இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றம் கூடும் வேளையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக இராஜினாமா செய்யக் கோரி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் பரவிவரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவர் அரசாங்க வர்த்தமானியை வெளியிட்டு, ஜூலை 13 அன்று ஆரம்பத்தில் அறிவித்த அவசரகால நிலையை சட்டப்பூர்வமானதாக்கினார். மக்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கும் தடுத்து வைப்பதற்கும், எதிர்ப்புக்களை அடக்குவதற்கும், தனியார் சொத்துக்களில் தேடுதல் நடத்துவதற்கும் மற்றும் தணிக்கையை சுமத்துவதற்கும் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கும் இந்த அவசரகாலச் சட்டம் ஜனாதிபதிக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது.

13 ஜூலை 2022 அன்று ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

கடந்த வாரம் ஜூலை 9 அன்று நாட்டில் நடந்த மிகப் பெரிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களை எதிர்கொண்டு கோட்டாபய இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கா பாராளுமன்றத்தில் நாளை நடக்கவுள்ள சட்ட விரோத வாக்கெடுப்புக்கு முன்னதாக அவசரகாலச் சட்டம் பிரகடனம் செய்யப்படுகிறது. விக்கிரமசிங்க, கடந்த வாரம் தான் இராஜினாமா செய்வதாக அறிவித்த போதிலும், இப்போது அதற்கு பதிலாக பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதோடு, நாளை வாக்கெடுப்பில் வேட்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார்.

வர்த்தமானி அறிவிப்பானது, 'பொது பாதுகாப்பு நலன்கள், பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல்' ஆகியவற்றுக்காக அமுல்படுத்தப்பட்டதாக அவசரகால நிலையை நியாயப்படுத்தியது. இது நிச்சயமாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். பதில் ஜனாதிபதி அல்லது பதவிக்கு போட்டியிடும் மற்ற வேட்பாளர்களில் யார் பதவிக்கு வந்தாலும், அவர் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவற்றை பராமரிப்பதில் அக்கறை காட்டப் போவதில்லை. உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை சீரழித்த சமூக மற்றும் பொருளாதாரச் சரிவுக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக வெடித்துள்ள வெகுஜன இயக்கத்தால் அவர்கள் பீதிடைந்துள்ளனர்.

அவசரகால நிலைப் பிரகடனமானது பாராளுமன்றத்தில் நாளைய வாக்கெடுப்பின் ஜனநாயக விரோதத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சியானது தேர்தல் என்று அழைக்கப்படுவதை 'தொழிலாளர் வர்க்கம், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு எதிரான ஒரு மோசடி மற்றும் சதி' என்று கண்டனம் செய்தது. அது அறிவித்ததாவது: 'பாராளுமன்றம் எந்த வகையிலும் உழைக்கும் மக்களின், அதாவது சமூகத்தின் முழுப் பெரும்பான்மையினரின் அரசியல் உணர்வுகளையும் நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.'

விக்கிரமசிங்கவுடன், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) தலைவர் சஜித் பிரேமதாச, இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) சார்பில் டலஸ் அழகப்பெரும மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். யாரேனும் ஜனாதிபதியாக பதவியேற்றால், அவர் இராஜபக்ஷவின் எஞ்சிய காலப்பகுதிக்கு, அதாவது 2024 வரை பதவியில் இருப்பார்.

ஜனத்தொகையில் பரந்த தட்டினர், இராஜபக்ஷ மற்றும் விக்கிரமசிங்கவுக்கு மட்டுமல்ல, பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் 225 கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கும் விரோதமாக உள்ளனர். நாளைய வாக்கெடுப்புக்கு சட்டப்பூர்வத்தன்மை இல்லை என்றாலும், விளைவு எதுவாக இருந்த போதிலும், அது முழு ஊழல் கூட்டத்தின் மறு ஒழுங்கமைப்பாகவே இருக்கும். அவர்கள் அனைவரும் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டுள்ள கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதை ஆதரிப்பதுடன், உழைக்கும் மக்களின் இழப்பில் பெருநிறுவன இலாபங்களையும் சர்வதேச முதலீட்டாளர்களையும் பாதுகாக்க தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் எங்கும் செல்வதைத் தடுக்க விக்கிரமசிங்க பலத்த ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படைகளை திரட்டியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் இன்றைய அமர்வுக்கு முன்னதாக, அனைத்து நுழைவு வீதிகளும் வீதித் தடைகளுடன் மூடப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பூரண பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கலந்து கொள்வதற்காக எரிபொருளை வழங்குமாறு இராணுவத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரமசிங்க சமூக ஊடகங்கள் மீதும் தாக்குதலை முடுக்கிவிட்டார். ஜனாதிபதி வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது 'செல்வாக்கு அல்லது அழுத்தத்தை பிரயோகிக்கக்கூடிய' சமூக ஊடக பதிவுகள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ளுமாறு அவர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கை கடந்த மூன்று மாதங்களாக அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களை ஒழுங்கமைக்க பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக ஊடகங்கள் மீதான பரந்த ஒடுக்குமுறையை சமிக்ஞை செய்கிறது.

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களும் விக்கிரமசிங்கவின் அடக்குமுறை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மீறு, எதிர்ப்புக்களில் பங்கேற்கின்றனர். இப்போது இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்துள்ள நிலையில், கொழும்பு மற்றும் பிராந்திய நகரங்களில் உள்ள எதிர்ப்பு மையங்கள் விக்கிரமசிங்கவை பதவி விலகக் கோருவதில் கவனம் செலுத்தியுள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால கைக்கூலியாகவும், சர்வதேச நாணய நிதியம் சார்பு சந்தை மறுசீரமைப்பின் பாதுகாவலராகவும் உள்ள அவர், பரவலாக வெறுக்கப்படுகிறார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) ஒரே பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

தொழிற்சங்கங்களும் போலி-இடது அமைப்புகளும், ஒரே விதமான நம்பிக்கை வைக்க முடியாத மற்றும் வெறுக்கப்படும் எதிர்க் கட்சிகளுக்குப் பின்னால் இந்த வெகுஜன எதிர்ப்பை திசை திருப்பி விட முயல்வதோடு, முதலாளித்துவ ஆட்சியை பலப்படுத்த அனைத்துக் கட்சி, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்பைபுக்குப் பின்னால் முடிச்சுப் போட்டுவிட முயற்சிக்கின்றன.

போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் (மு.சோ.க.) கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (அ.ப.மா.ஒ.), விக்கிரமசிங்கவின் பதவி விலகலைக் கோரி, இன்றைய தினத்தை எதிர்ப்பு தினமாக அறிவித்துள்ளது. அ.ப.மா.ஒ. தொழிற்சங்கங்களை ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன், மத்திய கொழும்பு வழியாக ஒரு பேரணியும் நடத்தப்படும். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கக்கூடும்.

மு.சோ.க.வை போலவே, தொழிற்சங்கங்களும் கடந்த மூன்று மாதங்களில் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு அரசியல் தலையீட்டையும் நாசப்படுத்துவதில் ஒரு துரோகப் பாத்திரத்தை ஆற்றியுள்ளன. போராட்டங்களை பிசுபிசுத்துப் போகச் செய்வதற்காகவே அவை வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்தனர். தொழிற்சங்கத் தலைவர்கள் வேலைநிறுத்தங்களை விரைவாக கைவிட்டனர். கடந்த வாரத்தில், தொழிற்சங்க எந்திரங்கள் பொது வேலைநிறுத்தங்களை நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்து போதிலும், எதுவும் நடைபெறவில்லை.

அவற்றின் அழுகிப்போன அரசியல், நேற்று பிரதான தொழிற்சங்கக் கூட்டணியான தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் விடுத்த அறிவிப்பில் அம்பலப்பட்டுள்ளது. வெகுஜனங்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் 'தொழிலாளர் வர்க்கத்தின் முன்மொழிவுகள்' எனப்படுவதை அது வெளியிட்டுள்ளது. அந்த பிரேரணைகள், ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் திட்டங்களுக்கு இணங்க, தொழிற்சங்கங்களின் வேண்டுகோளை உள்ளடக்கியுள்ளன, தொழிலாள வர்க்கத்தின் கோரிக்கைகளை அல்ல. அவற்றின் 'அரசியலமைப்பு சார்பு' வேலைத்திட்டம், தொழிலாள வர்க்கத்தை சிதரடிப்பதையும், ஆளும் வர்க்கம் காலத்தை எடுத்துக்கொள்ளக்கூடிய வகையில், அர்த்தமற்ற தேர்தல்களுக்குப் பின்னால் எதிர்ப்புக்களை திசைதிருப்பி விடுவதையே இலக்காகக் கொண்டுள்ளது.

மூடிய கதவுகளுக்குப் பின்னால், நாளைய வாக்கெடுப்பில் பெரும்பான்மையைப் பெறுவதற்கான அரசியல் பேரம் பேசல் தொடர்கிறது. ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. மிகப் பெரிய பாராளுமன்ற வாக்குகளைக் கொண்டுள்ளது, ஆனால் ஒரு பிரிவினர் பிரிந்து 'சுயேச்சையாக' அமர்ந்த பின்னர் ஆழமாகப் பிளவுபட்டுள்ளது.

நேற்று விக்கிரமசிங்கவும், மே மாதம் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவும், ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்குப் பதிலாக விக்கிரமசிங்கவுக்கு ஆதரவைப் பெற முயற்சித்தனர். வாக்குகளை வாங்கும் அப்பட்டமான முயற்சியில், அண்மைய ஆர்ப்பாட்டங்களில் அழிக்கப்பட்ட அல்லது சேதப்படுத்தப்பட்ட ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களை மீளக் கட்டியெழுப்ப பொதுப் பணத்தைப் பயன்படுத்தப் போவதாக விக்கிரமசிங்க அறிவித்தார்.

1 ஜூலை 2022, கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை இராணுவம் மேற்பார்வை செய்கிறது [WSWS Media] [Photo: WSWS]

இதற்கு சமமாக பொதுமக்களின் ஆதரவை திரட்டும் வெளிப்படையான முயற்சியில், அரசாங்கம் எரிபொருள் விலையில் லிட்டருக்கு 20 ரூபாய் அல்லது சுமார் நான்கு சதவிகிதம் குறைப்பதாக அறிவித்தது. மேலும், திடீரென்று, வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான வழிகளைத் தேடுவதாக விக்கிரமசிங்க அறிவித்தார்.

சுமார் 70 சதவீத குடும்பங்கள் உணவைத் தவிர்த்து பசி மற்றும் பட்டினியை எதிர்கொள்கின்ற நிலையில் இந்த அறிவிப்புகள் உழைக்கும் மக்களை அவமதிப்பதாக உள்ளன. எரிபொருள் வாங்க முடிந்தாலும், மக்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எரிபொருளுக்காக வரிசையில் நின்று, பணிக்கு செல்ல முடியாமையால், ஆஸ்பத்திரிகளுக்கு போதிய ஊழியர்கள் இல்லாமல் போய், மருத்துவமனைகளுக்கு சென்ற நோயாளிகள் வெறுமனே திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு பேசிய ஜே.வி.பி.யின் தலைவர் திஸாநாயக்க, தனக்கென்று எதிர்கால அரசியல் அபிலாஷைகள் இல்லாத, அனைத்துக் கட்சிகளாலும் ஆதரிக்கப்படும் இடைக்கால ஜனாதிபதிக்கு ஆதரவாக, தனது வேட்புமனுவில் இருந்து விலகத் தயார், என்ற கூறினார். எந்தவொரு பொது நம்பகத்தன்மையும், தேவைக்குப் பொருந்தக்கூடிய யாரையும் அவர் பாராளுமன்றக் கழிவுநீர்க் குளத்தில் இருந்து பரிந்துரைக்கவில்லை. இந்த நடவடிக்கை, முதலாளித்துவ ஆட்சியின் முற்றிலும் மதிப்பிழந்த நிறுவனங்களுக்கு, அரசியல் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குவதற்கான அவநம்பிக்கையான முயற்சியே தவிர வேறில்லை.

நாளை ஜனாதிபதியாக யார் அமர்த்தப்பட்டாலும், அடுத்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் கோரும் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தும். இது அரசாங்க தொழில்களை மேலும் குறைக்கும், எஞ்சியிருக்கும் மானியங்களை இல்லாமல் ஆக்கும். ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் பொதுக் கல்வி மற்றும் சுகாதாரத்தை ஆழமாக சீரழிக்கும், வரிகளை அதிகரிக்கச் செய்து விரிவுபடுத்துவதோடு விலைவாசியை உயர்த்தும். இலங்கைப் பொருளாதாரம் ஏற்கனவே தங்குதடையற்ற வீழ்ச்சியில் உள்ள நிலையில், இந்த வாரம் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள மந்தநிலை இலங்கை ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறையை பாதிக்கும் என்றும் அதன் கடுமையான அந்நிய செலாவணி பற்றாக்குறையை மேலும் மோசமாக்கும் என்றும் ஃபிச் (Fitch) மதிப்பீடுகள் எச்சரித்துள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சி நேற்றைய அதனது அறிக்கையில் அறிவித்ததாவது: “முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்துக் கட்சிகளுக்கும், அவர்களின் போலி-இடது அடிவருடிகளுக்கும், தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராட அழைப்பு விடுக்கிறது. இதுவே அவர்கள் எதிர்கொள்ளும் மகத்தான சமூக நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வழிமுறையாகும்.

“தீவு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு வேலைத் தளங்களிலும், தொழிற்சாலைகளிலும், பெருந்தோட்டங்களிலும், தொழிலாளர் சுற்றுப்புறங்களிலும் மற்றும் கிராமப்புறங்களிலும், ஸ்தாபகக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, அவர்களது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராடுவதற்கு தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குமாறு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் இணைக்கப்பட்ட, நடவடிக்கை குழுக்களின் ஒரு வலையமைப்பு நிறுவப்பட வேண்டும்.

“சோசலிச சமத்துவக் கட்சி, உழைக்கும் மக்களின் அவசரத் தேவைகளை நேரடியாக அணுகும், ஜனநாயக மற்றும் சோசலிச கோரிக்கைகளை பரிந்துரை செய்கின்றது. நடவடிக்கைக் குழுக்கள் அந்த கோரிக்கைகளைச் சூழ போராட முடியும். பெருவணிகங்கள் மற்றும் வங்கிகளின் தேசியமயமாக்கல், பில்லியனர்களின் சொத்துக்களைக் கைப்பற்றுதல், அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரித்தல், ஏழை விவசாயிகளின் கடன்களை இரத்து செய்தல், வெளிநாட்டு வர்த்தகத்தின் மீது ஏகபோகத்தை நிறுவுதல் மற்றும் தொழிலாளர்களின் ஊதியத்தை பண வீக்கத்துக்கு ஏற்ப அட்டவணைப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

“புதிய ஜனாதிபதிக்காக பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள வாக்கெடுப்பு மோசடியை நிராகரிப்பதன் மூலம், எதேச்சதிகார நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையை உடனடியாக நீக்குமாறு கோருகிறோம்.

“ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கம், இளைஞர்களையும் கிராமப்புற ஏழைகளையும் அதன் பக்கம் அணிதிரட்டி, சோசலிசக் கொள்கைகளுக்காக அர்ப்பணித்துக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கு அடித்தளத்தை அமைக்கும். இது தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

“இந்த புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராட, சோசலிச சமத்துவக் கட்சியில் சேர முன்வருமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading