முன்னோக்கு

நான்சி பெலோசி, தைவான் விவகாரத்தில் விலகி இருங்கள்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, வேண்டுமென்றே அமெரிக்கா-சீனா மோதலை விரிவாக்கும் ஒரு முயற்சியாக, பக்கவாட்டில் ஓர் அமெரிக்க விமானந்தாங்கிப் போர்க்கப்பல், ஒரு மத்திய ரகப் போர்க்கப்பல், ஒரு சொகுசு கப்பல் மற்றும் டஜன் கணக்கான F-35 போர் விமானங்களுடன், அடுத்த 24 மணி நேரத்தில் தைவானை வந்தடைவார்.

தைவானில் பெலோசியின் வருகை, சீனாவுக்கு எதிரான ஒரு திட்டமிட்ட மற்றும் கணக்கிடப்பட்ட ஆத்திரமூட்டலாகும். இதன் விளைவுகள் பேரழிவுகரமாக இருக்கக்கூடும்.

வெள்ளை மாளிகையின் ஒப்புதலுடன் நடத்தப்படும் இந்தத் திட்டமிட்ட ஆத்திரமூட்டல், தைவான், சீனா, ஆசியா/பசிபிக் பிராந்தியத்திலும் மற்றும் அமெரிக்காவிலேயும் எண்ணற்ற உயிர்களை ஆபத்திற்கு உட்படுத்தும் வகையில், கட்டுப்பாட்டை மீறிச் செல்ல அச்சுறுத்துகிறது, இதை அமெரிக்காவின் உழைக்கும் மக்கள் எதிர்க்க வேண்டும்.

The Nimitz-class aircraft carrier USS Abraham Lincoln (CVN 72) in formation during RIMPAC, the Rim of the Pacific Exercise, the world's largest international maritime warfare exercise, on July 28, 2022. (Canadian Armed Forces photo by Cpl. Djalma Vuong-De Ramos, 220728-O-CA231-2003)

எந்தவொரு சீன இராணுவ பதிலடியும் அமெரிக்காவின் இராணுவ பதிலடியைச் சந்திக்கும் என்பதை அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் பிரமுகர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். முன்னாள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரியான ஜாக் கூப்பர் வாஷிங்டன் போஸ்டுக்குக் கூறுகையில், “சீனர்கள் காரணத்துடன் நடவடிக்கை எடுத்தாலோ அல்லது ஏதோவொரு வகை தற்செயலான விபத்து ஒரு நிஜமான மோதலுக்கு இட்டுச் சென்றாலோ —கப்பல்களோ அல்லது போர் விமானங்களோ ஒன்றையொன்று தொடும் போது, அல்லது தைவானுக்கு மிக அருகில் பறக்கும் ஒரு போர் விமானம் அல்லது ஒரு ஏவுகணையை ராடார் கண்டறிந்தாலோ— அமெரிக்கா அதற்கு நிச்சயம் வலுக்கட்டாயமாக விடையிறுக்க வேண்டும் என்று உணர்வதை நீங்கள் பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன்,” என்றார்.

'விரிவாக்கத்தின் அபாயங்கள் உடனடியாகவும் குறிப்பிடத்தக்க அளவிலும் உள்ளன,' என்று ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முன்னாள் ஆசிய ஆலோசகரான Evan Medeiros நியூ யோர்க் டைம்ஸிற்கு அளித்த ஓர் அறிக்கையில் எச்சரித்தார். 'இது ஒரு விதிவிலக்கான ஆபத்தான சூழ்நிலை, ஒருவேளை உக்ரேனை விட அதிகமாக இருக்கலாம்.'

சீன அதிகாரிகள், அவர்கள் பங்குக்கு, பெலோசியின் வருகையை அவர்கள் 'எச்சரிக்கைக் கோடு' தாண்டப்படுவதாக பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். பிரபலமான வகையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் டிசம்பர் 2021 இல் “நான் யாருடைய எச்சரிக்கைக் கோட்டையும் ஏற்கவில்லை,” என்று அறிவித்திருந்தார், இது உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்கு வழி வகுத்தது.

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், “அமெரிக்கா முன்னோக்கிச் செல்ல வலியுறுத்தினால், சீனா அதன் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காக்க உறுதியான மற்றும் வலிமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்,” என்றார்.

சீன அரசு மற்றும் இராணுவத்திற்கு உள்ளே இருக்கும் கணிசமான பிரிவுகளுக்காகப் பேசும், சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை, சீனாவின் விடையிறுப்பு 'இராணுவ ரீதியிலும் ஆனால் மூலோபாய ரீதியிலும்' இருக்கும் என்று அறிவித்து அந்தத் திட்டமிடப்பட்ட விஜயத்திற்கு விடையிறுத்தது.

கடந்த வாரம் பைடென் உடனான ஒரு தொலைபேசி அழைப்பில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பைடெனிடம் கூறுகையில், “நெருப்புடன் விளையாடுபவர்கள் அதில் பொசுங்கிப் போவார்கள்,” என்றார், இது சமீபத்திய வரலாற்றில் ஒரு சீன ஜனாதிபதியின் இராணுவப் பதிலடிக்கான மிகவும் வெளிப்படையான அச்சுறுத்தலாகும்.

பெலோசி தைவானுக்குச் செல்வதை வெள்ளை மாளிகையால் தடுக்க முடியாது என்று கூறுவது ஒரு பொய். பெலோசி குறைந்தபட்சம் அரை டஜன் போர்க் கப்பல்களுடன், ஓர் இராணுவப் போர் விமானத்தில் பயணிப்பார், பாதுகாப்புக்குப் போர் விமானங்கள் இருக்கக் கூடும். “முப்படைகளின் தலைமைத் தளபதியாக' இத்தகைய இராணுவ சொத்திருப்புகளை நிறுத்தி வைப்பது முற்றிலும் பைடெனின் அதிகாரத்திற்குள் உள்ளது.

அதற்கு மாறாக, வெள்ளை மாளிகை அதிகாரிகளின் குறிப்பிட்ட ஆட்சேபனைகள் இருந்தாலும் பெலோசியின் பயணத்தை அனுமதிக்க வெள்ளை மாளிகை முடிவெடுத்துள்ளது. நியூ யோர்க் டைம்ஸ் ஏறக்குறைய இந்த காலை செய்தி வெளியிடுகையில், “அதன் மையத்தில், சில அதிகாரிகள் கூறினார்கள், திருமதி. பெலோசியைத் தொடர அனுமதிப்பதை விட … அவர் விஜயத்தைத் தடுக்க முயல்வது அதிக உள்நாட்டு மற்றும் புவிசார் மூலோபாய அபாயங்களை ஏற்படுத்தக் கூடும் என்று கருத்துக்குப் பின்னர், நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்தது,” என்று எழுதியது.

பெலோசியின் பயணம் சீனாவிற்கு எதிரான தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களின் சமீபத்தியதும் மற்றும் மிகப் பெரியதும் ஆகும். அமெரிக்க அதிகாரிகளின் தரப்பில் அபத்தமான, வெட்கமற்ற மற்றும் பட்டவர்த்தனமான பொய்களுடன் இது சேர்ந்துள்ளது.

'நீண்டகால அமெரிக்கக் கொள்கைக்கு இணங்க ஒரு சாத்தியமான பயணத்தைப் பெய்ஜிங் ஒருவித நெருக்கடியாக மாற்றுவதற்கோ அல்லது தைவான் ஜலசந்தியில் அல்லது அதைச் சுற்றி இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க ஒரு சாக்குப்போக்காக இதைப் பயன்படுத்தவோ எந்தக் காரணமும் இல்லை' என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜோன் கெர்பி கூறினார்.

என்ன காரணம் இல்லை? 1962 இல், கியூபாவில் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான சோவியத் ஒன்றியத்தின் நகர்வுகளுக்கு அமெரிக்க அரசாங்கம் ஒரு முற்றுகையை கொண்டு விடையிறுத்தது, அது கிட்டத்தட்ட ஓர் அணு ஆயுதப் பரிமாற்றத்திற்கு வழிவகுத்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அமெரிக்காவை இராணுவ ரீதியில் சுற்றி வளைக்கும் ஒரு வெளிப்படையான கொள்கையின் ஒரு பாகமாக, சீனா கியூபாவை —அல்லது, இதை விடச் சிறந்த எடுத்துக்காட்டு, போர்த்தோ ரிக்கோவை— பாரியளவில் ஆயுதம் ஏந்தச் செய்தால், இன்று அமெரிக்கா எவ்வாறு விடையிறுக்கும்?

அனைத்திற்கும் மேலாக, சீனாவுடன் சாலமன் தீவுகள் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருப்பது தொடர்பாக, அமெரிக்காவில் இருந்து 12,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, சாலமன் தீவுகளை ஆக்கிரமிக்கப் போவதாக அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.

கெர்பியின் கருத்துக்களை அவரோ அல்லது வெள்ளை மாளிகையில் உள்ள வேறு எவரும் நம்ப மாட்டார்கள் என்கின்ற நிலையில், முற்றிலுமாக அவை உள்நாட்டில் செய்தி ஒளிபரப்பு விவாதங்களுக்கும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்வ செழிப்பான உயர்மட்ட நடுத்தர வர்க்க ஆதரவாளர்களுக்கும் அசை போட செய்தி வழங்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன.

சீனப் புரட்சியை தொடர்ந்து, வெளிநாட்டில் இருந்து செயல்பட்ட அமெரிக்க ஆதரவிலான அரசாங்கத்தின் ஆசனமாகத் தைவான் மாறியது. அந்த நாடு, 1949 இல் இருந்து 1987 வரை, 'உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் நீண்ட காலம் ஓர் ஆட்சியால் இராணுவச் சட்டம் திணிக்கப்பட்டு' அமெரிக்க ஆதரவிலான ஒரு மூர்க்கமான இராணுவ சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்தது. இன்று வரை, தைவான் அரசாங்கம் சீனாவின் மொத்த பெருநிலப் பரப்பும் அதன் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறி வருகிறது.

பல தசாப்தங்களாகச் சீனா உடனான அமெரிக்க உறவுகளை நெறிப்படுத்தி இருந்த “ஒரே-சீனா கொள்கையை' முறையாகக் கலைப்பதற்கான பல தொடர்ச்சியான நடவடிக்கைகளில் பெலோசியின் இந்த விஜயம் சமீபத்தியதாகும், முதலில் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் நடந்தது பைடெனின் கீழ் தொடர்கிறது.

ஒரே-சீனா கொள்கை 1972 இன் ஷாங்காய் அறிக்கை மூலம் நிறுவப்பட்டது. இது, 1972 இன் இராஜாங்க உறவுகளை நிறுவுவதற்கான கூட்டு அறிக்கை மூலம் கூடுதலாக உறுதிப்படுத்தப்பட்டது, “சீன மக்கள் குடியரசைச் சீன அரசாங்கத்தின் ஒரே சட்டபூர்வ அரசாங்கமாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது,” என்று சூளுரைத்த அதேவேளையில், அமெரிக்கா தைவானுடன் 'உத்தியோகபூர்வமற்ற உறவுகளை' பேணும் என்று அந்த அறிக்கை வலியுறுத்தியது.

இத்தகைய உடன்படிக்கைகளை மீறி, அமெரிக்கா தைவானுடன் முறையான இராஜாங்க உறவுகளை நிறுவுவதற்காக பல தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களைத் தொடங்கி உள்ளது:

• மே 2020 இல், வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பொம்பேயோ தைவான் ஜனாதிபதி சாய் இங்-வெனுக்கு (Tsai Ing-wen) அவர் வாழ்த்துக்களை அனுப்பினார்.

• ட்ரம்ப் நிர்வாகம் வெளியுறவுத் துறை மற்றும் பிற பெடரல் கட்டிடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தைவானிய தூதர்களை வரவேற்றது, இந்த நடைமுறை பைடென் நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்தது.

• செப்டம்பர் 2021 இல், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கென் தைவானை ஒரு நாடு என்று குறிப்பிட்டார்.

• பைடென் நிர்வாகம் முதல் முறையாக பைடென் பதவியேற்பு விழாவுக்கு அமெரிக்காவில் இருந்த தைவான் பிரதிநிதிகளை வரவேற்றது.

• தைவானில் உள்ள அமெரிக்க இராணுவச் சிப்பாய்கள் அதன் படைகளுக்குப் பயிற்சி அளித்து வருவதாக பைடென் நிர்வாக அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களுக்குத் தகவல்களைக் கசிய விட்டுள்ளனர், அப்போதிருந்து தைவானில் அமெரிக்கப் படைகளை இரட்டிப்பாக்கி வருவதாக அறிவித்துள்ளனர்.

தெளிவாக, பைடென் நிர்வாகம் சீனாவுடன் ஏதோவொரு வித இராணுவ மோதலைத் தூண்ட விரும்புகிறது. அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்றால், அது பெலோசியின் பயணத்தின் அபாயத்தை அனுமதித்து இருக்காது.

அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் உலகளாவிய மேலாதிக்கத்தைத் தக்க வைக்க சீனாவுடன் மோதுவதைத் தவிர வேறெந்த வழியும் காணவில்லை. அமெரிக்க இராணுவ மூலோபாயவாதிகளின் நிலைப்பாட்டில் இருந்து, சீனாவுடனான ஒரு போர் நடக்குமா என்பதல்ல மாறாக எப்போது என்பதே விஷயமாக உள்ளது.

புவிசார் அரசியல் பரிசீலனைகளுக்கு அப்பாற்பட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொறுப்பற்றத் தன்மை உள்நாட்டு காரணிகளால் உந்தப்படுகிறது. அமெரிக்காவில் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி எவ்வளவு ஆழமாகிறதோ, அவ்வளவு அதிகமாக அது சர்வதேச மோதல்களைப் போர் நிலைக்கு விரிவாக்க முனைகிறது.

தொழிலாள வர்க்க எதிர்ப்பின் அடித்தளத்தைக் குறித்து வெள்ளை மாளிகை அஞ்சுகின்ற நிலைமைகளின் கீழ், பாசிச-தலைமையிலான குடியரசுக் கட்சியின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது பைடென் நிர்வாகத்தின் ஒரு முக்கியப் பரிசீலனையாக உள்ளது. புளோரிடா குடியரசுக் கட்சி செனட்டர் மார்க்கோ ரூபியோ கூறுகையில், சீனாவுடனான அதன் மோதலில் பைடென் நிர்வாகத்தை அவர் சிறிதும் தயக்கமின்றி ஆதரிப்பதைத் தெளிவுபடுத்தினார், “நமக்குள் ஆழ்ந்த உள்நாட்டு அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் … ஆனால் வெளிநாட்டில் இருந்து வரும் அச்சுறுத்தலுக்கு நாங்கள் உறுதியான ஒற்றுமையைக் காட்டுவோம்,” என்றார்.

ரஷ்யா மற்றும் சீனாவுடனான அதன் மோதல்களை நாளுக்கு நாள், மாதத்திற்கு மாதம், மற்றும் ஆண்டுக்கு ஆண்டு விரிவாக்குவதற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான முயற்சிகள், அமெரிக்க ஆளும் வர்க்கம் வேண்டுமென்றே போர் சுவாலைகளை ஊதி விட முயன்று வருவதைத் தெளிவுபடுத்துகிறது.

உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் அமெரிக்க முதலாளித்துவத்தின் இந்தப் பொறுப்பற்ற இராணுவ ஆத்திரமூட்டலை எதிர்க்க வேண்டும். சீனாவின் பெருந்திரளான மக்களுக்கு எதிரான ஒரு போர், ஒரே நேரத்தில் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போராகவும் இருக்கும், அதிலிருந்து அமெரிக்க நிதியத் தன்னலக் குழுக்கள் மட்டுமே ஆதாயமடைவார்கள்.

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தொழிலாளர்கள் போராட்டத்துக்குள் நுழைந்து வருகையில், அவர்கள் போருக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் பதாகைகளில் உட்பொதிந்திருக்க வேண்டும்.

Loading