இலங்கையில் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான அரச தாக்குதலை சோ.ச.க. கண்டிக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) வெள்ளிக்கிழமை அதிகாலை கொழும்பில் காலி முகத்திடலில் நிராயுதபாணியான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பொலிஸ்-இராணுவத்தின் மிருகத்தனமான தாக்குதலைக் கண்டிக்கிறது. ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய இராஜபக்ஷவும், தற்போது அவருக்குப் பின் வந்த ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகக் கோரி காலி முகத்திடலை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்க [படம்: ஐக்கிய தேசியக் கட்சி முகநூல்] [Photo by United National Party Facebook]

விக்கிரமசிங்க, அவர் நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்று 24 மணித்தியாலங்களுக்குள் நடத்தப்பட்ட இந்த அடக்குமுறையை தெளிவாகத் தூண்டிவிட்டார். அவர் பதில் ஜனாதிபதியாக இருந்த குறுகிய காலத்தில், அவசரகால நிலையை அறிவித்து, பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரங்களைக் கொடுத்ததோடு, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை 'பாசிஸ்டுகள்' என்று முத்திரை குத்தினார். தீவு முழுவதும் 'பொது ஒழுங்கை' பராமரிக்க இராணுவத்திற்கு உத்தரவிட்டு வியாழன் அன்று அவர் ஒரு ஆணையை வெளியிட்டார்.

இந்த பொலிஸ்-இராணுவ நடவடிக்கை நன்கு திட்டமிடப்பட்ட ஒன்றாகும். இது ஆர்ப்பாட்டக்காரர்களைப் பிடிக்கவும், பொதுமக்களின் கவனத்தைத் தவிர்க்கவும் வெள்ளிக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் தொடங்கப்பட்டது. காலி முகத்திடலுக்குச் செல்லும் அனைத்து வீதிகளும் அடைக்கப்பட்டன. சுமார் 1,000 பொலிசார் மற்றும் படையினர், முகத்தை மூடிக்கொண்டு, அனைத்து திசைகளிலிருந்தும் போராட்ட தளத்தில் இறங்கி, எதிர்ப்பாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை சரீர ரீதியாக தாக்கியதுடன் அவர்களது கூடாரங்கள் மற்றும் தற்காலிக கட்டமைப்புகளை உடைத்தனர். 14 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள ஜனாதிபதி செயலகத்தை பிற்பகல் 2 மணிக்குள் காலி செய்யப்போவதாக போராட்ட ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே அறிவித்திருந்த போதிலும் வெள்ளிக்கிழமை விக்கிரமசிங்க இந்த கொடூர தாக்குதலுக்கு அதிகாரமளித்தார். இது காலி முகத்திடலை போராட்டக் களத்தை அகற்றுவது மட்டுமல்லாமல், கடந்த மூன்று மாதங்களாக எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களில் இணைந்துள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அச்சுறுத்தும் செய்தியை அனுப்புவதையும் தெளிவான இலக்காகக் கொண்டதாகும்.

விக்கிரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கொடூரமான சிக்கனக் கோரிக்கைகளை ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்தத் தயாராகி வருகின்றது என உழைக்கும் மக்களை எச்சரிக்கும் சோசலிச சமத்துவக் கட்சி, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஏற்கனவே மோசமான தட்டுப்பாடு மற்றும் வானளாவிய விலைவாசி அதிகரிப்பை எதிர்கொள்ளும் உழைக்கும் மக்கள் மத்தியில் இன்னும் கூடுதலான வெகுஜன எதிர்ப்பைத் தூண்டும் என்பதை நன்கு உணர்ந்துள்ளது. ஆளும் வர்க்கத்திடம் ஒரே ஒரு பதில் மட்டுமே உள்ளது. அது வெகுஜன அடக்குமுறை ஆகும். அதை செயல்படுத்தவே விக்கிரமசிங்கவை நியமித்துள்ளது.

இந்த தாக்குதல், 'பாராளுமன்ற ஜனநாயகம்' எனப்படுவது முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கான ஒரு முகமூடி மட்டுமே என்ற உண்மையை அம்பலப்படுத்தியுள்ளது. அரசியலமைப்பு மற்றும் 'ஜனநாயகம்' ஆகியவற்றைப் பாதுகாப்பதாக விக்கிரமசிங்க கூறுவது முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதைத் தவிர வேறில்லை. ஒருதலைப்பட்சமாக அரசாங்கங்களை நிறுவுதல் மற்றும் பதவி நீக்கம் செய்தல், ஆணை மூலம் ஆட்சி செய்தல், அவசரநிலைகளை பிரகடனப்படுத்துதல் மற்றும் உழைக்கும் மக்களுக்கு எதிராக இராணுவம் மற்றும் பொலிசாரால் மரண பலத்தை பயன்படுத்த உத்தரவிடுதல் போன்ற, சர்வாதிகாரியின் பரந்த அதிகாரங்களை இலங்கை அரசியலமைப்பு விக்கிரமசிங்கவிற்கு வழங்குகிறது.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) உட்பட ஆளும் வர்க்கத்தின் அனைத்துக் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள், அதே போல், முன்னிலை சோசலிசக் கட்சியின் (மு.சோ.க.) போலி-இடது அடிவருடிகள் உட்பட சிவில் சமூக அமைப்புகள் என்று அழைக்கப்படுபவை, தொழிற்சங்கங்கள் மற்றும் காலி முகத்திடலில் போராட்டத் தலைவர்களும், அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்றத்தின் புனிதத்தன்மையை பிரகடனப்படுத்துகின்றன. அவர்கள் அனைவரும், புதிய ஜனாதிபதியை நியமிக்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடந்த வாக்கெடுப்பு வெகுஜனங்களுக்கு நம்பிக்கையை அளிக்கின்றது என்ற மாயையை ஊக்குவித்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே, புதனன்று பாராளுமன்றத்தில் நடந்த கேலிக்கூத்தை 'தொழிலாளர் வர்க்கம், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு எதிரான ஒரு மோசடி மற்றும் சதி' என்று கண்டனம் செய்தது. பொருளாதார நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்தவும் எந்த எதிர்ப்பையும் நசுக்கவும், விக்கிரமசிங்கவை பெருவணிகம், அமெரிக்க ஏகாதிபத்தியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களும் ஆதரித்து வருகின்றனர்.

முதலாளித்துவ ஆட்சியின் ஈவிரக்கமற்ற பாதுகாவலராக விக்கிரமசிங்க ஒரு நீண்ட சரித்திரத்தைக் கொண்டுள்ளார். அவர் 1980 களில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்களில் அமைச்சராக இருந்தார். அது சந்தை சார்பு கொள்கைகளுக்கு எதிரான பொது வேலைநிறுத்தத்தை முறியடித்தது, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததுடன் 1983 இல், தீவின் பேரழிவு தரும் இனவாத போரைத் தொடங்கிய இழிவான தமிழர்-விரோத படுகொலைகளை ஏற்பாடு செய்தது. 1988-90ல் கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் தலைதூக்கிய அமைதியின்மையின் மீது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்ட இரத்தக்களரி ஒடுக்குமுறையின் போது, பட்டலந்தவில் இருந்த சித்திரவதை/கொலை முகாம்களை மேற்பார்வையிட்டு வந்ததாக அவர் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பொலிஸ்-அரசு நடவடிக்கை பரவலான எதிர்ப்புகளைத் தூண்டும் என்பதைப் பற்றி தெளிவாக கவலை கொண்ட கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், எதிர்ப்பாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல் குறித்த தனது 'ஆழ்ந்த கவலைகள்' என்று ட்வீட் செய்ததோடு, 'அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை வழங்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். என்ன போலித்தனம்! அமெரிக்கா தனது சொந்த கொள்ளையடிக்கும் நலன்களுக்காக மட்டுமே 'மனித உரிமைகளை' தூக்கிப் பிடிக்கின்றதுடன், அது விக்கிரமசிங்க அரசாங்கத்தின் எதிர்கால துஷ்பிரயோகங்கள் பற்றிய கவலையின் வெளிப்பாடுகளைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தவில்லை.

11 ஜூலை 2022 திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கூடியுள்ள மக்கள் கூட்டம் [Image: WSWS] [Photo: WSWS]

தொழிற்சங்கங்களும் எதிர்க் கட்சிகளும் விக்கிரமசிங்கவை பதவியில் அமர்த்துவதற்கு வழி வகுத்துள்ளதுடன், சலுகைகளை பெறுவதற்காக அவரது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற அபாயகரமான மாயையை ஊக்குவிக்கின்றன. உழைக்கும் மக்களின் ஒரு சுயாதீன இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலம், அவை, எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிடுவதற்கு விக்கிரமசிங்கவுக்கு சுதந்திரம் வழங்குகிறார்கள்.

ஒரு முக்கிய தொழிற்சங்க முன்னணியான தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் (TUCC) இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ், குறைந்தபட்சம் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அடுத்த தேர்தல் வரை தனது 'நேர்மையான ஆதரவை' வழங்குமாறு விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்து ஒரு திறந்த கடிதம் ஒன்றை எழுதினார்.

வியாழனன்று, அரசாங்கத்திற்கு எதிரான போராட்ட இயக்கத்தில் ஈடுபட்டுள்ள 'கட்சி சார்பற்ற கிளர்ச்சியாளர்களின் தேசிய இயக்கம்', தங்கள் எதிர்ப்பைக் கலைத்த பின்னர் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் முன் ஊடக சந்திப்பை நடத்தியது. விக்கிரமசிங்கவுக்கு ஓரிரு மாதங்கள் அவகாசம் தருவதாகவும், திருப்தி இல்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் என்றும் அவர்கள் கூறினர்.

விக்கிரமசிங்க பதில் அளித்துள்ளார். தாம் எதிர்கொள்ளும் சகிக்க முடியாத வாழ்க்கை நிலைமைகள் சம்பந்தமாக உழைக்கும் மக்கள் காட்டும் எதிர்ப்பிற்கு இராணுவ வன்முறை மூலம் பதில் அளிக்கப்படும் என்று பதிலளித்துள்ளார்.

வெள்ளியன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்த போதிலும், இராணுவ வன்முறையின் அடிப்படை மூலத்தை மூடி மறைக்க முற்பட்டார். விக்கிரமசிங்க, இராஜபக்சக்களை பாதுகாப்பதாக குற்றம் சாட்டிய அவர், அவர்களை பதவியில் இருந்து வெளியேற நெருக்கிய போராட்டக்காரர்களுக்கு எதிராக பழிவாங்குவதற்கு, அவர்களால் ஒப்பந்தத்துக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

எவ்வாறாயினும், விக்கிரமசிங்க, இராஜபக்ஷக்களின் சார்பாகச் செயற்படவில்லை, மாறாக வெடித்துள்ள வெகுஜன மக்கள் எழுச்சியால் அச்சமடைந்துள்ள ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தினர் சார்பாகவே அவர் இயங்குகிறார். முதலாளித்துவப் பொருளாதாரம் திவாலானது, அதனால் உழைக்கும் மக்களுக்கு எந்த சலுகையும் அளிக்க முடியாது, எந்த எதிர்ப்பையும் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்ட, முதலாளித்துவ வர்க்க உணர்வுள்ள ஒரு பிரதிநிதியே அவர்.

ஜே.வி.பி.யும் அனைத்துக் கட்சிகளைக் கொண்ட இடைக்கால அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வரும் எதிர்க்கட்சிகளும் அதையே செய்ய உந்தப்படும்.

காலி முகத்திடலில் போராட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவ/பொலிஸ் வன்முறைகளைப் பயன்படுத்துவதானது முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சிகள் அதிகாரத்தில் இருந்தால் விளைவு என்ன என்பதற்கான எச்சரிக்கையாகும். 'தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டிற்காக!' என்ற தலைப்பில் ஜூலை 20 அன்று சோசலிச சமத்துவக் கட்சியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அரசியல் முன்முயற்சியை தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்கள் மேற்கொள்ள வேண்டிய அவசரத் தேவையை இது வலியறுத்துகிறது. 'கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் மதிப்பிழந்த நாடாளுமன்றக் கூட்டாளிகளால் அமைக்கப்படும் பிற்போக்கு முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்திற்கு ஒரு புரட்சிகர அரசியல் மாற்றீடாக' அத்தகைய மாநாட்டை கூட்ட வேண்டியதன் அவசியத்தை அது விளக்கியது.

மாநாட்டைக் கூட்டுவதற்கான அடித்தளத்தை ஸ்தாபிக்க, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் ஒவ்வொரு வேலைத் தளத்திலும், தொழிற்சாலைகளிலும், பெருந்தோட்டங்களிலும், சுற்றுப்புறங்களிலும் மற்றும் கிராமப் பகுதிகளிலும் தங்கள் வர்க்க நலன்களுக்காகப் போராடுவதற்குத் தங்களின் சொந்த நடவடிக்கை குழுக்களை உருவாக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. அரசியல் ஸ்தாபனம், அரச எந்திரம் மற்றும் இராணுவம் மேலும் மேலும் வன்முறையைத் தயாரிக்கும் போது, தொழிலாளர்கள் தங்கள் நடவடிக்கைக் குழுக்களின் மூலம் வெகுஜனங்களின் ஜனநாயக உரிமைகளை இடைவிடாது பாதுகாத்து பதிலளிக்க வேண்டும். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது என்பது சோசலிச கோரிக்கைகளுக்கான போராட்டத்துடனும் கிடைக்கக்கூடிய எல்லா வழிகளிலும் தங்கள் செல்வம் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் ஊழல் நிறைந்த இலாப வெறிகொண்ட ஆளும் உயரடுக்கிடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதுடனும் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி அறிக்கை அறிவித்தது போல், 'தொழிலாளர் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டிற்கான அழைப்பு, தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சக்திகளை ஒருங்கிணைப்பதற்கும், கிராமப்புற மக்களின் தீவிர ஆதரவை வென்றெடுப்பதற்கும் மற்றும் சோசலிச வழியில் சமூகத்தை மறுசீரமைக்க உறுதிப்பாடு கொண்ட ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காக, அதன் சொந்த ஆட்சிக்கு அடித்தளத்தை அமைப்பதற்கும் ஒரு அரசியல் மூலோபாயத்தை வழங்குகிறது.” இந்தப் போராட்டம் தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Loading