இலங்கை தொழிற்சங்கத் தலைவர்கள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் அணிசேர்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை உழைக்கும் மக்கள், உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் பரவலான பணவீக்கத்தாலும் தாங்க முடியாத வாழ்க்கை நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கடந்த மாதம் பணவீக்கம் 60 சதவீதமாகவும், உணவு விலை அதிகரிப்பு 90 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. அவர்களது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் தொடர்பாக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் கோபம் கொதித்தெழுந்த போதிலும், தொழிற்சங்கங்கள் அவர்களது போராட்டங்களை நசுக்கி வருகின்றன.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரும் கொடூரமான சிக்கன வேலைத்திட்டத்தை கட்டவிழ்த்து விடுவதற்கு தயாராகி வருகின்ற போதும், தொழிற்சங்கங்கள் ஏதாவது வழியில் தொழிலாள வர்க்கத்தை பாதுகாப்பதற்கு மாறாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அவரது அரசாங்கத்திற்கும் தங்கள் ஆதரவை உறுதிப்படுத்துகின்றன. விக்கிரமசிங்கவை நேரடியாக ஆதரிப்பதில் சுகாதார மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் முன்னணியில் உள்ளன.

சமன் ரத்னப்பிரிய கடமையைப் பொறுப்பேற்று ஊடகங்களுக்குப் பேசுகையில் (Photo: Facebook/Government Nursing Officers’ Association)

ஒரு அசாதாரண நடவடிக்கையாக, அரசாங்க தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய நேரடியாக அரசு எந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 2 அன்று, விக்கிரமசிங்க அவரை புதிதாக உருவாக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தார். அவர் சுகாதாரத் துறையில் உள்ள தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான சுகாதார தொழில் வல்லுநர்களின் சம்மேளனத்தின் ஒரு தலைவராகவும் உள்ளார்.

ரத்னப்ரியவின் நெருங்கிய ஒத்துழைப்பாளரான சுகாதார தொழில் வல்லுநர்கள் சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ், சனிக்கிழமை காலை ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, சுகாதார ஊழியர்களின் போராட்டங்களை தடுப்பதாக உறுதியளித்தார்.

'உங்களை முற்றிலுமாக எதிர்க்கும் குழுக்கள் கூட, இதுபோன்ற நெருக்கடிகளுக்கு மத்தியில் உங்களால் ஒரு பாத்திரத்தை வகிக்க முடியும் என்று நம்புகின்றன,' என குமுதேஷ் அறிவித்தார்: 'எங்களால் அடிக்கடி போராட முடியாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து தியாகம் செய்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய தருணம் இது. உங்களால் மட்டுமே அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நாங்கள் உங்கள் எதிரிகளோ அல்லது பகைவர்களோ அல்ல.

விக்கிரமசிங்கவுக்கு தலைவணங்கிய பின்னர், குமுதேஷ் அதே தினம், தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழு, போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் அரசாங்க விரோத எதிர்ப்பாளர்களால் கொழும்பின் புறநகரில் உள்ள நுகேகொடவில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்றுக்குச் சென்றார். அவர் தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

பேரணியில் வாய்ச்சவடால் விடுத்த குமுதேஷ், “இதுவரை ‘போராட்டம்’ [அரசாங்க எதிர்ப்புப் போராட்டம்] பற்றிய எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறவில்லை,” என்றார். “வெற்றி அடையாதவரை இந்தப் போராட்டம் முடிவுக்கு வரப்போவதில்லை” என்றும் அவர் கூறினார்.

ரவி குமுதேஷ் (Credit: WSWS) [Photo: WSWS]

ரத்னப்ரியா மற்றும் குமுதேஷின் நடவடிக்கைகள் தொழிற்சங்கங்களின் பாத்திரத்தை விரிவிளக்கமாக அம்பலப்படுத்துகின்றன. 'இறுதிவரை போராடுவோம்' என்று வெற்றுப் பிரகடனங்களைச் செய்யும் அதேவேளையில், அந்தப் போராட்டத்தை நாசமாக்குவதற்கு விக்கிரமசிங்கவிடம் அவர்கள் உறுதியளித்துள்ளனர். அவர்கள் தொழிலாளர்களை முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அதன் அரசியல் சேவகர்களுக்கும் விலங்கிட்டு வைக்கின்றனர்.

2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து சுகாதார ஊழியர்கள் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில் முன்னணியில் உள்ளனர். கோவிட்-19 தொற்றுநோய் தாக்கியதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை, நோயாளிகளுக்கு போதிய வசதிகள் இல்லாமை, அதிகரித்த பணிச்சுமை, மற்றும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தேக்கம் போன்றவை காரணமாக சுகாதார ஊழியர்கள் மத்தியில் அதிகரித்து வந்த கோபத்தின் காரணமாக தொழிற்சங்கங்கள் போராட்ட நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டன.

சுகாதார அதிகாரிகள் மற்றும் அரசாங்க அமைச்சர்களுடன் கலந்துரையாடிய பின்னர் தொழிலாளர்களின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாமல் அனைத்து நடவடிக்கைகளையும் தொழிற்சங்கங்கள் நிறுத்திவிட்டன. ரத்னப்ரியா மற்றும் குமுதேஷ் இருவரும், பின்னர் தொழிலாளர்களின் கோபத்தை 'சமாளிப்பதற்கே' தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்ததாக பகிரங்கமாக அறிவித்தனர்.

இப்பொழுது, முதலாளித்துவ ஆட்சியின் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்கு மத்தியில், அது அமுல்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள சிக்கன திட்ட நிரல் மீதான உழைக்கும் மக்களின் எதிர்ப்பை நசுக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்குள், தொழிற்சங்கங்கள் இன்னும் நெருக்கமாக இழுக்கப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மில்லியன் கணக்கானவர்களை உள்ளடக்கிய பொது வேலைநிறுத்தங்களை தொடர்ந்து, ஜூன் மாதம் பாரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து, நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதை பற்றி, நீண்டகாலமாக சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை அமலாக்குபவரான விக்கிரமசிங்க கூர்மையாக விழிப்புடன் உள்ளார்.

தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகமாக தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், ரத்னப்ரிய, தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களால் அரசாங்கம் கவிழ்க்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான தனது திட்டங்களை பற்றி அருண செய்தித்தாளிடம் பேசினார்.

தனது புதிய அரசியல் முதலாளியை புகழ்ந்து பேசும் ரத்னப்பிரிய, ஜனாதிபதியாக வருவதற்கு முன்னர், மே மாதம் பிரதமராக பதவியேற்ற போது, விக்கிரமசிங்கவை 'நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை புனரமைப்பவர்' என்று தான் உட்பட பலர் நம்பினர், என்று தெரிவித்தார்.

ரத்னப்பிரிய எப்படி தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்த முயன்றார் என்பதை விளக்கினார். “அப்போது, பொருத்தமற்ற கோஷங்களை முன்வைக்க வேண்டாம் என்று தொழிற்சங்கங்களிடம் நான் கூறினேன். இப்போது அவர் [விக்கிரமசிங்க] ஜனாதிபதியாக உள்ளார். இந்த வேலையை அவரால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் நாம் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

'நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருக்கும்போது, பிரச்சினைகளைத் தீர்க்காமல், மாதந்தோறும் அரசாங்கத்தை மாற்றுவது நடைமுறைக்கு உதவாது.' உழைக்கும் மக்கள் விக்கிரமசிங்கவிற்கு 'காலம் கொடுக்க வேண்டும்' என்று ரத்னப்பிரிய வலியுறுத்தினார்.

ஏனைய தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் சேர்ந்து ஏப்ரல் 28 மற்றும் மே 6 அன்று ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழுவில் குமுதேஷ் மற்றும் ரத்னப்பிரிய இருவரும் இணை ஒருங்கிணைப்பாளர்களாக இருந்தனர். மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்களும் இந்த வேலைநிறுத்தங்களைச் சுழ அணிதிரண்டனர்.

எவ்வாறாயினும், தொழிற்சங்கங்கள் வேண்டுமென்றே இந்த வேலைநிறுத்தங்களை ஒரு நாள் நடவடிக்கைகளுக்கு மட்டுப்படுத்தி, முதலாளித்துவ எதிர்க் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகியவற்றின் ஒரு இடைக்கால அரசாங்கத்துக்கான, வேறுவிதமாகக் கூறினால், மற்றொரு முதலாளித்துவ அரசாங்கத்துக்கான கோரிக்கைக்கு அரசியல்ரீதியாக அடிபணியச் செய்தன.

கொழும்பின் ஏனைய அரசியல் ஸ்தாபனங்களைப் போலவே, தொழிற்சங்கங்களும், உழைக்கும் மக்களின் வெகுஜன எழுச்சி மற்றும் முதலாளித்துவ ஆட்சிக்கு அது விடுத்த அச்சுறுத்தல்களையிட்டு பீதியடைந்தன.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், விக்கிரமசிங்க உடனடியாக அரசாங்க-விரோத எதிர்ப்பை அடக்குவதற்கு நடவடிக்கை எடுத்தார். அவர் அவசரகால நிலையை விதித்தார், பிரதான துறைகளில் அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கும் அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தை நீட்டித்ததுடன் மத்திய கொழும்பில் காலி முகத்திடலை ஆக்கிரமித்துள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸ்-இராணுவ ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டார். டசின் கணக்கான போராட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழிற்சங்கங்களால் தொழிலாள வர்க்க எதிர்ப்பு நசுக்கப்பட்டமை, இந்த பொலிஸ்-அரச அடக்குமுறைக்கான கதவைத் திறந்து விட்டது. அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்ட துறைகளில் சுகாதாரமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சுகாதாரப் பணியாளர்கள் வேலைக்குச் செல்லத் தவறியதற்காக அபராதம் மற்றும் சிறைத் தண்டனையை எதிர்கொள்கின்றனர். ரத்தினப்பிரியா, குமுதேஷ் மற்றும் சுகாதார தொழிற்சங்கங்கள் இந்த கொடூரமான நடவடிக்கையை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விக்கிரமசிங்க, இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முழு கொழும்பு அரசியல் ஸ்தாபகத்தையும் அணிதிரட்ட முற்படுகிறார். அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், இலட்சக்கணக்கான அரச தொழில்களை அழித்தல், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான அரச மானியங்களுக்கு முடிவுகட்டுதல் மற்றும் குறைந்த பட்சம் அவற்றுக்கு செலவிடக்கூடியவர்கள் மீதான வரிகளை அதிகரித்தல் ஆகியவை இதில் அடங்கும்.

விக்கிரமசிங்க தொழிற்சங்கங்களின் ஆதரவை நாடுவதோடு, இந்த விடயத்தில் ரத்னப்பிரிய மற்றும் குமுதேஷும் ஏற்கனவே படகில் ஏறிவிட்டனர். முந்தைய நேர்காணலில், குமுதேஷ் தான் 'தனிப்பட்ட முறையில்' அவசர நிதிக்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை ஆதரிப்பதாக உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். அத்தகைய நடவடிக்கை கடும் நிபந்தனைகளைக் கொண்டுவரும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். ரத்னப்பிரிய, எப்போதும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை ஆதரித்து செயல்படுத்தி வருகின்ற, விக்கிரமசிங்கவின் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி உட்பட பெருந்தோட்டத்துறையில் உள்ள தொழிற்சங்கங்கள் அனைத்தும் விக்கிரமசிங்கவின் சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்க இணங்கியுள்ளன. அவர்கள் அனைவரும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தை ஆதரிக்கின்றனர்.

அரசியல் கட்சிகளாகவும் செயல்படும் தோட்டத் தொழிற்சங்கங்கள், வசதியான மற்றும் இலாபகரமான அமைச்சுப் பதவிகளை பெறுவதற்காக, கொழும்பில் ஏதாவது ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தை ஆதரித்து வரும் நீண்ட மற்றும் மோசமான வரலாற்றைக் கொண்டுள்ளன. அவற்றின் தலைவர்கள் அரசாங்கத்தில் பணியாற்றும் போது, அதிக சம்பளம் மற்றும் கௌரவமான வேலை மற்றும் சமூக நிலைமைகளுக்கான தொழிலாளர்களின் போராட்டங்களை நாசப்படுத்துவதில் அவர்களது தொழிற்சங்கங்கள் தோட்டக் கம்பனிகளுக்கு தொழில்துறை பொலிசாக செயற்படுகின்றன.

வேலைகள், ஊதியங்கள், ஓய்வூதியங்கள், பொது சுகாதாரம் மற்றும் கல்வி மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வெடிக்கும் தவிர்க்க முடியாத போராட்டங்களுக்குத் தயார்படுத்துவதற்குத் தேவையான அரசியல் படிப்பினைகளை தொழிலாளர்கள் பெற வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தொழிலாளர்களை உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக விஷயங்களை உங்கள் கைகளில் உடனடியாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறது. தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளைச் சாராமல், ஒவ்வொரு வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் நடவடிக்கை குழுக்களை உருவாக்குங்கள்.

இந்தப் போராட்டத்தில், இதேபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் கிராமப்புற மக்களை நோக்கி தொழிலாளர்கள் திரும்ப வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி கிராமப்புற உழைப்பாளிகளை நகரங்களிலும் கிராமங்களிலும் தங்களுடைய சொந்த சுயாதீன நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப வலியுறுத்துகிறது.

எந்தவொரு இடைக்கால அல்லது அனைத்து கட்சி முதலாளித்துவ அரசாங்கத்திற்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சியானது, நடவடிக்கைக் குழுக்களால் ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அடிப்படையில் ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான இலங்கை தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. இத்தகைய மாநாட்டின் ஊடாக, வெகுஜனங்களின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான சோசலிசக் கொள்கைகளுக்கான போராட்டத்தையும், அவற்றை நடைமுறைப்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தையும் அபிவிருத்தி செய்ய முடியும்.