குற்றம் சாட்டப்பட்டு பதினெட்டு மாதங்களுக்குப் பின்னரும், சதியில் அகப்பட்டுள்ள இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை

மஸ்கெலியாவிற்கு அருகிலுள்ள ஓல்டன் தோட்டத்தில் உள்ள போராளிக் குணம் கொண்ட தொழிலாளர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இந்த தொழிலாளர்கள் தங்களின் வேலை, ஊதியம் மற்றும் பிற சமூக உரிமைகள் அபகரிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். கடந்த ஆண்டின் தொடக்கத்தில், தொழிலாளர்கள் அதிக ஊதியம் மற்றும் வாழ்க்கை நிலைமை மேம்பாடுகளுக்காக ஒரு தொழில்துறை பிரச்சாரத்தைத் தொடங்கிய பின்னரே இந்த பழிவாங்கல் தொடங்கியது.

ஆல்டன் தோட்டம் (Source: Facebook)

2021 பெப்ரவரி 2 அன்று, ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 500 தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி வெளிநடப்பு செய்ததுடன், பெப்ரவரி 5 அன்று, அவர்கள் தேசிய ரீதியில் 150,000 சக தொழிலாளர்களுடன் இணைந்து தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர். தோட்ட நிர்வாகத்தின் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓல்டன் தொழிலாளர்கள் மார்ச் 22 வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பெப்ரவரி 17 அன்று, வளாகத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முகாமையாளரை உடல்ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவரது இல்லத்தைச் சேதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி 22 தொழிலாளர்களையும் இரண்டு இளைஞர்களையும் போலியான குற்றச்சாட்டின் பேரில் பொலிசார் கைது செய்தனர். இந்த தொழிலாளர்களுக்கு எதிராக ஹட்டனில் உள்ள நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அதே சமயம் ஓல்டன் தோட்டத்தை நிர்வகிக்கும் ஹொரண பெருந்தோட்ட நிறுவனம் 38 தொழிலாளர்களை விசாரணை கூட நடத்தாமல் வேலை நீக்கம் செய்தது. முகாமையாளரின் வீட்டின் அருகே பெயர் குறிப்பிடப்படாத 80 தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று, அவரைத் தாக்கியதாக அவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டது. இந்த தொழிலாளர்களில் 34 பேருக்கு அவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கும் கடிதங்கள் வழங்கப்பட்டதுடன் நான்கு பேர் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டனர்.

மார்ச் 2021 இல் ஹட்டன் நீதிமன்றத்திற்கு வெளியே தோட்ட முகாமையாளர்களின் ஆத்திரமூட்டும் போராட்டம் (Photo credit K. Kishanthan)

சமீபத்தில் ஆகஸ்ட் 3 அன்று நீதவான் நீதிமன்ற விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் இன்னும் குற்றப்பத்திரிகையை முன்வைக்கவில்லை என்று கூறி, வழக்கை அக்டோபர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு பொலிசார் கோரினர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் பதினெட்டு மாத கால தாமதமானது, கம்பனி மற்றும் பொலிஸாரால் தயாரிக்கப்பட்டு, தோட்டத் தொழிற்சங்கங்களின் உதவியுடனும், ஆதரவுடனும் குற்றச்சாட்டுகள் சோடிக்கப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. தோட்ட நிர்வாகம் முகாமையாளரின் குடியிருப்பை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் தொழிலாளர்கள் மீது வழக்குத் தொடர ஆர்வமாக உள்ளது. ஏனெனில் இது கடுமையான தண்டனைக்கு வழிவகுக்கும்.

பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகக் கண்டறியப்பட்ட எவருக்கும் ஓராண்டு முதல் இருபது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், மேலும் 1,000 ரூபாய் அபராதம் அல்லது சொத்து சேதத்தின் மதிப்பின் மூன்று மடங்கு, அது எவ்வளவு அதிகமாக இருந்தாலும் சரி, தண்டப்பணம் வதிக்கப்படக் கூடும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் சில தொழிலாளர்கள் தாக்கல் செய்த வேலை நீக்கங்கள் மீதான தொழிலாளர் நீதிமன்ற விசாரணைகள் ஆகஸ்ட் 3 அன்று நடைபெறவிருந்தன. இவை செப்டம்பர் 27 மற்றும் 29 ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஜூன் மாதம், தொழில் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, வேலை நீக்கம் செய்யப்பட்ட நான்கு தொழிலாளர்கள், கடிதங்கள் கூட வழங்கப்படாமல் மீண்டும் வேலையில் அமர்த்தப்பட்டனர். எவ்வாறாயினும், அவர்கள் புதிய தொழிலாளர்களாகவும், அவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதற்கு எந்தவித இழப்பீடும் கொடுக்கப்படாமலேயே மீண்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

ஆகஸ்ட் 2 அன்று, தொழில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ, தோட்ட முகாமையாளரின் பங்களாவை தொழிலாளர்கள் தாக்குவதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், படங்களில் உள்ள நபர்களை அடையாளம் காண முடியவில்லை. தொழிலாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நேரு கருணாகரன், முகாமையாளரின் வீட்டை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 38 தொழிலாளர்களை வீடியோவில் பார்க்க முடியவில்லை என்றார்.

வேலை நீக்கம் செய்யப்பட்ட 38 தொழிலாளர்களும் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ள 22 பேரும் ஓல்டன் தோட்ட நிர்வாகத்தால் குறிவைக்கப்பட்டதற்கு காரணம், அவர்கள் தங்கள் உரிமைகளுக்கான தொழிலாளர்களின் போராட்டத்தில் முன்னணியில் இருந்ததே ஆகும்.

ஒல்டன் தோட்ட நிர்வாகத்தின் கொடூரமான வேட்டையாடல், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா.) வெளிப்படையான ஆதரவுடனும் தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), ஜனநாயக மக்கள் முன்னணி (DPF) மற்றும் மலையக மக்கள் முன்னணி (UPF) ஆகியவற்றின் மௌனமான ஆதரவுடனும் மேற்கொள்ளப்பட்டது.

நிறுவனத்தின் கணக்கிடப்பட்ட தாக்குதல், ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக மட்டுமன்றி, அதிக வேலைப்பளுவை சுமத்துவதற்கும் ஊதியங்களை வெட்டுவதற்குமான பரந்த உந்துதலின் மத்தியில், முழு தோட்டத் தொழிலாளர்களையும் அச்சுறுத்துவதை இலக்காகக் கொண்டதாகும்.

கடந்த வருடம் இதே முறையில் தலவாக்கலை கட்டுகெல்லை தோட்ட நிர்வாகத்தினால் பதினொரு தொழிலாளர்களும், ஹட்டன் வெலிஓயா தோட்டத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்களும் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இ.தொ.கா., தொ.தே.ச, ஜ.ம.மு., ம.ம.மு. மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் மௌன அங்கீகாரத்துடன் இந்தத் தாக்குதல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன.

பாதிக்கப்பட்ட கட்டுகெல்லை தோட்டத் தொழிலாளர்கள் அக்டோபர் 7 அன்று கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்ட பின்னர் வீட்டிற்குச் செல்லும் வழியில் [Photo: WSWS media] [Photo: WSWS]

கடந்த ஆண்டில், ஓல்டன் தோட்ட நிர்வாகம் ஊதியத்தை குறைத்து வேலைச்சுமையை அதிகப்படுத்தியுள்ளது. தோட்டத்தில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேரம் வேலை செய்தாலும் அரை நாள் ஊதியம் வழங்கப்படுகிறது. முழு நாள் கூலியைப் பெற அவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 18 கிலோகிராம் தேயிலை கொழுந்துகளைப் பறிக்க வேண்டும்.

ஓல்டன் தோட்டத்தில் பழிவாங்கப்பட்டவர்களில் ஒரு பெண் தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறியதாவது: “பொலிஸ் இன்னும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை, எனவே நீதிமன்றங்கள் எந்த விசாரணையும் இல்லாமல் வழக்கை ஒத்திவைத்துள்ளன. ஒவ்வொரு முறையும் நான் நீதிமன்றத்திற்குச் செல்லும்போது வழக்கறிஞர்களின் கட்டணத்தைச் செலுத்துவதைத் தவிர பேருந்துக் கட்டணமாக 400 ரூபாய் (சுமார் $1) செலவழிக்க வேண்டும். எங்கள் தொழிற்சங்கம் வழக்கறிஞர்களின் கட்டணத்தை தர மறுத்துவிட்டது. நிர்வாகத்திற்கு எதிராக எங்கள் உரிமைகளைக் கோரியதால் நாங்கள் பாதிக்கப்பட்டோம். தொழிற்சங்கங்கள் எங்களைப் பாதுகாக்கவில்லை.”

கம்பனி இலாபங்களை பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை கொண்ட தோட்டத் தொழிற்சங்கங்கள், கடுமையான புதிய வேலை விதிமுறைகளை முழுமையாக ஆதரிக்கின்றன. நியூஸ் ஃபர்ஸ்ட் தொலைக்காட்சி சேவைக்கு கடந்த வாரம் அளித்த பேட்டியில், இ.தொ.கா. பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், “தோட்டத் தொழிலாளர்கள் 150 ஆண்டுகால ஊதிய முறையின் கீழ் வேலை செய்கிறார்கள். இதை மாற்றி, மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த வருவாய் பகிர்வு முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்,” என்று கூறினார்.

இ.தொ.கா. மற்றும் ஏனைய தோட்டத் தொழிற்சங்கங்கள் 'வருவாய் பகிர்வு திட்டம்' என்று அழைக்கப்படுவதை அங்கீகரிக்கின்றன. 'தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை அது மேம்படுத்தும்' என்ற தொண்டமானின் கூற்று ஒரு அப்பட்டமான பொய்யாகும்.

இந்த முறைமையின் கீழ், ஒரு தொழிலாளிக்கு ஒரு தோட்டத்திலிருந்து ஒரு நிலம் ஒதுக்கப்படுகிறது. அறுவடையை நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும், கம்பனி வழங்கும் உரம் மற்றும் பிற பொருட்களின் விலையையும் அதன் லாபத்தையும் அது கழித்துக்கொள்ளும் சாகுபடிக்கு உதவுவதற்காக தங்கள் குடும்பத்தையே அணிதிரட்ட வேண்டியுள்ள. தொழிலாளி, மீதமுள்ள பங்கைப் பெறுகிறார். ஊழியர் சேமலாப நிதி, அற்ப நலன்புரி வசதிகள் மற்றும் பிற சமூக உரிமைகள் உள்ளடங்களாக ஓய்வூதியத் திட்டங்களையும் தொழிலாளர்கள் இழக்கின்றனர். எவ்வாறாயினும், தொழிலாளர்களின் இடுப்பை உடைக்கும் வேலைச் சுமை மற்றும் குறைந்த வருமானம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தலைதூக்கியதால், பெரும்பாலான தோட்டங்களில் இந்தத் திட்டத்தைத் திணிக்க முடியவில்லை,

இந்த ஆண்டின் தொடக்கத்தில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட முன்னாள் இராஜபக்ஷ அரசாங்கம், மக்கள் மீது கடுமையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்த ஆரம்பித்தது. ஏப்ரலில் தொடங்கி, இது பெருந்தோட்டத் தொழிலாளர்களை உள்ளடக்கிய பொது வேலைநிறுத்தங்களுக்கு வழிவகுத்தது. இலங்கை வரலாற்றில் கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் மிகப் பெரியதாகும்.

அரச எதிர்ப்பு வெகுஜன இயக்கம், கோட்டாபய இராஜபக்ஷவை நாட்டை விட்டு வெளியேறி ராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்த அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கிறார். மற்றைய இலங்கை தொழிற்சங்கங்களைப் போலவே அனைத்து தோட்டத் தொழிற்சங்கங்களும் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்றன.

இந்த சமூகத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட அனைத்துக் கட்சி அரசாங்கத்தை நிறுவ உதவுமாறு விக்கிரமசிங்க ஒவ்வொரு பாராளுமன்றக் கட்சியையும் அழைத்துள்ளார். முன்னைய நிர்வாகங்களில் அமைச்சுப் பதவிகளை வகித்த இ.தொ.கா. தலைவர்கள், அத்தகைய ஆட்சியில் இணையப்போவதாக முதலில் அறிவித்தவர்களில் அடங்குவர்.

தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்க முடியாது என்பதை இது மேலும் எடுத்துக்காட்டுகிறது, அவை ஆளும் உயரடுக்கினதும் இலாப அமைப்பினதும் தொழில்துறை பொலிஸாக வேலை செய்கின்றன. அதனால்தான் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) முன்முயற்சியைத் தொடர்ந்து, ஓல்டன் மற்றும் கிளனுகி தோட்டங்களில் நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏனைய தோட்டத் தொழிலாளர்களை அவர்களது தோட்டங்களில் நடவடிக்கைக் குழுக்களை நிறுவுவதற்கு நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாக்க தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் ஒரே கட்சியான சோசலிச சமத்துவக் கட்சி, வேலைநீக்கம் செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்துமாறும், ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான சோடிக்கப்பட்ட அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளையும் கைவிடுமாறு கோரிக்கை விடுக்குமாறு தீவு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வலியுறுத்துகிறது. தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டிற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக இது முன்னெடுக்கப்பட வேண்டும், இது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு தொழிலாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளின் அரசாங்கத்திற்கு அடித்தளத்தை அமைக்கும்.

Loading