இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி முன்னிலை சோசலிசக் கட்சி மீதான பொலிஸ் தேடுதலைக் கண்டிக்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் கொழும் புறநகர் பகுதியான நுகேகொடவில் உள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (மு.சோ.க.) தலைமை அலுவலகத்தில் நடத்திய பொலிஸ் சோதனைகள் மூலம் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை வேட்டையாடுவதை தீவிரப்படுத்தியுள்ளது.

3 ஏப்ரல் 2022 அன்று முந்தைய போராட்டத்தின் போது, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர்களை கலகமடக்கும் பொலிசார் தடுத்து நிறுத்தினர் [WSWS Media] [Photo: WSWS]

மு.சோ.க. கல்விச் செயலாளர் புபுது ஜயகொடவின் கூற்றுப்படி, சிவில் உடையில் 10 அதிகாரிகள் மற்றும் சீருடையில் இருந்த ஒரு அதிகாரி அடங்கிய பொலிஸ் குழு, வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் கட்சியின் அலுவலகத்தை சோதனையிட்டது. அங்கிருந்த கட்சி உறுப்பினர்கள் வளாகத்தில் தேடுதல் நடத்துவதை எதிர்த்து, தேடுதல் ஆணையைக் கோரினர். தாம் எந்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிசார் கூறவில்லை அல்லது அடையாளம் காட்டவில்லை, ஆனால் வலுக்கட்டாயமாக வளாகத்திற்குள் நுழைந்து, கட்சி ஆவணங்களைத் தேடி, புத்தக அலமாரிகளைக் இழுத்துக் கொட்டிவிட்டு வெளியேறினர்.

காலை 8.10 மணியளவில், சீருடை அணிந்த சுமார் 30 அதிகாரிகள் கொண்ட இரண்டாவது பொலிஸ் குழு மு.சோ.க. அலுவலகத்திற்கு வந்தது. அவர்கள் அருகிலுள்ள மிரிஹான பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (அ.ப.மா.ஒ.) ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவைத் தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.

கட்சி உறுப்பினர்கள் தேடுதல் உத்தரவைக் கோரியபோது, காலி முகத்திடலை ஆக்கிரமித்துள்ள அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மத்தியில் செயற்பட்ட முதலிகே மீதான நீதவான் நீதிமன்றப் பிடியாணையை பொலிஸார் காண்பித்தனர். மீண்டும், மு.சோ.க. உறுப்பினர்களின் எதிர்ப்பைப் புறக்கணித்த பொலிசார், வளாகத்தை சோதனை செய்து விட்டு வெளியேறினர்.

பொலிஸ் சோதனைகள் மு.சோ.க. இன் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறுவதும் ஒட்டுமொத்த இலங்கை தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையும் ஆகும். இவை அனைத்து அரசாங்க-விரோத எதிர்ப்பையும் நசுக்கும் நோக்கில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டு வரும் உக்கிரமான அடக்குமுறை அலையின் ஒரு பகுதியாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), போலி-இடது மு.சோ.க. உடனான அதன் அடிப்படையான மற்றும் நன்கு பிரசித்தமான அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்த அமைப்புக்கு எதிரான விக்கிரமசிங்கவின் ஜனநாயக விரோத மற்றும் அடக்குமுறை பொலிஸ் சோதனைகளை எதிர்க்கிறது மற்றும் கண்டிக்கிறது.

ஒரு வலதுசாரி, அமெரிக்க சார்பு கைக்கூலியான விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதும், உத்தியோகபூர்வமாக அவசரகால நிலையை ஜூலை 17 அன்று அறிவித்தார். இதன் கீழ் நபர்களை எதேச்சதிகராமாக கைது செய்யவும், தடுத்து வைக்கவும் இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்படுவதோடு, போராட்டங்களை நசுக்கவும், அமைப்புகளைத் தடை செய்யவும், தேடுதல் நடத்தவும், இராணுவத்தை நிலைநிறுத்தவும் மற்றும் தனிப்பட்ட சொத்துகளில் தேடுதல் நடத்தவும் மற்றும் தணிக்கையை விதிப்பதற்குமான அதிகாரத்தை தனக்கு வழங்கிக்கொண்டார்.

மதிப்பிழந்த இலங்கை நாடாளுமன்றத்தால் ஜனநாயகமற்ற முறையில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகு, அவர் செய்த முதல் செயல், ஜூலை 22 அன்று ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் இருந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக பொலிஸ்-இராணுவ வன்முறை நடவடிக்கைக்கு அனுமதியளித்ததாகும். பாதுகாப்புப் படையினர் பல போராட்டக்காரர்களைத் தாக்கி காயப்படுத்தியதுடன் ஒன்பது பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பரவலான வெகுஜன எதிர்ப்புக்கு மத்தியில் அன்று மாலை நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் இராஜினாமா செய்யக் கோரி காலி முகத்திடலில் பல மாதங்களாக நடைபெற்ற போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்களில் சிலர் உட்பட சுமார் இரண்டு டஜன் பேர் கைது செய்யப்பட்டதுடன் இந்தத் தாக்குதல்கள் தொடர்கின்றன. இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோஷத்தை “ரணில் வீட்டுக்கு போ” என மாற்றிக்கொண்டனர்.

வெகுஜனக் கைதுகளுக்கான தயாரிப்பில், ஜனாதிபதி மாளிகை, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் உட்பட போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்திருந்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள், புகைப்படங்கள் மற்றும் கைரேகைகள் போன்ற 'ஆதாரங்களை' பொலிசார் இப்போது சேகரித்து வருகின்றனர். நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் எவரையும் கைது செய்வதற்காக சர்வதேச விமான நிலையத்திற்கு கைரேகைகள் அனுப்பப்பட்டுள்ளன. “சந்தேக நபர்களின்” புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டு, பொலிசுக்கு கூடுதல் தகவல்களை வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில், சண்டே டைம்ஸ் பத்திரிகை, பெயரிடப்படாத ஒரு சிரேஷ்ட அரசாங்க அதிகாரியை மேற்கோள் காட்டி, 'அதிகாரத்தைக் கைப்பற்ற அல்லது அரச கட்டிடங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முயற்சிக்கும் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் எந்தக் குழுக்கள், அமைப்புகள் அல்லது அரசியல் கட்சிகளும் ஜனநாயக விரோத முறைகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்வதைப் பற்றி அரசாங்கம் பரிசீலித்து வருகிறது' என சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சானது 'அத்தகைய நடவடிக்கைகளுக்கு உதவும் அல்லது உறுதுணையாக இருக்கும் எந்தவொரு அமைப்பு அல்லது அரசியல் கட்சியையும் தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சட்ட ஆலோசனையை நாடியுள்ளது' என்றும் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

அதன் அதிகரித்து வரும் அடக்குமுறையை நியாயப்படுத்தும் வகையில், விக்கிரமசிங்கவும் அரசாங்க உறுப்பினர்களும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மீது தங்களது மோசமான அவதூறுகளை முடுக்கி விட்டுள்ளனர்.

சனிக்கிழமையன்று கண்டியில் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முன் உரையாற்றிய விக்கிரமசிங்க, “நாம் தற்போது பாசிச பயங்கரவாதத்தை கையாள்கின்றோம். ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் பல குழுக்கள் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்து அரச சொத்துக்களை அழித்தனர் அல்லது திருடியுள்ளனர்” என்று அறிவித்தார்.

என்ன ஒரு இழிவான சூழ்ச்சி! முன்னாள் இராஜபக்ஷ ஆட்சியுடன் இணைந்து, விக்கிரமசிங்கவும் அவரது அரசாங்கமுமே, அத்தியாவசிய தேவைகளான உணவு, மருந்து மற்றும் எரிபொருள் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான ஏனைய அடிப்படைத் தேவைகளைக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மீது பொலிஸ்-இராணுவத் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

அவர் அரச அடக்குமுறையை முடுக்கிவிடுகையில், விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணை எடுப்பு ஒப்பந்தம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சிக்கன நடவடிக்கைகள், ஊதியம் மற்றும் ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் பாரிய பொதுத்துறை வேலை அழிப்புகள் உட்பட்டவற்றை தீர்மானிக்க முயற்சிக்கிறார்.

இந்த கொடூரமான நடவடிக்கைகளுக்கு அரசியல் அங்கீகாரத்தைப் பெறும் முயற்சியில், விக்கிரமசிங்க அனைத்துக் கட்சி அரசாங்கம் ஒன்றை நிறுவ முற்படுகிறார். வெள்ளியன்று, அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் கடிதம் எழுதி, 'நம்முன் உள்ள சவால்களை வெற்றிகரமாகச் சமாளிக்க பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள், நிபுணர் குழுக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொடர்புடைய அனைத்துக் கட்சிகளின் பங்களிப்புடன் ஒரு வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்' என்று அறிவித்தார்.

இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகள் சாதகமாக பதிலளித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய மக்கள் சக்தியும், சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சமிக்ஞை செய்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) 'அரசியல் ஸ்திரத்தன்மையை' திணிக்க, பொருளாதாரத்தை 'புத்துயிர்ப்பிக்க' ஒரு ஆட்சியை திணிப்பதன் பேரில் உடனடி பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தந்திரோபாய வேறுபாடுகளைக் கடந்து, இந்தக் கட்சிகள் அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை அமுல்படுத்தவும் 'அரசியல் ஸ்திரத்தன்மை' மீளமைக்கவும்- அதாவது, இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பேரழிவுகரமான மற்றும் மோசமான சமூக நிலைமைகளுக்கு எதிரான அனைத்து வெகுஜன சமூக எதிர்ப்பையும் நசுக்குவதற்கும், உடன்படுகின்றன.

மு.சோ.க. மீதான பொலிஸ் தாக்குதல்களைக் கண்டிக்கும் அதே வேளை, அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்திற்கான அழைப்பில் இந்த போலி-இடது கட்சிக்கு அடிப்படை வேறுபாடுகள் எதுவும் இல்லை என்றும், பல்வேறு எதிர்க்கட்சிகளுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது என்றும் சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கிறது.

புபுது ஜயகொட இந்த ஆண்டின் தொடக்கத்தில் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றினார் [Facebook Image] [Photo by Facebook]

பொலிஸ் சோதனைகளைத் தொடர்ந்து ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய மு.சோ.க. தலைவர் புபுது ஜயகொட, விக்கிரமசிங்க அரசாங்கம் 'சட்டபூர்வமான அரசாங்கம் அல்ல.. [மற்றும்] அதனிடம் எந்த திட்டமும் இல்லை' மற்றும் 'அதிகாரத்தில் இருக்க அது இராணுவ சக்தியைப் பயன்படுத்த முயற்சிக்கின்றது,” இதனால் எந்த ஒரு பெரிய நாடும் அல்லது நிறுவனமும் இலங்கைக்கு உதவவில்லை' என்று அறிவித்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாளர்கள் மற்றும் வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை மிகப் பெருமளவு தீவிரப்படுத்தக் கூடிய அதன் பிற்போக்கு பொருளாதார மற்றும் சமூக வெட்டு வேலைத்திட்டத்துக்காக விக்கிரமசிங்க அரசாங்கத்தை மு.சோ.க. எதிர்க்கவில்லை. சர்வதேச நாணய நிதியம் மற்றும் பெரும் சக்திகளின் 'உதவியை' பெறுவதற்குத் தேவையான, சிக்கன திட்டத்தை அமுல்படுத்துவதற்குரிய சட்டபூர்வமான தன்மை மற்றும் சர்வதேச நிலைப்பாட்டை அது கொண்டிருக்கவில்லை, என்ற காரணத்தாலேயே அது விக்கிரமசிங்கவை எதிர்க்கின்றது.

பரவலாக வெறுக்கப்படும் விக்கிரமசிங்க இல்லையெனில், எதிர்க் கட்சிகளுடன் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்துக்கு, சலுகைகளை கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்க முடியும், என்ற மாயையை மு.சோ.க. வளர்க்கிறது.

விக்கிரமசிங்க ஆட்சிக்கு அல்லது எதிர்காலத்தில் வரவுள்ள எந்த இடைக்கால அரசாங்கத்திற்கும் காட்டும் எதிர்ப்புகள் அல்லது வேண்டுகோள்கள் எதுவாக இருந்தாலும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது ஒருபுறம் இருக்க, தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வா சாவா பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் கிராமப்புற ஏழைகளின் ஆதரவை திரட்டுவதற்கு தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அணிதிரள வேண்டியது அவசரமான அவசியமாகும். சோசலிச சமத்துவக் கட்சி ஜூலை 20 வெளியிட்ட அறிக்கையில், 'தொழிலாளர் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டுக்காக!' அழைப்பு விடுத்தது. அத்தகைய மாநாடு, 'கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் மதிப்பிழந்த நாடாளுமன்றக் கூட்டாளிகளால் அமைக்கப்படும் பிற்போக்கு முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்திற்கு ஒரு புரட்சிகர அரசியல் பதிலீடாகும்' என்று அது வலியறுத்தியது.

அத்தகைய மாநாட்டுக்கு ஆதரவைக் கட்டியெழுப்புவதற்கு, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் தங்கள் வர்க்க நலன்களுக்காகப் போராட ஒவ்வொரு வேலைத் தளங்களிலும், பெருந்தோட்டங்களிலும், சுற்றுப்புறங்களிலும் மற்றும் கிராமப்புறங்களிலும், அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, அவர்களது சொந்த நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புமாறு நாங்கள் அழைக்கிறோம். இத்தகைய நடவடிக்கைக் குழுக்கள் வெகுஜனங்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை வழங்கும்.

அதே நேரத்தில், சோசலிச கோரிக்கைகளுக்காக போராடுவதன் மூலம் மட்டுமே, வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவது மற்றும் ஊழல் மற்றும் வெறித்தனமான ஆளும் உயரடுக்கிடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவது உட்பட, உண்மையான ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று நாங்கள் கூறுகிறோம்.

'தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டிற்கான' போராட்டம், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அடிப்படையை வழங்கும். தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அரசியல் போரை முன்னெடுக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.

Loading