்தார். 2026க்குள் நெருக்கடியைத் தணித்து, பொருளாதாரத்தை ஒரு 'திடமான பொருளாதார அடித்தளத்தில்' வைப்பதற்கான அவரது கணிப்பு ஒரு சுத்த கற்பனையாகும்.

கோவிட்-19 தொற்றுநோயால் தூண்டப்பட்டு, இந்த ஆண்டு உக்ரேனில் நடக்கும் அமெரிக்க-நேட்டோ பினாமி யுத்தத்தால் உக்கிரமடைந்து, இப்போது பிரதான ஏகாதிபத்திய மையங்கள் மற்றும் பின்தங்கிய நாடுகளில் ஒரே மாதிரியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள, உலக முதலாளித்துவ நெருக்கடியின் கூர்மையான வெளிப்பாடே இலங்கையின் பொருளாதாரச் சரிவு ஆகும்.

தாம் முன்வைத்த பொருளாதார அதிசயம், 'நாம் பொதுவான சம்மதத்துடன் ஒற்றுமையாகச் செயல்பட்டால் மட்டுமே' நிகழும் என்று விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கூறினார். 'முன்னெப்போதும் இல்லாத இந்த சூழ்நிலை தீர்ப்பது நம் அனைவரினதும் பொறுப்பாகும்' என்பதால், அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் இணையுமாறு பாராளுமன்ற உறுப்பினர்க்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

மில்லியன் கணக்கான இலங்கையர்கள் எதிர்கொள்ளும் அழிவுகரமான நிலைமைகள் தொழிலாள வர்க்கத்தினாலோ அல்லது நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளாலோ உருவாக்கப்பட்டதல்ல மாறாக இலங்கையின் ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் முதலாளித்துவக் கட்சிகளே நேரடிப் பொறுப்பாகும்.

திட்டமிட்ட சமூகத் தாக்குதல்களை வெகுஜனங்கள் எதிர்ப்பார்கள் என்பதை நன்கு அறிந்திருப்பதால், அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கான விக்கிரமசிங்கவின் வேண்டுகோள், வெகுஜன எதிர்ப்பை நசுக்குவதற்கு கொழும்பின் முழு அரசியல் ஸ்தாபனத்தையும் அணிதிரட்டுவதாகும்.

எதிர்க்கட்சி பாராளுமன்றக் கட்சிகள் அனைத்துக் கட்சி அரசாங்கத்தின் அழைப்பை ஏற்காமல் இருப்பதற்கான காரணம், அவை சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை எதிர்ப்பதால் அல்ல, மாறாக தங்களால் வெகுஜன எதிர்ப்பை நசுக்க முடியாது என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

நடந்துகொண்டிருக்கும் வெகுஜனப் போராட்டங்களை அச்சுறுத்தும் முயற்சியில் விக்கிரமசிங்க தொடர்ந்து அரச படைகளை அணிதிரட்டுகிறார்.

நேற்று, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அழைப்பு விடுக்கப்பட்ட மாணவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 28 பேரை கைது செய்ய அரசாங்கம் பொலிஸை கட்டவிழ்த்து விட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த வாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று மாணவர் தலைவர்களை விடுவிக்குமாறு மாணவர்கள் கோரியிருந்தனர். அரசாங்க அடக்குமுறை, இலவசக் கல்வி மீதான தாக்குதல்கள் மற்றும் மோசமான வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக மாணவர்களின் போராட்டத்தின் போது மூன்று செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

30 ஆகஸ்ட் 2022 அன்று கொழும்பில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் [Photo: WSWS] [Photo: WSWS]

இந்த வாரம் சர்வதேச நாணய நிதிய பேச்சுவார்த்தைக் குழு கொழும்பில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது கூட்டாளிகளை சந்தித்தது. சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்துடன் உடன்படாத பிரேமதாச, கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து முன்னாள் இராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டும் என்று கோரி வந்தார். அதிகாரத்திற்கு வந்து சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தை செயல்படுத்தும் எதிர்பார்ப்பில், ஐ.ம.ச. இப்போது ஒரு தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறது.

விக்கிரமசிங்கவின் வரவு=செலவுத் திட்ட உரையைதைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஹரிணி அமரசூரிய, பொருளாதார நெருக்கடியை 'நிலையான அரசாங்கத்தால்' மட்டுமே தீர்க்க முடியும் என்று அறிவித்தார்.

ஐ.ம.ச. போலவே, ஜேவிபி/தேசிய மக்கள் சக்தியும் சர்வதேச நாணய நிதியத்தின் நடவடிக்கைகளைத் திணிப்பதற்கு ஒரு பொதுத் தேர்தலையும் புதிய முதலாளித்துவ அரசாங்கத்தையும் கோருகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய பாராளுமன்ற எதிர்க் கட்சிகள், கடுமையான சிக்கன நடவடிக்கையே ஒரே தீர்வு என்பதை வலியுறுத்தி, அடிப்படையில் உடன்படுகின்றன.

விக்கிரமசிங்க ஆட்சி மற்றும் இலங்கை முதலாளித்துவத்தின் பிரதான முண்டுகோல்கள் தொழிற்சங்கங்களே ஆகும். அவை, கடந்த நான்கு மாதங்களில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் பாரிய எதிர்ப்பை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்களுக்குள் திசை திருப்பி விட்டு, அரசியல் ரீதியாக பாராளுமன்ற எதிர்ப்பிற்கு ஆதரவளித்தனர். அவர்கள் இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்திற்கான ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி.யின் அழைப்புகளை ஆதரிப்பதுடன் விக்கிரமசிங்க ஆட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதை எதிர்க்கின்றனர்.

22 ஆகஸ்ட் 2022 அன்று கொழும்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிலாளர்களின் ஆர்ப்பாட்ட பேரணி [Photo: WSWS] [Photo: WSWS]

எவ்வாறாயினும், தொழிலாள வர்க்க எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. கடந்த வாரம் பெட்ரோலியம், அரச பொறியியல் கூட்டுத்தாபனம், அரசு அச்சகம் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களும் போராட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினர். மீனவர்கள் எண்ணெய் விலை உயர்வுக்கு எதிராக போராட்டங்களை நடத்தும் அதே நேரம், மாணவர்கள் கொடூரமான பொலிஸ் நடவடிக்கைகளை மீறி மீண்டும் மீண்டும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, தொழிலாள வர்க்கம் விஷயங்களைத் தன் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலும் இருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு வேலைத் தளங்களிலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும், நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு தொழிலாளர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம். இதேபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் கிராமப்புற ஏழைகளின் ஆதரவை தொழிலாளர்கள் திரட்ட வேண்டும். இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு கிராமப்புற மக்களும் தங்கள் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும்.

அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கும், சமூகத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), வாழ்வின் அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தின் மீது கட்டுப்பாட்டை எடுக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரிப்பதன் மூலமும், தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் தோட்டங்களை தேசியமயமாக்குவதன் மூலமும் இதைச் செய்ய முடியும். வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு ஊதிய உயர்வுடன் அனைவருக்கும் முழு வேலை வாய்ப்பும் மற்றும் சிறு விவசாயிகளுக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் அனைத்து வசதிகளும் மானியங்களும் அவசரமாக வழங்கப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும்.

அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கான அரசாங்கத்தின் சூழ்ச்சிகளும், பொதுத் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் அழைப்பும், பாராளுமன்றம் என்ற முட்டுச்சந்துக்குள் வெகுஜனங்களை சிக்க வைப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பிற்போக்கு நகர்வுகளுக்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி அனைத்து சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்காக தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டிற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.

நடவடிக்கை குழுக்களில் இருந்து ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்த மாநாடு, வெகுஜனங்களின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் கூட்டுச் சேர்ந்து தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், சோசலிச கொள்கைகளுக்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

Loading