சீனா உடனான பதட்ட நிலையில் தைவான் ஜலசந்தி வழியாக போர்க் கப்பல்களை அனுப்ப அமெரிக்கா சூளுரைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தைத் தொடர்ந்து, இது ஒரு கால் நூற்றாண்டில் இப்பிராந்தியத்தில் மிகப் பெரிய கடுமையான நெருக்கடியைத் தூண்டி விட்டுள்ள நிலையில், அமெரிக்கா அதன் அடுத்த ஆத்திரமூட்டலுக்கான திட்டங்களை அறிவித்துள்ளது: தைவான் ஜலசந்தி வழியாகப் போர் விமானம் மற்றும் போர்க் கப்பல்களை அது அனுப்புகிறது.

'அடுத்த சில வாரங்களில் தைவான் ஜலசந்தி வழியாக வான்வழி மற்றும் கடல்வழிப் போக்குவரத்தை' அமெரிக்கா நடத்தும் என்று வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் ஜோன் கெர்பி தெரிவித்தார்.

USS Ronald Reagan leads the Ronald Reagan Strike group during a photo exercise for Valiant Shield 2018 (U.S. Navy photo by Mass Communication Specialist 3rd Class Erwin Miciano)

தைவான் ஜலசந்தியை சீனா அதன் பிராந்திய கடற்பகுதியாகப் பார்க்கிறது என்று அமெரிக்க அதிகாரிகளிடம் பெய்ஜிங் கூறியதாகவும், அனேகமாக சீன இராணுவப் படைகள் அங்கே ஓர் அமெரிக்க போர்க் கப்பல் செல்வதை தடுக்கப் பார்க்கலாம் என்பதால், இது ஓர் இராணுவ மோதலுக்கு இட்டுச் செல்லும் சாத்தியக்கூறு இருப்பதாகவும் ஜூன் மாதம் ஃபார்ச்சூன் பத்திரிகை அறிவித்தது.

தைவானுக்கு வெளியில் உள்ள கடற்பரப்பில் செயல்பட்டு வரும் USS ரொனால்ட் ரீகன் விமானந்தாங்கி போர்க் கப்பலின் தாக்குதல் குழு அந்தப் பகுதியில் அதன் நிலைநிறுத்தலை விரிவுபடுத்தும் என்று கெர்பி அறிவித்தார்.

தைவான் சம்பந்தமாக நிலவும் ஓர் இராணுவப் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்காவின் இந்த அறிவிக்கை வந்தது. பெலோசியின் வருகைக்குப் பின்னர், தைவானின் எல்லாப் பக்கங்களிலும் உள்ள கடல் பகுதிகளில் நிஜமான போர்ப் பயிற்சிகளைச் சீனா நடத்தியது, இது விமானங்களை இரத்து செய்யவும் மற்றும் கப்பல்களை வேறு வழிகளில் திருப்பி விடவும் நிர்பந்தித்தது.

தைவான் ஜலசந்தியில் இது வரை இல்லாத வகையில் நடத்தப்பட்ட அதன் மிகப் பெரிய இராணுவப் பயிற்சியில் 100க்கும் மேற்பட்ட போர் விமானங்களையும், 10 க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்களையும் சீனா நிலைநிறுத்தியது. பெருந்தொலைவுக்குச் சென்று தாக்கும் குறைந்தது 11 ஏவுகணைகளைச் சீனா ஏவியது, அவற்றில் சில நேரடியாகத் தைவான் பெருநிலத்தின் மீதே பறந்து சென்றன, தைவானின் கின்மென் தீவுகள் மீது பறந்து சென்ற டிரோன்களையும் அது பயன்படுத்தியது.

18 சர்வதேச விமான வழித் தடங்களில் 900 க்கும் அதிகமான விமானங்கள் மாற்றியமைக்கப்பட்டன, 66 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

இந்த இராணுவப் பயிற்சிகள் 'நீண்ட தூர ராக்கெட் ரக பீரங்கிகள், கப்பல் தகர்ப்பு தொலைதூர ஏவுகணைகள், தந்திரப் போர் விமானங்கள் மற்றும் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலுடன் கூடிய ஒரு விமானந்தாங்கிப் போர்க் கப்பல் குழு உட்பட அதிநவீன ஆயுதங்களையும், அத்துடன் நிஜமான விதத்தில் படைகளை மறுஒருங்கிணைக்கும் செயல்பாட்டைச் சித்தரிக்கும் யதார்த்தமான உத்திகளும் கொண்டிருந்தன' என்று குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டது.

முதல் முறையாக, சீனப் பயிற்சிகளில் 'விமானந்தாங்கிப் போர்க் கப்பல் குழுவின் தடுப்பு பயிற்சி' உள்ளடங்கி இருந்ததாகவும், “குறைந்தபட்சம் அணுசக்தியில் இயங்கும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாகவும்,” குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டது.

சீனாவின் இரண்டு விமானந்தாங்கிப் போர்க் கப்பல்களும் தைவானை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், ஒன்றோ அல்லது இரண்டுமோ பயிற்சியில் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முக்கியமாக, சீனா ஜப்பானின் கடல் பிராந்தியத்திலும் ஏவுகணைகளை வீசியது, ஜப்பானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்கும் திறன் அதற்கு இருப்பதைக் குறித்த ஒரு சேதியாக இது விவரிக்கப்பட்டது. குளோபல் டைம்ஸ் எழுதியது: “தைவான் தீவின் வடகிழக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் அமைக்கப்பட்ட PLA பயிற்சி மண்டலங்கள் தைவானை முற்றுகையிடவும் மற்றும் அத்தீவில் உள்ள இலக்குகளைத் தாக்கவும் மட்டுமல்லாமல், அமெரிக்கா போன்ற அன்னியப் படைகள் ஜப்பானில் உள்ள அதன் இராணுவத் தளங்களில் இருந்தும் மற்றும் பிலிப்பைன்ஸ் கடல் வழியாக குவாம் தளங்களில் இருந்தும் தலையிடுவதைத் தடுக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.”

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் குற்றங்கள், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகர மக்களை அமெரிக்கா பாரியளவில் படுகொலைச் செய்ததை அடுத்து, இராணுவவாதத்தைப் பெருமளவில் எதிர்க்கும் மக்கள் உள்ள ஜப்பான், சீனாவுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போர் முனைவில் வேகமாக உள்ளிழுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, ஜப்பான் அதிகாரிகள் அதன் பாதுகாப்புத் துறைச் செலவினங்களை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் வரை, இரட்டிப்பாக்க உறுதியளித்தனர், ஜப்பானில் அணு ஆயுதமேந்திய அமெரிக்க ஏவுகணைகளை நிலைநிறுத்த அரசியல்வாதிகள் முன்மொழிந்துள்ளனர்.

சீனாவை இராணுவ மோதலுக்குத் தூண்டி விடுவதற்கான அதன் முயற்சிகளைத் தொடரும் என்பதை அமெரிக்கா தெளிவுபடுத்தி இருந்தாலும், வெள்ளை மாளிகை அதிகாரிகள் பெலோசியின் விஜயத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று வலியுறுத்தினர் — இதை அவர்களை கூட அல்லது யாருமே நம்ப மாட்டார்கள்.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கெர்பி வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் கூறினார்: 'நான் வாரம் முழுவதும் கூறி வருவதைப் போல, நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்: தைவான் உறவுகள் சட்டம், அமெரிக்கா-சீன மக்கள் குடியரசின் மூன்று கூட்டு அறிக்கைகள் மற்றும் ஆறு உத்தரவாதங்களால் வழிநடத்தப்படும் எங்களின் ஒரே சீனா கொள்கையில் மாற்றம் இல்லை — எந்த மாற்றமும் இல்லை. அது முற்றிலும் ஒத்திசைவானது என்பதால் இதை நாங்கள் ஒவ்வொரு முறையும் கூறுகிறோம்.”

அவர்த் தொடர்ந்து கூறினார்: “இங்கே ஆத்திரமூட்டுபவர் பெய்ஜிங் தான். தைவானுக்குக் காங்கிரஸ் சபை உறுப்பினர்களின் முற்றிலும் இயல்பான பயணத்திற்கு, அவர்கள் இவ்விதத்தில் எதிர்வினைக் காட்ட வேண்டியதில்லை. … இதைச் சீனர்கள் தான் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.”

கெர்பியின் கூற்றுக்கள் அமெரிக்காவுக்கான சீனத் தூதர் Qin Gang வாஷிங்டன் போஸ்டில் வெளியிட்ட ஒரு கட்டுரையில் மறுத்தளிக்கப்பட்டன, “கடந்த 18 மாதங்களில் மட்டும், அமெரிக்கா தைவாறுக்கு ஐந்து சுற்று ஆயுத விற்பனைகளைச் செய்துள்ளது,” என்பதைச் சுட்டிக் காட்டினார்.

Qin பின்வருமாறு நிறைவு செய்தார்: 'சற்று சிந்தித்துப் பாருங்கள்: அமெரிக்காவில் இருந்து பிரிந்து சுதந்திரப் பிரகடனம் அறிவிக்க விரும்பும் ஓர் அமெரிக்க மாநிலத்திற்கு, வேறு ஏதோவொரு நாடு அந்த மாநிலத்திற்கு ஆயுதங்களும் அரசியல் ஆதரவும் வழங்கினால், அமெரிக்க அரசாங்கமோ — அல்லது அமெரிக்க மக்களோ — அவ்வாறு நடக்க அனுமதிப்பார்களா?”

நடந்து கொண்டிருக்கும் இராணுவ விட்டுக்கொடுப்பற்ற நிலைக்கு மத்தியில், அமெரிக்கச் செனட் சபை நடைமுறையளவில் ஏற்கனவே உயிரிழந்துள்ள ஒரே சீனா கொள்கையை முறையாக நீக்குவதற்கு நகர்ந்து வருகிறது.

ஜனநாயகக் கட்சி செனட்டர் பாப் மெனெண்டஸ் மற்றும் குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் முன்வைத்த தைவான் கொள்கைச் சட்டம் 2020 என்றழைக்கப்படுவது ஜப்பானுடன் சேர்ந்து தைவானை ஒரு 'நேட்டோவில் இல்லாத மிகப் பெரிய கூட்டாளியாக' நியமிக்கும், அதாவது இது நடைமுறையளவில் இராஜாங்க அங்கீகாரத்தை வழங்குவதாகவும், ஒரே சீனா கொள்கையை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் இருக்கும்.

இந்த சட்டமசோதா தைவானுக்கு 4.5 பில்லியன் டாலர் இராணுவ உதவியை வழங்கும், இந்தத் தொகை அளவில் இப்போதைய செலவினங்களை விட மிகப் பெரியளவில் அதிகமாகும்.

'எங்கள் மசோதா பல தசாப்தங்களில் இல்லாத வகையில் நம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மற்றும் பொருளாதார உறவின் மிகப் பெரிய விரிவாக்கமாகும்' என்ற கிரஹாம், வேண்டுமென்றே தைவானை ஒரு நாடு குறிப்பிட்டிருந்தார்.

கிரஹாம் தொடர்ந்து கூறினார்: 'நீங்கள் இதைச் செனட் சபையில் முன்வைத்தால், அது மிகப் பெரிய எண்ணிக்கையில் நிறைவேற்றப்படும்.'

சீனாவுடன் ஒரு போரைத் தூண்டுவதற்குப் பைடென் நிர்வாகத்தின் இடைவிடாத முயற்சிகள், தைவான், சீனா, ஆசிய-பசிபிக் பிராந்திய மக்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் மிகப் பெரும் அபாயத்தைப் பிரதிபலிக்கின்றன. அமெரிக்க இராணுவ மற்றும் பொருளாதார மேலாதிக்கத்தைத் தக்க வைக்கவும் உள்நாட்டில் அரசியல் எதிர்ப்பை நசுக்குவதற்குமான ஒரு முயற்சியில், அமெரிக்கா மொத்த மனிதகுலத்தையும் ஆபத்தில் ஆழ்த்தி வருகிறது.

Loading