சர்வகட்சி ஆட்சியை நிராகரி! சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கை வேண்டாம்! தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டை கட்டியெழுப்ப போராடு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில், கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வகட்சி அரசாங்கத்துடன் இணையுமாறு எதிர்க்கட்சிகளுக்கு விடுத்த வேண்டுகோள், சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கனத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிராக முழுமையான வர்க்க யுத்தத்தை முன்னெடுக்கப் போகின்ற ஒரு முதலாளித்துவ ஆட்சியை பலப்படுத்துவதை இலக்காகக் கொண்டது, என சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), எச்சரிக்கிறது.

எந்தவொரு சர்வகட்சி அல்லது இடைக்கால அரசாங்கமும் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் நசுக்கப்படுவதற்கு எதிரான எதிர்ப்பை அடக்குவதற்கான ஒரு கருவியாகவே இருக்கும். நெருக்கடி நிறைந்த ஆளும் வர்க்கத்தின் இடைவிடாத தாக்குதலுக்கு எதிராக, தங்கள் வர்க்க நலன்களுக்காகப் போராடுவதற்கான வழிமுறையாக, அவர்களது சொந்த சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை அடித்தளமாகக் கொண்டு, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டை அவசரமாக கூட்டுவதற்கு சோ.ச.க. அழைப்பு விடுத்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க [Source: United National Party Facebook] [Photo by United National Party Facebook]

நீண்டகால அமெரிக்க-சார்பு அரசியல் சேவகரும், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை அமுல்படுத்துபவருமான விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ வெகுஜன எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறியபோது, ஜூலை 14 அன்று, அவரால் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். மதிப்பிழந்த பாராளுமன்றத்தில் ஜனநாயக விரோத வாக்கெடுப்பு மூலம் ஜூலை 20 அன்று அவர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த மாதத்தில், எதேச்சதிகாரமாக கைதுகளைச் செய்யவும், கட்சிகள் மற்றும் அமைப்புகளைத் தடை செய்யவும், வேலைநிறுத்தங்களைத் தடைசெய்யவும், ஊடகங்களைத் தணிக்கை செய்யவும் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கும் அவருக்குப் பெரும் அதிகாரங்களை வழங்குகின்ற, கொடூரமான அவசரகாலச் சட்டங்களை விக்கிரமசிங்க அமுல்படுத்தினார்.

ஜூலை 22 அன்று ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இருந்து அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை வன்மமுறை மூலம் வெளியேற்றுமாறு இராணுவம் மற்றும் பொலிசாருக்கு விக்கிரமசிங்க கட்டளையிட்டார். இது ஜனாதிபதியாக பதிவியேற்று அவர் செய்த முதல் நடவடிக்கைகளில் ஒன்றாகும். கடந்த வாரம், ஆர்ப்பாட்டக்காரர்களையும் தொழிற்சங்க தலைவர்களையும் கைது செய்வதை பொலிஸ் தீவிரமாக்கிய நிலையில், பிரதான பொருளாதாரத் துறைகளில் வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தடைசெய்ய அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை அவர் நீட்டித்தார்.

விக்கிரமசிங்க இப்போது, ஆளும் வர்க்கத்தின் வேலைத் திட்டமான சிக்கன நடவடிக்கை மற்றும் அடக்குமுறையை முன்னெடுக்க, முழு கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தினதும் வெளிப்படையான ஆதரவை நாடியுள்ளார். கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் ஆற்றிய தனது கொள்கை விளக்க உரையில், நாடு முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அறிவித்தார். 'நாங்கள் பெரும் ஆபத்தில் இருக்கிறோம்,' என்று கூறிய அவர், 'நாட்டின் நலனுக்காக ஒரு அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைப்பதில் ஒன்றுபட வேண்டும்' என்று எதிர்க்கட்சிகளை வலியுறுத்தினார்.

'பெரும் ஆபத்து' பற்றி விக்கிரமசிங்க பேசும்போது, எல்லாவற்றிற்கும் மேலாக, தற்போதைய சகிக்க முடியாத வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக வெடித்துள்ள வெகுஜன எதிர்ப்பின் மூலம், முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அதன் அதிகாரம், சலுகைகள் மற்றும் செல்வத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலையே அவர் அர்த்தப்படுத்துகிறார். ஏப்ரல் 28, மே 6, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பங்குபற்றிய மூன்று மாத வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் பொது வேலைநிறுத்தங்களும் முதலாளித்துவ ஆட்சியின் ஆணிவேரை ஆட்டங்காணச் செய்து கோட்டாபய இராஜபக்ஷவை இராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்தன.

இப்போது விக்கிரமசிங்க, தொழிலாள வர்க்கத்துக்கும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களுக்கும் எதிராக ஒரு ஒருங்கிணைந்த எதிர்த்தாக்குதலை நடத்துவதற்கு, தந்திரோபாய வேறுபாடுகள் அனைத்தையும் ஒதுக்கி வைக்குமாறு, அரசியல் ஸ்தாபனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை உருவாக்கிய, உக்ரேன் போர் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் உட்பட, 'சாதகமற்ற சர்வதேச பொருளாதார காரணிகளை' ஜனாதிபதி கோடிட்டுக் காட்டினார். இந்த ஆண்டு, இலங்கையின் பொருளாதாரம் 7.6 சதவீதமாக சுருங்கும் என உலக வங்கி கணித்துள்ளது. அன்னியச் செலாவணி வறண்டு போனதால் அத்தியாவசிய உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களின் இறக்குமதிகள் எலும்புவரை ஒட்ட வெட்டப்பட்டுள்ளன. ஜூலை மாதத்தில் பணவீக்கம் 60 சதவீதத்தை எட்டியது, அதே சமயம் உணவுப் பற்றாக்குறை 90 சதவீதமாக உயர்ந்து பெரும் கஷ்டங்களை உருவாக்கியது.

பொருளாதாரத்தை 'புத்துயிர் பெறச்செய்தல்' மற்றும் 'நவீனப்படுத்துதல்' என்ற பெயரில், உழைக்கும் மக்கள் மீது புதிய சுமைகளை சுமத்த விக்கிரமசிங்க தயாராகி வருகிறார். கடந்த ஆண்டு 12.2 சதவீதமாக இருந்த வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைக்க முடிவுகட்டி, 2025க்குள் வரவு-செலவுத் திட்டத்துக்குள் உபரியை உருவாக்கும் அவரது நோக்கத்தை, வரிகளை மிகப்பெரியளவில் அதிகரித்தல், இலட்சக் கணக்கான அரச வேலைகளை அழித்தல், மீதமுள்ள அற்ப விலை மானியங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், அனைத்து அரச நிறுவனங்களையும் தனியார்மயமாக்குதல் மற்றும் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பொது சேவைகளை மேலும் மோசமாக வெட்டித்தள்ளுவதன் மூலம் மட்டுமே அடைய முடியும்.

இந்த தொழிலாள வர்க்க-விரோத திட்ட நிரலை செயல்படுத்த, விக்கிரமசிங்க 'புதிய அணுகுமுறைகளுடன் கூடிய புதிய அரசியலமைப்பை' முன்மொழிந்தார். அது 'அரசியல் கட்சித் தலைவர்களைக் கொண்ட தேசிய சபை' மற்றும் பல்வேறு அமைப்புகள் உட்பட 'ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரின் கருத்துக்களைப் பெறுவதற்கான ஒரு பொறிமுறையாக மக்கள் சபையையும்' நிறுவும்.

இந்த முன்மொழியப்பட்ட வழிமுறைகள் எந்த ஜனநாயக உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. மாறாக, ஊழல் நிறைந்த அரசியல் கட்சிகள், மத்தியதர வர்க்க 'சிவில் சமூக' குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களை தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கும் எதிராக அணிதிரட்டுவதே இந்த முன்மொழிவுகள் ஆகும்.

இந்த திட்ட நிரலின் ஜனநாயக-விரோதத் தன்மை, நடந்துகொண்டிருக்கும் பொலிஸ் அடக்குமுறையை நியாயப்படுத்த, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை 'பாசிஸ்டுகள்' மற்றும் 'பயங்கரவாதிகள்' என்று விக்கிரமசிங்க அவதூறாகத் தாக்குவதில் தெளிவாகத் தெரிகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களும் தொழிற்சங்கத் தலைவர்களும் தற்போது கைது செய்யப்பட்டு வரும் அதே நேரம், அவரது அரசாங்கம், சிக்கன நடவடிக்கை திட்டம் சம்பந்தமான எந்தவொரு எதிர்ப்புக்கும் எதிராக பரந்த அடக்குமுறைக்குத் தயாராகி வருவதுடன், எதிர்ப்பாளர்கள் இதே போல் “பாசிஸ்டுகள்” மற்றும் “பயங்கரவாதிகளாக” முத்திரை குத்தப்படுவார்கள்.

ஒரு சிந்தனைக் குழுவான அட்வகாட்டா ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் பேசிய போது, சர்வதேச நாணய நிதிய வேலைத் திட்டத்துக்கு மாற்றீடாக எதையாவது முன்வைக்குமாறு சவால் விடுத்த விக்கிரமசிங்க, 'முதல் ஆறு மாதங்கள் கடினமாக இருக்கும் ... [ஆனால்] துன்பத்தை அனுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லை' என்று எச்சரித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தை விட, பாராளுமன்ற எதிர்க்கட்சிகள் எதற்கும் மாற்றீடு கிடையாது. அவர்கள் அனைவரும் ஜனாதிபதியின் கொள்கை அறிக்கையை 'நேர்திசையிலானது' என்று பாராட்டினர்.

முன்னதாக விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற மறுத்திருந்த ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) தலைவர் சஜித் பிரேமதாச, வெள்ளிக்கிழமை திடீரென கரனம் அடித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். “சில [கலந்துரையாடப்பட்ட புள்ளிகள்] நேர்திசையிலானவை சில எதிர்மறையாக இருந்தன. ஆனால் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு எவ்வாறு உதவுவது என்பதை ஆராய்வதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர்,” என்று ஒரு ஐ.ம.ச. தலைவர் இந்த கலந்துரையாடலுக்குப் பின்னர் அறிவித்ததுடன் மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த உறுதியளித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஐ.ம.ச. உடன் இணைந்த முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகளாகச் செயற்படும் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி போன்ற பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் அனைத்தும் விக்கிரமசிங்கவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. பிரதான பெருந்தோட்டத் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அணியில் இணைவதற்கு இணங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான உருக்குலைந்து போன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) அனைத்துக் கட்சி ஆட்சியில் சேருவதற்கு ஒப்புக்கொண்டு, இந்த நகர்வுகளை “கவிழ்ப்பதற்கு” முயற்சிப்பதாக ஏனைய கட்சிகளை தாக்கிள்ளது. ஐந்து பேர் ஏற்கனவே விலகி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளதால் ஸ்ரீ.ல.சு.க. வெறும் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களையே கொண்டுள்ளது.

தமிழ் உயரடுக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளதுடன் மேலதிக பேச்சுவார்த்தைகளுக்கு இணங்கியுள்ளது. எவ்வாறாயினும், அனைத்துக் கட்சி பிரேரணையை கொள்கையளவில் அது ஒப்புக்கொண்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அனைத்துக் கட்சி அரசாங்கத்தை எதிர்க்கவில்லை, ஆனால் அது முன்மொழியப்பட்ட அரசாங்கத்தில் பங்கேற்காது என்று அறிவித்தது. ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸநாயக்க, “ஒவ்வொரு தரப்பினருக்கும் பங்களிப்பை வழங்க முடியும்” என்ற உரிமையுடன் கூடிய இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்திற்கான கட்சியின் சொந்த முன்மொழிவு பரிசீலிக்கப்படவில்லை என்று முறையிட்டார். முற்றிலும் மதிப்பிழந்த பாராளுமன்றத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கவும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் எந்தவொரு சுயாதீனமான நடவடிக்கையையும் தடுப்பதற்குமான ஒரு அவநம்பிக்கையான முயற்சியில், ஜே.வி.பி. ஒரு 'உடனடித் தேர்தலுக்கு' அழைப்பு விடுக்கிறது.

அதேபோல், போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியும் (மு.சோ.க.) பரவலாக வெறுக்கப்படும் விக்கிரமசிங்க தலைமையிலான எந்த அரசாங்கத்தையும் ஆதரிப்பது குறித்து எச்சரிக்கையாக உள்ளது. மு.சோ.க. தலைவர் குமார் குணரட்னம், ஜனாதிபதியின் முன்மொழிவு வெகுஜன எதிர்ப்பை நசுக்குவதாகவும், பாராளுமன்ற எதிர்க்கட்சிகள் அதை நிராகரித்து மு.சோ.க. உடன் 'வெகுஜனப் போராட்டத்தில்' இணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், விக்கிரமசிங்கவைப் போலவே அதே சர்வதேச நாணய நிதியக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த உறுதிபூண்டுள்ள முதலாளித்துவ எதிர்க்கட்சிகளுடன் தொழிலாளர்களையும் கிராமப்புற உழைப்பாளிகளையும் கட்டி வைத்திருக்க மு.சோ.க. முயல்கிறது.

தொழிற்சங்கங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற பாரிய வேலைநிறுத்தங்களை கால அளவில் மட்டுப்படுத்தியும் இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்தை அமைக்கும் அரசியல் நோக்கத்திற்குள் அடக்கிவைத்தும் ஒரு துரோகப் பாத்திரத்தை ஆற்றியுள்ளன. இப்போது தொழிற்சங்க எந்திரத்தின் சில பிரிவுகள் வெளிப்படையாக விக்கிரமசிங்கவுடன் அணிசேர்ந்து நிற்கின்றன.

சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ், சனிக்கிழமை விக்கிரமசிங்கவைச் சந்தித்து, மேலும் வேலைநிறுத்தங்கள் நடப்பதைத் தடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார் என்பதைத் தெளிவுபடுத்தினார். 'எங்களால் அடிக்கடி போராட முடியாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து தியாகம் செய்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய தருணம் இது. உங்களால் மட்டுமே அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

9 ஜூலை 2022, சனிக்கிழமை, கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் செல்லும் தெருவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியுள்ளனர். (AP Photo/Amitha Thennakoon) [AP Photo/Amitha Thennakoon]

இந்தக் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் எதிலும் தொழிலாளர்கள் நம்பிக்கை கொள்ளக்கூடாது. இவை அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று விக்கிரமசிங்கவுடன் உடன்படுகின்றன. முதலாளித்துவ வர்க்கம் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் சார்பாக அரசாங்கம் திணிக்கின்ற தீவிரமான கஷ்டங்களுக்கு எதிராக, தொழிலாள வர்க்கமும் கிராமப்புற மக்களும் போராடக்கூடிய ஒரு மாற்று சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்தது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.

சோசலிச சமத்துவக் கட்சி இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எந்த ஆதரவையும் அல்லது ஈடுபாட்டையும் நிராகரித்துள்ளது. தொழிலாளர்களையும் கிராமப்புற உழைக்கும் மக்களையும், விடயங்களை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும், புறநகர் பகுதிகளிலும், நகரம் மற்றும் கிராமங்களிலும், தொழிற்சங்கங்கள் மற்றும் சகல முதலாளித்துவக் கட்சியிலில் இருந்தும் முற்றிலும் சுயாதீனமாக, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு நாங்கள் அழைக்கின்றோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி உழைக்கும் மக்களின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு, நடவடிக்கைக் குழுக்களை அமைத்துப் போராட வேண்டிய தொடர் கொள்கைகளை முன்வைத்தது. அவையாவன: அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொழிலாள வர்க்கக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும், வங்கிகள், பெரிய கூட்டுத்தாபனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை ஜனநாயக பொதுக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்க வேண்டும், பில்லியனர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் பிரமாண்டமான சொத்துக்களை கைப்பற்றுவதுடன் அனைத்து வெளிநாட்டு கடன்களையும் நிராகரிக்க வேண்டும்.

உழைக்கும் மக்களின் அத்தியாவசிய சமூக உரிமைகளுக்கான போராட்டம் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி எதேச்சதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறையை உடனடியாக ஒழிக்க வேண்டும், அவசரகாலச் சட்டம், அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்து செய்ய வேண்டும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என அழைப்புவிடுக்கின்றது.

எந்தவொரு முதலாளித்துவ, அனைத்துக் கட்சி, இடைக்கால அல்லது வேறுவிதமான அரசாங்கத்திற்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சியானது தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதற்கு தேவையான அரசியல் நெம்புகோலாக, நடவடிக்கை குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட'தொழிலாளர் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டிற்கு' அழைப்பு விடுக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சி, ஜூலை 20 வெளியிட்ட அறிக்கையில் விளக்கியவாறு, அத்தகைய மாநாடு 'தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சக்திகளை ஒருங்கிணைக்கவும், கிராமப்புற மக்களின் தீவிர ஆதரவை வென்றெடுக்கவும், சமூகத்தை சோசலிச வழியில் மறுகட்டமைக்க அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தின் மூலம் அதன் சொந்த ஆட்சி அதிகாரத்துக்கு அடித்தளம் அமைக்கவும் ஒரு அரசியல் மூலோபாயத்தை வழங்குகிறது. தொழிலாளர்களும் கிராமப்புற மக்களும் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதற்கான அரசியல் போராட்டத்தை எவ்வளவு வேகமாக மேற்கொள்கிறார்களோ, அவ்வளவு விரைவில் ஆளும் வர்க்கங்களால் தயாரிக்கப்படும் பேரழிவை எதிர்க்க தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் மாநாட்டைக் கூட்ட முடியும். இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க விரும்புவோருக்கு அனைத்து அரசியல் உதவிகளையும் நாம் வழங்குகிறோம்.”

உழைக்கும் மக்களை பிளவுபடுத்தவும், முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகளுக்கு சோசலிச தீர்வுக்கானும் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யவும் ஆளும் வர்க்கத்தால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் சிங்களப் பேரினவாதம் அல்லது தமிழ் இனவாதத்தைத் தூண்டும் எந்தவொரு முயற்சியையும் கடுமையாக எதிர்க்குமாறு தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. இப்போராட்டத்தில், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலை மற்றும் ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக நாட்டிற்கு நாடு போராட்டத்திற்கு வந்துகொண்டிருக்கும் சர்வதேச தொழிலாள வர்க்கமே, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் கூட்டாளியாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் தமது நடவடிக்கைக் குழுக்களை இணைப்பதன் மூலம் இலங்கைத் தொழிலாளர்கள் தமது போராட்டங்களையும் சர்வதேச தொழிலாளர்களுடனும் ஒருங்கிணைத்து ஐக்கியப்படுத்த முடியும்.

இந்த வேலைத்திட்டத்திற்காக போராட சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading